சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 7, 2020

இல்லுமினாட்டி 48



ர்னீலியஸ் கடந்த இரண்டு நாட்களாக வாஷிங்டன் வீதிகளில் தனியாக நீண்ட நடை நடக்கிறார். காரிலும் சில இடங்களுக்குச் சென்று வந்தார். அந்தச் சமயங்களில் அவரை யாராவது பின் தொடர்கிறார்களா, கண்காணிக்கிறார்களா என்று சோதித்துப் பார்த்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்படிக் கண்காணிக்கப்படுகிற உணர்வும் அவருக்கு ஏற்படவில்லை.
இன்னொரு முறை வங்கிக்குப் போக முயற்சிக்கலாமா என்று கூட கர்னீலியஸ் எண்ணினார். ஆபத்து என்று உள்மனம் எச்சரித்தாலும் எத்தனை நாட்கள் இதைத் தள்ளிப்போட முடியும் என்று மனம் கேள்வி கேட்டது. இல்லுமினாட்டியின் உறுப்பினராக இருந்து கொண்டு அதன் மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் அவர் அந்த ரகசிய ஆவணத்தை இனியும் மறைப்பது நியாயமல்ல என்று மனசாட்சி உறுத்தியது.  

இல்லுமினாட்டியில் மூன்று தலைமுறையாக உறுப்பினராக இருக்கும் குடும்பங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்தன. அந்த அபூர்வக் குடும்பங்களில் அவரது குடும்பமும் ஒன்றாக இருந்தது. இல்லுமினாட்டியின் பல தலைவர்களின் குடும்பங்களே அடைந்திருக்காத பெருமை அது. தனிமனிதத் தகுதியாலேயே இல்லுமினாட்டிக்கு ஒருவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அந்தத் தகுதியை இழக்கும் போது அவன் நீக்கவும் படுகிறான். நீக்கப்பட்டவன் தான் உறுப்பினராக இருந்த போது அறிந்ததையோ, கிடைத்த ரகசியங்களையோ இல்லுமினாட்டிக்கு எதிராகப் பிறகு உபயோகப்படுத்தினால் உடனடியாகக் கொல்லப்படுவதும் உறுதி...
  
கர்னீலியஸின் தாத்தா ஃப்ரீமேசனாக இருந்து பிறகு அந்த இயக்கத்தோடு இல்லுமினாட்டியில் ஐக்கியமானவர். அவர் பழங்காலச் சுவடிகள் மற்றும் ரகசியக் கலைகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். ஐரோப்பிய மொழிகளிலும் அவருக்குப் புலமை இருந்தது. அது இல்லுமினாட்டியை ஆரம்பித்த அறிஞர்களுக்குப் பேருதவியாக இருந்தது. அவர் இல்லுமினாட்டியின் உறுப்பினர் என்பது அவருடைய ஒரே மகனான கர்னீலியஸின் தந்தைக்கு  நீண்ட காலம் கழித்துத் தான் தெரிந்தது. அவரும் தந்தையின் புலமையுடன் இல்லுமினாட்டி, ஃப்ரீமேசன் இயக்கங்களின் ரகசியச் சின்னங்கள், சங்கேத மொழிகள் ஆகியவற்றில் ஆழமான ஞானம் பெற்று இல்லுமினாட்டியால் அழைக்கப்பட்டு உறுப்பினராகச் சேர்ந்த சமயத்தில் தான் தன் தந்தை இல்லுமினாட்டி உறுப்பினர் என்பதை அறிந்து கொண்டார்தந்தை, தாத்தா இருவரின் தனித்திறமைகளும் சேர்ந்து கர்னீலியஸுக்கும் இருந்தது. அவர்களை விட ஒருபடி மேலாகவே அவர் சூட்சும விஷயங்களை அறிந்திருந்தார். அதனாலேயே அவரும் இல்லுமினாட்டியால் அழைக்கப்பட்டார். அவரும் இணையும் சமயத்தில் தான் தந்தையும் இல்லுமினாட்டி உறுப்பினர் என்று அறிந்தார்

கர்னீலியஸின் தாத்தா இல்லுமினாட்டியாக இருந்த போது ஞானத்திற்கும், அந்தச் சுவடிகளுக்கும் இருந்த முக்கியத்துவம் கர்னீலியஸின் தந்தை இல்லுமினாட்டியாக இருந்த போது குறைந்து போனது. கர்னீலியஸ் காலத்தில் முக்கியத்துவம் சுத்தமாக மறைந்து போய் மரியாதை, கௌரவம் மட்டுமே மிஞ்சியதுஇப்போது வருடம் ஒருமுறை இல்லுமினாட்டி உறுப்பினர்கள் சம்பிரதாயமாக உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் மட்டுமே கர்னீலியஸ் மேடை ஏறுகிறார். இப்போது அவர் அறிந்ததை இருக்கும் உறுப்பினர்களிலேயே இந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும் ஒரு நடுத்தரவயது உறுப்பினர் ஒருவருக்குச் சொல்லித்தரும் வேலையும் கர்னீலியஸுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அந்த உறுப்பினர் வருடத்திற்கு இரண்டு முறை கர்னீலியஸிடம் வந்து ஒவ்வொரு வாரம் இருந்து அதைக் கற்றுக் கொண்டு போகிறார்.


ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக முழுமனதுடன் ஈடுபட்டுக் கற்று அறிந்து கொண்ட அளவில்லாத ஆழமான விஷயங்களை வருடத்திற்கு இரண்டு வாரங்கள் சொல்லிக் கொடுத்து அந்த உறுப்பினர் எந்த அளவுக்குப் புரிந்து கொள்ள முடியும் என்று கர்னீலியஸ் பல முறை யோசித்தது உண்டு. ஆனால் அந்தக் குறிப்பிட்ட ஞானத்திற்காகவே உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கத்தை எப்போதோ இல்லுமினாட்டி நிறுத்தி இருந்ததுஅதற்கு இப்போதையத் தேவை அந்த ஆழமான ஞானமாக இருக்கவில்லைவயதான கர்னீலியஸ் இறந்து போய் விட்டால் வருடாந்திர உறுதிமொழி நிகழ்ச்சியை சம்பிரதாயமாய் நடத்திக் கொடுக்க ஒரு ஆள் தான் அதற்குத் தேவைப்பட்டது. அதற்காகத் தான் அந்த உறுப்பினருக்குக் கூடுதல் பொறுப்பு தரப்பட்டு அவர் வந்து போகிறார் என்பது கர்னீலியஸுக்குப் புரிந்திருந்தது. அதற்காக அவர் வருத்தப்படவில்லை. ஆனால் அவர் தந்தை இல்லுமினாட்டியின் போக்கில் ஏற்பட ஆரம்பித்த இந்த மாற்றத்திற்கு அவர் வாழ்ந்த காலத்தில் நிறையவே வருத்தப்பட்டு இருக்கிறார். மிக உன்னதமான நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இல்லுமினாட்டி ஞானத்திற்கும் நேர்மைக்கும் தருகின்ற முக்கியத்துவம் குறைந்து கொண்டே போவது அவரை நிறையவே பாதித்திருந்தது. பொதுவாக அவர் மகனிடம் இல்லுமினாட்டி குறித்துப் பேசுவது கிடையாதுஆனால் ஒருமுறை தாங்க முடியாமல்நன்மைக்கும், ஞானத்திற்கும் தருகின்ற இடத்தை பணத்திற்கும் அதிகாரத்திற்கும் தருவது அழிவுக்கான பாதை. இல்லுமினாட்டி அதை நோக்கியே பயணிக்கிறதுஎன்று விரக்தியுடன் சொல்லியிருக்கிறார்

அவர் மறுபடி இல்லுமினாட்டி குறித்துப் பேசியது நீண்டதாக இருந்தது. அவர் இறப்பதற்கு மூன்று நாட்கள் முன் பேசிய அந்த நாள் கர்னீலியஸ் மனதில் இப்போதும் பசுமையாக முழுமையாக நினைவிருக்கிறது. அந்த நாள் தான் அவர் கர்னீலியஸிடம் அந்த ரகசிய ஆவணத்தைத் தந்த நாள்.

அன்று இரவுச் சாப்பாட்டிற்குப் பின் ஒரு வெள்ளிப் பெட்டியை எடுத்துக் கொண்டு கர்னீலியஸிடம் வந்த அவர் உணர்ச்சிப் பெருக்கில் இருந்ததும், சிறிது நேரம் என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்று யோசிப்பதும் தெரிந்தது.

கர்னீலியஸ் கேட்டார். “என்ன அப்பா? ஏன் என்னவோ போலிருக்கிறீர்கள்?”

அவர் சிறிது நேரம் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்து விட்டுக் குரலடைக்கச் சொன்னார்.  ”என் அப்பா நினைவு வந்தது.... மிக நல்ல மனிதர்....”

