என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, August 13, 2026

சதுரங்கம் 31

 




ர்ஜுனுக்கு அப்பா அம்மாவின் திருமணப் புகைப்படங்கள் ஏன் பத்திரிக்கைகளில் வரவில்லை என்பதற்கும், ஏன் அம்மாவின் திருமணம் பற்றி அம்மாவின் கிராமத்தவர்கள் கூட அறியவில்லை என்பதற்கும் ஒருவழியாக விடை கிடைத்தது. தாத்தா மூத்த மகனின் திருமணத்தை இந்த அளவு எளிமையாய் நடத்தினதற்கு, அரைமனதாகத் திருமணத்திற்குச் சம்மதிக்க வேண்டி வந்ததும் காரணமாக இருந்திருக்குமோ? கோயிலிலேயே எளிமையாய்த் திருமணம் நடத்தியிருக்கட்டும், அவரைப் போன்ற ஒரு பிரபல பிரமுகர் குறைந்த பட்சமாக நெருங்கிய ஐம்பது பேரையாவது கூப்பிட்டிருக்க வேண்டாமோ?

 

அடுத்ததாக இன்னொரு சந்தர்ப்பத்தில் ஞானமூர்த்தி - பானுமதி திருமணத்தைப் பற்றிப் பேசியவர் முன்னாள் முதல்வரும், இன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரத்தினம். தணிகாச்சலம் முதலமைச்சராக இருந்த சமயத்தில் அவருடைய ஒரே மகனும், இப்போதைய முதலமைச்சருமான சரவணனுடைய திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்தினார். அந்த ஆடம்பரத்தைக் கண்டிக்கும் வகையில் ரத்தினம் பேசியிருந்தார்.

 

மூச்சுக்கு ஒரு முறை தலைவர் பெயரைச் சொல்லும் தணிகாச்சலம், தலைவரின் எந்த  நல்ல உதாரணத்தையும் பின்பற்றுபவர் அல்ல என்பதற்கு இந்தத் திருமணமே சான்று. தலைவர் தன் மூத்த மகனின் திருமணத்தை குமரக்கோட்டம் கோவிலில் எத்தனை எளிமையாக நடத்தினார். வீட்டார் மட்டுமே பங்கு கொண்ட நிகழ்ச்சியாக அது இருந்தது. ஆனால் தணிகாச்சலமோ அம்பானி குடும்பத்திற்குப் போட்டி போட்டு தன் இல்லத் திருமணத்தை நடத்துகிறார். தலைவர் தம் மகனுக்கு ஒரு ஏழை கிராமத்துப் பொண்ணைத் திருமணம் செய்து வைத்தார். ஆனால் தணிகாச்சலமோ பெரிய செல்வந்தரின் மகளை மகனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்.”   

 

அவர் ஒருவர் தான் பானுமதி ஒரு ஏழை கிராமத்துப் பெண் என்ற ஒரு அடையாளத்தையாவது சொன்னார். ஆனால் வேறு யாருமே தலைவரின் மகன் திருமணம் செய்து கொண்ட பெண்ணைப் பற்றிச் சொல்லாததும், பேசாததும், எழுதாததும் தான் அர்ஜுனுக்கு ஆச்சரியமாக இருந்தது. திருமணமான சூட்டோடு அந்தச் செய்தி வெளியிடப்பட்டு இருந்தால் ஞானமூர்த்தியின் மனைவியைப் பற்றிய செய்திகளும் வெளியாகியிருக்குமோ என்னவோ? காலம் கழிந்த பின், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அந்த ஏழைப் பெண்ணைப் பற்றி என்ன சொல்வது என்று விட்டு விட்டார்களோ?

 

சித்தப்பாவின் திருமணப் புகைப்படங்களில் ஒன்றில் அப்பா அம்மா சித்தப்பா சித்தி பாட்டி என ஐந்து பேருமே இருந்தார்கள். அந்தப் புகைப்படத்தை அர்ஜுன் ஆராய்ந்தான். அம்மா வெறுமையுடன் வெறித்துப் பார்ப்பதும், பாட்டி சிறிது சோகத்தோடு இருப்பதும் தெரிந்தது. அப்பா எப்போதும் போல் தான் தெரிந்தார். சித்தப்பா, சித்தி முகங்களில் மகிழ்ச்சி தெரிந்தது.  அம்மா வெறுமையுடன் வெறித்துப் பார்ப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் பாட்டி ஏன் சோகமாய் இருக்கிறாள். தாத்தா இல்லாமல் போனதை நினைத்து வருத்தமா, இல்லை அந்தத் திருமணத்தில் அவளுக்கு விருப்பம் இருக்கவில்லையா?  இந்தக் குடும்ப விஷயங்கள் குழப்புகின்றனவே!

