சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 17, 2024

சாணக்கியன் 131

 

றுநாள் பத்ரசால் சூதாட்ட விடுதிக்கு வந்த போது சின்ஹரன் முன்பே வந்திருந்து சூதாடிக் கொண்டிருந்தான். பத்ரசாலைக் கண்டவுடன் புன்னகை செய்து மரியாதையான வணக்கம் செலுத்தி பழையபடி ஆட்டத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தவன் பின் பத்ரசால் பக்கம் திரும்பவில்லை. அந்த ஆட்டத்திலும் அவன் பணத்தை இழந்தாலும் சிறிதும் வருத்தம் காட்டிக் கொள்ளவில்லை.

 

சரி நண்பர்களே. இந்த நான்கு நாட்கள் உங்களுடன் விளையாடி இனிமையாகப் பொழுதைக் கழித்தேன். நாளை காலையே கலிங்கத்திற்குச் செல்லவிருக்கிறேன். அனைவரிடமும் விடைபெற்றுக் கொள்கிறேன்.” என்று ஆட்ட நண்பர்களிடம் சின்ஹரன் விடைபெற்றான். தோற்றாலும், வென்றாலும் எப்போதுமே சிரித்த முகமாக இருக்கும் அவனை அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

 

ஒரு ஆட்ட நண்பன் கேட்டான். “இனி எப்போது வருவீர்கள் நண்பரே?”

 

மூன்று மாதங்களாகி விடும் என்று நினைக்கிறேன். ஆனால் வந்தவுடன் கண்டிப்பாக இங்கு வந்து உங்களைச் சந்திப்பேன்.”

 

இடிச்சிரிப்பு சிரிக்கும் ஆட்ட நண்பன் சொன்னான். “கடைசி நாள் தானே. இன்னொரு விளையாட்டு விளையாடுங்கள் நண்பரே. கண்டிப்பாக வெல்வீர்கள். போகும் போது வெற்றியாளனாகப் போங்கள்

 

சின்ஹரன் புன்னகையுடன் சிரித்தான். “இல்லை நண்பரே. நான் ஏற்கெனவே உங்களிடம் தெரிவித்திருந்தபடி ஒரு நாளுக்கு ஒரு முறைக்கு மேல் சூதாடுவதில்லை என்று என் மனைவிக்கு வாக்குத் தந்திருக்கிறேன். அதை மீறுவதாக இல்லை

 

மனைவிக்குக் கொடுத்த வாக்கை இந்த அளவு சத்தியத்தோடு நிறைவேற்றும் ஒரு மனிதனை நான் இது வரைக்கும் பார்த்ததில்லை. உங்களை மனமாரப் பாராட்டுகிறேன் நண்பரே. உங்கள் மனைவியின் பெயரென்ன?”

 

இல்லாத மனைவியின் பெயரை இப்படி யாராவது கேட்பார்கள் என்று சின்ஹரன் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏதோ ஒரு பெயரைச் சொல்ல வேண்டும் என்பதற்காக வாயிற்கு வந்த பெயரை அவன் சொன்னான். “மைனிகா

 

உங்களைப் போன்ற ஒருவரைக் கணவனாக அடைவதற்கு மைனிகா நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். போய் வாருங்கள். மீண்டும் சந்திப்போம்

 

அனைவரிடமும் விடைபெறுவது போலவே நட்புடன் பத்ரசாலிடமும் சின்ஹரன் விடைபெற்றுக் கொண்டான். பத்ரசாலும் சின்ஹரன் முந்தைய நாள் எச்சரித்ததை நினைவில் கொண்டு புன்னகையுடன் தலையை மட்டும் அசைத்தான். சின்ஹரன் மதுவருந்தும் பகுதிக்குச் சென்றவுடன் அவர்கள் அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தார்கள்.

 

மதுவருந்திக் கொண்டிருந்த வேளையில் சின்ஹரன் வெளிப்பார்வைக்கு அமைதியாகவே தோற்றமளித்தாலும் அவன் இதயத்தில் ஒரு கொந்தளிப்பே நிகழ்ந்து கொண்டிருந்ததுஏதோ ஒரு பெண்ணின் பெயரைச் சொல்ல வேண்டுமென்ற நிலை வந்த போது ஏனந்தப் பெயர் அவனையுமறியாமல் அவன் வாயிலிருந்து வந்தது? வேறு எத்தனையோ பெயர்கள் இருக்கின்றனவே? இன்னும் அவள் நினைவு அவன் இதய ஆழத்தில் இருக்கின்றது என்பதல்லவா இதன் பொருள். எத்தனையோ மாறி விட்ட போதும் இது மட்டும் அவன் வாழ்க்கையில் இன்னும் மாறாமல் இருப்பது அவனுக்கு அவன் மீதே கோபத்தை ஏற்படுத்தியது. மனிதனுடைய வாழ்க்கையில் எத்தனையோ அனுபவங்களால் போகப் போக இதயம் கடினப்பட்டு விடுகின்றது என்றாலும் அதிலும் ஒரு பகுதி மென்மையாகவே தங்கி பழைய நினைவுகளில் வேதனைப்படுவதாக அமைந்து விடுகின்றது என நினைத்துக் கொண்டான்.

