யசோதா தன் மகன் ராஜாராமிடம் பேச வேண்டும் என்று காலையிலிருந்து
காத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் ராஜாராமைச் சந்திக்க சிறிதும் இடைவெளியில்லாமல் பிரபலங்கள்
தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். அவள் பொறுமையிழந்தாள். என்ன பிழைப்பு
இது? அவள் கணவர் உயிரோடிருந்த போது அவரைச் சந்திக்கவும் இப்படித்
தான் ஆட்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். அவசரமாக அவரிடம்
ஏதாவது பேச வேண்டும் என்றால் அது பெரும்பாலும் முடியாது.
அவளுடைய தம்பியுடன் பேசியதில் இருந்து
அவளால் நிம்மதியாய் இருக்க முடியவில்லை. அத்திவாக்கம் கிராமத்திற்கு
அர்ஜுன் போய் வந்திருப்பது வரப்போகிற பூகம்பத்தின் முன்னறிவிப்பாகத்தான் அவளுக்குத்
தோன்றுகிறது. ஞானமூர்த்தியை அழைத்து எச்சரிக்கலாமா என்று
கூட ஆரம்பத்தில் நினைத்து பின் அவள் மனதை மாற்றிக் கொண்டாள்.
ராஜாராமின் செக்ரட்டரியைக் கூப்பிட்டுக்
கேட்டாள். “இந்தக் கூட்டம் எல்லாம் எத்தனை மணிக்கு முடியும்?”
“சாயங்காலம்
வரைக்கும் இன்னைக்கு இருக்கும்மா. ஆனா மதியம் 2 மணில 3 மணி வரைக்கும்
சார் ஃப்ரீ தான்.”
“இந்த மாதிரி
தொடர்ச்சியா அப்பாயின்மெண்ட் தர்றது நீயா இல்லை அவனா?” யசோதா முகச்சுளிப்போடு
கேட்டாள்.
செக்ரட்டரி தயக்கத்துடன் சொன்னார். “சார் தாம்மா....
வெளிநாட்டு ஆட்கள் இந்த ரெண்டு நாளா அதிகம்.... டெல்லில
நடந்த ஒரு மாநாட்டுக்கு வந்தவங்க சாரைப்
பார்த்துப் பேசணும்னே இங்கே வந்திருக்காங்க... அதுல வெளிநாட்டுப்
பத்திரிக்கையாளர்களும் இருக்காங்க. சார் அவங்களை எல்லாம்
சந்திக்க மறுக்கறதில்லை...”
“என்னவோ
போ. அவசரத்துக்கும் அவன் கிட்ட ஒரு வார்த்தை பேச முடியறதில்லை.” என்று யசோதா
முகம் சுளித்தாள்.
மைதிலி குரல் உள்ளேயிருந்து வந்தது. “அதையே தான்
உங்க மகன் கிட்ட அடிக்கடி சொல்றேன். சொல்றது அவர் காதுல
எங்கே விழுது?”
மாமியாரும் மருமகளும் ஒத்துப் போகும்
ஒரே விஷயம் இது தான். மற்றெல்லா விஷயங்களிலும் இருவரும் இருவேறு துருவங்கள்.
ஆனால் மைதிலி கூடுதலாக மனதில் நினைத்துக்
கொண்டாள். ’கிழவி மகன் கிட்ட பேச அவசரப்படறதைப் பார்த்தால் ஏதோ பெரிய
பிரச்சனை மாதிரி தான் தெரியுது. அம்மாவும், மகனும், அடிக்கடி
ஏதோ ரகசியம் பேசிக்கறாங்க. ஆனால் நாம என்னன்னு கேட்டால் ஒன்னும் இல்லைம்பாங்க....’
யசோதா ராஜாராமின் செக்ரட்டரியிடம் தாழ்ந்த
குரலில் சொன்னாள். “சாப்பிடப் போகறதுக்கு முன்னாடி என் கிட்ட வந்து பேசிட்டு
போக ராஜாராம் கிட்ட சொல்லு. சொல்லிவியா, இல்லை மறந்துடுவியா?”
