சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 18, 2017

இருவேறு உலகம் – 30நாகர்கோவிலில் இருந்து க்ரிஷின் பிறந்த தேதி மற்றும் நேரத்தை மனோகர் சொன்னதைக் கேட்ட பின் புதுடெல்லி உயரதிகாரியைச் சந்தித்த மர்ம மனிதன் வேறெந்த வேலையையும் பார்க்கவில்லை. கம்ப்யூட்டரில் உடனடியாகக் க்ரிஷின் ஜாதகம் கணித்து அதில் மூழ்கிப் போனவன் நேரம், காலம் மறந்து போனான். பல கணக்குகள் போட்டு கிரகங்களின் இருப்பு நிலை, சேர்க்கை நிலை, டிகிரிகள், பார்வைகள், நவாம்சம், பாவ நிலை என்று எல்லாவற்றையும் துல்லியமாகக் கணக்கிட்டு பலன்களை அறிந்து கொள்ளும் வரை அவன் ஓய்வு எடுக்கவில்லை.

அவனுடைய சக்திகள் எல்லையற்றவை என்றாலும் எதிர்காலம் என்பது அவனுக்கே கூட எட்டிய விஷயமல்ல. ஜோதிட சாஸ்திரத்தில் பெரும் வல்லமை கொண்ட அவன் எதிர்காலம் குறித்து அறிய அதன் உதவியை நாடினான். க்ரிஷின் விதியோடு அவன் விதியும் பிணைந்துள்ளதால் க்ரிஷின் விதி பற்றி அறிவதில் ஆர்வம் காட்டிய அவன் அறிய முடிந்த அனைத்தையும் அறிந்த பின்னும் முழுத்திருப்தியடையவில்லை.  

நீண்ட நேரம் யோசித்த பின் அந்த மர்ம மனிதன் மனோகருக்குப் போன் செய்து கேட்டான். “ஜோதிடத்தை மேலோட்டமாக அல்லாமல் ஆழமாய் தெரிந்திருக்கும் ஜோதிடர் யாராவது உனக்குத் தெரியுமா?

இதை வேறு யாராவது கேட்டிருந்தால் மனோகர் அந்த மர்ம மனிதன் பெயரையே சுலபமாகச் சொல்லி இருப்பான். ஏனென்றால் அந்த மர்ம மனிதனே மிகச்சிறந்த ஜோதிடன் என்பதை மனோகர் அறிவான். இந்த நேரத்தில் அந்த மர்ம மனிதன் தனக்கு இணையான அல்லது தன்னை மிஞ்சிய இன்னொரு ஜோதிடரைக் கேட்கிறான் என்பது புரிந்து சிறிது யோசித்து விட்டு மனோகர் சொன்னான்.

திருவனந்தபுரத்தில் சதாசிவ நம்பூதிரின்னு ஒருத்தர் இருக்கார். எண்பது வயசிருக்கும். அவர் ஜோதிடத்தில் மட்டுமல்ல, ஆருடத்திலும், பிரஸ்ணத்திலும் கூட டாப். ஆனா அவர் இப்ப பார்க்கறதில்லை


“ஏன்?

“அவர் மகன் சங்கர நம்பூதிரியும் ஜோதிடர். அவரை யாரும் பெருசா கண்டுக்கறதில்லை. எல்லாரும் அப்பா கிட்ட தான் போறாங்கன்னு மனக்குறை அவருக்கு உண்டு. ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால் ஊரை விட்டே போகக்கூட அவர் முடிவு செய்துட்டார். அது தெரிஞ்ச சதாசிவ நம்பூதிரி தொழில்ல இருந்து விலகிட்டார். இந்த ஏழெட்டு வருஷமா ஜாதகமோ, ஆருடமோ பார்க்கறதில்லை.


அந்தச் செய்தி அவனைச் சிறிதும் பாதிக்கவில்லை. அடுத்தவர் தீர்மானங்களை அவன் பொருட்படுத்துவதில்லை. தன் தீர்மானத்தை அவன் சொன்னான். “சதாசிவ நம்பூதிரி கிட்ட ரெண்டு ஜாதகம் காண்பிக்கணும். அவரோட கருத்தையும் கேட்கணும்.....


காண்பிக்க நினைத்த இரண்டு ஜாதகங்களில் ஒன்று க்ரிஷின் ஜாதகம் என்பதை மனோகர் யூகித்தான். ஆனால் இன்னொன்று யாருடையது என்ற சந்தேகம் அவன் மனதில் எழுந்தது.ந்த லூசு மாஸ்டர் ரிஷிகேசத்திலிருந்து வந்துட்டாரா இல்லையா என்று நடராஜன் உள்ளே நுழைந்தவுடனேயே சங்கரமணி கேட்டார்.

