சங்கரமணி மாணிக்கத்திடம் சொன்னார். “சைத்தானைப் பத்தி எத்தனையோ கேள்விப்பட்டிருக்கோம், படிச்சிருக்கோம், ஆனா மொத்த உருவமா அவனை நேர்ல பார்ப்போம்னு நான் இது வரைக்கும் கற்பனைல கூட நினைச்சுப் பார்த்ததில்ல….”
மாமன் யாரைப் பற்றிச் சொல்கிறார் என்று
விளங்காமல் மாணிக்கம் கேள்விக்குறியுடன் பார்த்தார்.
மாணிக்கம் பொறுமையாகச் சொன்னார். “மாமா,
கடவுள் கிட்ட கூட விளையாடலாம். அவன் கருணை காட்ட வாய்ப்பிருக்கு. சைத்தான் கிட்ட விளையாடக்கூடாது.
அது நிச்சயமான ஆபத்து. ஹரிணியைக் கடத்தின இடம் மாஸ்டருக்குக் கூடக் கண்டுபிடிக்க முடியலையாம்.
நமக்குத் தெரிஞ்சு மாஸ்டர் தான் சக்தி வாய்ந்த ஆசாமி. அவரே கண்டுபிடிக்க முடியாத இடத்துல
அவளைக் கடத்தி வச்சிருக்கற ஆசாமி எவ்வளவு சக்தி வாய்ந்த ஆசாமியாய் இருக்கணும். கொஞ்சம்
யோசிச்சுப் பாருங்க. தயவு செஞ்சு அந்த ஆள் கிட்ட பிரச்ன பண்ணாம இருங்க….”
சங்கரமணி சரியென்று தலையசைத்தார். பின்
சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “நம்ம கிட்ட வர்ற சைத்தான் வெறும் வேலைக்காரன்
தான் போல இருக்கு. உண்மையான முதலாளி சைத்தான் எப்படி இருப்பான்னு தெரியல…. அவன் நம்ம
கிட்ட வந்ததில்ல…..”
மாணிக்கம் தீர்மானமாகச் சொன்னார்.
“அவன் வர வேண்டாம். வர்றது நமக்கு ஆபத்து. நீங்க வரவழைச்சுடாதீங்க”
க்ரிஷ் போன பிறகு அவன் சொன்ன “எதிரி கைப்பாவையா பயன்படுத்தறது உங்களையாக்கூட இருக்கலாம் இல்லையா?” என்ற வாக்கியத்தைப் பற்றிச்
சிந்திக்க ஆரம்பித்தார். அவர் இப்போது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. யார்
சொல்படியும் அவர் நடக்கவுமில்லை. அதனால் எதிரியின் கைப்பாவையாக அவர் இருக்க வழியே
இல்லை. அதே போல் க்ரிஷும் சுதந்திரமாகத் தான் இருக்கிறான். வேற்றுக்கிரகவாசி
இப்போதும் அவனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது போல் தெரியவில்லை. க்ரிஷ் உயிரை
இரண்டு முறை காப்பாற்றியும் இருக்கிறான். எதிரியின் கைப்பாவை அவனும் அல்ல, அவனும்
அல்ல, அவரும் அல்ல என்றால் பின் யார்?.... இருவரில் ஒருவர் தான் என்றால் அது யார்?
இந்தக் கேள்விக்கு விடை தெரிந்து கொள்வது இந்த நேரத்தில் மிக முக்கியம் என்று
அவருக்குத் தோன்றியது. என்ன யோசித்தும் விடை கிடைக்காமல் போகவே ஒரு முடிவுக்கு
வந்தவராக தங்கள் ஆன்மிக இயக்கத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் உயர்நீதிமன்ற
நீதிபதியுமான கிருஷ்ணவேணியைச் சந்திக்க செங்கல்பட்டுக்குக்
கிளம்பினார்.
கிருஷ்ணவேணி தான் க்ரிஷை அவர் சீடராக ஏற்றுக் கொண்டது சரியே
என்று அவர்களது கூட்டத்தில் வாதம் செய்தவர். கூர்மையான அறிவும், அப்பழுக்கில்லாத நேர்மையும்
கொண்டவர். பல அரசியல்வாதிகளுக்கும், தேச விரோத சக்திகளுக்கும் எதிராகத் தெளிவாகத் தீர்ப்பு
வழங்கியவர். அவர் அனுசரித்துப் போயிருந்தால் உச்சநீதிமன்றம் வரை நீதிபதியாகப் போயிருக்கலாம்
என்ற கருத்து பரவலாக இருந்தது. ஆனால் அவரது விலைபோகாத தன்மை இன்றும் அவரை அறிந்தவர்களிடத்தில்
ஒரு தனி மரியாதையை தக்க வைத்திருக்கிறது.
மாஸ்டரைச் சந்தித்ததில் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கிருஷ்ணவேணி
முகத்தில் தெரிந்தது. இன்முகத்தோடு வரவேற்றவர் “என்ன மாஸ்டர் திடீர்னு? கூப்பிட்டிருந்தால்
நானே வந்திருப்பேனே?”
மாஸ்டர் சொன்னார். “உங்க கிட்ட ஒரு ஆலோசனை கேட்க இருந்தது. அதனால
நானே உங்களை வந்து சந்திக்கிறது தான் முறை.”
சிறு உபசரிப்புக்குப் பின் மாஸ்டர் தற்போதைய நிகழ்வுகள் அனைத்தையும்
சொல்லி எதிரியின் கைப்பாவையாக அவரும் இருக்கலாம் என்று சொன்னதையும், அதற்கான எந்த அறிகுறியும்
இப்போதும் தட்டுப்படாத போதும் அவன் சொன்னதை அலட்சியப்படுத்த விரும்பாததையும் சொன்னார்.
கிருஷ்ணவேணி அவர் சொன்னதை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டு விட்டு யோசித்தார்.
அவருக்குத் தெரிந்த வரை மாஸ்டரை யாரும் கைப்பாவையாகப் பயன்படுத்த முடியாது. தவறான எந்தக்
காரியத்தையும் யாரும் செய்ய வைக்க முடியாது. அவர் உறுதியான மனிதர் தான். அதில் சந்தேகம்
இல்லை….. மாஸ்டர் சாதாரண மனிதர் அல்ல. அவர் ஒரு சக்தி வாய்ந்த ஆன்மிக இயக்கத்தின் தலைவர்.
அதன் சக்தி அதிகார மையத்தில் பல இடங்களில் பல விதங்களில் வேரூன்றீ இருக்கிறது. உள்நாட்டு
வெளிநாட்டு அபிமானிகள் ஏராளமான பணத்தை அனுப்பி வருவதால் இயக்கத்தின் பண இருப்பும் சொத்துக்களும்
கூட பல நூறு கோடிகளில் இருக்கும்……
கிருஷ்ணவேணியின் சிந்தனை இந்த இடத்தில் ஒரு கணம் நின்றது. “மாஸ்டர்
நம் இயக்கத்தின் பணப்புழக்கம் எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது…..”
“ஆமாம். விஸ்வம் தான் அதை எல்லாம் பார்த்துக் கொள்கிறார். கணக்கில்
அவர் கம்ப்யூட்டரையும் மிஞ்சுகிற ஆள். அதில் தவறு வர வாய்ப்பே இல்லை”
“அந்தக் கணக்கை எல்லாம் நீங்களும் அவ்வப்போது சரிபார்க்கிறீர்கள்
அல்லவா?” கிருஷ்ணவேணி கேட்டார்.
மாஸ்டர் முகபாவனையில் இருந்து அவர் அப்படிச் செய்வதில்லை என்பது
தெளிவாகவே தெரிந்தது. அடுத்ததாக கிருஷ்ணவேணி கேட்டார். “பேங்க் அக்கவுண்ட்ஸை எல்லாம்
ஆபரேட் செய்யும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது,
ஆன்மிகப் பேரவையின் சொத்துக்களை வாங்கவும், விற்கவும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது…”
“எனக்குத் தான். ஆனால் பவர் ஆஃப் அட்டர்னி நான் விஸ்வத்துக்குத்
தந்திருக்கிறேன்.”
“ஆனால் நீங்கள் அவ்வப்போது கணக்கை சரிபார்ப்பதில்லை…?” கிருஷ்ணவேணியின்
குரலில் ஆச்சரியம் தெரிந்தது.
“ஆரம்பத்துல மூணு மாசத்துக்கு ஒரு தடவ அங்கே போறப்ப செக் பண்ணிட்டு
இருந்தேன். எல்லாம் சின்னத்தப்பு கூட இல்லாம கச்சிதமா இருந்தது. விஸ்வம் கணக்கை தினசரி
எழுதி சரிபார்த்து விட்டு, கம்ப்யூட்டரில் ஒரு ஃபோல்டரில் தினசரி அப்டேட் பண்ணி விட்டுத்
தான் தூங்கவே போவார். அதை ஒரு மாதா மாதம் ப்ரிண்ட் அவுட் எடுத்து ஃபைல் செய்து விடுவார். எப்போது வேண்டுமானாலும் நான்
அதைச் செக் செய்துக்கலாம்னு சொல்வார். நான் பார்க்கறதில்லைன்னாலும் எப்போது வேண்டுமானாலும்
பார்த்துக்க கம்ப்யூட்டரில் ஃபோல்டர் இருக்கும் இடம், அலமாரியில் ஃபைல் வைக்கும் இடம்
எல்லாம் எனக்குக் காட்டி இருக்கிறார்…..”
”ஆனால் அப்படி நீங்கள் சமீப காலத்தில் செக் செய்து பார்க்கலை”
“இல்லை. ஆரம்பத்துல பார்த்ததோட சரி. குரு இருக்கறப்ப அவரும்
எனக்கு பவர் ஆஃப் அட்டர்னி தந்திருந்தார். கணக்கும் நான் தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவர் ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் ஒரு தடவை கூட செக் செய்ததாய் எனக்கு ஞாபகம்
இல்லை….”
“குருஜிக்கு உங்களை சின்ன வயசுல இருந்தே தெரியும். நூறு சதவீதம்
தெரியும். குருஜிக்கு உங்களைத் தெரிஞ்ச அளவு உங்களுக்கு விஸ்வத்தைத் தெரியுமா மாஸ்டர்?”
மாஸ்டர் யோசித்தார். விஸ்வம் அவர்கள் இயக்கத்திற்கு வந்து சுமார்
பத்து வருடங்கள் இருக்கலாம். விஸ்வம் கணக்கில் புலி. அதை அவரால் நூறு சதவீதம் சொல்ல
முடியும். ஆன்மீகத்தில் நல்ல ஈடுபாடு இருந்தாலும் அபூர்வ சக்திகளில் தேர்ச்சி பெற பலமுறை
வற்புறுத்தியும் அது தனக்கு ஒத்து வராது என்று பின்வாங்கிய மனிதர் விஸ்வம். அதை ஒத்துக்
கொள்வதில் அவருக்குச் சின்னத் தயக்கம் கூட இருந்ததில்லை. மற்றபடி அதிகம் பேசாதவர்.
கூச்ச சுபாவக்காரர். அவருடைய கடந்த காலம் பற்றி
எதுவும் தெரியாது…
மாஸ்டர் சொன்னார். “இல்லை…”
“எதற்கும் ஒரு தடவை நீங்கள் நேரில் போய் கணக்குகளை செக் பண்றது
நல்லது மாஸ்டர்”
(தொடரும்)