சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 28, 2021

யாரோ ஒருவன்? 38


தன்லால் அந்தக் கிராமத்தான் அறிவுரையை அப்படியே பின்பற்றினான். அவன் இயல்பான முகபாவனையே அலட்சியம் தான். அந்த அலட்சிய முகபாவனையுடன் அந்த மனுவை வாங்கிக் கொண்டு லேசாகத் தலையசைத்து விட்டு உள்ளே போவதற்கு முன் யதேச்சையாகத் திரும்புபவன் போலத் திரும்பினான். அந்தக் கிராமத்தான் சொன்னது போல் அந்தப் பைக் தடியன் இப்போதும் சற்று தொலைவில் நின்று கொண்டு அவர்களையே கவனித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அதைக் கவனித்தது போல் காட்டிக் கொள்ளாமல் மதன்லால் உள்ளே போனான்.

சல்யூட் அடித்து வணங்கிய கான்ஸ்டபிளையும், கைகட்டி பவ்யமாக வணங்கி நின்ற பழைய குற்றவாளி ஒருவனையும் கண்டுகொள்ளாமல் தனதறைக்குள் நுழைந்து அமர்ந்தவன் கையிலிருந்த மனுவைப் பிரித்தான். தெளிவான கையெழுத்தில் எந்த விதமான கூடுதல் மரியாதையோ அடைமொழியோ இல்லாமல் எழுதப்பட்டிருந்ததைப் படித்தான்.

மதன்லால்,

நமக்குப் பிரச்சினை ஏற்படுத்துகிறவர்களைச் சமயோசிதமாக அப்புறப்படுத்தினால் ஒழிய நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது. அந்த மனிதர்கள் அதிகாரத்தில் இருப்பார்களேயானால் அதை நன்றாக யோசித்து, பின்னாலும் சிக்கிக் கொள்ளாதபடி, மிகவும் கவனமாகத் தான் கையாள வேண்டியிருக்கிறது. நான் யாரைச் சொல்கிறேன் என்பது உனக்குப் புரிந்திருக்கும். அது குறித்துப் பேச நாம் சந்திக்க வேண்டும். வரும் புதன் இரவு ஒரு மணிக்கு ஓட்டல் கங்கோத்ரியில் அறை எண் 101ல் என்னைச் சந்திக்க வா.

உன் வீட்டை வேவு பார்க்கிறவர்கள் அந்த வேலையை இரவு பன்னிரண்டு மணியில் இருந்து காலை நான்கு மணி வரை செய்வதில்லை. அதனால் அந்த இடைப்பட்ட நேரத்தில் மட்டுமே அந்த உளவாளிகளால் கவனிக்கப்படாமல் நாம் சந்திக்க முடியும். இதைக் குறித்து யாரிடமும் எதுவும் சொல்லாதே. வீட்டில் கூட அதுபற்றிய பேச்சு வேண்டாம். அது உளவாளிகளுக்குக் கண்டிப்பாக எட்டும் அபாயம் இருக்கிறது. எல்லாவற்றையும் காரியத்தால் பேசுவதே புத்திசாலித்தனம். அதைச் செய்வோம். பிறகு உலகம் அறியட்டும்.

படித்து விட்டு இந்தக் கடிதத்தை உடனடியாகக் கிழித்து விடு.

AA”

மதன்லால் கான்ஸ்டபிளை அழைத்து வெளியே நிற்கும் அந்தக் கிராமத்தானை உள்ளே அழைத்து வரச் சொன்னான். வெளியே கண்காணிக்கும் உளவாளிக்கும் மனு சம்பந்தமாக அந்தக் கிராமத்தானை அவன் அழைத்துப் பேசுவதாகத் தான் தோன்றும் என்று மதன்லால் நினைத்தான். ஆனால் கான்ஸ்டபிள் சென்று தேடிய போது அந்தக் கிராமத்தான் போய்விட்டிருந்தான்.

மதன்லால் யோசித்தான். இந்தக் கடிதத்தை எந்த அளவு நம்பலாம் என்பது அவனுக்குக் குழப்பமாகத் தான் இருந்தது. AA என்பது அஜீம் அகமதாக இருக்கலாம் என்று தோன்றினாலும் உறுதியாக நம்ப முடியவில்லை. ஓட்டல் கங்கோத்ரி சிம்லாவில் இருக்கும் ஒரு மலிவான லாட்ஜ். சீசன் சமயத்தில் மட்டும் அதிலும் அறைகள் கிடைப்பது கஷ்டம் என்றாலும் சீசன் அல்லாத சமயத்தில் பேரம் பேசி மிக மலிவில் அறைகளை வாடிக்கையாளர்கள் பெறுவது உண்டு. அஜீம் அகமது அது போன்ற ஒரு ஓட்டலில் ஏன் வந்து தங்க வேண்டும்? அஜீம் அகமது அவனே வருவானா, இல்லை அவன் ஆட்களை அனுப்புவானா? இல்லை இது அவன் எதிரிகள் விரிக்கும் வலையா? என்று யோசித்தபடியே மதன்லால் கடிதத்தைக் கிழித்துப் போட்டான்.

அன்று இரவு வரை அவன் மற்ற வேலைகளில் ஈடுபட்டாலும் பின்னணியில் மனம் இதே சிந்தனைகளில் யோசித்த வண்ணம் இருந்தது. இன்று திங்கட்கிழமை. இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன.... அன்றிரவு அவன் வீட்டுக்குக் கிளம்பிய போது பின் தொடரக் காத்திருந்தவன் பைக் தடியன் அல்ல, வேறு ஒரு ஆள். அந்த ஆள் தூரத்தில் இருந்தே அவனைப் பின் தொடர்ந்தான்.   இப்படி ஆட்கள் மாறி மாறி தான் அவனைக் கண்காணிக்கிறார்கள். எல்லாமே கோமாளித்தனமாய் அவனுக்குத் தோன்றியது.

