சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 14, 2019

இல்லுமினாட்டி 23


விஸ்வம் என்ன செய்யப் போகிறோம் என்று கேட்டவுடன் ஜிப்ஸி சொன்னான். “நீ பழையபடி உன் சக்திகளை எல்லாம் பிரயோகிக்க முடிந்தவனாக வேண்டும்”

விஸ்வம் முகத்தில் நரகவேதனை தோன்றி மறைந்தது. சக்திகளின் பிரயோகத்திற்கு மனிதனின் நரம்பு மண்டலம் மிக வலிமையாக இருக்க வேண்டும். சக்திகளை ஒன்றாகக் குவித்துப் பிரயோகிக்கும் போது மனிதனின் பிராணசக்தியும், நரம்பு மண்டலமும் சரியாக ஒத்துழைக்க வேண்டும். அப்படி ஒத்துழைக்கா விட்டால் வசப்படுத்தி வைத்திருக்கும் சக்திகள் வலுவில்லாமல் பலவீனமாகவே வெளிப்படும். திட்டமிட்ட இலக்கை எட்டாது. இப்போதைய உடல் போதையால் ஒட்டு மொத்தமாக வலிமை இழந்த உடல். கற்றிருந்த சக்திகளை  அவனால் இந்த உடலின் மூளையில் பதிவு செய்து கொள்ள மட்டுமே முடிந்தது. ஆனால் பிரயோகத்திற்கு அந்தப் பதிவுகள் மட்டும் போதாது… சக்திகளை முழுக் கட்டுப்பாட்டுடன் இயக்க முடிந்த நரம்பு மண்டலமும் வேண்டும். போதையால் கிட்டத்தட்ட அழிந்து பலவீனமாகி விட்டிருந்த இந்த உடலின் நரம்புகள் சக்திப்பிரயோகங்களுக்கு உதவும் நிலையில் இல்லை.

விஸ்வத்துக்கு நோக்கு வர்மத்தைக் கற்றுக் கொடுத்த சாது நினைவுக்கு வந்தார். நோக்கு வர்மத்தில் அந்த சாது சிறந்த நிபுணராக இருந்தார். அவரிடம் போதைப் பழக்கமும் இருந்தது. ஆனால் அந்தப் போதைப் பழக்கத்துடனேயே வேறு சில மூலிகைகள் சாப்பிட்டும், பயிற்சிகள் செய்தும் அந்தப் போதைப் பழக்கம் அவருடைய சக்திப் பிரயோகத்தைத் தடுத்து விடாத அளவு அவர் எச்சரிக்கையுடன் இருந்ததை அவன் கவனித்திருக்கிறான். அவர் அதையே அவனிடம் பெருமையாகவும் ஒரு தடவை சொல்லியிருக்கிறார். அப்போது அவன் இகழ்ச்சியாகப் பதில் அளித்திருந்தான். “விஷத்தையும் சாப்பிட்டு, விஷமுறிவு மருந்தையும் சாப்பிடுவது தேவையில்லாத வடிகட்டிய முட்டாள்தனம்.”

அவன் சொன்னதைக் கேட்டு அவர் முகம் வாடிப்போனது அவனுக்கு நினைவிருக்கிறது. அந்த சாதுவுக்கும் அந்தப் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதில் வருத்தம் இருந்ததை அவன் உணர்ந்திருக்கிறான். இந்த டேனியலோ விஷத்தை மட்டுமே சாப்பிட்டு விஷ முறிவு மருந்தைப் பற்றிச் சிந்தித்தேயிருக்காத அடிமட்ட முட்டாள்…

ஜிப்ஸி அவன் முகத்தில் தோன்றி மறைந்த வலியைப் பார்த்து விட்டு மென்மையாகச் சொன்னான். ”வருத்தப்படாதே. உனக்கு இது சவால் என்று நினைத்துக் கொள். சக்திகளைப் பொருத்த வரை நீ இது வரை முயற்சி செய்து  முடியாமல் போனது எதுவும் இல்லவே இல்லை. அதனால் நீ கண்டிப்பாக முன் போல் ஆகி விட முடியும். நமக்கு இப்போதைய தேவை காலமும், பொறுமையும் தான்”

