சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 30, 2024

யோகி 83


 ஷ்ரவனுக்கு அந்த ஓநாய் சென்ற பிறகு தான் கவனம் நடப்பு சூழலுக்குத் திரும்பியது. அப்போது தான் கல்பனானந்தா, பாடம் நடத்திக் கொண்டே அவனையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பதை ஷ்ரவன் கவனித்தான். ‘இவள் எத்தனை நேரமாய் என்னையே பார்க்கிறாள்? இப்போது நான் ஏதாவது  வித்தியாசமாக நடந்து கொண்டேனா? ஓநாய் வந்து போனது எத்தனை நேரம் நீடித்திருக்கிறது?’

 

அவன் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின் கல்பனானந்தா அவனைப் பார்ப்பது மிகவும் குறைந்து விட்டது. ஆனாலும் அவ்வப்போது அவனைக் கவனிப்பதை அவள் நிறுத்தவில்லை.

 

பாண்டியன் அன்று வெளியே சில முக்கிய வேலைகளை முடித்துக் கொண்டு யோகாலயத்துக்குத் திரும்பி வந்த போது கண்ணன் முக்கியத் தகவலுடன் காத்திருந்தார்.

 

காலைல ஷ்ரவன் அறையில ஒரு அமானுஷ்யமான விஷயம் நடந்துருக்கு. தலைகால் புரியல. நீங்க ஒரு தடவை பார்த்துடறது நல்லது.” என்று கண்ணன் சொன்னார்.

 

பாண்டியனுக்குஅமானுஷ்யமானஎன்ற வார்த்தையைக் கேட்டதும் சுருக்கென்றது. ஒரு அதிகாலை நேரத்தில் டாக்டர் சுகுமாரன் அவரை அழைத்துப் பேசியதிலிருந்து நடந்த அமானுஷ்ய நிகழ்வுகள், தேவானந்தகிரி வந்து, பரிகார பூஜை செய்து, தாயத்து கட்டி விட்டுச் சென்ற பின் தான் ஓய்ந்திருக்கின்றன. வழக்கமான வேலைகளை இந்த இரண்டு, மூன்று நாட்களாக இப்போது தான் அவர் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். இப்போது இன்னொரு அமானுஷ்யமா? கண்ணன் மிக புத்திசாலி. கண்ணனுக்கே புரியாமல் போகும் விஷயங்கள் குறைவு...

 

கண்ணன் சொன்ன காமிரா பதிவைப் பார்க்க அமர்ந்தார். கண்ணன் சொன்னார். “6.40ல இருந்து பாருங்க

 

பாண்டியன் காலை 6.40லிருந்து காமிரா பதிவை ஓட விட்டார்.

 

ஷ்ரவன் கட்டிலில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. திடீரென்று கண்களைத் திறந்த அவன் முகத்தில் திகைப்பும், திகிலும் தெரிய ஆரம்பித்தன. பின் ஓரளவு அமைதியடைகிறான். பின்ஹாய்என்று சொல்கிறான். அவன் முகத்தில் பல விதமான உணர்ச்சிகள்... அவனுடைய வலது முழங்கால் அருகே முத்திரையாக அவன் வைத்திருந்த கைவிரல்களை அவன் திடீரென்று விரித்து நீட்டுவது தெரிந்தது. அதன் பின் நடந்தது தான் பாண்டியனையும் தூக்கிவாரிப் போட்டது.

 

ஷ்ரவனின் உடல் நடுங்க ஆரம்பித்தது. இல்லை, அதை நடுக்கம் என்றும் சொல்ல முடியாது. துடிக்க ஆரம்பித்தது என்று சொல்வது சரியாக இருக்கும். மின்கம்பியைத் தொட்டவன் துடிப்பது போல் துடிக்க ஆரம்பித்த அவன் உடல் முன்னும் பின்னும் ஆட ஆரம்பித்தது. கடுமையான ஜுரத்தில் இருப்பவன் அரற்றுவது போல அவன் அரற்ற ஆரம்பித்தான். ஆரம்பத்தில் தட்டிவிட்ட தஞ்சாவூர் பொம்மை போல் ஆடிய ஆட்டம் பின் மேலும் வேகம் எடுத்தது. வேகம் கூடிக் கொண்டே வந்து கடைசியாக ஷ்ரவன் அப்படியே குப்புறக் கவிழ்ந்தான். குப்புறக் கவிழ்ந்த பின் அவனுடைய உடல் துடிப்பதும், அரற்றுவதும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. உட்கார்ந்த நிலையிலேயே குப்புறக் கவிழ்ந்த அவன் உடல் துடிப்பது நின்றது. அவன் கவிழ்ந்த நிலையிலேயே கிடந்தான்.

 

கண்ணன் சொன்னார். “இனி 7.26ல இருந்து பாருங்க

 

பாண்டியன் பதிவை 7.26க்கு நகர்த்தினார்.

