என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, December 13, 2007

படித்ததில் பிடித்தது - Ambani Wisdom

சிந்தனையாளனாக இருந்து சாதிப்பது பற்றிச் சொல்வது வேறு. சாதித்து விட்டு சாதனை பற்றிச் சொல்வது வேறு. இரண்டாமவரை நாம் சந்தேகிக்க வேண்டியதில்லை. நடைமுறைக்கு ஒத்து வருமா என்று தர்க்கவாதம் செய்ய வேண்டியதில்லை. திருபாய் அம்பானியைப் போல் அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பித்து உலகப் பணக்காரர்களில் ஒருவராய் வாழ்ந்து சாதித்த ஒருவரின் அனுபவ மொழிகளைப் படிப்பது மட்டுமல்ல பின்பற்றவும் முடிந்தால் வெற்றிகள் தானாக நம்மைத் தேடி வராதா என்ன?

-என்.கணேசன்

Dhirubhai Ambani Quotes -

True entrepreneurship comes only from risk-taking.


Pursue your goal, even in the face of difficulties. Convert difficulties into
opportunities. Keep your morale high, in spite of setbacks. At the end you
are bound to succeed.


My advice to young entrepreneurs is not to accept defeat in the face of
odds. Challenge negative forces with hope, self-confidence and
conviction. I believe that ambition and initiative will ultimately triumph.
The success of the young entrepreneur will be the key to India's
transformation in the new millennium.


The secret of Reliance's success was to have ambition and to know the
minds of men.


Growth has no limit at Reliance. I keep revising my vision. Only when
you dream it you can do it.


The problem with Indians is that we have lost the habit of thinking big!


We must always go for the best. Do not compromise on quality. Reject if it
is not the best -- not only the best in India, but globally.


If India wants to be a great nation, we must have courage to trust. This is
my sincere belief.


All we have to do is to break the shackles that chain the energies of our
people, and India's economy will record a quantum leap and move into a
new, higher orbit of growth, competitiveness and productivity.


For those who dare to dream, there is a whole world to win!


I am deaf to the word 'NO.'


I give least importance to being Number one. I consider myself to be
fortunate in this position and would like to contribute to nation building
in some way.


Does making money excite me? No, but I have to make money for my
shareholders. What excites me is achievement, doing something difficult.
In this room extraordinary things must happen.


Think big, think fast, think ahead. Ideas are no one's monopoly.


Our dreams have to be bigger. Our ambitions higher. Our commitment
deeper. And our efforts greater. This is my dream for Reliance and for
India.


I consider myself a pathfinder. I have been excavating the jungle and
making the road for others to walk. I like to be the first in everything I do.




Give the youth a proper environment. Motivate them. Extend them the
support they need. Each one of them has infinite source of energy. They
will deliver.


You do not require an invitation to make profits.


If you work with determination and with perfection, success will follow.


Between my past, the present and the future, there is one common factor:
Relationship and Trust. This is the foundation of our growth.


We bet on people.


Meeting the deadlines is not good enough, beating the deadlines is my
expectation.


Don't give up, courage is my conviction.


We cannot change our rulers, but we can change the way they rule us.


As A G Krishnamurthy, founder of Mudra Communications, writes in his
book, Dhirubhaism, about some of the Reliance founder's doctrines:


Roll up your sleeves and help. You and your team share the same
DNA.


Be a safety net for your team.


Always be the silent benefactor. Don't tom-tom about how you helped
someone.


Dream big, but dream with your eyes open.


Leave the professional alone!


Change your orbit, constantly!


Money is not a product by itself, it is a by-product, so don't chase it.

Tuesday, December 11, 2007

உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள்


அம்மா பெயரை ஏன் ஒருவர் பெயருக்கு முன் இனிஷியலாகப் போட்டுக் கொள்ளக் கூடாது என்று கேட்பது உண்மையில் நவீன கால சிந்தனையல்ல. M.குமரன், s/o மஹாலக்ஷ்மி என்று போட்டுக் கொள்வதும் கூட இன்றையப் புரட்சி அல்ல. உபநிடத காலத்திலேயே சிந்தித்த சிந்தனை தான் அது. அப்படித் தன் தாயின் பெயரை தன் பெயரோடு இணைத்த ஒரு பெரிய ரிஷியைப் பற்றி சாண்டோக்கிய உபநிடதம் சொல்லி இருக்கிறது.

சத்யகாமன் என்னும் சிறுவன் ஜாபாலா என்னும் பெண்மணியின் மகன். அவனுக்குத் தன் தந்தை யார் என்று தெரியாது. குருகுலத்திற்குச் சென்று கல்வி கற்கும் வயது வந்தவுடன் அவன் தன் தாயிடம் தன் தந்தை பற்றியும் கேட்கிறான். (அந்தக் காலத்தில் கல்வி கற்க விரும்புவோர் தன் தந்தை பெயரையும் தன் பூர்வீகத்தையும் சொல்லியே குருகுலத்தில் கற்க அனுமதி பெற முடியும்.)

சத்யகாமனின் தாய் அவன் தந்தை யாரென்று தெரியாது என்ற உண்மையைத் தன் மகனிடம் ஒப்புக் கொள்கிறாள். தான் அவனைக் கருத்தரித்த காலத்தில் பலர் இல்லங்களில் பணி புரிந்ததாகவும் அப்போது பலருடன் நெருக்கமாக இருக்க நேர்ந்தது என்றும் ஒத்துக் கொள்கிறாள்.

சத்யகாமன் அந்தத் தகவலைத் தாயிடம் இருந்து பெற்றுக் கொண்டு கௌதமர் என்ற ரிஷி நடத்தும் குருகுலத்திற்குச் செல்கிறான். அக்காலத்தில் கல்வி அறிவு பெற வேண்டுபவர் தன்னுடன் காய்ந்த விறகை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். ஞான அக்னியால் தீண்டப்படாத விறகாய் நான் இருக்கிறேன். என்னில் ஞான அக்னியை ஏற்படுத்துங்கள் என்று 'சிம்பாலிக்'காக சொல்வது போன்ற முறை அது.

கையில் காய்ந்த விறகுடன் வந்த புதிய சிறுவனைப் பார்த்தவுடன் கௌதமர் அவன் கல்வி கற்க வந்திருக்கிறான் என்று அறிந்து கொண்டு வழக்கமான கேள்வியைக் கேட்கிறார். "குழந்தாய் உன் பெயர் என்ன? உன் தந்தை யார்? உன் பூர்வீகம் என்ன?"

இந்த சூழ்நிலையை சற்று அந்தக் காலக் கட்டத்திற்குச் சென்று பார்த்தால் அந்தச் சிறுவனின் தர்மசங்கடமான நிலையை நுணுக்கமாக உணர முடியும். தன் முன்பு வேத விற்பன்னராகிய குரு, அவருக்கு முன் அமர்ந்து தான் என்ன சொல்லப் போகிறோம் என்று ஆவலாக உள்ள மற்ற சிறுவர்கள், இவர்களுக்கு முன்னால் தன் தந்தை பெயர் தெரியாது என்று சொல்ல வேண்டிய அவலநிலை இருப்பினும் சத்யகாமன் தயங்காமல் உண்மையை எடுத்துரைக்கிறான்.

