என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, July 13, 2017

இருவேறு உலகம் – 38



டபடக்கும் இதயத்துடன் க்ரிஷ் கேட்டான். என்ன நிபந்தனை?

“உன் உணர்வுநிலையின் உள்ளே நுழைய என்னை அனுமதிக்க வேண்டும்...

எனக்குப் புரியவில்லை

உன் கம்ப்யூட்டரில் புதிய சாஃப்ட்வேர் போட்டுக் கொள்வது போலத் தான் இது....

“அதை எப்படிச் செய்வது....

“அதை நான் செய்து கொள்கிறேன். ஆனால் மன அளவில் உன் எதிர்ப்பு சிறிதளவு இருந்தாலும் என்னால் உன் மனதுக்குள் புக முடியாது...

மனிதனின் மனம் அவனுடைய தனிச் சொத்து. அவன் அந்தரங்கமாய் நினைக்கும் விஷயங்களை அடுத்தவர் புகுந்து காண்பதை எப்படி சகிக்க முடியும் என்று க்ரிஷ் யோசித்தான்.

அதற்கு உடனே வேற்றுக்கிரகவாசியின் மறுமொழி வந்தது. நீ நினைப்பதை என்னால் இப்போதும் அறிய முடியும். ஆனால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள உன் உணர்வுநிலை போதாது. அதற்கு உனக்குக் கூடுதல் திறன் தேவை. அதற்குத் தான் உன் அனுமதி கேட்கிறேன். அதற்கு அனுமதி தந்தாயானால் இந்தக் கம்ப்யூட்டர் இல்லாமலேயே நாம் இருவரும் நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். 

க்ரிஷ் யோசித்தான். எல்லாம் மாயாஜாலக்கதை போல் இருக்கிறதே!

உடனே மறுமொழி வந்தது. “இது எதுவுமே மாயாஜாலம் அல்ல. உங்களுக்குப் புரியாத இன்னொரு இயற்கை விதியே. இதை உங்கள் சித்தர்களும், யோகிகளும் அறிந்திருந்தார்கள். இப்போதும் சில அறிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் உன்னிடத்தில் இணைக்கப் போவது, உங்கள் பாஷையில் சொன்னால் மிகவும் அட்வான்ஸ்டு வெர்ஷன்....

க்ரிஷ் கேட்டான். “நாம் இருவரும் ஏன் அப்படிப் பேசிக்கொள்ள வேண்டும்?

மிகவும் வெளிப்படையாக, தயக்கமில்லாமல் அவன் கேட்டவுடன் வேற்றுக்கிரகவாசி சிறிது யோசித்தது போலிருந்தது. பின் பதிலுக்கு ஒரு கேள்வி வந்தது.   

“உன் பூமி அழிவுப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது தெரியுமா?

அழிவுப்பாதை என்றதும் க்ரிஷ் மனதில் உடனே நினைவுக்கு வந்தது அணு ஆயுதங்கள் தான். பயன்படுத்த மாட்டோம் என்று எல்லா முக்கிய நாடுகளும் சத்தமாகச் சொல்கின்றன. ஆனால் எல்லா நாடுகளும் அது குறித்து ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. பயன்படுத்தப் போகாத ஒன்றிற்கு ஆராய்ச்சிகள் எதற்கு?

அவன் எண்ணி முடிவதற்குள் வேற்றுக்கிரகவாசியின் கருத்து லாப்டாப்பில் மின்னியது. “பிரச்னை அணு ஆயுதங்களில் இல்லை. அழிவுக்கான சாத்தியக்கூறுகளில் ஒன்று தான் அணு ஆயுதங்கள். இன்னும் நீ ஆழமாய்ப் போக வேண்டும். அதற்காகத் தான் நான் உன்னிடம் வந்திருக்கிறேன்.....

க்ரிஷ் கேட்டான். “பூமி அழியப் போவதில் வேற்றுக்கிரகவாசிக்கு என்ன அக்கறை?

இந்த இடத்தில் மாஸ்டருக்கு க்ரிஷை மெச்சாமல் இருக்க முடியவில்லை. அவனைப் பொருத்த வரை எதையும் வெளிப்படையாகவும், தயக்கமில்லாமலும் கேட்டிருக்கிறான். நாம் இருவரும் ஏன் அப்படிப் பேசிக் கொள்ள வேண்டும்?என்று கேட்டதும் சரி இதில் உனக்கு என்ன அக்கறை?என்று கேட்டதும் சரி பளார்கேள்விகள் தான். ஆனால் எதிரி அவனைக் கச்சிதமாக அறிந்து எல்லாவற்றிற்கும் தயாராகத் தான் வந்திருக்கிறான்....

“நீங்கள் அழியப் போகிற உயிரினங்கள் என்று சில விலங்குகளை காப்பாற்ற சகல முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களே. ஏன்? மனிதன் எதற்கு ஏதோ சில விலங்குகள் அழிவதற்கு வருத்தப்பட வேண்டும்? ஏன் அவற்றைக் காப்பாற்றவும் பெருக்கவும் முயற்சிகள் எடுக்க வேண்டும்?

க்ரிஷ் ஒரு கணம் யோசித்து விட்டுக் கேட்டான். “சரி, இதில் என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? நான் என்ன செய்ய முடியும்?

