என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, March 24, 2022

இல்லுமினாட்டி 147



க்ரிஷும், அக்ஷயும் அந்த சர்ச்சை நோக்கிக் காரில் சென்று கொண்டிருந்தார்கள். அக்ஷயை ஆபத்தில் ஈடுபடுத்துகிறோம் என்ற குற்ற உணர்ச்சி க்ரிஷுக்கு இருந்து கொண்டே இருந்தது. தனக்கு என்னவானாலும் சரி அக்ஷய் ஆபத்தில்லாமல் திரும்ப வேண்டும் என்று அவன் பிரார்த்தித்து விட்டு தான் கிளம்பியிருக்கிறான். மாஸ்டரையும் மானசீகமாக வணங்கி விட்டுத் தான் கிளம்பியிருந்தான். அவர் கனிவுடன் அவனைப் பார்த்ததை உணர்ந்தான். அவர் ஆசி இருக்கிறது. இனி அக்ஷய்க்கு எந்த ஆபத்தும் இல்லாமல் வேறு என்ன ஆகிறதோ ஆகட்டும் என்று க்ரிஷுக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது.  

அக்ஷய் சொன்னான். “நீ எப்போதுமே என் அருகில் தான் இருக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு அடி தூரத்தை விட அதிக இடைவெளி விட்டு நகர்ந்து விடக்கூடாது.”

காரோட்டிய படியே க்ரிஷ் தலையசைத்து விட்டு மெல்ல ஒரு வேண்டுகோள் விடுத்தான். “எனக்கு ஒரே ஒரு வாக்கு கொடுப்பீர்களா?”

என்ன?”

எனக்கு ஏதாவது ஆகி விட்டால் தயவு செய்து நீங்கள் தப்பித்து விட வேண்டும். உங்களுக்கு ஏதாவது ஆனால் என் ஆத்மா சாந்தியடையாது.”

மறுக்க வாய் திறந்த அக்ஷய் அவன் முகத்தில் தெரிந்த குற்றவுணர்ச்சியைப் பார்த்து வாயை மூடிக் கொண்டு தலையசைத்தான். அவன் மரணத்தையும் ஏற்றுக் கொண்டு அங்கே போய் என்ன சாதிக்கப் போகிறான் என்று அக்ஷய்க்கு விளங்கவில்லை. அவன் தலையசைத்தவுடன் க்ரிஷ் நிம்மதி அடைந்தது தெரிந்தது. அவன் முகத்தில் தெளிவும் அமைதியும் தெரிய ஆரம்பித்தன. ஏனோ அந்தக் கணத்தில் அவன் மைத்ரேயனை அக்ஷய்க்கு நினைவுபடுத்தினான்.

கார் சர்ச்சை அடைந்த போது இருட்ட ஆரம்பித்திருந்தது. காரிலிருந்து இருவரும் இறங்கினார்கள். அக்ஷய் க்ரிஷிடம் மறுபடி நினைவுபடுத்தினான். “நான் சொன்னது நினைவிருக்கட்டும். என் அருகிலேயே தான் நீ இருக்க வேண்டும்.”


விஸ்வம் இப்போது தனக்குள் எல்லையில்லாத சக்தியை உணர்ந்திருந்தான். அந்தச் சுவடி சொல்லியிருந்தது போல் அவன் தியானத்தில் அமர்ந்திருந்த போது பிரமிடுக்குள் இருந்த அந்தப் பெருவிழி அவனுக்குள் ஏராளமான சக்திகளைப் பாய்ச்சிக் கொண்டிருப்பதை உணர்ந்தான். முன்பு போல் அந்தப் பெருவிழி அவனை ஏமாற்றி விடவில்லை. ஆனால் இப்போது உணர்ந்த சக்திகளும் கூட இந்த உடல் ஏற்றுக்கொள்ள முடிந்த அளவு அதிகமே ஒழிய அவன் முந்தைய உடலில் இருந்த சக்திகளுக்கு இணையல்ல. ஆனாலும் இந்த அளவையே இவ்வளவு சீக்கிரம் அடைய முடியும் என்று அவன் எண்ணியிருக்கவில்லை.

ஜிப்ஸியின் கிதார் இசை கேட்டு எழுந்த போது விஸ்வம் அடைந்திருந்த சக்திகளால் உற்சாகத்தின் உச்சியில் இருந்தான், ஆனால் ஜிப்ஸி சொன்ன செய்தி  அத்தனை உற்சாகத்தையும் வடிய வைத்து  அவனுக்குள் ஆத்திரத்தை நிரப்பி இருந்தது.

தூரத்தில் க்ரிஷும், அக்ஷயும் வருவதை விஸ்வம் மறைந்து நின்று பார்த்தான். அவர்களை நேரில் பார்க்கும் போது ஆத்திரம் இன்னும் அதிகமாகியது.  இப்படி நேரில் வர க்ரிஷுக்குத் தைரியம் தந்தது அக்ஷய் கூட இருப்பது தான் என்று நினைத்த விஸ்வம் தன் சக்திகளைக் குவித்து அக்ஷயின் மனதை ஆக்கிரமித்தான். இது வரை அவன் ஆக்கிரமித்திருந்தவர்கள் எல்லாம் திடீரென்று சிறைப்பட்டது போல உணர்ந்து ஸ்தம்பித்து அசைய முடியாமல் நின்று விடுவார்கள்.

