சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 25, 2017

இருவேறு உலகம் – 31


மாஸ்டரிடம் அழைத்துப் போக, கடைசியில் உதயைத் தான் மாணிக்கம் தேர்ந்தெடுத்தார். மணீஷ் க்ரிஷின் குடும்பத்திடம் மாஸ்டரை அறிமுகம் செய்து வைப்பதில் ஒரு அபாயத்தை உணர்ந்தான். மனதில் உள்ளதை அவர் படித்து அவர்கள் திட்டம் பற்றி அறிந்து கொண்டு விட்டிருப்பதால் அதை க்ரிஷ் குடும்பத்தாருக்கு அவர் தெரிவித்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவன் மனதில் பலமாக எழுந்தது. அவன் தன் தந்தையிடம் சொன்னான். “அந்த மாஸ்டருக்கு நம்ம மனசுல இருக்கறது எல்லாமே தெரியுது. அப்படி இருக்கறப்ப உதய்க்கு அந்த ஆளை அறிமுகம் செய்து வைக்கிறதுல பின்னாடி பிரச்னை வந்துடாதா?

மாணிக்கத்துக்குத் தன் மகனின் எச்சரிக்கை புரிந்தது. மகனிடம் அமைதியாகச் சொன்னார். “அப்படி ஒருத்தர் ரகசியத்தை இன்னொருத்தரிடம்  சொல்ற  ஆளாய் அவர் நமக்குத் தெரியல. க்ரிஷ் செத்திருந்தா நாம பயப்படக் காரணம் இருக்கு. அவன் உயிரோட இருக்கறான்னு ஆனபிறகு நாம என்ன திட்டம் போட்டோம்கிறதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? அப்படி ஒரு வேளை   அவர் சொன்னால் கூட மகானாய் அடையாளம் காட்டின நமக்கு அவரை வில்லனாய் மாத்திட எவ்வளவு நேரம் வேணும்

மருமகனின் சாமர்த்தியமான வார்த்தைகளைக் கேட்டு சங்கரமணி பெருமிதத்துடன் தலையசைத்தார். எதையும் எதுவாகவும் சித்தரிக்க முடிந்த அரசியல் சாணக்கியம் படித்த ஒருவருக்கு முடியாதது தான் என்ன?

மணீஷ் நிம்மதி அடைந்தான். மாணிக்கம் உதயிடம் போனில் பேசினார்.  “உதய் நம்ம நண்பர் காண்ட்ராக்டர் நடராஜ் மூலமா ஒரு மகான் பத்திக் கேள்விப்பட்டு அவரை நாங்க நேர்லயே போய் பார்த்தோம்.... பேர் தெரியலை.... மாஸ்டர்னு கூப்டறாங்க.... மனசுல இருக்கறதை எல்லாம் சொல்லிடறார், ஞான திருஷ்டில எல்லாத்தையும் பார்த்துசொல்றார்னு சொல்றாங்க. டெஸ்ட் பண்ண மணீஷோட தாத்தா மனசுல நீர்மூழ்கிக் கப்பலை நினைச்சு அதையும் அவர் சில வினாடில சொல்லிட்டார்னா பார்த்துக்கோயேன். அவர் கிட்ட க்ரிஷ் பத்திக் கேட்டோம். உயிரோட இருக்கறதா அவரும் சொல்றார். ஆனா அதிகமாய் இன்னும் தெளிவாய் சொல்லணும்னா க்ரிஷோட ரூம்ல இருந்து முயற்சி பண்ணாத் தான் முடியும்னு சொல்றார்....

பெரும் குழப்பத்தில் அது வரை இருந்த உதய்க்கு இத்தகவல் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவன் உற்சாகத்துடன் சொன்னான். “அவரைத் தாராளமாய் கூட்டிகிட்டு வாங்க  அங்கிள்......

“இதுல பிரச்னை என்னான்னா அவர் தட்சிணை வாங்கற ரகமோ, வேற எதாவது எதிர்பார்க்கிற ரகமோ அல்ல. யார் வீட்டுக்கும் போகிறதும் அபூர்வம்னு அவரோட அசிஸ்டெண்ட் சொல்றார். அப்படி இருக்கறப்ப உங்க வீட்டுக்கு நாங்க அவரைக் கூப்டறதை அவர் எப்படி எடுத்துக்குவார்ங்கறது தெரியல. உங்க வீட்டுல இருந்து யாராவது போய்க் கூப்பிட்டால் வந்தாலும் வருவார்ங்கற மாதிரி அவரோட அசிஸ்டெண்ட் சொன்னார்....

நான் இப்பவே போகட்டுமா அங்கிள்.... அட்ரஸ் சொல்லுங்க....

“அவர் கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்கிட்டு சொல்றேன் உதய். நானும் மணீஷுமே வந்து உன்னை அவர் கிட்ட கூட்டிகிட்டு போறோம்....

ஓகே அங்கிள். ரொம்ப தேங்க்ஸ்...உதய் ஆத்மார்த்தமாய் சொன்னான்.

பேசி முடித்த மருமகனிடம் சங்கரமணி கேட்டார். “என்ன சொல்றான்?

இப்பவே கிளம்பத் தயாராயிட்டான்....என்றார் மாணிக்கம்.

மணீஷுக்கு இந்த விஷயத்திலும் க்ரிஷ் மீது பொறாமையாக இருந்தது. எப்படிப்பட்ட அண்ணன்! எல்லா விஷயங்களிலும் எப்படி ஒருவனால் அதிர்ஷ்டசாலியாக இருக்க முடிகிறது!...


ரித்துவாரிலிருந்து மாஸ்டர் திரும்பி வருவதற்குள் சுரேஷுக்கு மூன்று முறை நடராஜன் போன் செய்து விட்டார்.

சுரேஷ், மாஸ்டர் வந்தாச்சா? எப்ப வர்றாருன்னு தெரியலையா, சரி நாளைக்குப் போன் செய்யறேன்”. 

சுரேஷ், க்ரிஷோட அண்ணனே வந்து கூப்பிடறேன்னு சொல்லிட்டான். நீயும் மாஸ்டருக்குக் கொஞ்சம் சொல்லுப்பா! மாஸ்டர் எப்ப வர்றார்? நாளைக்கா? சரி நாளைக்கு காலைல போன் பண்றேன்

சுரேஷ், மாஸ்டர் வந்தாச்சுல்லியா. நாங்க எப்ப வரட்டும்?


மாஸ்டரிடம் பேசி விட்டு சுரேஷ் “சாயங்காலம் ஏழு மணிக்கு வாங்க சார்என்று சொன்னான்.


மாலை 6.55க்கு மாணிக்கம், மணீஷ், உதய், நடராஜன் நால்வரும் மாஸ்டரைச் சந்திக்க வந்திருந்தார்கள். உதய் குடும்பத்தாருக்கு சங்கரமணியைச் சகித்துக் கொள்ளும் வழக்கம் இல்லாததால் சங்கரமணி அவர்களுடன் வரவில்லை. ஆனால் அவர் மனமெல்லாம் அவர்களுடன் தான் இருந்தது.

அவர்கள் வந்த போது மாஸ்டர் வரவேற்பறையில் சும்மா தான் அமர்ந்திருந்தார். நால்வரும் வணங்கி நின்ற போது கையுயர்த்தி ஆசி வழங்கிய அவர் கண்கள் மட்டும் உதயை ஊடுருவிப் பார்த்தன. மணீஷ் உணர்ந்தது போலவே உதயும் தன் ரகசியங்கள் அனைத்தும் அவரால் அறியப்படுவதாக உணர்ந்தான். ஞானதிருஷ்டி என்றெல்லாம் மாணிக்கம் சொல்லியிருந்தாலும் குறி சொல்வது, ஆருடம் சொல்வது வகையிலேயே இருக்கும் என்று நினைத்திருந்தானே ஒழிய அவன் இப்படியொரு சக்திப் பிரயோகத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் மணீஷைப் போல பெரும்பயமோ, ஓடிப் போகும் எண்ணமோ அவனை ஆட்கொள்ளவில்லை. பிரமிப்பிலும் அந்த மனிதரின் வசீகரிப்பிலும் அவன் மெய்மறந்து நின்றான்.

நடராஜன் பயபக்தியுடன் உதயை மாஸ்டருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். “சுவாமி இவர் தான் காணாமல் போன க்ரிஷோட அண்ணா. பேர் உதய்.

கோபக்காரன் ஆனாலும் நல்லவன், பாசமானவன் என்று அவனை அறிய முடிந்திருந்த மாஸ்டர் காந்தப் புன்னகை பூத்தார். உதய் அப்போதும் பேச்சிழந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“தம்பி பத்தின கூடுதல் விவரம் தெரிஞ்சா பரவாயில்லைன்னு உதய் நினைக்கிறான்....என்று சொன்ன மாணிக்கம் உதயை ‘தொடர்ந்து நீ ஏதாவது சொல் என்கிற மாதிரி பார்த்தார்.

தன் இயல்பு நிலைக்குத் திரும்பிய உதய் மாஸ்டரிடம் கவலையுடன் சொன்னான். “அவன் உயிரோட தான் இருக்கான்னு நீங்க சொன்னதா அங்கிள் சொன்னார். அவனும் எங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கான். ஆனா அவன் மொபைல்ல இருந்து எனக்கு வந்த அந்த மெசேஜ் தென்னமெரிக்கால இருந்து வந்திருக்கு. அவனா தென்னமெரிக்கா போயிருக்க வாய்ப்பே இல்லை....  அவன் பாஸ்போர்ட் எல்லாம் வீட்ல தான் இருக்கு.... அதனால ஒரே குழப்பமாய் இருக்கு.... அம்மா அப்பாவுக்கு தென்னமெரிக்கால இருந்து மெசேஜ் வந்திருக்குன்னு தெரியல. அதனால பையன் வந்துடுவான்னு நிம்மதியா இருக்காங்க. ஆனா எனக்கென்னவோ பயமாவும், கவலையாவும் இருக்கு

மற்றவர்களிடமாக இருந்தால் உதய் தன் பயத்தையும், கவலையையும் ஒப்புக் கொண்டிருக்க மாட்டான். ஆனால் தன் மனதை முழுவதுமாகப் பார்க்க முடிந்த ஒரு மனிதரிடம் வெளிப்படையாகத் தெரிவிப்பது தான் முறை என்று அவனுக்குத் தோன்றியது.

இஸ்ரோ போன்ற விஞ்ஞான அமைப்பும், தங்கள் இயக்கம் போன்ற மெய்ஞான அமைப்புமே இந்த விஷயத்தில் குழம்பிப் போயிருக்கையில் இந்த இளைஞனின் பயமும், கவலையும் அசாதாரணமானதல்ல என்று எண்ணிய போதிலும் அதைச் சொல்லாமல் மாஸ்டர் ‘புரிகிறதுஎன்பது போல் மெள்ள தலையசைத்தார்.

உதய் பணிவாக அவரை வேண்டினான். “நீங்க க்ரிஷ் ரூம்ல இருந்து தியானம் செஞ்சா அவன் எங்கே இருக்கான்கிற கூடுதல் விவரம் எல்லாம் தெரிஞ்சுக்க முடியும்னு சொன்னதா அங்கிள் சொன்னார். நீங்க ஒருதடவ எங்க வீட்டுக்கு வந்து அப்படி கண்டுபிடிச்சு சொன்னா எங்களுக்கு பெரிய உதவியாய் இருக்கும்....

மாஸ்டர் அவனையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்து விட்டுச் சொன்னார். “நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கு வர்றேன்...

பந்தா இல்லாமல் உடனடியாக அவர் ஒப்புக் கொண்டது உதய்க்கு ஆச்சரியத்தையும், ஆறுதலையும் தந்தது. அதே மனநிலையில் மற்றவர்களும் இருந்தார்கள். மாணிக்கம் மனதில் நினைத்துக் கொண்டார். “இவரோட அசிஸ்டெண்ட் காட்டற பந்தா கூட இவர் காட்டலை....

“ரொம்ப நன்றி சுவாமிஎன்று உதய் கைகூப்பியபடி சொன்னான். மாணிக்கம், மணீஷ், நடராஜன் மூவருமே கூட நன்றி பாவனையில் கைகூப்பினார்கள்.

கை உயர்த்தி ஆசி வழங்கி விட்டு மாஸ்டர் எழுந்து தனதறைக்குக் கிளம்பினார். அவர்களும் விடைபெற்றுக் கிளம்பினார்கள். சில அடிகள் போன பிறகு மாஸ்டர் திரும்பி புன்னகையுடன் சொன்னார். “போறப்பவாவது முன்னாடி போற கார்க்காரனைக் கெட்ட வார்த்தைல திட்டாதே. தம்பிக்குத் தெரிஞ்சா திட்டுவான்

நான்கு பேரும் திகைப்புடன் அவரைப் பார்த்தார்கள். வரும் போது முன்னால் போன காரோட்டி தாறுமாறாய் கார் ஓட்டியதைப் பார்த்து ஆத்திரமடைந்து உதய் அந்தக் காரைக் கடக்கையில் அவனைப் பார்த்துக் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு வந்திருந்தான்....

