கீதை என்றதும் உடனடியாக நம் நினைவிற்கு வருவது ஸ்ரீமத் பகவத் கீதை தான். ஆனால் பகவத் கீதையைப் போலவே உத்தவ கீதை, சிவ கீதை, ஹம்ச கீதை, ராம கீதை, அவதூத கீதை, அஷ்டவக்ர கீதை முதலான பல கீதைகள் இருக்கின்றன. அவற்றில் அஷ்டவக்ர கீதை அறிஞர்களால் மிகவும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
அஷ்டவக்ர கீதையும் பகவத் கீதையைப் போலவே மகாபாரதத்தில் அமைந்திருக்கிறது. பாண்டவர்களின் வனவாசத்தின் போது அவர்களைச் சந்தித்த லோசமர் என்ற முனிவர் அஷ்டவக்ரர் என்ற மகாஞானியைப் பற்றிக் மூன்று சர்கங்களில் (வனபர்வா 132-134) கூறுவதாக அமைந்துள்ளது. யார் இந்த அஷ்டவக்ரர், அவர் சொல்லும் கீதையின் சாரம் என்ன என்று பார்ப்போமா?
அஷ்டவக்ரம் என்றால் எட்டு வளைவுகளுடன் கூடியது என்று பொருள். எட்டு வளைவுகளுடன் கூடிய உடலைக் கொண்டவர் என்பதால் அஷ்டவக்ரர் என்று பெயர். இவர் தன் தாயாரின் கருவில் இருந்த பொழுது, வேத அறிவில் சிறந்து விளங்கிய இவரது தகப்பனார் கஹோலர் சிறுவர்களுக்கு வேதபாடங்கள் கற்பித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் அப்படிக் கற்பித்துக் கொண்டிருக்கையில் அவர் வேத உச்சரிப்புகளில் தவறு செய்தார். அவரது ஒவ்வொரு தவறான உச்சரிப்பிலும் அவரது மனைவியின் கருவில் இருந்த குழந்தை நெளிந்தது. அது இன்று வேத பாராயணத்தில் எட்டு தவறுகள் செய்தார் என்பதை அவரிடம் தெரிவித்தாம்.
அதைக் கேட்டு அவரது மாணவர்கள் ஏளனமாகச் சிரிக்க கஹோலர் அவமானம் தாளாமல் கோபத்தில் சாபம் கொடுக்க அந்தக் குழந்தை அஷ்ட கோணல்களுடனேயே பிறந்தது. சாபம் கொடுத்த பின்னர் கஹோலர் மிகுந்த வருத்தம் அடைந்தார் என்றாலும் அதை அவரால் மாற்ற இயலவில்லை. அவரும் அவர் மனைவியும் பெருந்துக்கத்துடன் குழந்தையை வளர்க்க ஆரம்பித்தனர்.
மகன் குழந்தையாக இருக்கையிலேயே வறுமையின் பிடியில் இருந்து தப்பிக்க உபாயம் தேடி கஹோலர் மிதிலையில் ஜனக மகாராஜாவின் அரண்மனைக்கு வந்தார். அப்போது அரசவையில் ஸ்ரீவந்தின் என்ற அறிஞருடன் வாதிட்டு வென்றால் பெரிய பரிசு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கஹோலர் மகிழ்ச்சி அடைந்து ஜனக மகாராஜாவின் சபையில் ஸ்ரீவந்தின் அறிஞருடன் வாதத்தில் கலந்து கொண்டார். ஆனால் அந்த வாதத்தில் ஸ்ரீவந்தினிடம் கஹோலர் தோல்வி அடைந்தார். தோற்றுப்போன படியால் ஸ்ரீவந்தின் என்ற அந்த அறிஞரின் தகப்பனார் வருணருக்கு காலம் முழுவதும் குற்றேவல் புரிய கஹோலர் அனுப்பப்பட்டார்.
இதைக் கேள்விப்பட்ட அஷ்டவக்ரரின் தாயார் மற்றும் அவர் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனை அடைந்தனர். வருடங்கள் உருண்டோடின. தந்தை இல்லாமலேயே வளர்ந்த அஷ்டவக்ரர் புத்தி கூர்மையான மாணவனாக திகழ்ந்தார். அவர் படித்து வந்த குருகுலத்தில் அவருடன் படிக்கும் மற்ற சிறுவர்கள், “உனக்குத் தகப்பனாரே கிடையாது” என்று கேலி செய்தனர்.