அக்ஷய் விஸ்வத்தின் சக்தி தன்னை ஆக்கிரமிப்பதை உணர்ந்தான். கட்டப்பட்டது போல் உணர்ந்தாலும் சிரமத்துடன் அவனால் தொடர்ந்து நடக்க முடிந்தது. அந்தச் சிரமமும் அவனுக்குத் தான் தெரிந்ததே ஒழிய பார்ப்பவர்களுக்கு வெளியே தெரியவில்லை.  அதே நடை, அதே வேகம், அதே அமைதி….

விஸ்வம் திகைத்தான். முதல் முறையாகத் தன் உடலில் இந்த அளவு கட்டுப்பாடுள்ள இன்னொரு மனிதனை அவன் பார்க்கிறான். அமானுஷ்யன் என்ற பெயர் வெறுமனே வைக்கப்பட்டதல்ல என்பது அவனுக்குப் புரிந்தது. ஆக்கிரமித்திருந்த அமானுஷ்யனை அவன் ஆராய்ந்தான். தெளிவான மனம் விரைவான அறிவு உடலில் முழுக் கட்டுப்பாடு என்ற மூன்றையும் அக்ஷயிடம் விஸ்வம் பார்த்தான். அபூர்வ சக்திகள் அதிகம் பெற்றிருக்காதவன் என்றாலும் கூட, இந்த மூன்றுமே சேர்ந்திருக்கும் ஒருவனைச் சமாளிப்பது சுலபமல்ல என்று புரிந்தது.

சர்ச்சின் உள்ளே இருள் மண்டியிருந்தது. ஆனாலும் இருவரும் வாசலைத் தாண்டி உள்ளே சென்றார்கள். அவர்கள் உள்ளே ஐந்தடிகள் வைத்தபின் விஸ்வம் சொன்னான். “அங்கேயே நில்லுங்கள். இனி ஒரு அடி எடுத்து வைத்தால் உங்கள் உயிர் உங்கள் உடலில் தங்காது

க்ரிஷும் அக்ஷயும் சேர்ந்தே நின்றார்கள். க்ரிஷுக்கு உள்ளே சுத்தமாக எதுவும் தெரியவில்லை. ஆனால் அக்ஷயும் இருட்டுக்குப் பழக்கமாயிருந்தவன், இருட்டில் காணவும், இயங்கவும் முடிந்தவன் என்பதால் விஸ்வம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்ததுடன் இருட்டிலேயே அவனை எடைபோடவும் செய்தான்.

விஸ்வத்துக்கு இது இரண்டாவது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டான். “நீ எதற்கு வந்தாய் க்ரிஷ்?”

உன்னிடம் நான் சிறிது பேச வேண்டும்என்றான் க்ரிஷ்

நீ ஒரு முட்டாள் க்ரிஷ்ஏளனமாக விஸ்வம் சொன்னான்.

உண்மை. அதை நானே பல முறை உணர்ந்திருக்கிறேன் நண்பனே

விஸ்வம் திகைத்தான். இந்தப் பதிலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் நண்பனே என்று சொன்னதை அவனால் ரசிக்க முடியவில்லை. இப்படி நண்பன் என்று சொல்லியே அவனை க்ரிஷ் இல்லுமினாட்டி கூட்டத்தில் கவிழ்த்ததை அவன் மறக்க முடியாது. “உன்னிடம் நான் பேச விரும்பவில்லை க்ரிஷ். நீ இங்கிருந்து போகலாம்....”

நான் சொல்ல வந்ததைச் சொல்லாமல் போக முடியாது நண்பனே

அவன் மறுத்ததும், மறுபடி நண்பன் என்று அழைத்ததும் ஆத்திரத்தை அதிகப்படுத்த விஸ்வம் சொன்னான். ‘இனி ஒரு நிமிடத்திற்குள் நீ இங்கிருந்து போகா விட்டால் பின் நீ உயிரோடு போக முடியாது க்ரிஷ்

நீ ஏன் என் பேச்சைக் கேட்பதற்குப் பயப்படுகிறாய் நண்பா?” என்று க்ரிஷ் கேட்டான்.

அதற்கு மேல் விஸ்வத்துக்குத் தாங்க முடியவில்லை. மின்னல் வேகத்தில் அவன் க்ரிஷ் மேல் பாய்ந்தான்.  அடுத்த வினாடி அவன் க்ரிஷ் முன்னால் இருந்தான். க்ரிஷைக் கழுத்தை நெறிக்கக் கைகளை உயர்த்தினான். அதற்கடுத்த வினாடி அக்ஷயால் பலமாகத் தள்ளப்பட்டு சர்ச்சின் பிரார்த்தனை பெஞ்சில் விழுந்து எழுந்தான். இது அவனுக்கு மூன்றாவது உச்சக்கட்ட அதிர்ச்சியாக அமைந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் போக முடிந்த அவனை இருட்டில் தெளிவாக அக்ஷய் பார்த்ததுடன் அதே வேகத்தில் வலிமையாகத் தள்ளிவிட முடிந்ததை  அவனால் சகிக்க முடியவில்லை. அப்படித் தள்ளி விடுவதற்குப் பதிலாக அக்ஷய்க்கு நுணுக்கமாகத் தெரிந்த கழுத்து நரம்பில் வர்மக்கலை முடிச்சைப் போட்டிருந்தால் இன்னேரம் அவன் அசைய முடியாமல் கீழே விழுந்து கிடக்க நேர்ந்திருக்கும் என்பதை  உணர்ந்தபடியே விஸ்வம் அவமானத்துடன் மெல்ல எழுந்தான். வாழ்க்கையில் முதல் முறையாக ஒருவன் அவனை அடித்து வீழ்த்தியிருக்கிறான்…. கோமாவில் வீழ்த்த முடிந்தும் அவன் அதைச் செய்யாமல் காட்டிய கருணை விஸ்வத்தைச் சுட்டது.

ஆத்திரத்துடன் விஸ்வம் சொன்னான். “அக்ஷய். உனக்கும் எனக்கும் இடையே எந்தப் பகையும் இல்லை.  உன்னிடம் என் சக்திகளை விரயமாக்க நான் விரும்பவில்லை. அவனை அழைத்துக் கொண்டு போய் விடு. இல்லா விட்டால் நீயும் உயிரோடு போக முடியாது. இது நிச்சயம்

அக்ஷய் அமைதியாகச் சொன்னான். “அவன் சொல்வதைச் சொல்ல நீ அனுமதித்தால் பிறகு நானும் அவனும் இரண்டு பேருமே சேர்ந்து வெளியே போய் விடுவோம்.”

அது வரை மறைந்திருந்து கவனித்துக் கொண்டு மட்டுமே இருந்த ஜிப்ஸி கூவினான். “க்ரிஷை நீ பேச அனுமதிக்காதே. அவன் பேச்சே ஆபத்து.”

க்ரிஷுக்குச் சத்தங்கள் கேட்டதே ஒழிய என்ன நடக்கிறது என்றே சரியாகத் தெரியவில்லை.  அவன் முன் நிழல் பாய்ந்தது போல் ஒரு உருவம் வந்ததும் அடுத்த வினாடி மரப் பெஞ்சில் தடாலென்று எதோ விழுந்த சத்தமும் கேட்டதே தவிர அக்ஷய் விஸ்வத்தைத் தள்ளி விட்டிருந்தது கூட அவனுக்கு அருகில் இருந்தும் தெரிந்திருக்கவில்லை.   இப்போது இன்னொருவன் கூவி பேச அனுமதிக்க வேண்டாம் என்று சொல்வது மட்டும் கேட்கிறது. இந்த ஆளும் அவன் பார்வைக்குப் பவில்லை. ஜிப்ஸி அக்ஷய் பார்வையிலும் அகப்படாமல் மறைவாகவே இருந்தான்.

அக்ஷய் அமைதியாகக் கேட்டான். “உன் கூட்டாளியைப் போலவே நீயும் க்ரிஷ் பேசுவதைக் கேட்கப் பயப்படுகிறாயா விஸ்வம்?”

(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.




Monday, March 21, 2022

யாரோ ஒருவன்? 77


பாம்பாட்டி நரேந்திரன் விசாரித்த போது ஒரே ஒரு விஷயத்தைத் தவிர எல்லாவற்றையும் சொல்லி விட்டான். அவன் சொல்லாமல் விட்ட விஷயம் நாகராஜ் கடைசியாக அவனுக்குச் சொன்ன அறிவுரை. “உன்கிட்ட இன்னும் கொஞ்சம் திருட்டுத்தனமும், ஏமாத்தற புத்தியும் இருக்கு. அதை விட்டுடுடறப்ப உன்னைப் பிடிச்சிருக்கற எல்லா பீடையும் கூட விலகிடும்என்று நாகராஜ் சொன்னதற்குப் பதிலாகநீ நல்லவனாகவே வாழ்ந்துட்டு வா. உன்னைப் பிடிச்சிருக்கிற எல்லா பீடையும் கூட விலகிடும்என்று அறிவுரை சொன்னதாகச் சொன்னான்.

அவன் சொன்ன விஷயங்கள் நரேந்திரனைத் திகைக்க வைத்தன. கற்பனை வளத்தில் அம்புலிமாமா கதைகளை மிஞ்சியபடி இருந்தது பாம்பாட்டி சொன்ன விசேஷ நாகரத்தினம் பற்றிய தகவல். அவன் திகைப்பும், சந்தேகமும் அவன் முகத்தில் பிரதிபலித்திருக்க வேண்டும். பாம்பாட்டி சொன்னான். “படிச்சவங்களுக்கு இதெல்லாம் நம்பக் கஷ்டம் தான் சார்

நரேந்திரன் சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் அவனையே கூர்ந்து பார்த்தான். பிறகு கேட்டான். “நீ நாகராஜை இதுக்கு முன்னால் பார்த்ததே கிடையாதா?”

இல்லை சார். ஆனா கேள்விப்பட்டிருக்கேன்...”

