சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 18, 2020

சத்ரபதி 125


ராஜா ஜெய்சிங் தன் வாழ்நாளில் அதுவரை உணர்ந்திராத விரக்தியை உணர ஆரம்பித்திருந்தார். அவர் ஔரங்கசீப்பிடம் கேட்டனுப்பிய கூடுதல் படை வந்து சேரவில்லை. அது வந்து சேர வாய்ப்பில்லை என்று அவர் மகன் ராம்சிங் தனிப்பட்ட முறையில் அவருக்குக் கடிதம் எழுதியிருந்ததைப் படித்த போது புரிந்தது. ராம்சிங் தன் கடிதத்தில் சிவாஜி தப்பித்துச் சென்ற பின் சக்கரவர்த்தி ராம்சிங் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அவரைச் சந்திக்க அனுமதியும் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்திருந்தான். ”சக்கரவர்த்தி என்னையும், உங்களையும் சிவாஜியுடன் கூட்டு வைப்பதிருப்பதாகச் சந்தேகப்படுகிறார் என்ற தகவல் நண்பர்கள் மூலம் கிடைத்தது. அது எவ்வளவு தவறானது என்பதை அவரை நேரில் சந்தித்து விளக்க அனுமதி கேட்டுப் பல நாட்கள் ஆகி விட்டன தந்தையே. ஆனால் அவரைச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை…”

புதியவனை சந்தேகப்படுவது நியாயம், ஆனால் பல ஆண்டு காலம் விசுவாசமாக ஊழியம் செய்து நிரூபித்தும் சந்தேகம் தீரவில்லை என்றால் அந்தச் சந்தேகம் சக்கரவர்த்தியின் முற்றிய மனோவியாதியின் அறிகுறியே என்று ராஜா ஜெய்சிங்குக்குத் தோன்றியது.  சந்தேகப்படும் சக்கரவர்த்தி கூடுதல் படை அனுப்பி வைக்கப் போவதில்லை என்பது புரிந்தது. உடனே பீஜாப்பூர் கோல்கொண்டா படைகள் கையோங்கி வரும்  இப்போதைய நிலைமையில் அவர்களுடன் மேலும் போரை நீட்டித்து ராஜபுதன, முகலாயப்படை வீரர்களை அர்த்தமில்லாமல் பலிகொடுக்க விரும்பாமல் ராஜா ஜெய்சிங் பின் வாங்கி இருந்தார். அப்படிப் பின் வாங்கியதிலும் ஔரங்கசீப்புக்கு அதிருப்தி என்று கேள்விப்பட்டாலும் அவர் அதைச் சட்டை செய்யவில்லை.

கூடுதல் படையை அனுப்பாத ஔரங்கசீப் அடுத்ததாகக் கோட்டைகளின் பராமரிப்புச் செலவுகளுக்கான பணத்தையும் அனுப்பத் தவறினான்.. பராமரிக்கவோ, பாதுகாக்கவோ முடியாத கோட்டைகளை இழக்க வேண்டியிருக்கும் என்கிற அடிப்படை ஞானம் கூட பேரறிவு படைத்த சக்கரவர்த்திக்கு இல்லாமல் போனது அவருக்கு மேலும் மன உளைச்சலைத் தந்தது. எந்தக் கோட்டையும் அவர் தனிச் சொத்தல்ல. இருந்த போதிலும் திறமையான நிர்வாகியுமான அவருக்கு அலட்சியங்களால் ஏற்படும் இழப்புகளைக் காண்பதில் வருத்தம் இருந்தது. சிவாஜி தப்பித்து வந்து விட்டான் என்றான பிறகு இங்கு பலமும் குறைந்து இருப்பதைப் பார்த்தால் கண்டிப்பாக அதைப்பயன்படுத்திக் கொண்டு அத்தனை கோட்டைகளையும் அவன் கைப்பற்ற முயற்சிப்பான் என்று அறிவார். அதற்கான வழிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து விட்டு அது நிகழ்ந்தால் கண்டிப்பாக அதற்கும் சக்கரவர்த்தி அவரையே குற்றம் சாட்டுவார் என்பதை ராஜா ஜெய்சிங் உணர்ந்திருந்தார். இப்படிப்பட்ட ஒரு சக்கரவர்த்திக்குக் கீழே ஊழியம் செய்வது ஒரு துர்ப்பாக்கியமே என்று அவருக்குத் தோன்றியது.

கடைசியில் தக்காணத்தில் முகலாயர்களின் தலைமையகமாக இருந்த தௌலதாபாத்துக்குச் செல்வது என்று ராஜா ஜெய்சிங் தீர்மானித்தார். செல்வதற்கு முன் என்ன தான் ஔரங்கசீப் சந்தேகப்பட்டாலும் தன் செயல்பாட்டில் குறை ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைத்த அவர் சிங்கக்கோட்டை, புரந்தர் கோட்டை உட்பட ஐந்து மிக முக்கிய வலிமையான கோட்டைகளைத் தகுந்த ஆட்களிடம் ஒப்படைத்து, அவற்றின் பாதுகாப்புக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டுக் கிளம்பினார். எல்லாக் கோட்டைகளையும் பாதுகாக்க படைபலமும் இல்லை பணபலமும் இல்லை என்பதால் இந்த முக்கிய ஐந்தாவது தக்க வைக்கலாம் என்று செயல்பட்டார். மீதிக் கோட்டைகள் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத கோட்டைகள். சிவாஜி கண்டிப்பாக அவற்றை மீட்டுக் கொள்வான். அதைத் தடுக்க வழியில்லை…..