 

நித்யா வந்தவுடன் அவளிடம் சில வேலைகளை பானுமதி சொன்னாள். வழக்கமாக முகத்தில் சலிப்பையும், உதடுகளில் முணுமுணுப்பையும் காண்பிக்கும் நித்யா இன்று சரியென்று தலையசைத்ததோடு தாயை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள். ஒரு கணம் பானுமதிக்கு மனம் நிறைந்து போனது. “என்னடி பாசம் ரொம்பவும் பொங்கி வழியிதுஎன்று சொல்லி மகளைப் பார்த்தாள்.

 

நித்யா அவள் சொன்ன வேலைகளைச் செய்ய ஆரம்பித்தபடியே சொன்னாள். “எனக்கெல்லாம் எப்பவும் பாசம் பொங்கி வழிஞ்சுட்டு தான் இருக்கு. உனக்குத் தான் என் மேல அது இல்லை.”

 

உனக்கென்னடி நான் குறை வெச்சேன்.”

 

எப்ப பாரு வேலை குடுத்துகிட்டே இருக்கே. என் ஃப்ரண்ட் ஸ்னேஹாவோட அம்மா எல்லாம் அவ கிட்ட ஒரு வேலையும் சொல்றதில்லையாம்.”

 

அதெல்லாம் பொண்ணை உதவாக்கரையாக்கற வழி. நாளைக்கு கல்யாணம் ஆனா அவ என்னடி செய்வா? புருஷனுக்கு ஆக்கிப் போட வேண்டாமாடி?”

 

ஏன் அவளே ஆக்கிப் போடணும்?”

 

இதென்னடி கேள்வி? வேற யார் ஆக்கிப் போடணும்?”

 

அவனும் சமைக்க கத்துக்கணும். இப்ப எல்லாம் ரெண்டு பேரும் தானே வேலைக்குப் போறாங்க. அப்பறம் என்ன? ஒரு நாள் அவள் சமைச்சா இன்னொரு நாள் அவன் சமைக்கணும். இல்லைன்னா பாதி வேலையை அவள் செஞ்சா மீதியை அவன் செய்யணும். உன்னை மாதிரி ஆளால தான் ஆணாதிக்கமே இங்கே அதிகமாகுது. நீ ஏன் உன் மகனை இந்த மாதிரி வேலைக்கெல்லாம் கூப்பிடறதில்லை. அவனுக்கு ஒன்னும் சொல்லித் தராமல் வளர்த்திருக்கேன்னு நாளைக்கு உன் மருமகள் வந்து உன்னைத் திட்டப் போறா பாரு.”

 

பானுமதி புன்னகையுடன் சொன்னாள். “நாளைக்கு உன் புருஷனும் வந்து என்னைத் திட்டத்தான் போறான். “எப்படி பொண்ணை வளர்த்திருக்கீங்கன்னு.”

 

அப்படி மட்டும் அவன் திட்டட்டும். அவனை உண்டு இல்லைன்னு ஆக்கிடறேன் பாரு

 

பானுமதி வாய்விட்டுச் சிரித்தாள். அம்மா வாய்விட்டு சிரித்ததை நித்யா ஈரக்கண்களுடன் பார்த்தாள். அதை பானுமதி கவனிக்கவில்லை.  அவள் மனம் மகள் திருமணமாகிப் போனால் இந்த வீடு எப்படி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தது. ஆனால் மகள் இல்லாமல் இந்த வீட்டை அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அன்பும், பாசமும், வாய்த்துடுக்கும், கலகலப்பும் கொண்ட நித்யாவால் தான் இந்த வீடு நிறைவாக இருக்கிறது. மகள் திருமணமாகிப் போனாலும் ஞானமூர்த்தி பெரிதாகப் பாதிக்கப்பட்டு விடமாட்டார். ஆனால் அர்ஜுன் தாங்க மாட்டான். அவன் அவள் மீது உயிரையே வைத்திருக்கிறான்.