நடராஜன் உடனே ஒரு பதிலும் சொல்லாமல் மாணிக்கத்தையும், மணீஷையும் இந்த ஆளை எல்லாம் நீங்கள் எப்படித் தான் சமாளிக்கிறீர்களோ என்பது போல் ஒரு பார்வை பார்த்தபடி உட்கார்ந்தார். பின் சங்கரமணியிடம் சொன்னார். பெரிய ஐயா, அந்த மகானுக்கு நீங்க சொல்றதெல்லாம் ஞான திருஷ்டியில தெரியும். எதுக்கும் ஜாக்கிரதையாய் இருந்துக்குங்க, சொல்லிட்டேன்”.

சங்கரமணிக்கு கொஞ்சம் பயம் கலந்த ஆர்வம் வந்து போனது. தெரிந்தால் என்ன தான் செய்வார் அவர்?’. பின் எழுந்த சந்தேகத்தை மெல்லக் கேட்டார். தூரத்துல இருந்தாலும் அவருக்குத் தெரியுமா என்ன?

நீங்க எருக்கம்பூவையும் நாகலிங்கப்பூவையும் நினைச்சு அதை ஒரு ஜோசியக்காரன் சொல்லாமப் போனதை  அவர் பக்கத்துல இருந்து பார்த்தா சொன்னார்?

முதல்லயே நேரம் சரியில்லை. இனி அந்த ஆளையும் பகைச்சுட்டு நிலைமைய மோசமாக்க வேண்டாம் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட சங்கரமணி நடராஜனிடம் சொன்னார். சரி உன்னோட மகானைப் பத்தி நான் ஒன்னும் சொல்லலை. அவர் ரிஷிகேசத்துல இருந்து வந்துட்டாரா?

அவர் நாளைக்குத் தான் வர்றாராம். க்ரிஷ் விஷயத்துல அதிகமா தெரிஞ்சுக்க அவன் வீட்டுக்குப் போனால் தான் முடியும்னு சொன்னாரே அங்கே கூப்பிட்டா அவர் வருவாரான்னு அவரோட அசிஸ்டெண்ட் கிட்ட கேட்டேன். அவர் வெளியிடங்களுக்கு அப்படி போக மாட்டாரேன்னு சொல்றான்...

அந்த தாடிக்காரனை தனியா கவனிச்சுகிட்டா அவன் ஏற்பாடு செய்ய மாட்டானா? சங்கரமணி தன் வழியில் சிந்தித்துக் கேட்டார்.

அவனும் அப்படிப்பட்ட ஆசாமியா தெரியல. ஆனா வற்புறுத்திக் கேட்ட பிறகு எதுக்கும் நீங்க க்ரிஷ் வீட்டு ஆள் யாரையாவது கூட்டிகிட்டு வந்து கேட்டுப் பாருங்கன்னு சொல்றான்....

சங்கரமணி மருமகனைப் பார்த்தார். மாணிக்கம்  யோசித்து விட்டு மெல்லச் சொன்னார். கண்ணனையோ உதயையோ கூட்டிகிட்டு போய் கேட்கலாம்....

அப்பவாவது ஆள் வருவாரா? வந்தாலும் முழுசுமா தெரிஞ்சு சொல்ற வரைக்குமாவது இருப்பாரா? சங்கரமணி சந்தேகத்தை எழுப்பினார்.