அறிவும், நல்ல மனமும் சேர்ந்திருக்கும் மனிதர்களாலேயே எந்த ஒரு சமுதாயமும் மேம்பட்டிருக்கிறது. வளர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட மனிதர்கள் இல்லாமல் போகும் போது, அப்படிப்பட்ட மனிதர்கள் இருந்தும் அவர்கள் பொது நலனில் அக்கறை காட்டாத போது அழிந்திருக்கிறது. நல்ல மனிதர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் போது எல்லாமே நாசமாகிப் போகிறது...

க்ரிஷுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பல சமயங்களில் உண்மைக்கு மறுமொழி மௌனமாகவே அல்லவா இருக்கிறது.

வேற்றுக்கிரகவாசி கேட்டான். “உன் உள்ளுணர்வில் புக இப்போதாவது என்னை அனுமதிக்கிறாயா?

உடனே ஆமாம், இல்லை என்று சொல்வதில் எப்போதுமே சிக்கல் உண்டு என்பதால் க்ரிஷ் எச்சரிக்கையோடு சொன்னான். “எனக்கு யோசிக்க சிறிது காலம் வேண்டும்

“யோசி. அடுத்த அமாவாசைக்கு முன் ஒரு முடிவுக்கு வா. நீ சரி என்றால் நான் சில மாதங்கள் இந்தப் பூமியில் இருப்பேன். மாட்டேன் என்றால் அடுத்த அமாவாசை அன்றே போய் விடுவேன்.... இனி திரும்ப மாட்டேன்

“ஏன்?

“அழியப்போகும் பூமியில் அதிக காலம் தங்குவதில் அர்த்தமில்லை..... உனக்கு சம்மதம் என்றால் அடுத்த அமாவாசை அன்று இந்த மலைக்கே திரும்பி வா? இல்லை என்றால் வீட்டில் இருந்தே உன் லாப்டாப்பில் தெரிவித்தால் போதும்....  நான் கிளம்பட்டுமா?

அடுத்த கணம் தீப்பந்தமாய் ஒரு வினாடி தோன்றிய ஒளி மறுகணம் மறைந்து கரிய பெரிய பறவை பறக்க ஆரம்பித்தது தெரிந்தது. அந்தக் கரிய பறவை போவதையே பிரமிப்போடு பார்த்து நின்று கொண்டிருந்த க்ரிஷ் சில வினாடிகளில் அது இருட்டில் கரைந்து காணாமல் போன பிறகு களைப்புடன் கீழே சாய்ந்தான். எல்லாமே கனவு போலவும், கற்பனை போலவும் இருந்தது.

தொடர்ந்த நாட்களிலும் க்ரிஷால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. முதலில் அவனுக்கு இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது என்பதையே கூட ஜீரணிப்பதில் சிறிது சிரமம் இருந்தது. அவன் ஏலியன்ஸ் பற்றி இது வரை கிடைத்திருக்கும் ஆதாரங்களைத் தேடித் தேடிப் படித்தான். எதுவுமே அவன் அனுபவம் போல் இல்லை. வேற்றுக்கிரகவாசி சொன்னதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை அவன் நினைவில் பதிந்திருந்தது. திரும்பத் திரும்ப யோசித்தான். முன்பின் தெரிந்தராத அந்த சக்தி ஏதோ ஒரு சாஃப்ட்வேரைஅவனுக்குள் புகுத்த அவன் அனுமதிக்க வேண்டுமா? அது அதோடு நிற்குமா? அதன் பின் அவனுக்கு முழு சுதந்திரம் இருக்குமா? முக்கியமாய் அவன் அவனாக இருக்க முடியுமா? எதற்கும் உத்திரவாதமில்லை.

அம்மாவும், அப்பாவும் அடிக்கடி சொல்லும் அவனுக்கு ‘கண்டம்இருக்கும் காலமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் கண்டத்தைக் கொண்டு வருவதே அந்த வேற்றுக்கிரகவாசியாக இருக்கலாமோ?  

இந்த எண்ணத்தில் விடாப்பிடியாக நின்று யோசித்து முடிவெடுத்திருந்தால் கண்டிப்பாக க்ரிஷ் ஆபத்திலிருந்து தப்பித்திருப்பான் என்று மாஸ்டர் நினைத்தார். ஆனால் விதி வலியதாக இருந்ததால் க்ரிஷ் வேறு பலவும் யோசித்தான்.

