சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 5, 2024

சாணக்கியன் 138

 

லைகேது தந்தையின் தந்திரத்தை எண்ணி வியந்தான். சிறிது நேரம் யோசித்தவன் மனதில் இன்னொரு பலத்த சந்தேகம் எழுந்தது. ”நம் அண்டை மன்னர்கள் மூவரிடம் நமக்குப் பிரச்சினை வர வாய்ப்பில்லை என்று சொல்வது எனக்கும் சரியாகத் தான் படுகிறது. ஆனால் நீங்களே சூழ்ச்சிக்காரர் என்று சொல்லும் அந்த அந்தணர் தன் வாக்கைக் காப்பாற்றுவார் என்று நாம் எப்படி நம்ப முடியும் தந்தையே?”

 

பர்வதராஜன் சற்று முன் வருத்தப்பட்ட அளவு தன் மகன் முட்டாள் அல்ல என்று திருப்தியடைந்தவனாகச் சொன்னான். “நீ சொல்வது சரி தான் மகனே. அப்படி அந்த அந்தணர் பிரச்சினை செய்வாரானால் அவர் பக்கத்திலிருந்து தனநந்தன் பக்கம் தாவுவதற்கு நமக்கு அதிக காலம் தேவைப்படாது. நாம் தனநந்தனிடம் பேரம் பேசி சந்திரகுப்தனையும், அந்த அந்தணரையும் வீழ்த்தவும் தயாராக இருக்க வேண்டியது தான்.”

 

மலைகேது ஒரு கணம் திகைத்தான். பின் சொன்னான். “தனநந்தன் எனக்குப் பெண் தர மறுத்தவன் தந்தையே. அவனுடன் இணைந்து கொள்வதா?”

 

பர்வதராஜன் சொன்னான். “மகனே கோபம் வர வேண்டிய நேரத்தில் மட்டுமே நமக்கு வர வேண்டும். நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் கோபம் கொள்வது மாபெரும் முட்டாள்தனம். எனக்கே அந்த அந்தணர் எனக்குப் பதிலாக வேறு ஓரிருவர் உதவியைப் பெற்றுக் கொள்வதாகச் சொல்லிக் கிளம்பிய போது கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் வந்ததா? வரவில்லையே. காரணம் இலாபநஷ்டக் கணக்கு எப்போதும் என் மனதில் ஓடிக் கொண்டிருப்பது தான் மகனே. யாரிடம் எப்போது கோபம் கொள்வது இலாபமோ, அவரிடம் அப்போது மட்டுமே கோபப்பட வேண்டும். புரிந்ததா?”

 

மலைகேது புரிந்து கொண்டு மெள்ளத் தலையசைத்தான்.

 

 

த்ரசால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் குடிபுகுந்து மூன்று மாதங்களாகி விட்டன. சூதாட்ட விடுதியில் கார்த்திகேயனை அவன் சந்தித்த நாளிலிருந்து அவனுடைய செல்வம் சார்ந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டபடியால் அவன் மிக ஆனந்தமாக இருந்தான். ஆரம்பத்தில் அவன் உணர்ந்த பயம், ஆபத்து எல்லாம் அர்த்தமில்லாதது என்பதை அவன் பிறகு புரிந்து கொண்டான். கார்த்திகேயன் என்ற அந்த குதிரை வியாபாரியின் ஆட்கள் மாதமிரு முறை வந்து குதிரைகளை மாற்றிக் கொண்டு சென்றார்கள். கார்த்திகேயன் முன்பே வாக்களித்தது போல அதற்கான பணத்தை அவ்வப்போதே பத்ரசாலுக்கு இரகசியமாகத் தந்து விட்டுச் சென்றார்கள். ஆரம்பத்தில் ஐம்பது குதிரைகளை மாற்றுவதில் ஆரம்பித்த வணிகம் இப்போது ஒவ்வொரு முறையும் இருநூறு குதிரைகளை மாற்றிக் கொள்ளுமளவு வளர்ந்திருக்கிறது.

 

கார்த்திகேயனின் ஆட்கள் மாற்றிக் கொள்ளும் குதிரைகளின் எண்ணிக்கையில் குறைந்த பட்சம் மும்மடங்கு குதிரைகளை ஓட்டிக் கொண்டு பாடலிபுத்திரத்திற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் குதிரைகள் கைமாறியது, ஒற்றர்கள் உட்பட வெளியாட்கள் யாருடைய கவனத்தையும் கவரவில்லை. ஒவ்வொரு முறையும் அடுத்து எப்போது வருவார்கள் என்ற தகவலை கார்த்திகேயனின் ஆட்கள் தெரிவித்து விட்டுப் போவார்கள். அந்தக் குறிப்பிட்ட நாள் அன்று காலை மகதப்படையின் குதிரை லாயங்களிலிருந்து உயர்ரகக் குதிரைகள் அதிகமாகவும், சாதாரண குதிரைகள் குறைவாகவும் வெளியே மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லப்படும். அந்தக் குறிப்பிட்ட நாளன்று தொலைவில் உள்ள மேய்ச்சல் நிலங்களுக்குக் கொண்டு செல்லப்படும் இடத்தில் முன்பே கார்த்திகேயனின் ஆட்கள் தங்கள் குதிரைகளை மேய விட்டிருப்பார்கள். அங்கு குதிரைகள் கைமாற்றப்படும். லாயத்துக்கு உயர்ரகக் குதிரைகள் குறைவாகவும், சாதாரண ரகக்குதிரைகள் அதிகமாகவும் திரும்பி வரும். அன்றே அந்தக் குதிரைகளுக்கான பணம் சரியாக ஒரு சிவப்புத் துணி முடிச்சில் ஏதாவது ஒரு விதத்தில் பத்ரசாலின் வீடு வந்து சேரும்.

 

குதிரை லாயக் காப்பாளனும், குதிரைகளை மேய்த்துச் செல்லும் ஊழியர்களும், பத்ரசாலின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர்களாக இருந்ததால் வெளியாட்கள் யாரும் இந்த குதிரை மாற்றத்தை அறியாதபடி பத்ரசாலால் பார்த்துக் கொள்ள முடிந்தது. கார்த்திகேயனின் ஆட்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் யாருக்கும் சந்தேகம் வராதபடி நடந்து கொண்டதால் எல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எளிதாக நடந்து முடிந்தன.     

 

ஆரம்பத்திலிருந்தே அவன் பயப்பட்டது ராக்ஷசரின் கவனத்திற்கு இந்தத் தகவல் வந்து விடுமோ என்று தான்அவர் ரகசியமாகப் பல ஒற்றர்களை வைத்திருந்தார். அவர்கள் அவருக்கு மட்டுமே தகவல்களைச் சொல்பவர்களாக இருந்தார்கள். அந்தத் தகவல் எதுவும் தனநந்தன் செவிகளைக் கூடப் பல சமயங்களில் எட்டாது. தனநந்தனுக்கு அவர்களைக் காணவோ அவர்கள் சொல்வதைக் கேட்கவோ கூட நேரமும், பொறுமையும் இல்லை என்பதும் அதற்கு ஒரு காரணம்.

 

பத்ரசாலுக்குத் தன் புதிய செயல்பாடுகள் குறித்த தகவல்கள் தப்பித் தவறி ராக்ஷசருடைய கவனத்திற்கு வந்து விட்டால் பின் அதை அவர் ஆராய்வதும், குடைவதும் அதிகமாக இருக்கும் என்பது புரிந்திருந்ததால் தான் அவன் மிக எச்சரிக்கையாக இருந்தான். ஆனாலும் ஏதோ தவறு நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் யூகித்ததைப் போல் அவர் அடிக்கடி திடீர் திடீரென்று நகர வாயிலிலும் பயணியர் விடுதியிலும் சோதனையில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார். அவர் அவனிருக்கும் இடத்திற்கு வரும் போதெல்லாம் அவனுக்கு படபடப்பு அதிகமிருந்தது. காரணம் சிறிது சந்தேகம் வந்தாலும் முழுமையாகவே அதை நிவர்த்தி செய்து கொள்ளும் வரை சும்மா இருக்க முடியாதவர் அவர்….

 

அவன் கடைசியாக கார்த்திகேயனின் ஆட்களைச் சந்தித்த போது ராக்‌ஷசரின் திடீர் சோதனைகளைத் தெரிவித்து அவர்களை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கச் சொன்னான்.