நடராஜன் சொன்னார். அது நம்ம அதிர்ஷ்டத்தைப் பொருத்ததுமாஸ்டர் ஹரித்வாரை அடைந்த போது  இரவாகி விட்டிருந்தது. குளிர் கடுமையாக இருந்ததால் வீதிகளில் ஆட்கள் நடமாட்டம் அதிகமில்லை.  அவர் ஜீப் ஹரித்வாரின் மிகப் பழமையான வீடு ஒன்றின் முன் நின்றது. ஜீப் நின்ற சத்தம் கேட்டு வீட்டிலிருந்து ஒரு திடகாத்திரமான மனிதர் வெளியே வந்தார். பார்க்க சுமார் முப்பது வயது போல் தோன்றினாலும் உண்மையில் நாற்பத்தைந்து வயதைக் கடந்த அந்த மனிதர் ஒரு ஹத யோகி. அவர்கள் இயக்கத்தில் மாஸ்டருக்கு அடுத்த அதிகார நிலையில் இருப்பவர். பெயர் விஸ்வம். அவர் கணக்கில் புலி. பல இலக்க எண்களைத் துல்லியமாக மனதிலேயே பெருக்கவும், கூட்டவும், கழிக்கவும், வகுக்கவும் முடிந்தவர். இயக்கத்தின் நிதி அவர் பொறுப்பில் இருந்தது. எப்போது கணக்கு கேட்டாலும் அவர் கம்ப்யூட்டரையோ, லெட்ஜர்களையோ புரட்டிப் பார்த்து பதில் சொன்னதாக மாஸ்டருக்கு நினைவில்லை. சில வினாடிகள் யோசித்து விட்டுப் பதில் சொல்வார். மாஸ்டரும் குருவும் தான் அந்த ஆவணங்களைப் பார்த்து கணக்கைச் சரிபார்ப்பார்கள். அவர் சொன்னதற்கும், ஆவணங்களில் இருப்பதற்கும் ஒரு தடவையும் ஒரு பைசா கூட வித்தியாசம் இருந்ததில்லை.   

இத்தனை திறமை இருக்கிற மனிதர் முயன்றால் ஆழ்மன சக்திகளிலும் அற்புதங்கள் புரிய முடியும் என்பது மாஸ்டரின் அபிப்பிராயமாக இருந்தது. ஆனால் உடலையும், கணிதத்திறமையையும் வளர்த்திக் கொண்ட அளவுக்கு அந்தச் சக்திகளை வளர்த்துக் கொள்ள விஸ்வம் ஆர்வம் காட்டியதில்லை.   

மாஸ்டரைப் பார்த்ததும் விஸ்வம் வியப்பில் ஆழ்ந்தது தெரிந்தது. என்ன மாஸ்டர் திடீர் விஜயம்....?

வெளியே புன்னகையை மட்டும் பதிலாகத் தந்த மாஸ்டர் உள்ளே போன பிறகு சொன்னார். நம் குரு இறைவனடி சேர்ந்து விட்டார்.

தன் காதில் விழுந்த செய்தியை விஸ்வம் நம்பாதது போல் விஸ்வம் மாஸ்டரைப் பார்த்தார். பின் திகைப்புடன் சொன்னார். நான் போன வாரம் தானே அவரைப் பார்த்தேன். அப்போது அவர் நல்லா தானே இருந்தார்.

மனித வாழ்க்கையில் போன வாரம்கிறது மிக நீண்ட காலம். போன வினாடி கூட பழைய கதை தான்.... என்று வறண்ட குரலில் மாஸ்டர் சொன்னார்.

வீட்டின் உள்ளே நாற்காலிகள் எதுவும் இருக்கவில்லை. மரப்பலகைகளே இருந்தன. சுவரோரம் சாய்த்து வைத்திருந்த  மரப்பலகைகளில் இரண்டை எடுத்துப் போட்டு மாஸ்டர் ஒரு பலகையில் அமர்ந்த பிறகு தானும் ஒரு பலகையில் அமர்ந்தபடி விஸ்வம் பதற்றத்துடன் கேட்டார்.  ”என்ன ஆச்சு?

மாஸ்டர் சொன்னார். சிறிது நேரம் பேச வார்த்தைகள் வராமல் விஸ்வம் தவிப்பது தெரிந்தது. பின் மெல்ல வருத்தம் கலந்த குரலில் சொன்னார். சென்னைல இருந்து தெரிஞ்சுட்டு நீங்க வந்து அவரோட அந்திமக் கிரியை எல்லாம் முடிச்சிட்டு வந்திருக்கீங்க. முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் நானிருக்கேன். எனக்குத் தெரியவே இல்லை....

மாஸ்டர் பார்வையாலேயே விஸ்வத்திற்கு ஆறுதல் சொன்னார். விஸ்வம் மாஸ்டரிடம் கேட்டார். இதையெல்லாம் செய்தது யாருன்னு உங்க சக்தியால கண்டுபிடிக்க முடியலையா மாஸ்டர்?

எதிர் சக்தி பல மடங்கு அதிகமாய் இருக்கு விஸ்வம். அலைத் தடயங்களை அழிப்பதெல்லாம் சக்தியின் உச்சநிலை..... அந்த அளவு சக்தியை நாம் இன்னும் எட்டவில்லை...