மதன்லால் வீட்டுக்குப் போன பிறகு இரவு பத்து மணிக்கு வீட்டு ஜன்னல்கள் வழியே வெளியே ரகசியமாய் நோட்டமிட்டான். இரண்டு ஆள் கவனிக்க முடிந்த தொலைவில் நின்றிருப்பது தெரிந்தது. பதினொன்றே முக்காலுக்குப் பார்த்த போது ஒருவன் மட்டும் நின்றிருந்தான். பன்னிரண்டரைக்குப் பார்த்த போது யாரும் தெரியவில்லை. மறுபடி ஒன்றே முக்கால், மூன்றரை மணிக்குப் பார்த்த போதும் கண்காணிப்பவர்கள் யாரும் தெருவில் தெரியவில்லை.  நான்கரை மணிக்குப் பார்த்த போது ஒரு ஆள் வீட்டைக் கண்காணித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.  ஆறு மணிக்குப் பார்த்த போது இரண்டு பேர் இருந்தார்கள். அந்தக் கடிதத்தில் சொல்லியிருப்பது போல இரவு பன்னிரண்டு மணியிலிருந்து நான்கு மணி வரை கண்காணிக்க யாருமில்லை என்பது சரியாகத் தான் இருக்கிறது...

மறுநாள் தனக்கு வேண்டிய ஆள் ஒருவனிடம் ஓட்டல் கங்கோத்ரிக்குச் சென்று ரகசியமாய் விசாரித்து வரச் சொன்னான். அறை எண் 101 ஆல்பர்ட் அலெக்சாண்டர் என்ற பெயரில் புதன் மாலையிலிருந்து வியாழன் மாலை வரை பதிவு செய்யப்பட்டிருப்பதாய் அந்த ஆள் வந்து சொன்னான். அதுவும் AA என்பதற்குப் பொருத்தமாய் தான் இருக்கிறது... அங்கு வரும் ஆள் வேறு ஆளாகவே இருக்கலாமோ என்கிற சந்தேகம் வந்தது. இப்படி வேறு பெயரில் அல்லாமல் அஜீம் அகமது சொந்தப் பெயரிலா வந்து தங்குவான் என்று எண்ணிக் கொண்டான். அந்த ஓட்டலில் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கவில்லை என்பதை அவனுடைய ஆளும் உறுதிப்படுத்தினான்.  அஜீம் அகமது அந்த ஓட்டலைத் தேர்ந்தெடுக்க அதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்மற்ற வசதியான பெரிய ஓட்டல்களில் எல்லாம் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அஜீம் அகமது அது போன்ற ஓட்டல்களில் வந்து தங்குவதை விரும்ப மாட்டான்..

இப்படியெல்லாம் யோசித்து புதன் கிழமை நள்ளிரவில் கங்கோத்ரி ஓட்டலுக்குச் சென்று அறை எண் 101ல் வந்திருப்பவனைச் சந்திப்பதென்று மதன்லால் தீர்மானித்தான்.


வேலாயுதம் அந்த மில் அதிபரின் அறுவையான பேச்சுக்களைக் கஷ்டப்பட்டு சகித்துக் கொண்டிருந்தார்.  நாகராஜ் பற்றியும் அவன் வடநாட்டு ஆசிரமம் பற்றியும் முழுமையாக விசாரித்து விட்டுப் போக தான் அவர் வந்திருக்கிறார். ஏதோ ஒரு வேலையாக அந்தப் பக்கம் வந்ததாகவும், இவ்வளவு தூரம் வந்த பிறகு மில் அதிபரைச் சந்தித்து விட்டே போக வேண்டும் என்று தனக்குத் தோன்றியதாகவும் சொல்லி வந்தவர் அரை மணி நேரமாக அந்த மில் அதிபரின் பேச்சுக்குத் தலையசைத்தும், புன்னகைத்தும், சிரித்தும் சலித்துப் போய் விட்டார். ஆனால் வந்தவுடன் நாகராஜ் பற்றி விசாரித்தால் அதற்கென்றே வந்தது போல ஆகி விடும். மில் அதிபருக்கு அந்த எண்ணம் வராமல் பார்த்துக் கொள்ளத் தான் இந்த அரை மணி நேரப் பொறுமை...

இனியும் தாங்க முடியாது என்று தோன்றவே பேச்சில் ஒருசில வினாடிகள் இடைவெளி வருவதற்காகக் காத்திருந்து வேலாயுதம் மெல்ல இடைமறித்தார். “அன்னைக்கு எங்கள் பக்கத்து வீடு வரை வந்துட்டு எங்க வீட்டுக்கு வராமல் போய்ட்டது எனக்குப் பெரிய வருத்தம் தான். அந்த அளவு நாங்க அன்னியமாய்ப் போய்ட்டமா?”

மில் அதிபருக்கு உடனடியாக நினைவு எதுவும் வரவில்லை. “உங்க பக்கத்து வீட்டுக்கா? நானா?” என்றபடி திருதிருவென்று முழித்தார். பின் நினைவுக்கு வந்தவராக முகம் மலர்ந்து சொன்னார். “நாகராஜ் மகராஜ் வீட்டுக்கு வந்ததைச் சொல்றீங்களா? மகான்கள் தரிசனம் முடிச்சுட்டு நேரா வீட்டுக்குத் தான் திரும்பிப் போகணும்கிறது பல காலமாய் சொல்லப்படுகிற விதிமுறை. ஏன்னா அப்ப தான் அந்தப் புண்ணியமும், அந்தத் தெய்வீக அலைகளும் முழுசா வீடு வந்து சேரும்னு சொல்வாங்க. அதனால தான் நான் அப்ப உங்க வீட்டுக்கு வரலை. தப்பா நினைச்சுக்காதீங்க. உங்க வீட்டுக்குன்னே ஒரு தடவை வந்துட்டா போச்சு...”

அவர் தங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்ற ஆசை துளியும் இல்லாத வேலாயுதம் அது பற்றிப் பேசாமல் வசதியாக பேச்சை நாகராஜ் பக்கம் திருப்பினார். “அந்த நாகராஜ் ஒரு மகானா? பார்த்தால் சாதாரணமாய் அல்லவா தெரியறான்.... என்ன சொல்றீங்க?” என்று மிக ஆச்சரியத்துடன் கேட்டார்.

