சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 11, 2017

இருவேறு உலகம் – 29

மூன்று மணி நேரத்தில் சகாயமேரி மனோகர் கேட்ட தகவல் ரெஜிஸ்டரை தூசி தட்டி எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் காட்டினாள். “நீங்க சொன்ன குழந்தை இங்கே தான் பிறந்திருக்கு. அம்மா பேர், அப்பா பேரும் கரெக்டா இருக்கு. ஆனா பிறந்த நேரம் இல்லையே. 1999க்கு மேல தான் இந்த ஆஸ்பத்திரில நேரத்தையும் எழுத ஆரம்பிச்சிருக்கோம். அதுக்கு முன்னாடி இப்படித்தான்.....

அவன் அந்த ரெஜிஸ்டர் பக்கத்தைத் தன் மொபைலில் படம் எடுத்துக் கொண்டான். நேரம் கிடைக்கா விட்டாலும் நல்ல வேளையாக ஐந்தாவது ஆஸ்பத்திரி போக வேண்டியிருக்கவில்லை.

“தேங்க்ஸ்.என்றவன் தயக்கத்துடன் கேட்டான். “இங்கே இருந்து ஒரு போன் செஞ்சுக்கலாமா. மொபைல்ல சார்ஜ் இல்லை.

“தாராளமா என்ற சகாயமேரி ஆஸ்பத்திரி டெலிபோனை அவன் பக்கம் நகர்த்தினாள். அவன் மேலும் தயக்கம் காண்பிக்க அவள் நீங்க பேசுங்க” என்று விலகிப் போய் தூர நின்றிருந்த இன்னொரு நர்சிடம் பேச ஆரம்பித்தாள்.

அவன் பத்மாவதிக்குப் போன் செய்தான். “ஹலோ. பத்மாவதி மேடமா?

“ஆமா யார் பேசறது

“நாகர்கோவில் வேளாங்கன்னி ஆஸ்பத்திரில இருந்து பேசறோம் மேடம்...

தன் பிறந்த ஊரில் இருந்து, அதுவும் தன் குழந்தைகள் பிறந்த ஆஸ்பத்திரியில் இருந்து போன்கால் வந்தது அவளை ஆச்சரியப்படுத்தியது. “சொல்லுங்க

“நாங்க எங்க ஆஸ்பத்திரி ரெகார்ட்ஸ அப்டேட் பண்ணிட்டு இருக்கோம். உங்க குழந்தை பிறந்த நாள்ல தேதி மட்டும் தான் பதிவாயிருக்கு. டைம் நோட் பண்ணாம விட்டிருக்காங்க. சொன்னீங்கன்னா நோட் பண்ணிக்குவோம்...

அதிகமாய் சந்தேகமே படத்தெரியாத பத்மாவதி “என் ரெண்டு குழந்தைகள் பிறந்த டைமையையும் சொல்றேன் எழுதிக்கோங்க.  பெரியவன் உதய் பிறந்தது சாயங்காலம் 6.30 மணி. சின்னவன் க்ரிஷ் பிறந்தது  காலைல 7.20என்று சொன்னாள்.

கூடவே பெரியவன் இப்போது எம்.பி ஆகியிருப்பதையும், சின்னவன் ஒரு ஜீனியஸ் ஆக இருப்பதையும் சொன்னால் அந்த ஆஸ்பத்திரி ஆட்கள் சந்தோஷப்படுவார்கள், பெருமைப்படுவார்கள் என்று பத்மாவதிக்குத் தோன்றியது. ஆனால் அந்த சமயத்தில் உதய் வரவு அவள் வாயை அடைத்தது. ‘காதில் விழுந்தால் கிண்டல் செய்வான்’.

“தேங்க்ஸ் மேடம்.....அந்த ஆள் நிம்மதியுடன் ரிசீவரை வைத்தான்.


