என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, June 10, 2021

இல்லுமினாட்டி 106க்ரிஷ் மறுபடியும் ம்யூனிக் போக வேண்டியிருக்கிறது என்றும் விஸ்வம் பற்றிய தகவல்கள் சில கிடைத்திருப்பதால் அங்கு வரச் சொல்லி இருக்கிறார்கள் என்றும் உதயிடம் சொன்ன போது அவன் பயப்பட்டான். போய்த் தானாக வேண்டுமா, இங்கிருந்தே எதுவும் சொல்லிக் கொள்ள முடியாதா என்றெல்லாம் கேட்டான். சென்ற முறை போன போதிருந்த அளவுக்குக் கூடப் பயமில்லை, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாகச் செய்திருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லி ”இதுவே கடைசி, இனி போக வேண்டியிருக்காது” என்று சொல்லி க்ரிஷ் அனுமதி வாங்கினான்.

“எப்போது திரும்பி வருவாய்?” உதய் கேட்டான்.

“தெரியவில்லை. சில நாட்களாகலாம். நான் போன் பண்ணிச் சொல்றேன். இங்கே நீங்க ரொம்ப ஜாக்கிரதையாயிருக்கணும். அவன் எங்கே இருந்தாலும் அவன் ஆட்களை எல்லா இடங்களுக்கும் அனுப்ப முடிந்த வசதியில் தான் இருக்கிறான். அதனால வீட்டுலயும் வெளியேயும் எல்லாருமே ரொம்ப ஜாக்கிரதையாய் இருக்கணும்” க்ரிஷ் கடைசி வாக்கியத்தை அழுத்திச் சொன்னான்.

“சரி நான் சிந்து கிட்ட கூடச் சொல்லிடறேன். நீ ஹரிணி கிட்ட சொல்லி இருக்கிறாயல்லவா?”

க்ரிஷ் தலையசைத்தான். இவனிடம் அவன் சிந்துவே அபாயம் என்று எப்படிச் சொல்லுவான்? அவள் போன பிறகு “நன்றி” என்று ஒரே ஒரு குறுந்தகவல் மட்டும் க்ரிஷுக்கு அனுப்பி இருந்தாள். அவளுக்கு அவன் வெளிப்படையாக அறிவுரை சொன்னதற்கு நன்றியா, அவள் தாயின் விலாசம், போன் நம்பர் அனுப்பி வைத்ததற்கு நன்றியா, அங்கே போனதால் அவள் மனபாரம் ஏதாவது வகையில் குறைந்ததற்கு நன்றியா என்று அவனுக்குத் தெரியவில்லை.

“சிந்து என்ன சொல்கிறாள்? அவளிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா?” என்று க்ரிஷ் கேட்டான்.

இங்கிருந்து மனநிலை சரியில்லாமல் வருத்தத்துடன் சிந்து வேகமாகப் போயிருந்ததால் அதற்குப் பின் அவளிடம் மாற்றம் தெரிகிறதா, அவள் முன்பு போல் மாறி விட்டாளா என்று தம்பி கேட்பதாக உதய் நினைத்தான். அதற்குப் பிறகு க்ரிஷ் நேரடியாகச் சென்று சிந்துவைப் பார்த்துப் பேசியதும், மிரட்டி அவளை வெளியூர் அனுப்பி வைத்ததையும் அவன் அறிந்திருக்கவில்லை.

அவன் சொன்னான். “இப்போது அவள் சந்தோஷமாய் பழையபடி மாறிவிட்டாள். சில சமயம் அவள் பேசும் போது காதல் கூடியிருக்கிற மாதிரி எனக்குத் தோணுது. பிரிவும் இடைவெளியும் ஒருவிதத்தில் காதலுக்கு நல்லது தான் போலிருக்கிறது. அது காதலை அதிகப்படுத்துகிறது....”

சொல்லி விட்டு கனவுப் பார்வையோடு வெட்டவெளியைப் பார்க்கும் சகோதரனை க்ரிஷ் இரக்கத்தோடு பார்த்தான். இவன் சொல்வதும் இவன் கற்பனை தானா இல்லை அவளிடம் உண்மையாகவே ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

அன்றிரவு தியானத்தின் போது இப்போதைய பயணம்  மிக முக்கியமானது, எல்லாவற்றையும் தீர்மானிக்கக்கூடியது என்ற எண்ணம் க்ரிஷ் மனதில் மேலோங்கி நின்றது. ஆனால் முடிவு என்னவாகும் என்ற உண்மை வெளிப்படவில்லை. ஆபத்து வரலாம் என்று மட்டும் உள்ளுணர்வு எச்சரித்தது. மறுபடியும் விஸ்வத்தை அவன் நேரில் காண நேரிடுமோ?

