சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 28, 2020

இல்லுமினாட்டி 51


க்ஷய் தன் வாழ்க்கையின் அமைதியான ஓட்டத்திற்கு இப்படியொரு தடை வரும் என்று சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. க்ரிஷ் அவனிடம் நேற்று பேசி விட்டுப் போய் விட்டான். க்ரிஷ் இந்த முடிவு தான் எடுக்க வேண்டும் என்று அவனை வற்புறுத்தவில்லை. போவதற்கு முன் க்ரிஷ் என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதை மட்டும் தயவு செய்து எனக்குத் தெரிவியுங்கள்என்று அவனுடைய அலைபேசி எண்ணைத் தந்து விட்டுப் போயிருந்தான்.

அவன் செல்வதற்கு முன் அக்ஷய் தன் சந்தேகத்தை வெளிப்படையாகவே கேட்டிருந்தான். “ஒருவேளை நான் மறுத்து விட்டால் உங்கள் இயக்கம் என்னைத் தொந்திரவு செய்யாமல் விட்டு விடுமல்லவா? இல்லை என்னையும் ஒரு எதிரியாக நினைக்க ஆரம்பிக்குமா?”

க்ரிஷ் அந்தக் கேள்வியையோ, அப்படி ஒரு நிலைமையையோ எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவன் முகபாவனையிலேயே தெரிந்தது. ”உங்கள் சுதந்திரத்தில் தலையிட அந்த இயக்கத்திற்கு என்ன உரிமை இருக்கிறது. வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவிப்பவர்களை எல்லாம் எதிரிகளாய் நினைப்பது யாரானாலும் அது தவறல்லவா? என்று க்ரிஷ் உறுதியாகவே சொன்னான்.

அக்ஷய்க்கு அவன் நேர்மையும், அதிலிருந்த உறுதியும் மிகவும் பிடித்திருந்தது. அதே சமயம் அவன் வேண்டுமென்றேஉங்கள் இயக்கம்என்று சொல்லிப் பார்த்ததற்கு அவன் தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல்அந்த இயக்கம்என்று சொல்லி விலக்கிக் கொண்ட விதமும் பிடித்திருந்தது. அவன் புன்னகையுடன் சொன்னான். “அதை நீ சொல்கிறாய். ஆனால் அந்த இயக்கமும் அந்த விதமாகவே சிந்திக்கும் என்பது என்ன நிச்சயம்?”

க்ரிஷ் சொன்னான். “அப்படித் தங்கள் விருப்பத்தை மற்றவர்கள் மேல் பலவந்தமாகத் திணிக்கும் போக்கு அந்த இயக்கத்திற்கு இருந்தால் அதற்கும், விஸ்வத்திற்கும் இடையே என்ன வித்தியாசம் இருந்து விட முடியும்?”

அக்ஷய் எதுவும் சொல்லவில்லை. க்ரிஷ் போய் விட்டான். க்ரிஷ் போனாலும் இல்லுமினாட்டியின் காவலர்கள் அல்லது ஒற்றர்கள் அங்கேயே இருக்க வாய்ப்பு உண்டு என்று அக்ஷய் எதிர்பார்த்தான். ஆனால் அவனையோ அவன் வீட்டையோ யாரும் கண்காணிப்பதாக அவன் உணரவில்லை.  நள்ளிரவில் எழுந்து கூட ஜன்னல் வழியே பார்த்தான். மறுநாள் அதிகாலை எழுந்து நடைப்பயிற்சி போன போதும் யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்த்தான். அப்படி யாரும் பின்தொடரவில்லை. அந்த அளவு நாகரிகத்தை இல்லுமினாட்டியிடமிருந்து அக்ஷய் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அவனுக்கு அவர்களது கோரிக்கை குறித்து சுலபமாக ஒரு தீர்மானித்திற்கு வர முடியவில்லை. அவனுடைய குடும்பத்தினரிடம் சொன்னால் கண்டிப்பாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். மனைவி, மகன்கள், அண்ணா யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள்...

அண்ணா பற்றி எண்ணியதுமே அவனிடம் இல்லுமினாட்டி பற்றி கேட்டுப் பார்க்கலாமே என்று தோன்றியது. அண்ணா ஆனந்த் இப்போது சிபிஐ டைரக்டராக இருக்கிறான். அவனுக்குக் கண்டிப்பாகக் கூடுதலாகத் தகவல்கள் தெரிந்திருக்கும். உடனே அக்ஷய் அவனுக்குப் போன் செய்து பேசினான். பரஸ்பர குடும்ப நலன்களை எல்லாம் விசாரித்து, சமீபத்திய தகவல்கள் பரிமாறிக் கொண்டு விட்டுக் கேட்டான். “இன்றைக்கு ஒரு பத்திரிக்கையில் இல்லுமினாட்டி பற்றிக் கட்டுரை ஒன்றைப் படித்தேன். ஆனந்த் நீ என்ன நினைக்கிறாய்? உண்மையிலேயே இல்லுமினாட்டி இருக்கிறதா?”

ஆனந்த் யோசிக்காமல் மறு கேள்வி கேட்டான். “சூரியன் இருக்கிறதா?”

அக்ஷய் சிரித்தான். “சரி நீ இது வரை ஏதாவது இல்லுமினாட்டி உறுப்பினரைப் பார்த்திருக்கிறாயா?”

தொடர்ந்து அதிகார உச்சத்தில் இருக்கும் ஒவ்வொருவரைப் பார்த்தாலும் எனக்கு அவர்கள் இல்லுமினாட்டி ஆட்களாக இருக்குமோ என்று தோன்றும். அதை உறுதிப்படுத்திக் கொள்ள வழியில்லை. அவர்கள் எப்போதுமே தங்களை இல்லுமினாட்டிகளாகக் காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். அது சரி நீ ஏன் இல்லுமினாட்டி பற்றி திடீரென்று கேட்கிறாய்?”

நான் தான் சொன்னேனே, இல்லுமினாட்டி பற்றி ஒரு கட்டுரை சமீபத்தில் படித்தேன் என்று. அதனால் தான் கேட்டேன்...”

ஆனந்துக்கு அதை முழுவதுமாக நம்பி விட முடியவில்லை. “அக்ஷய். நீ சொல்வது உண்மை தானே?”

அக்ஷய் கேட்டான். “நான் இது வரைக்கும் ஏதாவது பொய் சொல்லி இருக்கிறேனா?”

ஆனந்த் சொன்னான். “ஏகப்பட்ட பொய் சொல்லியிருக்கிறாயே.”

அக்ஷய் வாய்விட்டுச் சிரித்தான். “ஏன் ஆனந்த் இப்படிக் காலை வாருகிறாய்?”

ஆனந்த் சொன்னான். “உன்னால் தொடர்ந்தாற்போல் பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்க முடியாது. அந்தப் பயத்தில் தான் சொல்கிறேன். எப்போதுமே விளையாட்டுக்காகக்கூட இல்லுமினாட்டியோடு சம்பந்தப்பட்டு விடாதே

ஏனிப்படி அவர்களுக்குப் பயப்படுகிறாய்?”

அவர்கள் பற்றி நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் அக்ஷய். அதனால் தான். யாரையும் பயமுறுத்திப் பணிய வைக்கப் பார்ப்பார்கள். அல்லது விலை கொடுத்து வாங்கப் பார்ப்பார்கள். இரண்டும் முடியா விட்டால் அலட்டிக் கொள்ளாமல் ஆளையே முடித்துக்கட்டி விடுவார்கள்...”

இல்லுமினாட்டி பற்றி சும்மா தான் விசாரித்ததாக ஆனந்தை நம்ப வைப்பதற்குள் அக்ஷய் படாதபாடுபட்டு விட்டான். போனில் பேசி முடித்த  பிறகு பெருமூச்சு விட்டான். அவன் ஆரம்பத்தில் நினைத்ததைத் தான் ஆனந்தும் சொல்கிறான். இல்லுமினாட்டி சகவாசமே வேண்டாம்!...


சிந்து மிகவும் கவனமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு கிளம்புவதற்கு முன்னால் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். சேலையில் அவள் மிக அழகாகவே தெரிந்தாள். மும்பையிலேயே பிறந்து வளர்ந்த அவளுக்கு சேலையை விட மற்ற சுடிதார், பேண்ட், சட்டை முதலான ஆடைகளே பிடித்தமானது என்றாலும் உதய்க்குப் பெண்களிடம் பிடித்த உடை சேலை என்பதால் அதையே அணிந்திருந்தாள். அவள் பெரும்பாலும் பொட்டு வைப்பதில்லை. வைத்தாலும் குண்டூசியின் தலைப்பகுதியை விடப் பெரிதாக அவள் வைத்துக் கொண்டதில்லை. ஆனால் உதய்க்குப் பிடிக்கும் என்பதற்காக கண்ணுக்குத் தெரிகிற அளவில் பொட்டு வைத்திருந்தாள். தனக்குப் பிடிக்காததை எல்லாம் செய்கிறோமே என்று ஒரு கணம் அவளுக்குத் தன் மீதே வெறுப்பாகக்கூட இருந்தது. ஆனால் ’இது பணம் சம்பாதித்துத் தரும் வேலை, அதற்குத் தேவையான நடிப்பு அவ்வளவு தான்’ என்று நினைவுபடுத்திக் கொண்டு கிளம்பினாள்.