என்னவெல்லாம் கேள்விப்பட்டிருக்கே?”

மகராஜ் நாகசக்தி இருக்கிறவர் கடந்த காலம் எதிர் காலம் ரெண்டையும் சொல்லக்கூடியவர், அவரைச் சந்திக்கறதே கஷ்டம்னெல்லாம் கேள்விப்பட்டிருக்கேன்

ஆனா அந்த வீட்டில் தான் அவர் இருக்கார்னு தெரிஞ்சது அந்தப் பக்கத்து வீட்டுக் கிழவர் சொல்லித் தானா?”

ஆமா சார்

அந்தக் கிழவர் உன் கிட்ட வலிய வந்து பேசினது எதுக்குன்னு நினைக்கிறாய்?”

தெரியலை சார். ஆனா அந்த ஆள் நல்ல ஆளில்லைன்னு உள்மனசு சொல்லுச்சு

நாகராஜ் மகராஜைப் பத்தி உன் உள்மனசு என்ன சொல்லுது

அவர் நல்லவர்னு தான் தோணுதுங்க சார்

நரேந்திரன் மனித மனதின் விசித்திரத்தை எண்ணி வியந்தான். கேள்விகள் கேட்டு பணம் கொடுத்த கிழவரை அவன் நல்ல ஆளில்லை என்று சொல்கிறான்எதுவும் தராமல் அறிவுரை மட்டும் தந்த நாகராஜை நல்லவர் என்று சொல்கிறான்....

மீண்டும் அழைத்தால் வரவேண்டும் என்றும், அவன் அழைத்து விசாரித்ததை யாரிடமும் சொல்லக் கூடாதென்றும் கண்டிப்புடன் சொல்லி பாம்பாட்டியை அனுப்பி விட்டு நரேந்திரன் யோசித்தான். இந்த நாகசக்தி, நாகரத்தினம் குறித்து நாதமுனியிடம் கேட்க வேண்டும் என்று முன்பே நினைத்திருந்தது இப்போது அவசியமாகவே தோன்றியது. க்யான் சந்த் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. க்யான் சந்தும் இல்லாத நிலையில் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள மதன்லாலை நெருக்குவதைத் தவிர வேறு வழியில்லை. சாதாரணமாக வாய் திறக்க மாட்டான் என்றாலும் அவனைப் பேச வைக்க வேண்டியிருக்கிறது....


ஜீம் அகமதுக்கு க்யான் சந்தைக் கடத்திய செய்தியும், கடத்தி வைத்திருக்கும் இடம் பற்றிய விவரமும் வந்து சேர்ந்தன. க்யான் சந்த் போன்ற ஒரு துரும்பைக் கடத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை என்றாலும் கூட நரேந்திரனுக்குநாங்களும் இருக்கிறோம்என்று காட்டும் நோக்கத்துடன் தான் அவன் கடத்த உத்தரவிட்டிருந்தான். அந்த ரா அதிகாரி எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்டால் கூட அஜீம் அகமதின் நிழலைக்கூட நெருங்க முடியாது என்பது நிச்சயம். அந்த அளவு தொலைவில் பாதுகாப்பாக இருந்தாலும் கூட சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு தன்னிஷ்டத்துக்கு நடந்து கொள்ளும் அந்த ரா அதிகாரியை அஜீம் அகமதால் அலட்சியப்படுத்த முடியவில்லை. அவனை அடக்கி வைக்க வேண்டும், முடிந்தால் அவன் அப்பனை அனுப்பிய இடத்திற்கே அனுப்பி வைக்க வேண்டும் என்று அஜீம் அகமதுக்குத் தோன்றியது  அதையும் மற்றவர்கள் மூலம் அல்லாமல் தானே நேரில் போய் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக எழுந்ததால் இந்தியா செல்வதென்று அஜீம் அகமது முடிவு செய்தான்.  



ன்று மதியம் கிடைக்க வேண்டிய வறண்ட சப்பாத்தி மதன்லாலுக்கு மட்டும் கிடைக்கவில்லை. சஞ்சய் ஷர்மாவுக்கு மட்டும் சப்பாத்தி, சப்ஜி தட்டைத் தள்ளி விட்டு வந்த தடியன் மதன்லாலிடம்க்யான் சந்தும் இப்ப எங்க கஸ்டடியில தான் இருக்கான். அவன் எல்லா உண்மையும் கக்கிட்டான்என்று மட்டும் சொல்லி விட்டுப் போனான்.

மதன்லால் அதிர்ந்து போனான். ஆரம்பத்தில் சந்தேகப்பட்டாலும், அவனையே கடத்த முடிந்தவர்களுக்கு க்யான் சந்தைப் பேச வைப்பது முடியாத காரியமல்ல என்று தோன்றியது. க்யான் சந்துக்குப் பேராசை இருக்கும் அளவுக்கு மனோதைரியம் போதாது... இப்படியெல்லாம் நடக்கும் என்பதை முன்பே எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று மதன்லால் தன்னையே நொந்து கொண்டான்.... க்யான் சந்தை நரேந்திரன் பேச வைப்பதற்கு முன் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் விட்டது முட்டாள்தனம்...

