சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 27, 2018

சத்ரபதி – 35



சுபா பகுதியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிவாஜி வெறும் 300 வீரர்களுடன் தான் சென்றிருந்தான். சென்றது இரவு நேரமானதாலும், அவனுக்கு விசுவாசமான வீரர்கள் சுபா பகுதிப் படையில் ஏற்கெனவே நிறைய பேர் இருந்ததாலும் அதற்கு மேல் படை பலம் அவனுக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. பாஜி மொஹிடேயை வெளியேற்றி விட்டு அங்கு ஒரு நாள் தங்கி சுபா பகுதி நிர்வாகத்தில் சில மாற்றங்களைச் செய்து பின் நிர்வாகத்தை நம்பிக்கைக்குரிய ஆளிடம் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

“இனி எங்கே சிவாஜி?” அவன் நண்பன் யேசாஜி கங்க் கேட்டான்.

“சாகன் கோட்டைக்கு” என்றான் சிவாஜி. சாகன் பகுதி நிர்வாகி ஃபிரங்கோஜி நர்சாலாவும் கணக்குகளையும், செலுத்த வேண்டிய தொகையையும் தர மறுத்திருந்தான். பாஜி மொஹிடே அளவுக்கு அவன் அகங்காரம் பேசவில்லை என்றாலும் ஷாஹாஜியைக் கேட்டு விட்டுத் தருவதாக நாசுக்காகத் தெரிவித்திருந்தான். அவனையும் சிவாஜி கவனிக்க வேண்டி இருந்தது.

“அங்கு 300 பேர் போதுமா?” யேசாஜி கங்க் சந்தேகத்துடன் கேட்டான். சாகன் கோட்டை சற்று வலிமையானது மட்டுமல்ல, ஃபிரங்கோஜி நர்சாலா மாவீரனும் கூட.. அதனால் பெரும்படை தேவைப்படும் என்பது யேசாஜியின் கணக்காக இருந்தது. அல்லது அங்கும் இரவு வேளையில் போய் ரகசியமாய் தாக்க வேண்டும் என்று நினைத்தான்.

“அங்கே போக என்னுடன் இருபத்தைந்து பேர் போதும். மீதமுள்ளவர்களை அழைத்துக் கொண்டு நீ நம் இடத்திற்குத் திரும்பு” என்றான் சிவாஜி.

யேசாஜி கங்கிற்குத் தன் நண்பன் சொன்னது திகைப்பை ஏற்படுத்தியது. இங்கே என்ன வித்தை வைத்திருக்கிறானோ என்று சந்தேகத்துடன் பார்த்த போது சிவாஜி சொன்னான். “பாஜி மொஹிடேயைப் படைத்த போது கடவுள் அவனுக்கு மூளையை வைக்க மறந்து விட்டார். அதனால் தான் நமக்கு முன்னூறு பேர் தேவைப்பட்டது. ஃபிரங்கோஜி நர்சாலா அறிவுள்ளவன். அறிவுள்ளவர்களிடம் நாம் அனாவசியமாய் பலம் பிரயோகிக்கத் தேவையில்லை. பேச்சு வார்த்தையே போதும்”


சிவாஜி வந்து சேர்வதற்கு முன்பே பாஜி மொஹிடேவை வெளியேற்றிய செய்தி ஃபிரங்கோஜி நர்சாலாவுக்கு வந்து சேர்ந்தது. சிவாஜி அடுத்ததாக இங்கே தான் வருவான் என்று ஃபிரங்கோஜி கணக்குப் போட்டான். ஆனால் எப்போது வருவான் எப்படி வருவான் என்ன திட்டம் போட்டிருக்கிறான் என்பதெல்லாம் சிவாஜியைப் பொருத்த வரை அவனுக்கு யூகிக்க முடியாத விஷயங்களாக இருந்தன. அதனால் அவசர அவசரமாக படைகளைக் கூட்டினான்.

அவனுக்குக் கிடைத்த தகவலின் படி சுமார் முன்னூறு வீரர்கள் தான் சுபா போயிருக்கிறார்கள். கண்டிப்பாக அந்த முன்னூறு வீரர்களோடு மட்டும் இங்கே சிவாஜி வர வாய்ப்பில்லை என்று தோன்றியது. பெரும் படையையே சிவாஜி இங்கு அழைத்து வரக்கூடும். என்ன செய்வது, எப்படிப் போரிடுவது என்றெல்லாம் அவன் அவசரமாக ஆலோசகர்களிடம் ஆலோசித்துக் கொண்டிருந்த போது காவலாளி சிவாஜி தொலைவில் வந்து கொண்டிருப்பதாகத் தகவல் சொன்னான்.

“எத்தனை பெரிய படை?” ஃபிரங்கோஜி நர்சாலா கேட்டான்.