தயின் உதவியாளன் வந்து பிரபல பத்திரிக்கையின் ஒரு பெண் நிருபர் பேட்டி ஒன்றுக்காக அப்பாயின்மெண்ட் கேட்டு வந்திருக்கிறாள் என்று சொன்ன போது உதய் முகம் சுளித்தான். அவனுக்கு இன்னமும் பேட்டிகள் எல்லாம் கசக்கவே செய்தன. ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்படுவதும், ஒரே மாதிரியான பாசாங்குகளும், நடிப்புகளும், வார்த்தை ஜாலங்களும் பதிலுக்குத் தேவைப்படுவதும் சலிப்பாகவே இருந்தன. எல்லாம் ‘க்ரிஷ் சிந்தனைகளின் தாக்கம்’ என்று நினைத்துக் கொண்டான். ஆனால் இப்போது மத்தியில் கூட்டணி ஆட்சிக்கான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அந்தப் பிரபல பத்திரிக்கையில் பேட்டி வருவது அனுகூலம் தான் என்று நினைவு வந்தது.

“சரி அடுத்த வாரம் ஏதாவது ஒரு நாள் கொடுத்து அனுப்பு. கேள்விகளை முன்கூட்டியே கொடுக்கச் சொல்...” என்றான்.

தலையசைத்து விட்டுப் போன உதவியாளன் இரண்டு நிமிடங்களில் திரும்பவும் வந்தான். “அந்தப் பெண் உங்களை ஒரே ஒரு முறை பார்த்து விட்டுப் போகிறேன் என்று கெஞ்சுகிறாள்...”

உதய் குறும்பாகப் புன்னகைத்து விட்டுக் கேட்டான். “பெண் பார்க்க எப்படி இருக்கிறாள்?”

உதவியாளனும் புன்னகைத்தான். “தேவதை மாதிரி இருக்கிறாள்?”

உதய் சொன்னான். “சரி அனுப்பு. ஆனால் ஐந்து நிமிடத்துக்குள் கிளம்பி விட வேண்டும் என்று சொல்லி அனுப்பு”

உதவியாளன் தலையசைத்து விட்டுப் போனான். சிறிது நேரத்தில் சிந்து உள்ளே நுழைந்தான். அவளைப் பார்த்தவுடன் உதயின் இதயத்துடிப்பு ஒரு கணம் நின்றது. தேவதை என்று உதவியாளன் சொன்னது குறைத்துச் சொன்னதாகவே தோன்றியது. கல்லூரி நாட்களிலிருந்து இன்று வரை எத்தனையோ அழகான பெண்களை அவன் பார்த்திருக்கிறான், ரசித்திருக்கிறான். ஆனால் இந்தப் பெண் போல யாரும் அவனைப் பாதித்தது இல்லை. குடும்பப்பாங்கான, கண்ணியமான அழகு...

அவள் ”வணக்கம் சார்” என்று சிறு புன்னகையுடன் கைகூப்பினாள். கன்னத்தில் விழுந்த சிறு குழியும், விரிந்த உதடுகளின் புன்னகையின் அழகும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல அவனுக்குத் தோன்றியது.

ஒரு விஷ வலையில் விழுந்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே அவளிடம் தன் மனதை முதல் பார்வையிலேயே பறி கொடுத்தான். 

(தொடரும்)
என்.கணேசன்  

3 comments:

  1. Dhik Dhik moment. Viswam is trying to destroy Krish through Uday's downfall. What next?

    ReplyDelete
  2. அக்ஷய் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான்..... அடுத்து அவன் செல்ல ஏதாவது பிரபஞ்ச செய்தி ஏதாவது வருமா?

    சிந்துவை பற்றி வர்ணித்த விதம் சூப்பரோ ...சூப்பர்... படிக்கும் எங்களுக்கும் 'பார்க்க வேண்டும்' என்பது போல உள்ளது...

    ReplyDelete