சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 14, 2021

யாரோ ஒருவன்? 36


தீபக்கின் திகைப்பை உணர்ந்த சுதர்ஷன் மெல்ல தீபக்கின் கையைப் பிடித்து,  தன் நடையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டான். தீபக்கும் நடையின் வேகத்தை அதற்கேற்ற மாதிரி குறைத்துக் கொண்டான். ஆனால் தொலை தூரப் பார்வை பார்த்துக் கொண்டே வேகமாக நடந்து கொண்டிருந்த நாகராஜ் அவர்கள் இருவரும் பின் தங்கியதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியால் ஆக்கிரமிக்கப்பட்டவன் போல், வேறொரு உலகத்தில் கவனம் வைத்தவன் போல் நடந்து கொண்டே இருந்தான்.

தீபக்கிடம் சுதர்ஷன் தாழ்ந்த குரலில் ரகசியமாகச் சொன்னான். “இப்ப அவர் அவராய் இல்லை. நாகசக்தியின் வசப்பட்டிருக்கார். இந்த மாதிரி நேரங்கள்ல எல்லாம் நமக்குத் தெரியாதது அவருக்குத் தெரியும். நமக்குப் புரியாதது அவருக்குப் புரியும். அசுர பலத்தோட இருப்பார். அதிகம் பேச மாட்டார். ஆனால் இந்த நேரங்கள்ல அவர் ஏதாவது சொன்னால் அது கண்டிப்பாய் பலிச்சே தீரும்....”

தீபக் பேரார்வத்துடன் சுதர்ஷனிடம் கேட்டான். “யார் சார் இவரு? தயவு செய்து விவரமாய் சொல்லுங்களேன்...”

சுதர்ஷன் ஏற்கெனவே அதிகம் சொல்லி விட்டதாய் நினைத்ததை தீபக்கால் உணர முடிந்தது. சுதர்ஷன் சொன்னான். “இன்னொரு நாள் சாவகாசமாய் சொல்றேன் தம்பி. தயவு செய்து இப்ப என்னை எதுவும் கேட்காதே. நீ போயிடு. பிறகு பார்ப்போம்...”

சொல்லி விட்டு சுதர்ஷன் ஓடினான். தீபக் ஒரு கணம் அவனுடன் சேர்ந்து ஓடலாமா என்று யோசித்தான். ஆனால் நீ போயிடு என்று சொன்ன பின்னும் அவனை விடாமல் போய் ஒட்டிக் கொள்வது அநாகரிகம் என்பது மட்டுமல்லாமல் கூடுதல் தகவல்கள் எதையும் எதிர்காலத்திற்குப் பெற்றுத் தருவதையும் நிறுத்திவிடும் என்று அவன் உள்ளுணர்வு எச்சரித்தது. அதனால் விட்டுப் பிடிப்பது தான் நல்லது என்று எண்ணியவனாய் ஓடும் சுதர்ஷனையே பார்த்துக் கொண்டு தீபக் நடந்தான்.  தூரத்தில் நாகராஜுடன் சுதர்ஷன் சேர்ந்து கொண்டு நடப்பது தெரிந்தது. ஆனால் நாகராஜ் அப்போதும் சுதர்ஷன் பக்கம் திரும்பாமல் நேராகவே நடந்து கொண்டிருப்பதும் தெரிந்தது.   

சுதர்ஷன் நாகராஜ் பற்றிச் சொன்னதை மறுபடி, மறுபடி யோசித்துப் பார்த்தான். எல்லாமே பிரமிப்பாக இருந்தது. நாகராஜைப் பற்றிய முழுவிவரங்களும் கிடைக்காமல் அவனால் மற்ற வேலைகளை இயல்பாய் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை.  ஆனால் எல்லாம் தெரிந்து கொள்வது உடனடியாக முடிகிற சமாச்சாரம் அல்ல. சாதுரியமாக மெல்லத் தான் கையாள வேண்டும்...

