என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, April 11, 2013

பரம(ன்) ரகசியம் - 39



கேஷ் விஷாலி வீட்டுக்குப் போய் சேர்ந்த போது மணி எட்டு. இத்தனை சீக்கிரமாய் மகேஷ் வருவது அபூர்வம் என்பதால் விஷாலி ஆச்சரியப்பட்டாள்.

ஏய் மகேஷ், என்ன இந்த நேரத்துல?

மகேஷ் உடனடியாக பதில் சொல்லவில்லை. “அப்பா இல்லையா?என்று கேட்டான்.

“அவர் வெளியே போயிருக்கார். ஏன், அவர் கிட்ட அவசரமா பேச வேண்டி இருக்கா?

“இல்லை.... என்றவன் சோபாவில் அமர்ந்து இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டான்.

அவள் பயந்து விட்டாள். அவன் அருகில் அமர்ந்தபடி கேட்டாள்.“ஏய் மகேஷ் என்ன ஆச்சு? ஏன் என்னவோ மாதிரி இருக்கே?

“ராத்திரி எல்லாம் தூங்கல விஷாலி... தூங்க முடியல

“ஏன்?


அவன் பதில் சொல்லவில்லை.

“வீட்டுல யாருக்காவது உடம்பு சரியில்லையா?அவள் கவலையுடன் கேட்டாள்.

“எல்லாரும் நல்லா தான் இருக்காங்கஎன்றான்.

“அப்படின்னா வேறென்ன?

அவன் எதுவும் சொல்லாமல் அவளை சோகமாகப் பார்த்தான். பின் சொன்னான். “எனக்கு இதை உன் கிட்ட சொல்லலாமா கூடாதான்னு தெரியல விஷாலி. சொன்னா அவனுக்கு செய்யற துரோகம்னு தோணுது. சொல்லாட்டி உனக்கு செய்யற துரோகம்னு தோணுது. நான் என்ன செய்வேன் விஷாலிஅவன் குரல் கரகரக்க சொன்னான்.

விஷாலிக்கு அவன் பேசுவது ஒன்றும் புரியவில்லை. “ஏய் நீ என்ன துரோகம்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றே? ..எதைச் சொல்லலாமா கூடாதான்னு சொல்றே? அவன்னு நீ யாரைப் பத்தி சொல்றே?” 

எச்சிலை விழுங்கிக் கொண்டு மகேஷ் சொன்னான். “ஈஸ்வர்... அவன் என் கிட்ட சொன்னதைத் தான்.....

“ஈஸ்வர் என்ன சொன்னார்?

மகேஷ் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் இருப்பது போல நடித்தான். அவன் நடிப்பு வினாடிக்கு வினாடி அவளுடைய டென்ஷனை அதிகப்படுத்தியது. ஈஸ்வர் சொன்னதாகச் சொல்லி இருந்ததால் அது என்ன என்பதைத் தெரிந்து கொள்ளா விட்டால் தலை வெடித்து விடும் போல அவளுக்கு இருந்தது.

“சொல்லு மகேஷ்?அவள் பொறுமை போய் குரலில் எரிச்சல் தொனித்தது.

தயக்கத்தை மீண்டும் காட்டி விட்டு அவன் மெல்ல சொன்னான். நான் சொன்னேன்கிறதை அவன் கிட்ட நீ எந்தக் காரணத்துக்காகவும் சொல்லிடக் கூடாது.... சரியா

“சரி சொல்லு

“ப்ராமிஸ்?

“ப்ராமிஸ்

“அவன் பேசறப்ப முழுசா சுயநினைவோட இருந்தான்னு சொல்லிட முடியாது. குடி போதைல தான் பேசினான். ஆனாலும் போதைல கூட அவன் அப்படி பேசி இருக்கக் கூடாது தான்....

அவள் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. “குடி போதைலயா?... என்ன சொன்னார்?

மகேஷ் திடீர் என்று மனம் மாறியவனைப் போல் நடித்தான். காலங்கார்த்தால உன் கிட்ட சொல்ற விஷயமில்லை விஷாலி. நான் இந்தப் பேச்சையே எடுத்திருக்கக் கூடாது... நான் ஒரு லூசு.. விடு விஷாலி. நான் இப்ப இங்கே வரலை.... எதுவும் சொல்லலை.... அப்படியே எடுத்துக்கோ.. சரியா... நான் கிளம்பறேன்

எழுந்து நின்றவனைக் கோபத்துடன் விஷாலி இழுத்து உட்கார வைத்தாள். நீ முதல்ல இருந்து சொல்லு.... என்ன நடந்தது?

வேறு வழில்லாமல் சொல்வது போல தயக்கத்துடன் சொல்ல ஆரம்பித்தான். “நேத்து ராத்திரி எல்லாரும் தூங்கின பிறகு ஈஸ்வர் என்னை அவன் ரூமுக்கு கூப்பிட்டான்... போனேன்... குடிக்க கம்பெனி தர்றியான்னு கேட்டான்.... நான் எனக்கு குடிக்கற பழக்கம் இல்லைன்னு சொன்னேன். (மகேஷ் நண்பர்களுடன் போட்டி போட்டுக் குடிப்பதில் முதலிடம் பெற்றவன் என்பது விஷாலிக்குத் தெரியாது). அவன் என்னை பட்டிக்காடுன்னு தமாஷ் செஞ்சான்... பிறகு பழக்கத்தை இன்னைக்கே ஆரம்பிச்சுகிட்டா போச்சுன்னு சொன்னான்... நான் சாரி வேண்டாம்னு சொன்னேன்.... பிறகு என் கிட்ட பேசிகிட்டே அவன் மட்டும் குடிக்க ஆரம்பிச்சான்... அது வரைக்கும் டீசண்டா பேசிகிட்டு இருந்தவன் பிறகு ஒருமாதிரியா பேச ஆரம்பிச்சான். அமெரிக்கால அவன் செஞ்ச சாதனைகளை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சவன் எத்தனை புது தியரிகளை எல்லாம் பப்ளிஷ் இருக்கான்கிறதை எல்லாம் சொல்லிகிட்டே வந்து கடைசில பப்ளிஷ் செய்யாத ஒரு விஷயத்துலயும் அவன் கில்லாடின்னு சொன்னான்.... அது பொண்ணுங்க சைக்காலஜிலயும் அவன் எக்ஸ்பர்ட்டாம்....அவன் கிட்ட மயங்காத பொண்ணுங்களே இல்லையாம்....

விஷாலிக்கு அவன் சொல்வதை நம்ப முடியவில்லை. அவள் அதிர்ச்சியில் உறைந்தவளாய் அவனைப் பார்த்தாள்.