உங்களால் முடியாதது எதுவுமில்லை என்று குரு சொல்வார்

மாஸ்டர் ஒன்றும் சொல்லவில்லை. குருவைப் பொருத்தவரை அவருடைய பிரிய சிஷ்யனால் முடியாதது எதுவுமில்லை..... அதை எல்லோரிடமும் எப்போதும் சொல்வார். அந்தப் பிரிய சிஷ்யனோ கையாலாகதவராய் இப்போது அமர்ந்திருக்கிறார். குருவின் சிதை அக்னி இப்போது அவரைச் சுட்டது.

இப்போதைய சந்தேகம் இஸ்ரோ மூலமாய் நமக்குத் தெரிய வந்த சக்தி மேல் தானா மாஸ்டர்...? விஸ்வம் கேட்டார்.

மாஸ்டர் தலையசைத்தார். ஆனா நிரூபணம் ஆகிற வரை உறுதியாய் சொல்லிட முடியாது.

குரு மாதிரி க்ரிஷும் இறந்துட்டானா மாஸ்டர்?

சாகலை

விஸ்வம் மாஸ்டரைப் பார்த்த பார்வையில் குழப்பம் தெரிந்தது. அவன் இப்ப எங்கே இருக்கான் மாஸ்டர்?

தென்னமெரிக்கா பக்கத்துல எங்கேயோ இருக்கான். அவனை இருட்டு சூழ்ந்துட்டிருக்கு. தெளிவாய் தெரியலை. ஆனா ஆபத்தான கட்டத்துல தான் இருக்கறதா தெரியுது....   

என்ன ஆகும் மாஸ்டர்?

இப்போதைக்கு அவன் சாக மாட்டான்னு தோணுது

எப்படிச் சொல்றீங்க மாஸ்டர்?

மாஸ்டர்  பழைய நினைவுகளில் ஆழ்ந்தவராகச் சொன்னார். போன வருஷம் ஜீவ சமாதியடைஞ்ச நம் பரஞ்சோதி முனிவர் சமாதியடையறதுக்கு முன்னால் தவநிலையில் உணர்ந்து நம்மை அப்போதே எச்சரித்திருந்தார். அன்னிய சக்தி நம் பூமியை ஆட்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. அது தன் திட்டத்திற்குத் தூய்மையிலும் தூய்மையான, அறிவிலும் உச்சமான ஒருவனைத் தன் கைப்பாவையாகப் பயன்படுத்தப் போகிறது. அவர் சொன்ன படியே நாம் அந்த அன்னிய சக்தியை உணர ஆரம்பித்திருக்கிறோம். க்ரிஷும் அவர் சொன்ன அடையாளத்திற்கு ஒத்துப் போகிறான்....

இனி நம்ம அடுத்த நடவடிக்கை என்ன மாஸ்டர்?

மாஸ்டர் ஒரே வார்த்தையில் சொன்னார். ஆபரேஷன் க்ரிஷ்!

(தொடரும்)
என்.கணேசன்11 comments:

 1. 30வாரங்கள் இன்னமும் க்ரிஷ் கதையில் நேரடியாக இல்லை ஆனாலும் இத்தனை விறுவிறுப்பு எப்படி sir ..? Alarm வைத்து காத்திருக்க வைத்து கொண்டிருக்கிறீர்கள்

  ReplyDelete
  Replies
  1. சுஜாதாMay 18, 2017 at 6:21 PM

   நானும் இதை தான் நினைத்துக் கொண்டிருந்தேன். க்ரிஷ் வராமலேயே இவ்வளவு எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார் கணேசன் சார். வியாழன் சாயங்காலம் ஆனால் இதை படிக்காமல் வேறு வேலை ஓட மாட்டேன்கிறது.

   Delete
 2. Fantastic and thrilling.

  ReplyDelete
 3. அருமை.... என்ன ஒரு திருப்பம்.... நல்லவன் என்னு நினைத்த கிரிஷ்... கெட்டவனா கலமிரக்க போரிங்க... மாஷ்டர் கெட்டவனா ஆரமிச்சு... நல்லவராக்கிட்டிங்க.... கலக்கல்.... ��

  ReplyDelete
 4. Interesting episode!

  ReplyDelete
 5. Sir,
  Please release this novel weekly twice. Not able to keep the suspense. It is very much attractive than parama raghasiyam and Buddham Saranam ghasamee.

  ReplyDelete
 6. suspence_a konja..konjama solli...melum suspencea increase pantringa.. nice sir

  ReplyDelete
 7. CAN I GET YOUR ALL BOOKS AT MALAYSIA. PLS ANSWER ME. TQ

  ReplyDelete
  Replies
  1. Please contact publisher at 9600123146 or blackholemedia@gmail.com

   Delete