விஸ்வம் தன் மீது காட்டப்படும் இரக்கத்தை ரசிக்க முடியாதவன். ஜிப்ஸி காட்டிய இரக்கம் அவனுக்குக் கசந்தது என்றாலும் ஜிப்ஸியின் நம்பிக்கை சிறிது ஆறுதலாகவும் இருந்தது. விஸ்வம் திடீரென்று நினைவு வந்தவனாகக் கேட்டான். “உன்னிடம் இருக்கும் சக்திகளைப் பற்றி நீ இது வரை சொல்லவேயில்லையே”

ஜிப்ஸி அந்தத் திடீர்க்கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை போல் தெரிந்தது. ஜிப்ஸி சொன்னான். “சொல்லிக் கொள்ளும்படியாக என்னிடம் எந்தச் சிறப்புச் சக்தியும் இல்லை நண்பா”

விஸ்வம் சொன்னான். “அப்படி ஒரு சக்தியும் இல்லாமலேயா நீ என்னைப் பார்த்தவுடன் என் கடந்த காலம் அன்று சொன்னாய். இல்லுமினாட்டியில் நான் இறந்து கொண்டிருப்பது அங்கிருந்தவர்களுக்கே தெரியாத போது உனக்குத் தெரிந்திருந்தது. அதே போல் அந்த நேரத்தில் இறந்து கொண்டு இருந்த டேனியல் பற்றியும் உனக்குத் தெரிந்திருந்தது. இதெல்லாம் சிறப்புச் சக்தி இல்லாதவனிடம் இருக்க முடிந்ததா?”

ஜிப்ஸி அந்தக் கேள்வியில் அசரவில்லை. உடனே சொன்னான். “நண்பனே, நீயும் நானும் விதியால் முன்கூட்டியே பிணைக்கப்பட்டிருக்கிறோம். அதனால் நீ சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் என்னால் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். உனக்கு உதவக்கூடிய விஷயங்களையும் என்னால் உடனே தெரிந்து கொள்ள முடியும். மற்றது எதுவும் எனக்குத் தெரியாது.”

‘நாம் இருவரும் விதியால் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்கிறாய். ஆனால் சக்திகளின் உச்சத்தில் நான் இருந்த காலத்திலேயே உன்னைப் பற்றி என்னால் முழுவதுமாக தெரிந்து கொள்ள முடிந்ததில்லை’ என்று சொல்ல நினைத்த விஸ்வம் அதைச் சொல்லாமல் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான். இந்த ஜிப்ஸி முழு உண்மைகளையும் சொல்லி விடவில்லை என்ற போதிலும் அவன் சொல்வது எதுவும் பொய்யாகவும் இருக்கவில்லை. விஸ்வமே பூரண சக்திகளைக் குவித்து இந்த உடலுக்குள் வந்து தன் சக்திகளையும் பதிவு செய்த பின் எல்லா சக்திகளையும் செலவழித்துக் காலியாக்கி விட்ட உணர்வைப் பெற்றாலும் கூட அவனால் ஜிப்ஸி வருவதாகச் சொன்ன செய்தியை உணர முடிந்தது நினைவுக்கு வந்தது. விதியால் இருவரும் முன்கூட்டியே பிணைக்கப்பட்டவர்களாக இருப்பதாகச் சொன்னது உண்மையாகவே இருக்கலாம்.

விஸ்வம் கேட்டான். “நான் இந்த உடம்பை எந்த அளவு தேற்ற முடியும் என்று பார்க்கிறேன். தேற்றிய பிறகு அடுத்ததாக நாம் என்ன செய்யப் போகிறோம்… அது வரை இல்லுமினாட்டி என்ன செய்யும்?”