மகேஷ் பெரும் வேதனையுடன் சொல்வது போல கஷ்டப்பட்டு சொன்னான். “சில பொண்ணுங்க அழகுக்கு மயங்குவாங்களாம்... சில பொண்ணுங்க அறிவுக்கு மயங்குவாங்களாம்... சிலர் பணவசதிக்கும், சிலர் புகழுக்கும் மயங்குவாங்களாம்.. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பலவீனம் இருக்குமாம்... அதைப் புரிஞ்சுக்கிட்டா யாரையும் வலையில் வீழ்த்திடலாமாம். இவன் கிட்ட பொண்ணுங்க எதிர்பார்க்கறது எல்லாமே இருக்கறதால இவன் கிட்ட மயங்காதவங்களே கிடையாதாம். அதை ஒரு பெரிய சாதனையாய் சொல்றான்... அப்ப தான் உன் பேச்சு வந்துச்சு.....

பெரிய மலையுச்சியில் தள்ளப்படக் காத்திருக்கும் துர்ப்பாக்கியவதி போல விஷாலி அடுத்து வருவதற்குக் காத்திருந்தாள்.... அவளுக்கு இப்போதும் அவன் சொல்வதை நம்ப முடியவில்லை.... அதே நேரம் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை....

ஆனால் மகேஷ் சொல்ல வந்ததை உடனடியாகச் சொல்லி விடவில்லை....
“விஷாலி இதுக்கு மேல அவன் சொன்னதை உன் கிட்ட சொல்ற தெம்பு எனக்கில்லை விஷாலி...

விஷாலி முகம் வெளிறிப் போய் இருந்தது. ஆனால் உறுதியான குரலில் சொன்னாள். “என்னவா இருந்தாலும் பரவாயில்லை மகேஷ். சொல்லு...

சிறிது தயங்குவதாக நடித்து விட்டு மகேஷ் தொடர்ந்தான். உன்னை எல்லாம் சாதாரண பொண்ணுங்க லிஸ்டுல சேர்க்க முடியாதாம்... நீ எல்லாம் ரசனைக்கும், பண்பாட்டுக்கும் மதிப்பு தர்றவளாம்... அதனால உன்னை அந்த மாதிரி தான் மடக்கணுமாம்.... அவனுக்கு பெயிண்டிங்க்ஸ்ல கொஞ்சம் கூட இண்ட்ரஸ்ட் இல்லையாம். உனக்காக இண்ட்ரஸ்ட் இருக்கற மாதிரி நடிச்சானாம்... நீ அதுலயும் அவன் அழகுலயும் ஃப்ளாட் ஆயிட்டியாம்.... அனாதை ஆசிரமத்துக்கு உன்னைக் கூட்டிகிட்டுப் போனதும் உன்னை இம்ப்ரஸ் செய்யத்தானாம்....

மலையுச்சியில் இருந்து அவள் விழ ஆரம்பித்தாள்.... அவன் வார்த்தைகள் அவள் இதயத்தை ஈட்டிகளாக துளைக்க விஷாலி திக்பிரமையுடன் மகேஷைப் பார்த்து மிகப் பலவீனமான குரலில் சொன்னாள். “எனக்கு நம்பவே முடியலையே மகேஷ்

எனக்கும் கூட நம்ப முடியலை விஷாலி.... அவன் மத்த நேரங்கள்ல பேசறப்ப அவனை விட டீசண்டான, தங்கமான ஆள் இருக்க முடியுமான்னு எனக்கே கூட தோணி இருக்கு. ஆனா குடிச்சுட்டு அவன் அப்படி பேசினப்ப எனக்கே என் காதுகளை நம்ப முடியலை.... பேசினது அவனல்ல அவனுக்குள்ளே போன விஸ்கி தான்னு சமாதானப் படுத்திக்கத் தான் பார்த்தேன்... ஆனா அப்படியும் அதுக்கு அடுத்ததா அவன் சொன்னதை மட்டும் என்னால சகிச்சுக்கவே முடியலை....

என்ன... சொன்னார்?அவள் வார்த்தைகள் சத்தமில்லாமல் காற்றாய் வந்தன.

”...அவன் கர்வத்தோட என்கிட்ட சிரிச்சுகிட்டே சொல்றான்... அவன் நினைச்சா உன்னை படுக்கை வரைக்கும் கூட கூட்டிகிட்டு வர முடியும்கிறான்... அதைத் தான் என்னால தாங்க முடியல....

சேற்றை வாரித் தன் மீது இறைத்தது போல் விஷாலி உணர்ந்தாள். மகேஷ் அவள் மீதிருந்த பார்வையை வேறிடத்திற்குத் திருப்பிக் கொண்டான். நான் தாங்க முடியாமல் அவன் கிட்ட சொன்னேன். ‘மத்தவங்க மாதிரி விஷாலிய நினைச்சுக்காதே ஈஸ்வர்னு. அவன் சிரிச்சுகிட்டே என் கிட்ட சொன்னான். நீ இப்பவே அவன் வலையில விழுந்தாச்சாம். அனேகமா அவனை காதலிக்கவும் ஆரம்பிச்சிருப்பியாம். அடுத்த லெவலுக்கு உன்னை இழுக்கிறது அவனுக்கு ரொம்பவே சுலபமாம்... அதுக்கு மேல என்னால அங்கே நிக்க முடியல. தலை வலிக்குதுன்னு சொல்லி என் ரூமுக்கு வந்துட்டேன். அங்கேயே இருந்திருந்தா கண்டிப்பா அவனை ஓங்கி அறைஞ்சிருப்பேன். எங்க தகராறுல வீட்டுல எல்லாரும் முழிச்சிருப்பாங்க...

அவள் அவமானத்தால் கூனிக் குறுகிப் போனாள். ஈஸ்வர் அவளை என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று கோபத்துடன் எண்ணினாள். நேற்றைய அழகான நினைவுகள் இன்று அர்த்தம் மாறியதால் அவமான நினைவுகளாக மாறின. எல்லாம் நடிப்பா? எல்லாம் வேஷமா? இப்போதும் அவள் மனதில் ஒரு பகுதி மகேஷ் சொன்னதை நம்ப மறுத்தது. ஆனால் பெரும்பகுதி மகேஷ் ஏன் பொய் சொல்லப் போகிறான் என்று வாதிட்டது. மகேஷ் அவள் சினேகிதன். நல்ல சினேகிதன்... விளையாட்டுப் பருவத்திலே இருந்து அவளுடன் இருந்தவன்... அதுவும் இந்த மாதிரி விஷயத்தில் எல்லாம் யாராவது பொய் சொல்வார்களா?....

மகேஷ் தொடர்ந்தான். “அவன் என் தாத்தா கிட்ட திமிர்த்தனமா நடந்துகிட்டது எனக்கு சுத்தமா பிடிக்கலைன்னாலும் அவனுக்கு தாத்தா மேல் இருக்கிற கோபம் நியாயமானதுன்னு நீ சொன்னதால அவன் கிட்ட எனக்கு நிஜமாவே ஒரு சாஃப்ட் கார்னர் இருந்துச்சு. ஆனா உன்னை இந்த அளவுக்கு அவன் மட்டமா நினைக்கிறதுக்கு என்ன காரணம் இருக்க முடியும் சொல்லு விஷாலி? அதான் சின்ன வயசுல இருந்தே உன்னோட நல்ல நண்பனா இருந்த எனக்குத் தாங்க முடியல....