“கண்டிப்பாய்
சொல்றேம்மா” என்று சொல்லி விட்டு செக்ரட்டரி விரைந்தார். தாழ்ந்த
குரலில் பேசினால், பதிலைத் தாழ்ந்த குரலிலேயே சொல்ல வேண்டும் என்ற அடிப்படை
அறிவு கூட இல்லாத அந்த செக்ரட்டரி மீது அவளுக்குக் கோபம் வந்தது. ஏற்கெனவே
மைதிலிக்குப் பாம்புக்காது....
யசோதா தனதறைக்குச் சென்று மகன் வரவுக்காகப்
பொறுமையிழந்து காத்திருந்தாள். நிமிடங்கள் யுகங்களாக நகர்ந்தன. ராஜாராம்
மெல்ல வந்தார். ”என்னம்மா உடம்புக்கு எதாவது சரியில்லையா?”
யசோதா மகனிடம் அறைக்கதவைச் சாத்தும்படி
சைகை செய்ய அவர் அறைக்கதவைச் சாத்தினார். “என்னம்மா?”
கேசவன் சொன்னதை அப்படியே யசோதா மகனிடம்
தாழ்ந்த குரலில் சொன்னாள். கேட்ட பின் அவர் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது.
யசோதா சொன்னாள். “உண்மையாகவே
அங்கே போனது அர்ஜுன் தானான்னு தெரியலை.
ஆனால் மகுடபதியை இத்தனை வருஷம் கழிச்சு விசாரிச்சுகிட்டு போகக்கூடிய
ஆள் எனக்குத் தெரிஞ்சு வேற யாரும் இல்லை. ”
ராஜாராம் வறண்ட குரலில் சொன்னார். “அங்கே போனது
அர்ஜுனாய் தான் இருக்கணும். ஏன் போனான்னு தெரியாட்டியும், அங்கே சொன்ன
இன்சூரன்ஸ் கதைல அவனோட தொழில் முத்திரை தான் தெரியுது. ஆனால் அவன் அங்கே எதையும் தெரிஞ்சுக்க வாய்ப்பிருக்கலை. அதனால பயப்பட
எதுவுமில்லை.”
“மகுடபதி பெயரைச் சொல்லி கூடுதலா தெரிஞ்சுக்க அவன் போன இடத்துல என் அம்மா வீடும்
அங்கே தான்ங்கிறதை அவன் தெரிஞ்சு வெச்சிருப்பானேடா? வந்து கூடுதல்
விவரத்தை என் கிட்ட கேட்டால்?”
“எதைச் சொல்லணுமோ அதை மட்டும் சொல்லும்மா. நீ எல்லாத்தையும்
சொல்லணும்னு இல்லையே.”
“மகுடபதி
ஏன் தற்கொலை செய்துகிட்டார்னு கேட்டால்?”
ராஜாராம் தாயை அர்த்தமுள்ள பார்வை பார்த்தார். “உனக்கு
எப்படிம்மா தெரிஞ்சிருக்கும்? நீ சென்னைல இருக்கே. அவர் அத்திவாக்கத்துல
இருக்கார். உன் அம்மா வீட்டுக்காரங்களுக்கும் ஒன்னும் தெரியல. எல்லாரும்
வறுமை தான் காரணம்னு நினைச்சாங்க… அவ்வளவு தான்.”
மகன் சொன்னதைக் கேட்டு அவள் மனம் சற்று
நிம்மதியடைந்தது. ஆனாலும் இன்னொரு சாத்தியக்கூறு அவளைப் பயமுறுத்தியது. “நான் சமாளிச்சுக்குவேன். ஆனால் பானுமதி
சமாளிப்பாளா?”
ராஜாராம் தாயைக் கூர்ந்து பார்த்து
சொன்னார். “அவன் அண்ணியைக் கேட்க மாட்டான்ம்மா. கேட்கறவனாயிருந்தா
இன்னேரம் கேட்டிருப்பான். அண்ணியால சமாளிக்க முடியாமல் போயிருந்தால் இன்னேரம் நமக்குத்
தெரிஞ்சிருக்கும்.”
“எனக்கென்னவோ
அவன் தேவையில்லாமல் பழசை எல்லாம் கிளறாமல், அவன் காதலிக்கிற
பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு அவன் வாழ்க்கையை நல்லபடியாய் வாழ ஆரம்பிச்சுட்டா நல்லதுன்னு
தோணுதுடா. நீ அவன் கிட்ட அந்த பொண்ணைப் பற்றிக் கேட்டுப் பாரேன். யாரு என்னன்னு
தெரிஞ்சுதுன்னா ஞானமூர்த்தி கிட்டே நான் பேசறேன். சீக்கிரமா
கல்யாண ஏற்பாட்டைச் செஞ்சா, தேவையில்லாத இந்தப் பழைய கதையை எல்லாம் கிளர்ற மனசோ நேரமோ
அவனுக்கு இருக்காது.”
“நாம அதைப்
பற்றிக் கேட்டப்ப அவன் சொல்லலையேம்மா.
அண்ணா கிட்ட சொல்றதுக்கு முன்னாடி நம்ம கிட்ட சொல்றது எப்படின்னு அவன் தயங்கின
மாதிரி தான் தோணுச்சு.”
யசோதா தளர்ச்சியுடன் கண்களை மூடிக்
கொண்டாள். தாய் மனதில் என்ன எண்ண ஓட்டம் ஓடுகின்றது என்பதை ராஜாராம்
அறிவார். மாற்ற முடியாத விஷயங்களை யோசித்துப்
பயனில்லை. கடந்த
காலத்தில் திருத்தங்கள் செய்ய நிகழ்காலத்தில் அனுமதியில்லை. இனி ஆக வேண்டியதில் மட்டுமே கவனம்
இருப்பது புத்திசாலித்தனம்.
தாயை அவளுடைய எண்ண ஓட்டத்தில் இருக்க விட்டு விட்டு ராஜாராம்
அமைதியாக வெளியேறினார்.
அவனிடம் தனியாகச் சில விஷயங்களை மனம் விட்டுப் பேசப் போவதாக அவன் சென்ற முறை
வந்திருந்த போது அவர் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. சீக்கிரமே
பேச வேண்டும். அவன்
மனதில் அவர் மேல் இருக்கும் பழைய கோபத்தை முற்றிலுமாக போக்க வேண்டும். பேச வேண்டியதை இங்கு பேசுவது
உசிதமல்ல. அம்மா அடிக்கடி
சொல்வது போல் மைதிலிக்குப் பாம்புக் காது. அவள் கேட்பது அவளோடு
நிற்காது. மேலும், அவனை இங்கே வரவழைத்துப்
பேசினால் அம்மாவிடம் அவன் அத்திவாக்கம் பற்றியும்
மகுடபதி தம்பதியரின் தற்கொலை பற்றியும் கூட எதாவது சடாரென்று கேட்டுவிடும் அபாயம் இருக்கிறது. அம்மா சமாளிப்பாள் என்றாலும்
அது நாசுக்கான சமாளிப்பாக இருக்காது. அதனால் வேறொரு இடத்தில் தனியாக அவனை அழைத்துப்
பேசுவது தான் நல்லது. அந்த சமயத்தில் அவனாக அந்த வில்லங்க விஷயங்கள் எதையாவது அவரிடம் கேட்க முற்படுகிறானா
என்றும் பார்க்க வேண்டும்.
முடிவு செய்த ராஜாராம் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு முதல்
வேலையாக அர்ஜுனுக்குப் போன் செய்தார்.
(தொடரும்)
என்.கணேசன்

No comments:
Post a Comment