மாஸ்டர் புன்னகையுடனேயே தன்னறைக்குப் போய்விட்டார். திகைப்பு தீராமல் நால்வரும் வெளியே வந்தார்கள்.


ங்கர நம்பூதிரி தன் வீட்டு முன்னால் நின்ற விலையுயர்ந்த காரைப் பார்த்து பரபரப்படைந்தார். ஜாதகம் பார்க்க வந்திருக்கிறார்களா, இல்லை எதாவது விலாசம் விசாரிக்க வந்திருக்கிறார்களா? சென்ற வாரம் இப்படித்தான் ஒருத்தி ஸ்கூட்டியில் வந்து விலாசம் காட்டி எங்கே இருக்கிறது என்று கேட்டாள்....

கோட்டும் சூட்டுமாய் இறங்கிய மனோகர் வீட்டுக்கு வெளியே நின்று “சங்கர நம்பூதிரி, ஜோதிடர்என்று எழுதியிருந்ததைப் பார்த்து திருப்தி அடைந்து உள்ளே வந்தான். சங்கர நம்பூதிரிக்கு, இது போல் மாதம் பத்து பேர் வந்தால் போதும்,  பிழைப்பு நன்றாய் போகும் என்று தோன்றியது.

“நமஸ்காரம் என்று மனோகர் கைகூப்பினான்.

சங்கர நம்பூதிரியும் எழுந்து நின்று “நமஸ்காரம்என்று கைகூப்பினார்.

“ரெண்டு ஜாதகம் பார்க்கணும்....என்று இரண்டு கம்ப்யூட்டர் ஜாதகங்களை கையிலிருந்த தங்க நிற உறையிலிருந்து மனோகர் எடுத்தான்.

“உட்காருங்கோ”  என்ற சங்கர நம்பூதிரி அவனிடமிருந்து ஜாதகங்களை வாங்கினார்.

அவன் மெல்ல தயக்கத்துடன் சொன்னான்.  ஆனா இந்த ஜாதகங்களை உங்கப்பா சதாசிவ நம்பூதிரி தான் பார்க்கணும்னு என் முதலாளி உத்தரவு

சங்கர நம்பூதிரி ஓங்கி அறையப்பட்டது போல் உணர்ந்தார். தொழிலுக்கு வந்ததில் இருந்தே அனுபவித்து வந்த அவமானம் சரியாக எட்டு வருடங்களுக்கு முன் முடிந்து விட்டது என்று நினைத்திருந்தார். ஆனால் இன்னும் முடியவில்லை போலிருக்கிறது.

“அப்பா ஜாதகம் பார்க்கறதை எட்டு வருஷத்துக்கு முன்னாடியே நிறுத்திட்டார்என்று சொன்னவர் அந்த ஜாதகங்களை திரும்ப நீட்டினார்.

                                                                                                                                                                    
(தொடரும்)


என்.கணேசன்

5 comments:

 1. சுஜாதாMay 25, 2017 at 6:20 PM

  ஆறு மணிக்கு தான் அப்டேட்டுன்னு தெரிந்தாலும் நாலு மணிக்கு மேலயே வேலை ஓடமாட்டேங்குது கணேசன் சார். அவ்வளவு விறுவிறுப்பாகப் போகுது.

  ReplyDelete
 2. Super update and our expectation is roaring.

  ReplyDelete
 3. மாஸ்டர் கதாபாத்திரம் அட்டகாசம்....அடுத்த வாரம் க்ரிஷ் வீட்டுக்கு சென்று..எப்படி கண்டுபிடிப்பார்?...என்பதை அறிய காத்துக்கொண்டிருக்கிறேன்..

  ReplyDelete
 4. Blogs are competing for awards.
  A total of $ 30,000 cash prize-winning inter-blog competition has started. So join you now. We will be honored to welcome you to this beautiful activity, which will be awarded to many bloggers. You are invited to the blog writers competition for May-June 2017. You have absolutely visited to get detailed information and to apply.

  Web : http://www.bloggercontest.com/
  Mail : contact@bloggercontest.com
  Pbx : +441012950166

  ReplyDelete
 5. Waiting to read next portion soon. After so many years I am readin very interesting thriller story now . I am 68 yrs old

  ReplyDelete