நாளை மாலை ஐஐடி டெல்லியில் பேச பிரம்மானந்தாவை அழைத்திருக்கிறார்கள். அவர் எந்த நிறக் குல்லாவையும், உடைகளையும் அணிந்து கொண்டு செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார். அந்தப் பேச்சில் புகுத்த வேண்டிய நகைச்சுவைகள் சிலவற்றை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். பேச அவர்கள் தந்திருக்கும் தலைப்பு, “யோகாவும், தியானமும் நவீன காலத்திற்கு எந்த அளவு உதவும்?”. இது ஒன்றும் கஷ்டமான தலைப்பு அல்ல. பேசுவதற்கு, வேண்டிய அளவு விஷயமிருக்கிறது. இதுவரையில் அவர் பேசியிருப்பதில் சிலவற்றை நினைவில் வைத்திருந்தாலே மூன்று மணி நேரமாவது தாராளமாகப் பேசிவிடலாம். ஆனாலும் இது போன்ற அறிவு மிக்க இளைஞர்கள் முன் சோபிக்க ஆழமான சிலவற்றையும் சொன்னால் தான் நன்றாயிருக்கும். அதற்கு வேண்டிய குறிப்புகளை அவரது சிஷ்யை கல்பனானந்தா பதினோரு மணிக்குக் கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கிறாள்.
பிரம்மானந்தா சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார். மணி 10.55. நாளை போட்டுக் கொண்டு போகும் உடைகளை அவர் தேர்ந்தெடுத்து வைத்து விட்டு அமர்கையில்
கல்பனானந்தா வந்தாள். பிரம்மானந்தா மறுபடியும் கடிகாரத்தைப் பார்த்தார்.
மணி 11.00.
கைகூப்பி,
தலை தாழ்த்தி நமஸ்கரித்த கல்பனானந்தாவை பிரம்மானந்தா கை உயர்த்தி ஆசிர்வதித்தார்.
கல்பனானந்தா நாளைய பேச்சுக்கான குறிப்புகள் கொண்ட உறையை அவருடைய மேசையில்
வைத்து விட்டுத் திரும்பிய போது பிரம்மானந்தா அவளை அமரச் சொன்னார்.
எதிரிலிருந்த மரநாற்காலியில் அமர்ந்த கல்பனானந்தாவிடம் பிரம்மானந்தா
ஷ்ரவனின் புகைப்படத்தை நீட்டினார்.
”இந்த வாரம் நடந்துகிட்டிருக்கிற வகுப்புகளுக்கு வந்திருக்கிற இந்தப்
பையனைப் பற்றி என்ன நினைக்கிறாய் கல்பனா?”
அந்தப் புகைப்படத்தை வாங்கிப் பார்த்த கல்பனானந்தா சொன்னாள். “சில சமயத்துல இந்தப் பையன்
நடந்துக்கறது விசித்திரமாய் இருக்கு. மற்றபடி புத்திசாலிப் பையன்
தான்.”
“அப்படி என்ன விசித்திரமாய் நடந்துகிட்டான்?”
கல்பனானந்தா சற்று யோசித்து விட்டுச் சொன்னாள். “திடீர்னு எதையோ வெறிச்சுப்
பார்க்கற பழக்கம் அவனுக்கு இருக்கு. எதைப் பார்க்கறான்னு பார்த்தால்,
அங்கே எதுவும் இருக்கறதில்லை. அந்த இடம் வெற்றிடமாய்
தான் இருக்கு. அந்த சமயத்துல நாம சொல்றது எதுவும் அவன் காதுல
விழறதில்லை. கொஞ்சம் நேரத்துல சுதாரிச்சுகிட்டு சரியாயிடறான்.
ஏன் கேட்கறீங்க யோகிஜி?”
“நீ சொல்ற இதே விஷயத்தை என்கிட்ட இன்னொருத்தரும் சொன்னார். அதனால தான் கேட்டேன்.”
“அவனுக்கு மனரீதியான பிரச்சினைகள் எதாவது இருக்கலாம். ஆனால் யோகா, தியானம் மேல ஆழமான ஆர்வமும், கஷ்டமானதைச் சொன்னாலும் அதைப் புரிஞ்சுக்கற அறிவும் கூட அவன் கிட்ட இருக்கு.”
இது போன்ற விஷயங்களில் கல்பனானந்தாவின் கணிப்பு மிகச்சரியாகவே
இருக்கும். பிரம்மானந்தா
யோசித்தார். பின் சொன்னார். “வகுப்புகள்
இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு. உனக்கு இன்றைக்கோ நாளைக்கோ
எதாவது வகுப்பு இருக்கா?”
