சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, May 7, 2008

அடி மேல் அடி விழும் போது....

துரதிர்ஷ்டவசமாக துரதிர்ஷ்டம் தனியாக வருவதில்லை. சில நேரங்களில் படையாக சேர்ந்து வந்து தாக்குகின்றன. பல முனைத் தாக்குதல் வரும் போது, இதற்கெல்லாம் தீர்வு ஒன்று கண்ணுக்கெட்டிய வரை தெரியாத போது மனிதன் உடைந்து போவது இயல்பே. இந்த சந்தர்ப்பங்களில் 'குடி' போன்ற தற்காலிக மறதிக்கான வழிகளை சிலர் நாடி அதை நியாய்ப்படுத்துவதும் உண்டு. ஒருசிலர் வாழ்க்கையை முடித்துக் கொண்டு நிரந்தத் தீர்வு காண முனைவதும் உண்டு.

அப்படி தற்கொலை முடித்தவர் தான் பக்மினிஸ்டர் ·புல்லர் என்ற மேலை நாட்டுக்காரர். 32 வயதில் திவாலாகி வாழ்வில் எல்லா நம்பிக்கையும் இழந்து, ஒரு டிசம்பர் இரவில் கொட்டும் பனியில், லேக் மிச்சிகன் என்ற பரந்த நீர்நிலையில் குதித்து தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணி வந்தார். அந்த தண்ணீரில் குதிக்கும் முற்பட்டவர் அதில் பிரதிபலித்த நட்சத்திரங்கள் நிறைந்த ஆகாயத்தைப் பார்த்தார். அந்த அழகு அவர் மனதை அசைக்க அண்ணாந்து ஆகாயத்தைப் பார்த்தார்.

கொட்டும் பனி, மின்னும் நட்சத்திரம், பரந்த வானம் எல்லாம் கண்டபோது பிரபஞ்சத்தின் எல்லையில்லாத அமைதியான பேரழகில் ஒரு கணம் அவர் மனம் லயித்தது. அந்த நேரத்தில் பிரபஞ்சம் அவருக்கு ஒரு செய்தியைச் சொன்னதாக அவர் உணர்ந்தார். "உன் உயிரை மாய்த்துக் கொள்ள உனக்கு உரிமை இல்லை. நீ உன்னுடையவன் அல்ல. என்னுடையவன்."

தன்னைப் பிரபஞ்சத்தின் அங்கமாக உணர்ந்த அந்தக் கணம் அவர் வாழ்வின் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. புதிய வாழ்க்கையை ஆரம்பித்தார். வயது முதிர்ந்து அவர் இறந்த போது அவருக்கு கணித மேதை, பொறியாளர், கவிஞர், கட்டிடக்கலை நிபுணர் என்ற பல அடைமொழிகளும், 170 கண்டுபிடிப்புகளுக்கு உரிமையாளர் என்ற புகழும் இருந்தது.

32 வயதில் அனைத்து வழிகளும் மூடப்பட்டதாய் நினைத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள முற்பட்ட மனிதர் அன்று இறந்திருப்பாரானால் இன்று அவரை யாரும் நினைவில் வைத்துக் கொண்டிருக்க சாத்தியமில்லை.

வாழ்க்கையில் பின் வாங்குபவர்கள் என்றுமே வாழ்ந்த சுவடில்லாமல் போய் விடுகிறார்கள். எனவே என்றுமே பின்வாங்காதீர்கள். அடி மேல் அடி விழும் போது, எல்லாமே முடிந்து விட்டது என்று தோன்றும் போது, இனி என்ன இருக்கிறது என்ற விரக்தி வரும் போது பக்மினிஸ்டர் ·புல்லருக்குப் பிரபஞ்சம் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்.


ஒரு ஆங்கிலக் கவி அழகாய் சொன்னார்.

When you get into a tight place and everything goes against you,
until it seems as though you cannot hang on a minute longer,
never give up then, for that is just the place and time that the tide will turn.

