சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 2, 2018

இருவேறு உலகம் – 94

ர்ம மனிதன் மீண்டும் தன் ஆட்களிடம் போனில் தொடர்பு கொண்டான். செந்தில்நாதன் தற்போது எங்கே இருக்கிறார் என்று கேட்டான். இப்போதும் செந்தில்நாதன் இமயமலைப் பகுதியில் தான் இருக்கிறார் என்றும் இன்னமும் அவனைப் பற்றி தான் புதிய தகவல்களை சேகரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்றும் பதில் வந்தது. ஸ்டீபன் தாம்சனிடம் க்ரிஷ் போனில் பேசியிருக்கக்கூடும் என்று தோன்றியது. போனில் க்ரிஷ் என்ன கேட்டிருப்பான், ஸ்டீபன் தாம்சன் என்ன பதிலளித்திருப்பார் என்பதை மர்ம மனிதன் ஊகிக்க முயன்றான். அமானுஷ்ய சக்திகள் பற்றியே விசாரித்திருந்தால் அப்படி சக்திகளில் ஆர்வமிருக்கும் யாரும் தன்னை சந்திக்கவில்லை என்று அவர் சொல்லி இருப்பார். அதற்குப் பிறகு அவரிடம் கேட்க க்ரிஷுக்கு எதுவும் இருந்திருக்காது…..

ஓரளவு திருப்தி அடைந்தாலும் அதையே நம்பி சும்மா இருந்து விட மர்ம மனிதனால் முடியவில்லை. அமெரிக்காவில் அட்லாண்டாவில் உள்ள ஒரு மனிதனுக்குப் போன் செய்தான். ஸ்டீபன் தாம்சனைச் சந்திக்க வருபவர்கள் பற்றிய தகவல்களைத் தனக்கு உடனுக்குடன் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அந்த அட்லாண்டா ஆசாமி கேட்டான். “இனிமேல் அவரைச் சந்திக்க வரும் ஆட்கள் பற்றி மட்டும் தெரிந்தால் போதுமா சமீப நாட்களில் வந்து போனவர்களையும் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா?”

மர்ம மனிதனுக்குப் புத்திசாலிகளை எப்போதும் பிடிக்கும். புன்னகைத்தபடியே சொன்னான். ”எதற்கும் மூன்று நாட்கள் முன்னால் இருந்தே ஆரம்பி….”

மூன்று மணி நேரத்தில் ஸ்டீபன் தாம்சனின் எதிர்வீட்டு காமிராவில் பதிவாகியிருந்த சில புகைப்படங்கள் மர்ம மனிதன் செல்போனிற்கு வந்து சேர்ந்தது. கடந்த மூன்று நாட்களில் ஸ்டீபன் தாம்சனை சந்தித்து விட்டுப் போனவர்களின் புகைப்படங்கள் அவை. அந்த ஆட்கள் ஸ்டீபன் தாம்சனின் வீட்டில் நுழைந்த தேதி, நேரம், வெளியே வந்த நேரம் அந்தந்த நேரப் புகைப்படங்களில் குறிக்கப்பட்டிருந்தது. அந்த ஆட்களில் க்ரிஷ் ஒருவனாக இருந்தான். திடுக்கிட்ட மர்ம மனிதன் அவன் வந்து போன காலத்தை ஆராய்ந்தான். க்ரிஷ் நேற்றே வந்து போயிருக்கிறான். மூன்றே கால் மணி நேரம் ஸ்டீபன் தாம்சனுடன் இருந்திருக்கிறான். க்ரிஷின் வேகம் அவனையே அசர வைத்தது. இருவரும் என்ன பேசியிருக்கிறார்கள் என்று தெரியாத போதிலும் மோசமானதையே எதிர்பார்த்து அதற்காகத் தயார்நிலையில் இருப்பதல்லவா புத்திசாலித்தனம்.  

ஆழமாக யோசித்து விட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்க மர்ம மனிதன் தீர்மானித்து மனோகருக்குப் போன் செய்தான்.


ரிணி வழக்கமாக வீடு வந்து சேர வேண்டிய நேரத்தில் வீடு வந்து சேரவில்லை. கிரிஜா அடிக்கடி சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாலும் கூட மகளிடம் போன் செய்து பேசுவதில்லை என்று பிடிவாதமாக இருந்தாள். முதல் அமைச்சர் வீட்டு சம்பந்தத்தை மகள் நிராகரித்ததில் இருந்து அவள் மகளுடன் பேசுவதை நிறுத்தி இருந்தாள். அதை மகள் கண்டு கொள்ளாதது அவள் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. நேரமாக நேரமாக தாய் மனம் தவிக்க ஆரம்பித்தது. “நேரமாகும்னு ஒரு வார்த்தை போன் செய்து சொல்லக்கூட முடியலை. இங்கே ஒருத்தி வயித்துல நெருப்பைக் கட்டிட்டு காத்திருப்பாளேன்னு அக்கறை கூட இல்லை. பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுன்னு சும்மாவா சொன்னாங்க” என்று மனதுக்குள் புலம்பிய கிரிஜாவுக்கு நிறைய நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மணி பார்த்தாள். இரவு எட்டரை…  ஆறரை மணிக்கு வந்து சேர வேண்டியவள்…..

கிரிஜா கோபத்துடனேயே மகளுக்குப் போன் செய்தாள். மகள் குரல் கேட்டால் பேசாமல் போனை வைத்து விட வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தாள். ஆனால் ஹரிணி போன் ஸ்விட்ச்டு ஆஃப் ஆகியிருந்த தகவல் தான் வந்தது. கிரிஜாவின் வயிற்றை ஏதோ என்னவோ செய்தது. ஹரிணி எப்போதுமே போனை ஸ்விட்ச்டு ஆஃப் செய்து வைக்கிற ரகம் அல்ல. போன் ரிப்பேரோ? க்ரிஷுக்குப் போன் செய்தாள். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகத் தகவல் வந்தது. இரண்டு பேருமாய் சேர்ந்து எங்கேயாவது போயிருப்பார்களோ? எதற்கும் க்ரிஷ் வீட்டுக்குப் போன் செய்து பார்க்கலாம் என்று நினைத்து போன் செய்தாள். பத்மாவதி தான் பேசினாள். க்ரிஷ் எதோ வெளிநாட்டிற்குப் போயிருப்பதாகவும் நாளை வந்து விடுவான் என்றும் சொன்னாள். ஹரிணி நலமா என்று அவள் விசாரிக்க ஹரிணி அங்கே போயிருக்கவும் வாய்ப்பு இல்லை என்று புரிந்தது. ஏதோ சமாளித்து விட்டு கிரிஜா அடுத்ததாக மணீஷுக்குப் போன் செய்து விசாரித்தாள். அவனுக்கும் தெரியவில்லை. அவன் ‘க்ரிஷ் வீட்டுக்குப் போயிருக்காளான்னு விசாரிச்சீங்களா ஆண்ட்டி” என்று கேட்டான். விசாரித்து விட்டதாகவும், அங்கும் அவள் போகவில்லை என்றும் சொல்லும் போது கிரிஜாவுக்கு அழத்தோன்றியது.

“அழாதீங்க ஆண்ட்டீ. ஏதாவது சோஷியல் வர்க்ல இருப்பா. போன் செஞ்சு சொல்ல முடியாத நிலைமை இருக்கலாம்” என்று அவன் சொன்ன போது இருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது. என்ன சோஷியல் வர்க்கோ? மகள் மேல் கோபம் வந்தது. ஆனால் மணி பத்தான பின்னும் மகள் வராத பின்னர் கிரிஜா ஆபத்தை உணர ஆரம்பித்தாள். மறுபடி மணீஷுக்குப் போன் செய்து பேசினாள். “எனக்கென்னவோ பயமா இருக்குப்பா. சில நேரம் கண்ணு மண்ணு தெரியாம வண்டி ஓட்டுவா? ஏதாவது ஆயிருக்குமோ”

“அப்படி எல்லாம் ஆயிருக்காது ஆண்ட்டி. எதுக்கும் நான் அப்பா கிட்ட சொல்லி விசாரிக்கச் சொல்றேன்” என்று அவளை ஆசுவாசப்படுத்திய மணீஷ் தந்தையிடம் விஷயத்தைச் சொன்னான். மகன் முகத்தில் தெரிந்த கூடுதல் கவலை அவரை உடனடியாக இயங்க வைத்தது. அவர் நேரடியாகவே போன் செய்யவே போலீஸ் டிபார்ட்மெண்ட் முழுவதும் மின்னல் வேகத்தில் இயங்கியது. போலீஸ் கண்ட்ரோல் ரூம், ஆம்புலன்ஸ்கள், ஆஸ்பத்திரிகள் எல்லாவற்றுக்கும் செய்திகள் அனுப்பப்பட்டது. விபத்துகள் விவரங்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டன. ஆனால் ஹரிணி பற்றி எந்தத் தகவலுமே கிடைக்கவில்லை. கல்லூரி வாசலில் மாலை ஐந்தரை மணிக்கு அவளைக் கடைசியாக தோழிகள் இருவர் பார்த்திருக்கிறார்கள். அதன் பின் அவளை யாரும் பார்க்கவில்லை.

