தேவானந்தகிரியின் உதவியாளன் தான் அவரது அலைபேசியை எடுத்தான். அவர் பூஜையில்
இருப்பதாகச் சொன்னான்.
பாண்டியன் சொன்னார். “பரவாயில்லை. பூஜை முடிஞ்சவுடன்
என்னைக் கூப்பிடச் சொல்லுங்கள்”
சுகுமாரன் சிறிது காலமாகவே பொறுமையைத்
தொலைத்தவராக இருப்பதால் அவர் சந்தேகத்துடன் பாண்டியனைக் கேட்டார். “அவர் கூப்பிடுவாரா?”
“கூப்பிடுவார்” என்றார்
பாண்டியன். பாண்டியன் தேவானந்தகிரியைக் கூப்பிட்டு சந்தேகம் கேட்கும்
ஒவ்வொரு முறையும் தேவானந்தகிரியின் வங்கிக் கணக்கில் பத்தாயிரம் ரூபாய் அனுப்பி விடுவது
வழக்கம். அதனால் அவர் கண்டிப்பாக அழைப்பார் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது.
ஷ்ரவன் மறுபடி தோட்ட வேலைக்குத் திரும்பிய போது கல்பனானந்தா
தென்படவில்லை. அவன் அங்கிருந்து போகும் முன் செய்து கொண்டிருந்த வேலையை
வேறு ஒரு துறவி செய்து கொண்டிருந்தார்.
அதனால் எந்த வேலையைச் செய்வது என்று யோசித்தபடி அவன் சுற்றிலும் பார்த்தான். ஒரு பகுதியில்
குமரேசன் தெரிந்தான். அவன் துறவிகள் பிடுங்கிப் போட்டிருந்த களைகளை ஒரு சட்டியில்
போட்டுக் கொண்டு போய் வேறொரு இடத்தில் கொட்டி விட்டு வருவது தெரிந்தது. மறுபடி
களைகள் குவிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு வந்த குமரேசன் சட்டியைக் கீழே போட்டு விட்டு
சோம்பல் முறித்தான். அது “சொல்ல ஒரு தகவல் இருக்கிறது” என்பதற்கான
சமிக்ஞை. அவன் மறுபடி குனிந்து களைகளை எடுத்து சட்டியில் போட ஆரம்பித்தான்.
ஷ்ரவன் குமரேசன் களைகளைக் கொட்டும்
இடத்திற்குப் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய தோட்டப் பகுதியை நோக்கி நடந்தான். அங்கு வேறு
யாரும் வேலை செய்து கொண்டிருக்கவில்லை. அங்கும் நிறைய களைகள்
இருந்தன. ஷ்ரவன் அந்தக் களைகளைப் பிடுங்கிப் போட ஆரம்பித்தான். சிறிது
நேரத்தில் அங்கும் களைகள் குவிய ஆரம்பித்தன.
குமரேசன் அதைப் பார்த்து விட்டு அதை
எடுக்க வருவது போல் வந்தான். சட்டியைக் கீழே போட்டு விட்டு களைகளை அள்ளிக் கொண்டே சொன்னான். “ஆடிட்டரோட
ஃபைல்ஸ் எல்லாம் கிடைச்சாச்சு. ஆனா அதை ராவ் கிட்ட ஒப்படைக்க முடியல. அவர் ஒரு
சின்ன விபத்துல சிக்கி இப்ப ஆஸ்பத்திரில இருக்கார். அவர் வேலைக்கு
வர குறைஞ்சது ஒரு மாசமாவது ஆகும். என்ன பண்றது?”
ஷ்ரவன் தோட்ட வேலையைச் செய்து கொண்டே
சொன்னான். “நாளைக்குச் சொல்றேன். நம்ம வேலை
முடியற வரைக்கும் தேவானந்தகிரி இங்கே வராமல் பார்த்துக்கறது ரொம்ப முக்கியம்.”
லேசாகத் தலையசைத்த குமரேசன் களைகள்
நிரப்பிய சட்டியை எடுத்துக் கொண்டு போனான்.
ஷ்ரவன் தோட்ட வேலை பார்த்தபடியே யோசனையில்
ஆழ்ந்தான். அவர்கள் ராவ் என்று அழைக்கும் மோகன் ராவ், ஹேக்கிங்
என்று சொல்லப்படும் ஊடுருவும் கலையில் நிபுணர். எத்தனை
பாதுகாப்புள்ள இணைய தளமானாலும் அனாயாசமாய் அவர் ஊடுருவி, சம்பந்தப்பட்டவர்களுக்குத்
தெரியாதபடி, தேவையான தகவல்களை எடுத்துக் கொண்டு விடுவார். அதே போல
ஒரு கம்ப்யூட்டரில் இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான கோப்புகள் மற்றும் தகவல்களில்
இருந்து ஒரு வழக்குக்குத் தேவையான அல்லது சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட தகவல்களைக் கச்சிதமாகப்
பிரித்தெடுப்பதிலும் அவர் வல்லவர்.
ஆடிட்டர் திவாகரன் கம்ப்யூட்டரில் இருந்து
மொத்தமாக எடுக்கப்பட்டதில் இந்த வழக்குக்குப் பயன்படுகிற தகவல் ஏதாவது இருக்கிறதா என்பதில்
ஆரம்பித்து, எதன் மூலமாவது யோகாலய ரகசியங்களை ஏதாவது வழியில் வெளியே எடுக்க
முடியுமா என்று யோசித்து, கண்டுபிடித்து செயல்படுத்துவது வரை அதில் நிறைய வேலைகள் இருக்கின்றன. நூறு சதவீதம்
நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே ஒப்படைக்க முடிந்த வேலை அது. மோகன் ராவிடம் தான் அவன் அதுபோன்ற வேலையை ஒப்படைப்பான். இப்போது
அந்த மிக முக்கிய ரகசிய வேலையை யாரிடம் ஒப்படைப்பது?
பாண்டியனிடம் சுகுமாரன் கேட்டுக் கொண்டிருந்தார். “பாண்டியன், அந்த நிஜ
யோகி மூலமாய் நாம அந்த எதிரியைக் கண்டுபிடிக்க முடியாதா?”
“அதுக்கு
நாம முதல்ல அந்த நிஜ யோகியைக் கண்டுபிடிக்கணுமே”
“நீங்க எந்த
ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் பத்திக் கேட்டாலும், நானும் ஒரு டாக்டராய்
இருக்கறதால என்னால சொல்ல முடியும். அப்படி நம்ம யோகிஜிக்கும்
அந்த நிஜ யோகியைத் தெரிஞ்சிருக்காதா?”
அந்தக் கேள்வி பாண்டியனை யோசிக்க வைத்தது. சுகுமாரனைப்
போல் அவர் பிரம்மானந்தரை யோகி என்று நினைக்கவில்லை. அதனால்
யோகியான பிரம்மானந்தருக்கு இன்னொரு யோகியைத் தெரிந்திருக்கும் என்ற வகையில் நினைக்கவும்
முடியவில்லை. அவரை யோசிக்க வைத்தது, நிஜ யோகி
பற்றி பேச்சு வந்த போதெல்லாம் பிரம்மானந்தரிடம் தெரிந்த சூட்சும மாற்றங்கள் தான். அது சம்பந்தமான
எதோ அவரைப் பாதிக்கிறது, எதையோ அவர் மறைக்கிறார் என்பதை பாண்டியன் கண்டுபிடித்திருக்கிறார்...
அவர் யோசிப்பதைப் பார்த்த சுகுமாரனுக்கு, தான் யோசிக்க
வைக்கும்படியான கேள்வியைத் தான் கேட்டிருக்கிறோம் என்று புரிந்ததால் அவர் உற்சாகமாகத்
தொடர்ந்தார். “கைல வெண்ணெய வெச்சுகிட்டு நாம ஏன் நெய்க்கு அலையணும். நம்ம கிட்டயே
யோகிஜி இருக்கறப்ப நிஜ யோகியைக் கண்டுபிடிக்க நாம ஏன் கஷ்டப்படணும். அப்படி
அந்த நிஜ யோகியை நாம கண்டுபிடிச்சுட்டா, அவரைக் கண்டுபிடிச்சு
அந்த இளைஞன் அவர் கிட்ட போறப்ப நாம அவனைப் புடிச்சுடலாமே. என்ன சொல்றீங்க?”
சமூகம் அறிவாளிகளாகப் பார்க்கும் பலரும், எப்படி
சில விஷயங்களில் மட்டும் அடிமுட்டாள்களாய் இருந்து விடுகிறார்கள் என்று பாண்டியன் வியந்தார். எதையாவது சொல்ல வேண்டிய கட்டாயத்திலிருந்து அவரை விடுவிக்க
வந்த ஆபத்பாந்தவராக தேவானந்தகிரி அப்போது அவரை அலைபேசியில் அழைத்தார். அவரிடம்
பாண்டியன் நடந்ததையெல்லாம் சொன்ன போது அவரும் ஆச்சரியப்பட்டார். பூஜைகள், சடங்குகளை
முறைப்படி செய்தால் கூட இது போன்ற தகவல்களை இவ்வளவு சீக்கிரம் தெரிந்து கொள்ள முடிவதில்லை
என்றும், ஷ்ரவன் உண்மையாகவே அபூர்வ சக்தி படைத்தவனாகத் தான் தெரிகிறான்
என்றும் அவர் பாராட்டினார்.