குருவின் அந்திமக் கிரியைகளை முடித்து விட்டு ரிஷிகேசில் இருந்து ஹரித்வாருக்கு ஜீப்பில் போய்க் கொண்டிருக்கையிலும் மாஸ்டர் மனதில் குருவே நிறைந்திருந்தார்....

சாதாரண குரு- சிஷ்யர் ஆக அவர்கள் இருக்கவில்லை. ஒரு மேன்மையான குருவாக அவரும் தகுதியான சிஷ்யராக மாஸ்டரும் இருந்தார்கள். நாத்திகனாக இருந்த ரமணன் வாழ்க்கையில் குரு வராமல் இருந்தால் இன்று பலர் பிரமிப்புடன் பார்க்கும் மாஸ்டராக அவர் உயர்ந்திருக்க முடியாது. ரமணனாக இருந்த இளைஞனிடம் இருந்த சக்திகளை அடையாளம் முதலில் அடையாளம் கண்டது குரு தான்.

ஒரு அரச மரத்தடியில் அமர்ந்திருந்த அவரை அவன் தற்செயலாய் தான் சந்தித்தான். பேசுகையில் ஆன்மீக மார்க்கத்துக்கு அழைத்த குருவிடம் அன்று ரமணன் அடாவடியாகத் தான் பேசினான். சாமியார்களை சோம்பேறிகள் என்றான். போலிகள் என்றான். எடுத்துக்காட்டாக எத்தனையோ சாமியார்களின் பட்டியல் தந்தான். “.... இந்த ஆள் பொம்பள பொறுக்கி. தினம் ராத்திரி அவன் ஆசிரமத்துக்கு ஒரு பொம்பள போறத நானே பார்த்திருக்கேன். அந்த ஆள் ஃப்ராடு.... நிறைய பேர் நிலத்தை ஆட்டைய போட்டிருக்கான்.....  இந்த ஆள் தீர்த்தத்துல ஏதோ போதை மருந்து கலக்கிக் குடுத்து பணக்கார வீட்டுப் பசங்களை எல்லாம் வசியம் செய்யறவன்.... அந்த ஆள் ஒரு கொலையே செஞ்சவன்னு பல பேரு பேசிக்கிறாங்க. இதெல்லாம் என்ன பிழைப்பு?

ஆக்கிரோஷமாக ரமணன் பேசியதை குரு மறுக்கவில்லை. புன்னகையோடு கேட்டுக் கொண்டார். நீ சொன்னதெல்லாம் உண்மை தான். அவங்க கிட்ட உன்னை நான் போகச் சொல்லலையே.... என் கூட தானே வரச் சொல்றேன்

சிறிதும் தயங்காமல் ரமணன் சொன்னான். “நீங்க என்ன கேப்மாரித்தனம் பண்றீங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?

“வந்து பாரேன்.... நானும் மோசமாய் இருந்தா அந்தப் பட்டியல்ல என்னையும் சேர்த்துக்கோ.... என்னைப் பத்தியும் நாலு பேர் கிட்ட எச்சரிச்சு சொல்லு...

“நான் ஏன் வந்து பார்க்கணும்.... எனக்கு சோம்பேறிகளைப் பிடிக்காது.... சும்மாவே இருக்கிறது குற்றம்னு நினைக்கறவன் நான். இந்த நாட்டுல எத்தனையோ பிரச்னை இருக்கு.... ஏழ்மை இருக்கு.... சரி செய்ய வேண்டியது நிறைய இருக்கு.... அதெல்லாம் சரி செய்யாம சும்மா ஒரு ஆசிரமத்துலயோ, மலையிலயோ உக்கார்ந்துட்டு சாமி கும்பிடறதும், வேதாந்தம் பேசறதும் எனக்கு பிடிக்காது.....

புன்னகை மாறாமல் அவனையே குரு பார்த்தார். பின் சொன்னார். “நானும் உன் கட்சி தான். சும்மா சாமி கும்பிட்டுட்டே இருக்கறதும், வேதாந்தம் பேசறதும் எனக்கும் பிடிக்காது....  

ரமணன் திகைத்தான். “பின்ன ஏன் நீங்க இப்படி இருக்கீங்க?

“அஞ்சு நிமிஷத்துல என்னைப் பார்த்துட்டு நான் எப்படி இருக்கேன்னு நீயெப்படி கண்டுபிடிக்க முடியும்? என் கூட வந்து பார். நாலு நாள் இரு. பிடிக்கலைன்னா நீ எப்ப வேணும்னாலும் திரும்ப வந்துடலாம்.... நான் தடுக்க மாட்டேன்....

ரமணன் ஏளனமாய் கேட்டான். “ஏன் என்னையே வற்புறுத்தறீங்க. உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா?...

“நீ சாதாரணமானவன் இல்லை.... உன் கிட்ட நிறைய சக்திகள் இருக்கு.... நீ வீணாய் போறது எனக்குப் பிடிக்கல. அதனால தான் கூப்பிடறேன்அவர் ஆத்மார்த்தமாய் சொன்னார்.

ரமணன் விளையாட்டாய் சொன்னான். “ஏதோ விபூதி குங்குமம் குடுத்து ஆளை விடுங்க சாமி

சரி அப்படியே ஆகட்டும் வாஎன்று சொன்னவர் கையில் விபூதி வந்திருந்தது.

இந்த மலிவான மேஜிக் எல்லாம் எத்தனை நாளைக்கு சாமி நடத்துவீங்கஎன்று கேலியாக விமர்சித்தாலும் அவரை ரமணன் நெருங்கினான். விபூதி வாங்கிக் கொண்டு உடனே அங்கிருந்து போய் விடுவது தான் அவன் எண்ணமாக இருந்தது.  

விபூதியை ரமணன் கையில் தந்து விடாமல் குரு அவன் நெற்றியில் வைத்து விட்டார். புருவங்களின் மத்தியில் அவர் விரல் பட்டவுடன் அவன் உடலில் மின்னல் தாக்கியது போல் உணர்ந்தான். அண்டசராசரங்கள் அப்படியே அவனுள்ளே விரியத் தொடங்கின. அவன் அத்தனையும் உள்ளடக்கித் தானும் பரந்து விரிவதாய் உணர்ந்தான். அவன், அவர், அந்த ஊர், தேசம், பூமி, சூரிய சந்திராதி கிரகங்கள், பிரபஞ்சம் என எல்லாமே இயங்கிக் கொண்டிருப்பதை அவன் தனக்குள்ளே கண்கூடாகப் பார்த்தான். பிரமித்துப் போனவன் தன் பழைய நிலைமைக்கு வர நிறைய நேரம் ஆனது.

சிறிது நேரம் பேச்சிழந்து போனவன் மறுபடி பேசும் போது மரியாதை இருந்தாலும் அதோடு சந்தேகமும் சேர்ந்திருந்தது. கைல நிறைய மேஜிக் வச்சிருக்கீங்க போல இருக்கே

“மேஜிக் என் கிட்ட இல்லை. உன் கிட்ட தான் இருக்கு. உன் கிட்ட இருக்கறதை தான் நீ உணர முடியும்...

ரமணன் சொன்னான். “இதெல்லாம் போதைல இருக்கறவங்க கூட உணர முடியுமே. ஒரு தடவ என் நண்பன் ஒருத்தன் கஞ்சா தந்தான். அத சாப்பிட்டப்ப கூட கிட்டத்தட்ட இப்படி தான் எனக்கு இருந்துச்சு....

“போதை முடியறப்ப மனிதன் குறைஞ்சு போறான். அதுக்கு அடிமையாகி குறைஞ்சுகிட்டே போய் கடைசில அழிஞ்சு போறான். ஆனால் ஆத்மாவுல தன் சக்திய உணரும் போது மனிதன் நிறைஞ்சு போறான். ஆத்மசத்தியத்தில் நிலைக்கும் போது பூரணத்தை உணர்ந்து பிரம்மாண்டமாகிறான்.... அதனால எந்த அனுபவமும் கடைசில ஒருத்தனை எங்கே கொண்டு போய் விடுதுங்கறதல தான் எல்லா வித்தியாசமும் இருக்கு.....