 

சில சமயங்களில் அண்ணன் தங்கையின் நெருக்கம் பானுமதியைப் பயப்படுத்துவதுண்டு. வயதுக்கு வந்த ஒரு பெண், அண்ணனே ஆனாலும் மிக நெருங்கிப் பழகுவது சரியல்ல என்று அவள் நினைக்கிறாள். ஆனால் அதை அவள் வாய் விட்டுச் சொல்ல வழியில்லை. சொன்னால் நித்யா பத்ரகாளியாகி விடுவாள். அவளிடம் வாதம் செய்து ஜெயிக்க முடியாது. அதனால் தான் அண்ணன் தங்கை பேச்சு அதிகமாவது போல் தெரிந்தால் அவள் நித்யாவை அழைத்து ஏதாவது ஒரு வேலை தருகிறாள். அவள் குழந்தைகள் மீது அவளுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் ஒரு எல்லைக்குள் இருப்பதே அனைவருக்கும் நல்லது...

 

அர்ஜுன் இன்று அதிகாலை போனவன்  ஒரு மணி நேரத்திற்கு முன் தான் வந்தான். வந்தவுடன் அண்ணனும் தங்கையும் ஏதோ ரகசியம் பேசுவது தெரிந்தது. என்ன பேசுவார்களோ?

 

சோதாவின் அலைபேசி இசைத்தது. அதிகமாக அவளை அழைத்துப் பேசுபவர்கள் இரண்டே பேர் தான். ஒருவர் அவளுடைய தம்பி கேசவன். இன்னொருத்தி அவளுடைய அண்ணன் மகள். இப்போது அழைப்பது யார் என்று பார்த்தாள். கேசவன்.

 

ஹலோ

 

அக்கா, கேசவன் பேசறேன். எப்படி இருக்கே?”

 

”82 வயசுல எப்படிடா இருப்பேன்? உடம்புல தெம்பு இல்ல. மனசுலயும் பலம் இல்லை. எப்படியோ காலத்தை ஓட்டறேன்... நீ எப்படிடா இருக்கே?”

 

நீயாவது தேவலை. எனக்கு 74 லுலேயே ஏகப்பட்ட சிக்கல். நேத்து நம்ம குலதெய்வம் கோயிலுக்குப் போயிட்டு வந்தேன். அங்கே நம்ம கிராமத்து மாடசாமியப் பாத்தேன்... அவர் உன்னையெல்லாம் விசாரிச்சார்.... அப்ப அவர் ஒன்னு சொன்னார்.... ஆச்சரியமாயிருந்துச்சு. முந்தாநாள் யாரோ இன்சூரன்ஸ் ஏஜெண்டுன்னு சொல்லிகிட்டு கிராமத்துக்கு வந்தானாம். நம்ம கிராமத்து மகுடபதி எதோ இன்சூரன்ஸ் செஞ்சு வெச்சிருக்கார். அவருக்கு வர வேண்டிய பணம் இருக்குன்னு சொன்னானாம்....”

 

மகுடபதி இன்சூரன்ஸ்ங்கற வார்த்தையைக் கூடக் கேள்விப்பட்டிருக்க மாட்டானேடா..”

 

அதனால தான் எனக்கு ஆச்சரியமாய் இருந்துச்சு. மகுடபதி பொண்ணைப் பத்தியெல்லாம் விசாரிச்சானாம். மாடசாமிக்கு ஒன்னும் தெரிஞ்சிருக்கலை. அதனால தெரியாதுன்னுட்டாராம். “உங்களுக்கெதாவது தெரியுமா?”ன்னு என் கிட்ட கேட்டார். நான் தெரியாதுன்னு சொல்லிட்டு அந்த இன்சூரன்ஸ் ஆள் பார்க்க எப்படி இருந்தான்னு கேட்டேன். அவர் சொன்ன அடையாளத்தை எல்லாம் பார்த்தா, வந்தவன் உன் பேரன் மாதிரி தான் தெரியுது. அதை உன் காதுலயும் போட்டு வைக்கலாம்னு தான் போன் செஞ்சேன்...”

 

யசோதாவின் முகம் இருண்டது.


(தொடரும்)

என்.கணேசன்

 




1 comment: