சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 26, 2024

சாணக்கியன் 141


னநந்தன் கோபத்தின் உச்சத்தில் கத்தினான். “இங்குள்ளவர்களுக்கு இந்தச் சதியில் பங்கிருந்தால் உடனடியாக அவர்களைக் கண்டுபிடித்து சிரத்சேதம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.”

 

ராக்ஷசர் சொன்னார். “அவர்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல

 

தனநந்தன் சொன்னான். “ஏன் சுலபமல்ல? நேற்றிரவு தீப்பிடித்திருப்பதால் கண்டிப்பாக நேற்றைய காவலர்களில் ஒருவன் தான் அதைப் பற்ற வைத்திருக்க வேண்டும். அவர்களைச் சித்திரவதை செய்து விசாரித்தால் வேறு யாரெல்லாம் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரிந்து விடப் போகிறது

 

ராக்ஷசர் சொன்னார். “நேற்றைய காவலர்கள் இந்தச் சதியில் பங்கு கொண்டவர்களாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் முதல் சந்தேகம் அவர்கள் மேல் தான் வரும் என்ற புரிதல் இல்லாதவர்களாக சதிகாரர்கள் இருக்க வாய்ப்பில்லை. எரி பொருள்கள், கந்தகம் எல்லாம் பரப்பி  இந்தச் சதி வேலை சில நாட்களுக்கு முன்பே நடந்து முடிந்திருக்க வேண்டும். சில நாட்களாகவே வெப்பம் மிக அதிகம். ஆனால் நேற்றோ வெப்பம் உச்சக்கட்டத்தில் இருந்ததால் தானாகவே பற்றிக் கொண்டிருக்கும் வாய்ப்பே அதிகம்....”

 

தனநந்தனுக்கு குற்றவாளிகளை உடனடியாகச் சித்திரவதை செய்து ரசிக்க முடியாமல் போவது மனத்தாங்கலாக இருந்தது. அவனுடைய மண்ணில் சதிகாரர்கள் இருப்பதும், சதி செய்வதும், சதி செய்து விட்டு சுதந்திரமாக உலாவ முடிவதும் அவனைப் பரிகாசத்திற்குள்ளாக்குவது போலத் தோன்றியது.   

 

அவன் மனநிலையைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிந்த ராக்ஷசர் சொன்னார். “சதிகாரர்களைக் கண்டிப்பாக நாம் கண்டுபிடிப்போம். அவர்களைத் தண்டிப்போம். அதில் நாம் மெத்தனமாக இருக்கப் போவதில்லை. ஆனால் அதைவிட முக்கியமானதை இப்போது நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது. இந்த விபத்தின் உத்தேசம் என்ன? எதற்காக இது இப்போது இங்கே அரங்கேற்றப் பட்டிருக்கிறது?”

 

பத்ரசால் யோசனையுடன் சொன்னான். “உடனடியாகப் போர் மூளுமானால் நாம் போதுமான ஆயுதங்கள் இல்லாமல் திணற வேண்டும் என்பது எதிரிகளின் உத்தேசமாக இருக்கலாம்.”

 

வரருசி தலையசைத்தார். ராக்ஷசர் சொன்னார். “அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது. நம் அனுமானம் சரியானால் எந்த நேரத்திலும் எதிரிகள் நம் மீது படையெடுத்துக் கிளம்பி வரலாம் என்றே நான் நினைக்கிறேன்

 

தனநந்தனுக்கு ஆத்திரத்தின் இடையேயும் சிரிப்பு வந்தது. ”எதிரிகளின் உத்தேசம் அதுவானால் அது சிறுபிள்ளைத்தனம் தான். ஆயுதங்கள் சிலவற்றை அழித்தால் நாம் நிராயுதபாணியாகி விடுவோமா என்ன? மகதம் எத்தனை ஆயுதங்களையும் குறுகிய காலத்தில் தயார் செய்ய முடிந்த சக்தி படைத்தது என்பதைக்கூட அறியாதவர்களா அந்த முட்டாள்கள்?”

 

ராக்ஷசர் சொன்னார். “சிறு சிறு உபத்திரவங்களால் பெரிய பாதிப்புகள் உண்டாகி விடுவதில்லை என்ற போதும் நம் மனதின் சமநிலையைக் குலைக்க அவை போதுமானதாக இருக்கின்றன. மனதின் சமநிலை தவறும் போது சரியாக முடிவெடுக்க நாம் தவறிவிடுகிறோம். சின்னச் சின்னத் தவறுகள் பெரிய தவறுகளுக்கு வழிகளை ஏற்படுத்தி விடுகின்றன. அதை எதிர்பார்த்து தான் அவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.”