”ஏதோ ஒரு
விசேஷ பூஜைக்காக யோகியின் காலடி மண் அந்த ஆளுக்குத் தேவைப்படறாதாய் ஷ்ரவன் சொல்றான். அப்படி
காலடி மண் தேவைப்படற மாதிரி மாந்திரீகத்துல விசேஷ பூஜைகள் உண்டா?”
“பொதுவாய்
யாருக்காவது செய்வினை செய்யணும்னா அப்படி அந்த ஆளோட காலடி மண் எடுத்துட்டு வந்து மாந்திரீகத்துல
பயன்படுத்தறது உண்டு. ஆனால் ரொம்ப பரிசுத்தமான யோகிகள், சித்தர்கள்
காலடி மண் எடுத்துட்டு வந்து அவர்களுக்கு செய்வினை செய்ய முடியாது. அது செய்யறவனையே
தாக்கிடும். ஆனால் அவங்க காலடி மண்ணை வெச்சு செய்வினை சூனியம் இதனால எல்லாம்
பாதிக்கப்பட்டவங்களைக் குணமாக்க முடியும்... உண்மையைச்
சொல்லணும்னா அந்த மாதிரி பரிசுத்தமான சித்தர்கள் யோகிகள இந்தக் காலத்துல பார்க்க முடியறது
ரொம்ப அபூர்வம். அந்த ஆள் நிஜ யோகியை அவரோட காலடி மண்ணுக்காகத் தேடறான்னா, பில்லி
சூனியத்தால பாதிக்கப்பட்ட யாரையோ குணப்படுத்தறதுக்காக இருக்கலாம்..”
அவர் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்டுக்
கொண்டிருந்த பாண்டியன்
மெல்லக் கேட்டார். “செய்வினையால பாதிக்கப்பட்ட எங்களைக் கூட அப்படிக் குணப்படுத்த
முடியுமா?”
உடனே வந்தது பதில் ”முடியும்....
ஆனா அந்த மாதிரி பரிசுத்தமான யோகி ஒருத்தரை நேர்ல பாக்க முடியுமான்னு என்னால
சொல்ல முடியாது.”
அலைபேசியை வைத்து விட்டு பாண்டியன்
எதோ யோசனையில் ஆழ்வது சுகுமாரனுக்குத் தெரிந்தது. சற்று முன்
வரை அவருக்குப் புரியாத ஒன்று இப்போது மெல்லப் புரிந்தது. தேவானந்தகிரி
உபயோகித்த “பரிசுத்தமான” என்ற சொல் அதை அவருக்குப்
புரிய வைத்தது. நாத்திகராக இருந்த அவருக்கு யோகி என்ற சொல்லுக்குப் பொருள்
என்ன என்று கூடத் தெரியாது. அவர் ஒரு டாக்டர் என்பது போல பிரம்மானந்தர் ஒரு யோகி என்ற
புரிதல் தான் அவருக்கு இருந்தது. அதனால்
தான் ஒரு டாக்டருக்கு மற்ற சிறப்பான டாக்டர்களைத் தெரிந்திருப்பது போல், யோகிஜிக்கு
மற்ற யோகிகளைத் தெரிந்திருக்குமல்லவா என்று சற்று முன் வரை அவர் நினைத்திருந்தார்.
ஆனால் காலடி மண்ணுக்குக் கூட சக்தி
இருக்கும் ’பரிசுத்தமான’ யோகியைப் பற்றி
தேவானந்தகிரி பேசியவுடன் தான், பாண்டியனிடம் அவருக்கும் சற்று முன் கேட்டது அபத்தமானது என்பது
மெல்லப் புரிந்தது. தேவானந்தகிரி சொல்லும் நிஜ யோகி வேற்றுக்கிரக மனிதனைப் போல்
அன்னியமானவர் என்பதும் புரிந்தது.
பாண்டியன் வேறு யோசனையில் இருந்தார். இவர்கள்
எல்லாரும் சொல்லும் ’நிஜ யோகி’ பிரம்மானந்தாவுக்குத்
தெரிந்தவர் என்று அவருக்கு உறுதியாகத் தோன்ற ஆரம்பித்தது. ஏதோ காரணத்தால்
அவர் அதை வாய்விட்டுச் சொல்லத் தயங்குகிறார் என்றும் தோன்றியது. அப்படியிருந்தால்
அவரைப் பற்றி பிரம்மானந்தரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது தான் கஷ்டம். ஆனால் ஒரு
காரியம் ஆக வேண்டுமென்றால், பாண்டியன் கஷ்டம் பார்த்து பின்வாங்குபவர் அல்ல!



Super sir...
ReplyDeleteSir illuminatti irukumbothe, yaro oruvan naval um post panninga.. Ippo yogi mudiya innum 26 part thaan irukku.. Vera novels ethum post panna maatingala..?