ஒரு விதத்தில் சிவாஜிக்கு அனுகூலமான விதமாக இப்படி சந்தேகச் சக்கரவர்த்தி இயங்குவது ராஜா ஜெய்சிங்குக்கு உள்மனதில் ரகசியத் திருப்தியையும் தந்தது. சிவாஜி மிக நல்ல, திறமையான அரசன். மண்ணின் மீதும், மக்கள் மீதும் அக்கறை உள்ளவன். அவன் வெற்றி இந்த மண்ணின் வெற்றியாகவும், மக்களின் வெற்றியாகவும் இருக்கும் என்றும் தோன்றியது. அவரது மனக்கசப்பு அந்த எண்ணங்களில் குறைந்தது.

அவர் தௌலதாபாத் திரும்பும் உத்தேசத்தை சக்கரவர்த்திக்கு மடல் மூலம் தெரிவித்ததும் ஔரங்கசீப் அவர் மீதிருந்த தன் சந்தேகம் சரியே என்ற முடிவுக்கு வந்து தன் மகன் முவாசிம்மையும், ராஜா ஜஸ்வந்த்சிங்கையும் தக்காண நிர்வாகத்திற்கு நியமித்து விட்டு, ராஜா ஜெய்சிங்கைத் தலைநகர் வந்து சேரும்படிக் கட்டளைக் கடிதம் அனுப்பினான்.

ராஜா ஜெய்சிங் சக்கரவர்த்தி தன்னை நடத்திய விதத்தில் விரக்தியின் எல்லைக்கே போனார். கிளம்புவதற்கு முன் தூரத்தில் தெரிந்த சகாயாத்ரி மலைத் தொடரை அவர் வெறித்துப் பார்த்தார். அந்த மலையைப் பார்த்தவுடன் சிவாஜி நினைவுக்கு வந்தான். முன்னொரு முறை அவன் அவரிடம் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. “அடிமைத்தனத்தோடு சேர்ந்து வரும் எதையும் என்னால் சுபிட்சமாகவும், முன்னேற்றமாகவும் நினைக்க முடியவில்லை அரசே. சிங்கத்தின் வாலாய் இருப்பதை விட, ஒரு சுதந்திரமான எலியின் தலையாய் இருக்கவே நான் விரும்புகிறேன்”

மானசீகமாய் அவர் அவனிடம் சொன்னார். “வீரனே! நீ சொன்னது உண்மையே. அடிமைத்தனத்தில் குனிவதற்கும் குட்டப்படுவதற்கும் ஒரு எல்லை இருப்பதில்லை. உன் நிலைப்பாடே சரி. நீ எலியின் தலையாக அல்ல, கண்டிப்பாக ஒரு நாள் நீ சிங்கத்தின் தலையாகவே ஆட்சி புரிய இறுதி வரை இறைவன் உனக்குத் துணை இருக்கட்டும் என்று ஆசி வழங்குகிறேன். போய் வருகிறேன்”


ல்லா சூழ்நிலைகளையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்த சிவாஜி முகலாயப்படை தக்காணத்தில் மெலிந்ததையும், ராஜா ஜெய்சிங் கிளம்பிச் சென்றதையும் உடனே பயன்படுத்திக் கொண்டான். அவனுடைய மந்திரியும் வீரனுமான மோரோபந்த் பிங்க்ளேயை அனுப்பி ராஜா ஜெய்சிங்கால் பாதுகாக்க முடியாத தன் சிறிய கோட்டைகளை மறுபடி வென்று தனதாக்கிக் கொண்டான்.  தான் முன்பு விட்டுக் கொடுத்திருந்த கொங்கன் பிரதேசத்தையும் வென்று தனதாக்கிக் கொண்டான்.

அவன் மிகப் புத்திசாலித்தனமாக போர் நிர்வாகம் இரண்டிலும் சரிசமமான அக்கறையும், கவனமும் காட்டினான். ’யுத்தங்களிலேயே தொடர்ந்த கவனம் இருக்குமானால் நிர்வாகம் சீர்கெடும். நிர்வாகம் சீர்கெட்டால் மக்கள் நலன் கெடும். மக்கள் நலன் கெட்டால் அனைத்தும் கெடும்’ என்று அவன் ஆசிரியர் சொல்லி இருந்ததை அவன் மறக்கவில்லை. கொங்கன் பிரதேசமும், முடிந்த அளவு கோட்டைகளும் கைவசமான பின் அவன் நிர்வாகச் சீரமைப்புகளிலும், கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

தன் பெரும்பாலான கோட்டைகளைத் தனி நபர்களின் ஆதிக்கத்தில் விடாமல் நிர்வாகத்தைப் பல பிரிவுகளாய் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு கடமையைக் கொடுத்து அவர்களை அவ்வப்போது கண்காணிக்க ஆட்களை அனுப்பி சிறப்பான செயல்முறைகள் தொடரும்படி பார்த்துக் கொண்டான். பலவீனங்கள் அவ்வப்போது சரிசெய்யப்பட்டன.

முகலாயர்களின் சிறப்பான முறைகளைத் தயங்காமல் பின்பற்றினான். தரமான குதிரைகளை ஈன்றெடுப்பதிலும், குதிரைகளை திறம்பட வளர்ப்பதிலும் முகலாயர்கள் பாரசீகத்து முறைகளைப் பயன்படுத்தி சிறந்த குதிரைப்படையை உருவாக்கி இருந்தார்கள். அந்த முறைகளை அவனும் அப்படியே பின்பற்றினான்.

மலைக்காடுகளில் இருந்த உடல் உரமும் தைரியமும் மிக்க பலவகைப் பழங்குடி மக்களை கோட்டைப் பாதுகாப்புக்குப் பயன்படுத்திக் கொண்டான். புதிய வீரர்களை உருவாக்குவதிலும், பழைய வீரர்களை திறமை குறையாமல் இருத்திக் கொள்வதிலும் மிகுந்த அக்கறை காட்டினான். பயிற்சி மையங்களை உருவாக்கினான். பயிற்சிகளின் போது அவனும் உடன் இருந்து ஊக்கப்படுத்தினான். அங்கிருக்கும் பல நேரங்களில் அவனுக்கு அவன் இளமைக்காலம் நினைவுக்கு வரும். அவனுக்குப் பயிற்சி கொடுக்க அவன் ஆசிரியர் எடுத்துக் கொண்ட சிரமங்கள் நினைவுக்கு வரும். இப்போதும் காற்று வெளியில் தூரத்தில் அவர் இருந்துப் பார்த்துக் கொண்டிருப்பது போல் அவன் உணர்வான். மனம் லேசாகும்.

அவன் உணர்ந்ததையே சில நேரங்களில் ஜீஜாபாயும் உணர்வாள். அவளும் சில நேரங்களில் மகனுடன் சேர்ந்து கொண்டு அதையெல்லாம் கவனிப்பதுண்டு. ஒவ்வொரு வீரன் காட்டும் அசாத்தியச் சாதனையிலும் அவன் பாராட்டி மகிழும் விதம் பல வீரர்களை ஊக்குவிப்பதை அவள் நேரில் கண்டாள். மகன் போரில் மட்டுமல்லாமல், அனைத்திலும் காட்டும் அக்கறை, தொலைநோக்கு எல்லாம் இப்போதும் அவளை ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை.

அப்படி ஒரு நாள் மாலை பயிற்சிக் களத்திலிருந்து இருவரும் திரும்பிக் கொண்டிருக்கையில் ஒரு ஒற்றன் வந்து சொன்னான். “அரசே. முகலாயத் தலைநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ராஜா ஜெய்சிங் பர்ஹான்பூரில் மரணமடைந்தார் என்ற செய்தி கிடைத்திருக்கிறது”

சிவாஜி ராஜா ஜெய்சிங்கை  மிக நல்ல மனிதராகவும், தலைசிறந்த போர் வீரராகவும், திறமையானவராகவும்  என்றுமே உயர்ந்த அபிப்பிராயத்தில் தான் வைத்திருந்தான். அவர் கொடுத்த வாக்கு தான் முகலாயத் தலைநகரில் அவன் உடனடியாக உயிர்விடாமல் காத்தது என்பதை அவனால் என்றும் மறக்க முடியாது. அவரை ஔரங்கசீப் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் தக்காணத்தின் சரித்திரத்தையே வேறுவிதமாக மாற்றி இருக்க முடியும் என்பதிலும் சிவாஜிக்கு சந்தேகமில்லை. தவறான இடத்தில் ஊழியம் செய்து மங்கிப் போன அந்த மாமனிதனுக்கு வணக்கமும், மரியாதையும் செய்யும் விதமாக  சிவாஜி ஒரு கணம் அமைதியாக நின்று ஆகாயத்தைப் பார்த்து விட்டுப் பின் தலைவணங்கி நின்றான்.

(தொடரும்)
என்.கணேசன் 

2 comments:

  1. ராஜா ஜெய்சிங் தான் உணர்ந்த அவமானத்திலேயே தன் உயிரை விட்டாலும் விட்டுருப்பார்... ஔரங்கசீப் நல்லவர்களை இது போல அவமானப்படுத்துவது.... அவனுடைய வீழ்ச்சிக்கு விதையாக அமையும்....

    மறுமுனையில் சிவாஜி பலசாலியாக மாறுவது மகிழ்ச்சியாக உள்ளது...

    ReplyDelete
  2. Each character is described as if he or she is in front of us. That is the speciality of this historical novel. In this episode Raja Jaisingh touches our heart.

    ReplyDelete