நேற்று தந்தையின் நினைவு நாள் என்று சோகமாகச் சொன்னவனுக்கு ஆறுதல் தரும் விதமாக ஈஸ்வரைத் தொட்ட்தாலும், காரில் வருகையில் அந்தப் பாடல் வரிகளிலும் இசையிலும் மனம் பறி கொடுத்தவன் போல் அவன் அவள் கை விரல்களைத் தொட்ட போது அவள் ஒன்றும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதாலும் அவளைப் பற்றி இந்த அளவு மட்டமாக அவன் நினைத்து விட்டானோ என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது. மகேஷ் கேட்டதற்கு அவளுக்குக் கிடைத்த காரணம் இது ஒன்று தான். அவளுக்கு உடம்பெல்லாம் கூசியது.. எரிந்தது...


அவன் எனக்கு கசினா இருக்கலாம்.. அவன் அந்தரங்கமா என் கிட்ட குடி போதைல சொன்னதை உன் கிட்ட சொல்றது அவனுக்கு செய்யற துரோகமா கூட இருக்கலாம். ஆனா உன்  கிட்ட சொல்லாமல் இருக்கிறது அதை விடப் பெரிய துரோகம்னு மனசுல தோண ஆரம்பிச்சுது... நான் ராத்திரி எல்லாம் தூங்கல விஷாலி....

அவன் முகத்தைப் பார்த்த போது அவன் இரவெல்லாம் தூங்கவில்லை என்பது உண்மையே என்று தெரிந்தது.

“அவனை சொல்லி தப்பில்ல விஷாலி. அவன் பிறந்து வளர்ந்த நாடு அந்த மாதிரி. அங்கே ஒழுக்கம் எல்லாம் பெரிய விஷயமில்லை. அவன் அழகும், அறிவும் பல பொண்ணுகளை அவன் பின்னால வர வச்சிருக்கும். அவங்களோட அவன் ஜாலியா கண்டிப்பா இருந்திருப்பான்கிறது அவன் பேச்சுல இருந்தே தெரியுது. ஆனா உன்னைப் போய் அவன்.... சே.....மகேஷின் குரல் உடைந்தது.

இந்த இரண்டு நாட்களில் அவளுக்கு இருந்த மிக அழகான உணர்வுகள் எல்லாம் அவன் வார்த்தைகளால் வேரோடு பிடுங்கப்பட்டதால் அவள் உயிர் இருக்கும் போதே செத்துப் போனாள்.

அவளைப் புரிந்து கொள்ள முடிந்த நண்பனாய் மகேஷ் கரகரத்த குரலில் சொன்னான். “வருத்தப்படாதே விஷாலி.. இந்தியால இருக்கற கொஞ்ச நாளுக்கு உன்னை பயன்படுத்திக்கலாம்னு அவன் நினைச்சிருக்கான்.. அவனுக்கு அறிவு இருக்கிற அளவு பண்பாடு இல்லை... மனசைப் படிக்க முடிஞ்ச அளவு மதிக்கத் தெரியலை... (இதெல்லாம் அவன் நேற்று இரவில் இருந்து பல முறை ரிகர்சல் செய்த வரிகள்)... அவன் மனசுல இருக்கறது என்னன்னு நமக்கு தெரிய வந்ததே உன்னோட நல்ல மனசுக்காக கடவுளா பார்த்து ஏற்படுத்திக் கொடுத்த சந்தர்ப்பம்னு எடுத்துக்கோ... அவன் வர்றப்ப மட்டும் ஜாக்கிரதையா இருந்துக்கோ.... அவன் ஹிப்னாடிசமும் தெரிஞ்சவன்... அழகாவும் இருக்கான்....

விஷாலி அவனை அனல் பார்வை பார்த்தாள்.

மகேஷ் கண்களைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான். “தப்பா நினைச்சுக்காதே விஷாலி. அவன் நேத்து ராத்திரி அவ்வளவு உறுதியா சொன்னதால் தான் நான் பயப்படறேன்... அவன் பொண்ணுங்க மனசைப் புரிஞ்சுகிட்டு அதுக்குத் தகுந்த மாதிரி திறமையா நடிக்கத் தெரிஞ்சவன்... நீ சூதுவாது தெரியாதவள்... அதான் எச்சரிக்கை செஞ்சேன்.... அவன் கண்டிப்பா தினம் வந்தாலும் வருவான்...

விஷாலியின் மனதின் உள்ளே எரிமலை குமுறிக் கொண்டிருந்தது. “அவனை இங்கே வர வேண்டாம்னு சொல்லு...

ஈஸ்வரை அவன் என்று அவள் அழைத்த்தையும், வர வேண்டாம் என்று சொல்லச் சொன்னதையும் கேட்கவே மகேஷிற்கு சுகமாக இருந்தது. தயக்கத்துடன் சொன்னான். நான் எப்படி சொல்றது விஷாலி. நான் சொன்னா, நேத்து அவன் சொன்னதையெல்லாம் நான் உன் கிட்ட சொல்லிட்டேன்கிறதை அவன் தெரிஞ்சுப்பான்...

விஷாலிக்கு மகேஷ் சொன்னது போல ஈஸ்வர் கண்டிப்பாக தினம் வந்தாலும் வருவான் என்பது இப்போது சகிக்க முடியதாததாக இருந்தது. எத்தனை அழகாக அவன் இருந்தாலும், எத்தனை அறிவுஜீவியாக இருந்தாலும், எத்தனை நல்லவனாக அவன் நடித்தாலும் படுக்கைக்கு செல்ல இசையும் அளவு  அவள் ஒன்றும் தரம் கெட்ட பெண் அல்ல. அப்படிப் பட்ட கீழ்த்தர நோக்கத்தோடு யாரும் அவள் வீட்டு வாசற்படியை மிதிக்க வேண்டியது இல்லை.... அவள் அவனைப் பார்க்கக் கூட விரும்பவில்லை.

“அவன் செல் நம்பரைக் குடு. நானே சொல்றேன்...”. இரண்டு நாட்கள் ஏமாந்தது போதும் என்று அவள் நினைத்தாள். இனி ஒரு வினாடி கூட ஏமாற அவள் தயாரில்லை. ஒரேயடியாக ஈஸ்வரின் தொடர்பைத் துண்டித்து தலைமுழுகும் வரை அசுத்தமாகவே இருப்பது போல ஒரு உணர்வு அவளிடம் இனி இருந்து கொண்டே இருக்கும்...

இன்று காலை வரை எரிந்து கொண்டிருந்த அவன் மனதில் இப்போது ஐஸ் மழை பெய்ய ஆரம்பித்தது. தயங்குவது போல நடித்துக் கொண்டே ஈஸ்வரின் செல் நம்பரைத் தந்தான்.