அவரை அவன் இவன்னு சொல்லாதீங்க. அது பெரிய அபசாரம்....” என்று மில் அதிபர் வேலாயுதத்துக்கு அறிவுறுத்தினார். ”மகான்கள் தோற்றத்துக்கு எந்த மதிப்பும் தர்றதில்லை. தோற்றத்துக்கு மதிப்புக் கொடுக்கறவன் மகானுமல்ல.”

இவ்வளவு உயர்வாய் நீங்க சொல்றீங்க. ஆனால் அவரைப் பார்த்தால் அப்படி ஒன்னும் தெரியலையே. அவரைப் பத்தி விரிவாய் தான் சொல்லுங்களேன். உங்களுக்கு அவரை எத்தனை காலமாய் தெரியும்? அவர் பூர்வீகம் தான் என்ன?” என்று வேலாயுதம் கேட்டு விட்டு பரபரப்புடன் பதிலை எதிர்பார்த்தார்.



(தொடரும்)
என்.கணேசன்   

Thursday, June 24, 2021

இல்லுமினாட்டி 108



க்ரிஷ் ம்யூனிக் போன நாள் இரவில் உதய் சிந்துவுக்குப் போன் செய்து தம்பி எல்லோரையும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொன்னதைச் சொன்னான். “...நீயும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சிந்து. அந்த எதிரி மிகவும் ஆபத்தானவன்...”

சிந்து ஒன்றும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டாள். அண்ணனிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொன்ன க்ரிஷ், ஆபத்து அவள் மூலமாகத் தான் அவர்களுக்கு வரும் என்பதை இன்னும் சொல்லாமல் விட்டிருக்கிறான்... இதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அவன் அண்ணன் மனம் புண்படுவதை அவன் விரும்பவில்லை. ஆனால் அவன் திரும்பி வருவதற்குள் அவள் சென்னை சென்றால் அதை அவனுக்குத் தெரியப்படுத்த எதாவது ஏற்பாடு செய்து விட்டுப் போயிருப்பான். அப்போது அவன் என்ன செய்வான் என்று அவளுக்குத் தெரியவில்லை.

விஸ்வம் இரண்டு நாள் முன்பு போன் செய்து பேசியதிலிருந்து அவள் மனப் போராட்டத்திலேயே இருக்கிறாள்.   நீ தயாராக இரு. ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் நீ என்ன செய்ய வேண்டுமென்பதை நான் உனக்குத் தெரிவிக்கிறேன்...” என்று சொல்லியிருக்கிறான். ஒவ்வொரு நாளும் முடிய முடிய மனம் திக் திக்கென்றது. அவன் போன் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று அவளால் தீர்மானிக்க முடியவில்லை.

“ஏய் என்ன தூங்கி விட்டாயா? சத்தமேயில்லை...” என்று உதய் கேட்ட பிறகு சிந்து மெல்லச் சொன்னாள். “நான் இப்போதைக்கு வெளியாள் தானே? எனக்கென்ன ஆபத்து வரப் போகிறது?”

“ஹரிணி கூட இப்போதைக்கு வெளியாள் தான். ஆனால் அன்றைக்கு அவளைக் கடத்திக் கொண்டு போய் விட்டான். நல்ல வேளையாக அவள் இருக்குமிடத்தை செந்தில்நாதன் கண்டுபிடித்தார். இல்லா விட்டால் என்ன ஆயிருக்கும் என்பதை என்னால் இன்னும் யோசித்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அதனால் நீ அலட்சியமாய் இருந்து விடாதே. உனக்கு ஏதாவது ஆனால் என்னால் தாங்க முடியாது”

பழைய சிந்துவாக இருந்திருந்தால் இதற்கெல்லாம் அசைந்து கொடுத்திருக்க மாட்டாள். மரத்துப் போயிருந்த இதயம் இப்போது கனிந்து வருவதால் அந்த வார்த்தைகள் என்னவோ செய்தன. இவனை இனியும் அவள் எப்படி ஏமாற்ற முடியும்?


க்ரிஷ் ம்யூனிக் விமானநிலையத்தில் இறங்கும் போது தான் அவனை யாரோ ஊடுருவிப் பார்ப்பது போல் உணர்ந்தான். அவனுக்குள் யாரோ புகுந்து பார்க்கிறார்கள். அவனுடைய எண்ணங்கள், திறமைகள், ரகசியங்கள் எல்லாவற்றையும் அவசரமாய் யாரோ பார்வையிடுவது போல் அவனுக்குத் தோன்றியது. எதிரில் தெரியும் ஏராளமான மனிதர்களில் யார் பார்வையிடுகிறார்கள் என்று அவனால் கணிக்க முடியவில்லை.  அவனுக்குத் தெரிந்து இது போன்ற வேலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவன் விஸ்வம் தான். ஆனால் அவன் க்ரிஷ் மனதை ஊடுருவ முடியாதபடி வேற்றுக்கிரகவாசி நண்பன் ஒரு பாதுகாப்பு ப்ரோகிராம் போட்டு விட்டுப் போயிருக்கிறான். அது விஸ்வம் இன்னொரு உடலுக்குப் போன பிறகு வேலை செய்யவில்லையா? இல்லை இது வேறு யாராவதா? அவன் கூட்டாளியாக இருக்குமோ?... அந்த எண்ணத்தைக் கூட ‘அந்த யாரோ’ அறிந்து கொண்டது போலிருந்தது. அந்த யாரோவைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து அப்படியே க்ரிஷ் நின்று கொண்டு கூட்டத்தினரைப் பார்வையால் அலசினான்.

அவனை வரவேற்க வந்திருந்த இம்மானுவல் முன்னால் வந்து கேட்டான். “ஏன் அப்படியே நின்று விட்டாய் க்ரிஷ்? யாரைத் தேடுகிறாய்?”

க்ரிஷ் தன் உணர்வை அவனிடம் சொன்னான். சொல்லச் சொல்ல அவனை ஊடுருவும் சக்தி விலகிக் கொண்டது. இனித் தெரிந்து கொள்ள வேறெதுவும் இல்லை என்று விலகிக் கொண்டது போல் க்ரிஷுக்குத் தோன்றியது. அதையும் க்ரிஷ் இம்மானுவலிடம் சொன்னான்.