மறு நாள் காலை பத்து மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் தான் பன்னிரண்டரை மணி விமானத்திற்குச் சரியாக இருக்கும். காலையில் நான்கு மணிக்கே எழுந்து மாஸ்டரை மனதில் வணங்கி விட்டு அவர் சொல்லித் தந்த பயிற்சிகளைச் செய்தான்.  எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். ஆனால் விளைவுகள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று எதிர்காலத்திற்கு யாரும் கட்டளை இட முடியாது.... எல்லாம் இறைவன் விட்ட வழி... வீடும், நாடும், உலகமும் என்றுமே தனியொருவனின் பொறுப்பாகி விட முடியாது.... என்று தத்துவார்த்தமாக அவனுக்குத் தோன்றியது.

கிளம்பும் போது தாயிடம் சொன்னான். “நான் முக்கியமான வேலையா போறேன். எல்லாம் நல்லபடியா முடியணும்னு ஆசிர்வாதம் பண்ணும்மா”

பத்மாவதி ஒரு நிமிடம் கண்களை மூடிப் பிரார்த்தித்து விட்டு “கடவுள் அருளால எல்லாம் நல்ல படியா முடியும் போயிட்டு வாடா.” என்று சொல்லி விட்டு திருநீற்று டப்பாவில் இருந்து திருநீறு  எடுத்து இளையமகன் நெற்றியில் வைத்து விட்டாள்.

உதய் க்ரிஷின் பின்னால் இருந்து கேட்டான். “அதெப்படி அவ்வளவு உறுதியாய் சொல்றே?” உதய்க்கு தம்பி போவது சிறிய கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. சென்ற முறை இருந்ததை விட இந்த முறை கலக்கம் அதிகமாய் இருந்தது. காரணம் புரியவில்லை. அந்தக் கலக்கத்தைப் போக்க, தாய் வாயைக் கிளறினான்.

பத்மாவதி மூத்த மகனுக்கு விளக்கினாள். “கடவுள்னால முடியாதது என்னடா இருக்கு. இந்த உலகம் மாதிரி எத்தனையோ கோடி உலகம் இருக்குன்னு சொல்றாங்க. அத்தனையையும் பார்த்துக்கற பகவான் நம்ம சின்ன விஷயங்களைப் பார்த்துக்க மாட்டாரா. அவர் அருளால முடியாதது என்னடா இருக்கு?”

அவளுக்கு எட்டாத தூரத்தில் நின்று கொண்டு உதய் சொன்னான். “அப்படின்னா ஒரு பத்து ரூபாயை வேண்டி வரவழைச்சுக் குடு பார்க்கலாம்”

பத்மாவதி சளைக்கவில்லை. “இந்த மாதிரி நீ கேட்பேன்னு முதல்லயே அம்மா கிட்ட கடவுள் நிறைய குடுத்து வச்சிருக்காருடா. இந்தாப்பிடி என்று பர்ஸைத் திறந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து உதயிடம் நீட்ட க்ரிஷுக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை. உதயும் சிரித்துக் கொண்டே அந்த நோட்டை வாங்கினான். “கிழவி கை ராசியான கை தான். வாங்கினா இன்னும் நிறைய வரும்” என்று தம்பியிடம் முணுமுணுத்தான்.

“என்னடா முணுமுணுப்பு?” என்று பத்மாவதி கேட்க “ஒன்னுமில்லைம்மா. அம்மா ரொம்ப நல்லவங்கன்னு சொன்னேன்” என்று உதய் பதில் அளித்தான்.

சிரித்தபடியே க்ரிஷ் கிளம்பினான். மனதில் அவனும் கடவுளைப் பிரார்த்தித்தான். ’கடவுளே அம்மாவோட நம்பிக்கையையும், வீட்டின் இந்த சந்தோஷத்தையும் தயவு செய்து பிடுங்கி விடாதே.”