அவர் சொன்ன விதம் அவனை வசீகரித்தது. அந்தக் கண நேர பிரம்மாண்டம் இந்த ஆளுடன் போய்த்தான் பார்ப்போமே என்று எண்ண வைத்தது. ரமணன் சிரித்துக் கொண்டே சொன்னான். “என்னை எங்கே கொண்டு போய் விடுவீங்களோ தெரியல. ஆனா சில்லறைத்தனமோ, கேப்மாரித்தனமோ தெரிஞ்சுதுன்னா காரித் துப்பிட்டு வந்துடுவேன். முதல்லயே சொல்லிட்டேன்....

அவர் கோபப்படாமல் சிலாகித்துச் சொன்னார். “உன்னை மாதிரி இந்த உறுதியோட ஆன்மீகத்துல ஒவ்வொருத்தனும் நுழைஞ்சா, எவனும் ஒருத்தனை ஏமாத்திட முடியாது....  

அவருடன் போன ரமணன் பின் திரும்பி வரும் நிலைமை உருவாகவில்லை. ஆன்ம ஞானத்தையும், ஆழ்மன சக்திகளையும் அவர் அவனுக்கு முறையாகக் கற்றுக் கொடுத்தார். காலப் போக்கில் ரமணன் அவரையும் மிஞ்சினான். தன்னைத் தன் பிரிய சிஷ்யன் மிஞ்சிய சந்தர்ப்பங்களில் குரு மிகவும் பெருமிதம் அடைந்தார். அந்தப் பெருமிதமே அவர் உயர்வை ரமணனுக்கு அடையாளம் காட்டியது.  காலப் போக்கில் பலருக்கு பல சக்திகளையும், ஆன்மிக ரகசியங்களையும் கற்றுத் தந்த ரமணன் மாஸ்டர் என்ற பெயரில் அழைக்கப்பட ஆரம்பித்தார்.

அதற்குப் பின் தான் தங்கள் இயக்கத்தைப் பற்றி மாஸ்டர் அறிந்தார். உலக நன்மையின் மேன்மைக்காகப் பாடுபடும் ஆன்மீக சக்தி ரகசிய இயக்கம் ஒன்று இருப்பதே அவருக்கு அப்போது தான் தெரிந்தது. அதற்கு அவரது குரு தான் தலைவராக இருந்தார்.  அந்த இயக்கத்தின் பாதி பேர் தவ வாழ்க்கை வாழ்பவர்கள். ஆன்ம ஞானத்தில் தாங்கள் உயர்ந்து அந்த ஆன்மீக அலைகளை உலகிற்கு அமைதியாகப் பரப்புபவர்கள். சுமார் நாற்பத்தைந்து சதவீத அங்கத்தினர் ஆன்ம அனுபவங்கள் பல பெற்று உலக வாழ்க்கைக்குப் பல நல்ல நிலைகளில் திரும்பியவர்கள். வெளிப்பார்வைக்கு வெற்றிகரமான வியாபாரிகளாகவும், அதிகார வர்க்கத்தினராகவும், கலையுலகினராகவும் இருக்கும் அவர்கள் தங்கள் செல்வம், அதிகாரம், நல்ல நிலை எல்லாவற்றையும் தங்கள் இயக்கத் தலைமை ஆணைக்கிணங்க பயன்படுத்துபவர்கள். மீதமுள்ள சுமார் ஐந்து சதவீதத்தினர் இயக்கத் தலைமைக் குழுவில் இருப்பவர்கள். எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பவர்களும், வழிநடத்துபவர்களும் அவர்களே. ரமணன் மாஸ்டராகி  அந்த அதிகாரத் தலைமைக்குழுவில் குருவுக்கு அடுத்த நிலைக்கு வேகமாக உயர்ந்தார்.  