இந்த முறை இம்மானுவல் அந்த ஆட்கூட்டத்தில் யாரையும் தேடப் போகவில்லை. “அது வேறு யாருமில்லை. விஸ்வத்தின் கூட்டாளி தான். ஆள் அகப்பட மாட்டான். வா போகலாம்…” என்று சொல்லி அவன் அமைதியாக நடக்க ஆரம்பித்தான். க்ரிஷ் திகைப்புடன் அவனைப் பின் தொடர்ந்தான்.


சாலமன் பெரும் சங்கடத்துடன் அந்த சர்ச்சை நோக்கிக் காரில் போய்க் கொண்டிருந்தார்.  ஒரு முறை அவருடைய ஆட்களின் பார்வையில் அகப்பட்ட பிறகு மறுபடியும் அகப்பட அவர் விரும்பவில்லை. அகப்பட்டால் கண்டிப்பாகக் கேள்விகள் எழும். ஒரு முறை சொன்ன காரணத்தை யதார்த்தமாக எடுத்துக் கொள்வார்கள். இரண்டாவது முறையைச் சந்தேகிக்காதவன் உளவுத்துறைக்கே லாயக்கில்லாதவன் தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று மட்டுமல்ல இன்னும் சில முறை போய் வர வேண்டி இருக்கும் போல இருக்கிறது. அது இன்னும் ஆபத்து. அந்தப் பகுதி போலீஸ் அல்லது வேறு யாரோ ஒருவர் அவரைக் கவனித்து நினைவு வைத்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அதுவும் நல்லதல்ல. யாராவது ஒரு பொதுநல விரும்பி “ஆளே இல்லாத அந்த சர்ச்சுக்கு யாரோ ஒருவர் காரில் அடிக்கடி வந்து போகிறார்” என்று அந்தப் பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்தால் போதும் அதுவும் தலைவலி தான். அவருக்கு மட்டுமல்ல. உள்ளே ஒளிந்திருக்கும் விஸ்வத்துக்கும் தான்.

நல்ல வேளை இது ஜெர்மனி. மக்கள் தொகை சில நாடுகள் போல் அதிகமாய் இல்லை. இந்தப் பகுதியிலும் அதிக வீடுகள், ஆட்கள் இல்லாமலிருப்பது நல்லதாய்ப் போயிற்று. ஆனாலும் அவர் எச்சரிக்கையாக இருக்க விரும்பினார்.

அவர் வாங் வே அனுப்பிய கடிதத்துடன் சேர்ந்து வைக்க இன்னொரு கடிதம் எழுதினார். “திரும்பத் திரும்ப நானே இங்கே வருவதால் அடையாளம் காணப்படும் அபாயம் இருக்கிறது. அதனால் ஒரு சிறிய வேண்டுகோள். அவருடன் ஸ்கைப்பில் பேச உங்களுக்கு உகந்த நாள், நேரம் எதுவென்று ஒரு மணி நேரத்திற்குள் எழுதித் தெரிவித்தால் மிகுந்த உபகாரமாய் இருக்கும். நான் அதுவரை அருகில் உள்ள பூங்காவில் ஒரு மணி நேரம் இளைப்பாறி விட்டுத் திரும்பவும் வருகிறேன். அடுத்த முறை வரும் போது நம் அனைவரின் பாதுகாப்பையும் முன்னிட்டு நான் வேறு வேடத்தில் வருகிறேன். நண்பன் என்ற அட்டையைச் சுமந்து வருவதை வைத்து நான் என்று அறிக. நன்றி”

சர்ச் சென்றதும் அந்த கண்ணாடி உடைந்த ஜன்னலில் இரண்டு காகிதங்களையும் வைத்து அவற்றின் மேல் கல் ஒன்றையும் வைத்து விட்டு அருகில் இருந்த பூங்காவுக்குப் போய்ப் சாலமன் உட்கார்ந்து கொண்டார். ஒருவேளை திரும்பவும் அவர்கள் ஆட்கள் கண்ணில் பட்டாலும் இந்தப் பூங்காவின் அமைதி எனக்கு ஏனோ மிகவும் பிடித்து விட்டது. அதனால் தான் மறுபடி வந்திருக்கிறேன் என்று கூடச் சொல்லலாம் என்று எண்ணிக் கொண்டார்.

ஒரு மணி நேரம் என்பது ஒவ்வொரு வினாடியும் மிக மெல்ல ஊர்ந்து செல்வதாய் இருந்தது.    


விஸ்வம் ஜிப்ஸியிடம் கேட்டான். “வாங் வேயிடம் எப்போது பேசலாம்?”

“நாளையே பேசுவது நல்லது. உன் எதிரியும் இன்றைக்கு இங்கு வந்து சேர்ந்து விட்டான். அதனால் இனி எதற்கும் காலதாமதம் செய்வது வீண்”

“அப்படியானால் இரவு நேரத்தையே தேர்ந்தெடுப்பது நல்லது. சாலமன் எழுதி இருப்பது போல் அடிக்கடி இங்கே தென்படுவது அந்த ஆளுக்கு மட்டுமல்ல நமக்கும் தேவையில்லாத ஆபத்து தான். இரவில் அந்த ஆள் ரகசியமாய் வருவது நல்லது. பகலில் வேண்டாம்”

ஜிப்ஸி தலையசைத்தான்.

ஜெர்மனி நேரப்படி மறுநாள் இரவு ஒன்பது மணிக்குப் பேசலாம் என்று முடிவெடுத்து விஸ்வம் வாங் வேக்குக் கடிதம் எழுதி வைத்தான்.

சாலமன் பூங்காவிலிருந்து ஒரு மணி நேரம் கழித்து வந்து அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு போனார். எதாவது ஆளோ வாகனமோ பார்வைக்குத் தெரிகிறதா என்று இருபக்கமும் பார்த்தார். நல்ல வேளையாகத் தெருவே  வெறிச்சோடிப் போயிருந்தது. அவர் நிம்மதியுடன் காரில் பறந்தார்.

(தொடரும்)
என்.கணேசன்




Monday, June 21, 2021

யாரோ ஒருவன்? 37


ரத்தின் அறையிலிருந்து வெளியே வந்தவுடன் ரஞ்சனி மகனிடம் கவலையுடன் சொன்னாள். ”ரெண்டு மூனு நாளுக்கு முன்னாடி கூட எவனோ நம்ம லெட்டர் பாக்ஸ்ல எதோ பொருட்காட்சி விளம்பர நோட்டீஸைப் போட்டுட்டுப் போயிருக்கான். இவர் வாக்கிங் போயிட்டு வந்தவர் அதை எடுத்துப் பிரிச்சுப் பார்த்து இன்னைக்கு மாதிரியே என்னவோ போல ஆகி நின்னுட்டார். அவர் வேர்த்து விறுவிறுத்து நின்னைதப் பார்த்து நானும் ஏதோ ஆபத்தான தகவல் தான் அதிலே இருக்கு போலன்னு பயந்து போயிட்டேன். அப்புறம் தான் பொருட்காட்சி விளம்பரம்னு சொல்றார்….”

தீபக் சொன்னான். “இப்போதைக்கு அவர் ஓய்வெடுக்கட்டும்மா. பிறகு நான் அவரை டாக்டர் கிட்ட கூட்டிகிட்டுப் போறேன். போய் செக் பண்ணிடலாம். அது தான் நல்லது….”

சரத் மெல்ல எழுந்து வந்து அறைக்கதவைச் சத்தமில்லாமல் தாளிட்டு விட்டு கல்யாணுக்குப் போன் செய்தான். அவனுக்கு இன்று ஆபிஸ் போய்ச் சொல்கிற வரை பொறுத்திருக்க முடியும் என்று தோன்றவில்லை.

கல்யாண் கேட்டான். “என்ன சரத்…?”

சரத் தீபக் இன்று அதிகாலை நாகராஜைச் சந்தித்து வந்து சொன்னதை எல்லாம் தாழ்ந்த குரலில் தெரிவித்தான். அதைக் கேட்டு கல்யாணும் அதிர்ந்து போனான்.

சரத் அதிர்ச்சியில் வியர்த்து விறுவிறுத்து தலைசுற்றுவது போல் உணர்ந்து சோபாவில் சரிந்ததையும் சொன்னான். “எல்லாமே ஏதோ அமானுஷ்யமாய் தோனிச்சு…”

கல்யாண் சொன்னான். “நாகராஜ் சொன்னதை எல்லாம் பெருசாய் ஏன் எடுக்கற சரத். அதுவும் இந்த ஆத்மா தேடி வர்ற சமாச்சாரம் எல்லாம் நம்பற மாதிரி இல்லை. அதை நான் அன்னைக்கே சொன்னேனே

சரத் சொன்னான். “அதை நானும் பெருசாய் நம்பலை. ஆனால் தீபக்குக்கு ஒரே கனவு ரெண்டாவது தடவையாகவும் வந்திருக்கறதைப் பத்தி என்ன சொல்றே? அதை நாகராஜ் கண்டுபிடிச்சுச் சொன்னதையும் லேசா எடுத்துக்க முடியல…”

கல்யாணுக்கு உடனடியாக அதற்குப் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. அவனாலும் அதற்குப் பகுத்தறிவான காரணம் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.  பக்கத்து வீட்டுக்காரன் அமானுஷ்ய மனிதனாகவும், பிரச்சினைக்குரிய ஆளாகவும் தெரிந்தான். அவன் நடவடிக்கை எதுவும் இயல்பாய் இல்லை. அவனைப் பற்றி அறிந்து கொள்ள தீபக்கை ஊக்குவித்து அனுப்பியது இப்படி ஒரு பிரச்சினையைக் கொண்டு வந்து தரும் என்று அவன் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. “நீ முதல்ல அமைதியாய் இரு. ரஞ்சனி, தீபக் முன்னாடி நீ அமைதியாய் இருக்கறது ரொம்ப முக்கியம். என்ன செய்யணும்னு நான் யோசிக்கிறேன். கவலைப்படாதே….”

கல்யாண் போன் பேசி விட்டுத் திரும்பிய போது வேலாயுதம் தாழ்ந்த குரலில் கேட்டார். “என்னடா பிரச்சினை?”

கல்யாண் மகளோ மனைவியோ அங்கே அருகில் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு அவர்கள் கண்ணில் படாமல் போகவே சரத் தெரிவித்த தகவல்களை எல்லாம் தாழ்ந்த குரலில் தந்தையிடம் சொன்னான். அவர் முகத்திலும் கவலையின் ரேகைகள் தெரிந்தன. “நாகராஜைப் பத்தி தீபக் கிட்ட சொன்னதே தப்பாய் போச்சு போல இருக்கே. வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டு விட்டோமோ?” என்று கேட்டார் அவர்.

கல்யாண் உடனடியாக எதுவும் சொல்லாமல் யோசித்தான். பின் மெல்லச் சொன்னான். “பக்கத்து வீட்டுக்காரனைப் பத்தி நாம முழுசா தெரிஞ்சு வெச்சுக்கிறது இப்ப அவசியமாயிடுச்சுப்பா. நீங்க பக்கத்து வீட்டுக்கு வந்துட்டுப் போன மில் அதிபரை ஒரு தடவை நேர்லயே போய்ப் பார்த்துட்டு முழு விவரங்களையும் சேகரிச்சுட்டு வந்துடுங்களேன். முக்கியமா இவன் தங்கியிருந்ததா அவர் சொன்ன அந்த வட இந்திய ஆசிரமத்தோட விலாசத்தையும் வாங்கிட்டு வந்துடுங்கப்பா. இவனோட பூர்வீகத்தை வேற வழிகள்லயும் தெரிஞ்சுக்க அது உதவும்…”

வேலாயுதம் தலையசைத்து விட்டு மெல்ல பக்கத்து வீட்டைப் பார்த்தார். பக்கத்து வீடு அதில் வசிக்கும் மனிதர்களையும் பாம்பையும் போலவே மர்மமாய் காட்சியளித்தது. இது வரை எத்தனையோ முறை அது காலியாக இருக்கும் போதும் அவர் பார்த்திருக்கிறார். ஆனால் இது வரை இப்படித் தோன்றியதில்லை. இப்போது வெளிப்புறத் தோற்றத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லா விட்டாலும் அந்த உணர்வை ஏற்படுத்தியிருப்பது நாகராஜைப் பற்றிக் கேள்விப்பட்ட விஷயங்களா, இல்லை வேறெதாவது சூட்சுமக் காரணம் இருக்கிறதா?


னார்தன் த்ரிவேதியிடமிருந்து மதன்லாலுக்குப் பிறகு எந்தத் தகவலும் வந்து சேரவில்லை.  நரேந்திரன் வந்து விசாரிப்பதைப் பற்றி அவர் அஜீம் அகமதின் ஆட்கள் காதில் போட்டு வைத்திருப்பதாய் அன்று சொல்லியிருந்தார். அதன் பின் என்ன ஆயிற்றென்று தெரியவில்லை. அதற்கடுத்த தகவல்களை அவர் நேரடியாகப் போன் செய்து தெரிவிக்கத் தயங்குவார் என்பது சென்ற முறை அனுபவத்தில் இருந்தே மதன்லாலுக்குத் தெரிந்திருந்ததால் முன்பு போலவே கவுன்சிலர் அல்லது வேறு எடுபிடிகள் மூலமாக விரைவிலேயே தொடர்பு கொள்வார் என்று மதன்லால் தினமும் எதிர்பார்த்து ஏமாந்தான். அவன் வீட்டு முன்னால் எந்த வாகனம் வந்து நின்றாலும் அவர் ஆளாக இருக்குமோ என்று ஓடோடி வந்து பார்ப்பான். வேறு யாராவது வந்திருப்பார்கள். நிலவரம் சரியில்லாததால் அவரை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் வழியில்லை.

அவன் எங்கே போனாலும் ரா உளவாளிகள் அவனைக் கண்காணிப்பதாய் உணர்ந்தான். ஜனார்தன் த்ரிவேதியின் தொலைபேசியே ஒட்டுக் கேட்கப் படலாம் என்று அவர் சந்தேகிக்கும் போது அவன் தொலைபேசியையும் அவர்கள் விட்டு வைக்க வழியில்லை. மாமூல், லஞ்சம், அராஜகம் என்று எந்தக் கவலையும் இல்லாமல் ராஜாங்கம் நடத்தி வந்த அவனுக்கு இப்படி தொடர்ந்து கண்காணிக்கப்படுவது தொழிலுக்கும் இடைஞ்சலாக இருந்தது. அது அவனை இயல்பாய் இயங்க விடவில்லை. தன்னை ரா உளவாளிகள் பின் தொடர்வது மதன்லாலுக்கு மிகவும் அவமானமாகவும் இருந்தது. சிம்லாவின் உயர் போலீஸ் அதிகாரியான அவனையே எந்த மரியாதையும் பயமும் இல்லாமல் அவர்கள் பின்தொடர முடிவது அவனுக்கு விடும் சவாலாகவே நினைக்கத் தோன்றியது. இப்படி அவனைப் பின்தொடர்ந்து என்ன கண்டுபிடித்துவிடப் போகிறார்கள் இந்த முட்டாள்கள் என்று அடிக்கடி அவன் ஏளனமாய் நினைத்தான்

நரேந்திரன் பிறகு அவனைத் தொடர்பு கொள்ளவில்லை. உளவாளிகளைக் கண்காணிக்க வைத்து விட்டு அவன் போய் விட்டான் போலிருக்கிறது. அஜீம் அகமது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று நினைக்கும் போது மதன்லாலுக்கு அவன் மீதும் கோபம் வந்ததுஉலகமே பயக்கும் பயங்கரத் தீவிரவாதியான அஜீம் அகமது நரேந்திரனை எளிதாக அப்புறப்படுத்த முடியுமே.. ஏன் இன்னும் கண்டுகொள்ளாமல் இருக்கிறான்?

இப்போது வீட்டிலிருந்து போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க் கொண்டிருந்த மதன்லால் ஜீப்பின் பக்கவாட்டுக் கண்ணாடியில் அவனைப் பைக்கில் பின் தொடரும் ஒரு தடியனைக் கவனித்தான். நேற்றிலிருந்து அவன் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறான். அவனைச் சுற்றி வளைத்து நையப் புடைத்தால் என்ன என்று தோன்றியது. கேட்டால் எதாவது ஒரு காரணம் சொல்லிக் கொள்ளலாம்….

இந்தச் சிந்தனையில் போலீஸ் ஸ்டேஷன் சென்ற மதன்லால் ஸ்டேஷன் வாசலில் ஒரு கிராமத்தான் நிற்பதைக் கவனித்தான். அவன் கையில் ஏதோ ஒரு மனு இருந்தது. அவன் மதன்லாலை ஒருவித சூட்சுமத்துடன் பார்த்தபடியே நெருங்கினான். அவன் பார்வையிலேயே எதையோ தெரிவிக்க முயல்வது தெரிந்தது. மதன்லால் அவனைக் கூர்ந்து பார்த்தான்.

அருகே வந்த அந்த கிராமத்தான்அந்த பைக் தடியன் இங்கே பார்த்துட்டே இருக்கான். உங்க முகபாவனையை மாற்றாதீங்க…. இயல்பாய் இருங்க. இந்த மனுவை இங்கே பிரிச்சுப் படிக்காதீங்க. உள்ளே போய் படிங்கஎன்றான்.



(தொடரும்)
என்.கணேசன் 



Saturday, June 19, 2021

வாழ்க்கையில் ஒழுங்குமுறை

கீதை காட்டும் பாதை 31

ஏன் பல சமயங்களில் நமக்கு தியானம் கைகூடுவதில்லை என்ற கேள்விக்கு விடை இதோ

Thursday, June 17, 2021

இல்லுமினாட்டி 107



ண்பரின் புன்னகையிலேயே அவர் அந்தச் சாத்தியக்கூறை யூகித்து விட்டார் என்று புரிந்து கொண்ட வாங் வே புன்னகையுடன் சொன்னார். “நீ நினைப்பதே தான்”.

அகிடோ அரிமா சிரித்துக் கொண்டே சொன்னார் “ஆனால் அது எப்படி சாத்தியமாகும் என்று நீங்கள் சொல்லவில்லையே”

வாங் வே தன் பதிலை விரிவாகவே சொன்னார். “இல்லுமினாட்டியின் தலைவரைக் கொல்ல முடியும் என்றோ, அந்தப் பதவியிலிருந்து நீக்க முடியும் என்று யோசிக்கக்கூட தைரியம் நிறைய வேண்டும். இது வரை இல்லுமினாட்டி வரலாற்றில் எந்த இல்லுமினாட்டி தலைவரும் கொல்லப்பட்டதில்லை. அதற்கான முயற்சி எடுக்கப்பட்டதற்கான தகவல்கள் கூட இல்லை. அப்படி இருக்கையில் அதை நினைக்கவும், திட்டமிடவும் கூட ஒருவன் கிளம்பியிருக்கிறான் என்றால் அது விஸ்வம் தான். அவனிடம் இருக்கும் சக்திகளை எல்லாம் யோசித்து இல்லுமினாட்டியும் கூடப் பயந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி இருக்கிறது, பாதுகாவலன் ஒருவனைப் புதிதாக வரவழைத்தும் இருக்கிறது... ஆக விஸ்வம் இந்தத் திட்டமிடும் விதத்திலேயே சரித்திரம் படைத்து விட்டான். அவன் வெற்றி பெற்று விட்டால் உடனடியாக என்ன ஆகும் என்று நினைக்கிறாய்?”  

அகிடோ அரிமாவுக்கு உடனடியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை.  “என்ன ஆகும்?” என்று கேட்டார்.

“இது வரை எத்தனையோ உலகத் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உடனடியாக அந்தப் பாதுகாவலர்கள் செய்வதென்ன?”

“கொன்றவனைச் சுட்டுக் கொன்று விடுவது தான் நடந்திருக்கிறது...”

வாங் வே திருப்தியாகப் புன்னகைத்தார். “ஒருவேளை அப்படி ஆனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த மாதிரி ஆகிவிடும். தலைவரும் காலி. விஸ்வமும் காலி என்றால் தலைமைப்பதவி காலியாகி விடும். தகுந்த ஆள் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்து விடலாம்...”

அகிடோ அரிமா சொன்னார். “சில சமயங்களில் கொன்றவன் தப்பித்துப் போய் விடும் சாத்தியமும் இருக்கிறது.... விஸ்வம் போன்ற ஒரு ஆள் மாட்டிக் கொள்வான் என்று தோன்றவில்லை”

வாங் வே சொன்னார். “கிழவரைப் பாதுகாக்க அமானுஷ்யன் என்று ஒருவன் வந்திருக்கிறான். அவன் கிழவரைக் காப்பாற்ற முடியா விட்டாலும் அவரைக் கொன்றவனைத் தப்பிக்க விடுவான் என்று தோன்றவில்லை. அவனைக் காற்றின் வேகத்தில் நகரக்கூடியவன் என்று பலரும் சொல்கிறார்கள்.”

அகிடோ அரிமா சொன்னார். “விஸ்வமும் அப்படித்தான் என்கிறார்கள்”

வாங் வே சொன்னார். “உண்மை. அப்படி விஸ்வம் தப்பித்து விட்டாலும் நல்லது தான். தலைவர் பதவிக்குத் தேர்தல் வரும். முந்தைய தலைவரைக் கொன்றவர் தேர்தலில் நின்றால் எந்த இல்லுமினாட்டியாவது அவருக்கு ஓட்டு போடுவானா என்பது சந்தேகமே. தலைவரைக் கொன்ற விஸ்வம் தலைவராவது சாத்தியமல்ல”

அகிடோ அரிமா சொன்னார். “கொன்றது அவன் என்ற சந்தேகம் வராதபடி அவன் எல்லாவற்றையும் செய்தால் ஒழிய...”

வாங் வே புன்னகைத்தார். “ஆமாம். ஆனால் கொன்றது யார் என்று வெளிப்படையாகத் தெரியும் வரை சந்தேகம் அவன் மீதே இருக்கும்”

அகிடோ அரிமா தலையசைத்தார். அதுவும் உண்மை தான்.

வாங் வே தொடர்ந்தார். “அப்படியும் ஏதாவது திட்டம் வைத்திருந்து எல்லோரையும் ஏமாற்றி அவன் தலைவன் ஆனால், அவனுக்கு ஆதரவாக இருந்த ஒரே ஒருவன் என்ற வகையில் உபதலைவர் பதவி எனக்குக் கிடைப்பது உறுதி. அதற்காகத் தான் அவனுடன் தொடர்பு கொண்டு வருகிறேன்”

அகிடோ அரிமா சொன்னார். “அந்த அமானுஷ்யன், க்ரிஷ் எல்லாருமாகச் சேர்ந்து தலைவரைக் காப்பாற்றி, விஸ்வத்தைக் கொன்று விட்டால்...? க்ரிஷ் பார்த்தால் சாதாரணமாகத் தான் தெரிகிறான். ஆனால் தேவைப்படும் போது  ஏதாவது மேஜிக் செய்து விடுகிறான். அதனால் தான் சொல்கிறேன்...”

வாங் வே அந்த சாத்தியத்தையே ரசிக்கவில்லை. ஆனால் நண்பர் சுட்டிக் காட்டியது போல் அப்படி நடக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதை மறுக்க முடியாமல் தலையாட்டிய அவர் ”அப்படி நடந்தால் கூட நமக்கு நஷ்டமில்லை. நம்மைப் பொறுத்த வரை முந்தைய நிலவரம் தான்” என்றார்.

“விஸ்வத்துடன் நீங்கள் தொடர்பில் இருந்ததற்கு ஆதாரம் எதுவும் கிடைக்காத வரையில்....” அகிடோ அரிமா சுட்டிக் காட்டினார்.

வாங் வே அதை ஆமோதித்துத் தலையாட்டினார். “அதை நான் உணர்ந்திருக்கிறேன் நண்பனே. அதில் நான் மிகவும் எச்சரிக்கையாகவும் இருக்கப் போகிறேன்...”

