சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, May 14, 2008

விமரிசனங்களால் வீழ்ந்து விடாதீர்கள்!


வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இது தானடா.

வீழ்ந்தாரைக் கண்டால் வாய் விட்டுச் சிரிக்கும்
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவர் கேட்டால் நடிப்பென மறுக்கும்.

இது ஒரு பழைய தமிழ்ப் படப் பாடலின் வைர வரிகள். இப்படி மற்றவர்களை ஆராய்வதையே தங்கள் வாழ்வின் இலக்காக வைத்திருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி ஆராய்ந்து மற்றவர்களின் குறைகளையோ, பலவீனத்தையோ கண்டு பிடித்து விட்டால் அதை மகிழ்ச்சியோடு பலரிடமும் சொல்லி திருப்தியடைகிறார்கள். அதே நேரத்தில் அதே மற்றவர்களின் நிறைகளையோ, பலங்களையோ கண்டாலும் காணாதது போல இவர்களால் இருந்து விட முடிகிறது.

தங்களை விட உயரத்தில் உள்ளவர்களைக் கண்டு வயிறெரிவதும் அந்த உயர்வு ஒன்றும் பெரிய விஷயம் இல்லையென்று குறைத்துச் சொல்வதும் இவர்களது இயல்பு. "நான் மட்டும் மனசு வச்சிருந்தா இவங்களை விட நாலு மடங்கு மேல இருந்திருப்பேன்". அதே நேரத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களைப் பார்த்தாலோ ஏளனமே செய்வார்கள். தங்கள் உயர்ந்த நிலைக்குக் காரணம் புத்திசாலித்தனமும், உழைப்பும் தான் என்றும் தாழ்ந்தவர்கள் முன்னேறாததற்குக் காரணம் இந்த இரண்டும் இல்லாதது தான் என்பதும் இவர்கள் கருத்துக் கணிப்பாக இருக்கும். "எதுவுமே சுலபமா கிடைச்சுடுங்களா? நான் எல்லாம் இந்த நிலைக்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சிருக்கேன், எத்தனை பிரச்சினைகளைச் சந்திச்சுருக்கேன்கிறது எனக்கும் கடவுளுக்கும் தான் தெரியும்".

இப்படி அடுத்தவனையே கவனித்து விமரிசனம் செய்து கொண்டிருப்பவர்கள் சாதனையாளர்களாக இருப்பதில்லை என்பது மிகப் பெரிய உண்மை. சாதனையாளர்கள் தங்களுக்குள் ஒரு திறமையைக் கண்டு, அதை மெருகேற்றி, கடுமையாக உழைத்து படிப்படியாக உயர்கிறார்கள். இப்படி அவர்களுடைய கவனமெல்லாம் உள்முகமாக இருப்பதால் அடுத்தவரை ஆராய அவர்களுக்கு நேரமோ, ஆர்வமோ இருப்பதில்லை. மாறாக மற்றவர்களை விமரிசித்தே வாழ்பவர்களுக்கு கவனமெல்லாம் அடுத்தவர் மேலேயே இருப்பதால் தங்கள் திறமையை வளர்த்தவோ சாதிக்கவோ முடிவதில்லை.

இவ்வாறாக விமரிசனத்தையே தொழிலாகக் கொண்டிருப்பவர்கள் நல்லதைச் செய்யவோ, நல்லதை மெச்சவோ முடியாத பலவீனர்கள். குற்றம் மட்டுமே கண்டு பிடித்து வாழும் வீணர்கள். இப்படிப் பட்டவர்கள் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்வதே முட்டாள்தனம்.

அடுத்தவர்களையே கவனித்து தங்கள் வாழ்க்கையைக் கோட்டை விட்டுக் கொண்டு இருக்கும் அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். ஆனால் அவர்கள் விமரிசனத்தை சீரியசாக எடுத்து மனம் வருந்தும் நபர்களாக நாம் இருந்து விட்டால் அவர்களை விட பரிதாபத்துக்குரியவர்களாக நாம் மாறி விடுவோம். இந்த இரண்டாம் வகையினராய் நாம் இருக்க வேண்டாமே. நமது காலத்தையும், மன அமைதியையும் வீணாக்க வேண்டாமே.

வாழ்க்கைப் பந்தயத்தில் கலந்து கொள்ளாமல் ஓரமாக நின்று கொண்டு ஓடுபவர்களைப் பார்த்து விமரிசித்து நிற்கும் அவர்கள் பேச்சை காதில் வாங்கி நம் ஓட்டத்தை சிறிதே நிறுத்தினாலும் நாம் பந்தயத்தில் பின் தங்கி விடுவோம் என்பதை மறந்து விடாதீர்கள். எனவே விமரிசகர்களையோ, விமரிசனங்களையோ பொருட்படுத்தாதீர்கள். நமது வாழ்க்கைப் பந்தயத்தின் ஓட்டத்தையோ, சாதனையையோ மட்டுப்படுத்த அவர்களை அனுமதித்து விடாதீர்கள்.

- என்.கணேசன்

7 comments:

 1. //மற்றவர்களின் குறைகளையோ, பலவீனத்தையோ கண்டு பிடித்து விட்டால் அதை மகிழ்ச்சியோடு பலரிடமும் சொல்லி திருப்தியடைகிறார்கள். அதே நேரத்தில் அதே மற்றவர்களின் நிறைகளையோ, பலங்களையோ கண்டாலும் காணாதது போல இவர்களால் இருந்து விட முடிகிறது.//

  மிகவும் உண்மை

  ReplyDelete
 2. கட்டுரை நன்றாக உள்ளது.

  ReplyDelete
 3. அருமையனா கட்டுரை மேலும் இதே போல ஏழுதுஙல்

  ReplyDelete
 4. பிறரின் விமர்சனங்களை சாட்சி பூதமகமாக இருந்து சலனப்படமால் நம் வேலையை பார்ப்பதே நல்லது.

  ReplyDelete