சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 10, 2022

இல்லுமினாட்டி 141



வாங் வேக்கு விஸ்வம் போன் செய்து விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தைச் சொல்லி எச்சரித்தான். “எதற்கும் நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள்என்றான். எர்னெஸ்டோவை விஸ்வம் கொல்ல முயன்றது எப்படியோ அவர்களுக்குத் தெரிந்து விட்டிருக்கும் என்று அனுமானித்த அவன்தலைவரைப் பிறகு யாராவது பார்த்திருக்கிறார்களா?” என்று கேட்டான்.

வாங் வே சொன்னார். “அவரை இம்மானுவல், அக்ஷய் தவிர யாரும் பார்க்க வழியில்லை. வேறு யாரும் பார்க்கவில்லை. கிழவரின் உதவியாளனிடம் பேசினேன். அவனும் பார்க்கவில்லை என்றான். டாக்டர்களையும்,  இம்மானுவலையும் தவிர யாரும் அவர் அறைக்கு உள்ளே போக அனுமதி இல்லையாம். எல்லாமே மூடு மந்திரமாக இருக்கிறது. இன்று காலை உபதலைவர் போய்ப் பார்க்கிறார். அவர் மூலம் நிலவரம் தெரியும். அவர் போன்காலுக்காகத் தான் காத்திருக்கிறேன்…”

அவர் போன் வந்தவுடன் எனக்குத் தெரிவியுங்கள்என்றான் விஸ்வம்.

அரை மணி நேரத்தில் உபதலைவரின் போன்கால் வந்தது. .பரபரப்புடன் உபதலைவர் சொன்னார். “நீங்கள் உடனே ம்யூனிக் வருவது நல்லது. நாம் கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது….” அவர் அதற்கு மேல் எதையும் விவரித்துச் சொல்லவில்லை. வாங் வே விஸ்வத்துக்குப் போன் செய்து சொன்னார். “ஒரு வேளை கிழவர் இறந்து போய் இம்மானுவல் அதை மறைத்திருப்பானோ என்ற சந்தேகம் வருகிறது. இப்போது தான் உபதலைவருக்கு விஷயம் சொல்லப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்….”

விஸ்வம் சொன்னான். “அனுமானங்கள் வேண்டாம். உடனடியாக்க் கிளம்புங்கள். நிலவரம் என்ன என்பதைச் சொல்லுங்கள். கிழவர் இறக்கவில்லை என்றால் நாம் ஏதாவது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.”

வாங் வே உடனடியாகக் கிளம்பினார். ம்யூனிக் போய்ச் சேர்கிற வரை அவருக்குப் பரபரப்பும் பதட்டமும் தாங்கவில்லை.  என்ன தான் விஸ்வம் அனுமானங்கள் வேண்டாம் என்றாலும் அவர் மனம் கிழவர் இறந்து விட்டதிலிருந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார், கோமாவில் இருக்கிறார், பிழைத்து விட்டார் என்பது வரை பல அனுமானங்களைச் செய்து ஒவ்வொன்றின் விளைவுகளைப் பற்றியும் யோசித்து சந்தோஷமும், துக்கமும் அனுபவித்தது.

ம்யூனிக்கில் அவர் எப்போதும் தங்கும் ஒரு தனி வாடகை பங்களாவிற்கு அவர் போய்ச் சேர்ந்தார். போனவுடன் உபதலைவருக்குப் போன் செய்தார். அவர் சொன்னார். “வந்து விட்டீர்களா நல்லது. முதலில் இம்மானுவல் வருவான். அவன் சொல்வதை எல்லாம் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்தில் நானும் வருகிறேன். பின் நாம் கலந்து பேசி முடிவெடுப்போம்” என்றார். அவர் அப்போதும் தலைவர் உடல்நலம் பற்றி எதுவும் சொல்லாமல் இம்மானுவல் வந்து சொல்வான் என்று சொன்னது வாங் வேயை எரிச்சல் அடையச் செய்தது.