"குருவே. என் பெயர் சத்யகாமன். என் தாய் தாய் பெயர் ஜாபாலா. என் தந்தை யார் என்று தனக்குத் தெரியாது என்று என் தாய் கூறுகிறார். எனவே எனக்கு என் பூர்வீகம் தெரியாது"

மற்ற சிறுவர்கள் ஏளனமாய் சிரிக்க கௌதம ரிஷி அவனை மரியாதையுடன் பார்த்தார். அக்காலத்தில் பிராமணன் என்பது பிறப்பால் மட்டுமே தீர்மானிக்கப்படும் ஒரு பட்டமாக இருக்கவில்லை. உண்மையும், ஞானமும், வேறுபல நற்குணங்களுமே பிராமணன் என்று ஒருவனை ஏற்றுக் கொள்ளத் தேவையானவைகளாக இருந்தன. "இத்தனை பேர் மத்தியில் உண்மையை சிறிதும் மறைக்காமல் திரிக்காமல் உள்ளதை உள்ளபடியே தைரியமாகச் சொல்ல முடிந்த நீ பிராமணனே என்று நான் கருதுகிறேன், சத்யகாமா. உண்மையை உன்னிடம் மறைக்காது சொன்ன உன் தாயையும் நான் பாராட்டுகிறேன். இனி இது போன்ற சந்தர்ப்பங்களில் உன் தந்தை பெயருக்குப் பதிலாக உன் தாய் பெயரைச் சேர்த்துச் சொல். இன்றிலிருந்து நீ சத்யகாம ஜாபாலா என்ற பெயரால் இந்த உலகில் அறியப்படுவாய்"

சத்யகாம ஜாபாலா கௌதம ரிஷியிடம் கற்றுப் பேரும் புகழும் அடைந்து பெரிய ஞானியாக விளங்கினார் என்று உபநிடதங்கள் சொல்கின்றன.

இப்படி அந்தக் காலத்திலேயே இது போன்ற ஒரு புரட்சிகரமான சிந்தனை ஏற்கப்பட்டு இருந்தது. மேலும் உண்மைக்கு அந்தக் காலத்தில் தரப்பட்ட மரியாதையையும் எண்ணிப் பாருங்கள். உலகமெல்லாம் புகழ்பெற்று பாரதம் ஒரு காலத்தில் திகழ்ந்ததற்குக் காரணம் நம் மக்களிடம் இருந்த இது போன்ற உயர்ந்த சிந்தனைகளே என்றால் அது மிகையாகாது அல்லவா?

- என்.கணேசன்

Friday, December 7, 2007

உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்?

சுயமுன்னேற்றக் கட்டுரை

ரால்·ப் பார்லெட் (Ralph Parelette) என்பவர் பிரபல அமெரிக்கப் பேச்சாளர். ஒரு முறை அவர் 'விதி' பற்றிப் பேச ஒரு கண்ணாடி ஜாடியுடன் மேடைக்கு வந்தார்.

அந்த ஜாடியில் சிறிய பீன்ஸ் விதைகளும் பெரிய வாதுமைக் கொட்டைகளும் (Walmuts) இருந்தன. ஜாடியை ஒரு முறை நன்றாகக் குலுக்கி விட்டு அங்கிருந்தவர்களுக்கு அதைக் காண்பித்தார். அளவில் பெரிய வாதுமைக் கொட்டைகள் ஜாடியின் மேல்புறத்திலும், சிறிய பீன்ஸ் விதைகள் அடிப்பகுதியிலும் இருந்தன.

"நண்பர்களே!இந்தப் பீன்ஸ் விதைகளில் ஒன்று என்னிடம் உதவி கேட்கின்றது. அதற்கும் வாதுமைக் கொட்டைகளுக்கு இணையாக மேலே தங்க ஆசையாம், நான் அதற்கு உதவப் போகிறேன். உங்கள் முன்னிலையிலேயே அந்த சிறிய பீன்ஸை மேலே வைக்கிறேன் பாருங்கள். ஆஹா, இப்போது பீன்ஸ் விதைக்குத் தான் எத்தனை சந்தோஷம்"

அவர் மறுபடி ஜாடியை நன்றாகக் குலுக்கினார். "அடடா, குலுக்கலில் பீன்ஸ் விதை தன் பழைய இடத்திற்கே போய் விட்டதே! அந்த பீன்ஸ் விதைக்கு மிகவும் வருத்தம். சமத்துவம் என்பது இல்லையே என்று அங்கலாய்ப்பு. அது மறுபடி என்னிடம் வேண்டிக் கொள்கிறது. தான் மேலே போய்த் தங்கா விட்டாலும் பரவாயில்லை. வாதுமைக் கொட்டை தனக்குச் சமமாகக் கீழே தங்க வேண்டும் என்கிறது"

"சரி, அதையும் செய்வோமே. பாருங்கள். உங்கள் முன்னிலையில் வாதுமைக் கொட்டை ஒன்றை எடுத்து பீன்ஸ்களுக்கு அடியில் வைக்கிறேன். சரி தானே!"

அவர் மறுபடி ஜாடியை நன்றாகக் குலுக்கினார். முன்பு போலவே அந்த வாதுமைக் கொட்டை மேலே வந்து விட்டது. பீன்ஸ் அடியில் தங்கி விட்டது.

"நண்பர்களே இது இயற்கையின் நியதி. அளவில் சிறியவை கீழும், அளவில் பெரியவை மேலும் எப்போதும் தங்கும். பீன்ஸ் மேலே வர வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, அது அளவில் பெரிதாக வளர்வது தான். அதை விட்டு நாம் எத்தனை தான் உதவினாலும் காலத்தின் குலுக்கலில் எல்லாமே தங்களுக்கு உரிய இடத்திலேயே தங்க நேரிடும்."

"நண்பர்களே பீன்ஸ¤க்கும் வாதுமைக் கொட்டைக்கும் தங்களின் ஆசைப்படி தங்களை மாற்றிக் கொள்ள முடியாது. ஆனால் மனிதர்களைப் பொறுத்தவரை நாம் அப்படிக் கையாலாகாதவர்கள் அல்ல. கடவுள் நம்மை அப்படிப் படைக்கவில்லை. நாம் உயர வேண்டுமானால் வளர வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படி முயற்சி எடுப்பதன் மூலமாகவோ, முயற்சி எடுக்க மறுப்பதன் மூலமாகவோ நாமே நம் விதியைத் தீர்மானித்துக் கொள்கிறோம்" என்று கூறி முடித்தார்.

இது ஒரு மிக அழகான உவமை. ரால்·ப் பார்லெட்டின் பீன்ஸைப் போல் தான் நம்மில் பலரும் இருக்கிறோம். யாராவது ஏதாவது செய்து எப்படியாவது நம்மை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு போய் விடக் காத்து இருக்கிறோம்.

அப்படி வெறுமனே காத்துக் கிடக்கிற காலத்தில் பாதியைச் சரியாக, புத்திசாலித்தனமாக, முழுமனதோடு பயன்படுத்தினால் போதும், அந்த நிலைக்குத் தேவையான சகல தகுதிகளையும் நம் முயற்சியால் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். யார் தயவும் இன்றி நம் இலக்குகளை நாமே சென்றடைய முடியும். மாறாக நல்ல நேரத்திற்காகவோ, அடுத்தவர் உதவிக்காகவோ, அதிர்ஷ்டத்திற்காகவோ காத்துக் கிடப்பவர்கள் இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டி வரும். அது தான் விதி.

எனவே அறிவையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். காலத்திற்கேற்ப திறமையாக, விரைவாகச் செயல்படுங்கள். உங்கள் அறிவும் திறமையும் அதிகப்பட அதிகப்பட உங்கள் இலக்கிற்கான வழிகள் தாமாகவே தெளிவாகப் புலப்படத் துவங்கும். சரியான சந்தர்ப்பங்கள் தானாக உங்களைத் தேடி வர ஆரம்பிக்கும். இதுவே இயற்கையின் நியதி.

-என்.கணேசன்

Saturday, December 1, 2007

படித்ததில் பிடித்தது-Nothing is Random

எல்லாமே அர்த்தத்துடனும், நுட்பத்துடனும் இம்மியும் பிசகாது இந்த உலகில் நடக்கிறது என்று சொல்லும் இந்தக் கட்டுரையை சமீபத்தில் இணையதளத்தில் நான் படித்தேன். மூன்று முறை ஒவ்வொரு வரியாக நிதானமாகப் படித்தேன். கட்டுரை என்னை நிறைய சிந்திக்க வைத்தது. மேலோட்டமாய் இல்லாமல் நீங்களும் நிதானமாகப் படித்துப் பாருங்களேன்.

Nothing is Random

Nothing is random, nor will anything ever be, whether a long string of perfectly blue days that begin and end in golden dimness, the most seemingly chaotic political acts, the rise of a great city, the crystalline structure of a gem that has never seen the light, the distributions of fortune, what time the milkman gets up, the position of the electron, or the occurrence of one astonishingly frigid winter after another.

Even electrons, supposedly the paragons of unpredictability, are tame and obsequious little creatures that rush around at the speed of light, going precisely where they are supposed to go. They make faint whistling sounds that when apprehended in varying combinations are as pleasant as the wind flying through a forest, and they do exactly as they are told. Of this, one can be certain.

And yet there is a wonderful anarchy, in that the milkman chooses when to arise, the rat picks the tunnel into which he will dive when the subway comes rushing down the track from Borough Hall, and the snowflake will fall as it will. How can this be? If nothing is random, and everything is predetermined, how can there be free will? The answer to that is simple.

Nothing is predetermined; it is determined, or was determined, or will be determined. No matter, it all happened at once, in less than an instant, and time was invented because we cannot comprehend in one glance the enormous and detailed canvas that we have been given - so we track it, in linear fashion, piece by piece. Time, however, can be easily overcome; not by chasing light, but by standing back far enough to see it all at once.

The universe is still and complete. Everything that ever was, is; everything that ever will be, is - and so on, in all possible combinations. Though in perceiving it we imagine that it is in motion, and unfinished, it is quite finished and quite astonishingly beautiful.

In the end, or rather, as things really are, any event, no matter how small, is intimately and sensibly tied to all others. All rivers run full to the sea; those who are apart are brought together; the lost ones are redeemed; the dead come back to life; the perfectly blue days that have begun and ended in golden dimness continue, immobile and accessible; and, when all is perceived in such a way as to obviate time, justice becomes apparent not as something that will be, but as something that is.

Mark Helprin

Wednesday, November 28, 2007

ஒரு நிமிடம் நிதானியுங்கள்

விவகாரமான சூழ்நிலைகளில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அவை பிரச்சினைகளாக வெடிப்பதும், சுமுகமாக முடிவதும் இருக்கிறது என்பதை விளக்க அரவிந்தாஸ்ரமத்து அன்னை கூறிய ஒரு அறிவுரை என்னை மிகவும் கவர்ந்தது. சொற்கள் மிகச்சரியாக நினைவில்லை என்றாலும் அதன் சாராம்சம் இது தான். "நாம் நம் வாழ்வில் பெரும்பாலும் ஒவ்வொன்றிற்கும் react செய்கிறோம். நம் மன அமைதியைக் குலைக்கும் வகையில் ஏதோ ஒன்று நடக்கிறது அல்லது யாராவது எதையாவது சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சிறிதும் தாமதியாமல் உடனடியாக அதற்குப் பதிலடி தருகிறோம் அல்லது ஏதாவது செயல் புரிந்து விடுகிறோம். (இதனை அன்னை reaction என்கிறார்). அப்படி react செய்வதற்குப் பதிலாக ஒரு நிமிடம் சிந்தித்து தகுந்த சொல்லோ செயலோ எது என்று தீர்மானித்து அதைச் செய்தால் அது சிறப்பாக இருக்கும். (இதை அன்னை response என்கிறார்). இப்படி செய்வதன் மூலம் எத்தனையோ எதிர்மறையான விளைவுகளை நாம் தவிர்க்க முடியும்"

பல சமயங்களில் நம் பதில் நடவடிக்கைகள் நம்மை அறியாமல் நடந்து விடுகின்றன. மற்றவர்கள் சொல்லோ செயலோ நம்மை சிறிதும் யோசிக்க விடுவதில்லை. நம்மையும் மீறி நம் ஆழ்மனதில் பதிந்துள்ள குணாதிசயங்களுக்கு ஏற்ப நடந்து கொள்கிறோம். இதில் உண்மையாக கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் நம் பதில் நடவடிக்கையை மற்றவர் சொல்லும், செயலும் நம் ஆழ்மனமும் தீர்மானித்து விடுகின்றன. யாரோ ஆட்டுவிக்க நாம் அதற்கேற்ப ஆடுகின்றோம்.

இதற்குப் பதிலாக ஒரு கணம் தாமதித்து எப்படி இதை எதிர்கொள்வது நல்லது என்று யோசித்து தக்க விதத்தில் சிந்தனா பூர்வமாக நம் பதில் நடவடிக்கை அமைந்தால் நாம் எத்தனையோ பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பல நல்ல ஆதாயங்களையும் பெற முடியும். யோசிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒரு நிமிடம் தாமதிப்பது போதும். எத்தனையோ தவறான வார்த்தைகளை சொல்லாமலும், தவறான செயல்களை செய்யாமலும் தவிர்க்க அந்தக் குறுகிய இடைவெளி போதும்.

ஒரு actionக்கும் reactionக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளியைப் புகுத்த கற்றுக் கொள்ளுங்கள். அந்த இடைவெளியே ஆறாவது அறிவு. நாம் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதன்படி நடப்பதே உண்மையான அறிவு. மற்றவர் இயக்க நாம் இயங்கினால் அது அடிமைத்தனம்.

யாராவது வம்புச் சண்டைக்கு உங்களை இழுக்க எண்ணி "முட்டாள்" என்று அழைத்தால் சீறுவதற்குப் பதிலாக புன்னகையுடன் "உண்மை தான்" என்று சொல்லிப் பாருங்கள். (உண்மையில் நாம் எல்லோரும் ஒருசில சமயங்களில் அந்தப் பட்டப் பெயர் பெற உகந்தவரே.) ஒரு புத்திசாலியால் தான் அப்படி முழுக் கட்டுபாட்டுடன் respond செய்ய முடியும். அப்படிச் சொல்வதன் மூலம் தேவையில்லாத சச்சரவுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இதைச் சொல்வது சுலபம். ஆனால் கடைப்பிடிப்பது கஷ்டமே. ஏனென்றால் மற்றவர் வார்த்தைகளுக்கோ செயல்களுக்கோ உடனடியாக இயங்கிப் பழக்கப்பட்ட நமக்கு ஒரு புதிய வித்தியாசமான அணுகுமுறையை நம்மிடம் கொண்டு வருவதற்கு சற்று பயிற்சி வேண்டும். சிந்திக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அந்த நேரத்தில் ஏற்படுத்திக் கொள்வதற்கே பிரம்மப்பிரயத்தனம் வேண்டும். நமது ஆழ்மனம் பழைய அணுகுமுறைக்கே பழகிப் போனது. ஆழ்மனதில் நேர்மாறான அணுகுமுறையைப் பதிய வைக்க ஒரு வழியை மனவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

பெரும்பாலும் எந்த மாதிரி சந்தப்பங்களில் நீங்கள் நிதானம் இழக்கிறீர்கள் என்று முதலில் பட்டியல் இடுங்கள். அதில் நாம் அதிகமாக கட்டுப்பாடில்லாமல் react செய்யும் ஒரு சந்தர்ப்பத்தை முதலில் தேர்வு செய்யுங்கள். அப்படிச் செய்த சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றை நினைவுபடுத்தி மனத்திரையில் மற்றவர் சொன்னதோ செய்ததோ வரை தத்ரூபமாக ஓட விடுங்கள். நீங்கள் react செய்த விதத்தை மட்டும் காட்சி மாற்றம் செய்யுங்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக நிதானமாக அதற்கு நடந்து கொள்வதாகக் கற்பனை செய்து கொண்டு காட்சியை முடியுங்கள்.

நீங்கள் அமைதியாக இருக்கும் தருணங்களில் தினமும் ஓரிரு முறை இப்படி கற்பனைக் காட்சி காணுங்கள். ஆழ்மனம் மெள்ள மெள்ள அந்தக் கற்பனையைப் பதிவு செய்து கொள்ளும். உங்களிடம் உறுதி இருந்து இந்தப் பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்தால் திடீரென்று அது போன்ற ஒரு சம்பவம் நடக்கும் போது ஆச்சரியப்படும்படி நீங்கள் கற்பனை செய்தது போல உண்மையிலேயே 'respond' செய்வதை நீங்கள் காண முடியும். இதை நான் என் வாழ்வில் செய்து வெற்றி கண்டுள்ளேன். எனவே இந்த முறையின் வெற்றிக்கு என்னால் உத்திரவாதம் தர முடியும்.

ஒன்றில் நல்ல முறையில் வெற்றி கண்டு அதுவே இயல்பாக நமக்குப் பழகி விட்ட பின்பு அடுத்த ஒரு சவாலை நாம் சந்திக்க முயலலாம். இப்படி நாம் பக்குவத்துடன், அறிவுபூர்வமாகவும் இயங்கக் கற்றுக் கொண்டால் எத்தனையோ பிரச்சினைகளைத் தவிர்த்து ஏராளமான நன்மைகளை அடைய முடியும். நீங்களும் முயன்று பாருங்களேன்.

- என்.கணேசன்

Sunday, November 25, 2007

ஆனால் என்பது ஆபத்தானது


"ஆனால்" என்ற சொல் அதற்கு முன்னால் சொல்லப்பட்டதை எல்லாம் அர்த்தம் இல்லாததாக்கி விடுகிறது. உதாரணத்திற்கு நாம் அன்றாடம் சொல்லக் கூடிய சில-

"நான் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். ஆனால் இப்படி அதிகாலையில் குளிராக இருப்பதால்........" (இன்று உடற்பயிற்சி செய்யப் போவதில்லை என்று பொருள் காண்க).

"கோபப்படுவது நல்லதில்லை தான். ஆனால் இப்படியெல்லாம் நடந்து கொண்டால் கோபப்படாமல் இருப்பதெப்படி?" (கோபப்படுவது நல்லதில்லை என்பது வெறும் சம்பிரதாயத்திற்காக சொல்லப்பட்டிருக்கிறது).

"செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் நேரமே கிடைக்கிறதில்லை" (அதனால் நான் ஒன்றுமே செய்வதில்லை).

இதில் எல்லாம் ஆனால் என்று சொல்வதற்கு முன்னால் சொன்ன அத்தனை நல்ல விஷயங்களும் நடைமுறைக்கு வராத வெறும் வெற்று வார்த்தைகளாகி விட்டது என்பது தெளிவாகத் தெரிகிற உண்மை.

சீதோஷ்ண நிலை சரியாக இருந்திருந்தால் உடற்பயிற்சி செய்திருப்பேன், எல்லோரும் ஒழுங்காக நடந்து கொண்டால் கோபமே பட மாட்டேன், நாளுக்கு 24 மணி நேரத்திற்கு மேல் இருந்தால் எதையும் செய்து முடிப்பேன் என்பதெல்லாம் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் பொய்கள். நம் சோம்பேறித்தனத்தையும், கட்டுப்பாடற்ற மனதையும் மறைக்கும் ஆயுதம் தான் இந்த "ஆனால்".

இந்த 'ஆனால்" நம்மை சமாதானப் படுத்திக் கொள்ள உதவலாம். ஏமாற்றிக் கொள்ள உதவலாம். ஆனால் இந்த 'ஆனால்' நம்மை என்றும் பின் தங்கியே இருக்க வைக்கும். சாதிக்காத சப்பைக்கட்டு மனிதர்களாகவே நம்மை இருத்தி விடும்.

நீங்கள் சொல்லத் துவங்கும் 'ஆனாலி'ல் வலுவான காரணங்கள் கூட இருக்கக்கூடும். ஆனால் எல்லாமே சாதகமாக இருக்கும் போது சாதிப்பதில் சிறப்பென்ன இருக்கிறது? தடைகளையும் சாதகமில்லாத சூழ்நிலைகளையும் மீறி மன உறுதியுடன் சாதிப்பதில் அல்லவா மகத்துவம் இருக்கிறது.

எனவே "ஆனால்" என்ற சொல்லை உபயோகப்படுத்தும் போதெல்லாம் எச்சரிக்கையுடன் இருங்கள். அந்த சொல்லைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். சொல்லும் போது உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்களா என்று சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அடுத்தவர்களை நம்ப வைக்க முயல இந்த 'ஆனால்'ஐப் பயன்படுத்தி உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

- என்.கணேசன்

Thursday, November 22, 2007

வரையப்படாத கடவுள்

சிறுகதை

"என்னால முடியும்னு நிஜமாவே நினைக்கிறீங்களா"- நூறாவது முறையாக சின்னசாமி கேட்டான்.

"கண்டிப்பா முடியும்" அஸ்வின் பழைய பதிலையே சிறிதும் பொறுமை இழக்காது சொன்னான். இந்த சாருக்கு உண்மையில் பைத்தியம் தான் பிடித்து விட்டதோ என்ற சின்னசாமியின் சந்தேகம் மேலும் வலுத்தது.