சில மாதங்களுக்கு முன்பு தான் அவர்கள் இயக்கம் தீமையின் படையெடுப்பை முன்கூட்டியே உணர ஆரம்பித்தது. நன்மையும், தீமையும் கலந்ததே உலகம் என்ற போதிலும், தீமையைப் பல கட்டங்களில் இதுவரை அவர்கள் சமாளிக்க வேண்டியே வந்தது என்ற போதிலும், வரப் போகிற தீமையின் தாக்குதல் உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தப் போகிறது என்பதை அவர்கள் ஆன்மசக்தி அவர்களை எச்சரித்தது. அது எந்த வகையில் எப்படி இருக்கும் என்பதை அறியா விட்டாலும் எச்சரிக்கையாக இருந்து அதைத் தடுத்து வெல்லா விட்டால் உலகத்தைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியாது என்பதை அவர்கள் ஆழமாக உணர்ந்தார்கள்.

அப்போது தான் அவர்கள் இயக்கத்து அங்கத்தினரான அந்தப் பெண் விஞ்ஞானி இஸ்ரோவில், Astrosat விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய புகைப்படம் மூலமாகத்  தங்கள் கவனத்திற்கு வந்த தகவலைத் தலைமைக்குத் தெரியப்படுத்தினாள். விஞ்ஞான ஆராய்ச்சி கோணத்தில் இஸ்ரோ அந்த நிகழ்வில் ஆர்வம் காட்ட, மாஸ்டரின் ஆன்மீக சக்தி இயக்கம் உலகிற்கு வரவிருக்கும் ஆபத்து கோணத்தில் அதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தது.  இதில் க்ரிஷ் என்ற தனிமனித ஆராய்ச்சியும் பங்கெடுத்தது ஆரம்பத்தில் இஸ்ரோவுக்கும், மாஸ்டரின் ஆன்மீக சக்தி இயக்கத்திற்கும் ஆரம்பத்தில் விளையாட்டான வேடிக்கையாகத் தான் இருந்தது. அது இந்தக் கடைசி அமாவாசை இரவு இரண்டு பக்கமுமே எதிர்பார்த்திராத ஒரு நிகழ்வில் கொண்டு சேர்த்து விட்டது.

அந்த நிகழ்வு இஸ்ரோவின் தனிச்சிறப்பு விஞ்ஞானிகளை ‘என்ன ஆகியிருக்கும்?என்ற குழப்பத்தில் ஆழ்த்தியது. ஆனால் மாஸ்டரின் ஆன்மீக சக்தி இயக்கம் என்ன விபரீதத்தில் இது முடியலாம் என்ற புரிதலில் அதிர்ந்து போனது.   

(தொடரும்)

என்.கணேசன்

5 comments:

 1. new twist :) so appo master nallavarnu solla vareengala .. Krish a seekram "amanushyan" madhiri kalathula irakki vidunga anna!!

  ReplyDelete
 2. சுஜாதாMay 11, 2017 at 6:20 PM

  பத்மாவதி சோ ஸ்வீட். மாஸ்டர் ராக்ஸ். இனி அடுத்த வியாழன் தானா? போத மாட்டேன்கிறது கணேசன் சார்.

  ReplyDelete
 3. The exchange between master and his guru is fantastic. The way you condemn spiritual hypocrisy and advocate real spirituality through your characters is amazing. Beautiful and interesting sir.

  ReplyDelete
 4. ரமணன் மாஸ்டர்..இந்த காலத்து சாமியார பத்தி சரியாகவே சொல்லியிருக்கார்..

  ReplyDelete
 5. மனோகர்...நேரத்த பத்மாவதிகிட்ட கேட்ட விதம்..புத்திசாலித்தனம்

  ReplyDelete