 

ஷ்ரவன் உடலில் சிறு சிறு அசைவுகள் தெரிய ஆரம்பித்தன. கண்விழித்த அவன் தன்னைச் சுற்றிலும் திகைப்புடனும், குழப்பத்துடனும் பார்த்தான். பின்பு பக்கத்தில் வைத்திருந்த அலைபேசியை எடுத்து நேரம் என்ன என்று பார்த்தான். பின்பும் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தவன் அவசரமாக எழுந்தான்.

 

அவ்வளவு தான்கண்ணன் சொன்னார். “அப்பறமா குளிச்சு, சாப்பிட்டுட்டு வகுப்புக்கும் போயிருக்கிறான். மதியமும் சாதாரணமாகத் தான் சாப்பிட்டிருக்கிறான். இப்படி ஒரு விஷயம் காலையில் அவனுக்கு நடந்திருக்கும்னு யாருமே சொல்ல முடியாது. அவனே அப்படி நடந்ததைப் பத்தி பெருசா கவலைப்பட்ட மாதிரியும் தெரியலை.”

 

பாண்டியனுக்கும் ஒன்றுமே புரியவில்லை. அவன் துடித்ததையும், அரற்றியதையும் பார்க்கையில் ஜன்னி வந்திருக்கலாம் என்று ஆரம்பத்தில் தோன்றியது. ஆனால் அவன் கடைசியில் எழுந்து போனதையும், பின்பு சாப்பிட்டதையும், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதையும், ஆனதைப் பற்றி எந்தக் குழப்பமும், அதிர்ச்சியும் காட்டாமல் இருப்பதையும் யோசிக்கும் போது, இது ஜன்னி போன்ற ஆரோக்கிய பாதிப்பு போல் இல்லை.

 

பாண்டியன் கண்ணனிடம் சொன்னார். “சாயங்காலம் வகுப்பு முடிஞ்சவுடனே நீ அவன் கிட்ட போய் பேசு

 

மாலை வகுப்புகள் முடிந்து தனதறைக்கு ஷ்ரவன் வந்து கதவைத் திறந்து கொண்டிருக்கும் போது ஒரு துறவி அவனிடம் வந்தார். அவர் தான் சைத்ராவின் தந்தை வந்த போது சந்தித்துப் பேசியவர் என்பதை அவரைப் பார்த்தவுடன் ஷ்ரவன் யூகித்தான்.  

 

அவர் புன்னகையுடன் அவனிடம் கேட்டார். “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?”

 

ஷ்ரவன் குழம்பினாலும், புன்னகையுடன் சொன்னான். “நல்லாயிருக்கேன் ஜீ.”

 

நான் காலையில் இந்தப் பக்கமாக வந்த போது உங்கள் அறையிலிருந்து உடல்நலம் சரியில்லாதவர்கள் அரற்றுவது போலச் சத்தம் கேட்டது. அது தூக்கத்திலா, உடல்நலம் சரியில்லாமலா என்று தெரியவில்லை. நான் கதவைத் தட்டிக் கேட்கலாமா என்று கூட நினைத்தேன். சிறிது நேரம் இங்கே கதவுப்பக்கம் நின்றும் பார்த்தேன். பின் அந்த அரற்றல் சத்தம் குறைந்து விட்டது. பிறகு போய் விட்டேன். ஆனால் எதற்கும் உங்களிடம் நேரடியாகவே கேட்கலாம் என்று தான் நான் நேரில் வந்தேன்.”

 

ஷ்ரவனின் மூளை வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தது. என்ன சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என்று அவன் கச்சிதமாகத் தயாராக வேண்டியிருந்தது. அதனால், யோசிக்கும் நேரத்தை நீட்டிப்பதற்காக அவன் கேட்டான். “நீங்கள் வந்த போது எத்தனை மணி இருந்திருக்கும்ஜீ?”

 

அவரும் யோசிப்பது போல் காட்டிவிட்டுச் சொன்னார். “சுமார் ஏழு மணி இருக்கும் என்று நினைக்கிறேன்.”

 

ஷ்ரவன் தயாராகி விட்டான். “நான் சொன்னால் நீங்க நம்ப மாட்டீங்கஎன்று சொன்னான்.

 

அவர் புன்னகையுடன் சொன்னார். “பரவாயில்லை. சொல்லிப்பாருங்கள்.”

 

ஷ்ரவன் அறைக்குள் நுழைந்து கொண்டே சொன்னான். “முதல்ல உள்ளே வாங்க ஜீ

 

ஷ்ரவன் அவரை அறையினுள்ளே நாற்காலியில் அமர வைத்தான். பின் மிகவும் மரியாதையுடன் அவர் எதிரில் அமர்ந்து, சொல்ல ஆரம்பித்தான்.