 

அலெக்ஸாண்டர் பாரதத்திலிருந்து வெளியேறிய சமயத்தில் சாணக்கியர் மைனிகாவின் சேவையை மிக உயர்த்திச் சொன்னார். எல்லோரும் இருக்கும் போது அதைப் பொதுவாகச் சொன்ன அவருக்கு அவனுக்கு மைனிகாவுடன் ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவம் பற்றி நன்றாகவே தெரியும். ஆனாலும் அவரும் சரி, அவனும் சரி அதுபற்றிப் பேசவில்லை. அவரைப் பொருத்த வரை அவருடைய பாரதத்தை ஒன்றிணைக்க உதவும் ஒவ்வொருவரும் மகத்தானவர்களே. அவர்களை ஆத்மார்த்தமாகப் பாராட்ட அவர் என்றும் தயங்கியதில்லை. ஆனால் அவனுக்கு அவளுடன் இருந்த பழைய கணக்கு தீர்க்கப்படாமலேயே பாக்கி இருந்தது. கோபம் இருந்தாலும் அவளை அவன் முழுவதுமாக வெறுத்தோ, மறந்தோ விடவில்லை என்பதற்கு சற்று முன் அவள் பெயரை அவனையறியாமல் அவன் சொன்னதே சான்று....

 

சற்று தள்ளி அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஒற்றனுக்கு அவன் ஏதோ ஒரு வேதனையில் இருக்கிறான் என்பதை மட்டும் உணர முடிந்தது. இரண்டு நாட்களாக  சேனாதிபதி பத்ரசாலுடன் மதுவருந்தியபடி அந்தப் புதிய வணிகன் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்திருந்த அவனுக்கு அவர்கள் இன்றும் சேர்ந்து மதுவருந்திப் பேசிக் கொள்ளாமலிருந்தது அவன் சந்தேகப்பட்ட அளவுக்கு அவர்கள் நெருக்கத்தில் இல்லை என்ற திருப்தியை ஏற்படுத்தியது. இருவரும் சற்று முன்னும் நட்புடன் தான் விடைபெற்றார்கள் என்றாலும் மற்றவர்களுடன் தெரிந்த ஆட்ட நட்பையே பத்ரசாலுடனும் வணிகன் வெளிப்படுத்தியதையும் அவன் பார்த்திருந்தான். இப்போது முதல் ஆட்டம் முடிந்தவுடன் பத்ரசால் மதுவருந்த இவனுடன் வந்து சேர்ந்து கொள்கிறானா என்று பார்க்க அவன் காத்துக் கொண்டிருந்தான்.

 

ஆனால் பத்ரசால் இரண்டாவது ஆட்டத்தை விளையாட ஆரம்பித்து விட்டான். சின்ஹரன் அந்தப் பக்கமே திரும்பியும் பார்க்காமல் எழுந்து வெளியேறுவதைக் கண்ட ஒற்றன் எதற்கும் முன்னெச்சரிக்கையாய் அவனைப் பின் தொடரத் தீர்மானித்தான்.  பின் தொடர்ந்து அவன் தங்கியிருந்த விடுதியினுள்ளே நுழையும் வரை பார்த்துக் கொண்டிருந்த அவன் தன் பழைய சந்தேகம் அர்த்தமற்றது என்று நினைத்துக் கொண்டான். இன்றும் அந்த வணிகனும் பத்ரசாலும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தால் அந்தச் செய்தியை ராக்ஷசர் காதில் போட்டு விட வேண்டும் என்று அவன் எண்ணிக் கொண்டிருந்ததற்கு அவசியமில்லாமல் போய் விட்டது. இருந்த போதிலும் ஆட்ட நண்பர்களிடம் அறிவித்தபடி நாளை காலையில் பாடலிபுத்திரத்தை விட்டு இந்தப் புதிய வணிகன் வெளியேறுகிறானா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது என்று எண்ணிக் கொண்டான்.  இரண்டு நாளாக அவன் காலையில் விடுதியை விட்டு வெளியே வரும் நேரம் அவனுக்குத் தெரியும் என்பதால் அதே சமயத்தில் நாளை போய் கண்காணிப்பது என்று தீர்மானித்தான்.

