என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Wednesday, May 9, 2018

நவீன ஷாமனிஸத்தின் புதிய பரிமாணங்கள்!

வீன ஷாமனிஸம் இக்கால மக்களைக் கவர மிக முக்கிய காரணம் அது மனிதனின் அடிமனம் வரை ஊடுருவிச் செல்ல வல்லதாக இருக்கிறது என்று உளவியல் அறிஞர்களும், ஷாமனிஸ ஆராய்ச்சியாளர்களும் நினைக்க ஆரம்பித்தது தான். ஷாமனிஸ யாத்திரை என்பது மனிதன் தனக்குள்ளே ஆழமாகச் சென்று பார்க்கும் உள்நோக்கிய பயணம் என்றும் அங்கு மன ஆழத்தில் அவன் இது வரை பார்க்காத மறைந்த ரகசிய பகுதிகள் இருக்கின்றன என்றும், அங்கேயே அவனுக்குத் தீங்கிழைக்கும் சக்திகளும், விலங்கு உணர்வுகளும் இருக்கின்றன என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். அதே போல அவனைக் காப்பாற்றும் மேலான சக்திகளையும் மனிதன் தன் மனதின் ஆழத்திலேயே காண்கின்றான் என்றும் கூறுகிறார்கள். வேறு வேறு பெயர்களும், வேறு வேறு உலகங்களும் ஷாமனிஸத்தில் கூறப்பட்டிருப்பது குறியீடுகளே என்றும் குறியீடுகளை  அப்படியே நிஜங்களாக ஏற்றுக்கொள்வதை விட அவை உண்மையில் எதைக் குறிக்கின்றன என்பதை மனிதன் ஆழமாகச் சிந்தித்தால் விளங்கும் என்று கூறினார்கள்.

நவீன ஷாமனிஸம் கண்ட மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால் பிரச்னைகளுக்கான தீர்வாக ஷாமனிஸ வழிகளை நாடியது போய், மனிதர்கள் தங்கள் மன ஆழத்தில் இருக்கும் பலவீனங்களைக் கண்டுபிடித்து நீக்கி, முழுத்திறமைகளையும் கண்டுபிடித்து அவற்றை வளர்த்துக் கொள்ள ஷாமனிஸத்தை நாட ஆரம்பித்தார்கள். இந்த விதத்தில் ஷாமனிஸம் சுயமுன்னேற்றத்திற்குத் தேடும் ஒரு உயர்ந்த வழியாக பார்க்கப்பட ஆரம்பித்தது. வெளி உலகம் உள் உலகின் வெளிப்பாடே என்றும் உள் உலகத்தை மாற்றினால் வெளி உலகத்தை மாற்றலாம் என்கிற சிந்தனை நவீன ஷாமனிஸத்தில் வலுப்பெற ஆரம்பித்தது. முன்பே தெரிவித்தது போல ஷாமன் என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதன் தான் சார்ந்த சமூகத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வுகள் காண்பது வழக்கொழிந்து சில விதிவிலக்குகள் தவிர பெரும்பாலான மனிதர்கள் தங்கள் தேவைகள் மற்றும் பிரச்னைகளுக்கு தாங்களே வழி தேடிக் கொள்ளும் மாற்றம் உருவானது.

பழைய ஷாமனிஸத்திற்கும் நவீன ஷாமனிஸத்திற்கும் இடையே உள்ள இன்னொரு மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் தீய சக்திகள், தீய ஆவிகள் ஆகியவை நிறைய இருப்பதாக பழைய ஷாமனிஸம் நம்பியது. அந்தத் தீயசக்திகள் கோபமடையும் பட்சத்தில் மனிதனுக்குக் கெடுதல் செய்யக்கூடியவை என்றும் மனிதரிடத்தில் சிலவற்றை எதிர்பார்க்கக்கூடியவை என்றும் பழைய ஷாமனிஸம் நம்பியது. ஆனால் நவீன ஷாமனிஸம் தீய சக்திகள், தீய ஆவிகள் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தந்து விடவில்லை. மாறாக பிரபஞ்ச சக்திகள் மனிதனுக்கு நன்மை தருவதாகவே இருக்கின்றன என்றும் நாம் முறையாகப் புரிந்து கொண்டு முயன்றால் பல உதவிகளைப் பிரபஞ்ச சக்திகளிடமிருந்து பெற்று விடலாம் என்றும் நம்புகிறது. பிரச்னைகள் ஏற்படக்காரணம் மனிதன் அந்த பிரபஞ்ச விதிகளை அலட்சியம் செய்வதாலும், அவற்றிற்கு எதிராக நடந்து கொள்வதாலுமே ஏற்பட முடியும் என்றும் அதைச் சரிசெய்து கொள்வதே நம் பிரச்னைகளுக்குத் தீர்வு என்றும் நம்புகிறது. இது பகுத்தறிவுக்கு ஏற்றதாகவே இருந்ததால் நவீன ஷாமனிஸத்தின் மீது நவீன மனிதனுக்கு இருந்த ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது.


இப்படி மக்களைக் கவர்ந்த ஷாமனிஸம் இன்றைய புத்தகங்களிலும் இடம் பிடிக்க ஆரம்பித்தது. பெரும்பாலான புத்தகங்கள் ஆராய்ச்சி நூல்களாக இருந்தன என்றாலும் சில நூல்கள் ஷாமனிஸ கதாபாத்திரங்களைக் கொண்ட நாவல்களாகவும் இருந்தன. ஷாமனிஸ நாவல்களை எழுதிய பிரபல எழுத்தாளர்களில் Tony Hillerman முக்கியமானவர்.  சாண்ட்ரா இங்கர்மண் (Sandra Ingerman) என்ற எழுத்தாளர் பதினோரு ஆண்டுகள் ஷாமனிஸ ஆராய்ச்சிகள் செய்து 1991 ஆம் ஆண்டு Soul Retrieval:Mending the Fragmented Self என்ற நூலை எழுதினார். அதில் ஷாமனிஸ சடங்குகளின் நோக்கங்களின் அடிப்படையை வைத்து இன்றைய காலத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்றபடி அறிவு சார்ந்த பயிற்சிகளை அவர் எழுதினார். ”இதைப்படித்து விட்டு இதெல்லாம் நிஜமா ஷாமனிஸம் தானா என்றெல்லாம் யாரும் கேட்காதீர்கள். இதில் சொல்லியிருப்பதைப் பின்பற்றி பயன் கிடைக்கிறதா இல்லையா என்பதை மட்டும் பாருங்கள்.”


சாண்ட்ரா இங்கர்மண் கூறியபடியே பயிற்சிகள் பெற்று மற்றவர்களுக்கும் பயிற்றுவிக்கும் Geo Athena Trevarthen என்ற பெண்மணி அந்த வகை ஷாமனிஸ பயிற்சிகளுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த போது இப்படிக் கூறினார். “எதையுமே நான் சொல்கிறேன் என்பதற்காக நம்பாதீர்கள். கண்மூடித்தனமான நம்பிக்கை நல்லதுமல்ல. ஷாமனிஸ ஆசிரியராக நான் சொல்கின்ற இந்தப் பயிற்சிகளைச் செய்து பாருங்கள். நீங்களே மானசீகமாக இந்த ஷாமனிஸ யாத்திரையில் ஈடுபட்டு உணர்வதை மட்டும் உண்மையாக ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவற்றை புறந்தள்ளுங்கள்.”


இதுவே நவீன ஷாமனிஸத்தின் நிலைப்பாடாக உள்ளது.   Merete Jakobsen, Joan Townsend  போன்ற எழுத்தாளர்கள் ஆரம்ப ஷாமனிஸத்திற்கும் நவீன ஷாமனிஸத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களையும், ஒற்றுமைகளையும், இந்த பரிணாம வளர்ச்சிக்கான நுணுக்கமான காரணங்களையும் அலசி எழுதியிருக்கிறார்கள். இப்படி ஷாமனிஸம் குறித்த நூல்கள் வெளியாகி வரும் அதே நேரத்தில் ஷாமனிஸத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பை மனதில் கொண்டு சில எழுத்தாளர்கள் தங்கள் கற்பனைகளையே நிஜமான சம்பவங்கள் போல எழுதி காசு பார்த்ததும் உண்டு.

சில நவீன ஷாமனிஸ ஈடுபாட்டாளர்கள் குழுக்களாக அமைத்துக் கொண்டு பழங்கால ஷாமனிஸ முறைகளை இப்போதும் பின்பற்றி வரும் சில தொலைதூரப் பகுதிகளுக்கு சில நாட்கள் யாத்திரை சென்று வருவதும் உண்டு. அந்தப் புராதன ஷாமனிஸ சடங்குகளின் போது பார்வையாளர்களாகவோ, பங்கேற்பவர்களாகவோ அங்கிருந்து தங்கள் உள் உணர்வுகளைக் கவனித்து பல புதிய அனுபவங்களைப் பெற்றுத் திரும்பி வருவதும் பல இடங்களில் நடக்கிறது. இப்படி பழங்கால ஷாமனிஸத்தை முழுவதும் புறக்கணித்து விடாமல் அந்த முறைகளில் உள்ள சாராம்சத்தைத் தங்களுக்கேற்ற வகையில் பெற்று புதிய மனிதர்களாகவும், புத்துணர்ச்சி பெற்றவர்களாகவும் மேலைநாடுகளில் பெருநகரங்களில் வசிக்கிறவர்கள் திரும்புவதையும் காண முடிகிறது.

இப்படி நவீன ஷாமனிஸத்தில் ஈடுபட்டு மற்ற துறைகளில் பிரபலம் அடைந்த கலைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஜிம் மோரிசன் என்ற ராக் இசைப்பாடகர் மிகவும் பிரபலமானவர். அவர் நியூ மெக்சிகோவில் தன் இளமைப்பருவத்தில் பெற்ற ஷாமனிஸ அனுபவங்களைத் தன் பிரபல பாடல்களில் வெளிப்படுத்தினார். ஷாமனிஸ ஆவி நடனத்தில் இருந்து எடுக்கப்பட்ட அவரதுஆவி பாடல்’ (The Ghost Song) அமெரிக்காவில் சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் மிகவும் பிரபலம். அவருடைய பாடல்களின் போது அரங்கில் உள்ள பெரும்பாலான ரசிகர்கள் தங்கள் உணர்வுகளில் பெரும் மாற்றத்தையும், உச்சத்தையும் அடைவதாக உணர்ந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அங்கு ஒரு மின்சார உணர்வை அவர் ஏற்படுத்துவதாகவே பலரும் எண்ணினார்கள். அதனால் ஜிம் மோரிசனுக்கு மின்சார ஷாமன் என்ற பட்டப்பெயரும் அவர் வாழ்ந்த காலத்தில் ராக் இசை உலகில் இருந்தது.