“இன்றைக்கு
ஒரு வகுப்பு இருக்கு
யோகிஜி. சாயங்காலம்
கடைசி வகுப்பு”
“நல்லது. வகுப்பு முடிஞ்சவுடனே அவன் கிட்ட பேச்சுக் கொடுத்து
அவனைப் பற்றிக் கூடுதலாய் தெரிஞ்சுக்க முயற்சி செய்.”
“சரி யோகிஜி”
‘இனி போகலாம்’ என்ற பாவனையுடன் பிரம்மானந்தா தலையசைக்க
கல்பனானந்தா கிளம்பினாள்.
ஆரம்பநிலை வகுப்புகளுக்கு வருபவர்கள் யாரையும் இதுவரையில் பிரம்மானந்தா
ஒரு பொருட்டாக நினைத்ததாய் கல்பனானந்தாவுக்கு இதுவரையில் நினைவில்லை. அவர் கவனிக்கும் அளவுக்கு
முக்கியமானவர்கள் வந்ததில்லை. எனவே கல்பனானந்தாவுக்கும் ஷ்ரவனைப்
பற்றிக் கூடுதலாக அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.
பொதுவாக வகுப்பு வீடியோ பதிவுகள் பாண்டியனின்
பார்வைக்கு அனுப்பப்படுவதில்லை.
மிகவும் பிரச்சினைக்குரிய நபர்கள் தியான வகுப்புகளில் பங்கெடுத்தால்,
அந்தப் பிரச்சினைக்குரிய பகுதி மட்டும் அவரிடம் அனுப்பப்படும்.
ஆனால் கல்பனானந்தா பிரம்மானந்தாவிடம் தெரிவித்த தகவல் தெரிந்தவுடன் பாண்டியன்
அந்த முழு வகுப்பு வீடியோ பதிவையும், பிரம்மானந்தாவுடன் சேர்ந்து
பார்த்தார்.
கல்பனானந்தா சொன்னது போல ஷ்ரவன் வெறித்துப் பார்க்கும் பகுதி
வந்தவுடன் அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள்.
ஷ்ரவனின் திகைப்பும் ஆச்சரியமும் தெளிவாகவே அவன் முகத்தில் தெரிந்தது.
வகுப்பு வாசலில் இருந்து மேசை வரை யாரோ வருவதைப் பார்ப்பது போல் பார்த்த
அவன் பார்வை பின் அங்கேயே சுமார் இரண்டரை நிமிடங்கள் தங்கின. பின் பழையபடி மேசைப்பக்கமிருந்து வாசல் வரை அவன் பார்வை நகர்ந்தது.
பின் தான் அவன் கவனம் கல்பனானந்தா சொல்லும் விஷயத்திற்குத் திரும்பியது.
பாண்டியன் சொன்னார்.
“அவன் இந்த வகுப்புலயும் எதையோ பார்த்திருக்கிறான். ஆனால் இன்னைக்குக் காலைல கண்ணன் கிட்ட பேசினப்ப
அதுபத்தி அவன் ஒன்னும் சொல்லலையே. ஏன்?”
“மத்த வகுப்புலயும் இப்படி நடந்திருக்கலாம். கல்பனா கவனிச்சதால
நமக்குத் தெரிஞ்சிருக்கு. மத்தவங்க கவனிக்காமல் இருந்திருக்கலாம்”
என்று பிரம்மானந்தா யோசனையுடன் சொன்னார்.
பாண்டியன் தன் ஆட்களை அழைத்து, அனைத்து வகுப்புகளின் வீடியோ
பதிவுகளிலும் ஷ்ரவனைப் பிரத்தியேகமாகக் கவனிக்கச் சொன்னார். அவன்
முகம் மாறி திகிலுடனோ, ஆச்சரியத்துடனோ வெற்றிடத்தை வெறித்துப்
பார்க்கிறானா என்று கவனிக்கச் சொன்னார். அப்படி இருந்தால் அந்த
வீடியோ பதிவுகளின் அந்தக் குறிப்பிட்ட நேரத்தைக் குறித்துக் கொண்டு உடனடியாக வந்து
தெரிவிக்கச் சொன்னார்.
இதுவரை ஐந்து நாள் வகுப்புகள் முடிந்துள்ளன. ஒரு நாளுக்கு எட்டு மணி
நேரம் வகுப்புகள் உள்ளன. ஐந்து நாட்களுக்கு 40 மணிகள் வீடியோ பதிவுகளைப் பார்க்கும் அளவுக்கு அவருக்கு நேரமும், பொறுமையும் இல்லை. அவருடைய ஆட்கள் இரண்டிரண்டு பேராகச்
சேர்ந்து ஒவ்வொரு நாள் வீடியோப் பதிவுகளைப் பார்ப்பது என்ற முடிவுடன் பத்து பேர் கொண்ட
குழு அந்த வேலையை உடனே ஆரம்பித்தது.