- Harriet Stowe

(ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் போது, எல்லாமே உனக்கு எதிராக மாறும் போது, இனி ஒரு நிமிடம் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்று தோன்றும் அந்த முக்கிய தருணத்தில் கண்டிப்பாக தோல்வியை ஒப்புக் கொண்டு பின்வாங்கி விடாதே. ஏனென்றால் அந்த இடத்தில் அந்தத் தருணத்தில் தான் அலை உன் பக்கமாக திரும்பப் போகிறது)

எல்லாமே முடிந்து விட்டது என்று நினைப்பதே ஒரு தனிப்பட்ட கருத்து தான். அந்த தனிப்பட்ட கருத்தும் கூட அடிமேல் அடி வாங்கி நொந்து இருக்கும் பலவீனமான நேரத்தில் பிறக்கும் பொய்யான கருத்து. அது பிரபஞ்ச உண்மை அல்ல. பலவீனமான நேரங்களில் தீர்மானங்களை எடுக்காதீர்கள். அவையும் பலவீனமானதாகவே இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் உள்ளே கேட்கும் சந்தேக இரைச்சல்களைக் கேட்பதை விட்டு மனதை அமைதியாக்குங்கள். பக்மினிஸ்டர் ·புல்லருக்குக் கூட இயற்கையின் அழகில் தன்னை மறந்து லயித்த அந்த நேரத்தில் தான் பிரபஞ்சம் பேசியது.

அப்படி இயற்கையின் அழகிலோ, மேலே குறிப்பிட்டது போல நல்ல தன்னம்பிக்கை தரும் வரிகளைக் கொண்ட நூல்களிலோ, இனிமையான இசையிலோ ஈடுபட்டு மனதை அமைதியாக்கி கவனியுங்கள். பிரபஞ்சம் உங்களுக்கும் சலிக்காமல் அந்த செய்தியைச் சொல்லும் - "நீங்கள் சாமானியர்கள் அல்ல. எல்லையற்ற பிரபஞ்சத்தின் வீரியமான ஒரு அங்கம்"

எல்லையற்ற பிரபஞ்சத்தின் அங்கம் நீங்கள் என்றால் உங்களுக்கு எல்லை எப்படி இருக்க முடியும்.? எல்லைகள் நமது சிற்றறிவால் நாமாக ஏற்படுத்திக் கொள்வதே அல்லவா? நூறு வழிகள் உங்களுக்கு அடைந்திருக்கலாம். ஆனால் கோடானு கோடி வழிகளை பிரபஞ்சம் ஏற்படுத்தி இருக்கும் போது வெறும் நூறில் அனைத்துமே முடிந்து விட்டதாக நீங்கள் எப்படி எடுத்துக் கொள்ள முடியும். இன்னும் பல கோடி வழிகள் உங்களுக்காக பிரபஞ்சத்தால் வகுக்கப்பட்டு இருக்கின்றன. எனவே சோர்வை உதறி விட்டு உற்சாகத்தோடு நிமிருங்கள். புதிய வழிகளை ஆராயுங்கள். வெற்றி அலை உங்கள் பக்கம் திரும்பத்தான் போகிறது.

-என்.கணேசன்

5 comments:

  1. ////வாழ்க்கையில் பின் வாங்குபவர்கள் என்றுமே வாழ்ந்த சுவடில்லாமல் போய் விடுகிறார்கள். எனவே என்றுமே பின்வாங்காதீர்கள். அடி மேல் அடி விழும் போது, எல்லாமே முடிந்து விட்டது என்று தோன்றும் போது, இனி என்ன இருக்கிறது என்ற விரக்தி வரும் போது பக்மினிஸ்டர் ·புல்லருக்குப் பிரபஞ்சம் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்.////

    அருமை!

    ReplyDelete
  2. //எல்லாமே முடிந்து விட்டது என்று நினைப்பதே ஒரு தனிப்பட்ட கருத்து தான். அந்த தனிப்பட்ட கருத்தும் கூட அடிமேல் அடி வாங்கி நொந்து இருக்கும் பலவீனமான நேரத்தில் பிறக்கும் பொய்யான கருத்து. அது பிரபஞ்ச உண்மை அல்ல. பலவீனமான நேரங்களில் தீர்மானங்களை எடுக்காதீர்கள். அவையும் பலவீனமானதாகவே இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் உள்ளே கேட்கும் சந்தேக இரைச்சல்களைக் கேட்பதை விட்டு மனதை அமைதியாக்குங்கள்//


    Really Super....Lines for a right time

    ReplyDelete
  3. Nice content. Please keep posing. Srinivas

    ReplyDelete
  4. I like very much this post, thanks to u for this.
    tvmalai babu

    ReplyDelete