 

ஜீ முதல்ல நான் என்னைப் பத்திச் சொல்லிடறேன். நான் யோகிஜியோட பரம பக்தன். முதல்ல எல்லாம் நல்லா பேசறாருங்கற அளவுல தான் அவர் மேல அபிப்பிராயம் வச்சிருந்தேன். ஆனால் ஆழமாய் அவர் பேச்சுகளை உள்வாங்க ஆரம்பிச்ச பிறகு நான் உணர்ந்ததைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. தினமும் யோகிஜி பேசின பேச்சுகளை யூட்யூப்ல கேட்பேன். அவரை சர்வசக்தி படைச்ச ஒரு சித்தராய் நான் அடையாளம் கண்டுகிட்டேன். அவருக்குக் கிடைச்ச தெய்வீக அனுபவங்கள்ல ஏதாவது ஒன்னாவது எனக்குக் கிடைக்கணும்னு அவரை உருக்கமாய், மானசீகமாய் வேண்டிகிட்டே இருந்தேன்.  அவர் மனமிரங்கி எனக்கு அருள் பாலிச்ச சம்பவம் தான் இன்னைக்குக் காலைல நடந்தது.”

 

ஷ்ரவன் கண்களை மூடி, மேலே பார்த்துக் கைகளைக் கூப்பினான். அந்தத் துறவி அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

 

ஷ்ரவன் தொடர்ந்தான். “வழக்கம் போல யோகிஜியை நான் மனசுல ஆழமாய் பிரார்த்திச்சுட்டு இன்னைக்குக் காலைல தியானம் பண்ண ஆரம்பிச்சேன். என்  மனசெல்லாம் யோகிஜி தான் நிறைஞ்சிருந்தார். நான் என் சுயநினைவைக் கூட இழந்துட்டேன்னு சொல்லலாம். அவர் மட்டும் தெரிஞ்சார். அவரே எல்லாம்னு நான் சரணாகதி அடைஞ்சிருந்தேன். திடீர்னு ஒரு வாலிப வயசுப் பையன் தெரிஞ்சான். அவன் யோகாலயத்துக்கு வெளியே நின்னுகிட்டிருக்கறது தெளிவா என் மனத்திரையில் தெரிஞ்சுது. அவன்  நாயையோ, ஓநாயையோ (அது சரியாய் தெரியலை) உள்ளே அனுப்பற மாதிரி தெரிஞ்சது. உள்ளே வந்த அது என் அறைக்குள்ளேயும் நுழைஞ்சு நின்னுகிட்டிருந்துச்சு. உடனே என் ரத்தமே உறைஞ்சது மாதிரி பயந்துட்டேன். தெய்வீக அனுபவத்தைக் கொடுன்னு யோகிஜி கிட்ட கேட்டா, இந்த மாதிரி ஒரு காட்சி வருதேன்னு மனசு நொந்து போயிட்டேன். அப்பறம் தான் போன வாரம் நண்பன் ஒருத்தனோட சேர்ந்து ஓமன் படம் பார்த்தது நினைவு வந்துச்சு. அது தான் என் மனசுல பதிஞ்சு இப்படி காட்சி  தெரியுதுன்னு புரிஞ்சுகிட்டேன். அப்புறம் தானா என் மனசு ரிலேக்ஸ் ஆச்சு. அந்த மிருகத்தோட கண்ணுல நெருப்பு கூடத் தெரிஞ்சுது. ஆனா நான் பயப்படலை. யோகிஜி என் மனசெல்லாம் நிறைஞ்சிருக்கறப்ப எனக்கென்ன கவலையும், பயமும். நான் தைரியமாய் அந்த மிருகத்தைப் பார்த்து ஹாய்னு சொன்னேன். அது அப்படியே என்னை பாத்துகிட்டே நின்னுச்சு. பிறகு திடீர்னு என் மேல பாய்ஞ்சுது பாருங்க. என் உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி இருந்துச்சு. அப்புறம் என்ன ஆச்சுன்னு எனக்கே தெரியல. நான் நினைவை முழுசா இழந்துட்டேன்.”

 

(தொடரும்)

என்.கணேசன்



Thursday, December 26, 2024

சாணக்கியன் 141


னநந்தன் கோபத்தின் உச்சத்தில் கத்தினான். “இங்குள்ளவர்களுக்கு இந்தச் சதியில் பங்கிருந்தால் உடனடியாக அவர்களைக் கண்டுபிடித்து சிரத்சேதம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.”

 

ராக்ஷசர் சொன்னார். “அவர்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல

 

தனநந்தன் சொன்னான். “ஏன் சுலபமல்ல? நேற்றிரவு தீப்பிடித்திருப்பதால் கண்டிப்பாக நேற்றைய காவலர்களில் ஒருவன் தான் அதைப் பற்ற வைத்திருக்க வேண்டும். அவர்களைச் சித்திரவதை செய்து விசாரித்தால் வேறு யாரெல்லாம் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரிந்து விடப் போகிறது

 

ராக்ஷசர் சொன்னார். “நேற்றைய காவலர்கள் இந்தச் சதியில் பங்கு கொண்டவர்களாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் முதல் சந்தேகம் அவர்கள் மேல் தான் வரும் என்ற புரிதல் இல்லாதவர்களாக சதிகாரர்கள் இருக்க வாய்ப்பில்லை. எரி பொருள்கள், கந்தகம் எல்லாம் பரப்பி  இந்தச் சதி வேலை சில நாட்களுக்கு முன்பே நடந்து முடிந்திருக்க வேண்டும். சில நாட்களாகவே வெப்பம் மிக அதிகம். ஆனால் நேற்றோ வெப்பம் உச்சக்கட்டத்தில் இருந்ததால் தானாகவே பற்றிக் கொண்டிருக்கும் வாய்ப்பே அதிகம்....”