க்யான் சந்த் உண்மையைக் கக்கி விட்டான் என்பதைக் காரணம் காட்டி, நாயும் சாப்பிடாத வறண்ட ஒரு சப்பாத்தியைத் தர மறுத்து விட்டுப் போன தடியன் மீது ஆத்திரமாய் அவனுக்கு வந்தது. அதையும் விட அதிக ஆத்திரம் அந்த வறண்ட சப்பாத்திக்காக ஏங்கிக் கிடக்கும் அவன் வயிற்றின் மீது வந்தது. என்ன பிழைப்பு இது?

சாயங்காலம் இரண்டு பழைய இரும்பு பக்கெட்கள் நிறைய ஐஸ்கட்டிகள் கொண்டு வந்து அவனுடைய அறையில் தடியன் வைத்தான்.

இந்த ஐஸ்கட்டிகளைக் காண்பித்து பயமுறுத்தி சஞ்சயிடம் உண்மைகளை வாங்கிய கதையை அறிந்திருந்தாலும் அதைக் காண்பித்துக் கொள்ளாமல் மதன்லால் கேட்டான். “என்ன இது?”

அரை மணி நேரத்துல சார் உன் கிட்ட பேசுவாரு. நீ உண்மைய சொல்லாட்டி இதுல உனக்கு அபிசேகம் செய்யச் சொல்லியிருக்காரு

மதன்லால் தடியனிடம் அலட்சியம் காட்டிச் சொன்னான். “அவனே எல்லாம் சொன்னதுக்கப்பறம் என் கிட்ட கேட்க என்ன இருக்கு?”

நீ சொல்றதும், அவன் சொன்னதும் பொருந்துதான்னு பார்க்கத் தான். ரெண்டு பேர்ல யாராவது மாத்தி சொல்லியிருந்தாலும், எதையாவது சொல்லாம விட்டிருந்தாலும் சார் அவங்கள நல்லா கவனிச்சுக்க சொல்லிருக்காரு..”

மதன்லால் கேட்டான். “க்யான்சந்தை எங்க புடிச்சு வெச்சிருக்கீங்க...?”

தடியன் எகத்தாள தொனியில் சொன்னான். ”அதெல்லாம் அவன் கிட்டயே ஒரு நாள் நீ கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்...”

மதன்லால் மிகுந்த ஆர்வத்தோடு கேட்டான். “எப்போ?”

நரகத்துல ரெண்டு பேரும் சந்திக்கறப்பஎன்று சொல்லி விட்டு தடியன் போய் விட்டான்.

இரண்டு நிமிடங்கள் கழித்து சஞ்சய் குரல் மெலிதாய் கேட்டது. “என்னண்ணா அவன் இப்படி சொல்லிட்டு போறான். உங்க ரெண்டு பேரையும் தீர்த்துக் கட்டறதா அவனுக முடிவு பண்ணிட்டானுக போல இருக்கே அண்ணா?”

காதுகளில் நாராசமாக விழுந்த வார்த்தைகளை அலட்சியப்படுத்த முடியாமல் தவித்தாலும் மதன்லால் தன் தவிப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் வீரனைப் போல் பேசினான். “மதன்லால் எத்தனையோ பார்த்தவன். இதற்கெல்லாம் அசந்துட மாட்டான்...”

அசராம இருக்கறதை விட சாகாம இருக்கிறது முக்கியம்ணா...” என்று சஞ்சய் அக்கறையோடு சொன்னது மதன்லாலின் அடிவயிற்றைக் கலக்கியது. கேட்கையில் எரிச்சலாக இருந்தாலும் அந்த வார்த்தைகளில் இருந்த உண்மையை அவன் உணர்ந்தே இருந்தான். இப்படி சிறைபிடிக்கும் அளவுக்குத் துணிந்த நரேந்திரன், ஆளை முடித்துக் கட்டவும் தயங்க மாட்டான் என்பதில் சந்தேகம் தேவையில்லை. தப்பித்துப் போகும் வரையாவது உயிரோடு இருக்க வேண்டியது முக்கியம்.... இரும்பு பக்கெட்களிலிருந்து வீசிய குளிர் தூரத்திலிருக்கும் போதே வாட்டியதுஅதை உடம்பில் கொட்டினாலோ ஜன்னி வருவது நிச்சயம். பிறகு காலை வரை தாக்குப் பிடிப்பது கூடக் கஷ்டம் தான். ஆனால் உண்மையைச் சொன்னாலோ நரேந்திரன் பதிவு செய்து வைத்துக் கொண்டு அதை அவனுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆபத்து இருக்கிறதுமதன்லால் ஆழ்ந்து யோசித்தான். உண்மையை க்யான்சந்த் சொல்லி விட்ட பிறகு க்யான்சந்த் சம்பந்தப்பட்ட உண்மையை மறைப்பதில் அர்த்தமில்லை. ஆனால் க்யான்சந்த் சம்பந்தப்படாத விஷயங்களைச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை.