புதிய அனுபவங்கள், புதிய சாதனைகள் காணாத வாழ்க்கையில் அர்த்தம் என்ன இருக்கிறது? எல்லைகளை நீட்டிக் கொண்டு போகாமல் ஒவ்வொரு கணமும் உண்மையாக வாழாமல் பயந்து பயந்து சாவதிலும், நேற்றைய சாதனைகளிலேயே திருப்தி அடைந்து தேக்கநிலை வாழ்க்கை வாழ்வதிலும் என்ன பெருமை இருக்கிறது.  ஒரு ஏலியனின் தொடர்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அதன் மூலம் புதிய பரிமாணங்களைக் காணும் வாய்ப்பு யாருக்கு வாய்க்கும். இதை எல்லாம் விட்டு விட்டு பாதுகாப்பான வாழ்க்கை வாழ முடிவெடுத்தால் வாழ்க்கையில் பாதுகாப்பு இருக்கலாம், நிறைவு இருக்குமா? ஒரு பொன்னான வாய்ப்பை இழந்து விட்டோமே என்ற ஒரு ஏக்கம் இருந்து கொண்டே அல்லவா இருக்கும்? பரமேசுவரப் பணிக்கர் கணித்தது போல அவனுக்கு மரணமே வந்தால் தான் என்ன?  சாகச முயற்சியில் செத்தால் தான் என்ன? என்றேனும் ஒரு நாள் எல்லோரும் சாக வேண்டியவர்களே அல்லவா? கடைசியில் பிறந்ததற்கு புதிய பரிமாணங்களையும், புதிய அனுபவங்களையும் பெற்றுவிட்டு மடிவதே உத்தமம் என்று தோன்றியது.

இந்த எண்ணம் வலுப்பட்ட போது அவன் குடும்பமும், ஹரிணியும் தான்  அதற்கு எதிரணியில் அவன் மனதில் இருந்தார்கள். அவர்களுடைய துக்கம் தான் அவனை நிறைய யோசிக்க வைத்தது. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் உதய் இருக்கிறான். துக்கப்படும் நாட்கள் அதிகமானாலும் ஒருநாள் அவர்கள் அவன் மரணத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெறுவார்கள். உதய்க்குத் திருமணமாகி குழந்தைகள் பிறந்தால் பேரக்குழந்தைகளைக் கொஞ்ச ஆரம்பிக்கும் போது அவர்கள் மனக்காயம் கண்டிப்பாக ஆறும். உதயும் தன் குடும்பம், குழந்தைகள் என்று ஆனவுடன் கண்டிப்பாய் தம்பியை நினைப்பது குறைந்து போகும். ஆனால் ஹரிணி? அவன் அவளை அறிவான். அவள் கண்டிப்பாக இன்னொரு திருமணம் செய்து கொள்ள மாட்டாள். அவன் மனதில் அவளைத் தவிர வேறொருத்திக்கு எப்படி இடம் தர முடியாதோ அதே போல் அவளாலும் அவனைத் தவிர வேறொருவனுக்கு இடம் தர முடியாது.  அவன் அறிவான். அவள் வாழ்க்கையில் நிரந்தர வெறுமை தங்குவதை மட்டும் தான் அவனால் சகிக்க முடியவில்லை.

பல ஆழமான சிந்தனைகளுக்குப் பின் தான் அவள் மனதில் தன் இடத்தை வலுவாக்காமல், அழிக்கும் முடிவை எடுத்தான். அவள் அவன் வீட்டுக்கு வந்த நாளில் அலட்சியப்படுத்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது போல் காட்டிக் கொண்டான். அவள் அவமானத்தை உணர்ந்தவளாய் அவன் அறையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது அவன் இதயத்தில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் எதிலேயோ மூழ்கி இருப்பதாய் காட்டிக் கொள்வதற்கு அவன் படாதபாடு பட்டான். பதினைந்து நிமிட அலட்சியத்திலேயே அவள் போக வேண்டும் என்று எதிர்பார்த்தான். பாவம் அவள் மிக நல்லவள். அவன் மேல் இருந்த காதல் காரணமாக மேலும் தங்கினாள். ஒவ்வொரு வினாடியும் அவள் உணர்ந்த வேதனைக்குப் பத்து மடங்கு அதிக வேதனையை அவன் அனுபவித்தான்.  

ப்ளீஸ் ஹரிணி போயிடு....என்று ஒரு மணி நேரம் கழிந்த பின் க்ரிஷ் மனதினுள் கதற ஆரம்பித்தான். ஆனால் அவள் அதற்கு மேலும் ஒரு மணி நேரம்- அறுபது நிமிடம்- 3600 வினாடிகள் தங்கி அவன் இதயத்தைப் பிழிந்து விட்டுத் தான் போனாள். அவள் போனவுடன் கதவைச் சாத்திக் கொண்டு அவன் நாள் முழுவதும் அழுதான்.

காதல், லௌகீக வாழ்க்கை என்று எதிலும் சிக்காமல் வாழ்ந்த மாஸ்டருக்கே அவன் அழுத காட்சியை மறு ஒளிபரப்பில் பார்த்த போது மனம் உருகியது. காதலைக்கூடத் தியாகம் செய்து எதிரியிடம் ஏமாந்து விட்டாயே க்ரிஷ்!

(தொடரும்)

என்.கணேசன் 

Monday, July 10, 2017

விமர்சனத்தை எதிர்கொள்வது எப்படி?

சமுத்திரம் அலைகளை இடைவிடாது உருவாக்குவது போல சமூகம் விமர்சனங்களை இடைவிடாது உருவாக்கிக் கொண்டே இருக்கும். அதனால் விமர்சனங்களில் இருந்து நாம் தப்பி விட முடியாது. இந்த விமர்சனங்கள் இனிமையானதல்ல என்றாலும் சந்தித்தே அல்லவா ஆக வேண்டும். சரியாக விமர்சனத்தை எதிர்கொள்வது எப்படி? பார்ப்போம்

Thursday, July 6, 2017

இருவேறு உலகம் – 37


ந்த மலையின் பெயர் க்ரிஷின் லாப்டாப்பில் மின்னிய போது அவன் மனம் அந்த மலை பற்றிக் கேள்விப்பட்ட வினோதமான, அமானுஷ்யமான செய்திகளுக்குத் தாவி விட்டு மீண்டது. இந்த அமானுஷ்ய மனிதன் இதற்கு முன்னும் அந்த மலைக்கு வந்திருக்கலாம்.....