அதே போல அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள Grateful Dead என்ற ராக் இசைக்குழுவும் ஷாமனிஸ அம்சங்களைத் தங்கள் பாடல்களிலும் இசை நிகழ்ச்சிகளிலும் புகுத்தி பிரபலமானது. அந்தக் குழுவின் தலைமைக் கிடார் கலைஞர் ஜெர்ரி கார்சியா 1991 ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் தங்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஷாமனிஸத்தைக் கூறினார்.  “எங்கள் இசை நிகழ்ச்சிக்கு சாதாரண உணர்வு நிலையுடன் வருபவர்கள் இசையின் போது நுணுக்கமான உணர்வு மாற்றங்களை உணர்ந்தார்கள். சாதாரணமானவர்களாக உள்ளே வந்தவர்கள் தங்களைச் சிறப்பானவர்களாகவும், புதியவர்களாகவும் ஒருவித ஷாமனிஸ மாற்றத்தை உணர்ந்தார்கள். அதைத் திரும்பத் திரும்ப உணர மோகம் கொண்டு எங்கள் நிகழ்ச்சிகளுக்குத் திரும்பத் திரும்ப வந்தார்கள்.”
  
இன்று நிறைய இசைக்கலைஞர்கள், இசைக்குழுக்கள் தங்கள் பெயர்களுடன் ஷாமனிஸம் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பெயரை இணைக்க ஆரம்பித்துள்ளார்கள்.

இப்படி இலக்கியங்களிலும், இசையிலும் முத்திரை பதித்த ஷாமனிஸம் திரைத்துறையையும் விட்டு வைக்கவில்லை. சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் துவங்கி நிகழ்காலம் வரை பல திரைப்படங்கள் ஷாமனிஸத்தை மையமாகக் கொண்டோ, அல்லது ஷாமனிஸம் சார்ந்த முக்கிய கதாபாத்திரத்தைக் கொண்டோ வெளிவந்துள்ளன. அவற்றில் 2001ல் வெளிவந்த ஷாமனிஸ பயிற்சி பெறுபவன் (The Shaman’s Apprentice), 2005ல் வெளிவந்த ஷாமனின் சாபம் (Curse of the Shaman) என்ற ஆவணப்படங்களும், 2008ல் வெளி வந்த ஷாமனின் முத்திரை (Shaman’s Mark) திரைப்படமும் பிரபலமானவை

நவீன ஷாமனிஸத்தின் மறுக்க முடியாத ஒரு ஆளுமையாக கார்லோஸ் காஸ்டநேடா என்ற மனிதர் சென்ற நூற்றாண்டில் அமெரிக்காவில் பிரபலமானார். இவர் உண்மையானவரா, ஏமாற்றுக்காரரா என்ற கேள்விக்கு இன்று வரை முடிவான விடை இல்லை. ஆனால் இவரைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை என்கிற அளவு பிரபலமான இவர் குறித்த மிகவும் சுவாரசியமான சம்பவங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.

அமானுஷ்யம் தொடரும்...
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 29.9.2017




Monday, May 7, 2018

சத்ரபதி – 19


ஜீஜாபாயும், சிவாஜியும் பீஜாப்பூர் வந்து மூன்று நாட்களாகி விட்டன. ஷாஹாஜி அவர்கள் இருவரிடமும் அழைத்திருந்த காரணத்தை இன்னும் பேசவில்லை. பேசுவதற்கு முன் அவருக்கு மகனைக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருந்தது. தாதாஜி கொண்டதேவ் மூலமாக அறிந்து கொண்டதை நேரடியாக சரிபார்க்க எண்ணியிருந்த ஷாஹாஜிக்கு சிவாஜி அதற்கான வாய்ப்பை உடனடியாகத் தந்து விடவில்லை. இயல்பாக இருந்தான். இயல்பாக அனைவரிடமும் பழகினான். புரட்சிகரமான கருத்துக்கள், பேச்சுகள் அவனிடமிருந்து வரவில்லை. ஆனாலும் அவன் ஆழமானவன், அழுத்தமானவன் என்பதை மெள்ள ஷாஹாஜி உணர்ந்தார்.

அவனோடு ஒப்பிடுகையில் அவன் அண்ணன் சாம்பாஜி எல்லா விதங்களிலும் சற்றுக் குறைவாகவே தந்தைக்குத் தெரிந்தான். தனிப்பட்ட முறையில் சாம்பாஜியிடம் எந்தக்குறையும் இல்லை. ஆனால் சிவாஜியிடம் ஒப்பிடும் போது தான் அறிவிலும், ஆழத்திலும், நடந்து கொள்ளும் முறைகளிலும் பெரிய வித்தியாசம் தெரிந்தது. அப்படிப் பார்த்தால் சிவாஜியின் சக வயதினர்களையும், சற்று மூத்தவர்களையும் கூட அவருக்குத் தெரிந்து சிவாஜிக்கு இணையாக அவரால் சொல்ல முடியவில்லை.

ஷாஹாஜியின் சில நண்பர்கள், பீஜாப்பூர் அரசவையின் சில பிரபுக்கள் சிவாஜிக்கு அறிமுகமானார்கள். அவன் கொடுத்த மரியாதை, பேசிய பேச்சுக்கள், நடந்து கொண்ட விதம் எல்லாம் அவன் மீது ஒரு தனி மரியாதையை அவர்களிடமும் ஏற்படுத்தியதை ஷாஹாஜி நேரில் கண்டார். அவரிடம் அவர்கள் வாய்விட்டுச் சொன்னார்கள். “இப்படிப்பட்ட ரத்தினத்தை ஏன் தூர வைத்திருக்கிறீர்கள்? அவன் இங்கே பீஜாப்பூரில் இருக்க வேண்டியவன். சுல்தானிடம் அறிமுகப்படுத்தப்பட வேண்டியவன்….”