செல்வம் தூத்துக்குடி வந்து ஒரு வாரம்
ஆகி விட்டது. சென்னையிலிருந்து கிளம்புவதற்குச் சில நாட்கள் முன்னாலிருந்தே நரக வாழ்க்கையை
அனுபவித்து வந்ததால் அவருக்குப் புதிய நரகம் ஓரளவு தேவலை என்று தான் முதல் மூன்று நாட்கள்
தோன்றியது. அந்தக் காவல் நிலையத்தில் அவருடன் வேலை பார்த்த போலீஸாரும்
இயல்பாகப் பழகினார்கள். சென்னையில் அவரைத் திகிலுடனும்,
சந்தேகத்துடனும் பார்த்தது போல் இங்கு யாரும் பார்த்து அவரைச் சித்திரவதை
செய்யவில்லை.
ஆனால் நான்காம் நாளில் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுக்கும், எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களுக்கும்
இடையே ஒரு தகராறு வெடித்து அடிதடி நடந்து, இருசாராரும் புகார்
எழுதிக் கொடுத்ததிலிருந்து தலைவலி ஆரம்பித்தது. இருசாராரும் வந்து
ஏன் எதிர்தரப்பு ஆட்களை இன்னும் கைது செய்யவில்லை என்று அதிகாரமாகக் கேள்வி கேட்டனர்.
“காசை வாங்கிட்டு சும்மா இருக்கீகளாக்கும்” என்று இருசாராரும்
காசைக் கொடுக்காமலேயே கேள்வி கேட்டார்கள்.
கடுமையான வார்த்தைகளால் அவரைத் திட்டினார்கள். காவல் நிலையம் வந்து நாற்காலிகளில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து அவர்கள்
வீட்டு வேலைக்காரனிடம் கேள்வி கேட்பது போல் கேள்வி கேட்டார்கள்.
அவர்கள் போனவுடன்,
உடனிருக்கும் போலீஸ்காரர்கள் ”வாங்கற சம்பளமே,
இதையெல்லாம் கேட்கத்தான்” என்று அங்கிருக்கும்
யதார்த்த நிலையைச் சொன்னார்கள்.
சாதாரண ரவுடியிலிருந்து கட்சிக்காரர்கள் வரை யாரும் அவருக்குப்
பயப்படவில்லை. மரியாதை என்ற வார்த்தைக்கு யாருக்கும் அங்கே அர்த்தம் தெரியவில்லை.
நிலைமையின் தீவிரம் சுட ஆரம்பித்த போது தான் அங்கும் மொட்டைக் கடிதம்
வந்தது.
“அன்பில்லாத செல்வம்,
பிரச்சினையான இடத்திற்கு வந்திருக்கிறோமே, நமக்கு யாரும் இல்லையே என்று
நீ கவலைப்படாதே. உன்னுடன் நானிருக்கிறேன். சேர்ந்தே அனைத்தையும் நாம் சந்திப்போம்.
சவம்
“
படித்து விட்டு ரத்தம் கொதித்தாலும், செல்வம் கஷ்டப்பட்டு அமைதி
காத்து அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போட்டார்.
மறு நாள் இரத்தக் கறையுடன் காவித்துணி பார்சலில் வந்தது.
அதற்கடுத்த நாள் பஸ்ஸில் தன்னுடைய பர்ஸ் ஜேப்படி செய்யப்பட்டு
விட்டது என்று புகார் கொடுக்க வந்த ஒரு இளைஞன் அவருக்குப் பின்னால் கோரைப்பல்லுடன்
ஒரு பெண் வாயில் ரத்தம் வழிய நின்றிருப்பதாகக் கத்திச் சொல்லி விட்டு ஓடினான்.
அவர் ஆத்திரம் தாங்காமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய, அங்குள்ள ஒரு போலீஸ்காரர்,
செல்வம் வேலை பார்த்த முந்தைய சென்னை காவல் நிலையத்திற்குப் போன் செய்து
பேச, அங்குள்ளவர்கள் அங்கு முன்பு நடந்ததை எல்லாம் விவரிக்க,
செல்வத்தின் முந்தைய சரித்திரம் தூத்துக்குடியிலும் தொடர்ந்தது.
பிரம்மானந்தா இப்படிதான் ஒவ்வொரு அரங்கிலும் எல்லாம் தெரிந்த மாதிரி பேசி மக்களை ஏமாற்றுகிறார் போலும்.
ReplyDelete