“அந்த மலை பற்றி கேள்விப்பட்ட செய்திகளுக்கெல்லாம் காரணம் நீங்கள் தானா?என்று க்ரிஷ் கேள்வி எழுப்பினான்.

“ஒன்றிரண்டை மட்டும் தான் அங்கிருந்தவர்கள் என்னால் கண்டார்கள். மீதி எல்லாம் மற்றவர்கள் தாங்களாக உருவாக்கியவை. அதில் என் பங்கு எதுவுமில்லைஎன்ற பதில் வந்தது. அப்படியானால் இதற்கு முன் அந்த ஆள் அங்கு வந்திருப்பது உண்மை....

“அது தான் உங்கள் இருப்பிடமா?

“நான் சிலகாலமாய் அவ்வப்போது வரும் இடம்.

“அப்படியானால் உங்கள் நிரந்தர இருப்பிடம் எது?

“அது தொலைதூரத்தில் இருக்கிறது....

அது அவர் சொன்ன 16000 கிலோமீட்டர் தூரத்திலேயே இருக்கலாம். ஆனாலும் உறுதி செய்து கொள்ள தொலைதூரத்தில் எங்கே என்று அவன் கேட்பதற்குள் அடுத்த வாசகம் லாப்டாப்பில் மின்னியது. “அடுத்த அமாவாசை அன்று இரவு எட்டு மணிக்கு அந்த மலைக்கு வருகிறாயா? மலை உச்சியில் சந்திப்போம்....

க்ரிஷுக்கு அந்த மலையில் நடந்த வினோத சம்பவங்கள் எல்லாம் அமாவாசை இரவில் தான் அரங்கேறியவை என்பது உடனே நினைவுக்கு வந்தது. இப்போதும் அமாவாசை அன்று தான் அந்த ஆள் வரச் சொல்கிறான்...

“ஏன் அமாவாசை நாளையே நம் சந்திப்புக்குத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? ஏதாவது பிரத்தியேக காரணம் இருக்கிறதா?

“அந்த நாள் தான் நான் அங்கே வருவேன். அதனால் தான் அந்த நாள் வரச் சொல்கிறேன்... வரும் போது லாப்டாப்பையும் கொண்டு வா

அவன் படித்து விட்டு நேரில் சந்திக்கையில் லாப்டாப் எதற்கு என்ற அடுத்த கேள்வி கேட்பதற்கு முன் அந்த வாசகம் மறைந்து போனது.  பின் எந்த வாசகமும் வரவில்லை. க்ரிஷ் ஹலோஎன்று அழைக்க கீ போர்டை அழுத்தினான். அவன் அழுத்தும் எந்த எழுத்துமே இப்போது லாப்டாப் திரையில் வரவில்லை. அந்த மர்ம மனிதன் தகவல் ஏதாவது அனுப்பும் போது மட்டுமே அதற்கு அவன் பதில் எழுத முடிகிறது. அதுவும் ஆச்சரியமாய் இருக்கிறது.

அன்றிரவு அந்த மர்ம மனிதன் குறித்த சிந்தனைகளால் அவனால் உறங்க முடியவில்லை. யாரவன்? எதற்கு இப்படி தொடர்பு கொள்கிறான்? எப்படி அவனால் இப்படி தொடர்பு கொள்ள முடிகிறது?.... யாராக இருந்தாலும் அவன் தன்னை விட அறிவாளி என்பதில் க்ரிஷுக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை. ஏனென்றால் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவனிடம் பதிலும் இல்லை, எப்படி நடக்கிறது என்று அவனால் யூகிக்கவும் முடியவில்லை.

என்றைக்குமே க்ரிஷ் தன்னை விடச் சில விஷயங்களில் அறிவாளிகளாக இருப்பவர்கள் மீது பொறாமை கொண்டதில்லை. அவர்களது மேலான நிலையை ஒப்புக் கொள்ளவும் தயங்கியதில்லை. ஏனென்றால் புதியதாக அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் என்கிற உற்சாகமே எல்லாவற்றையும் விட பிரதானமாக அவனிடம் மேலோங்கி நிற்கும். இப்போதும் அந்த ஆள் அந்த உற்சாகத்தையே ஏற்படுத்தினான். அந்த ஆளைச் சந்திக்க அமாவாசை வரை காத்திருப்பது தான் கஷ்டமாய் இருந்தது.

