ராக்ஷசரின் கடிதத்தைப் படித்து மலைகேது உற்சாகம் அடைந்தான். அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தப்பித்துச் சென்றாலும் பொது எதிரியிடம் கொண்டிருந்த வெறுப்பையும், அவன் தந்தையின் மீது கொண்டிருந்த அன்பையும் மறக்காமல் இருந்தது அவனுக்கு ஆறுதலைத் தந்தது. முக்கியமாக எதிரியை வீழ்த்துவதைத் தவிர வேறெந்த எதிர்பார்ப்புமில்லாமல் உதவ முன்வந்தது அவனுக்கு மகிழ்ச்சியளித்தது. மலைகேது உடனடியாக அந்தக் கடிதத்துடன் சென்று மூன்று மன்னர்களையும் மறுபடி சந்தித்தான்.
மலைகேது அவர்களிடம் கடிதத்தைப் படித்துக் காட்டி உணர்ச்சிகரமாகப்
பேசினான். ”சிறந்த அறிவாளியும் அனுபவஸ்தருமான
ராக்ஷசரே நம்முடன் இணையும் போது நாம் வேறெதையும் யோசிக்க வேண்டியதில்லை. துரோகத்தைத் தண்டிக்காமல் பின்வாங்குவது மட்டும் கூடாது. அடிமட்ட மனிதன் கூட ஊதியமில்லாமல் எந்த வேலையையும்
செய்வதில்லை. சிறு வியாபாரி கூட தகுந்த
விலை கிடைக்காமல் சிறு பொருளையும் யாருக்கும் தருவதில்லை.
அப்படியிருக்கையில் நம் படைகளையெல்லாம் இவ்வளவு தூரம் கூட்டி
வந்து நிறைய இழப்புகளைச் சந்தித்துப் போராடியிருக்கிறோம்.
முடிவில் வெற்றி கிடைத்த பின் ராக்ஷசர் சொல்வது போல் வெற்றியில் பங்கு தர மனமில்லாமல் கொல்ல சதி செய்வதை நாம்
ஏற்றுக் கொண்டால், அதை எதிர்த்துப் போராடா
விட்டால், மானமில்லா மன்னர்கள் என்ற
அவப்பெயரை நாம் பெற்று விட மாட்டோமா? அவப்பெயரை விடுங்கள், நம்மை
நாமே மன்னிக்க முடியுமா?”
அவர்களுக்கு அவன் பேச்சில் இருந்த உண்மைகளை
மறுக்க முடியவில்லை. ஆனால் சமீப காலமாக நடக்கும் எதிர்பார்க்காத சம்பவங்களால்
அவர்கள் நிறைய குழம்பிப் போயிருந்தார்கள். அதனால்
அவசரப்பட்டு எந்த முடிவையும் அவர்கள் எடுக்க விரும்பவில்லை. யோசித்து
முடிவெடுக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டார்கள்.
சம்மதித்த மலைகேது திரும்பி வந்து ராக்ஷசரின்
தூதரிடம் சொன்னான். “ராக்ஷசருக்கு என் வணக்கங்களைத் தெரிவிப்பாயாக. அவர் சொல்வதை
நான் நன்றியுடனும், அன்புடனும் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல். ஆனால் என்
நட்பு மன்னர்கள் யோசிக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள். அவர்கள்
அபிப்பிராயம் அறிந்த பிறகு நானே விவரங்களுடன் என் தூதனை அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவி.”
தூதராக வந்த ஒற்றன் தலையசைத்து, தலைவணங்கி
விட்டு விடைபெற்றான்.
சாணக்கியர் மலைகேது அனுப்பிய மடலைப் படித்து விட்டு அமைதியாகச்
சொன்னார். “உணவருந்தி சற்று இளைப்பாறி விட்டு வா தூதனே. நான் அதற்குள்
பதில் மடல் தயாராக வைத்திருக்கிறேன்.”
அவன் வணங்கி விட்டுச் சென்றவுடன் அவர்
நிதானமாக யோசித்து பதில் எழுத ஆரம்பித்தார்.
“தந்தையின்
மறைவால் வாடும் மலைகேதுவுக்கு ஆசிகள்.