 

அவர் சொல்லாமல் விட்டதும் இருந்தது. இது போன்ற எத்தனை வேலைகளை எதிரிகள் இங்கே செய்திருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை அவர் வாய்விட்டுச் சொல்லவில்லை. திடீரென்று ஆயுதக்கிடங்கு தீப்பிடித்தது போல இனி என்னவெல்லாம் ஆகுமோ என்ற சந்தேகம் அவர் மனதில் வளர்ந்தது.  ஆனால் அதைச் சொல்லி மன்னரை பீதிக்குள்ளாக்க அவர் விரும்பவில்லை.

 

தனநந்தன் சொன்னான். “எதிரிகள் படையெடுத்து வரட்டும். அவர்களது சதிக்கும், திமிருக்கும், சரியான பாடம் புகட்டி அவர்களை பரலோகம் அனுப்பி வைப்போம்..... ஆனால் இத்தனை நடந்தும் நம் ஒற்றர்களுக்கு எதுவும் தெரியாமல் போனதெப்படி?”

 

ராக்ஷசர் சொன்னார். “எதிரிகள் அதிசமர்த்தர்களாக இருக்கிறார்கள் போல் தெரிகிறது.”

 

தனநந்தனுக்கு எதிரிகள் அதிசமர்த்தர்களாக இருப்பதைச் சகிக்க முடியவில்லை. ஆனால் ராக்ஷசர் அடுத்து என்ன ஆக வேண்டும் என்பதற்குக் கூடுதல் முக்கியத்துவம் தந்ததால் உடனடியாக ஆயுதங்களின் தயாரிப்புக்கான ஏற்பாடுகளைப் பற்றியும் மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் பேச ஆரம்பித்தார்.

 

ராக்ஷசர் சொன்ன எதிலும் தனநந்தனின் கவனம் நிலைக்கவில்லை. எதையும் திறம்படச் செய்யக்கூடிய ராக்ஷசர் என்ன செய்ய வேண்டுமோ அதைக் குறையில்லாமல் செய்வார் என்பதில் அவனுக்குக் கடுகளவும் சந்தேகம் இருக்கவில்லை. ஆனால் நடக்கின்ற அனைத்தும் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதில் ராக்ஷசர் குறியாய் இருந்ததால் விரிவாய் விளக்கிக் கொண்டே போக அவன் அதில் கவனம் செலுத்த முடியாமல் மனதினுள்ளே எதிரிகளை எண்ணிக் குமுறிக் கொண்டே இருந்தான்.

 

அவசரக்கூட்டம் முடிந்து அவர்கள் சென்ற பின்னரும் கூட அவன் நடந்த நிகழ்வுகளை ஜீரணிக்க முடியாமல் மனம் புழுங்கிக் கொண்டே இருந்தான்.  அவனுடைய எதிரிகள் அவனை எதிர்த்து தைரியமாக செயல்பட முடிவதும், அதை அனுமதிப்பது போல் அவன் கையாலாகாதவனாய் இருப்பதும் சகிக்க முடியாத சங்கடமாய் இருந்தது. எத்தனை வலிமையான மகத சாம்ராஜ்ஜியத்தின் அதிபதி அவன்! எத்தனை செல்வத்திற்கு அதிபதி அவன்! அவர்கள் அவன் முன்னால் தூசியே அல்லவா? ஆனால் தூசியும் வெளியே இல்லாமல் கண்ணிலேயே விழுந்தால் பிரச்சினை தான்….

 

திடீரென்று அவனுக்கு விஷ்ணுகுப்தர் மாந்திரீகத்திலும் வல்லுனர் என்று வரருசி கேள்விப்பட்டதைச் சொன்னது நினைவுக்கு வந்தது. மாந்திரீகத்தில் எங்கேயும் தீயை வரவழைக்கவும் முடியுமாம். இனி என்னவெல்லாம் முடியுமோ என்று எரிச்சலுடன் நினைத்துக் கொண்டவனுக்குத் திடீர் என்று புதையலை எல்லாம் கண்டுபிடிக்க முடியுமோ என்ற சந்தேகம் வந்தது. அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று அறிவு சொன்னாலும் சந்தேகிக்க ஆரம்பித்த மனம் அதில் திருப்தியடைய மறுத்தது. தொடர்ந்து காவலுக்கு ஆட்கள் இருந்த ஆயுதக்கிடங்கிலேயே இப்படி பிரச்சினை உண்டாக்க முடிந்த விஷ்ணுகுப்தர், காவலுக்கு ஆட்களே இல்லாத இடத்தில் எதையும் செய்ய முடியுமே என்று மனம் வாதிட்டது. புதையல் இருப்பது தெரிந்தால் தானே அங்கே எதாவது செய்ய முற்படுவதற்கு என்று மறுபடி அறிவு கேட்டது. சாணக்கின் மகன் எல்லாம் அறிந்த ஞானியல்ல என்றும் சொன்னது. மனம் அதை மறுக்கா விட்டாலும் எதற்கும் எச்சரிக்கை நல்லது என்று சொன்னது.