அவன் வீடு திரும்பிய போது சரத் கிளம்பி வெளியே வந்து கொண்டிருந்தான். தீபக்கைப் பார்த்ததும் அவன் ஆச்சரியத்துடன் கேட்டான். ”என்னடா அதிசயமாய் இருக்கு. அதிகாலையிலேயே எழுந்து வாக்கிங் போயிட்டு திரும்பி வந்துகிட்டிருக்கே. நானே இப்ப தான் வாக்கிங் கிளம்பறேன்...”

அப்பா ஒரு நிமிஷம் உள்ளே வாங்களேன்....” என்று சொன்னபடி தீபக் உள்ளே போக சரத்என்னடா?” என்று கேட்டபடியே பின் தொடர்ந்தான்.

ரஞ்சனி கணவனிடம் சொன்னாள். “சூரியன் மேற்குல தெரியுதான்னு பாருங்களேன். என் மகன் இத்தனை சீக்கிரம் எழுந்திருச்சு வாக்கிங் போய் வந்திருக்கான்கிறதை என்னால நம்பவே முடிய மாட்டேங்குது....”

தீபக் தாயைப் பார்த்துப் புன்னகைத்தான். ”தேவைப்பட்டால் என்னால எத்தனை சீக்கிரமும் எழுந்திருக்க முடியும்னு இனிமேயாவது நம்பு. சும்மா கலாய்க்காதே

சரத்தும் புன்னகைத்து விட்டுக் கேட்டான். “ஏன்டா வெளியே போய்ட்டிருந்தவனை உள்ளே வரச் சொன்னே?”

அப்பா நம்ம நெருங்கிய சொந்தம் யாருடைய மரணமாவது இயற்கையாய் இல்லாமல் இருந்திருக்கா?” தீபக் கேட்டான்.

சரத் சிறிது யோசித்து விட்டுஅப்படியெல்லாம் நம்ம குடும்பத்துல இல்லையேஎன்றான்.

தீபக் தாயைப் பார்த்தான். ரஞ்சனியும் யோசித்து விட்டுச் சொன்னாள். “எனக்குத் தெரிஞ்சும் அப்படி எதுவும் இல்லை. ஏன்டா கேட்கிறாய்?”

அப்படி இறந்த ஆத்மா ஒன்னு என்னைத் தொடர்பு கொள்ளப் பார்க்குதாம்.”

சரத் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தான். இதயத்தின் படபடப்பு அதிகரிக்க ஆரம்பித்ததுஉடல் அதீதமாய் வியர்த்தது. அவனால் நேராக நிற்க முடியவில்லை. நல்ல வேளையாக அவன் அருகில் சோபா இருந்தது. அந்த சோபாவின் பின் பக்கத்தில் சாய்ந்து நின்றான்

அவன் நிலைமையை அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை. ரஞ்சனி மகனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். “என்னடா இது புதுக்கதை?”

தீபக் சொன்னான். “கதையெல்லாம் இல்லைம்மா. அது உண்மை மாதிரி தான் தெரியுது. நான் முந்தாநாள் ஒரு கனவு பத்தி சொன்னேன் ஞாபகம் இருக்கா. அதே கனவு மறுபடி நேத்து ராத்திரியும் வந்துச்சு.”

ரஞ்சனி சொன்னாள். “இருக்கட்டும். அதை ஏன்டா இறந்த ஆளோட ஆத்மா உன்னைத் தொடர்பு கொள்றதாய் நினைக்கிறாய்?”

தர்ஷனி வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல நாகசக்தி வசப்பட்ட நாகராஜ் வந்திருக்கார்னு சொன்னேனில்லையா. அவர் அந்த சக்தி வசப்பட்டிருக்கிறப்ப தான் இன்னைக்கு இதைச் சொன்னார்.”

ரஞ்சனிக்கு இப்போதும் அந்த ஆத்மா தொடர்பு கொள்ளும் செய்தியை நம்பக் கஷ்டமாய் இருந்தது. அதை அவளுடைய பார்வையிலேயே புரிந்து கொண்ட  தீபக் சொன்னான். “அவர் எனக்கு ரெண்டு நாளாய் ஒரே கனவு வர்றதைக் கூடச் சொன்னார்ம்மா.”