இதனால் மனவருத்தமுற்ற அஷ்டவக்ரர் வீடுதிரும்பி தன் தாயாரிடம் தன் தந்தையைப் பற்றி விசாரித்தார். தாய் மூலம் நடந்ததைக் கேள்விப்பட்ட போது அஷ்டவக்ரருக்கு வயது பன்னிரண்டு. தாயார் தடுத்தும் கேளாமல் உடனடியாக வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்ற அஷ்டவக்ரர் வழியெல்லாம் விசாரித்துக் கொண்டு சென்று பல மாதங்கள் கழித்து மிதிலையை அடைந்தார்.
மிதிலை மாநகரில் அவர் நடந்து கொண்டிருந்த போது மன்னர் ரதத்தில் வந்து கொண்டிருந்தார். மன்னர் வருவதால் சாலையில் வழி விடச் சொல்லி காவலன் சொல்ல அஷ்டவக்ரர் சொன்னார். “கண்பார்வை இல்லாதவன், உடல் ஊனமுள்ளவன், பெண்கள், பாரம் சுமந்து கொண்டிருப்பவன், வேதம் படித்த அறிஞன், இவர்களுக்கெல்லாம் வேந்தனே ஆனாலும் வழிவிட வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இதை அறியாதவரா உங்கள் மன்னர்?”
சிறுவன் என்றாலும் சொன்னதில் இருந்த உண்மை உறைக்க ஜனக மகாராஜா முதலில் அஷ்டவக்ரர் செல்ல வழி விட்டு தாமதிக்கத் தன் சேவகர்களைப் பணித்தார். அந்தக் காலத்தில் எந்த அளவிற்கு உண்மைக்கு விலை இருந்தது, கருத்து சுதந்திரம் இருந்தது என்பது இதைப் படிக்கையில் நமக்கு விளங்கலாம்.
மறு நாள் பல வேத விற்பன்னர்கள் கூடியிருந்த அரசவையில் ஸ்ரீவந்தினுடன் வாதத்தில் கலந்து கொள்ள அஷ்டவக்கிரர் வந்தார். அஷ்டகோணலுடன் உடலை வித்தியாசமாக அசைத்துக் கொண்டு அவர் சபையில் நுழைய அங்கிருந்தவர்கள் பலரும் கேலியாகச் சிரித்தனர்.
கேலியையே கேட்டும் பார்த்தும் வளர்ந்திருந்த அஷ்டவக்ரர் சக்கரவர்த்தியைப் பார்த்து, "அரசே நான் இது வேத விற்பன்னர்கள் கூடி இருக்கும் சபை என்று நம்பி வந்தேன். ஆனால் இது செருப்பு தைப்பவர்கள் கூடியிருக்கும் இடம் என்று அறியவில்லை. குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும்" என்று அமைதியாகச் சொல்லி சபையை விட்டு வெளியேறத் தயாரானார்.
தங்களை அவமதித்ததற்கு பண்டிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, சக்கரவர்த்தி அவர் கூறியதற்கு விளக்கம் கேட்டார்.
அஷ்டவக்ரர் விளக்கம் சொன்னார். "அரசே செருப்பு தைப்பவர்கள் தான் ஒரு விலங்கினைப் பார்த்ததும் அது கோணல் மாணலாக வளர்ந்திருந்தால் இதன் தோல் தங்கள் வேலைக்கு ஆகாதே என்று அதைப் புறக்கணிப்பார்கள். வேத விற்பன்னர்கள் தோற்றத்தைக் கண்டு எடைபோடும் பாமரத்தனத்தை கடந்து, உள்ளே உள்ள அறிவின் ஆழத்தை அறிய முற்படுவார்கள். இங்கே இவர்கள் நடந்து கொண்டதைக் கண்டு தான் செருப்பு தைப்பவர்கள் என்று முடிவு செய்தேன்"
அவர் சொற்களில் இருந்த உண்மை சுட, சிரித்த வேத பண்டிதர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டார்கள். ஜனகருக்கு வந்திருக்கிற சிறுவனின் ஞானம் முன் தினமே புலப்பட்டிருந்தது. இப்போதைய சம்பவம் அதை உறுதிப்படுத்தியது. வந்த காரணத்தை அவர் அஷ்டவக்ரரிடம் கேட்க அஷ்டவக்ரர் ஸ்ரீவந்தினுடன் வாதம் புரிய வந்ததாகச் சொன்னார். இந்தச் சிறுவன் என்னை வெல்வதா என்று ஏளனமாக வாதத்தை ஆரம்பித்த ஸ்ரீவந்தின் முடிவில் அஷ்டவக்ரரின் ஞான அறிவுக்கு ஈடு தர முடியாமல் தோல்வி அடைந்தார்.
வென்றதற்குப் பரிசாக அஷ்டவக்ரர் தந்தையின் விடுதலையை வேண்டி தந்தையை மீட்டார். மேலும் ஞானத்தில் சிறந்தவரான ஜனகருடன் அஷ்டவக்ரர் தன் ஞானச் செறிவை பகிர்ந்து கொண்டார்.
ஊர் திரும்பும் வழியில் அஷ்டவக்ரரின் தகப்பனார் அவரை சமங்கா என்ற நதியில் குளிக்கச் செய்தார். தந்தையால் ஆசீர்வதிக்கப்பட்ட அஷ்டவக்ரர் தன் உடலின் கூனங்கள் நீங்கி கண்டோர் மயங்கும் அழகுடைய இளைஞனாக மாறினார்.
ஜனகருக்கும், அஷ்ட வக்ரருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்கள் தான் அஷ்டவக்ர கீதை.
அஷ்டவக்ர கீதையில் ஜனகர் கூறுகிறார்:-
“மே நாஸ்தி கிஞ்சன
அதவா மே சர்வம்”
அதாவது “ஒருவிதத்தில் எதுவுமே எனக்குச் சொந்தமில்லை. மற்றொரு விதத்தில் ஒவ்வொன்றும் என்னுடையதே.” கிட்டத்தட்ட 300 ஸ்லோகங்களைக் கொண்ட அஷ்டவக்ர கீதையில் உள்ள பொருள் பொதிந்த வாக்கியம் இது. அஷ்டவக்ர கீதையின் மற்ற ஞானக் கருத்துக்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
· உனது உடலில் இருந்து நீ வேறுபட்டவன். உணர்வு தான் நீ. இந்த அறிவில் நீ நிலைபெற்று இருந்தால் எப்போதும் அமைதியாகவும் இன்பமாகவும், பந்தங்களில் இருந்து விடுபட்டவனாகவும் உன்னால் இருக்க முடியும்.
· சரி-தவறு, இன்பம்-துன்பம் போன்ற இருமைகள் உனது மனதை மட்டுமே சேர்ந்தவை. உனக்கும் அவற்றுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நீ எதையும் செய்பவனும் இல்லை; பலனை அனுபவிப்பவனும் இல்லை. நீ எப்போதும் விடுதலைப் பெற்றவன்.
· அனைத்து நிகழ்வுகளுக்கும் நீ வெறும் சாட்சி மட்டுமே என்ற உண்மையை மறப்பதுதான் உன் துன்பங்களுக்கு காரணம்.
· ஒருவன் தன்னை துன்பங்களில் இருந்து விடுதலை அடைந்தவன் என்று எண்ணினால் அதுவே உண்மை. அதை விடுத்து தன்னை பந்தப்பட்டவன் என்று கருதினால் அதுதான் உண்மை. ‘நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய்’ என்ற வாசகம் உண்மையானது.
· தானே இந்த உலகம் என்று அறிந்தவர்கள் மனம் போல வாழ்வதை யாரால் கட்டுப்படுத்த முடியும்?
இந்த அஷ்டவக்ர கீதையை விவேகானந்தர், ரமண மகரிஷி உட்பட பல மகான்களும் ஞானப் பொக்கிஷமாகக் கருதுகிறார்கள்.
- என்.கணேசன்
- நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 24-12-2013