 

நேரம் செல்லச் செல்ல அவனுக்குள் ஒருவித பதற்றம் உருவாக ஆரம்பித்தது. அவன் அதிகம் நம்பும் ராக்ஷசர் உட்பட புதையல் ரகசியம் உயிரோடிருக்கும் யாருக்கும் தெரியாது என்பதால் பயப்பட வேண்டியதில்லை என்று சமாதானப்படுத்திக் கொண்டான். இதற்கு முன்பு களவு போவது போல் கனவு வந்து அங்கே சென்று பார்த்திருக்கிறோம், எல்லாம் பத்திரமாக இருந்திருக்கிறது என்பதையும் அவன் நினைவுபடுத்திக் கொண்டான். ஆனால் இனியும் அலட்சியமாய் இருப்பது நல்லதல்ல என்று அவன் மனம் சொன்னது. ஏதாவதொரு காரணம் சொல்லியாவது அந்த யாகசாலையருகே காவலை தீவிரமாக வைத்திருப்பது நல்லது என்று அறிவும் ஆலோசனை சொன்னது. புதையல் உள்ளது என்ற உண்மையைத் தெரிவிப்பதைத் தவிர்த்து என்ன காரணம் சொல்ல முடியும் என்று யோசித்தான். அனைவரும் நம்பும் படியான எந்தக் காரணமும் உடனடியாக நினைவுக்கு வரவில்லை. ஏதாவது ஒன்றைச் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும்….

 

தனநந்தன் சாளரம் வழியாக வெளியே பார்த்தான். இன்னும் இருட்ட ஆரம்பிக்கவில்லை. ஒரு முறை யாகசாலை பக்கம் போய் வந்தால் என்ன என்று தோன்றியது. வழக்கம் போல் கங்கையில் குளிக்கத் தோன்றியதாக வெளியே காட்டிக் கொள்ளலாம் என்று நினைத்தவன் உடனே தன் காவலனை அழைத்து கங்கைக் கரைக்குச் செல்லும் ஏற்பாட்டைச் செய்யச் சொன்னான்.

 

மன்னர் கங்கைக் கரைக்குச் செல்லவிருக்கிறார், அவருடன் காவலுக்குச் செல்ல கூடுதல் காவலர்கள் தேவை என்ற செய்தி ஜீவசித்திக்குத் தெரிவிக்கப்பட்டது. ஜீவசித்தி மிகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தருணம் இது என்பதால் பரபரப்புடன் செயல்பட்டு, தானும் உடன் செல்லத் தயாரானான்.

 

தனநந்தன் கங்கைக் கரையை நெருங்க நெருங்க ஏதோ ஒருவித அச்சத்தை உணர்ந்தான். யாகசாலையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது என்ற கேள்வி அவன் மனதில் தேவையில்லாமல் எழுந்தது. பொறுமை குறைந்து சாரதியிடம்வேகமாகப் போஎன்று கட்டளையிட சாரதியும் குதிரைகளை வேகமாக முடுக்கி விட ரதம் வேகமாக முன்னேறியது. அவனைப் போலவே உடன் வரும் இன்னொருவனும் பரபரப்புடன் இருக்கிறான் என்று தெரியாமல் தனநந்தன் யாகசாலையை நெருங்கினான்.

 

யாகசாலையின் கதவுகள் மூடியிருந்ததையும் அதன் மரக்கதவுகளில் பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்ததையும் பார்த்த பின்பே அவன் மனம் அமைதி அடைந்தது. வழக்கம் போல் தேவையில்லாமல் பயந்திருக்கிறோம் என்று எண்ணி அவன் பெருமூச்சு விட்டான்.      

 

(தொடரும்)

என்.கணேசன்



No comments:

Post a Comment