எதையும் நடுவிலிருந்து சொல்லாதேடா. ஆரம்பத்துல இருந்து சொன்னா தானே புரியும்

தீபக் இன்று வாக்கிங் போன போது நடந்ததைச்  சொல்லி முடித்த போது சரத் இதயம் வெடிப்பதைப் போல் உணர்ந்தான். சோபாவின் பின்னாலிருந்து முன்பகுதிக்கு வருவதே பெரும் சிரமமாய் இருந்தது. எப்படியோ சமாளித்து வந்தவன் சோபாவில் அப்படியே சரிந்து உட்கார்ந்தான். அப்போது தான் தாயும் மகனும் அவனைக் கவனித்தார்கள்.

வியர்வை மழையில் நனைந்து பேயறைந்த மாதிரி இருந்த அவனைப் பார்த்து இருவரும் பயந்து போனார்கள். ரஞ்சனி அவனருகே வந்து கவலையுடன் கேட்டாள். “என்ன ஆச்சுங்க. ஏன் ஒரு மாதிரியாய் இருக்கீங்க?”

சரத் சர்வ பலத்தையும் திரட்டிக் கொண்டு சொன்னான். “ஒன்னுமில்லைஆனால் அவன் குரல் மிகப் பலவீனமாய் இருந்தது.     

தீபக்  ஃபேன் ஸ்விட்சைப் போட்டான். குளிர் காற்று சரத்துக்கு இதமாய் இருந்தது. தீபக் அவனருகே உட்கார்ந்து கேட்டான். “டாக்டரைக் கூப்பிடட்டுமாப்பா

சரத் சத்தமாகப் பேச முயன்று ஓரளவு சாதித்தான். “வேண்டாம்டா. லைட்டா தலைசுத்தற மாதிரி இருந்துச்சு. அவ்வளவு தான்.”

ஆனால் அவன் வியர்வையையும், வெளுத்துப் போன முகத்தையும் பார்த்து கவலை குறையாத தீபக்அம்மா கொஞ்சம் தண்ணி கொண்டாம்மா

ரஞ்சனி வேகமாய்ப் போய் தம்ளரில் தண்ணீர் கொண்டு வந்தாள். தம்ளரை வாங்கித் தண்ணீரைக் குடித்து முடித்த போது சரத் ஓரளவு இயல்பு நிலைமைக்குத் திரும்பியிருந்தான். அதைப் பார்த்த பின் தான் தீபக்கும் ரஞ்சனியும் நிம்மதியானார்கள்.

தீபக் சொன்னான். “இன்னைக்கு வாக்கிங் வேண்டாம்ப்பா. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க. அப்பறமா ஒரு தடவை செக்கப் பண்ணிக்கறது நல்லது…”

சரத்துக்கு தனிமை தேவைப்பட்டது. மெல்ல எழுந்து படுக்கையறைக்குச் சென்றான். பின்னாலேயே அவர்கள் இருவரும் போனார்கள். சரத் படுக்கையில் அமர்ந்து சொன்னான். “எனக்கு ஒன்னுமில்லடா கவலைப்படாமல் போங்க. நேத்து ராத்திரி தூக்கம் சரியா இருக்கல. அது தான் காரணமாயிருக்கும். கொஞ்சம் ஓய்வெடுத்தால் போதும் சரியாயிடுவேன்….”


ஓரளவு தைரியம் அடைந்த அவர்கள் அவன் படுக்கையில் படுத்தவுடன் வெளியே போனார்கள். சரத் நடந்த சம்பவங்களை எல்லாம் மறுபடி யோசித்துப் பார்த்தான்.  இரண்டு நாள் முன்பு வந்த மொட்டைக் கடிதமும், இப்போது நாகராஜ் தீபக்கிடம் சொன்ன விஷயமும் இணைத்துப் பார்க்கையில் மனதில் பீதி கிளம்பியது. கடந்த காலம் ஏன் திடீரென்று விஸ்வரூபம் எடுக்கிறது?

(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. Interested very much to know the connection. How these people and Narendran father are linked?

    ReplyDelete
  2. இவர்கள் பயப்படும் அந்த கடந்த காலம் என்ன..? எனபதை அறகய ஆவலாக உள்ளேன்.... ஏனெனில் அதை சுற்றியே அனைத்தும் நடக்கிறது....

    ReplyDelete