 

தனநந்தனுக்கு குற்றவாளிகளை உடனடியாகச் சித்திரவதை செய்து ரசிக்க முடியாமல் போவது மனத்தாங்கலாக இருந்தது. அவனுடைய மண்ணில் சதிகாரர்கள் இருப்பதும், சதி செய்வதும், சதி செய்து விட்டு சுதந்திரமாக உலாவ முடிவதும் அவனைப் பரிகாசத்திற்குள்ளாக்குவது போலத் தோன்றியது.   

 

அவன் மனநிலையைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிந்த ராக்ஷசர் சொன்னார். “சதிகாரர்களைக் கண்டிப்பாக நாம் கண்டுபிடிப்போம். அவர்களைத் தண்டிப்போம். அதில் நாம் மெத்தனமாக இருக்கப் போவதில்லை. ஆனால் அதைவிட முக்கியமானதை இப்போது நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது. இந்த விபத்தின் உத்தேசம் என்ன? எதற்காக இது இப்போது இங்கே அரங்கேற்றப் பட்டிருக்கிறது?”

 

பத்ரசால் யோசனையுடன் சொன்னான். “உடனடியாகப் போர் மூளுமானால் நாம் போதுமான ஆயுதங்கள் இல்லாமல் திணற வேண்டும் என்பது எதிரிகளின் உத்தேசமாக இருக்கலாம்.”

 

வரருசி தலையசைத்தார். ராக்ஷசர் சொன்னார். “அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது. நம் அனுமானம் சரியானால் எந்த நேரத்திலும் எதிரிகள் நம் மீது படையெடுத்துக் கிளம்பி வரலாம் என்றே நான் நினைக்கிறேன்

 

தனநந்தனுக்கு ஆத்திரத்தின் இடையேயும் சிரிப்பு வந்தது. ”எதிரிகளின் உத்தேசம் அதுவானால் அது சிறுபிள்ளைத்தனம் தான். ஆயுதங்கள் சிலவற்றை அழித்தால் நாம் நிராயுதபாணியாகி விடுவோமா என்ன? மகதம் எத்தனை ஆயுதங்களையும் குறுகிய காலத்தில் தயார் செய்ய முடிந்த சக்தி படைத்தது என்பதைக்கூட அறியாதவர்களா அந்த முட்டாள்கள்?”

 

ராக்ஷசர் சொன்னார். “சிறு சிறு உபத்திரவங்களால் பெரிய பாதிப்புகள் உண்டாகி விடுவதில்லை என்ற போதும் நம் மனதின் சமநிலையைக் குலைக்க அவை போதுமானதாக இருக்கின்றன. மனதின் சமநிலை தவறும் போது சரியாக முடிவெடுக்க நாம் தவறிவிடுகிறோம். சின்னச் சின்னத் தவறுகள் பெரிய தவறுகளுக்கு வழிகளை ஏற்படுத்தி விடுகின்றன. அதை எதிர்பார்த்து தான் அவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.”

 

அவர் சொல்லாமல் விட்டதும் இருந்தது. இது போன்ற எத்தனை வேலைகளை எதிரிகள் இங்கே செய்திருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை அவர் வாய்விட்டுச் சொல்லவில்லை. திடீரென்று ஆயுதக்கிடங்கு தீப்பிடித்தது போல இனி என்னவெல்லாம் ஆகுமோ என்ற சந்தேகம் அவர் மனதில் வளர்ந்தது.  ஆனால் அதைச் சொல்லி மன்னரை பீதிக்குள்ளாக்க அவர் விரும்பவில்லை.

 

தனநந்தன் சொன்னான். “எதிரிகள் படையெடுத்து வரட்டும். அவர்களது சதிக்கும், திமிருக்கும், சரியான பாடம் புகட்டி அவர்களை பரலோகம் அனுப்பி வைப்போம்..... ஆனால் இத்தனை நடந்தும் நம் ஒற்றர்களுக்கு எதுவும் தெரியாமல் போனதெப்படி?”

 

ராக்ஷசர் சொன்னார். “எதிரிகள் அதிசமர்த்தர்களாக இருக்கிறார்கள் போல் தெரிகிறது.”