 

அந்த ஆட்களில் ஒருவன் சொன்னான். “இது எல்லா இடங்களிலும் அவ்வப்போது நடப்பது தான் சேனாதிபதி. நாம் தான் குற்றவுணர்ச்சி காரணமாக நம் சம்பந்தப்பட்டதாக இருக்குமோ என்று பயப்பட்டு விடுகிறோம். எங்கள் பக்கத்திலிருந்து எந்தக் கவனக்குறைவும் இருக்காது கவலைப்படாதீர்கள்”

 

பாடலிபுத்திரத்தின் ஆயுதக்கிடங்கில் இரவுக் காவலுக்கு இன்று ஜீவசித்தியின் ஆட்கள் இருவர் இருந்தார்கள். பெரும்பாலான சமயங்களில் அந்தக் காவல் அவசியமற்றதாகவே இருந்தது. காவல் இல்லா விட்டாலும் பெரிய பூட்டுகளை உடைத்து பாடலிபுத்திரத்தின் ஆயுதக்கிடங்கில் திருடவோ கொள்ளை அடிக்கவோ துணியும் உள்நாட்டு ஆட்கள் யாருமில்லை. வெளியிலிருந்து கொள்ளைக்காரர்கள் ரகசியமாக வந்தாலும் ஆயுதக் கிடங்கிலிருந்து ஆயுதங்களைக் கொள்ளையடித்து விட்டு நகரிலிருந்து தப்பித்துச் செல்ல வழியில்லை. ஆனாலும் ராக்ஷசர் பிரதம அமைச்சரான பிறகு இரவுக் காவல் நடைமுறையைக் கொண்டு வந்தார்.   இரவுக் காவலுக்கு அங்கு வரும் காவலர்கள் வீட்டில் படுத்துத் தூங்குவதற்குப் பதிலாக அங்கு உட்கார்ந்து தூங்கி விட்டுப் போவார்கள்.

 

அன்றைய நாளில் காவலுக்கு இருந்த ஜீவசித்தியின் காவலர்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருந்தார்கள். நள்ளிரவான போதிலும் அவர்கள் உறங்க ஆயத்தமாகவில்லை. ஒரு விசித்திர பட்சியின் ஓசை நள்ளிரவின் நிசப்தத்தைக் கலைத்தது. அது பட்சியின் ஓசை போலிருந்த போதும் ஒரு மனிதன் எழுப்பிய ஓசை. அதற்கு ஒற்றர்கள் யாரும் சுற்று வட்டாரத்தில் இல்லை என்று பொருள். காவலர்களில் ஒருவன் மெல்ல எழுந்து பூட்டைத் திறந்து கதவையும் திறந்து வைததான்.

 

சிறிது நேரத்தில் இரண்டு ஆட்கள் ஆளுக்கொரு மூட்டையைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம் எதுவும் பேசவில்லை. அவர்கள் மூட்டைகளோடு உள்ளே சென்றார்கள். அவர்கள் சென்றவுடன் அந்தக் காவலன் மறுபடி கதவை மூடி விட்டுக் காவலுக்கு நின்று கொண்டான். இன்னொரு காவலன் எழுந்து சற்று முன்னுக்குச் சென்று யாராவது வருகிறார்களா, ஏதாவது வேறு ஓசை கேட்கிறதா என்று கண்களையும் காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்டு நின்றான். ஒருவேளை யாராவது வருவது போல் உணர்ந்தால் உடனே ஆயுதக்கிடங்கு வேகமாகப் பூட்டப்படும். அதற்கு அன்று அவசியமிருக்கவில்லை. சிறிது நேரம் கழித்து உள்ளே சென்ற இருவரும் வெறும் சாக்கோடு வெளியே வந்தார்கள். அவர்கள் வெளியே வந்த பின்பும் காவலர்களிடம் ஒன்றும் பேசவில்லை. மௌனமாக அவர்கள் வந்த வழியே சென்றார்கள்.

 

இப்படி நடப்பது இந்த மூன்று மாதங்களில் இது மூன்றாவது முறை.

 

(தொடரும்)

என்.கணேசன் 





2 comments:

  1. Interesting! I do understand its an historic fiction where the story should also be based on certain facts . Still I wish to see more scope for female characters.

    ReplyDelete
  2. நடப்பத்தை எல்லாம் வைத்து பார்க்கையில் மகதத்தை எதிர்பாராத நேரத்தில் தாக்குவார்கள் என்றே தோன்றுகிறது....
    எதிர்பாராத நேரத்தில் தாக்க வரும் சமயத்தில் ஆயுதம், குதிரைகள் எல்லாம் பலவீனமான நிலையில் இருப்பதை பார்த்து நிலைகுலைந்து போவார்கள்....

    ReplyDelete