உருவத்திலும் சிவாஜி அழகாகவும், கட்டிளங்காளையாகவும் மாற ஆரம்பித்திருந்தான். அவன் உயரம் மட்டுமே சராசரியாக இருந்தது. அறிவிலும் வீரத்திலும் அதிகப்படியாகத் தந்து விட்டதால் கடவுள் உயரத்தில் குறைத்து விட்டாரோ என்று எண்ணி ஷாஹாஜி புன்னகைத்தார்.

ஷாஹாஜி சிவாஜியை அடிக்கடி கூர்ந்து கவனிப்பதை ஜீஜாபாயும் கவனித்தாள். மகனிடம் தெரிந்த மாற்றங்கள் நிச்சயமாக அவரைப் பெருமைப்படுத்தின என்பதை அவளால் உணர முடிந்தது.  சில வருடங்கள் கழித்து பிள்ளைகளைப் பார்க்கும் போது இக்கால இடைவெளியில் ஏற்பட்டிருக்கும் வித்தியாசங்கள் என்ன என்று கவனிப்பது பெற்றோருக்கு இயல்பேயல்லவா? அவளும் அப்படித்தான் சாம்பாஜியைக் கவனித்தாள். ஆனால் உடல் வளர்ச்சியையும், வீரத்தையும் தவிர வேறெந்தப் பெரிய முன்னேற்றத்தை அவளால் மூத்த மகனிடம் காண முடியவில்லை. சிவாஜியை வைத்தே ஒப்பு நோக்கியது தான் தன் தவறு என்று தன்னையே அவள் கடிந்து கொண்டாள்.

அவளால் அந்த மாளிகையைத் தன் சொந்த வீடாக நினைக்க முடியவில்லை. துகாபாயின் வீடாகவே அவளுக்குத் தோன்றியது. துகாபாயும் ஜீஜாபாயைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறாள். சிந்துகேத் அரச வம்சத்தவள், மிகவும் புத்திசாலி, தைரியசாலி என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்ததால் அவள் அங்கு வந்த போது நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு விடுவாளோ என்று பயந்து போயிருந்தாள். ஆனால் அந்த இடத்தைத் தன்னுடையதாக உணர முடியாததால் ஜீஜாபாய்  தூரமாகவே இருந்தாள். துகாபாயின் குழந்தை வெங்கோஜியைக் கையில் எடுத்து வைத்து கொஞ்சிக் கொண்டு எதிலும் தலையை நுழைக்காமல் ஜீஜாபாய் இருந்ததால் துகாபாயும் திருப்தி அடைந்திருந்தாள்….

சாம்பாஜியும் சிவாஜியும் நெருக்கமாக இருந்தார்கள். பீஜாப்பூர் சிவாஜிக்குப் புதிய இடமானதால் அவனுக்கு இடங்களைச் சுற்றிக் காட்ட சாம்பாஜி அழைத்துப் போனான். அப்படி அழைத்துப் போய் ஒருநாள் திரும்புகையில் சிவாஜி முகத்தில் கடுமை தெரிந்ததைக் கண்டு ஷாஹாஜி துணுக்குற்றார். சகோதரர்களுக்கிடையில் ஏதாவது பிரச்சினையோ என்று தான் ஆரம்பத்தில் அவருக்குச் சந்தேகம் வந்தது. ஆனால் சாம்பாஜி முகத்தில் எந்த வித்தியாச உணர்ச்சிகளும் தெரியவில்லை. அப்படி ஏற்பட்ட உணர்ச்சிகளைக் காட்டாமல் இருக்கும் வித்தையையும் இது வரை சாம்பாஜி கற்றுக் கொண்டிருக்கவில்லை. அதனால் பெரிதாக எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் தன் உணர்ச்சிகளை மறைத்து வைத்துக் கொள்ளும் அளவு சாமர்த்தியசாலியாக அவர் கணக்கிட்ட இளைய மகன் கட்டுப்படுத்த முடியாமல் கோபத்தை வெளிப்படுத்துகிறான் என்றால் காரணம் என்னவாக இருக்கும் என்று அவரால் யூகிக்க முடியவில்லை.

ஷாஹாஜி சிவாஜியிடம் கேட்டார். “ஏன் கோபமாக இருக்கிறாய் சிவாஜி?” 

“இங்கே ராஜவீதியில் கூட பசு மாமிசம் வெளிப்படையாகவே விற்கிறார்கள்”

ஷாஹாஜி இந்தக் காரணத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. மிகவும் பக்குவமானவனாகவும், அறிவாளியாகவும் தோன்றிய சிவாஜியின் இந்தக் கோபம் சிறுபிள்ளைத்தனமாக அவருக்குத் தோன்றியது. அவர் பொறுமையாகச் சொன்னார். “நம் இந்துக்களுக்குத் தான் பசு புனிதமானது சிவாஜி. மற்றவர்களுக்கு அல்ல. அவர்கள் பசு மாமிசத்தை உண்ணவும் செய்கிறார்கள். அதனால் இங்கே விற்பனை ஆகிறது”