ஜிப்ஸி சொன்னான். “இல்லுமினாட்டியைப் பொறுத்த வரை உறுப்பினர்கள் எந்த ஒரு கருத்தையும் வெளிப்படையாகத் தங்கள் கூட்டங்களில் பேசலாம். தலைமைக்குத் தெரிவிக்கலாம். ஆனால் முக்கிய முடிவுகளை எடுப்பது தலைமைக் குழு. தலைமைக்குழுவில் இருக்கும் ஐந்து பேர்களில் மூன்று பேர் உனக்கு நன்றாகவே தெரியும். தலைவர் எர்னெஸ்டோ, உபதலைவர், ஃப்ராங்க்பர்ட்டில் நீ முன்பே சந்தித்திருக்கும் கலைப்பொருள்கள் சேகரிக்கும் ஆசாமி. மீதி இருவர் சீனாவின் அரசியல் தலைவர் ஒருவர்,  தென்னாப்பிரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஒருவர். இந்தத் தலைமைக்குழுவிலும் தலைவரான எர்னெஸ்டோ தான் சர்வ சக்தி வாய்ந்தவர். அவரிடமும் மற்ற நாலு பேரும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் அவர் எடுத்த முடிவை அவர்களும் இது வரை எதிர்த்ததில்லை. இந்த அளவு அதிகாரத்தை எர்னெஸ்டோவுக்கு முந்தைய தலைவர் கூடக் கையில் வைத்திருக்கவில்லை என்று சொல்கிறார்கள். அதனால் இப்போதைக்கு எர்னெஸ்டோவின் முடிவே இல்லுமினாட்டியின் முடிவு. அவரோ உன்னை இல்லுமினாட்டிக்கு வில்லனாகவும், க்ரிஷைக் கதாநாயகனாகவும் நினைக்கிறார்…”

விஸ்வத்துக்கு இல்லுமினாட்டி கூட்டத்தில் எர்னெஸ்டோ க்ரிஷை இல்லுமினாட்டியில் சேர அழைத்ததை உணர்வு நிலையில் இருந்து கவனித்தது நினைவு வந்தது. அவரே இல்லுமினாட்டிக்கு அழைத்தவன் அவருக்குக் கதாநாயகனாக இருப்பதும், கதாநாயனுக்கு எதிரானவனை வில்லனாக அவர் நினைப்பதும் ஆச்சரியமில்லை.

விஸ்வம் சொன்னான். “ஒரு காலத்தில் நான் விதியை நம்பியதில்லை நண்பனே. குறிப்பாக என் விதியை நானே எழுதிக் கொள்வேன் என்பதில் எனக்குச் சந்தேகமே இருந்ததில்லை. ஆனால் இப்போது விதியும் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டியதாகி விட்டது. இல்லுமினாட்டியில் சேர நான் செய்த முயற்சிகள், சேர்ந்த பின் நான் செய்த முயற்சிகள் எல்லாம் கச்சிதமாக விளைவுகளைக் கொடுத்து என் விதியை நான் எழுகிறேன் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால் எந்த முயற்சியும் எடுக்காமல், இல்லுமினாட்டி அல்ல எந்தவொரு இயக்கத்திலும் சேரும் உத்தேசமும் இல்லாமல் சும்மா இருந்த க்ரிஷை இல்லுமினாட்டிக்குக் கூட்டிக் கொண்டு வந்ததுடன் அவனை அதில் சேர்த்தும் விட்டது தனிப்பட்ட யாருடைய திட்டமும் இல்லாமல் இருப்பதால் அது விதி என்றே நான் நம்ப வேண்டி இருக்கிறது. இது அவன் விதியாக இருக்கலாம்…”

ஜிப்ஸி சொன்னான். “ஆனாலும் கடைசியிலும் உன் விதியை நீ தான் எழுதிக் கொண்டிருக்கிறாய். மரணத்தில் கூட நீ தான் ஜெயித்திருக்கிறாய். அதனால் இப்போதும் நீ தான் முந்தி இருக்கிறாய் நண்பா….”

விஸ்வம் மெலிதாய்ப் புன்னகைத்தான். ஒரு விதத்தில் ஜிப்ஸி சொல்வது உண்மை தான் என்றாலும் இந்த போதை மனிதன் உடல் கிடைக்காமல் வேறு ஒரு சாதாரண உடல் கிடைத்திருந்தாலும் அவன் வெற்றியைக் கொஞ்சம் அதிகமாய் உணர்ந்திருப்பான்.