ஒரு மனிதன் எல்லோரிடமும் சத்தியவானாகவும், நியாயம்
தவறாதவனாகவும் இருக்க முடியா விட்டாலும் கூட அவன் பூஜிப்பவர்களிடமும், அவனை மிகவும்
நம்பியிருப்பவர்களிடமுமாவது நேர்மையாகவும், நியாயமாகவும்
நடந்து கொள்ள வேண்டும். அதுவே அவன் மனிதனாக இருப்பதற்குக் குறைந்த பட்சத் தகுதி. அந்தக்
குறைந்த பட்சத் தகுதியையும் தக்க வைத்துக் கொள்ள உன் தந்தை தவறி விட்டது எனக்கு மிகுந்த
வருத்தத்தை அளிக்கிறது.
கொடுத்த வாக்கைத் தவறுவது எனக்கு உடன்பாடானதல்ல. அதனால்
தான் என் பரம எதிரியாக அனைவரும் அறிந்த தனநந்தனிடம் கூட நான் அவன் மகளுக்குப் பிடித்த
மாப்பிள்ளையைத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொன்ன வாக்கை மீறவில்லை. சந்திரகுப்தனுக்கு
அவன் மகள் துர்தராவைத் திருமணம் செய்து தர நான் மறுக்கவில்லை. அது குறித்து
உன் தந்தை அதிருப்தி தெரிவித்த போது கூட நான் கொடுத்த வாக்கை மீற ஒத்துக் கொள்ளவில்லை. இதனை நீயும்
நன்றாக அறிவாய்.
ஆனால் நான் உன் தந்தைக்குக் கொடுத்த
வாக்கைக் காப்பாற்றும் முன்னரே, அதை நிறைவேற்ற எனக்கு வேண்டிய அவகாசம் கொடுக்காமல் உன் தந்தை
நம் எதிரணியில் உள்ளவர்களோடு சேர்ந்து கொண்டு சந்திரகுப்தனைக் கொன்று விடத் திட்டமிட்டது
உனக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. வெற்றியைக் கொண்டாட
கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு உன் தந்தை என்னிடம் வந்த போது, கலை நிகழ்ச்சிகளில்
ஆர்வமில்லா விட்டாலும் கூட நான் சம்மதித்தேன். கலை நிகழ்ச்சிகளின்
போது சந்திரகுப்தனைக் கொல்ல எதிரியோடு கைகோர்த்துக் கொண்டு உன் தந்தை திட்டமிட்டது
துரதிர்ஷ்டமே. ஆனால் உன் தந்தையோடு கைகோர்த்த எதிரி உன் தந்தையைத் தண்டிப்பதற்கும்
அந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டது கர்மவினைப்பயன் என்றே சொல்ல வேண்டும். எங்களுடன்
சேர்ந்து கொண்டு அவர்களைத் தோற்கடித்ததற்குப் பழி வாங்கும் விதமாக சந்திரகுப்தனோடு
சேர்த்து உன் தந்தையையும் கொன்று விட எதிரி தீர்மானித்ததை நீங்கள் அறிந்திருக்கவில்லை. கடைசி நேரத்தில்
இந்தச் சதி பற்றி அறிய நேர்ந்த நான் சந்திரகுப்தனைக் காப்பாற்றிவிட முடிந்தது. உன் தந்தையோ
விதைத்த கர்மத்தை அறுவடை செய்யும்படியாகி விட்டது.
எப்போது எங்களுடன் இருந்து கொண்டே எதிரியுடன்
கைகோர்த்து எங்களை அழிக்க முற்பட்டீர்களோ அப்போதே எங்கள் நட்பையும், வெற்றியில்
பங்கு கேட்கும் தார்மீக உரிமையையும் நீங்கள் இழந்து விட்டீர்கள். நியாயமாகப்
பார்த்தால் எங்களிடமிருந்து நீ எதிர்பார்க்க வேண்டியது தண்டனையைத் தான். அதை அறிந்த
உன் குற்றவுணர்ச்சி தான் உன்னை பாடலிபுத்திரத்தில் இருந்து ரகசியமாய் தப்பிக்க வைத்தது
என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன்.
உண்மை இப்படியிருக்க நீ உன் தந்தையின்
மரணத்திற்குக் காரணமாக இருப்பவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைப்பது
வியப்பாக இருக்கிறது. ஆனாலும் நான் குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்குத்
தகுந்த சன்மானம் தருவதாக அறிவித்திருக்கிறேன். தகவல் கிடைத்தால்
அந்தச் சதியில் பங்கு பெற்ற மற்றவர்களைக் கண்டுபிடித்து, தர வேண்டிய
தகுந்த தண்டனையைப் பற்றி நான் யோசிக்கிறேன்.
பழைய நட்பையும், உன் இளமையையும்
கருத்தில் கொண்டு உன்னை எங்கள் எதிரிப் பட்டியலில் சேர்க்கவில்லை. நீயும்
உன் படைகளும் ஹிமவாத கூடத்திற்குத் திரும்பிப் போக அனுமதியளிக்கிறேன். ஆனால் நீ
மறுபடியும் எங்களுக்கு எதிராக ஏதாவது செயலில் ஈடுபடும் பட்சத்தில் இந்தக்
கருணையை என்னால் நீட்டிக்க முடியாது. பிறகு நாங்கள்
எதிரியாகவே உன்னை நடத்த வேண்டியிருக்கும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இப்படிக்கு
சாணக்கியன்”
மலைகேதுவுக்குக் கடிதம் எழுதிய கையோடு
சாணக்கியர் காஷ்மீர, குலு, நேபாள மன்னர்களுக்கும் தனித்தனியாக கடிதங்கள் எழுதினார்.
“நண்பரே,
வணக்கம்.
ஒன்றிணைந்து நாம் எடுத்துக் கொண்ட பணி
மாபெரும் வெற்றி பெற்ற வேளையில் அந்த வெற்றியை நாம் பூரண திருப்தியுடன் கொண்டாட முடியாத
ஒரு சூழல் துரதிர்ஷ்டவசமாக உருவாகியிருக்கிறது. ஹிமவாதகூட
அரசனான பர்வதராஜன் வெற்றியின் முழுப் பங்கையும் அனுபவிக்க பேராசைப்பட்டு எதிரியின்
பிரதம அமைச்சரோடு சேர்ந்து கொண்டு சந்திரகுப்தனைக் கொல்லும் திட்டத்தை அரங்கேற்றி விட்டார். இறையருளால்
அது கடைசி நேரத்தில் என் கவனத்திற்கு வந்து சந்திரகுப்தனை நான் காப்பாற்றி விட்டேன். ஆனால் எதிரி
சந்திரகுப்தனை மட்டுமல்லாமல் பர்வதராஜனையும் எதிரியாகவே பாவித்திருந்ததால் பர்வதராஜனுக்கு
எதிராகவும் திட்டம் இருந்து அதில் பர்வதராஜன் பலியாகி விட்டார். நடந்ததை
எடுத்துச் சொல்ல நான் மலைகேதுவை நாடிய போது மலைகேதுவும் தப்பி ஓடியிருப்பதை வேதனையுடன்
நான் அறிய நேர்ந்தது. எதிரியின் வெறுப்பைப் புரிந்து கொள்ள முடிந்த எனக்கு நண்பர்களின்
துரோகத்தை இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போதும்
திகைப்பில் இருக்கிறேன்.
ஆனால் எல்லா நிகழ்வுகளையும் நாம் கடந்து
செல்லவே வேண்டியிருக்கிறது. நடக்க வேண்டியதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. வரும் சப்தமி
நாளன்று சந்திரகுப்தனுக்கு தனநந்தனின் மகள் துர்தராவுடன் திருமணத்தை நிச்சயித்திருக்கிறோம். தசமியன்று
சந்திரகுப்தன் மகத மன்னனாக முடிசூட்டப் போகிறான். இந்த இரண்டு
நாட்களிலும் பங்கெடுத்து சந்திரகுப்தனுக்கு ஆசிகள் வழங்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.
பர்வதராஜன் எங்களுக்குத் துரோகம் செய்யும்
முயற்சியில் மரணமடைந்தாலும் மகத வெற்றிக்குப் பின் தங்களுக்குத் தருவதாக என்ன வாக்களித்திருக்கிறாரோ
அந்த வாக்கை நிறைவேற்றும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். சுபநிகழ்ச்சிகளில்
கலந்து கொண்டு திரும்பிச் செல்கையில் தாங்கள் அவர் வாக்களித்திருந்ததைப் பெற்றுச் செல்லலாம்.
(தொடரும்)
என்.கணேசன்
என்.கணேசனின் நூல்களை வாங்க விரும்புவோர் பதிப்பாளரை 94863 09351 எண்ணில் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்!


.jpg)
No comments:
Post a Comment