சிவாஜி அவர் சாதாரணமாகச் சொன்னதை ரசிக்கவில்லை. குரலில் உஷ்ணம் குறையாமல் சிவாஜி சொன்னான். “அவர்கள் உண்பதை நான் குறை கூறவில்லை தந்தையே. ஆனால் நாம் வணங்குகிற பசுவின் மாமிசத்தை நாம் அதிகம் நடமாடுகிற பகுதிகளில் பகிரங்கமாக விற்பனை செய்கிறார்கள். நாம் காணவும் கூசுகிற, நம் மனம் பதைபதைக்கும் காட்சி அது என்ற நினைவும் அவர்களுக்கில்லை என்பதையே குறையாகக் காண்கிறேன்…. பசு தெய்வமாகப் பூஜிக்கப்படும் நம் பூமியில் இது நடக்கிறது, நாம் இதை அனுமதிக்கிறோம் என்பதையே குறையாகக் காண்கிறேன்.”

எதையும் நம் பூமி என்று உரிமை கொண்டாட முடியாத யதார்த்தத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட ஷாஹாஜிக்கு மகன் இது நம் பூமி என்று சொன்னதே வித்தியாசமாக இருந்தது. தாதாஜி கொண்டதேவ் தன் மாணவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கும் வரலாற்றை அவன் மேலோட்டமாகப் படித்து மறக்கவில்லை என்று நினைத்துக் கொண்டே சொன்னார். ”மகனே, நம் பூமியில் இப்படி நடப்பது வருத்தத்திற்குரியது தான். ஆனால் இப்போது ஆள்வது நாமல்ல. அதனால் நம் அனுமதியும் அவர்களுக்குத் தேவையில்லை….”

“அன்னியர்கள் ஆளும் போது எத்தனை நாம் இழக்க வேண்டியிருக்கிறது பார்த்தீர்களா தந்தையே. பொதுவாக நம் மக்கள் எவன் ஆண்டால் நமக்கென்ன என்று இருந்து விடுகிறார்கள். ஆனால் ஆள்பவனின் சட்டத்திற்கு அடங்கியும், அதைச் சகித்தும் வாழ வேண்டியிருப்பது மட்டுமல்ல, அவர்கள் ஆட்சியில் நம் உணர்வுகளுக்கும் மதிப்பில்லாமல் போகும் என்பதைப் புரிந்து கொள்வதில்லை.”

ஷாஹாஜி தர்மசங்கடத்துடன் ஜீஜாபாயைப் பார்த்தார். அவள் மௌன விரதம் மேற்கொண்டவள் போல அமர்ந்திருந்தாள். சாம்பாஜி தம்பியைத் திகைப்புடன் பார்த்தான். இந்த சிந்தனைகளே அவனுக்குப் புதியவை. அவன் கேட்டுமிராதவை…..  மூத்த மகன் திகைப்பையும் ஷாஹாஜி கவனிக்கவே செய்தார்.   இதற்கு மேல் இந்த நிலைமையை நியாயப்படுத்திப் பேச முனைந்தால் சிவாஜி பொது நிலைமையை தனிப்பட்ட நிலைமையாகக்கூட ஆக்கி விடலாம் என்று எச்சரிக்கையானார். ’இது போன்ற சூழ்நிலையில் இந்த அரசவையில் இருக்கிறீர்கள். இந்த நிலைமையைச் சரிசெய்ய நீங்கள் என்ன செய்தீர்கள்?....’ என்ற வகையில் அவன் பேச ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை…. ஷாஹாஜி மௌனமானார்.

ஆனால் அன்றிரவு சிவாஜியைப் பற்றிய எண்ணங்கள் அவரைப் பல விதங்களில் அலைக்கழித்தன. அவன் அவனுடைய வயதில் நினைக்கும் விஷயங்களை அவர் இந்த வயதிலும் நினைத்துப் பார்த்ததில்லையே….. தாதாஜி கொண்டதேவ் அவனைப் பற்றிச் சொல்லி எச்சரித்த போது சிறிது மிகைப்படுத்திச் சொல்கிறாரோ என்ற சந்தேகம் கூட அவர் மனதின் ஒரு மூலையில் இருந்தது. இந்தச் சின்ன விஷயத்தில் அவன் கோபமும், அவன் வார்த்தைகளும் யோசிக்கையில் அவர் குறைவாகச் சொல்லி விட்ட மாதிரியல்லவா இருக்கிறது? இளைய மகனை யதார்த்த உலகுக்குக் கொண்டு வருவது எப்படி என்று அவருக்குப் புரியவில்லை….

மறுநாள் அரசவையில் சிலர் சிவாஜியின் அறிவையும், அவன் பெரியவர்களிடம் காட்டும் மரியாதையையும் புகழ்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டது சுல்தான் முகமது ஆதில்ஷா காதில் விழ “யாரைப் பற்றிப் பேசிக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“நம் ஷாஹாஜியின் இளைய மகன் சிவாஜியைப் பற்றித் தான் பேசிக் கொள்கிறோம் மன்னரே”

ஆதில்ஷா ஷாஹாஜியைப் பார்த்தார். “என்ன ஷாஹாஜி. இவர்களுக்கெல்லாம் தெரிந்த உங்கள் இளைய மகனை என்னிடமிருந்து மட்டும்  மறைத்து வைக்கிறீர்களே, இது நியாயமா?”