ஏதோ ஒரு ஜூரவேகத்தில் இருப்பது போல விஷாலி செல் போன் எண்களை அழுத்தினாள். ஈஸ்வர் குரல் கேட்டது. ஹலோ

அவன் குரல் கேட்டதும் இப்போதும் மனது அவளை அறியாமல் லேசாகியது... அவளுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது. மகேஷ் சொன்னது சரி தான். ஈஸ்வர் ஒரு வசியக்காரன் தான்... அவள் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சொன்னாள். “நான் விஷாலி பேசறேன்... உங்களைப் பார்க்கவோ, உங்க கிட்ட பேசவோ நான் விரும்பலை... அதனால தயவு செஞ்சு இனிமேல் என் வாழ்க்கைல இருந்து விலகியே இருங்க ப்ளீஸ்...

சொல்லச் சொல்ல அவள் அழுதே விட்டாள். செல் போனை வைத்தபின் அவள் அழுகை அதிகமாகியது.

அதை ஒரு கணம் தாக்குப்பிடித்துக் கொண்டு மகேஷிடம் சொன்னாள். “மகேஷ் எனக்கு மனசு சரியில்லை.... தனியா இருக்க விடறியா?

“சாரி விஷாலி... நான் இதை உன் கிட்ட சொல்லாமலேயே இருந்திருக்கலாம் போல இருக்கு

“இல்லை மகேஷ், நீ நல்லது தான் செஞ்சிருக்கே. கசப்பானாலும் உண்மை உண்மை தான்.....

அவளைப் பரிதாபப் பார்வை பார்த்து விட்டு மகேஷ் எழுந்தான். “நான் கிளம்பட்டுமா விஷாலி

அவள் தலையாட்டினாள். அவன் போன பின் கதவை சாத்திக் கொண்டு விஷாலி பேரழுகை அழ ஆரம்பித்தாள்.

ஸ்வருக்கு சிறிது நேரம் எதுவும் புரியவில்லை. அவளுடைய வார்த்தைகள் முழுவதும் பதிவாவதற்கு முன்னால் அவள் கடைசியில் அழுதது உணர்வில் பதிவாகியது. மனம் பதைத்தது. பின்பு தான் வார்த்தைகள் பதிவாகின. அவன் முகம் இறுகியது.

அவனிடம் இப்படி யாரும் சொன்னதில்லை. அவன் அடிக்கடி சீண்டும் பரமேஸ்வரன் கூட இது போல அவனைப் பார்க்கவோ பேசவோ பிடிக்கவில்லை என்றும் அவர் வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கும் படியோ சொன்னதில்லை. அவர் அப்படிச் சொல்லி இருந்தால் கூட அவனால் புரிந்து கொள்ள முடிந்திருக்கும். ஆனால் எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென்று விஷாலி அப்படிச் சொன்னது அவன் ஈகோவை பலமாகத் தாக்கியது.


மனதை ஒரு அமைதி நிலைக்குக் கொண்டு வருவது அவனுக்குப் பெரும்பாடாக இருந்தது. வெளிப்பார்வைக்காவது அப்படி கொண்டு வர சாத்தியமாகும் வரை அவன் அறையிலேயே அமர்ந்திருந்தான். பின் எழுந்தவன் அப்பாவின் புகைப்படம் அருகே வந்து நின்றான்.

எத்தனை பெரிய சைக்காலஜிஸ்டா இருந்தாலும் ஒரு பொண்ணோட மனசைப் புரிஞ்சுக்கறதுல நான் ஏமாந்துட்ட மாதிரி தான் தோணுதுப்பா. நேத்து சொன்னேன் இல்லையா ஒரு பொண்ணைக் காதலிக்க ஆரம்பிச்ச மாதிரி தோணுதுன்னு அது என் பக்க கற்பனை மாதிரி தான் தோணுது. ஆனைக்கும் அடி சறுக்கும்னு சொல்வாங்க இல்லையாப்பா. நானும் சறுக்கிட்டேன் போல இருக்கு...

அவன் சொல்லி விட்டு சிரிக்க முயன்று தோற்றுப் போனான்.....    

இந்த இரண்டு நாட்கள் அவன் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவள், மிக அழகான உணர்வுகளை அவனுக்குள் முதல் முதலாக  ஏற்படுத்தியவள் ஏதோ தூசியைப் போல அவனைத் தட்டி விட்டதை யோசிக்கையில் அவனுக்குள் கோபம் அதிகமாக ஆரம்பித்தது. குறைந்த பட்சம் காரணத்தையாவது அவள் சொல்லி இருக்கலாம்.... அதைக் கூட சொல்லத் தேவை இல்லை என்று அவள் நினைத்ததை அவனால் சகிக்க முடியவில்லை.

காரணம் இல்லாமல், காரணம் சொல்லாமல் இப்படி நடந்து கொள்ளக் கூடிய ஒரு பெண் கண்டிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவளாகத் தான் இருக்க வேண்டும்... அவள் சிகிச்சை பெற வேண்டியவள் ...

ஆனால் அதைப் பற்றி அவன் கவலைப்படப் போவதில்லை. அவள் இனி அவனுக்கு சம்பந்தம் இல்லாதவள்.... ஈஸ்வர் மனதில் உறுதியாக முடிவெடுத்து விட்டான்.


(தொடரும்)

-என்.கணேசன்

Monday, April 8, 2013

தீப ஆரத்தி எடுப்பது எதற்காக?

அறிவார்ந்த ஆன்மிகம்-2


ம் வழிபாட்டு முறைகளில் பலவும் காரணம் புரியாத சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் ஆகி விடுகின்றன. அவற்றை அப்படியே நாமும் பின்பற்றுகிறோமே ஒழிய அவற்றில் புதைந்துள்ள ஆழ்ந்த பொருளை நாம் உணரத் தவறி விடுகிறோம்.  உதாரணத்திற்கு கோயில்களில் இறைவனுக்கு தீப ஆரத்தி எடுப்பதை எடுத்துக் கொள்வோம். தீப ஆரத்தி எடுப்பதை நாம் நாள் தோறும் பார்க்கிறோம் என்றாலும் அது எதற்காக என்றும், ஆரத்தி எடுப்பதன் பின்னால் உள்ள தத்துவம் என்ன என்றும் நம்மில் பெரும்பாலானோர் அறிவதில்லை. அதன் உண்மைப் பொருளை இப்போது பார்ப்போம்.

பூஜையில் இறைவனுக்குச் செய்யப்படும் பதினாறு வகை உபசாரங்களில் தீப ஆரத்தியும் ஒன்று. அதை வடமொழியில் ஷோடச உபசாரா என்று சொல்வார்கள். பூஜை காலத்தில் தீப ஆரத்தி எடுப்பதற்கு முன்பு இறைவன் விக்கிரகத்தின் முன் திரை போட்டு இருப்பார்கள். அந்தத் திரை மறைப்பதால் நம்மால் இறைவனைக் காண முடியாது. நான்என்னும் அறியாமைத் திரை நம்முள் இருக்கும் வரை அதைத் தாண்டி உள்ள எல்லாம் வல்ல இறைவனை நம்மால் அறிந்து கொள்ள முடியாது என்பதை அது குறிக்கிறது. அந்தத் திரை விலகினால் மட்டுமே இறைவனைக் காண முடியும். அப்போதும் கூட இறைவன் மிகத் தெளிவாகத் தெரிவது இல்லை. இறைவனை மிகத் தெளிவாக அறிய ஞானம் என்ற விளக்கு வேண்டும். அந்த ஞான விளக்கொளி இருந்தால் தான் இறைவனை முழுமையாகத் தரிசிக்கும் அனுபவம் வாய்க்கும். அந்த ஞான ஒளி தான் தீப ஆரத்தி. நான் என்னும் ஆணவத் திரை விலகிய பின்னர் ஞானத்தின் துணையுடன் இறைவனைக் காண முடியும் என்பதை தீப ஆரத்தி விளக்குகிறது.

திரை விலகுதல், தீப ஆரத்தி காட்டுதல், இருள் நீங்குதல், இறைவனைக் காணல் எல்லாம் ஏக காலத்தில் நிகழ்வது போல ஆணவம் விலகி, ஞானம் பெற்று, அறியாமை நீங்கி, இறைவனை உணர்தல் எல்லாம் ஏக காலத்தில் மனிதன் மனதில் நிகழ வேண்டும் என்பதை தீப ஆரத்தி குறிப்பால் உணர்த்துகிறது.

உள்ளத்தில் ஞான விளக்கேற்றுவது குறித்து பத்தாம் திருமுறையில் திருமூலர் மிக அழகாகக் கூறுவார்.
  விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
     
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
     
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
     
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!
இதன் பொருள்: உங்களுக்குள் இருக்கும் ஞான விளக்கை ஏற்றி பரஞான வெளியாக இருக்கும் பரம் பொருளை அறியுங்கள். அந்த ஞான விளக்கின் முன்னே உங்கள் வேதனைகள் மாறும். அந்த ஞான விளக்கை விளங்கிக் கொள்ளும் ஞானம் உடையவர்கள் தாங்களே ஞான விளக்காக விளங்குவார்கள்.

(ஞான விளக்கின் ஒளியின் அனைத்தையும் காணும் போது அறியாமையால் நாம் உணர்கின்ற துன்பங்கள் தானாக மாறி விடும் என்றும் ஞானம் பெற்றவர்கள் தாமாக மற்றவர்களுக்கு ஞான விளக்காக இருந்து வழிகாட்டுவார்கள் என்றும் திருமூலர் விளக்குகிறார்.)

கற்பூர தீப ஆரத்தியில் இன்னொரு மெய்ஞான உண்மை வலியுறுத்தப் படுகிறது. கற்பூரம் ஏற்றப்படும் போது அது எரிந்து ஒளி கொடுத்து பின் கடைசியில் இருந்த சுவடே இல்லாமல் முடிந்து விடுகிறது. கற்பூரம் நான், எனது என்ற எண்ணங்களால் ஏற்படும் வாசனைகளைக் குறிக்கிறது. இறைவனில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு வாழும் தன்மையைக் குறிக்கிறது. ஆனால் எல்லாம் இறைவன் என்ற ஞானம் பற்றிக் கொள்ளும் போது மனிதனின் வாசனைகளும், அறியாமையும் கொஞ்சம் கொஞ்சமாய் அழிய மற்றவர்களுக்கு ஒளி தரும் வாழ்க்கையை மனிதன் வாழ ஆரம்பிக்கிறான். அவன் காலம் முடிந்து விடும் போது அவன் வாசனைகளும் முடிந்து போகின்றன. ஒளிமயமான, உபயோகமான வாழ்க்கை வாழ்ந்து முடித்து இருந்த சுவடில்லாமல் அவன் இறைவனுடன் ஐக்கியமாகி விடுகிறான். இது கற்பூர தீப ஆரத்தி மூலமாக உணர்த்தப்படும் இன்னொரு மாபெரும் தத்துவம்.

தீப ஆரத்தியின் முடிவில் தீபத்தின் மேல் நம் கைகளை வைத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு தலையையும் தொட்டுக் கொள்கிறோம். இந்த ஞான ஒளி என் அகக் கண்களைத் திறக்கட்டும். என் எண்ணங்களும், நோக்கங்களும், அறிவும் மேன்மையானதாக இருக்கட்டும்.என்ற பாவனையில் செய்யப்படும் செயலே அது.

எந்திரத்தனமாகக் கோயிலுக்குச் சென்று தீப ஆரத்தியைக் கண்டு இறைவனை வணங்கி அங்கிருந்து எந்த பாதிப்பும் இல்லாமல் கிளம்பி விடாமல் மேற்கண்ட தத்துவக் கண்ணோட்டத்தோடு தீப ஆரத்தியைக் கண்டு வணங்குங்கள். அதுவே உண்மையான பயனுள்ள வழிபாட்டு முறை. அப்படி உயர்ந்த பாவனையுடன் வழிபட ஆரம்பிக்கும் போது மிக மேன்மையான ஆன்மிக அனுபவத்தை உணர்வீர்கள். உண்மையான வழிபாட்டின் பலனை அடைவீர்கள்!

சரி அப்படியானால் மனிதர்களுக்கும் ஆரத்தி எடுக்கிறார்களே அது எதற்காக என்ற கேள்வி ஒருவர் மனதில் எழுவது இயற்கை. அதற்கான பதிலையும் பார்ப்போம்.

புதிதாய் திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் தம்பதியர், குழந்தை பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் தாய், தொலை தூரங்களுக்குச் சென்று வெற்றிகரமாக ஒரு செயலை முடித்து விட்டு வருபவர் முதலானோருக்கு ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இருக்கிறது.

அவர்களுக்கு ஆரத்தி எடுப்பது இறைவனுக்கு ஆரத்தி எடுக்கும் முறையில் இருப்பதில்லை. அவர்களுக்கு ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீருடன் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு கலந்து தண்ணீரை சிவப்பாக்கிக் கொள்கிறார்கள். பின் எண்ணெய் தோய்த்த திரியை விளிம்பில் வைத்து தீபமாக்கி ஆரத்தி எடுக்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா(aura) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது. மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய  திருஷ்டி மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழ வாய்ப்பு அதிகம் உள்ளது.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு இரண்டிற்கும் விஷக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதாக நம் முன்னோர் கண்டிருந்தார்கள் எனவே தான் திருஷ்டி கழிக்கும் சக்தி உள்ள கிருமி நாசினிகளான மஞ்சளையும் சுண்ணாம்பையும் தண்ணீரில் கலந்து திருஷ்டி கழித்து அந்தத் தண்ணீரை வெளியேயே கொட்டி விடுகிறார்கள். வீட்டினுள் நுழையும் முன்பே ஆரா சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப் பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.

எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.

-என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 19-03-2013

  

Thursday, April 4, 2013

பரம(ன்) ரகசியம் - 38




ஸ்வர் சிறிது நேரம் தெருவில் நின்று பார்த்தான். மறுபடியும் அந்த சித்தர் பார்க்கக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று சின்னதாய் ஒரு எதிர்பார்ப்பு அவனுக்கு இருந்தது. ஏதாவது தகவல் தெரிவிப்பதாக இருந்தால் நேரடியாக அவர் தெரிவித்து விட்டுப் போய் இருக்கலாமே என்று தோன்றியது. இந்தக் கண்ணாமூச்சு விளையாட்டுக்கு அது தேவலை அல்லவா? சின்னக் குழந்தைகள் விளையாட்டுப் போல தொட்டு விளையாட்டு எதற்கு? இதில் தேவை இல்லாமல் அந்தக் கணபதியையும் சித்தர் சேர்த்துக் கொணடதை ஈஸ்வர் ரசிக்கவில்லை. பாவம் கணபதி...

திடீர் என்று அவன் போகையில் அண்ணி கிட்டயும் சொல்லிடுங்கஎன்று சொன்னது இப்போது தான் ஈஸ்வர் மூளையில் உறைத்தது... ஏன் அப்படிச் சொன்னான்? எது அவனை அப்படிச் சொல்ல வைத்தது?  ஆனாலும் ஏனோ ஈஸ்வருக்கு கணபதி அப்படிச் சொன்னது பிடித்திருந்தது. குறும்பாகப் புன்னகைத்துக் கொண்டே அன்பாலயத்தினுள்ளே நுழைந்தான்.

அவன் தனியாக வருவதைப் பார்த்தவுடன் விஷாலி கேட்டாள். “கணபதி எங்கே போயிட்டார்

“அவனோட கார் டிரைவர் அவசரப்படுத்தி அவனைக் கூட்டிகிட்டுப் போயிட்டான். என் கிட்டயே சரியா பேச விடலை... கணபதி போறப்ப உன் கிட்ட சொல்லச் சொன்னான்....சொல்லும் போது அவன் ஒருமாதிரியாகப் புன்னகைக்க விஷாலி கேட்டாள். “என்ன ஒரு மாதிரியா சிரிக்கிறீங்க? என்ன விஷயம்?

ஒன்னுமில்லை

அன்பாலயத்தில் இருந்து திரும்பி வருகையில் கணபதியைப் பற்றிய பேச்சு வந்தது. தனக்குப் பதிலாக பிள்ளையாருக்கு பட்டு வேட்டி வாங்க கணபதி ஆசைப்பட்டதை ஈஸ்வர் சொன்ன போது விஷாலி மனம் நெகிழ்ந்து சொன்னாள். “அந்தப் பிள்ளையார் ரொம்பக் கொடுத்து வச்சவரு. அவர் கிட்ட தங்களுக்கு அது வேணும் இது வேணும்னு வரம் கேட்க வர்ற ஆள்கள் தான் அதிகமா இருக்கும். கணபதி மாதிரி அவருக்கு ஏதாவது தர ஆசைப்படற வேற ஆள்கள் இருப்பாங்கன்னு தோணலை....

ஈஸ்வருக்கும் அப்படியே தோன்றியது. அடுத்ததாக அன்பாலயத்தின் அனாதைக் குழந்தைகள் பற்றி பேச்சு வந்து அதுவும் முடிந்து போக அவர்கள் இருவரும் மௌனமானார்கள். நிறைய பேச இருந்தும் அவர்களால் ஒன்றும் பேச முடியவில்லை. ஈஸ்வர் எஃப் எம் ரேடியோவை ஆன் செய்ய சைந்தவியும், ஜி.வி.பிரகாஷும் பாடிய பாடல் ஒலிபரப்பாக ஆரம்பித்தது.

யாரோ இவன் யாரோ இவன் 
என் பூக்களின் வேரோ இவன் 
என் பெண்மையை வென்றான் இவன் 
அன்பானவன் 


இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும் ஒருவரை ஒருவர் அந்தப் பாடலின் போது மிக ஆழமாக உணர்ந்தார்கள். அவர்களே பாடுவது போல் தோன்ற ஆரம்பித்தது.


உன் காதலில் கரைகின்றவன் 
உன் பார்வையில் உறைகின்றவன் 
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன் 



எங்கே உன்னை கூட்டிச்செல்ல 
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல 
என் பெண்மையும் இளைப்பாறவே 
உன் மார்பிலே இடம் போதுமே 
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே 
மெதுவாக இதயங்கள் இணைகிறதே 
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே 

திடீர் என்று அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள். வார்த்தைகள் சொல்ல முடியாத பலவற்றை அவர்கள் பார்வைகள் பரிமாறிக் கொண்டன. அவன் கைவிரல்கள் மென்மையாக அவள் கைவிரல்களைத் தொட்டன. தொட்டபடியே இருந்தன. கண்கள் பேசியதைப் போல கைவிரல்களும் பேசிக் கொண்டன.


நதியினில் ஒரு இலை விழுகிறதே 
அலைகளில் மிதந்தது தவழ்கிறதே 
கரைசேருமா உன் கைசேருமா 
எதிர்காலமே !

சில தருணங்கள் சாசுவதமானவை. கல்லில் செதுக்கியதைப் போல மனதில் பசுமையாக என்றென்றுக்குமாய் தங்கி விடுபவை. முடிந்து போன பின்னும் நினைவுகளில் திரும்பத் திரும்ப வாழ்ந்து புதுப்பிக்கப் படுபவை. அவர்களைப் பொருத்த வரை அந்தத் தருணம் அப்படியாக மாறி இனிமையாகத் தங்கி விட்டது.

பாட்டு முடிந்த பின் விளம்பரம் வர அது அந்தத் தருணத்தின் இனிமையைக் குறைப்பதாகத் தோன்றவே ஈஸ்வர் ரேடியோவை ஆஃப் செய்து விட்டான். அந்த மௌனமும் இனிமையாக இருந்தது.

விரைவில் விஷாலியின் வீடு வந்து விட்டது. கார் நிற்கும் சத்தம் கேட்டு தென்னரசு வெளியே வந்தார்.

“உள்ளே வா ஈஸ்வர்

“இல்லை அங்கிள் நேரமாயிடுச்சு. கிளம்பறேன். தேங்க்ஸ் விஷாலி...

அவன் போய் விட்டான். விஷாலி அவன் கார் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்திருந்து விட்டு உள்ளே வர தென்னரசு மகளை ஆச்சரியத்துடன் பார்த்தாள். அந்தப் பாடல் மனதில் ஒலித்துக் கொண்டு இருக்க அவன் பார்வையும் பசுமையாய் நினைவில் இருக்க வேறொரு உலகில்  அவள் இருந்ததால் அவள் தந்தையின் முகபாவத்தை கவனிக்கவில்லை....

ஈஸ்வர் ஃபோட்டோ ஸ்டுடியோவிற்குப் போன போது அவன் பெற்றோரின் புகைப்படம் பெரியதாக லேமினேட் செய்யப்பட்டு தயாராக இருந்தது. அவர்களை நேரில் பார்ப்பது போல் அவனுக்குத் தோன்றியது. அது அவன் பெற்றோர் கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படம். அதை எடுத்த ஒரு வாரத்தில் அவன் அப்பா இறந்து போனார்...