 

தனநந்தனுக்கு எதிரிகள் அதிசமர்த்தர்களாக இருப்பதைச் சகிக்க முடியவில்லை. ஆனால் ராக்ஷசர் அடுத்து என்ன ஆக வேண்டும் என்பதற்குக் கூடுதல் முக்கியத்துவம் தந்ததால் உடனடியாக ஆயுதங்களின் தயாரிப்புக்கான ஏற்பாடுகளைப் பற்றியும் மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் பேச ஆரம்பித்தார்.

 

ராக்ஷசர் சொன்ன எதிலும் தனநந்தனின் கவனம் நிலைக்கவில்லை. எதையும் திறம்படச் செய்யக்கூடிய ராக்ஷசர் என்ன செய்ய வேண்டுமோ அதைக் குறையில்லாமல் செய்வார் என்பதில் அவனுக்குக் கடுகளவும் சந்தேகம் இருக்கவில்லை. ஆனால் நடக்கின்ற அனைத்தும் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதில் ராக்ஷசர் குறியாய் இருந்ததால் விரிவாய் விளக்கிக் கொண்டே போக அவன் அதில் கவனம் செலுத்த முடியாமல் மனதினுள்ளே எதிரிகளை எண்ணிக் குமுறிக் கொண்டே இருந்தான்.

 

அவசரக்கூட்டம் முடிந்து அவர்கள் சென்ற பின்னரும் கூட அவன் நடந்த நிகழ்வுகளை ஜீரணிக்க முடியாமல் மனம் புழுங்கிக் கொண்டே இருந்தான்.  அவனுடைய எதிரிகள் அவனை எதிர்த்து தைரியமாக செயல்பட முடிவதும், அதை அனுமதிப்பது போல் அவன் கையாலாகாதவனாய் இருப்பதும் சகிக்க முடியாத சங்கடமாய் இருந்தது. எத்தனை வலிமையான மகத சாம்ராஜ்ஜியத்தின் அதிபதி அவன்! எத்தனை செல்வத்திற்கு அதிபதி அவன்! அவர்கள் அவன் முன்னால் தூசியே அல்லவா? ஆனால் தூசியும் வெளியே இல்லாமல் கண்ணிலேயே விழுந்தால் பிரச்சினை தான்….

 

திடீரென்று அவனுக்கு விஷ்ணுகுப்தர் மாந்திரீகத்திலும் வல்லுனர் என்று வரருசி கேள்விப்பட்டதைச் சொன்னது நினைவுக்கு வந்தது. மாந்திரீகத்தில் எங்கேயும் தீயை வரவழைக்கவும் முடியுமாம். இனி என்னவெல்லாம் முடியுமோ என்று எரிச்சலுடன் நினைத்துக் கொண்டவனுக்குத் திடீர் என்று புதையலை எல்லாம் கண்டுபிடிக்க முடியுமோ என்ற சந்தேகம் வந்தது. அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று அறிவு சொன்னாலும் சந்தேகிக்க ஆரம்பித்த மனம் அதில் திருப்தியடைய மறுத்தது. தொடர்ந்து காவலுக்கு ஆட்கள் இருந்த ஆயுதக்கிடங்கிலேயே இப்படி பிரச்சினை உண்டாக்க முடிந்த விஷ்ணுகுப்தர், காவலுக்கு ஆட்களே இல்லாத இடத்தில் எதையும் செய்ய முடியுமே என்று மனம் வாதிட்டது. புதையல் இருப்பது தெரிந்தால் தானே அங்கே எதாவது செய்ய முற்படுவதற்கு என்று மறுபடி அறிவு கேட்டது. சாணக்கின் மகன் எல்லாம் அறிந்த ஞானியல்ல என்றும் சொன்னது. மனம் அதை மறுக்கா விட்டாலும் எதற்கும் எச்சரிக்கை நல்லது என்று சொன்னது.

 

நேரம் செல்லச் செல்ல அவனுக்குள் ஒருவித பதற்றம் உருவாக ஆரம்பித்தது. அவன் அதிகம் நம்பும் ராக்ஷசர் உட்பட புதையல் ரகசியம் உயிரோடிருக்கும் யாருக்கும் தெரியாது என்பதால் பயப்பட வேண்டியதில்லை என்று சமாதானப்படுத்திக் கொண்டான். இதற்கு முன்பு களவு போவது போல் கனவு வந்து அங்கே சென்று பார்த்திருக்கிறோம், எல்லாம் பத்திரமாக இருந்திருக்கிறது என்பதையும் அவன் நினைவுபடுத்திக் கொண்டான். ஆனால் இனியும் அலட்சியமாய் இருப்பது நல்லதல்ல என்று அவன் மனம் சொன்னது. ஏதாவதொரு காரணம் சொல்லியாவது அந்த யாகசாலையருகே காவலை தீவிரமாக வைத்திருப்பது நல்லது என்று அறிவும் ஆலோசனை சொன்னது. புதையல் உள்ளது என்ற உண்மையைத் தெரிவிப்பதைத் தவிர்த்து என்ன காரணம் சொல்ல முடியும் என்று யோசித்தான். அனைவரும் நம்பும் படியான எந்தக் காரணமும் உடனடியாக நினைவுக்கு வரவில்லை. ஏதாவது ஒன்றைச் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும்….