அடுத்த அமாவாசை வரை இணையத்தில் இது போன்ற அபூர்வ சக்திகள் பற்றிய தகவல்களைத் தேடினான். அதில் நிறைய தகவல்கள் இருந்தன. ஆனால் கற்பனைகள், பொய் விளம்பரங்கள், அரைகுறை அனுமானங்கள் ஆகியவற்றின் மத்தியில் உண்மையைத் தேடுவது சுலபமாய் இருக்கவில்லை. ஆனாலும் சலிப்பில்லாமல் அதில் ஒவ்வொன்றையும் ஆழமாய் அலசினான். அந்த மலையில் அமாவாசை நாட்களில் நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டிப் படித்தான். நெருப்பு ஜூவாலை, பேய்க்காற்று, மர்ம சக்தி நடமாட்டம் போன்ற  அந்தத் தகவல்களிலும் கூட சம்பந்தப்பட்ட மனிதர்களின் கற்பனை பாதி என்றால் பத்திரிக்கைகள் முதலான ஊடகங்கள் பரபரப்புக்கு வேண்டி சிருஷ்டி செய்து கொண்ட விஷயங்கள் பாதியாக இருந்தன. உண்மை என்றுமே தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் சிரமத்தை எடுத்துக் கொள்வதில்லைஎன்று தோன்றியது.

அடுத்த அமாவாசை நாள் வரை அவனுடன் எந்த விதத் தொடர்பும் அந்த மர்ம நபர் வைத்துக் கொள்ளவில்லை. க்ரிஷ் அந்த நாட்களில் லாப்டாப்பை அடிக்கடி பார்த்தான். எந்த வாசகமும் மின்னவில்லை. அமாவாசை மாலை கிளம்பும் முன் சின்னதாய் ஒரு தயக்கமும் அவனுக்கு வந்தது. அவன் போய், அந்த மர்ம நபர் வராமல் போனால்....? அப்படி ஒருவேளை அந்த ஆள் வராமல் போனால் அந்த இடத்தில் உலாவும் சக்திகள், அமானுஷ்யங்கள் பற்றி ஆராய்ந்து விட்டு வரலாம்என்று எண்ணியவனாய் அமாவாசை அன்று இருட்டுவதற்கு முன்பே கிளம்பிப் போனான்.

அந்த மலையை அவன் அடைந்த போது ஆட்கள் யாருமேயில்லை. மலை மேல் இருந்த சிறிய அம்மன் கோயில் கதவு சாத்தப்பட்டிருந்தது. கைகூப்பி வணங்கி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். சில மரம், செடி, கொடி, பாறைகளைத் தவிர வேறு எதுவும் அங்கில்லை. சூரியன் தூரத்தில் அழகாய் அஸ்தமனம் ஆகிக் கொண்டிருந்தது. அந்த அழகை நின்று முழுவதுமாய் க்ரிஷ் ரசித்து விட்டு ஓரிடத்தில் அமர்ந்தான்.   

இருள் சூழ ஆரம்பித்தது. வீசிய காற்று ஒரு புதிய ஒலியைப் பெற ஆரம்பித்தது. நேரம் செல்லச் செல்ல அதன் வேகமும் அதிகரிக்க ஆரம்பித்தது. அதன் ஒலியும் கூடுதல் அமானுஷ்ய தொனி பெற ஆரம்பித்தது. பேய்க் காற்று என்று சொல்வது இதைத் தானோ?....

அமாவாசை இருட்டில் வானத்தில் மின்னிய வைர நட்சத்திரங்களை ரசித்துக் கொண்டிருக்கும் போது தான் க்ரிஷ் அந்தப் பெரிய கரிய பறவையைக் கவனித்தான். அமாவாசை இருட்டிலும் அந்தக் கரிய பறவை வித்தியாசமாய் இருந்தது. பறந்து கொண்டிருக்கும் அசைவினால் அதைப் பார்க்க முடிகிறதே ஒழிய அது அசைவற்று ஆகாயத்தில் இருந்தால் அந்த அமாவாசை இருட்டில் தெரிய வாய்ப்பில்லை.  கண்டிப்பாக அது காகமல்ல.... காகத்தை விடப் பெரிய பறவை. சுமார் ஐந்து மடங்காவது பெரிதாக இருக்கலாம்.... இது போன்ற அண்டக்காக்கைகள் வட அமெரிக்கப் பகுதியில் தான் இருக்கின்றன... அவை கூட இவ்வளவு பெரியவை அல்ல...

அந்தப் பறவை சில முறை அந்த மலையைச் சுற்றி வந்து  திடீரென்று மறைந்தது. அவன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி எட்டு. ஆகாயத்தில் திடீரென்று ஒரு ஒளி தெரிந்தது. நெருப்புப் பந்தமாய் மின்னிய ஒளி அந்த மலை உச்சியில் இறங்க ஆரம்பித்தது. அதைப் பார்க்கவே அவனுக்கு மயிர்க்கூச்செறிந்தது. இதயத்துடிப்பின் வேகம் கூடியது. பரபரப்பாக இருந்தது. இதைத்தான் உண்மையாகப் பார்த்தவர்கள் சொல்லி இருக்கிறார்களோ?

அந்த ஒளி மலையுச்சியைத் தொட்டவுடன் மறைந்தது. ஒளி மறைந்து உருவான கூடுதல் இருட்டில் ஒரு கணம் க்ரிஷால் எதையும் பார்க்க முடியவில்லை. திடீரென்று மூடப்பட்டிருந்த அவன் லேப்டாப்பின் இடுக்கிலிருந்து ஒளி தெரிந்தது. க்ரிஷ் பரபரப்பாக லாப்டாப்பைத் திறந்தான்.