 

ஆனால் மறுநாள் விடிவெள்ளி கீழ்வானில் முளைக்கும் போதே சின்ஹரன் ஒரு பழுத்த துறவியாக வேடமிட்டு விடுதியிலிருந்து வெளிப்படுவான் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. சின்ஹரன் பார்ப்பவர்கள் கைகூப்பி வணங்கும்படியானதொரு ஆன்மிகத் தோற்றத்தில் இருந்தான். பூசாரி வருவதற்கு முன்பே அவன் மகாவிஷ்ணு கோவிலுக்குச் சென்றுக் காத்திருந்தான்.


அரசி தாரிணியும், இளவரசர் சுதானுவும் அன்று அதிகாலையிலேயே வழிபட  வருவார்கள் என்று முன்கூட்டியே பூசாரிக்குத் தெரிவிக்கப் பட்டிருந்ததால் சீக்கிரமாகவே வந்து சேர்ந்திருந்த பூசாரி சின்ஹரனைப் பார்த்ததும் யாரோ ஒரு மகான் என்று நினைத்து பணிவுடன் வணங்கி ஆசிகள் பெற்று பூஜை வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

 

சுதானுவும், தாரிணியும் சிறிது நேரத்தில் ரதத்தில் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் கோயிலுக்குள் நுழைந்த போது கண்களை மூடி மோனநிலையில் ஆன்மிகப் பரவசத்தில் இருப்பது போல் தெரிந்த துறவியை வியப்புடன் பார்த்தார்கள்.

 

தாரிணி மெல்லிய  குரலில் அந்தத் துறவியைச் சுட்டிக் காட்டியாரதுஎன்று பூசாரியிடம் கேட்டாள்.

 

பூசாரி தாழ்ந்த குரலில் சொன்னார். “நானும் இன்று தான் பார்க்கிறேன். பெரிய மகான் போல் தெரிகிறது. யாத்திரை போகும் வழியில் இங்கே வழிபட வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.”

 

பூசாரி மணி அடிக்கும் சத்தம் கேட்டு சின்ஹரன் மெல்லக் கண் திறந்து கஷ்டப்பட்டு எழுந்து மகாவிஷ்ணுவை வணங்கி நின்றான். அவன் அரசியையோ, இளவரசனையோ கண்டு கொள்ளவில்லை. அதுவே அவர் பெரிய மகானாய் தான் இருக்க வேண்டும் என்கிற அபிப்பிராயத்தை தாரிணியிடம் ஏற்படுத்தி விட்டது.

 

தாரிணி இறைவனை வணங்கி விட்டு அந்தத் துறவியையும் பயபக்தியுடன் வணங்கினாள். சுதானு வணங்குவதா வேண்டாமா என்ற யோசனையுடன் நிற்க தாரிணி மகனைப் பார்த்து வணங்கு என்று கண்ஜாடை செய்தாள். சுதானு வேறு வழியில்லாமல் வணங்கினான்.

 

சின்ஹரன் கரகரத்த வயோதிகக் குரலில் சுதானுவுக்கு ஆசி வழங்கினான். “ஒரு வேண்டுதல் வேண்டி மகாவிஷ்ணு சன்னிதிக்கு முதல் சனிக்கிழமை வந்திருக்கிறாய். அதற்கு இறைவன் அனுக்கிரகம் இருப்பதாய் தெரிகிறது. ஆனால் தொடர்ந்து இனி எட்டு சனிக்கிழமைகளும் நீ வர மறந்து விடாதே

 

தாரிணியும் சுதானுவும் திகைத்தார்கள். திவ்யசக்தி இருக்கும் ஒரு மகானுக்கு மட்டுமே அல்லவா இதைச் சொல்ல முடியும்! இருவரும் பணிவின் வடிவமாய் கைகூப்பி நின்றார்கள்.

 

வெளியே எதிரிகள் முற்றுகையிட்டிருக்கும் காலத்தில் உள்ளே உனக்குள்ள தடையை நீ நீக்கி விட்டால் உன் ஆசை நிறைவேறுவது உறுதி. அது வரை பொறுத்திருஎன்று சின்ஹரன் அமைதியாகச் சொன்னான்.

 

அவர்கள் இருவரும் அவன் வார்த்தைகள் விளங்காமல் குழப்பத்துடன் பார்த்து அவனிடம் விளக்கம் கேட்கும் முன் அவன் வெளியே வந்து விட்டான். தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு திகைப்புடன் சிலையாக நின்று மீண்டு வெளியே வந்து பார்ப்பதற்குள் சின்ஹரன் மாயமாகியிருந்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்





  

3 comments:

  1. i was waiting for this eagerly

    ReplyDelete
  2. i am currently jobless hence not able to buy your books . Once i get a job , i'll definitely purchase your book and read it as that would do justice for your good work .

    ReplyDelete
  3. சின்ஹரன் அக்காலத்து நடிகர் திலகம் போல...

    ReplyDelete