“படையை அழைத்து வரவில்லை தலைவரே. சிவாஜியுடன் சுமார் இருபது இருபத்தைந்து குதிரை வீரர்களே வந்து கொண்டிருக்கிறார்கள்.” என்று காவலாளி சொன்ன போது ஃபிரங்கோஜி திகைத்தான். பின்னால் பெரும் படை வந்து கொண்டிருக்குமோ என்று எண்ணியபடி அவன் கோட்டையின் மேல்தளத்துக்கு விரைந்தான்.

காவலாளி சொன்னதில் தவறில்லை. இருபத்தைந்து பேர் தான் சிவாஜியுடன் இருக்கிறார்கள். அப்படியானால் அவன் போருக்கு வரவில்லை. ஃபிரங்கோஜி நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அவனது ஆலோசகர்களிடம் கேட்டான். “அப்படியானால் செலுத்த வேண்டிய தொகையைக் கேட்டுத்தான் அவன் வருகிறான். என்ன செய்வது?”

ஆலோசகர்களில் மூத்தவர் சொன்னார். “தலைவரே. அவன் இப்பகுதியின் மிகப்பெரிய சக்தியாக உருவாகி வருகிறான். பீஜாப்பூர் சுல்தான் உட்பட அவன் யாரையும் லட்சியம் செய்யாதவனாகவும், பயமில்லாதவனாகவும்  இருக்கிறான். படைபலத்தையும், பண பலத்தையும் பெருக்கிக் கொண்டே வருகிறான். வீரமானவன் மட்டுமல்ல, தந்திரமானவனும் கூட. அவனைப் பகைத்துக் கொண்டு நீங்கள் இங்கே நிம்மதியாக இருக்க முடியாது. அனுசரித்துப் போவதே நல்லதென எனக்குத் தோன்றுகிறது…..”

ஃபிரங்கோஜி நர்சாலா யோசித்தான். அவர் சொல்வது சரியாகவே தோன்றியது. அவர் சொல்வது போலவே அவன் வளர்ச்சி அபாரமானது. இந்த இளைய வயதிலேயே இத்தனை சாதித்தவன் இனியும் வளர்வான். அவன் தலைமையை ஏற்றால் அவனுடன் சேர்ந்து நாமும் வளரலாம்……. இந்த எண்ணம் தோன்றியவுடனேயே அவசர அவசரமாகத் திரட்டியிருந்த படையைக் கலைத்து தங்கள் பழைய நிலைகளுக்குப் போய் விட உத்தரவிட்டான். சாகன் கோட்டை இயல்பு நிலைக்குத் திரும்பியது. வாயிலுக்குச் சென்று சிவாஜியை ஃபிரங்கோஜி நர்சாலா வரவேற்றான். “வருக இளவலே!”

சிவாஜி மிக நெருங்கிய நண்பனிடம் வந்தது போல் அவனை அணைத்து அன்பு பாராட்டி, தன் வீரர்களை வெளியிலேயே நிறுத்து விட்டு, தான் மட்டும் உள்ளே போனான். சிறிது நேர உபசார வார்த்தைகளுக்குப் பின் ஃபிரங்கோஜி சொன்னான். “தாதாஜியின் மறைவு என்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது சிவாஜி. அந்த நேரத்தில் வர முடியாததற்கு வருந்துகிறேன். தவறாக நினைக்க வேண்டாம்….”

“பரவாயில்லை ஃபிரங்கோஜி. இறக்கும் முன் அவரிடம் வந்த கணக்குகளை எல்லாம் சரிபார்த்து விட்டு என்னிடம் அனைத்தையும் ஒப்படைத்த பின்னரே அவர் கண்மூடினார். அந்தக் கடமையுணர்வு அவரிடம் நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. அவரிடம் வராத இரண்டு கணக்குகள் பாஜி மொஹிடேயுடையதும், உங்களுடையதும் தான். அதை நான் சரிபார்த்து தெரிவித்தால் தான் அவருடைய ஆன்மா சாந்தியடையும். அதனால் தான் உடனே கிளம்பினேன். பாஜி மொஜிடேயின் கணக்கை நான் சரிபார்த்து விட்டேன்…..” சிவாஜி அமைதியாகச் சொல்லி நிறுத்தினான்.  

அவன் பார்வை ஃபிரங்கோஜி நர்சாலாவை ஊடுருவியது. தாதாஜி கொண்டதேவ் இருக்கையில் ஃபிரங்கோஜி சிவாஜியை நேரடியாகக் கையாளும் சந்தர்ப்பம் வந்ததில்லை. முதன் முதலில் அந்த சந்தர்ப்பம் வந்த இந்தக் கணத்தில் அவன் ஆளப்பிறந்த தலைவன் என்பதை ஃபிரங்கோஜி அருகிலேயே பார்த்து முடிவெடுக்க முடிந்தது. சிறிதும் அச்சமில்லாமல் தனியாக உள்ளே வந்த விதமும் சரி, தனியொருவனாக அமரிந்து கொண்டே பாஜி மொஹிடே கணக்கை முடித்து விட்டேன் என்று சொல்லி உன் கணக்கை என்ன செய்ய என்ற ரீதியில் அமைதியாகப் பார்த்ததும் சரி சாதாரணப்பட்ட ஒருவனுக்கு முடிந்ததல்ல….. ஃபிரங்கோஜி நர்சாலா ஒரு மாவீரன். அவன் வீரத்தைப் போற்றுபவன். நிறைய சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன். எதிரே அமர்ந்திருக்கும் இந்த இளைஞன் மாபெரும் சக்தியைத் தன்னுள் அடக்கியவனாய் தோன்றினான். இவன் பின் போனால் நிறைய முன்னேறலாம் என்று சற்று முன் எண்ணியது இப்போது மேலும் உறுதிப்பட்டது.

அவன் சொன்னான். “என்னை மன்னித்து விடு சிவாஜி. உன் வீரனிடம் நான் மறுத்தது நாளை உன் தந்தை என்னைக் குற்றப்படுத்திவிடக்கூடாது என்ற எண்ணத்தினால் தானேயொழிய வேறு காரணம் இல்லை….”

“எனக்குப் புரிந்தது நண்பரே. நீங்கள் தாதாஜி மறைவின் போது வந்திருந்தால் நாம் வெளிப்படையாகப் பேசியிருக்கலாம். தவறு என் மீதும் உள்ளது. நான் வீரனை அனுப்பி இதைக் கேட்டிருக்கக்கூடாது. நேராக முன்பே வந்து பேசியிருக்க வேண்டியது தான் முறை….. என் தந்தை பீஜாப்பூரில் இருந்தும் தெற்கே தொலைவில் போய் விட்டார். கர்னாடகத்தில் உள்ள பகுதிகளை அவர் கைவசம் வைத்திருப்பதால் இங்கே இனி அவர் வர வாய்ப்பில்லை. அதனால் இனி இங்கே ஆளப் போகிறவன் நான் தான்…. தாதாஜியும் ஆசி வழங்கியிருக்கிறார். உங்களைப் போன்ற நண்பர்களும் என்னுடன் இணைந்தால் நான் தனியொரு ராஜ்ஜியத்தை உருவாக்கி விட முடியும் என்று நம்புகிறேன்…..”

சிவாஜி அதைச் சொல்கையிலேயே உருவாக்கிக் காட்டுவேன் என்ற வகை உறுதி அவனிடம் தெரிந்தது. பாஜி மொஹிடேயை எதிரி பட்டியலில் சேர்த்தது போல தன்னையும் சிவாஜி எதிரிப் பட்டியலில் சேர்க்காமல் நண்பரே என்று அழைத்தது ஃபிரங்கோஜிக்கு இதமாக இருந்தது. இத்தனைக்கும் இரண்டு பேரும் ஒரே தவறைச் செய்தவர்கள்….. அப்படி இருக்கையில் இவன் எனக்குத் தவறைச் சரிசெய்து கொள்ள ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட ஃபிரங்கோஜி முழு மனதுடன் சொன்னான். ”உன்னோடு இணைந்து கொள்வதை நானும் பெருமையாகக் கருதுகிறேன் சிவாஜி. இரண்டு நாட்களில் கணக்குடனும், தொகையுடனும்  வருகிறேன்”

சிவாஜி எழுந்து நின்றான். “உங்கள் முடிவு நிச்சயமாய் உங்கள் பலத்தைப் பெருக்கும் நண்பரே. அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். எதிர்காலத்தில் நாம் சேர்ந்து செய்ய நிறைய வேலைகள் இருக்கின்றன. தயாராக இருங்கள்…..”

ஃபிரங்கோஜி நர்சாலா சிவாஜியின் வார்த்தைகளால் உற்சாகமடைந்தான். இவனிடம் ஏதோ மந்திரசக்தி இருக்கிறது என்று அவனுக்குத் தோன்றியது. இவனுடன் இருக்கையில் நம்பிக்கை தானாக உருவாகிறது. புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறான்…. இவனுடன் இணைந்து செயல்பட்டால் சாகன் கோட்டையோடு நின்று விடாமல் கண்டிப்பாக நம் பலத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும்……

சிவாஜி அவனிடமும் கனவுகளைப் பற்ற வைத்தான்…..

(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. சிவாஜியின் ஆளுமைத் திறனை வர்ணிக்க வார்த்தை வரவில்லை. தங்களின் எழுதும் திறமையையும் வர்ணிக்க வார்த்தை இல்லை

    ReplyDelete
  2. சிவாஜி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு யுக்தியை மேற்கொள்வது அருமையிலும் அருமை. பிறவித் தலைவன் என்பதை அது காட்டுகிறது.

    ReplyDelete
  3. Brilliant strategies by a great rising leader. History cam alive by your writing style sir.

    ReplyDelete
  4. சிவாஜியின் தந்திரமும் சரி.. வீரமும் சரி... மிகவும் அருமையாக உள்ளது...

    ReplyDelete