“நீ வந்ததற்கு நன்றிஎன்ற வாசகம் லாப்டாப் திரையில் மின்னிக் கொண்டிருந்தது.   

“நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?என்று நடுங்கும் கைகளில் கேள்வியை அழுத்தினான்.

“உன் அருகில் தான்என்ற வாசகம் உடனே பதிலாய் மின்னியது.

“என்னால் பார்க்க முடியவில்லையே!

“மனிதக் கண்களால் பார்க்க முடியாதவை ஏராளம்

“யார் நீங்கள்?

“நான் வேற்றுக்கிரகவாசி

க்ரிஷ் ஒரு நிமிடம் பேச்சிழந்தான். ஏலியன்! அந்தப் பெருங்காற்றிலும் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. கஷ்டப்பட்டு தன்னைச் சமாளித்துக் கொண்டு தன் அடுத்த கேள்வியை அழுத்தினான்.

“எந்தக் கிரகம்?

“இன்னும் மனிதர்கள் கண்டுபிடிக்காத ஒரு தூரத்து கிரகம்

“ஏன் இங்கு வந்தீர்கள்?

“எங்கள் ஆராய்ச்சியில், கண்காணிப்பில் இருக்கும் கிரகம் இது. அதனால் வந்திருக்கிறேன்....

க்ரிஷுக்குத் தலைசுற்றியது. எல்லாமே மாயா ஜாலம் போலவும், கனவு போலவும் தோன்றியது. அவன் சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “ஏன் என்னைத் தொடர்பு கொண்டீர்கள்?

“பேரறிவும், மிக நல்ல மனமும் சேர்ந்து உன்னிடத்தில் இருப்பதால் தான் உன்னைத் தேர்ந்தெடுத்து தொடர்பு கொண்டேன்....

“அதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

“எல்லாம் அலைகள் மூலமாகத் தான். ஒரு மனிதன் உண்மையில் என்னவாக இருக்கிறான் என்பதை அடுத்த மனிதர்கள் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம். ஏன் அவனே அவனை அறிவது கூட அவ்வளவு சுலபமல்ல. ஆனால் அவன் வெளிப்படுத்தும் அலைகள் அனைத்துத் தகவல்களையும் சொல்லும். அதன் மூலம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். இந்த வித்தையை உங்கள் சித்தர்கள், யோகிகள் அறிந்திருந்தார்கள். இப்போது ஆராய்ச்சிகள் மூலமாக ஓரளவு உங்கள் விஞ்ஞானிகளும் அறிய ஆரம்பித்திருக்கிறார்கள்.... உதாரணத்திற்கு உனக்குப் பிடித்த நிகோலா டெஸ்லா

என்னைப் பற்றி என் அலைகள் மூலமாகத் தெரிந்து கொண்டது சரி. கி.பி.1856ல் பிறந்து 1943ல் இறந்த நிகோலா டெஸ்லா பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும். நான் படித்துக் கொண்டிருந்ததை வைத்தா?

“மனிதர்கள் இறந்தாலும் அவர்கள் எண்ண அலைகள் அவர்களுடன் சேர்ந்து இறந்து விடுவதில்லை.... அவை சாசுவதமானவை உங்கள் ரிஷிகள் சொல்லும் ஆத்மாவைப் போல...

இது விஷயமாக விவாதிக்கவும் தெரிந்து கொள்ளவும் க்ரிஷுக்கு நிறைய இருந்தது. ஆனால் அதற்கு முன் இந்த வேற்றுக்கிரகவாசியிடம் கேட்க வேண்டிய முக்கியக் கேள்வி முந்தியது.

“இங்கு வந்த பிறகும் நம்மால் லாப்டாப்பில் தான் பேசிக் கொள்ள முடியும் என்றால் சொல்ல வேண்டியதை நான் வீட்டில் இருக்கும் போதே சொல்லி இருக்கலாமே.  என்னை இங்கே ஏன் வரவழைத்தீர்கள்?

உண்மையில் நீ என்னை சந்திக்க முடியும். இந்த லாப்டாப் உதவியில்லாமலேயே என்னிடம் பேச முடியும். அதுவும் இப்போதே முடியும். ஆனால் அதற்கு ஒரே ஒரு நிபந்தனை

க்ரிஷ் இதயம் வேகமெடுத்தது....

இந்தக் காட்சியை மனத்திரையில் மறு ஒளிபரப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த மாஸ்டர் இங்கு தான் எதிரி க்ரிஷை அவன் அறியாமலேயே மடக்க ஆரம்பித்திருக்கிறான் என்று எண்ணினார். விதி வலியது!

(தொடரும்)
என்.கணேசன்

Wednesday, July 5, 2017

முந்தைய சிந்தனைகள் - 17

சிந்திக்க சில சிந்தனைகள் என் பழைய எழுத்துக்களிலிருந்து....










- என்.கணேசன்

Monday, July 3, 2017

வாழ்க்கையின் துன்பங்களில் இருந்து மீள…

கீதை காட்டும் பாதை 47

கவானின் விஸ்வரூப தரிசனம் முழுவதுமாகக் கண்ட பின் உடல் நடுங்கி குரல் தழுதழுக்க அர்ஜுனன் கூறுகிறான்.