மணீஷ் தூங்கவில்லை. அதனால் மாணிக்கமும் தூங்கவில்லை. நிறைய நேரமாகியும் எந்தத் தகவலும் வராமல் போகவே அவர் மனதில் சந்தேகம் ஒன்று துளிர் விட ஆரம்பித்தது. தன் அறைக்குப் போய் ரகசியமாய் மனோகருக்குப் போன் செய்தார். “மனோகர் ஹரிணி இன்னைக்கு சாயங்காலத்திலிருந்து காணோம்…… எல்லா இடங்கள்லயும் தேடிப் பார்த்தாச்சு. எந்தத் தகவலும் இல்லை……”

மனோகர் அமைதியாகச் சொன்னான். “அவள் என்ன உங்க மருமகளா? இல்லையே. அப்புறம் ஏன் கவலைப்படறீங்க சார். உங்க வேலையைப் பாருங்க”

மாணிக்கத்தின் சந்தேகம் உறுதியாகி விட்டது. வெளியே வந்தவர் மகன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தார். “நீ போய் தூங்கு மணீஷ். ஹரிணிக்காக போலீஸ் டிபார்ட்மெண்ட்டே முழு வேகத்துல இயங்கிகிட்டிருக்கு. சீக்கிரமே எதாவது தகவல் கிடைக்கும்” என்று எங்கோ பார்த்தபடி சொல்லி விட்டுத் தனதறைக்குப் போய் விட்டார்.

மணீஷ் ஆபத்தை உணர்ந்தான். சிறிய வயதிலிருந்தே நண்பனாக இருந்த க்ரிஷைக் கொல்வதில் கூட எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாதிருந்த அவனுக்கு ஹரிணி விஷயத்தில் அப்படி கல்லாக இருக்க முடியவில்லை. மனம் என்னவோ செய்தது….. கிரிஜா அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அவனுக்குப் போன் செய்து அழுதாள். போலீஸ் டிபார்ட்மெண்டையே தன் தந்தை முடுக்கி விட்டிருப்பதாக அவளுக்கு ஓரளவு தைரியம் சொன்ன அவனுக்கு இந்த விஷயத்தில் இனி தந்தையின் ஆதிக்கம் இருக்காது என்பது புரிய ஆரம்பித்து விட்டது. அதை சற்று முன் அவர் பேசிய விதத்திலேயே அவன் அறிந்து கொண்டு விட்டான்.

க்ரிஷ் வெளிநாடு எங்கோ போயிருப்பதாக பத்மாவதி சொன்னதாக கிரிஜா சொல்லியிருந்தாள். அவன் இருந்திருந்தால் கண்டிப்பாக மணீஷ் அவனிடம் பேசி இருப்பான். இனி என்ன செய்வது என்று யோசித்த மணீஷ் கடைசியில் உதய்க்குப் போன் செய்தான்.

உதய் தூக்கக் கலக்கத்தில் பேசினான். “ஹலோ”

மணீஷ் சொன்னான். “அண்ணா…. நான் மணீஷ் பேசறேன்….. ஹரிணி இன்னைக்கு வீடு வந்து சேரலை. அவ போன் ஸ்விட்ச்டு ஆஃப் ஆயிருக்கு…. அப்பா போலீஸ் டிபார்ட்மெண்டுக்குச் சொல்லி இருக்கார். சொல்லி மூணு மணி நேரம் ஆச்சு…. எந்தத் தகவலும் இல்லை…… பயமா இருக்குண்ணா…. அதான் இந்த நேரத்துல உங்களுக்குப் போன் செய்யறேன்…”

உதயின் தூக்கம் ஒட்டு மொத்தமாக விடை பெற்றது.

(தொடரும்)
என்.கணேசன்  

5 comments:

  1. Tension started. waiting for next Thursday.

    ReplyDelete

  2. மர்ம மனிதன் எதிர்பார்த்த பாதையிலே செல்கிறான்,...
    ஹரிணியை கடத்தி...
    அனைவரும் சம்பந்தப்பட்ட மற்றவரின் நோக்கங்களை புரிந்து கொள்ளும்
    தன்மை உடையவர்களாக இருக்கிறார்கள்....



    ReplyDelete
  3. கதையின் விறுவிறுப்பு தாங்க முடியாமல் புத்தகம் வாங்கி படித்து விட்டேன்.மிக மிக அருமையான படைப்பு மறக்க முடியாத அனுபவம்.படித்து முடித்தாலும் ஒவ்வொரு வியாழன் அன்றும் படிப்பேன்.

    ReplyDelete
  4. ஹரிணிக்கு டெலிபதி கை கொடுக்குமா?
    அல்லது மர்ம‌மனிதன் அதையும் தடுத்து விடுவானா?

    ReplyDelete
  5. மர்ம மனிதன் ஹரீஷின் கவனத்தை திசை திருப்ப இப்படி இப்பொது தீவிரமாய் எண்ணத்தை குவித்து ஹரணியும் ஹரிஷும் ஒருவரை பற்றி ஒருவர் பரிமாறி கொள்வார்களா .......interesting.........

    ReplyDelete