ஷாஹாஜி தர்மசங்கடத்துடன் நெளிந்து பின் சமாளித்தார். “அவன் வந்து மூன்று நாட்கள் தான் ஆகின்றன மன்னரே! உங்களிடம் அனுமதி பெற்ற பின் அவனை அழைத்து வரலாமென்றிருந்தேன். அவ்வளவு தான்…”

“நாளையே அழைத்து வாருங்கள் ஷாஹாஜி. இவர்கள் இத்தனை புகழ்கிற உங்கள் மகனைப் பார்த்து அவனுடன் அளவளாவ வேண்டும் என்று எனக்கும் ஆர்வமாய் இருக்கிறது…..” ஆதில் ஷா சொன்னார்.

சுல்தானிடம் ஷாஹாஜியால் மறுக்க முடியவில்லை. ஆனால் சிவாஜியை அரசவைக்கு அழைத்தால் வருவானா, வந்தாலும் அவன் குணத்திற்கு ஆபத்துகள் உருவாக வாய்ப்புகள் அதிகமாயிற்றே என்று உள்ளுக்குள் ஷாஹாஜி சங்கடத்தை உணர்ந்தார்.

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, May 3, 2018

இருவேறு உலகம் – 81


ஸ்ரோ டைரக்டர் பெரும் உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பித்தார். “நம்ம ஆராய்ச்சில முக்கியமான புகைப்படங்கள் கருப்படிச்சு தெளிவில்லாமல் போனது நமக்குப் பெரிய பின்னடைவுன்னாலும் அந்தக் கருப்புப் பறவையோட சில புகைப்படங்களாவது கிடைச்சிருக்கிறது நம்ம பாக்கியம்னு தான் சொல்லணும். க்ரிஷ் சாகாததையும் நம்ம அதிர்ஷ்டம்னு நாம சேர்த்திக்கலாம். ஏன்னா அவன் இப்ப எதுவும் சொல்லாட்டியும் எதிர்காலத்துலயாவது கண்டிப்பா தன்னோட அனுபவத்தை வெளியே சொல்லாம இருக்க மாட்டான். அவனை மாதிரி ஒரு ஜீனியஸ், விஞ்ஞான வளர்ச்சில ஈடுபாடு இருக்கிறவன், நாட்டுப்பற்று இருக்கிறவன், நம்ம நாட்டுல நடந்துகிட்டிருக்கிற ஒரு முக்கியமான ஆராய்ச்சிக்குத் தேவைப்படற தகவல்களை நிச்சயம் மறைச்சு வைக்க மாட்டான்னு நினைக்கிறேன். நம்ம இந்த ஆராய்ச்சி வெற்றிகரமா முடிஞ்சா உலக அளவுல இந்திய விண்வெளி ஆராய்ச்சி சிறப்பா பேசப்படும்னு நினைக்கிறேன்…..”

உமா நாயக் அவர் பேசுவதைக் கூர்ந்து கவனித்தபடி தலையாட்டினாள். புதுடெல்லி உயரதிகாரிக்கு அரசியல்வாதி மாதிரி ஜவ்வாக இழுக்கும் அந்தப் பேச்சு காதில் நாராசமாக விழுந்து கொண்டிருந்தது. ’அந்த முக்கியத் தகவலை முதலில் சொல்லடா’ என்று மனதிற்குள் கத்தினான். வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவன் போல அமர்ந்திருந்த அந்த அதிகாரிக்கு இந்த ஆராய்ச்சியில் உண்மையான ஈடுபாடு இருப்பது போலத் தெரியவில்லை என்பதால் டைரக்டர் முதல் சில வினாடிகளிலேயே அவனைப் பார்த்துப் பேசுவதை நிறுத்தி விட்டிருந்தார். அதனால் அவனுடைய கடுமையான முகபாவத்தை அவர் கவனிக்கவில்லை. ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த உமா நாயக்கிடம் அவர் உற்சாகத்துடன் தொடர்ந்து சொன்னார்.

“அந்தக் கருப்புப் பறவையோட படங்களை  ஒரு தனிக்குழு தீவிரமா ஆராய்ச்சி செய்துட்டிருக்காங்க. ஒரு வாரத்துக்குள்ளே ஒரு முடிவை எட்டுவாங்கன்னு எதிர்பாக்கிறேன். இந்த நிலையில நாசால இருக்கிற நம்ம விஞ்ஞானி ஒருத்தர் கிட்ட நம்ம ஆராய்ச்சி பத்தி எதுவும் சொல்லாம, சமீப  காலங்கள்ல பூமில வித்தியாசமான ஊடுருவல் அல்லது மாற்றங்கள்னு சொல்லக்கூடிய வகையில் ஏதாவது தகவல் கிடைச்சிருக்கான்னு கேட்டேன். அப்ப அவர் “கடந்த நாலஞ்சு மாசமா அமேசான் காடுகள் பகுதிகள்ல தொடர்ச்சியாகவும், தென்னிந்தியப் பகுதில அமாவாசை நாட்களில் மட்டுமாகவும் அபூர்வமான சக்தி அலைகளை உணர முடிஞ்சுதுன்னும் தெரிவிச்சார்…..”

மர்ம மனிதன் உடனே புதுடெல்லி உயரதிகாரி மனதில் கட்டளையிட்டுக் கேட்க வைத்தான். “அந்த அபூர்வ சக்தி அலைகள் பற்றின முழு விவரங்களையும் கேட்டீங்களா?”

பேசியது அவன் வாய் தான் என்றாலும் புதுடெல்லி உயரதிகாரிக்கு அந்தக் கேள்வி அவன் கேட்டதல்ல என்று ஏனோ தோன்றியது. என்ன நடக்கிறது?