நீ ஸத் அஸத் என்பவைகளைக் காட்டிலும் உயர்ந்ததான அழிவில்லாத பரம்பொருள். அறிந்தவன். அறியத்தகுந்தவன். எண்ணிலா வடிவம் கொண்டவன். இந்த உலகெங்கும் நீ பரவியிருக்கிறாய். மறுபடியும் மறுபடியும் உன்னை நமஸ்கரிக்கிறேன்.

உன்னை முன்புறம் வணங்குகிறேன். உன்னைப் பின்புறம் வணங்குகிறேன். எல்லாம் ஆனவனே! உன்னை எல்லாப் புறமும் வணங்குகிறேன். நீ எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறாய். ஆகவே எல்லாமாக இருக்கிறாய்.

உன்னுடைய மகிமை அறியாமல் தவறாகவோ, அன்பினாலோ நான் உன்னைத் தோழன் என்றெண்ணி அடக்கமில்லாமல் அழைத்திருக்கிறேன். பரிகசித்து அவமதித்திருக்கிறேன். அதையெல்லாம் மன்னித்து விட வேண்டும். அளவிடமுடியாதவனான உன்னை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

என் உடல் தரை மீது படும்படி நான் சாஷ்டாங்கமாக உன்னை வணங்கி, ஈசனும் துதிக்கத்தக்கவனுமான உன்னை அருள்புரிய வேண்டுமெனக் கோருகின்றேன். மகனுக்குத் தந்தை போலவும், நண்பனுக்கு நண்பன் போலவும், காதலனுக்குக் காதலி போலவும் இருந்து பிழையைப் பொருத்தருள வேண்டும்.

உன் உருவத்தைக் கண்டு என் மனம் பயத்தால் நடுங்குகிறது. இதற்குமுன் இருந்த அந்த பழைய உருவத்தையே எனக்குக் காட்டியருள வேண்டும்.”

சாதாரண புறக்கண்ணால் நாம் காண்பதே பல்லாயிரம். தூரதிருஷ்டிக் கண்ணாடி கிடைத்து அதன் மூலம் பார்த்தால் பல லட்சம் பொருள்கள், உயிர்கள் பார்க்கலாம். அவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாலே நமக்குத் தலைசுற்றி விடும். திவ்ய திருஷ்டியை அர்ஜுனனுக்கு அளித்ததன் மூலம் ஸ்ரீகிருஷ்ணர் பலகோடி மடங்கு நுட்பமான மைக்ரோஸ்கோப் திருஷ்டியை அளித்து விட்டார். எண்ணிலடங்கா கோடி கோடி பொருள்களும், உயிர்களும் தெரியும் பிரம்மாண்டமான காட்சிகளைப் பார்த்த பார்த்தனுக்கு உடலும், மனமும் நடுங்கியதில் ஆச்சரியமில்லை.

ஸ்ரீகிருஷ்ணர் பிரபஞ்சத்தையே தனக்குள் அடக்கி இருக்கும் பகவான், ஆதியந்தமில்லா பரம்பொருள் என்றெல்லாம் புரிந்த போது பிரம்மாண்டத்தோடு இன்னொரு உண்மையும் அர்ஜுனனுக்கு உறைக்கிறது. தோழனாய், உறவினனாய் நினைத்து நாம் இவனை எப்படியெல்லாம் நடத்தி இருக்கிறோம் என்றும் எண்ணிப்பார்க்கிறான். மன்னிப்பு கோரி வணங்குகிறான். தந்தையைப் போல், நண்பனைப் போல், காதலியைப் போல் மன்னித்தருள வேண்டுகிறான். பாசத்தாலும், நட்பாலும், காதலாலும் அல்லவா மன்னித்தல் மனதார முழுமையாக சாத்தியமாகிறது.

மன்னிப்பு கேட்டவன் உடனே இந்த விஸ்வரூப தரிசனம் போதும், பயமாக இருக்கிறது என்கிறான். இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அர்ஜுனன் ஆரம்பத்திலிருந்தே பயம் பற்றிப் பேசியவனல்ல. உறவுகளின் பாசம், குருபக்தி, தவறிழைக்கிறோமோ என்ற நியாய உணர்வு எல்லாம் உந்த யுத்தம் வேண்டாம் என்றானே ஒழிய பயத்தால் எதுவும் சொல்லவில்லை. உண்மையில் பயம் என்றால் என்ன என்பதே அறிந்திராத வீரனவன். அப்படிப்பட்டவனை நடுங்க வைத்திருக்கிறது விஸ்வரூப தரிசனம். ஏன்?