வீட்டுக்குப் போன போது வாசலிலேயே பெரும் தவிப்புடன் அவனுக்காக மகேஷ் காத்திருந்தான். ஈஸ்வரை அவன் கூர்ந்து பார்த்தான். ஈஸ்வர் ஏதோ பாடலை முணுமுணுத்தபடி காரை விட்டு இறங்கினான். “உன் காதலில் கரைகின்றவன், உன் பார்வையில் உறைகின்றவன், உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன் 

மகேஷ் காதில் அந்தப் பாடல் நாராசமாக ஒலித்தது. நேற்றெல்லாம் ஏதோ ஆங்கிலப் பாடல் பாடிக் கொண்டிருந்தவன் இன்று தமிழுக்கு மாறி விட்டதற்கும் விஷாலிக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று சந்தேகப் பட்டான்.

ஈஸ்வர் கையில் இருந்த லேமினேட் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பார்த்து மகேஷ் நினைத்துக் கொண்டான். ‘முதல்லயே இவங்கப்பா ரூம் ஒரு ம்யூசியம் மாதிரி இருக்கு. அதுல இதையும் சேர்த்து வைக்கணுமாக்கும்

என்ன மகேஷ் எனக்காக காத்துகிட்டிருக்கற மாதிரி இருக்குஈஸ்வர் கேட்ட்து ஏதோ பொடி வைத்துக் கேட்டது போல இருந்தது.

மறுக்க முடியாமல் மகேஷ் சமாளித்தான். “ஆமா... என்னோட கார் கொஞ்சம் மக்கர் பண்ணுது. அதான் அம்மா காரை எடுத்துட்டுப் போலாம்னு நினைச்சுட்டு காருக்காக காத்துகிட்டிருந்தேன்....

கார் சாவியை ஈஸ்வர் மகேஷ் கையில் தந்தான். தந்தவன் ‘இனி போவதானால் போகலாம்என்கிற விதமாய் பார்க்கவே மகேஷ் அசடு வழிந்தபடி சொன்னான். பரவாயில்லை, நாளைக்குப் போய்க்கறேன்

மீனாட்சி அண்ணன், அண்ணி புகைப்படத்தைப் பார்த்து பரவசம் அடைந்தாள். “இது எப்ப எடுத்தது ஈஸ்வர்?

இது தான் அவருடைய கடைசி ஃபோட்டோ என்று அவன் தெரிவித்த போது அவள் அதை அண்ணன் நினைவில் கண்கலங்க பார்த்தாள். இன்று அப்பாவின் நினைவு நாள் என்று சொல்ல வாயெடுத்த ஈஸ்வர் அவளை மேலும் கண்கலங்க வைக்க மனமில்லாமல் வாயை மூடிக் கொண்டான். 

ஆனந்தவல்லி “யார் ஃபோட்டோ அது?என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.

“எங்கப்பா அம்மாவோட ஃபோட்டோ. நீங்க தானே இந்த ஹால்ல அவங்க ஃபோட்டோவை மாட்டிக்கலாம்னு சொன்னீங்க

தாராளமா மாட்டிக்கோஎன்று ஆனந்தவல்லி சொல்ல ஈஸ்வர் “வீட்டு உரிமையாளர் கிட்ட அனுமதி வாங்கியாச்சுஎன்று சொன்னபடியே ஐந்து நிமிடங்களில் சுவரில் ஆணியடித்து மாட்டி விட்டான்.

அண்ணாவின் புகைப்படம் ஹாலில் மாட்டியது மீனாட்சிக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு புறம் அப்பாவை நினைக்கையில் பயமாக இருந்தது. அவள் அண்ணனின் அறையில் அவன் நினைவாக எதை வைத்துக் கொண்டாலும் எதுவும் சொல்லாத அவர் தன் மகனை நினைவுபடுத்தும் எதையும் மற்ற இடங்களில் அனுமதித்ததில்லை. ஹாலில் அவர், அவர் மனைவி புகைப்படத்தைத் தொட்ட மாதிரியே ஈஸ்வர் மாட்டி இருக்கும் படத்தைப் பார்த்தால் என்ன சொல்வார்?....

மகேஷ் அதிர்ச்சியுடன் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான். இதை இங்கே மாட்டவா அவன் கொண்டு வந்தான்?’.  பரமேஸ்வரனுக்கு எதிராக சிறிதும் பயமில்லாமல் ஈஸ்வர் இப்படிச் செய்யக் காரணமே ஆனந்தவல்லி தான் என்று நினைத்து அவன் மனதிற்குள் அவளை சபித்தான்.  “இந்தப் பாழாய் போன கிழவி தாராளமா ஃபோட்டோவை மாட்டிங்கோங்கறா. வீட்டு உரிமையாளர் கிட்ட அனுமதி வாங்கியாச்சுன்னு  இவனும் சொல்றான். இப்படி ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்கிற இவன் நாளைக்கு எங்கப்பாவோட பங்கைக் குடுன்னு சொல்ல மாட்டாங்கறது என்ன நிச்சயம்....

பெற்றோரின் படத்தை சற்று தள்ளி நின்று ரசித்து விட்டு பாடலை முணுமுணுத்தபடியே ஈஸ்வர் தனதறைக்குப் போனான். ஆனந்தவல்லி ஈஸ்வரைப் புன்னகையோடு பார்த்துக் கொண்டே மீனாட்சியைக் கேட்டாள். “ஏண்டி, உன் மருமகன் ரெண்டு நாளா ரொம்பவே சந்தோஷமாய் இருக்கான் கவனிச்சியா?

மீனாட்சி சொன்னாள். “இப்ப தான் இந்த வீடு அவன் வீடு மாதிரி தோண ஆரம்பிச்சிருக்கு போல இருக்கு. அதான்...

இதொரு வெகுளி.. இதுக்கு எதுவும் சட்டுன்னு தெரியாதுஎன்று நினைத்த ஆனந்தவல்லி அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவள் கேட்டதன் முழு அர்த்தம் விளங்கிய மகேஷ் மனதிற்குள் எரிமலை வெடித்து சிதறிக் கொண்டிருந்தது.

அறைக்குள் நுழைந்த ஈஸ்வர் அவன் அப்பாவின் புகைப்படத்திற்கு ரோஜாப் பூமாலை போடப் பட்டிருந்ததைப் பார்த்தான். அப்போது தான் அவன் சொல்லாமலேயே அத்தை அந்த நாளை நினைவு வைத்திருந்து மாலை போட்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட போது அத்தை மேல் அவனுக்கு இருந்த பாசம் கூடியது.  

அவன் அப்பாவின் புகைப்படம் முன் நின்று மெல்ல சொன்னான். “அப்பா. நான் ஒரு பொண்ணைக் காதலிக்க ஆரம்பிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்....”. அவர் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக அவன் தன் மனதில் உள்ளதை முதலில் அவரிடம் தான் தெரிவித்திருப்பான்....

பரமேஸ்வரன் அன்று தாமதமாகத் தான் வீட்டுக்கு வந்தார்.  வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஹாலில் முதலில் கவனித்தது தன் மகன், மருமகள் புகைப்படத்தைத் தான். சுவரில் கூட அவன் அவர் புகைப்படத்திற்கு அருகிலேயே இருந்தான்.... ஒரு சின்ன பலவீனத்திற்குப் பின் அவர் முகம் இறுகியது. அவர் முகபாவனை மறைவாக நின்று கொண்டிருந்த மகேஷிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஹாலில் என்றுமில்லாத அதிசயமாய் ஆனந்தவல்லி காலை நாளிதழை மிகவும் கவனமாகப் படிப்பது போல பாவனை செய்து கொண்டு மகனை ஓரக்கண்ணால் நோட்டமிட்டுக் கொண்டு இருந்தாள். ஆனால் அவள் தலை நிமிரவில்லை.

மீனாட்சி தந்தையின் கவனத்தைத் திருப்ப முயற்சி செய்தாள். “என்னப்பா இன்னிக்கு லேட்?

மகள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் பரமேஸ்வரன் ‘இதெல்லாம் என்னஎன்பதைப் போல அவளைக் கூர்மையாகப் பார்த்தார். புகைப்படத்தை மாட்டியது ஈஸ்வர் தான் என்பதால் அவர் அவனிடம் கோபமாக ஏதாவது பேசி தாத்தாவிற்கும், பேரனிற்கும் இடையே விரிசல் அதிகரித்து விடுமோ என்று பயந்த மீனாட்சி மெல்ல சொன்னாள். “அவன் பாட்டி கிட்ட கேட்டு தான் மாட்டி இருக்கான்... பாட்டி தாராளமா மாட்டிக்கோன்னு சொன்னதால தான் அவன்...என்று இழுத்தாள்.

அடிப்பாவி. அந்த தாராளமாங்கிற வார்த்தையை ஏண்டி அவன் கிட்ட சொல்லிக் காண்பிக்கறாய்என்று மனதிற்குள் திட்டிக் கொண்டாலும் காதில் எதுவும் விழாதவள் போலவே நாளிதழில் மூழ்கி இருப்பது போல் ஆனந்தவல்லி நடித்தாள்.

தாயை முறைத்துப் பார்த்து சிறிது நின்ற பரமேஸ்வரன் அவள் தலை நிமிராததைப் பார்த்து உன் பாட்டிக்கு நாளைக்கு என்ன பரிட்சையா நடக்குது இவ்வளவு சீரியசா படிக்கறதுக்கு?என்று மீனாட்சியிடம் கேட்டார்.

மீனாட்சி சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். ஆனந்தவல்லி அதுவும் காதில் விழாதது போல நடித்தாள்.

மீனாட்சி தந்தையிடம் சரி சாப்பிட வாங்கஎன்றாள்.

“சாப்பாடு வேண்டாம்மா. பசியில்லை

“வெறும் வயித்துல மாத்திரைகள் சாப்பிடக்கூடாது. அதனால கொஞ்சமாவது சாப்பிடுங்க. கரிசனத்துடன் சொன்ன மகளைப் பார்த்த பரமேஸ்வரன் முக இறுக்கம் சற்று தளர்ந்தது. சாப்பிடப் போனார். ஆனந்தவல்லி நாளிதழைக் கீழே வைத்து விட்டு ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள். எழுந்தவள் மகன் வருவதற்கு முன் தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.

பரமேஸ்வரன் சாப்பிடும் போது எதுவும் பேசவில்லை. பேசும் மனநிலையில் அவர் இல்லை. மகளுக்காக ஏதோ சிறிது சாப்பிட்டு விட்டு தனதறையை நோக்கி நடந்தார். அவர் நடையில் தெரிந்த தளர்ச்சியைப் பார்த்த மீனாட்சிக்கு மனம் வலித்தது...

பரமேஸ்வரன் ஈஸ்வர் அறையைக் கடக்கையில் அவன் தன் தாயிடம் போனில் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. ”..இப்படி இன்னைக்கு அப்பாவோட நினைவு நாள் மறக்க முடியாத நாளாய் அமைஞ்சுடுச்சும்மா. இப்ப அவர் ரூம்ல அவர் சேர்ல உட்கார்ந்துகிட்டு தான் உன் கிட்ட பேசிகிட்டிருக்கேன். எனக்கென்னவோ அப்பா மடியிலேயே உட்கார்ந்து இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங்க்ம்மா....

பரமேஸ்வரன் அன்று இரவு நீண்ட நேரம் உறங்கவில்லை. அவர் போலவே அன்று நீண்ட நேரம் உறக்கம் வராமல் தவித்த இன்னொரு ஜீவன் மகேஷ் தான். தாத்தா ஹாலில் இருந்த அந்தப் புகைப்படத்தைப் பார்த்து விட்டு பொங்கி எழுவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்த அவனுக்கு உறக்கம் வரவில்லை. அவன் தன் வாழ்க்கையில் மிக சக்தி வாய்ந்த நபராய் நினைத்த தாத்தாவே ஈஸ்வர் முன் வலுவிழந்து போய் நிற்பதை அவனால் சகிக்க முடியவில்லை. “அம்மாவும் அந்தக் கிழவியும் சேர்ந்து அவரை பலவீனப்படுத்தி விடறாங்கஎன்று அவர்கள் இருவர் மீதும் கோபப்பட்டான்.

ஈஸ்வர் நினைத்ததை எல்லாம் ஒவ்வொன்றாக சாதித்துக் கொண்டே வருவது பெரிய ஆபத்து என்று மகேஷ் பயந்தான். அவன் சாதனை விசாலி வரைக்கும் நீண்டது அவன் இதயத்தை அமிலமாய் அரித்துக் கொண்டு இருந்தது. ஏதாவது செய்யாவிட்டால் அனைத்தையும் இழந்து போய் விட வேண்டி வரும் என்று நினைத்தான். வீட்டிற்குள் மீனாட்சியும், ஆனந்தவல்லியும் இருக்கும் வரை தன்னால் ஈஸ்வரை பெரிதாக எதுவும் செய்ய முடியாது என்பது அவனுக்குப் புரிந்தது.  ஆனால் விஷாலி விஷயத்தில் அவனால் முடியும் என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. குழந்தைப் பருவத்தில் இருந்து அவளைக் கவனித்தவன் அவன். அவளை ஈஸ்வரிடம் இருந்து பிரிப்பது பெரிய விஷயமில்லை...

அன்றிரவு முழுவதும் விழித்திருந்து ஈஸ்வரையும் விஷாலியையும் நிரந்தரமாகப் பிரித்து விட திட்டம் தீட்டி முடித்து விட்டு செயல்படுத்த காலையிலேயே மகேஷ் விஷாலி வீட்டுக்குக் கிளம்பி விட்டான்.

(தொடரும்)

என்.கணேசன்