அகிடோ அரிமா சொன்னார். “ஆனால் விஸ்வம் உங்களை அதிக எச்சரிக்கையோடு இருக்க விடுவதாக இல்லை நண்பரே. அவன் கடிதத்தில் மதில் மேல் பூனையாக இருப்பதானால் உங்கள் உறவே வேண்டாம் என்று சொல்லி இருக்கிறான் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...”

வாங் வே சொன்னார். “உண்மை தான். நானும் அவனுக்கு ஏதாவது வகையில் உதவவே நினைக்கிறேன். அவன் ஜெயித்தாலும் கூட அதையும் நான் அனுகூலமாகவே நினைக்கிறேன்... எர்னெஸ்டோ போனால் போதும் என்று எனக்கு ஆகிவிட்டது நண்பனே. இவர் இந்தப் போக்கிலேயே போனால் இந்த இயக்கத்தையே அழித்து விடுவார் என்றே நினைக்கிறேன். பழைய, உறுதியான ஆளாக அவர் இப்போது இல்லை. மென்மையாக மாறிக் கொண்டு வருகிறார். அவருடைய சமீபத்திய சில முடிவுகள் நம்மை பலவீனமாக்கும் விதமாகவே இருக்கின்றன. நீ தனிப்பட்ட முறையில் சொல். நீ இந்த மென்மையான போக்கு இல்லுமினாட்டியின் வளர்ச்சிக்கு உதவும் என்று நினைக்கிறாயா?”

அகிடோ அரிமா சொன்னார். “நானும் உதவாது என்றே நினைக்கிறேன். நம்மைப் போல் பலரும் நினைக்கிறார்கள் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் அவர் அந்தப் பதவியில் இருக்கும் வரை அவரை யார் அசைக்க முடியும் நண்பரே?”

”அப்படி அசைக்க முடிந்த ஒரே ஒருவனாக விஸ்வத்தை நான் பார்ப்பதால் தான் அவனுக்கு உதவ நினைக்கிறேன் நண்பா. நீ சொன்னது போல் இதில் ஆபத்து இருப்பது உண்மை தான். ஆனால் மாற்றம் வேண்டுமென்றால் நாம் எதாவது செய்தாக வேண்டும். தானாக எதுவும் மாறி விடுவதில்லை...”

”ஆனால் அவன் உங்களை நேரில் சந்தித்துப் பேசக் கூப்பிடுகிறானே. நீங்கள் நேரில் வேறெதாவது சாக்குச் சொல்லிப் போனால் கூட அவர்கள் சந்தேகத்துடன் பார்ப்பார்களே.. என்ன செய்யப் போகிறீர்கள்?”

“நவீன தொழில் நுட்பம் தான் வளர்ந்திருக்கிறதே. அதன் மூலமாக நேரில் பார்த்துப் பேசிக் கொள்ள வேண்டியது தான்”

அகிடோ அரிமா திருப்தியுடன் தலையசைத்தார். பின் நண்பருக்கு இன்னொரு அறிவுரையும் சொன்னார். “நண்பரே. எந்தக் காரணத்தைக் கொண்டும் அவன் எர்னெஸ்டோவைக் கொல்ல உதவி கேட்டால் மட்டும் மறுத்து விடுங்கள். கண்டுபிடிக்கப்பட்டால் அது பேராபத்து. நம் உளவுத் துறை அதை மட்டும் மேற்போக்காகக் கண்டிப்பாக விட்டுவிடாது. மற்ற வகைகளில் மறைமுகமாக எந்த  உதவி வேண்டுமானாலும் செய்யுங்கள்.”

வாங் வே அதை ஏற்றுக் கொண்டார். பின் நண்பனைக் கலந்தாலோசித்து அவர் விஸ்வத்துக்குக் கடிதம் எழுதினார்.

“அன்பு நண்பரே.

தங்கள் கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. தாங்கள் கூறுவதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

இனி நேரில் பேசிக் கொள்வது தான் சரி என்றாலும் நான் நேரில் அங்கே வந்தால் பல கேள்விகள் எழும். பாதுகாப்பு என்ற பெயரில் பலர் என் பின்னால் வருவார்கள். அவர்களில் யாராவது ஒருவன் வேண்டுமென்றோ, அறியாமலேயோ எதையாவது வெளியே சொல்லி விடக்கூடும். இந்தப் பிரச்னைகள் எல்லாம் தவிர்க்க நாம் ஸ்கைப் மூலம் பேசிக் கொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன். நம் கருத்துப் பரிமாற்றங்களுக்கு எத்தனை குறைவான ஆட்களை நாம்  பயன்படுத்துகிறோமோ அத்தனை நல்லது என்று நினைக்கிறேன். உங்கள் கருத்தும் அதுவாகவே இருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் உங்கள் வசதிப்பட்ட நேரத்தை கடிதம் மூலம் தெரிவித்தால், இந்தக் கடிதம் கொண்டு வருபவர் மூலமாகவே நாம் ஸ்கைப் மூலம் பேசிக் கொள்வோம். நன்றி.

தங்கள்
உண்மை நண்பன்”

இக்கடிதத்தை சாலமனுக்கு அனுப்பி வைத்த வாங் வே, முகம் பார்த்துப் பேசுகையில் விஸ்வம் என்னவெல்லாம் சொல்லக்கூடும், அதற்கு எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று நண்பனுடன் ஒத்திகை செய்து கொள்ள ஆரம்பித்தார்.

அகிடோ அரிமாவை விஸ்வமாக்கி பேசவிட்டு வாங் வே அதற்கு பதில் சொல்ல முயற்சி செய்தார். சில நேரங்களில் அவருக்கே என்ன பதில் சொல்வதென்று தெரியாதபடி கூட அகிடோ அரிமா கேள்விகள் கேட்டார். இது ஒத்திகை என்பதால் பதிலை யோசிக்க அவருக்கு அவகாசம் கிடைத்தது. ஐந்து மணி நேர ஒத்திகைக்குப் பின் வாங் வே விஸ்வத்திடம் பேச முழுமையாகத் தயாரானார்.

(தொடரும்)
என்.கணேசன்