 

தனநந்தன் சாளரம் வழியாக வெளியே பார்த்தான். இன்னும் இருட்ட ஆரம்பிக்கவில்லை. ஒரு முறை யாகசாலை பக்கம் போய் வந்தால் என்ன என்று தோன்றியது. வழக்கம் போல் கங்கையில் குளிக்கத் தோன்றியதாக வெளியே காட்டிக் கொள்ளலாம் என்று நினைத்தவன் உடனே தன் காவலனை அழைத்து கங்கைக் கரைக்குச் செல்லும் ஏற்பாட்டைச் செய்யச் சொன்னான்.

 

மன்னர் கங்கைக் கரைக்குச் செல்லவிருக்கிறார், அவருடன் காவலுக்குச் செல்ல கூடுதல் காவலர்கள் தேவை என்ற செய்தி ஜீவசித்திக்குத் தெரிவிக்கப்பட்டது. ஜீவசித்தி மிகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தருணம் இது என்பதால் பரபரப்புடன் செயல்பட்டு, தானும் உடன் செல்லத் தயாரானான்.

 

தனநந்தன் கங்கைக் கரையை நெருங்க நெருங்க ஏதோ ஒருவித அச்சத்தை உணர்ந்தான். யாகசாலையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது என்ற கேள்வி அவன் மனதில் தேவையில்லாமல் எழுந்தது. பொறுமை குறைந்து சாரதியிடம்வேகமாகப் போஎன்று கட்டளையிட சாரதியும் குதிரைகளை வேகமாக முடுக்கி விட ரதம் வேகமாக முன்னேறியது. அவனைப் போலவே உடன் வரும் இன்னொருவனும் பரபரப்புடன் இருக்கிறான் என்று தெரியாமல் தனநந்தன் யாகசாலையை நெருங்கினான்.

 

யாகசாலையின் கதவுகள் மூடியிருந்ததையும் அதன் மரக்கதவுகளில் பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்ததையும் பார்த்த பின்பே அவன் மனம் அமைதி அடைந்தது. வழக்கம் போல் தேவையில்லாமல் பயந்திருக்கிறோம் என்று எண்ணி அவன் பெருமூச்சு விட்டான்.      

 

(தொடரும்)

என்.கணேசன்



Monday, December 23, 2024

யோகி 82


 ந்த ஓநாய் அவன் கண்களுக்கு மட்டும் தெரிகிறதா, இல்லை கண்காணிப்பு காமிராவிலும் அகப்படுமா என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் சற்று முன் அவன் ஹாய் என்று சொன்னது கண்டிப்பாய் காமிராவில் பதிந்திருக்கும். இனி அவன் எதாவது வாய்விட்டுப் பேசினால் அதுவும் கண்டிப்பாகப் பதியும்.

 

அவன் மிகவும் எச்சரிக்கையுடன், தன் மனதிற்குள் அதனுடன் பேசினான். “ஹாய் நண்பா. ஏன் இங்கே வந்திருக்கிறாய்?”

 

அந்த ஓநாய் அவனுடைய கட்டிலுக்கு மேல் தாவி அவனுடைய வலது மடிக்கு மிக அருகில் வந்து நின்றது. அவன் தியானம் செய்யும் கோலத்தில் தான் அமர்ந்திருந்தான். அவன் முழங்கால் அருகே முத்திரையாக வைத்திருந்த வலது கைவிரல்களை நீட்டினான். அந்த ஓநாய் தன் கால் ஒன்றைத் தூக்கி அந்தக் காலால் அவன் விரலைத் தொட்டது.  உடனே அவன் உடல் ஏதோ ஒருவித உஷ்ணத்தை உணர்ந்தது. அவனுக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. அதன் பின் ஷ்ரவன் தன் நினைவை முழுவதுமாக இழந்தான்.

 

அவன் சுயநினைவுக்கு வந்த போது உட்கார்ந்த நிலையிலேயே கட்டிலில் குப்புறக் கவிழ்ந்திருந்தான். திகைப்புடன் நிமிர்ந்து உட்கார்ந்து சுற்றிலும் பார்த்தான். அந்த ஓநாய் இருக்கவில்லை. நடந்த சம்பவங்களை எல்லாம் ஷ்ரவன் நினைவுபடுத்திப் பார்த்தான். மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தது தான் கடைசியாக நினைவிருந்தது. அதன்பின் நடந்தது எதுவும் அவனுக்கு நினைவில்லை. கட்டிலில் அமர்ந்திருந்தவன் எப்படிக் குப்புறக் கவிழ்ந்தான் என்று தெரியவில்லை.   பக்கத்தில் வைத்திருந்த அலைபேசியை எடுத்து நேரம் என்ன என்று பார்த்தான். 7.27 என்று காட்டியது. அவன் நடைப்பயிற்சி முடிந்து அறைக்குத் திரும்பிய போது மணி ஆறரை வாக்கில் இருந்திருக்கக்கூடும். கணக்கிட்டு பார்த்த போது அரை மணி நேரத்துக்கு மேல் அவன் இப்படி நினைவில்லாமல் இருந்திருக்கக்கூடும் என்பது தெரிந்தது.