டைரக்டர் வேறு வழியில்லாமல் அவன் பக்கம் திரும்பினார். “கேட்டேன். அவர்கள் அந்த அலைகளின் தன்மைகளை ஆராய்ந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். முடிந்தவுடன் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வதாகச் சொல்லி இருக்கிறார்….. நான் அழைத்தது எதற்காக என்றால் புகைப்படங்கள் மூலமாக நாம் தவற விட்டதையும் அந்த அலைகள் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து விடலாம் என்று சொல்லத்தான்…….”

‘இதெல்லாம் ஒரு முக்கியத்தகவலாடா?’ என்று புதுடெல்லி உயரதிகாரி நினைத்தாலும் மர்ம மனிதன் டைரக்டரின் வார்த்தைகளில் திருப்தி அடைந்தான். டைரக்டர் புத்திசாலி தான். சரியான பாதையிலேயே போகிறார்…….. இதிலிருந்து அறியப்போகும் தகவல்கள் அவனுக்கு மிக உபயோகமாகவே இருக்கும்…..


செந்தில்நாதன் சொன்னதை எல்லாம் சுவாரசியத்துடன் க்ரிஷ் கேட்டுக் கொண்டான். எதிரி அவனை நிறையவே பிரமிக்க வைத்தான். என்ன மனிதனவன்?  ”ஒன்று வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் அவன் அது கிடைக்கும் வரை விட மாட்டான். பின்வாங்க மாட்டான். ஆசையை மாற்றிக் கொள்ள மாட்டான்.. அத்தனை மன உறுதி. அத்தனை பொறுமை. அத்தனை விடாமுயற்சி….. விழித்திருந்த சமயங்களில் எல்லாம் சொல்லிக் கொடுத்ததைப் பயிற்சி செய்து கொண்டிருப்பான்….. கவனம் சிதறுவது என்பதே அவனுக்குக் கிடையாது. கவனச்சிதறலுக்கு அவன் மனதில் அனுமதி இல்லை என்பது போல் தோன்றும்…. அந்த அளவு கட்டுப்பாட்டுடன், விடாமுயற்சியுடன், இது வரை கண்டிராத அறிவுடன் அவன் கற்றுக் கொண்டான்…….”

சாதாரண இலக்கிலிருந்து சரித்திரம் படைக்கும் இலக்கு வரை நிச்சயமாய் சென்றடைய இதல்லவா தேவையான மனநிலையும், முயற்சியும்? எடுத்துக் கொண்ட இலக்கில் எப்படி முயற்சி செய்ய வேண்டும் என்று எதிரி அழகாய் பாடம் எடுப்பதாய் மனம் சொன்னது. இப்படி எல்லாம்  திடமாக முன்னேறியவனை இதை விடக்குறைந்த விதத்தில் ஜெயித்து விட முடியாது என்பது க்ரிஷுக்குப் புரிந்தது. அந்தப் பக்கிரி பதினைந்து வருடங்களில் கற்றுக் கொண்டதை அவன் மூன்றே வருடங்களில் கற்றுக் கொண்டான் என்ற தகவல் வேகமாய் இலக்கை அடைய விரும்பும் அவனுக்குச் சரியான நேரத்தில் கிடைத்திருக்கும் அருமையான அறிவுரை இது என அடையாளம் காட்டியது. அந்த வழியையே பின்பற்றியாக வேண்டும் என்று க்ரிஷ் மனதில் உறுதி எடுத்துக் கொண்டான்.

எதிரியின் ஒரே ஒரு பழக்கம் மட்டும் பின்பற்றுவது மிகவும் கஷ்டம் என்று அவனுக்குத் தோன்றியது.  ’அவன் தினமும் அதிகமாக மூன்று மணி நேரம் தான் தூங்குவான்.’ அது முடியும் என்று க்ரிஷுக்குத் தோன்றவில்லை. க்ரிஷ் எதிரியைப் பற்றி நிறைய யோசித்தான். கேள்விப்பட்டதிலிருந்து எதிரியை உருவகப்படுத்திப் பார்த்தான். எதிரியின் மூளை போகும் போக்கு புரிய ஆரம்பித்தது. ஆனால் அழிவுக்கு அழைத்துச் செல்லும் அவன் மனம் பற்றித் தான் அவனுக்குப் புரியவில்லை. சிறிது யோசித்து விட்டு க்ரிஷ் தன் மனதை எதிரியிடமிருந்து திருப்பி மாஸ்டர் சொல்லிக் கொடுத்த பாடத்தின் பக்கம் திருப்பினான்.

இரவு சாப்பாட்டின் போதும் உதயும், கமலக்கண்ணனும் அரசியல் நிலைமை பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது பழைய வழக்கப்படி சீக்கிரமாகச் சாப்பிட்டு விட்டு எழுந்து போய் விடாமல் அங்கேயே அமர்ந்திருந்தான். பத்மாவதி ஒரு கட்டத்தில் கணவரை இடைமறித்தாள்.

”அரசியல் பேசினது போதும். இவனுக்கு ஒரு நல்ல பெண்ணா பார்க்கணும். நாலு இடத்துல சொல்லி வைங்க. அரசியல்ல மசமசன்னு இருக்கற மாதிரி இதுலயும் இருந்துடாதீங்க”

அவர் மனைவியை முறைத்தார். “அரசியல்ல மசமசன்னு இருக்கறதா யார் சொன்னது?”