அந்த உண்மையைக் கூட அவன் தன் மேல் தவறில்லாதபடி சொல்லிக் கொள்ளலாம். க்யான்சந்த் அப்படிச் சொல்லவில்லையே என்று நரேந்திரன் சொன்னால் க்யான்சந்த் தனக்குச் சாதகமாகச் சொல்லியிருக்கிறான், நான் சொல்வது தான் உண்மை என்று சாதிக்கலாம்… ’என்னுடைய ஒரே தவறு அந்த வழக்கைத் தீவிரமாக விசாரிக்காமல் அவர்கள் சொன்ன தகவலை ஏற்றுக் கொண்டு ஃபைலை மூடி விட்டேன் என்பது தான். அதுவும் அப்போதிருந்த வேலைப்பளு காரணமாகச் செய்தது என்று சொல்லி விடலாம்அவன் வாழ்நாளெல்லாம் உண்மைகளை தனக்கேற்ற மாதிரி திரித்து குற்றப்பத்திரிக்கைகளைத் தயாரித்தவன் என்பதால் அனுபவ குறுக்கு புத்தியால் வந்த இந்த யோசனை சரியாகத் தான் இருப்பதாகத் தோன்றியது. ’நரேந்திரன் சந்தேகப்பட்டாலும் கூட, கண்டிப்பாக இதில் எந்த ஓட்டையும் கண்டுபிடிக்க முடியாது…’




(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், சாணக்கியன் உட்பட அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.




Thursday, March 17, 2022

இல்லுமினாட்டி 146




ஜிப்ஸி மெல்ல அவன் இனத்தவர்களை விட பல மடங்கு அறிவிலும் சக்தியிலும் மிஞ்சிய சித்தர்கள், யோகிகள் என்ற வகையினர் இருப்பதைக் கண்டுபிடித்தான். அவர்கள்  மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் எல்லையில்லாத சக்தி படைத்தவர்களாக இருப்பது தெரிந்தது. அவர்களின் சக்தி மனித இனத்தை முழுவதுமாக அழிய விடாமல் மௌனமாக இயங்குவது அவனுக்குத் தெரிந்தது. அவர்கள் சக்திகளும், சக்தி அலைவீச்சுகளும் அவனுடைய ஆராய்ச்சிக்குச் சிக்கவில்லை.

இன்னொரு விஷயம் அவனுக்கு ஒரு புதிராகவே இருந்தது. மனிதர்களின் எண்ணங்கள், நம்பிக்கைகள், செயல்கள் மூன்றும் சேர்ந்தே விதியாக மாறுகின்றன என்று கணிதக்கோட்பாடு போல அவன் கணித்திருந்தான். அப்படியே குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் இப்படி முடிவார்கள் என்று அவனால் துல்லியமாகக் கணக்கிட முடிந்தது. ஆனால் அவனால் விஸ்வம் உட்பட சிலர் விதியின் முடிவைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.  அவர்கள் வாழ்க்கையில் சில குறுக்கீடுகள் இருக்கும், அதன் பின் திசை மாறும் என்றிருந்தால் அந்தக் குறுக்கீடு வரும் முன் விதியைத் தீர்மானிப்பது முடியாத காரியம் என்று பிற்பாடு மெல்லக் கண்டுபிடித்தான். விஸ்வத்தின் வாழ்க்கையில் குறுக்கீடு க்ரிஷ் வடிவில் வந்தது.

ஜிப்ஸி வருவதும் மனித இனம் அழியும் அபாயத்தில் இருப்பதும் கூட தென்னிந்தியாவில் ஒரு ரகசிய ஆன்மீக இயக்கத்தின் யோகிகள் பல காலம் முன்பே சொல்லிச் சென்றிருந்தது அவனைத் திகைப்பில் ஆழ்த்தியது. இந்த அளவு ஞானமுள்ளவர்கள் ஏன் மனித இனத்தை இப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கு அவனுக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை.  அதைத் தொடர்ந்து இல்லுமினாட்டியிலும் ஆரகிள் இல்லுமினாட்டியை அழிக்கும் ஒரு சக்தி வரும் என்று சுமார் 125 வருடங்களுக்கு முன்பாகவே இந்தக் காலக் கட்டத்தைச் சொல்லியிருந்ததும் அவனைத் திகைக்க வைத்தது. அதன் பின் அவன் இங்கு அமானுஷ்ய சக்திகள் குறித்த சில அபார ஞானம் உலகில் அங்கங்கே சில பகுதிகளில் பழங்காலங்களில் இருந்ததைக் கண்டுபிடித்து அவற்றையும் தெரிந்து கொண்டு வியந்தான். அப்படி அறிந்து கொண்ட கலைகளில் ஒன்று தான் வூடு.

