சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 23, 2025

சாணக்கியன் 145


பொதுவாக தனநந்தன் ஆடல், பாடல், கேளிக்கைகளையும், சதுரங்க ஆட்டத்தையும் துறக்க முடிந்தவன் அல்ல. அவன் உடல்நலமில்லாத சமயங்களைத் தவிர மற்ற நேரங்களில் அவன் விரும்பி ஈடுபடுபவை அவை. மன அமைதி குன்றியிருந்தாலும் அவன் அவற்றில் ஈடுபட்டு மகிழ்ச்சியான மனநிலைக்குச் சீக்கிரமே மாறக்கூடியவன். அப்படிப்பட்ட அவன் முதல் முறையாக அவை எவற்றிலும் ஈடுபட்டு சோகத்தையும், கோபத்தையும் போக்க முடியாதவனாகத் திணறினான். மது கூடத் தற்காலிகமாய் சிறிது நேரம் உறங்க உதவியதே தவிர, மயக்கம் ஓரளவு தெளிந்த பின்னர் இழந்த செல்வத்தையும், அவன் ஏமாந்த கதையையும் நினைவுபடுத்தி அவன் மனக்காயங்களைப் புதுப்பித்தது. யாரைப் பார்த்தாலும் அவனுக்குக் கோபம் வந்தது. யார் பேசினாலும் அவனுக்குக் கசந்தது. அறிவுரைகளோ ஆத்திரத்தை ஏற்படுத்தின. ராக்ஷசர் மீது கூட அவனுக்குக் கோபம் வந்தது.

 இழந்ததை விட இருப்பது அதிகம் என்று மனசமாதானம் அடையுங்கள் மன்னாஎன்று அவர் சொன்னதை ஏற்று மன அமைதி அடைய அவனால் முடியவில்லை. யாகசாலையில் பாதாள அறையில் பார்த்த காலி மரப்பெட்டிகள் அடிக்கடி மனக்கண்ணில் நிழலாடி எத்தனை தொலைத்திருக்கிறோம் என்பதை நினைவுபடுத்தி அவன் நிம்மதியைக் கெடுத்தன.   இத்தனைக்கும் இந்த நிகழ்வைச் சூசகமாகப் பல முறை அவன் கனவுகளும் முன்கூட்டியே எச்சரித்திருந்தன. ஆனாலும் ஏமாந்திருக்கிறோம் என்பது அவனுக்கு அவன் மேலேயே கூட கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.   

 இதையெல்லாம் குறைப்பது போல் குடும்பத்திலும் யாரும் அவனைப் புரிந்து கொள்ளவோ ஆறுதல் அளிக்கவோ முற்படவில்லை. மாறாக, விஷயத்தைக் கேள்விப்பட்டு அவனது பட்டத்தரசி அமிதநிதா  “என்னிடம் கூடச் சொல்லாமல் ரகசியம் காத்தது ஏன்?” என்று கோபித்துக் கொண்ட போது, எந்த நேரத்தில் அவளுக்கு எது முக்கியமாக இருக்கிறது என்று எண்ணி, அவனால் அவளை ஓங்கி அறையாமல் இருக்க முடியவில்லை. அவள் கோபம் இரட்டிப்பாகி அவனுடன் பேசுவதை நிறுத்தி இருந்தாள். இரண்டு நாட்களாக அவள் அவன் கண்ணிலேயே படவில்லை. அவன் மகன் சுதானு “அவ்வளவு நிதியை அங்கே வைத்து காவல் காக்காமல் யாராவது இருப்பார்களா? எங்களுக்குத் தருவதில் கஞ்சத்தனம் செய்து மொத்தமாக எல்லாவற்றையும் யாருக்கோ தாரை வார்த்துக் கொடுத்து விட்டீர்களே” என்று கேள்வி கேட்டு தனநந்தன் திட்டிய கடுமையான வார்த்தைகளால் கோபம் கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு வேட்டையாடப் போய் ஒரு நாள் கழித்து வந்தான்

 எல்லாமாகச் சேர்ந்து துக்கம், பெருந்துக்கம், ஆத்திரம், பேராத்திரம், என மாறி மாறிய மனநிலைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்த தனநந்தனை மூன்றாவது நாள் தைரியமாக நெருங்கியவர் ராக்ஷசர் தான். எப்போதுமே அவரை அவன் அலட்சியப்படுத்தியதில்லை, மரியாதைக் குறைவாய் நடத்தியதில்லை. ஆனால் அவனிருந்த மனநிலையில் அவரைப் பார்த்து சிறு புன்னகை பூக்கவும் கூட அவனால் முடியவில்லை. நீங்களும் என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்பது போல் பார்த்தான்.

 அவனுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு ராக்ஷசர் சொன்னார். “அரசே மிக முக்கியமான செய்தி

தனநந்தன் கேட்டான். “அந்தச் சதிகாரர்களைச் சிறைப்படுத்தி விட்டீர்களா?” அவனைப் பொருத்த வரை அது தான் அப்போதைக்கு மிக முக்கியமான செய்தியாக இருக்க முடியும்.

 இல்லை மன்னா. சந்திரகுப்தனும், குலு, காஷ்மீரம், நேபாளம், ஹிமவாதகூட அரசர்களும் நமக்கு எதிராகப் படைகளைத் திரட்டிக் கொண்டு  கிளம்பியிருக்கிறார்கள் என்ற செய்தி ஒற்றர்கள் மூலம் கிடைத்திருக்கிறது

 தனநந்தன் உஷ்ணமாகச் சொன்னான். “அவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கிளம்பி இருக்கிறார்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் ராக்ஷசரே. அவர்களில் யாராவது நம் வலிமைக்கு ஈடாவார்களா?”

 

ராக்ஷசர் சொன்னார். “தனித்தனியாகப் பார்த்தால் நீங்கள் சொல்வது போல் நம் வலிமைக்கு யாருமே ஈடாக மாட்டார்கள் அரசே. ஆனால் அவர்கள் தனித்தனியாக வரவில்லை. ஒன்று சேர்ந்து வருகிறார்கள்...”

 ஒன்று சேர்ந்தால் அவர்கள் நமக்கு ஈடாகி விடுவார்கள் என்று சொல்ல வருகிறீர்களா ராக்ஷசரே?” 

 நம் அபிப்பிராயங்கள் போரின் முடிவை நிர்ணயித்து விடுவதில்லை அரசே. மேலும் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடுவது புத்திசாலித்தனமும் அல்ல. எதிரிகள் போருக்குக் கிளம்பி விட்டதால் நாம் வேகமாக யோசித்து போருக்கு ஆயத்தமாக வேண்டும் என்று சொல்லவே வந்தேன். வழக்கமானவர்களுடன், படைத்தலைவர்கள், அதிகாரிகள், ஒற்றர்கள் ஆகியோரில் முக்கியமானவர்களையும் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு வரச் சொல்லி இருக்கிறேன். அதற்குத் தங்களையும் அழைத்துப் போகவே வந்திருக்கிறேன்.” ராக்ஷசர் பொறுமையாகச் சொன்னார்.

 தனநந்தன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். இப்போதிருக்கும் மனநிலையில் அவனுக்கு எதிலும் ஈடுபாடில்லை. ஆனால் அவனை நிம்மதியாக இருக்க அனுமதிக்காத, சாணக்கின் மகனை இந்தப் போர் மூலம் மட்டுமே தண்டிக்கவும் பழி வாங்கவும் முடியும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டு அதற்கான வேலைகளில் அலட்சியம் சிறிது கூடாது என்றெண்ணி மெல்லக் கிளம்பினான்.

 ராக்ஷசர் தனநந்தனிடம் பொறுமையாகச் சொன்னார். “அரசே. இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் யார் என்ன அபிப்பிராயம் சொன்னாலும் நாம் முழுமையாகவும், பொறுமையாகவும் கேட்க வேண்டும். அந்த அபிப்பிராயங்களில் நாம் அதிருப்தியை வெளிக்காட்டினால் உண்மையான அபிப்பிராயங்களும், தகவல்களும் அவர்களிடமிருந்து வருவது நின்று விடும். அது நமக்கு நல்லதல்ல

 அந்த அபிப்பிராயத்தைக் கேட்கவே கூட தனநந்தனுக்குக் கசந்தது.  ஆனால் அவர் சொன்னதை மறுக்க முடியாமல் தலையசைத்தான்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்து அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் தனநந்தனின் தோற்றத்தில் இந்த மூன்று நாட்களில் தெரிந்த மாற்றம் கண்டு திகைத்தபடி எழுந்து நின்றார்கள். தனநந்தன் அமர்ந்து விட்டு அவர்களையும் அமரச் சைகை செய்தான்.    

 அவர்கள் அமர்ந்தவுடன் ராக்ஷசர் சந்திரகுப்தனும், குலு, காஷ்மீரம், நேபாளம், ஹிமவாதகூட அரசர்களும் மகதத்தின் மீது படையெடுத்துக் கிளம்பியிருக்கும் தகவலை அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார்.   

 பத்ரசால் கேட்டான். “வரும் படைகளின் எண்ணிக்கை பற்றிய தகவலும் கிடைத்திருக்கிறதா?”

அவரவர் பகுதியிலிருந்து கிளம்பிய படையினரின் எண்ணிக்கை கிடைத்திருக்கிறது....” என்று சொன்ன ராக்ஷசர் அதை விவரித்துச் சொன்னார். “ஆனால் அவர்கள் எங்கே, எப்படி எத்தனை பேராகப் பிரிந்து வருவார்கள் என்று தெரியவில்லை. விஷ்ணுகுப்தர் தன் திட்டத்தை வெளியே கசிய விடுவார் என்று தோன்றவில்லை.”

பத்ரசால் சொன்னான். “படைபலத்தைப் பொருத்த வரை நாம் வலிமையாகவே இருக்கிறோம். ஆனால் ஆயுதக்கிடங்கு சேதமானதால் புதிய ஆயுதங்கள் உடனடியாக நமக்குத் தேவைப்படுகின்றன. அதன் உற்பத்திக்கான உத்தரவை நீங்கள் பிறப்பித்திருந்தாலும் கஜானா அதிகாரியிடமிருந்து நிதி கிடைக்காததால் ஆயுத உற்பத்திப் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று தெரிகிறது...”

 ராக்ஷசர் சொன்னார். “கஜானா அதிகாரி மன்னரின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். நம் எதிரிகளை அழித்து நம் இழப்புகளை ஈடுசெய்ய மன்னரும் உறுதியாக இருப்பதால் தேவைப்படும் நிதிக்கு உடனே அனுமதி வழங்கப்பட்டு விடும். அதனால் ஆயுதங்கள் குறித்த கவலை வேண்டாம்.”

 தனநந்தன் தலையசைத்தான். ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்த ஜீவசித்தி ராக்ஷசரின் சமயோசிதத்தை ரசித்தான். எதற்கு நிதி தேவைப்பட்டாலும் தனநந்தனிடம் சீக்கிரம் அனுமதி கிடைத்து விடாது. நீண்ட காலம் காத்திருந்த பின்னரும், பல கேள்விகள் கேட்டு தேவைப்பட்டதில் பாதி தான் கிடைக்கும். நிலைமை அப்படி இருக்கையில்நம் எதிரிகளை அழித்து நம் இழப்புகளை ஈடுசெய்ய மன்னரும் உறுதியாக இருப்பதால் உடனே அனுமதி வழங்கப்பட்டு விடும்.” என்று சொல்லி உடனடியாக பிரச்சினையைத் தீர்த்த விதம் அவனுக்குப் பிடித்திருந்தது. இவர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தனநந்தன் எப்போதோ அழிந்து போயிருப்பான் என்று நினைத்துக் கொண்டான்.

 அடுத்ததாக ராக்ஷசர் சொன்னார். “நமது போர் ஆயத்தங்களை நாம் ஆலோசிக்கும் முன் உங்கள் அனைவரையும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிப்பது என் கடமை என்று நினைக்கிறேன். ஆச்சாரிய விஷ்ணுகுப்தரின் ஆட்கள் மறைமுகமாக நம் மண்ணில் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மை நம் ஆயுதக்கிடங்கு எரிப்பு போன்ற சில சம்பவங்களால் உறுதியாகியிருக்கின்றது. அவருடைய ஆட்களுக்கு நம் ஆட்களின் உதவியும் கிடைத்திருக்கும் என்றும் நான் சந்தேகப்படுகிறேன். யாரந்த ஆட்கள் என்று நாம் அடையாளம் காண்பது மிக முக்கியம். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூடியுள்ளவர்களில் கூட ஓரிரு ஆட்கள் இருக்கலாம் என்கிற அளவுக்கு எனக்குச் சந்தேகம் இருக்கிறது. எனவே உங்களைச் சுற்றி நடப்பவைகளையும், சுற்றியுள்ளோரின் நடவடிக்கைகளையும் தயவு செய்து கூர்ந்து கவனியுங்கள்.  அவற்றில் சந்தேகத்தை எழுப்பும்படியான வித்தியாச நடவடிக்கைகளைக் காண நேர்ந்தால் அவர்கள் எத்தனை பெரிய பதவியில் இருப்பவர்களானாலும் சரி சிறிதும் தயங்காமல் என் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்.”

 

(தொடரும்)

என்.கணேசன்





No comments:

Post a Comment