பத்மாவதி சிறிதும் தயங்காமல் உதயைக் கைகாட்டி சொன்னாள். “இவன் தான். சரியா இருந்திருந்தா இன்னேரம் நீங்க முதலமைச்சர் ஆயிருப்பீங்களாம்……”

கமலக்கண்ணன் கோபப்பார்வையை மூத்த மகன் மீது திருப்பினார். உதய் தம்பியிடம் முணுமுணுத்தான். “கிழவி கவுத்துடுச்சு பார்த்தியா?”

பத்மாவதி மகனை முறைத்தாள். “என்ன சொன்னே? கிழவியா?”

“உனக்கு வர வரக் காது கேட்கறதில்லை…. குளவி மாதிரி இங்கே ஏதோ சுத்திச்சே பார்த்தியான்னு இவனைக் கேட்டேன்……” என்று உதய் சமாளித்து தம்பியிடம் கண்ணடித்தான்.

பத்மாவதி சந்தேகத்துடன் மூத்த மகனைப் பார்த்தாள். சிரித்து விடாமல் அண்ணனைக் காப்பாற்றிய க்ரிஷ் எல்லோரும் சாப்பிட்டு முடிக்கும் வரை பேச்சில் இடையிடையே கலந்து கொண்டபடி அமர்ந்திருந்தான். அன்று முழுவதும் மாஸ்டர் சொல்லி இருந்த உணர்வை ஓரளவு அவனுக்குத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. பிரபஞ்ச சக்தியில் ஒரு பங்கு என்கிற சிந்தனை ஒரு வாசகமாக எந்திரத்தனமாக மனதில் தங்கி விடாமல் இருக்க வேண்டும் என்றும் அப்படிச் சீக்கிரமாக நிகழ ஆரம்பிக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் மாஸ்டர் முன்பே அவனை எச்சரித்திருந்தார். அப்படியே உணர்வு நிலையிலிருந்து வெற்று வாசக நிலைக்கு மனம் செல்ல ஆரம்பித்த போதெல்லாம் உடனடியாக அதை உணர்ந்து உணர்வு நிலைக்குக் கொண்டு போகும் முயற்சியில் வீட்டுச் சூழலில் அவனால் ஓரளவு வெற்றி பெற முடிந்தது. உயர்பிரபஞ்ச சக்தியின் உயிர்த்துளி க்ரிஷ் என்ற கதாபாத்திரமாக தன் வேலையைக் கச்சிதமாகச் செய்வது போன்ற உணர்வு எல்லாவற்றிற்கும் பின்னணியாக இருக்க ஆரம்பித்தது.


செந்தில்நாதன் மாஸ்டர் சொல்லியிருந்த ரிஷிகேஷ் ஆசிரமத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். மாஸ்டரின் குருவும் ரிஷிகேஷைச் சேர்ந்தவர் என்பதால் இந்த ஆசிரமத்தில் எதிரி படித்திருந்தால் அது மாஸ்டரின் கவனத்திற்கு வந்திருக்காமல் இருக்காது என்பதால் ஆரம்பத்தில் அங்கு செல்வதைத் தவிர்க்கத் தான் நினைத்தார். ஆனால் மாஸ்டர் மீதே முழு சந்தேகமும் அவருக்கு நீங்கி விடவில்லை. அந்த  மலைக்கு அவர் சென்ற போது காரில் வந்துத் திரும்பிச் சென்ற ஆள் மாஸ்டர் தான் என்பதை அவர் இப்போதும் நம்பினார். மாஸ்டர் சொன்னது போல் அந்த “போலீஸ் புத்தி” போய் விடவில்லை….

இயற்கை எழில் சூழ அமைந்திருந்த அந்த ரிஷிகேஷ் ஆசிரமத்தின் வயதான குரு செந்தில்நாதன் யாரை விசாரிக்கிறார் என்பதை முதலில் பல கேள்விகள் கேட்டுப் புரிந்து கொண்டு திட்டவட்டமாகச் சொன்னார்.

“நீங்கள் கூடுதல் விவரம் தெரியணும்னா இந்த மாதிரி ஆசிரமங்கள்ல தேடறது வீண். அந்த ஆள் பல அமானுஷ்ய சக்திகளைப் படைச்சவனாவும், பயன்படுத்தறவனாகவும் இருந்தா அது தர்மமுறைப்படி நடக்கிற ஆசிரமங்கள்ல இருந்து கத்துகிட்டதா இருக்க வாய்ப்பேயில்லை. ’ப்ளேக் மேஜிக்’னு சொல்றாங்களே அந்த மாதிரி விஷயங்களைச் சொல்லித் தர்ற இடங்களா பார்த்துப் போய் விசாரிங்க…..”

அவர் சொன்னது உண்மையாகவே தோன்ற, செந்தில்நாதன் பெரிய கும்பிடு போட்டு எழுந்தார். 

(தொடரும்)
என்.கணேசன்



Tuesday, May 1, 2018

நினைவுகளின் நரகத்தில் இருந்து நீங்குவது எப்படி?

அடுத்தவர்கள் ஏற்படுத்திய மனக்காயங்களை நம்மால் சீக்கிரம் மறக்க முடிவதில்லை. அவர்கள் செய்த துரோகங்களும், பேசிய வார்த்தைகளும் நெஞ்சில் நீங்காத நினைவுகளாய் தங்கி நம் வாழ்க்கையையே நரகமாக்கி விடுகின்றன. அந்த நினைவுகளின் நரகத்திலிருந்து நீங்குவது தான் எப்படி? வாருங்கள் பார்ப்போம். ...

- என்.கணேசன்