இந்த வகை ஞானங்கள் அவன் இனத்தில் இல்லை. ஒரு பக்கம் முட்டாள்தனமான தற்கொலைக்கொப்பான வாழ்க்கை முறை, இன்னொரு பக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அசாதாரணமான ஞானம் இரண்டும் பெரிய முரண்பாடாக அவனுக்குத் தோன்றியது. அதற்கேற்ற மாதிரியே அவன் தேர்ந்தெடுத்திருந்த விஸ்வமும் அவன் வாழும் சமூகத்திற்குச் சம்பந்தமில்லாதபடி அதிக அறிவுடனும், அசாத்திய உறுதி, உழைப்புடனும் முன்னேறி வந்தான். அவனை அடுத்த கட்டமான இல்லுமினாட்டி பக்கம் மெல்ல ஜிப்ஸி நகர்த்தி விட்டு வந்தான். க்ரிஷ் குறுக்கிட்டு விஸ்வம் உயிரிழப்பதைத் தன் சக்தியால் உணர்ந்த ஜிப்ஸி அந்த நேரத்தில் வூடூ இசையை இசைத்து அவன் கற்றிருந்த கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை நினைவுபடுத்தினான். உடனே சில மைக்ரோ வினாடிகளில் அதை உணர்ந்த விஸ்வம் வேறு உடல் புகுந்தும் சாதித்துக் காட்டியது அவனுக்குப் பெருமையாக இருந்தது. மறுபடியும் புதிய எல்லைகளை அவன் தாண்டுவான், புதிய சாதனைகளைச் சாதிப்பான் என்று நம்பிக்கை பிறந்தது.

ஜிப்ஸி இந்தப் பூமியை விட்டுப் போக வேண்டிய காலம் நெருங்கி விட்டது. இந்த முறை அவன் பூமியில் தங்கியிருந்த காலம், வரும்போது அவன் திட்டமிட்டிருந்ததை விட அதிகமாகி விட்டது. வேறு ஒரு கிரகத்துக்குச் செல்லும் போது அதற்குத் தேவையான சக்திகளைச் சேர்த்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது. அந்தச் சக்திகள் முடிவடைவதற்குள் திரும்பி சொந்தக் கிரகத்திற்குப் போய்ச் சேர்ந்து விட வேண்டியிருக்கிறது. அதனாலேயே அவன் தன் சக்திகளை இந்த முறை சிக்கனமாகச் செலவழிக்க வேண்டி இருக்கிறது. அவன் பயணித்து வந்த விண்கலத்தை அடர்ந்த அமேசான் காடுகளுக்குள் ஒளித்து விட்டு வந்திருக்கிறான். அங்கிருக்கும் வரை அது இந்தப் பூமியின் செயற்கைக்கோளுக்கு அகப்படாது. அவன் தேவையில்லாமல் அவன் விண்கலமும் அவன் சக்திகளும் பூமியின் விஞ்ஞானிகளால் அலசப்படுவதை அவன் விரும்பவில்லை. அதனாலேயே அவன் உருவங்கள் எடுக்கும் போதும், உருவங்களைக் கலைக்கும் போதும் அதை ஏதாவது கருவிகள் பதிவு செய்யாதபடி கவனமாக இருந்து கொள்கிறான். அந்த வெளிப்பாடுகளில் அவர்கள் நிறைய தெரிந்து கொள்ள முடியும்.

அவனுடைய தனிப்பட்ட சக்தியும், விண்கலத்தின் சக்தியும் அவன் நாளை கிளம்பிப் போனால் தான் அவனுடைய கிரகம் போய்ச் சேரப் போதுமானதாக இருக்கும். அவன் கிளம்ப இன்னும்  36 மணி நேரம் தான் இருக்கிறது. போவதற்கு முன் அவன் திட்டம் நிறைவேறியிருந்தால் மகிழ்ச்சியாகப் போயிருப்பான்.   இந்த முறை அமானுஷ்யன் வந்து கெடுத்து விட்டான். எர்னெஸ்டோ அவன் திட்டத்தைப் புதைத்தே விட்டார். ஆனாலும் இப்போது விஸ்வத்தைப் பார்த்தால் அவன் தன் சக்திகளை எல்லாம் திரும்பப் பெற்றுக் கொண்டிருப்பது போலத் தான் தோன்றுகிறது.

எர்னெஸ்டோ அவனுக்கு அனுப்பியிருக்கும் மெயிலைப் பார்த்தவுடன் அவன் கண்டிப்பாக கோபத்தின் உச்சத்திற்குத் தான் போவான். விஸ்வம் இல்லுமினாட்டியின் தலைவனாகவில்லை என்ற வருத்தம் சற்று முன் வரை அவனுக்கு இருந்தது. ஆனால் ஆத்திரமும் நிறைய சக்திகளும் சேர்ந்து பெற்றிருக்கும் விஸ்வம் இனி முடிந்தபடியெல்லாம் எதிரிகளை அழிக்க ஆரம்பிப்பான் என்பதில் சந்தேகமேயில்லை. அவன் போவதற்கு முன்பாவது சில அழிவுகளைப் பார்த்து விட்டால் ஆறுதலாக இருக்கும்...