இந்த வெள்ளிப்பெட்டி அவர் உபயோகித்ததாய் இருக்க வேண்டும் என்று கர்னீலியஸ் யூகித்தார். ஆனால் இது வரை அதைத் தங்கள் வீட்டில் பார்த்திருந்ததாய் அவருக்கு நினைவில்லை. அப்பா இதை எங்கேயாவது மறைத்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

மறுபடி சிறிது நேரம் மௌனம் சாதித்து விட்டு அவர் தந்தை பேச ஆரம்பித்தார். “எந்த ஒரு நல்ல இயக்கமும் ஆரம்பிக்கப்பட்ட உயர்ந்த நோக்கத்திலேயே கடைசி வரை செயல்பட்டு விடுவதில்லை.  மதங்களைப் போலவே இயக்கங்களும் ஆரம்பப் புனிதத்தைக் காலப்போக்கில் இழந்து விடுகின்றன. நம் இல்லுமினாட்டியும் அதற்கு விதிவிலக்கல்ல...”

கர்னீலியஸ் மென்மையாகச் சொன்னார். “மாற்றம் ஒன்றே மாறாதது என்று அறிந்திருந்தும் அதற்கு ஏன் வருந்துகிறீர்கள் அப்பா? இதுவும் ஒரு நாள் மாறுமல்லவா?”

அவர் தந்தை மகனைப் பெருமிதத்தோடு பார்த்து விட்டுக் குரல் கரகரக்கச் சொன்னார். “உண்மை கர்னீலியஸ். ஆனால் மாற்றம் சீரழிவை நோக்கிப் போகும் போது நன்மையை விரும்பும் மனிதர்களால் வருத்தப்படாமல் இருக்க முடிவதில்லை”

மறுபடியும் மௌனம். பின் கர்னீலியஸின் தந்தை கேட்டார். “ஒரு காலத்தில் இல்லுமினாட்டியின் எதிர்காலத்தைப் பற்றி ஆரகிள் சொன்னது உனக்குத் தெரியும் அல்லவா?”

கர்னீலியஸ் தலையசைத்தார். அவர் தந்தை தொடர்ந்தார். ”இல்லுமினாட்டிக்கு ஆட்சியாளர்களிடமும், மதகுருமார்களிடமும் கடுமையான எதிர்ப்பிருந்த காலம் அது. இல்லுமினாட்டி என்று தெரிந்தால் சிறைத்தண்டனை, மரண தண்டனை என்று தண்டிக்கப்பட்ட காலம்... உறுப்பினர்கள் குறைந்து கொண்டே போன போது இல்லுமினாட்டியும், ஃப்ரீமேசனும் இணைந்து இழப்புகளைச் சமாளிக்கப் பார்த்தார்கள். ஆனாலும் எதிர்காலம் குறித்து நிச்சயம் இல்லாத நிலை அப்போது இருந்தது. அப்போது தான் ஆரகிளிடம் குறி கேட்கப்பட்டது. அப்போது ஆரகிள் எத்தனை அடக்குமுறை இருந்தாலும் இப்போதைக்கு இல்லுமினாட்டிக்கு அழிவில்லை. அது வளர்ந்து கொண்டே போகும். உலகத்தையே மறைமுகமாய் ஆளும். அழிவை ஏற்படுத்த முடிந்த காலம் ஒன்றேகால் நூற்றாண்டு கழித்து வரும் என்று சொன்னது. இல்லுமினாட்டியின் தலைவர் அந்தக் குறி கேட்ட சமயத்தில் உன் தாத்தாவும் அவருடன் இருந்தார்...”

கர்னீலியஸிற்கு அதுப் புதுத்தகவல். தந்தையை வியப்புடன் பார்த்தார்.

அவர் தந்தை சொன்னார். “அன்றைக்கு ஆரகிள் சொல்லச் சொல்ல எழுதி வைத்துக் கொண்ட பாதித் தகவல் தோராயமாக எல்லாருக்கும் தெரியும். மீதித் தகவல் இந்த வெள்ளிப் பெட்டியில் இருக்கிறது”

கர்னீலியஸ் திகைப்புடன் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

  1. Very very interesting

    ReplyDelete
  2. Hariom sir
    Please upload weekly twice
    Very interesting
    We can't wait .due to lockdown you consider it .thanks

    ReplyDelete
  3. இப்போ தான் செம்ம interesting ஆக போகுது....... அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. அந்த மீதி தகவல் எப்போது வெளிப்பட போகிறதோ...? தெரியவில்லை.... சீக்கிரம் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது...

    ReplyDelete