"சாப்பாட்டை டைனிங் டேபிளில் வெச்சிருக்கேன். நேத்து மாதிரி மறந்துடாதீங்க. வரட்டுமா"

அவன் போய் விட்டான். சின்னசாமிக்கு நடப்பதெல்லாம் கனவு போலவே இன்னமும் தோன்றியது. அந்த பிளாட்பார ஏழை ஓவியன் இந்த சொகுசு பங்களாவுக்கு வந்து ராஜ வாழ்க்கை வாழ ஆரம்பித்து சரியாக பதினான்கு நாட்கள் ஆகி விட்டது. நாளை மாலை அவன் திரும்பத் தனது சேரிக்கே போய் விடுவான். பழையபடி தரித்திரம், குடிசை, பிளாட்பாரம் என்று வாழ்க்கை சுழல ஆரம்பித்து விடும். இந்தப் பதினைந்து நாட்களையும், அஸ்வினையும் ஒரு பொக்கிஷமாக தனது மனதின் ஒரு மூலையில் வைத்து என்றுமே பாதுகாப்பான். எல்லாமே ஒரு வெள்ளிக் கிழமை அஸ்வின் அவனைப் பார்த்ததில் இருந்து ஆரம்பித்தது...

அன்று துர்க்கை பேரழகுடன் அந்தப் பிளாட்பாரத்தில் பிரத்தியட்சமாகிக் கொண்டிருந்தாள். இந்த உலகையே மறந்து தன் படைப்பிலேயே லயித்துப் போயிருந்த அந்தத் தெருவோர ஓவியனை அஸ்வின் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கால்களை ஊனமாக்கிய கடவுள் அத்ற்குப் பிராயச்சித்தமாக கைகளுக்கு ஓவியக்கலையைத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டானோ என்று அஸ்வினுக்குத் தோன்றியது. அனாயாசமாக வரைந்து முடித்த பின்பு தான் அமர்ந்திருந்த சக்கரங்கள் பொருத்திய பலகையை ஓரமாக நகர்த்தி சுவரில் சாய்ந்து கொண்டான் அந்தப் படைப்பாளி. பலரும் நாணயங்களை வீசி விட்டுச் சென்றார்கள். அஸ்வின் மட்டும் உன்னிப்பாக துர்க்கையையே பார்த்துக் கொண்டிருந்தான். பல நிமிடங்கள் கழிந்த பின்பு பாராட்டினான். "நல்லா வரைஞ்சிருக்கீங்க".

நிறைய நேரம் நின்று கவனிப்பதும், அவனையும் ஒரு பொருட்டாக நினைத்துப் பாராட்டுவதும் அந்தக் கலைஞனுக்குப் புதிய அனுபவம். அவனுக்குத் தெரிந்து மேல் மட்ட மனிதர்கள் காசிலாவது தாராளமாக இருப்பதுண்டு. ஆனால் அவனைப் போன்ற ஒரு பரம தரித்திரனை ஒருவன் கவனித்து, மதித்து மனதாரப் பாராட்டுவது அதிசயமாயிருந்ததது.

"என் பெயர் அஸ்வின். உங்க பெயர்..."

"சின்னசாமிங்க"

அஸ்வின் நிறைய நேரம் நின்று சின்னசாமியுடன் பேசினான். அவனைப்பற்றிய தகவல்கள் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டான். சின்னசாமிக்கு உறவு என்று தற்போது யாருமில்லை என்பதையும், சிறு வயதில் போலியோவால் இப்படி ஆகி விட்டது என்பதையும் கேட்டு இரக்கம் காண்பித்து அவனைப் புண்படுத்தவில்லை. சேரியில் வசிக்கும் அவனிடம் சரிசமமாகப் பேசி விட்டு நாளை அவன் எங்கு வரைவான் என்பதையும் தெரிந்து கொண்டு போனான்.

மறு நாள் மாலையும் அஸ்வின் சின்னசாமியைத் தேடி வந்தான். காரைத் தெருவின் எதிர்புறம் நிறுத்தி விட்டு வந்து அவன் வரைந்திருந்த சிவனை நிறைய ரசித்தான். "சிலர் வரையறதில் அழகு இருக்கும், உயிர் இருக்காது. நீங்க வரையறதில் ரெண்டும் இருக்கு."

"அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க, சார். ஏதோ வரைவேன். அவ்வளவு தான்"

அஸ்வின் புன்னகைத்தான். "நீங்க கேன்வாசில் எல்லாம் வரைவீங்களா?"

"அப்படீன்னா..."

"துணியில், பெரிய வெள்ளைப் பேப்பரில் எல்லாம் வரைவீங்களா"

"பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்றீங்க. அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். நானே வயத்துப் பொழப்புக்கு வரையறவன். அதெல்லாம் எனக்கு வராதுங்க"

அவனது வார்த்தைகளில் இருந்த யதார்த்த உண்மை அஸ்வினுக்கு உறைத்தது. ஓவியங்களைப் பற்றி சிறிது பேசிக்கொண்டிருந்து விட்டுக் கிளம்பும் முன் மறு நாள் எங்கு வரைவான் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்பினான். தான் வரைவதைப் பார்ப்பதற்காகவே அவன் வருவது சின்னசாமிக்கு பெருமையாக இருந்தது. 'நான் நிஜமாவே அவ்வளவு நல்லா வறையறேனா".

மறுநாள் அஸ்வின் வருவான் என்றே வழக்கத்தை விட அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு வரைந்தான். மனதில் இதுவரை இல்லாத உற்சாகம் இருந்தது. அதைக் கெடுக்கும் விதமாக சில இளைஞர்கள் குடித்து விட்டு தள்ளாடியபடி வந்தார்கள்.

"மாம்ஸ். இது ராமர் படமா, க்ரிஷ்ணர் படமா"

"எவனாயிருந்தா எனக்கென்னடா"

"எனக்கும் ஒண்ணும் இல்லை. சும்மா கேட்டேன். ஏம்ப்பா, உன் பேரென்ன?"

"சின்னசாமிங்க"

"ஓ. ஸ்மால் காட்"

"என்ன சொன்னீங்க"

"உன் பேரை இங்கிலீஷில் சொன்னேன். வரையற படம் மட்டுமல்ல வரையற ஆளும் சாமிதாம்ப்போய்"

"இனி எத்தனை காலத்துக்கு இந்த சாமி படமே வரைவீங்கப்பா. ஒரு அழகான பொண்ணு படம் வரையேன்"

"அதுவும் நிர்வாணமா வரைஞ்சா நோட்டு மழையா கொட்ட நாங்க ரெடி. நீ ரெடியா"

"நீங்க எல்லாம் படிச்சவங்க தானா. இவ்வளவு மட்டமா பேசறீங்களே"

"உன் உயரத்துக்குத் தகுந்த மாதிரி தான் பேசினோம்." என்ற ஒருவன் அவனது கலர் சாக்பீசுகளைத் தள்ளி விட்டான்.

"நீயே பிச்சைக்காரன். பெரிய மனுசன் மாதிரி ஏண்டா பேசறே" என்று இன்னொருவன் சாயங்கள் இருந்த கிண்ணங்களைத் தட்டி விட்டான்.

சின்னசாமிக்கு இரத்தம் கொதித்தது. ".....ப்பசங்களா" என்று கத்த மாணவர்கள் மூர்க்கமாய் தாக்க ஆரம்பித்தார்கள். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லாதிருந்தது அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. அவன் மயங்கி விழுந்தவுடன் ஓடி விட்டார்கள். இந்த சமயம் அந்தப் பக்கம் வந்த ஒருவன் அசுர வேகத்தில் ஓவியத்தின் மேல் இருந்த காசுகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தான்.
எதிர்பாராது கிடைத்த திடீர் சந்தர்ப்பங்களை உடனடியாக முதலாக்கிக் கொள்ளும் மனிதர்கள் என்றுமே இருக்கிறார்கள்.

அஸ்வின் அங்கு வந்த போது சின்னசாமியை ஒரு நாய் மட்டும் விசாரித்துக் கொண்டிருந்தது. பதைத்துப் போய் "சின்னசாமி...... சின்னசாமி" என்று அழைத்தான். சின்னசாமி அசையவில்லை. தூரத்தில் நின்றிருந்த ஆட்டோவில் உறங்கிக் கொண்டிருந்த ஆட்டோக்காரனை உதவிக்கு அழைத்து சின்னசாமியைத் தூக்கித் தன் காரில் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.

சின்னசாமி கண் விழித்த போது அஸ்வின் அருகில் இருந்தான். "எப்படி இருக்கு சின்னசாமி"

"பரவாயில்லைங்க"

"என்ன ஆச்சு"

சின்னசாமி சொன்னான்.

"கொஞ்சமும் மனிதாபிமானமில்லாமல் சிலர் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாய் நடந்துக்கறாங்களே" அஸ்வின் அங்கலாய்த்தான்.

"சில பசங்களுக்கு ஜாலியாய் இருக்கிறதுக்கும் அடுத்தவங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாதுங்க. இதெல்லாம் எனக்குப் பழக்கமானது தான். பொதுவா கோபப்பட மாட்டேங்க. ஆனா சில சமயம் என்னையும் மீறி கோபம் வந்துடுதுங்க. நானும் மனுசன் தானே"

அவன் வார்த்தைகள் அஸ்வினின் மனதைத் தொட்டன. "போலிசுக்குப் புகார் தரணும் சின்னசாமி"

"ஐயோ அதெல்லாம் வேண்டாம் சார். அவங்க உபத்திரவம் இன்னும் அதிகமாகும். வந்து வரைஞ்சது மேலே தண்ணி கொட்டுவான். போலிசுக்குக் காசு கொடுத்து ட்ராபிக்குக்கு இடைஞ்சல்னு விரட்ட வைப்பான். இப்படி ஏழைக்குத் தொந்தரவு தர அவங்களுக்கு எத்தனையோ வழி இருக்குங்க. எதிர்த்து நின்னா என் பொழப்பு நடக்காது. மழைக்காலம் வரதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் சம்பாதிச்சா தான் அப்புறம் ரெண்டு மூணு மாசம் என் வயத்தை நிரப்ப முடியும்".

"சரி விடுங்க. டாக்டர் பெரிசா எதுவுமில்லை, இன்னைக்கே வீட்டுக்குப் போகலாம்னு சொல்லிட்டார். இங்கிருந்து போகறதுக்கு முன்னாடி உங்க கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்"

"சொல்லுங்க சார்"

" உங்க கிட்ட பிரமாதமான திறமை இருக்கு. அது பிளாட்பாரத்தோட நின்னுடக்கூடாது. இன்னும் பதினைந்து நாளில் இந்த ஊரில் ஒரு பெரிய ஓவியப் போட்டி நடக்கப் போகுது. இது ஒரு அகில இந்தியப் போட்டி. இதுல நீங்க கலந்துக்கப் போறீங்க. என்ன சொல்றீங்க"

"சார். நீங்க நல்லவங்க. ஆனா நீங்க நினைக்கிற அளவு திறமை எல்லாம் எனக்கு கிடையாது. இந்தப் போட்டி ஒரு ப்ளாட்பாரத்தில் நடக்கிற சாக்பீசுல வரையற போட்டியில்ல. எனக்கு பிரஷ் பிடிக்கக் கூடத் தெரியாது".

"அதையும் வேற சில நுணுக்கங்களையும் நான் சொல்லித்தர்றேன். பதினைந்து நாளில் நீங்க எல்லாமே கத்துக்க முடியும்"

"சார் நீங்க தப்பா நினைக்கக்கூடாது. உங்களுக்குப் பைத்தியம் இல்லையே"

அஸ்வின் வாய் விட்டுச் சிரித்தான். "பைத்தியம் தான். கலைப் பைத்தியம். திறமை எங்க வீணாப் போனாலும் தாங்க முடியாத பைத்தியம். சரின்னு சொல்லுங்க சின்னசாமி. என் கூட என் வீட்டுக்கு வந்துடுங்க. எண்ணி பதினைந்து நாள் இருங்க. இந்தப் பதினைந்து நாளில் நீங்க எவ்வளவு சம்பாதிப்பீங்களோ அதை நான் தர்றேன். சரியா"

"என்ன மனிதனிவன் " என்று சின்னசாமி வியந்தான். ஏளனம், அவமானம், சில சமயங்களில் இரக்கம் இதை மட்டுமே மற்றவர்கள் அவனுக்குத் தந்திருக்கிறார்கள். இப்படி ஒரு முக்கியத்துவமும், அன்பும் இது வரை யாருமே அவனுக்குத் தந்ததில்லை. என்னென்னவோ சொல்லிப் பார்த்தான். அஸ்வின் அதற்கெல்லாம் மசியவில்லை. அவனுக்கு எல்லாமே கனவில் நடப்பது போல இருந்தது. கடைசியில் சரியென்றான்.

அஸ்வின் ஒரு பெரிய கம்பெனியில் கம்ப்யூட்டர் இஞ்சீனியர் என்றும் திருமணமாகவில்லை என்றும் பெற்றோர் இருவரும் உயர்ந்த அரசாங்கப் பதவிகளில் பெங்களூரில் இருக்கிறார்கள் என்றும் சின்னசாமி தெரிந்து கொண்டான். அவன் வீட்டுக்குள் நுழையவே சின்னசாமி சங்கடப்பட்டான். சேரிக்கே பொருத்தமான தன் உருவம் இந்தப் பணக்கார வீட்டில் சிறிதும் பொருத்தமில்லாமல் இருப்பதாக அவனுக்குப் பட்டது. தயக்கத்துடன் நுழைந்தான்.

அன்றே அஸ்வின் ஏகப்பட்ட உபகரணங்களை அவனுக்கு அறிமுகப்படுத்தினான். உபயோகப்படுத்தும் முறைகளை மிகவும் பொறுமையோடு சொல்லிக் கொடுத்தான். சிறிது நேரத்தில் சின்னசாமி ஒரு குழந்தையின் உற்சாகதோடும் பிரமிப்போடும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஆரம்பித்தான்.

"சார் நீங்களும் வரைவீங்களா"

"ம்.வரைவேன்" என்று சுருக்கமாகச் சொல்லி அஸ்வின் பேச்சை மாற்றினான்.

மூன்று நாட்கள் லீவு போட்டு அவனுடனேயே இருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தான். அவனுக்கு உணவு, உடை எல்லாம் கொடுத்தான். தொடர்ந்த நாட்களில் சின்னசாமி நேரம், காலம் எல்லாவற்றையும் மறந்தான். வரையும் போது எத்தனையோ முறை அஸ்வின் வந்து நின்று பார்ப்பான். பல சமயங்களில் அவன் வந்தது, நின்றது, போனது எதுவுமே சின்னசாமிக்குத் தெரிந்ததில்லை. பல சமயம் வைத்த காபி, சாப்பாடு எல்லாம் வைத்த இடத்திலேயே இருக்கும். அஸ்வின் பல முறை நினைவு படுத்த வேண்டி இருக்கும். லீவு முடிந்து கம்பெனிக்குப் போக ஆரம்பித்த பின்னும் சின்னசாமிக்கு மதியம் சாப்பிடத் தேவையானவற்றைத் தயார் செய்து வைத்து விட்டுப் போவான். ஆரம்பத்தில் சின்னசாமிக்கு அது மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. "சார் இதெல்லாம் வேண்டாங்க" என்று சொல்லிப் பார்த்தான். "இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. வரையறதைத் தவிர வேற எல்லாத்தையும் நீங்க மறந்துடுங்க சின்னசாமி" என்று வாயடைத்தான். அவன் சொன்னது போலவே சின்னசாமி எல்லாவற்றையும் மறந்து தான் வரைந்து கொண்டிருந்தான். போட்டிக்கு முந்தைய நாளான இன்று தான் மனம் ஏனோ பழையதை அசை போடுகிறது.

அன்று மாலை அஸ்வின் வந்தவுடன் சின்னசாமி கேட்டான். "இப்ப இதில் நான் நல்லா வரையறேனா சார்"

"ஜமாய்க்கிறீங்க. முதல் பரிசு எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சமும் ஒரு கப்பும். போட்டியில் ஒரே ஒரு முக்கியமான விஷயம். அதில் மட்டும் நீங்க தேர்ந்தெடுக்கிறது சிறப்பாய் இருந்தால் பரிசு நிச்சயம்."

"என்ன சார் அது"

"ஒரு தலைப்பு தருவாங்க. அதற்குப் பொருத்தமான ஓவியத்தை நீங்க உங்க கற்பனையில் தேர்ந்தெடுக்கணும். அதுக்கு மட்டும் நான் உங்களைத் தயார் செய்ய முடியாது".

சின்னசாமியின் உற்சாகமெல்லாம் வடிந்து போனது. "சார் அதெல்லாம் என் தலைக்கு எட்டுங்களா"

"எல்லாம் எட்டும். எத்தனை அனுபவங்கள் எத்தனை காட்சிகள் நீங்கள் பார்த்திருப்பீங்க. அதில் எதாவது அந்தத் தலைப்புக்குப் பொருந்தும். அதை வரைஞ்சிடுங்க" என்று சின்னசாமிக்கு தைரியம் சொன்னாலும் அந்த விஷயத்தில் அஸ்வினுக்கே சந்தேகம் இருந்தது. இதை வரை என்றால் சின்னசாமி சிறப்பாய் வரைவது நிச்சயம். ஆனால் பெரும்பாலும் வித்தியாசமான தலைப்புகளே தரப்படும். சென்ற வருடம் டில்லியில் போட்டி நடந்த போது "சாரி ஜஹாங் சே அச்சா" என்ற தலைப்பு தந்து எல்லா இந்திய மொழிகளிலும் தலைப்பை மொழிபெயர்த்தும் கொடுத்தார்கள். இப்படி கவிதைத் தலைப்பாய் தந்தால் அதற்குப் பொருத்தமாய் சின்னசாமிக்கு வரைவதைத் தேர்ந்தெடுக்க முடியுமா என்று தான் யோசனையாய் இருந்தது.

போட்டி நாள் அன்று இரண்டு செட் உபகரணங்களை எடுத்து வைப்பதைக் கண்ட சின்னசாமி "எதுக்குங்க ரெண்டு செட்"

"எனக்கும் உங்களுக்கும்" என்று அஸ்வின் புன்னகையோடு சொன்னான்.

தனக்குச் சொல்லிக்கொடுக்கும் அளவு ஞானம் உள்ளவன், இந்தக் கலையில் இவ்வளவு ஆர்வம் உள்ளவன் போட்டியில் கலந்து கொள்வான் என்று தனக்கு உறைக்காதது ஏன் என்று சின்னசாமி தன்னையே கேட்டுக் கொண்டான். ஆனால் தனக்குப் போட்டியாக தானே ஒருவனை வலுக்கட்டாயமாக உருவாக்குவானா என்பது தான் ஆச்சரியமாக இருந்தது.

போட்டி நடக்கும் இடத்தில் காரிலிருந்து அவர்கள் இறங்கிய போது பல பத்திரிக்கை மற்றும் டிவி நிருபர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். "தொடர்ந்து மூன்று வருடங்கள் முதல் பரிசு வாங்கியிருக்கிறீர்கள். இந்த தடவையும் வாங்கிடுவீங்களா" என்று ஒரு நிருபர் அஸ்வினைக் கேட்ட போது, "இந்த தடவை போட்டி கடுமையாக இருக்கும்னு எதிர்பார்க்கிறேன்" என்று அவன் சொல்லி சின்னசாமியைப் பார்த்து லேசாகக் கண்ணடித்தான்.

சின்னசாமிக்கு நாக்கு வரண்டது. அஸ்வின் இவ்வளவு பிரபலமான ஓவியன் என்று இப்போது தான் தெரிகிறது. அங்கு கிட்டத்தட்ட நூறு போட்டியாளர்கள் வந்திருந்தார்கள். ஓவியர்கள் தங்களது ஓவியங்களை முன்பே அனுப்பி அவற்றின் தரத்தை ஒரு குழு ஆராய்ந்து பார்த்து தான் போட்டியில் கலந்து கொள்ளவே அனுமதி கிடைக்கும் என்றும் அஸ்வின் மிகவும் சிபாரிசு செய்து தான் தனக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள் என்றும் அவர்களில் சிலர் பேசும் போது சின்னசாமிக்குத் தெரிந்தது. பெரும்பாலோரின் நாகரிக உடையும் நுனி நாக்கு ஆங்கிலமும் பத்திரிக்கை டிவி கேமராக்களும் கண்டு சின்னசாமி பயந்து போனான். எல்லாமே அன்னியமாகவும் தன் தரத்திற்கு எட்டாத தூரத்தில் இருப்பதாகவும் அவனுக்குப் பட்டதால் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று தோன்றியது. அஸ்வின் அவனருகே வந்த போது "என்னங்க என்னை இப்படி மாட்ட விட்டுட்டீங்களே. எனக்கு இதெல்லாம் வேண்டாங்க. நான் போயிடறேன்" என்றான்.

"போட்டி முடிஞ்சாப் போயிட வேண்டியது தான். அது வரைக்கும் எந்தப்பேச்சும் கூடாது. சொல்றதை கவனமாய் கேளுங்க. அவங்க ஒரு தலைப்பு தருவாங்க. அதைத் தமிழிலேயும் சொல்வாங்க. நல்லா யோசிச்சு அதை வைத்து உங்களுக்கு என்ன வரையணும்னு தோணுதோ அதை வரையிங்க.சரியா. எத்தனை கடவுள்களை வரைஞ்சிருப்பீங்க. அத்தனை கடவுள்களும் உங்களுக்குக் கண்டிப்பாய் உதவி செய்வாங்க". பதிலுக்குக் காத்திராமல் தனது இடத்திற்குப் போய் விட்டான்.

சின்னசாமிக்கு வரைய செளகரியமாக எல்லா ஏற்பாடுகளும் தனியாக செய்திருந்தார்கள். அவன் மனதில் மட்டும் நம்பிக்கையோ உற்சாகமோ இல்லை. தனக்கு எதாவது பரிசு கிடைக்கும் என்று அவன் சிறிதும் நம்பவில்லை. "கடவுளே அந்த சாரின் நல்ல மனசுக்கு இந்த தடவையும் அவருக்கே முதல் பரிசு கிடைக்கணும்" என்று வேண்டிக்கொண்டான்.

தலைப்பை அறிவித்தார்கள். "நெஞ்சு பொறுக்குதிலையே". இந்த முறை பாரதியின் கவிதை வரி.

சின்னசாமி யோசித்தான். எல்லாரும் தலைப்பைக் கேட்டவுடன் வரைய ஆரம்பித்து விட்டார்கள். "எத்தனை அனுபவங்கள், காட்சிகள் உங்கள் வாழ்க்கையில் பார்த்திருப்பீங்க. அதில் ஏதாவது தலைப்புக்குப் பொருந்தும். அதை வரையுங்க" என்று அஸ்வின் சொல்லி இருந்தது நினைவில் வந்தது. அவனுக்கு நெஞ்சு பொறுக்காத அனுபவம் சமிபத்தில் அடி பட்டது தான். அஸ்வின் தன்னை எந்த நிலையில் கண்டான் என்று சொல்லி இருந்தான். "பார்க்க மனசுக்குப் பொறுக்கலே" என்ற அவனது வார்த்தையும் நினைவுக்கு வர அந்தக்காட்சியையே வரைய தீர்மானம் செய்தான். எதாவது ஒன்றை வரைந்து அங்கிருந்து போனால் போதும் என்று தோன்றவே அத்ற்கு மேல் யோசிக்கவில்லை.

வரைய ஆரம்பித்த பின் வழக்கம் போல் எல்லாவற்றையும் மறந்தான். அவன் மனக்கண்ணில் அந்தக் காட்சி விரிய திரைச்சீலையில் அந்தக் காட்சி உயிர் பெற ஆரம்பித்தது. மற்றவர்களை விட முன்பாகவே வரைந்து முடித்தும் விட்டான். எல்லோருடைய ஓவியங்களையும் ஒருவர் வந்து வாங்கிக் கொண்டு போனார். பரிசை சிறிது நேரத்தில் அங்கேயே அறிவிப்பார்களாம்.

அஸ்வின் ஆர்வத்துடன் வந்து கேட்டான். "என்ன வரைஞ்சீங்க?". சின்னசாமி சொன்னான்.

"நான் ஒரு குழந்தைத் தொழிலாளியை வரைஞ்சேன்" என்ற அஸ்வின் ஒரு கணம் யோசித்து விட்டுச் சொன்னான் "நான் மட்டுமல்ல எல்லாரும் மத்தவங்களையோ வேற காட்சிகளையோ வரைஞ்சிருப்பாங்க. அதில் எங்க திறமை மட்டும் இருக்கும். உங்க ஓவியத்தில் நீங்களே இருக்கீங்க, உங்க சொந்த அனுபவமே இருக்கு. உங்க திறமையைப் பத்தி சொல்ல வேண்டியதில்லை. பரிசு கண்டிப்பாய் கிடைக்கும். வாழ்த்துக்கள்"

"சார், எனக்காக இவ்வளவு செய்யறீங்க. இதுக்கு நான் எத்தனை ஜென்மம் எடுத்து கடன் தீர்க்கப் போறேன்னு தெரியல"

"பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க சின்னசாமி. உங்க திறமை உங்களுக்குத் தெரியாது. அது ஒரு பிளாட்பாரத்தில் ஆரம்பிச்சு அங்கேயே முடிஞ்சுடக் கூடாது. அது மேடை ஏறணும். நீங்க நிறைய வரையணும். நான் ரசிச்ச மாதிரி உலகமே ரசிக்கணும்..."

பரிசை அறிவிக்கப் போகிறார்கள் என்று அறிவித்தார்கள். அரங்கில் பேரமைதி நிலவியது.

"முதல் பரிசு சின்னசாமிக்கு....."

சின்னசாமி அதிர்ச்சியில் பிரமை பிடித்தவன் போல் இருந்தான். இது கனவா நனவா என்று ஒன்றும் புரியவில்லை. அவனைக் கேமராக்கள் படம் பிடிக்க ஆரம்பித்தன. அஸ்வின் முகத்தில் மகிழ்ச்சி எல்லையில்லாமல் விரிந்தது. சின்னசாமிக்கு ஒரு வேளை தன் தாய் உயிரோடு இருந்திருந்தால் இப்படி சந்தோஷப் பட்டிருக்கலாம் என்று தோன்றியது.

முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தை தேர்வுக் குழுவின் தலைவர் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார் "...ஒரு உடல் ஊனமுற்ற கலைஞன் யாரும் கேட்பாரற்று நிராதரவாய் தன் ஓவியத்தின் மீதே விழுந்து கிடக்கும் இந்த நிலை நிஜமாகவே தலைப்புக்குப் பொருத்தமாக இருந்ததாலும், ஓவியம் உயிரோட்டத்துடன் தத்ரூபத்துடன் இருந்ததாலும் ..." சின்னசாமிக்கு அவர் பேசியது என்ன என்றே தெரியவில்லை.

இரண்டாம் பரிசு அஸ்வினுக்கும் மூன்றாம் பரிசு ஒரு பஞ்சாபிக்கும் கிடைத்தது.

நிருபர்களுடன் கேமராக்களும் மைக்குகளும் சின்னசாமியை நெருங்கின. "உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்"

"என்னப் பத்தி சொல்ல ஒண்ணும் இல்லைங்க. நான் பிளாட்பாரத்தில் சாக்பீசையும், சாயத்தையும் வெச்சு வரைஞ்சிட்டிருந்த ஒரு சாதாரணமான ஆளுங்க".

"சமூக ஓவியங்கள் எல்லாம் முன்பு வரைந்ததுண்டா"

"இல்லைங்க. கடவுள் படம் தான் வரைஞ்சிருக்கேன். அதுக்கு தான் காசு விழும். ஒரு கடவுள் படம் தவிர எல்லாக் கடவுள் படமும் வரைஞ்சிருக்கேங்க."

"எந்தக் கடவுளை படம் வரைந்ததில்லை" ஒரு நிருபர் ஆர்வத்துடன் கேட்டார்.

"அந்தக் கடவுளைத் தாங்க" என்று அஸ்வினைக் காட்டிக் கண் கலங்கிய சின்னசாமிக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை.
____________________________________________________________________________________________________

என்.கணேசன்