அவர் இம்மானுவலுக்காக பரபரப்போடு காத்துக் கொண்டிருந்தார். இம்மானுவல் இருபது நிமிடங்களில் வந்தான். அவனை வரவேற்று அமர வைத்த அவர் முகத்தில் பெரும் கவலையைக் காட்டிக் கேட்டார் “தலைவர் எப்படி இருக்கிறார்?”

“நலமாய் இருக்கிறார்” என்று இம்மானுவல் சொன்னதை அவரால் நம்ப முடியவில்லை. அதிர்ச்சியை அவரையும் அறியாமல் முகத்தில் காட்டிப் பின் கஷ்டப்பட்டு நிம்மதியைக் காட்டினார். பலவந்தமாய் புன்னகையை வரவழைத்துக் கொண்டு அவர் கேட்டார். “பின் வாஷிங்டனில் என்ன பிரச்சினை ஆனது? நெஞ்சுவலி என்று சொன்னதால் நான் பயந்து விட்டேன்”

“விஸ்வம் நம் ஆட்கள் சிலர் துணையோடு அவரைக் கொல்லத் திட்டம் தீட்டியிருந்தான். நல்ல வேளையாக அவரைக் காப்பாற்றி விட்டோம்….”

வாங் வே இதயம் பிளந்தது போல் உணர்ந்தார். “என்ன நடந்தது. விளக்கமாகச் சொல்லுங்கள்?”

இம்மானுவல் இறுகிய முகத்துடன் சொன்னான். “கர்னீலியஸ் இறப்பிலிருந்து தலைவரைக் கொல்ல முயற்சி செய்தது வரை நீங்கள் தான் எங்களுக்கு விளக்கமாகச் சொல்ல வேண்டும்…”

வாங் வே அதிர்ச்சியில் உறைந்தார். அந்த அறைக்கு இரண்டு வீர்ர்கள் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்து இம்மானுவல் அருகே நின்றார்கள். அவர்கள் துப்பாக்கிகள் மட்டும் வாங் வேயைக் குறி பார்த்தன. வாங் வேக்கு உடலெல்லாம் வியர்த்தது. இதயம் சம்மட்டியடியாக அடிக்க ஆரம்பித்தது. எல்லாமே முடிவுக்கு வந்து விட்டதென்பதை மெல்ல உணர்ந்தார். கஷ்டப்பட்டு பலவீனமாகச் சொன்னார். “எனக்கு ஒன்றும் தெரியாது. அதனால் எதையும் சொல்ல முடியாது…”

இம்மானுவல் அவரை நேர்பார்வை பார்த்தபடி சொன்னான். ”நீங்களாகச் சொல்லா விட்டால் சித்திரவதைகள் செய்து சொல்ல வைக்க நேரிடும். நீங்கள் செய்த துரோகத்திற்கு சித்திரவதையுடன் கூடிய மரணம் தான் சரியான தண்டனையாக இருக்கும் என்றாலும் தலைவர் நீங்கள் இத்தனை காலம் இல்லுமினாட்டியில் செய்த சேவையை மனதில் வைத்து நீங்கள் எதையும் மறைக்காமல் உண்மையைச் சொன்னால் சித்திரவதை இல்லாமல் இறக்க அனுமதி தந்திருக்கிறார். முடிவு உங்கள் கையில்”

உடல் வியர்த்து முகம் வெளுத்து அழுகிற நிலைமைக்கு ஒரு கணம் வந்த வாங் வே மறு கணம் கண்களை மூடி தன்னை அமைதிப்படுத்திக் கொள்ள முயன்றார். இம்மானுவல் சொன்னான். “முதலில் கர்னீலியஸ் சாலமனில் இருந்து ஆரம்பியுங்கள். விஸ்வத்துடன் ஆன பழக்கத்தைப் பிறகு சொல்லலாம். நாங்களே எத்தனையோ தகவல்களைக் கையில் வைத்திருக்கிறோம். அதனால் ஒரு சின்னப் பொய் நீங்கள் சொன்னாலும், உண்மையை மாற்றிச் சொன்னாலும் எங்களுக்குத் தெரிந்து விடும். பிறகு உண்மையைச் சித்திரவதை இல்லாமல் நீங்கள் சொல்ல அனுமதி மறுக்கப்படும் என்பது நினைவிருக்கட்டும்.”

சிறிது நேரம் வாங் வே வாய் திறக்கவில்லை. அவர் பார்வை அவருடைய பாதுகாவலர்களைப் பரிதாபமாகத் தேடியது. அவர்கள் இல்லுமினாட்டியின் பணியாட்கள் என்பது பிறகு தான் நினைவு வந்தது. சாலமன் போல் தற்கொலை செய்து கொள்ளும் வசதி அவருக்கு இல்லை. வாய் திறந்து எதையும் சொல்லா விட்டால் சித்திரவதை உறுதி. கிழவர் அதில் எல்லாம் கருணை காட்ட மாட்டார். இப்போது இம்மானுவல் சொல்வதும், செய்வதும், செய்யப் போவதும் கிழவரின் கட்டளையே என்பதை வாங் வே அறிவார். சித்திரவதை அனுபவித்துச் சாக விரும்பாமல் கர்னீலியஸ் வைத்திருந்த ரகசிய ஆவணத்திலிருந்து ஆரம்பித்தார். சுருக்கமாக  இன்று வரை நடந்ததைச் சொன்னார். இம்மானுவல் அவர் சொன்னதைப் பதிவு செய்து கொள்ள ஆரம்பித்தான்.

அவர் சொல்லி முடித்தவுடன் இம்மானுவல் கேட்டான். “இத்தனையும் ஏன் என்று தலைவர் கேட்டார். தலைமைக்குழு உறுப்பினரான நீங்கள் தலைவர், உபதலைவருக்கு அடுத்தபடியாக இருப்பவர் நீங்கள். நீங்களே இப்படி எதிரியின் பக்கம் போனதெப்படி என்று தலைவர் அறிய விரும்புகிறார்?”

இந்தப் பேச்சு எர்னெஸ்டோவால் பிறகு கேட்கப்படும் என்பதை உணர்ந்த வாங் வே, இத்தனை ஆன பிறகு இனி மறைக்க என்ன இருக்கிறது என்று கடும் வெறுப்போடு சொல்ல ஆரம்பித்தார். “இது நான் சேர்ந்த இல்லுமினாட்டி அல்ல. அதன் பழம் பெருமையை இல்லுமினாட்டி சமீப காலமாக இழந்து வருகிறது. உச்சத்தில் இருந்த நாம் வீழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மைப் பயத்தோடு பார்த்தவர்கள் எல்லாம் பயம் குறைந்து வருகிறார்கள். இதற்கென்று இருந்த மரியாதையை, பயத்தை, கௌரவத்தை நாம் இழக்கக் காரணம் தலைவர் தான். எல்லா விதிகளையும், கௌரவத்தையும் அவர் காற்றில் பறக்க விட்டார். இல்லுமினாட்டியின் கூட்டத்தில் இல்லுமினாட்டி அல்லாத க்ரிஷைப் பேச அனுமதித்தார். விதிமுறைகளுக்கு எதிராக அவனை இல்லுமினாட்டியில் இணைத்தார். தற்காப்புக்கு இல்லுமினாட்டி அல்லாத அமானுஷ்யனைத் தருவித்தார். அவனுக்கும் இல்லுமினாட்டியின் ரகசியங்கள் பல தெரிய வைத்தார். சமீப காலமாக அவர் எடுத்த பல முடிவுகள் இல்லுமினாட்டியின் பலத்தோடு எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல. சாமியார் போல் எடுத்த முடிவுகள். இல்லுமினாட்டி அதிகாரத்தில் மூன்றாவது இடத்தில் நான் இருப்பதாகச் சொன்னீர்கள். ஆனால் பல முடிவுகளில் என்னைத் தலைமை கலந்தாலோசித்தது இல்லை. என் கருத்துக்கு மரியாதை தந்து எடுத்துக் கொண்டதில்லை.  இப்படித் தான்தோன்றித்தனமாக ஏதேதோ செய்து இல்லுமினாட்டியை அழிக்கப் போவது விஸ்வம் அல்ல, தலைவர் தான் என்று இப்போதும் நம்புகிறேன். என் இல்லுமினாட்டியைக் காப்பாற்றத் தான் விஸ்வம் பக்கம் போனேன். அவன் அவரை விட ஆயிரம் மடங்கு மேல். தனியொருவனாக இத்தனை சாதித்தவன் தலைவனாக சிறப்பாகவே சாதிப்பான்….”

கேட்டுக் கொண்டிருந்த இம்மானுவலின் முகத்திலும் அவன் அருகே இருந்த இரண்டு துப்பாக்கி வீர்ர்கள் முகத்திலும் எந்தச் சலனமும் இல்லை. வாங் வே ஆக்ரோஷமாகச் சொன்னார். “தலைவரிடம் சொல்லுங்கள். அவர் இப்போதைக்கு உயிர் பிழைத்திருக்கலாம். ஆனால் முடிவில் வெல்லப் போவது விஸ்வம் தான். அந்தச் சுவடி தலைவர் பெரிதாக நம்பும் ஆரகிள் சொல்லி கர்னீலியஸின் தாத்தா எழுதியது. அவனும் அவன் நண்பனும் சேர்ந்து தான் இல்லுமினாட்டியின் விதியையும் உலகத்தின் விதியையும் எழுதப் போகிறார்கள். என்னை நீங்கள் கொல்லலாம். ஆனால் விஸ்வத்தை நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது.”

அவர் மூச்சு வாங்க நிறுத்தினார். இம்மானுவல் இவ்வளவு தானா, இனியும் ஏதாவது இருக்கிறதா என்பது போல் பார்த்தான். அவர் சொன்னார். “அவ்வளவு தான். என்னைச் சுட்டுக் கொன்று விடலாம்… ஆனால் என் இறப்பை எப்படி இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்கு விளக்கப் போகிறீர்கள்? அப்படி விளக்கும் போது நான் சொன்னதையும் சேர்த்துச் சொல்லுங்கள். என் கருத்தே அவர்களில் பெரும்பாலானோருக்கு இருக்கும். அவர்களையும் சுட்டுக் கொன்று விடுங்கள். பின் உங்களுக்கு எதிர்ப்பே இருக்காது.”

(தொடரும்)
என்.கணேசன்


இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகம் பங்கு பெறவில்லை. எனவே நூல்கள் வாங்க விரும்புவோர் வழக்கம் போல் பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

சாணக்கியன் இரண்டு பாகங்களும் இம்மாத இறுதியில் வெளியாகும். வெளியானவுடன் அதை அறிவிக்கிறேன் 

அன்புடன்

என்.கணேசன்

 







8 comments:

  1. Speedily moving to tense situation. Both sides are nearing each other. Super novel.

    ReplyDelete
  2. வாங்வே இறந்தாலும்... அவர் நண்பர் அகிடோ அரிமா இருக்கிறார்... ஆனால், அவர் பெரிதாக எதிலும் ஈடுபடாதவர்...

    விஸ்வம் அந்த சர்ச்க்கு செல்லும் முன் இம்மானுவேல் அங்கு இருப்பான் என நினைக்கிறேன்....

    வாங்க் வேயின் உணர்வுகளையும்...மன எண்ண ஓட்டத்தையும் எழுத்தில் கொண்டு வந்த விதம்...அருமை👏👏👏👏

    ReplyDelete
  3. how many chapters remaining sir?

    ReplyDelete
  4. இதுதான் சார் நீங்க, வாங்வே தரப்பு நியாயங்களையும் super ah சொல்லிட்டீங்க, வில்லன் ன்ற role கிடையாது போல உங்க படைப்பு எல்லாத்துலயும்,

    ReplyDelete
  5. Replies
    1. Chanakyan, historical novel. Will be published in this month-end.

      Delete
  6. வாங் வே தைரியம் அசாதாரணம்

    ReplyDelete