சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, November 20, 2019

இந்த அசுரகுணங்கள் உங்களிடம் இருக்கிறதா?



ணமே பிரதானம் என்று வாழும் அசுர குணத்தை அழகாக விவரித்த ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து மற்ற அசுரக் குணங்களை விளக்க ஆரம்பிக்கிறார்.

இந்தப் பகைவன் என்னால் கொல்லப்பட்டான், மற்ற பகைவர்களையும் நான் கொல்வேன். நானே ஈஸ்வரன். செல்வத்தை அனுபவிப்பவன். நான் எல்லா சித்திகளையும் பெற்றவன்; வலிமை மிக்கவன்; சுகமாக இருப்பவன்.

நான் செல்வந்தன்; உயர்குலத்தில் பிறந்தவன். எனக்கு நிகரானவன் வேறு எவனிருக்கிறான்? நான் யாகம் செய்யப் போகிறேன்; தானம் அளிக்கப் போகிறேன்; இன்பத்தில் திளைக்கப் போகிறேன் என்று அஞ்ஞானத்தால் மோகம் கொண்டவர்கள் நினைப்பார்கள்.

பலவிதமாகத் திரிகின்ற மனமுடையவர்களாக, மோக வலையில் சிக்கியவர்களாக, காம போகங்களில் ஈடுபட்டு அசுத்தமான நரகத்தில் வீழ்கிறார்கள்.

தன்னைத் தானே உயர்ந்தவனாக நினைத்துக் கொள்பவர்களும், கர்வமுடையவர்களும், பணத் திமிர் கொண்டவர்களுமான அவர்கள் பெயருக்காக சாஸ்திர விதிகளை மீறி யாகம் செய்கிறார்கள்.

அகங்காரம், பலம், கர்வம், காமம், குரோதம் ஆகியவற்றை மேற்கொண்டு, தம் உடலிலும், பிறர் உடலிலும் உள்ள அந்தர்மியான என்னை வெறுப்பவர்களாகவும் உள்ளனர்.

பகைவனை “கொல்ல” நினைக்கும் தீவிரப்போக்கினைச் சொல்லித் தொடர்கிற இந்த அசுரகுணத்தை மேலோட்டமாகப் படித்தால் இக்காலத்தில் வெகுசிலரையே சுட்டிக் காட்டும் இயல்பாக நமக்குத் தோன்றும். ஏனென்றால் இன்றைய நாகரிக உலகில் பகைவர்களைக் கொல்லும் அளவுக்குச் செல்பவர்கள் மிகவும் குறைவு தான். இதைச் சற்று விரிவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்று மனிதன் பகைவர்களாக யாரையெல்லாம் நினைக்கிறான் என்றால் அவன் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களையும், அவனை எதிர்ப்பவர்களையும், அவனைக் கடுமையாக விமர்சிப்பவர்களையும்  தான். அவர்களைக் கொன்று குவிக்க அவன் துடிப்பதில்லை என்றாலும் அவர்களை வீழ்த்த வேண்டும், தன் வழியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றெல்லாம் துடிக்கிறான். அப்படிச் செய்ய அவன் தேர்ந்தெடுக்கும் வழிகளில் அவன் நியாய அநியாயங்கள் பார்ப்பதில்லை. என்னை எவரும் எதிர்க்கக்கூடாது, எதிர்த்தவர்களுக்கு இது தான் கதி என்பதை எல்லாருக்கும் காட்ட நினைக்கிறான். அப்படி வீழ்த்துவதிலும் அப்புறப்படுத்துவதிலும் வெற்றி கண்டு விட்டால் தன்னைக் கடவுளுக்கு இணையாகவே நினைத்துக் கொள்ளும் போக்கும் அவனுக்கு வந்து விடுகிறது. செல்வத்திற்கு அடுத்தபடியாக அவன் வலிமைக்காகவும் கர்வம் கொள்கிறான். இது அசுர குணமே!

அதே போல் உயர்குலத்தில் பிறந்தவன் என்றால் உயர்ந்த ஜாதியில் பிறந்தவருக்காகச் சொல்லப்பட்டது என்று மட்டும் நினைத்துக் கொண்டால் கீதை சொல்லும் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள நாம் தவறி விட்டது போல ஆகி விடும். இங்கு மதம், இனம், ஜாதி எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வது முறை.

உன்னுடைய முயற்சி எதுவும் இல்லாமல் நீ பிறந்த ஜாதி, இனம், மதம், கலாச்சாரம், ஆகியவற்றிற்கு நீ கர்வம் கொண்டால் அதுவும் அசுர குணமே. என் இனம் உயர்ந்தது. என் மதம் உயர்ந்தது என்று நினைப்பதில், நம்புவதில் தவறில்லை. ஆனால் என் இனம் மற்ற இனங்களைக் காட்டிலும் உயர்ந்தது,  என் மதம் மற்ற மதங்களைக் காட்டிலும் உயர்ந்தது என்று கர்வம் கொள்ளும் போது போர்க்குணம் உருவாகி விடுகிறது. மற்றவர்களைக் கீழ்த்தரமாக நினைக்கும் போக்கு உருவாகி விடுகிறது. நானே உயர்ந்தவன், மற்றவர்கள் எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்று  யார் எண்ணினாலும் அது அசுர குணமே.

உன் மதம், இனம், மொழி, கலாச்சாரம் அனைத்தையும் மதித்தும் போற்றியும் வாழ். அது தெய்வீகக் குணமே. ஆனால் அது மட்டுமே உயர்ந்தது, மற்றவருடையதெல்லாம் தாழ்ந்தது என்ற எண்ணமும், நம்பிக்கையும், தேவையில்லாமல் உனக்கு வருமேயானால் அது அசுர குணமே.

தானம் செய்வதும், யாகம் செய்வதும் கூட மேன்மையானதே. ஆனால் உன் உயர்வைக் காட்டுவதற்காக அதைச் செய்தாலும், செய்து விட்டு உன் உயர்வை அடுத்தவருக்கு உணர்த்த நீ அவற்றைச் செய்தாலும் அது அசுரகுணமே.

சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட யாகங்கள் அனைத்தும் நன்மை வேண்டியே. உயர் சிந்தனைகளே அந்தச் சடங்குகளின் அடிப்படையாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. ஆனால் நோக்கம் அடுத்தவருக்கு உன் உயர்வைக் காட்டும் படாடோபமாக இருக்குமானால் அந்த யாகங்களும் சாஸ்திர விதிகளுக்குப் புறம்பானவையாகவே நினைக்க வேண்டும்.

இக்காலத்தில் யாகங்கள் அதிகமாக நடத்தப்படுவதில்லை. அதற்கு இணையாக நாம் செய்யும் பூஜைகள், வழிபாடுகளை எடுத்துக் கொள்ளலாம். அவற்றை நாம் பணிவுடன் பக்தியுடனும் செய்வதை விட்டு விட்டுப் படாடோபத்துடனும், பகட்டுடனும், அடுத்தவர்க்கு நம் உயர்வைக் காட்டுவதற்காகச்  செய்தால் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் செலவு செய்தாலும் அதை இறைவன் நல்ல கணக்கில் எடுத்துக் கொண்டு அருள்பாலிக்க மாட்டான்.

எல்லாரிடமும் அந்தர்யாமியாய் இறைவன் இருக்கிறான். அதை அசுர குணம் படைத்தவர்களால் காண முடியாது. எதிரி, கீழானவன், குறைபாடுள்ளவன், சமமில்லாதவன்,  பிடிக்காதவன் என்றெல்லாம் ஒருவனைப் பார்க்கும் போதும் வெறுப்பே மிஞ்சுகிறது. அது அவர்களுக்குள் இருக்கும் இறைவனையே வெறுப்பது போலத் தான்.

இந்த அர்த்தங்களுடன் இந்த கீதை சுலோகங்களைப் படிக்கும் போது நாம் நம்மிடம் கூடச் சில அசுரகுணங்களைக் கண்டுபிடித்து விட முடியும். அப்படிக் கண்டுபிடித்து அவற்றை நீக்கிக் கொண்டால் மட்டுமே நாம் இறையருளுக்குப் பாத்திரமாக முடியும்.

பாதை நீளும்...

(தொடரும்)
என்.கணேசன்

1 comment: