உள்ளதை உள்ளபடி பார்ப்பது மிக நல்ல குணம். ஆனால் இதை மிக அபூர்வமாகவே நாம் சமூகத்தில் காண முடிகிறது.
சிறிய காய்ச்சல் வந்தால் தனக்குத் தெரிந்த ஓரிருவர் சமீபத்தில் டைபாய்டில் படுத்தது நினைவுக்கு வர, முதல் நாள் அது டைபாய்டாக இருக்குமோ என்று சந்தேகித்து, இரண்டாம் நாள் அது டைபாய்டு தான் என்று நம்பி, மூன்றாம் நாள் படுத்த படுக்கையாகி அவதிப்படும் ஆட்கள் பலர் உண்டு.
ஆகாதவர்கள் யதார்த்தமாய் சொன்ன சொல்லிற்கு எல்லாம் உள்ளர்த்தம் உள்ளதாய் நம்பி, என்னவாக இருக்கும் என்று கற்பனைக் குதிரையைப் பறக்க விட்டு, பல அர்த்தங்கள் கண்டுபிடித்து 'பில்டப்' செய்து, பிரம்மாண்டமாக்கி தனக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டதாக நம்பி மனம் கொதிக்கும் நபர்கள் பலர் உண்டு.
தனது ஒவ்வொரு வெற்றியிலும் பக்கத்து வீட்டுக்காரன் பொறாமை கொள்வதாக நம்பி, அவனைக் கூர்ந்து பார்த்து அவன் பேச்சுக்கும், முகபாவனைகளுக்கும் பொறாமைக்கான சுவடுகளைக் கண்டுபிடித்து மனம் குமுறும் ஏராளமானவர்களை நான் தினமும் பார்க்கிறேன். (அதற்குப் பிறகு சின்னக் காய்ச்சல் வந்தால் கூட அவன் வயிற்றெரிச்சலும் பொறாமையும் தான் காரணம். இனி அவனை சந்திக்க வேண்டுமென்றால் மந்திரித்துக் கட்டிய தாயத்துடன் தான்).
இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்.
இந்தக் கடுகை மலையாக்கும் வித்தைக்கு அடிப்படை கற்பனையே.
கற்பனை மனிதனுக்கு இறைவன் அளித்த வரப்பிரசாதம். அதை நல்ல முறையில் பயன்படுத்துகையில் கதையாக, கவிதையாக, கட்டுரையாக, நல்லிசையாக, ஓவியமாக, புதிய கண்டுபிடிப்பாக வெளிப்படுகின்றது. பலரும் ரசித்து, பயன்படுத்தி மகிழ்கிறார்கள். இந்த வகைப்பட்ட கற்பனையின் விளைவுகள் காலத்தை மிஞ்சி அமரத்துவம் பெறுகின்றன.
ஆனால் சந்தேகம், பயம், பொறாமை, கோபம் முதலியவற்றோடு அந்த கற்பனைத் திறனை சேர்க்கும் போது தான் கடுகு மலையாகிறது. அர்த்தம் அனர்த்தமாகிறது. உறவுகள் விரிசல் அடைகின்றன. மாறுபட்ட கருத்து பகைமையாகிறது. இந்த வகைக் கற்பனை சொல்லொணா துயரங்களுக்கு காரணமாகின்றது.
எனவே உங்களுக்கு உள்ளும் வெளியும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ வேண்டுமானால் கடுகை மலையாக்காதீர்கள். உள்ளதை உள்ளபடியே பாருங்கள். அப்படிப் பார்க்கையிலும் குறைகளையும், பிரச்சினைகளையும் நாம் பார்க்கக்கூடும். ஆனால் நாமாக பெரிதாக்காத வரை அவற்றை ஏற்றுக் கொள்வதும் சமாளிப்பதும் இன்றல்லா விட்டாலும் நாளையாவது சுலபமாகும்.
-என்.கணேசன்