 

முதல் முறையாக தனக்கு என்ன நடந்தது என்று அவனுக்கே தெரியாதிருக்கையில், அதை விவரமாக காமிராப் பதிவு மூலமாக யோகாலயத்தின் முக்கியஸ்தர்கள் அறிந்திருப்பார்கள் என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. என்ன நடந்திருக்கிறது? எதனால் இப்படி நடந்திருக்கிறது? இதன் அர்த்தம் தான் என்ன? ஒன்றும் அவனுக்கு விளங்கவில்லை. 

 

திடீரென்று மந்திர உபதேசம் செய்த போது பரசுராமன் சொன்னது ஷ்ரவனுக்கு நினைவுக்கு வந்தது. ”உனக்கு வேறொரு புது உலகத்தை இது அறிமுகப்படுத்தும்....”

 

இது அவர் சொல்லும் புது உலக அறிமுகத்தின் ஆரம்பமா?

 

இந்தக் குழப்பத்திற்கு விடை கிடைக்கவில்லை.  ஆனால் அதிகம் யோசிக்க நேரம் இல்லை. குளித்து விட்டு, சாப்பிட்டு, வகுப்புக்குப் போகுமளவு நேரம் தான் இருக்கிறது. அவன் அவசரமாக எழுந்தான்.

 

அன்று காலை அவன் உணவுக்குப் போன போது எதிரே தான் ஸ்ரேயா அமர்ந்திருந்தாள். ஆனால் அவள் அவனைப் பார்த்து ஆரம்ப சம்பிரதாயப் புன்னகை கூடப் பூக்கவில்லை. அவளருகே அமர்ந்திருந்த கமலம்மா அவனைப் பார்த்துக் கையசைத்துகுட் மார்னிங்சொன்னாள். அப்போதும் ஸ்ரேயா அவன் பக்கம் திரும்பவில்லை.

 

ஷ்ரவனும் கமலம்மாவிடம்குட் மார்னிங்சொன்னான்.

 

அன்று காலை வகுப்புகளில் ஷ்ரவனின் மனம் தங்கவில்லை. துறவிகள் பாடம் கற்றுத் தந்தது அவனுக்கு வெறும் சத்தங்களாகவே இருந்தன. அவனை அறியாமல் அவன் பார்வை ஸ்ரேயா பக்கம் அடிக்கடி போனது. மற்ற சமயங்களில் அவன் மனம் இன்றைய காலைய அமானுஷ்ய அனுபவத்தைப் பற்றி யோசித்தது. 

 

மதிய உணவின் போது அவன் பார்வை பட முடியாதபடி அவனுக்கு பின்புற வரிசையில் அமர்ந்து ஸ்ரேயா சாப்பிட்டாள்.

 

மதியம் முதல் வகுப்பிற்கு கல்பனானந்தா வந்தாள். வகுப்பினுள் நுழைந்தவுடன் மேசையருகே நின்று கொண்டு, வகுப்பில் உள்ளவர்கள் ஒவ்வொருவரையும் வரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்தவள் பார்வை ஷ்ரவன் மீது விழுந்தவுடன் ஒரு கணம் அவன் மீதே நிலைத்தது. அவனைக் கூர்ந்து கவனித்தாள். அவள் எதையோ நினைவுபடுத்திக் கொள்வது போல் தெரிந்தது. பின் அவள் பார்வை அவனை வேகமாகக் கடந்தது.  

 

இதற்கு முன் வகுப்பெடுக்க வந்த துறவிகளில் சிலரும், முதல் முறை வரும் போது, மேலோட்டமாக அனைவரையும் பார்த்தார்கள். அவர்கள் தங்களுக்கு நினைவிலிருப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று அறிந்து கொள்ளும்  ஆர்வத்தில் பார்த்தது போல் இருந்தது. ஆனால் கல்பனானந்தாவின் பார்வையில் கூடுதலாக ஏதோ ஒன்று இருந்தது.

 

பின் அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவள் கற்றுக் கொடுக்க வந்ததைப் பாடம் நடத்த ஆரம்பித்தாள். ஆத்ம ஞானத்திற்கு யோகா, தியானப் பயிற்சிகள் எப்படி உதவுகின்றன என்ற விளக்கம் அளிக்கும் பாடம் அது. மற்ற துறவிகளை விடச் சிறப்பாகவே அவள் விளக்கங்களை அளித்தாள். சற்று ஆழமான ஞானம் உடையவர்கள் மட்டுமே அவள் அளவுக்கு எளிமையாக விளக்கங்கள் தரமுடியும் என்று ஷ்ரவன் நினைத்துக் கொண்டான். அவனையும் அறியாமல் அவன் அவள் சொல்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். இன்று காலை வகுப்புகளில் இருந்த அலைபாயும் மனம் தற்போது இருக்கவில்லை.