வாங் வே தன் நண்பர் அகிடோ அரிமாவை வரவழைத்திருந்தார். அவருக்கு மனம் விட்டுத் தன் சிந்தனைகளையும், திட்டங்களைச் சொல்ல அந்த நண்பர் தேவையாக இருந்தது. ஏனென்றால் மிக முக்கியமான கட்டம் இது. அவர் இல்லுமினாட்டிக்கு எதிராக ரகசியமாக இயங்கப் போகிறார். திட்டங்களில் எதாவது குறை இருந்தால் அகிடோ அரிமா அதைக் கண்டிப்பாகச் சுட்டிக்காட்டுவார். திட்ட அளவிலேயே எதாவது திருத்தங்கள் செய்து கொள்வதானால் அது மிக நல்லது. இதில் சின்னத் தவறு நேர்ந்தாலும் திருத்திக் கொள்ள அவகாசம் எல்லாம் கிடையாது. மரணம் தான் நிச்சயம். அகிடோ அரிமாவே இதற்கு முன் சுட்டிக் காட்டியது போல எர்னெஸ்டோவும் விஸ்வமும் இருவருமே வேறு வேறு விதத்தில் சக்தி வாய்ந்தவர்கள். அவர்களுக்கிடையில் அவர் காய்கள் நகர்த்துவது மிக ஆபத்தான காரியம் தான். ஆனால் அவருக்கு வேறு வழி இல்லை. இப்போது அவர் எதுவும் செய்யா விட்டால் பின் எதுவும் செய்ய வழியில்லை. இப்போதிருக்கிற நிலைமையில் தான் கடைசி வரை அவர் இருக்க நேர்ந்து விடும். இந்தத் தேக்க நிலைமை அவருக்குச் சலித்து விட்டது.

அகிடோ அரிமாவிடம் வாங் வே இது வரை நடந்ததை எல்லாம் மனம் விட்டுச் சொன்னார். கர்னீலியஸின் ரகசிய ஆவணத்தில் இதுவரை தெரிந்ததில் ஆரம்பித்து அவர் விஸ்வத்துக்கு எழுதிய கடிதம் மற்றும் இப்போது விஸ்வம் அவருக்கு எழுதிய கடிதம் வரை எல்லாவற்றையும் சொன்னார்.

அகிடோ அரிமாவுக்கு இப்போதும் வாங் வே மிக அபாயமான ஒரு ஆட்டத்தில் இறங்குவது போலவே தோன்றியது. ஆனால் அவர் என்ன சொன்னாலும் பின்வாங்கப் போவதில்லை என்பதும் புரிந்தது. ஆனாலும் அவர் எச்சரிக்கையுடன் வாங் வேயிடம் சொன்னார். “கர்னீலியஸ் அந்த ரகசிய ஆவணத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று முழுவதுமாகச்  சொன்ன பிறகு அதற்கேற்ற மாதிரி தீர்மானிப்பது தானே நல்லது”

“அந்த ஆள் அதை முழுவதுமாக எப்போது கண்டுபிடிப்பார் என்று காத்திருப்பது? எத்தனை நாட்கள், வாரங்கள் ஆகுமோ தெரியவில்லை. அதற்குள் எல்லாம் இங்கே முடிந்து போய் விடும் போல் இருக்கிறதே! ஏதோ ஒரு பக்கம் நான் சேர்ந்தாக வேண்டும்.  இப்போதிருக்கும் பக்கத்தில் இருந்தால் இப்படியே தான் தொடர வேண்டும். விஸ்வத்தின் பக்கம் போனால் உபதலைவராகவாவது நான் ஆகி விடலாம்.... இன்னொரு சாத்தியமும் இருக்கிறது...”

அகிடோ அரிமா நண்பரைப் பார்த்துப் புன்னகைகத்தார். அந்த இன்னொரு சாத்தியக்கூறு இவர் இல்லுமினாட்டியின் தலைவராக ஆவதாக இருக்கக்கூடும் என்று அவர் யூகித்தார். அது எப்படி என்று அறியும் ஆவலில் “அது என்ன?” என்று கேட்டார்.

(தொடரும்)
என்.கணேசன்  

3 comments:

 1. Super episode. I felt as if I am with Krish praying, worrying and philosophizing. Great novel.

  ReplyDelete
 2. வணக்கம் சார். நீங்கள் தற்போது எழுதி கொண்டிருக்கும் சாணக்கியன் நாவல் எதை பற்றி அல்லது எந்த விதமாக இருக்கும்? ஒரு அவுட் லைன் குடுங்க.

  ReplyDelete
  Replies
  1. வரலாற்று நாவல். ஒரு தனி மனிதனான சாணக்கியன் சபதமிட்டு ஒரு சாம்ராஜ்ஜிய்த்தை உருவாக்கிய வரலாற்று கதை. அலெக்ஸாண்டரும் அதில் முக்கிய கதாபாத்திரம்.

   Delete