மனித இனமே தன்னை அழித்துக் கொள்ளும் நிலைமையை ஏற்படுத்தித் தோற்ற பிறகு தன்னுடைய சக்திகளை உபயோகித்தே அழிவு வேலைகளைச் செய்து விட்டுக் கிளம்பலாம் என்று கூட ஜிப்ஸிக்குத் தோன்றியிருக்கிறது.  நியாயம், தர்மம் என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவன் தான் அவன். ஆனால் க்ரிஷின் வேற்றுக்கிரகவாசி நண்பன் எப்போது வேண்டுமானாலும் இங்கே வரலாம். ஜிப்ஸி செய்திருக்கும் காரியத்தைப் பார்த்துக் கோப்பபட்டு அவனுடைய கிரகம் தேடி வந்தே தண்டிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. சக்திகளிலும் வலிமையிலும் அவன் ஜிப்ஸியை விடப் பலமடங்கு உயர்ந்தவன் என்பதால் ஜிப்ஸி அந்த ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இல்லை.

நினைவுகளிலிருந்து மீண்ட அவன் தன் கவனத்தை இல்லுமினாட்டியினர் இனி என்ன செய்யப் போகிறார்கள் என்பதை அறிவதற்காகத் திருப்பினான். அப்போது தான் க்ரிஷும், அமானுஷ்யனும் இங்கே காரில் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. இனி இரண்டு மணி நேரத்திற்குள் இங்கே வந்து விடுவார்கள். ஜிப்ஸி க்ரிஷ் அமானுஷ்யனுடன் வருவதில் பெரிய பிரச்சினையை உணர்ந்தான்.  உடனே விஸ்வத்தை எச்சரிக்கும் அவசியத்தையும் உணர்ந்தான். இது போன்ற சக்திகள் பெற்றுக் கொண்டிருக்கும் தியானத்தில் திடீரென்று குறுக்கிடுவது ஆபத்து... ஆனால் அவனைத் தியானத்திலிருந்து எழுப்பியும் ஆக வேண்டும். என்ன செய்வது என்று யோசித்து ஜிப்ஸி கிதார் எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். முதல் முதலில் விஸ்வத்தைச் சந்தித்த போது வாசித்த அதே இசைஇது அவனைத் தியானத்திலிருந்து மெல்ல லாவகமாக வெளியேற்றும்

விஸ்வம் மூன்றாவது நிமிடத்தில் தியானத்தின் நடுவே கிதார் இசையை உணர ஆரம்பித்தான். மெல்லக் கண்விழித்து அவன் மேலே வந்தான். ”என்ன நண்பா?” என்று கேட்டான்.

ஜிப்ஸி சொன்னான். “க்ரிஷும் அமானுஷ்யனும் இங்கே வந்து கொண்டு இருக்கிறார்கள்…”

விஸ்வம் திகைப்புடன் கேட்டான். “எதற்கு?”

உன்னிடம் ஏதோ பேச வேண்டும் என்று வருகிறான் போலிருக்கிறது

விஸ்வம் திகைப்பு மாறாமல் கேட்டான். “அவன் பைத்தியமா?”

அப்படி நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அப்படிப் பைத்தியமாகப் போய் தான் அவன் பல காரியங்களைச் சாதித்திருக்கிறான்.”

எர்னெஸ்டோ சமாதானம் பேச அவனை அனுப்பி இருக்கிறாரா?”

அப்போது தான் அவர் அனுப்பிய மின்னஞ்சலை அவன் இன்னும் படிக்கவில்லை என்பது ஜிப்ஸிக்கு நினைவு வந்தது. அவன் மெல்லச் சொன்னான். “எர்னெஸ்டோ சமாதானத்தை விரும்பவில்லை. போரைத் தான் அறிவித்திருக்கிறார். நீ அவரைக் கொல்ல முயற்சி செய்திருக்கிறாய் என்பதற்கு அவருக்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் உன்னை இல்லுமினாட்டி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறாராம். உன்னிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் உறுப்பினர்களும் பதவி நீக்கம் செய்யப்படுவார்களாம்...”

அதன் பொருள் என்னவென்பதை மெல்லப் புரிந்து கொண்ட  விஸ்வம் தான் இத்தனை காலம் ஆசையாய்க் கற்பனையில் கட்டியிருந்த கோட்டைகள் எல்லாம் தவிடுபொடியானதை உணர்ந்தான். அதிகபட்சமாய் அவனைத் தீர்த்துக் கட்ட எர்னெஸ்டோ ஒரு படையையே அங்கே அனுப்பக்கூடும் என்று தான் அவன் எதிர்பார்த்தானே ஒழிய இதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆத்திரம் சிறிது சிறிதாக அதிகரிக்க ஆரம்பித்தது.

ஜிப்ஸியால் அந்தக் கணத்தில் விஸ்வத்தின் சக்திகளை அளக்க முடிந்தது இந்த உடலில் அவன் பெற முடிந்த அதிகபட்ச சக்திகளை இப்போது அடைந்திருந்தான். இனி யாரையும் இவன் சமாளிப்பான் என்று எண்ணியபடியே ஜிப்ஸி விஸ்வத்தை எச்சரித்தான். “அவன் பேசி இல்லுமினாட்டியையே மாற்றியவன் என்பதால் உன்னையும் மாற்றி விட முடியும் என்று நினைக்கிறான்....நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”

முட்டாள்... முட்டாள்....” என்று முழு வெறுப்புடன் க்ரிஷை விஸ்வம் அழைத்தது ஜிப்ஸிக்கு இதமாக இருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்   

இந்த நாவல், சாணக்கியன் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.