 

ஆனால் அந்த நிலை சுமார் அரை மணி நேரம் மட்டுமே நீடித்தது. வகுப்பறைக்குள் மெல்ல ஓநாய் நுழைவதைக் கண்டவுடன் திகைப்பில் அவன் கண்கள் விரிந்தன.

 

அவன் மற்றவர்களைப் பார்த்தான். யாரும் எந்தப் பாதிப்புமில்லாமல் அமர்ந்து கல்பனானந்தாவின் விளக்கங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். கல்பனானந்தாவும் இயல்பாகப் பேசிக் கொண்டேயிருந்தாள்.

 

உள்ளே நுழைந்த ஓநாய் அவனையே பார்த்தபடி கல்பனானந்தாவின் அருகில் நின்றது. ஆனாலும், ஷ்ரவனைத் தவிர அவர்கள் யாருக்கும் அந்த ஓநாய் தெரியவில்லை...!

 

வகுப்பறையில் நுழைந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஓநாயிடம் மனதிற்குள் ஷ்ரவன் பேசினான். “ஹாய் நண்பா

 

அந்த ஓநாய் இரண்டடி முன்னால் எடுத்து வைத்தது. இது தான் அவன் பேசுவதற்கு அதன் எதிர்வினை போல இருந்தது.

 

காலையில் என்னை நீ என்ன செய்தாய். நீ என்னைத் தொட்டதற்குப் பின் என்ன ஆனது?” மறுபடியும் அவன் மானசீகமாக அதனிடம் கேட்டான்.

 

பாடம் நடத்திக் கொண்டிருந்த கல்பனானந்தா பார்வை ஷ்ரவனின் மீது விழுந்த போது அவன் வேறெங்கோ பார்ப்பது தெரிந்தது. அவன் பார்த்த இடத்தின் பக்கம் தன் பார்வையை அவள் திருப்பினாள். அது காலியிடமாக இருந்தது. ஆனால் அவன் பார்வை வெற்றுப் பார்வையாக இல்லை. யாரையோ அல்லது எதையோ அந்த வெற்றிடத்தில் அவன் பார்த்துக் கொண்டிருந்தது போல் இருந்தது.  

 

அவள் அவனைப் பார்ப்பதைக் கூட அவன் கவனிக்கவில்லை. அவனுடைய கவனம் முழுமையாக அந்த ஓநாயின் மீதே இருந்தது. அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனையே அது அமைதியாகப் பார்த்தது. இப்போது அதன் தீ உமிழும் கண்கள் கூட அமானுஷ்யமாகத் தெரியவில்லை.  அன்பை உமிழும் ஞான ஒளியாகத் தான் அவனுக்குத் தெரிகிறது. அவன் மறுபடியும் அதனிடம் அதே கேள்வியை மானசீகமாகக் கேட்டான்.

 

அந்த ஓநாய் பேசாமல் அவனைப் பார்த்தபடியே நின்றிருந்தது. ஆனால் அந்த நேரத்தில் பரசுராமன் மந்திர உபதேசம் செய்த நாளில் சொன்ன வார்த்தைகள் மறுபடியும் அவனுடைய நினைவுக்கு வந்தது. அது தற்செயலாகவா இல்லை, பரசுராமனின் சக்தியாலா என்பது அவனுக்குத் தெரியவில்லை.

 

சில மகத்தான விஷயங்களைப் பத்தி முன்கூட்டியே விளக்கறது, வரப் போகிற அனுபவங்களோட மகத்துவத்தைக் குறைச்சுடும். எதையும் அனுபவிக்கறப்ப சொந்தமாய் என்ன  உணர்கிறோம்கிறது ரொம்ப முக்கியம். முன்கூட்டியே கிடைக்கிற விளக்கங்கள், நம் சொந்த அனுபவத்துக்கு சாயம் பூசிடறதுக்கு வாய்ப்பு உண்டு. தானாய் உணர வேண்டியதை, அடுத்தவங்களோட விளக்கப்படி புரிஞ்சுக்கற அபத்தம் நிகழ்ந்துடும்...”

 

என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது, இதன் பொருள் என்ன என்பது அவனாய் கண்டு உணர வேண்டியது தானோ? ஒரு மனிதன் தன் ஆழ்மனதிடம் கேட்டு அங்கேயே உணர வேண்டியதோ?

 

ஓநாய் கல்பனானந்தாவின் பக்கம் திரும்பியது. அவளையே சிறிது நேரம் பார்த்தது. பின் அது அங்கிருந்து வெளியேறியது.

 

அது கல்பனானந்தாவை ஏன் பார்த்து நின்றது என்பதும் அவனுக்குத் தெரியவில்லை.  ஏதோ ஒரு முக்கியத் தகவலை அவனுக்கு அது உணர்த்துகிறதா?


(தொடரும்)

என்.கணேசன்