பனிமலை தூரத்தில் இருந்தோ, அருகில் இருந்தோ பார்ப்பதற்கு மிக ரம்யமாக இருக்கும். அதே போல் சமுத்திரமும் கரையிலிருந்து பார்க்க மிக அழகாய் இருக்கும். ஆனால் ஒரு கணம் பனிக்குவியலில் சிக்கிக் கொள்வது போலவும், நடுக்கடலில் மாட்டிக் கொள்வது போலவும் நினைத்துப் பாருங்கள். அது மரண அவஸ்தையே அல்லவா? பாதுகாப்பாய் சௌகரியமான இடத்தில் இருந்து கொண்டு பார்த்து ரசிக்க மிகவும் அழகாய் இருக்கிற இவற்றிற்குள் மிக நெருங்கிப் போய் சிக்கிக் கொண்ட அவஸ்தையாகவே விஸ்வரூப தரிசனம் கண்ட அர்ஜுனன் உணர்கிறான்

விஸ்வரூப தரிசனத்தில் அர்ஜுனன் அடைந்த இன்னொரு பிரச்னை ஏக காலத்தில் உயிர்களின் ஆரம்பத்திலிருந்து அழிவு வரை காண நேர்ந்தது. ஒரு சுட்டிக்குழந்தையின் அழகை ரசிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த அழகை ரசிக்கும் போதே அது முதுமை அடைந்து மரணப்படுக்கையில் போராடுவதையும் பார்க்க நேர்ந்தால் முந்தைய அழகை முழுமையாக ரசிக்க முடியுமா? இப்படி ஒவ்வொன்றையுமே ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஏக காலத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்ஆரம்பம், வளர்ச்சி, முடிவு என்பது உயிர்களைப் பொருத்த வரை தவிர்க்க முடியாத நிஜம். ஆனால் ஒவ்வொரு கட்டத்தின் போதும் மீதமுள்ளதை மறைத்து மாயை வாழ்க்கையை ஆவலோடும் எதிர்பார்ப்போடும் வாழத்தகுந்ததாய் மாற்றிக் கொடுக்கிறது. மாயையின் திரை விலகி உண்மை விஸ்வரூபம் எடுத்தாலோ எல்லாமே பயங்கரமாய் தான் இருக்கிறது. அர்ஜுனன் போன்ற பயமறியாத மாவீரனே பயப்படும் அளவு யதார்த்தம் இருக்கும் போது நம்மைப் பற்றி என்ன சொல்ல!

அர்ஜுனனின் வேண்டுகோளை ஏற்று பேரழகானதும், சாந்தமானதும் ஆன தன் பழைய வடிவத்துக்கே மீண்டும் வந்த ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

மானுட உலகில் உன்னைத் தவிர மற்றவர் என்னை இந்த உருவில் என்னைக் கண்டதில்லை. நீ என்னைக் கண்டது போல் வேதம் ஓதியோ, தவத்தாலோ, தானம் செய்தோ யாரும் என்னைக் காண முடியாது.

எல்லாம் சரி, இந்த கோரமானதும், கசப்பானதுமான நிஜங்கள் கொண்ட வாழ்க்கையை மாயை என்ற அழகான திரையைப் போட்டு என்ன தான் மறைத்து வாழ்ந்தால் கூட அவ்வப்போது நிஜங்கள் எட்டிப்பார்த்து நம்மை வதைக்கின்றனவே என்ன செய்வது? இதிலிருந்து தப்பிக்கத் தான் வழி என்ன?

அதற்கான பதிலை பதினோராவது அத்தியாயத்தின் கடைசி சுலோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

பாண்டவனே! எவனொருவன் எனக்காகக் கர்மங்களைச் செய்து, என்னையே உயர்நிலையாகக் கொண்டு, எனக்கே பக்தனாகி, பற்றுதலை நீங்கி எல்லா உயிர்களிடமும் விரோதமின்றி வழிபடுகிறானோ அந்த பக்தன் என்னை அடைகிறான்.”

ஆதிசங்கரர் தன் பாஷ்யத்தில் இந்த சுலோகத்தை கீதையின் சர்வார்த்த சாரம் (முழுமையான சாரம்) என்று கூறுகிறார்.

ஒவ்வொரு கர்மத்தையும் இறைவன் ஏற்படுத்திக் கொடுத்த கர்மம் என்ற பாவனையோடு செய்து, இறைவனே நாம் அடையத்தக்க உயர்நிலை என்று பக்தனாக வாழ்ந்து, பற்றுதலை நீக்கி, யாரிடமும் எந்த விரோதமும் பாராட்டாமல் அன்புமயமாக வாழ்கின்றவன் இறைவனையே அடைகிறான். இந்த போதனையில் எங்குமே தனிமனிதஈகோவுக்கு வேலை இல்லை. தனிமனித விருப்பு வெறுப்புகள் இல்லை. ஒரு துளி சமுத்திரத்தில் கலக்கும் போது அந்தத் துளியின் தனித்துவ பலவீனங்கள் இல்லை. வெறும் துளி என்ற நிலை போய் அது சமுத்திரமாகவே மாறி விடுகிறது. எப்படி ஒரு துளி சமுத்திரமாகும் போது அதன் பழைய தனித்துவ பிரச்சினைகளில் இருந்தும், குறைபாடுகளிலிருந்தும் தப்பித்துக் கொள்கிறதோ மனிதனும் இறைவனையே அடையும் போது அவனது துன்பங்களும் ஒரேயடியாய் முடிந்து போகிறது.

கீதையின் பதினோறாம் அத்தியாயம் முடிவுற்றது. ஆனால் அதன் பாதை நீளும்….

-   என்.கணேசன்