ஜிப்ஸி சொன்னான். “உனக்கு முதல் எதிரி க்ரிஷ் தான் என்றாலும் இரண்டாவது எதிரியாய் சேர்ந்திருக்கிற எர்னெஸ்டோ தான் இப்போது அதிக ஆபத்தான ஆளாய் இருக்கிறார். உன்னை அவர் பழைய கதையாய் ஒதுக்கி விடமாட்டேன்கிறார். உன்னைத் தேடுவதில் அவர் இவ்வளவு மும்முரமாக இருப்பது உன்னைக் கொல்வதற்காகத் தான். க்ரிஷ் நீ உலகத்தை அழிப்பாய் என்று நம்புகிறான் என்றால் எர்னெஸ்டோ நீ அதற்கு முன் இல்லுமினாட்டியை அழிப்பாய் என்று நம்புகிறார். அதனால் நீ உடனடியாக முடிக்க வேண்டிய எதிரி எர்னெஸ்டோ. அதை நீ செய்யா விட்டால் அவர் உன்னை முடித்து விடுவார். ஒரு முறை உபயோகித்து நீ வெற்றி பெற்றிருக்கிற இந்தக் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையும் இன்னொரு தடவை வெற்றி தர இப்போதைக்கு உனக்கு சக்திகள் போதாது.”



வாஷிங்டனில் இருக்கும் அந்த வயதான இல்லுமினாட்டி உறுப்பினர் கர்னீலியஸ் ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் பன்னிரண்டாவது மாடியில் தனியாக வசிக்கிறார். அவர் மனைவி இறந்து இருபது வருடங்களாகின்றன. இரண்டு மகன்கள் தொலை தூரங்களில் வசிக்கிறார்கள். அவர் வீட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தால் இல்லுமினாட்டியின் இரகசியக் காப்பறைக் கட்டிடம் தெளிவாகத் தெரியும். பல மனப் போராட்டங்களுடன் இப்போது ஜன்னல் வழியாக அதைத்தான் அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நள்ளிரவிலும் அங்கு பலத்த காவல் இருப்பதை அவரால் பார்க்க முடிந்தது. அதனுள் இருக்க வேண்டிய ஒரு இரகசிய ஆவணம் அவரிடம் இருக்கிறது.  அது அவரை உறங்க விடாமல் தடுக்கிறது. ஆபத்தான இந்தக் காலக்கட்டத்தில் ஆபத்தான தகவல்களைக் கொண்ட அந்த ஆவணத்தை இனியும் தன்னிடம் வைத்துக் கொண்டிருப்பது சரியல்ல என்று அறிவும் மனசாட்சியும் சேர்ந்தே அவரை எச்சரித்தன. என்ன செய்வது என்று யோசித்தபடியே அந்த நள்ளிரவில் நீண்ட நேரம் ஜன்னலருகே நின்று கொண்டிருந்தார் அவர்…



(தொடரும்)
என்.கணேசன்


5 comments:


  1. Thursdays are very special to me because of your novel updates. Very interesting. By the way, I have read you vithi ezhudhum viralkaL in Kindle. Best Reading experience. I couldn’t stop and read at a stretch. Great short novel sir. Please write more like this.


    ReplyDelete
  2. புத்தகமா வந்தவுடனேயே படிச்சுக்கலாம் என்று ஒவ்வொரு வாரமும் நினைப்பேன். ஜனவரியில் தான் வரும் என்று சொல்லியிருக்கீங்களே. ரெண்டு மாதம் தானே இடையில் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் வியாழன் மாலை ஐந்தரைக்கு மேல் ஆனால் தானாக உங்கள் ப்ளாக் வந்து விடுகிறேன். அப்படி இருக்கிறது தங்கள் எழுத்து மேஜிக். சூப்பர்.


    ReplyDelete
  3. Very nice epi and interesting.
    விஸ்வம் இன்னொரு முறையும் பரகாய பிரவேசம் செய்ய போகிறானா?
    அந்த வயசான இல்லுமினாட்டி உறுப்பினருக்கு அப்படி என்ன ஆபத்து வந்து விட போகிறது?

    ReplyDelete
  4. Sir 1000 episode வர மாதிரி எழுதுங்கள். அப்போது தான் கொஞ்சநாள் படிக்க முடியும். இல்லையெனில் 2 அல்லது 3 நாட்களில் புத்தகம் முடிந்துவிடும் ஐயா.

    ReplyDelete
  5. கர்னீலியஸ் இடம் முக்கிய ஆவணம் உள்ளதா...?
    அப்போது இல்லுமினாட்டியில் ஏதேனும் திருப்பம் ஏற்படபோகிறது....

    அக்ஷய் வருவான் என்று கூறினீர்கள்.... இப்போது போகும் விறுவிறுப்பில் அனைவரும்‌.. அமானுஷ்யனை மறந்தே விட்டனர்...

    ReplyDelete