சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 7, 2024

சாணக்கியன் 99

 

சாணக்கியரிடமிருந்து ஜீவசித்தி ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொண்டான். இப்படி பல விஷயங்களில் ஆழமான அறிவாற்றல் உள்ள ஒரு மனிதர் இருக்க முடியுமா என்ற வியப்பு தான் முடிவில் அவனுக்கு ஏற்பட்டது. அவர் அவனுடைய புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்றபடி இறங்கி வந்து விஷயங்களை எளிமையாக விளக்கும் திறனைப் பெற்றிருந்தார். அவன் அவரிடம் பெரிதும் மெச்சிய ஒரு விஷயம் எதையும் சுருக்கமாகவும், அதே நேரத்தில் தெள்ளத் தெளிவாகவும் சொல்ல முடிந்த தன்மை. பேசிய எதிலும் குழப்பமோ, அனாவசிய வார்த்தைகளோ இல்லை. அவர் தேவையான தகவல்களையும், உதவிகளையும் சொல்லும் போது கூட அவன் செய்ய வேண்டியது என்ன என்பதில் சிறு குழப்பம் கூட இல்லாதிருந்தது. அவன் சில பண்டிதர்களைப் பார்த்திருக்கிறான். பண்டிதர் என்பதற்காகவே கடினமான சொற்களைப் பயன்படுத்தி பிரமிப்பை ஏற்படுத்த முயல்வார்கள். சாணக்கியர் அந்த முயற்சியில் தப்பித் தவறியும் இறங்கவில்லை. மேலும் அவர் அவன் ஈடுபடும் செயல்களில் எந்தச் சந்தேகத்தையும் எழுப்பாதபடி இயல்பாய் ஈடுபடுவது எப்படி என்பதையும் விளக்கினார். அவர் சொன்ன பல விஷயங்கள் அவனைப் பிரமிக்க வைத்தன. அவன் தன் வாழ்நாளில் இது வரை கற்றுக் கொண்ட விஷயங்களை விட அதிகமாக அந்த ஓரிரவில் கற்றுக் கொண்டதாய் உணர்ந்தான்.

 

அவர் அவனிடமிருந்து விடைபெற்ற போது அவன் ஒரு புதிய மனிதனாகி இருந்தான்.  தந்தையின் மரணம் விபத்து அல்ல கொலை என்ற புரிதல், யோசிக்க யோசிக்க அவனுக்குள் தனநந்தன் மீது ஆத்திரத்தையும் கடும் வெறுப்பையும் வளர்த்த ஆரம்பித்தது. தனநந்தனைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குள்ளே எழும் அக்னியை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அது மட்டுமல்ல மனதளவில் இத்தனை நாளும் இவனுக்கு மன்னன் என்ற மதிப்பைத் தந்து கொண்டிருந்தது கூட அவனுக்குத் தவறாகப் பட்டது. அவன் தன் உணர்வுகளைக் கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டான்.

 

சாணக்கியர் அவனிடம் முக்கியமாக மூன்று மனிதர்களை மிக உன்னிப்பாகக் கவனிக்கச் சொன்னார்.  அவர்கள் தனநந்தனின் இரண்டு மகன்கள் மற்றும் மகத சேனாதிபதி பத்ரஷால். அவர்களுடைய விருப்பு வெறுப்புகள், யாருடன் அதிக காலம் கழிக்கிறார்கள். யாரையெல்லாம் காண்கிறார்கள், யாரெல்லாம் சேர்ந்து பேசுகிறார்கள். அவர்களுக்கு ஆகாதவர்கள் யாரெல்லாம், யார் நண்பர்கள், யார் எதிரிகள், அவர்களுடைய பலங்கள் மற்றும் பலவீனங்கள் என்ன, அரண்மனையில் யாருக்கு யாரிடம் செல்வாக்கு என்பது போன்ற தகவல்களுக்கு அவர் மிக முக்கியத்துவம் தந்தார்.  அதையெல்லாம் அறிந்து கொண்டால் அவர்களை முழுவதும் அறிந்து கொள்வதற்கும், அதன்படி அவர்களை இயக்குவதற்கும் உதவியாக இருக்கும் என்று சொன்னார். காவலர்களை அவர்களிடம் அனுப்புவதும், அலுவல் பணிகளில் மாற்றி மாற்றி இருந்துவதும் அவன் அதிகாரத்திலிருப்பதால் மற்றவர்களை விட அதிகமாகத் தகவல்களை  அவனால் அறிய முடிந்தது. ”எதெல்லாம் முக்கியம் என்று தோன்றுகிறதோ, எதெல்லாம் விசித்திரமாகத் தோன்றுகிறதோ அதையெல்லாம் எனக்கு தெரிவித்துக் கொண்டிருஎன்று அவர் சொன்னபடியே அவன் தெரிவிக்க ஆரம்பித்தான்.

 

எதையும் கவனிப்பது எப்படி என்ற கலையையும் ஜீவசித்தி சாணக்கியரிடமிருந்து சரியாகக் கற்றுக் கொண்டான். எத்தனையோ முக்கியமான விஷயங்களை நாம் எப்படியெல்லாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம் என்று அவர் அவனிடம்  விளக்கினார். அதுநாள் வரை அவன் அக்கறை காட்டாத விஷயங்களில் எல்லாம் அக்கறை காட்டிக் கவனிக்க ஆரம்பித்தான்.  ஒவ்வொரு நாளும் மிக அர்த்தத்துடன் நகர்வதை அவன் நன்றாகவே உணர்ந்தான். நாட்கள் சுவாரசியமாக நகர்ந்தன.

 

கங்கைக் கரையில் தனநந்தன் புதையலைப் புதைத்த இடத்தைக் கண்டுபிடிப்பதிலும் அவர் கவனிக்கச் சொல்லிக் கொடுத்த விஷயங்கள் அவனுக்கு மிகவும் பயன்பட்டன. அவர் “எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கிறது. அந்தக் குழியில் கூடுதலாக வேறு பெட்டிகளும் தனநந்தன் பிற்காலத்தில் வைத்திருக்கலாம். அந்தச் சமயத்தில் வேறு விபத்துகளும் நடந்திருக்கலாம்.” என்று சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு பழைய விபத்துகளை எல்லாம் நினைவுபடுத்திப் பார்த்தான்.

 

அவனுக்குத் தெரிந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்பு  கட்டிடக் கலை நிபுணர் ஒருவரும், கட்டிடப் பணியாளர்கள் மூவரும் துர்மரணம் அடைந்தார்கள். அவர்கள் நால்வரும் கங்கைக் கரையில் தனநந்தனுக்காக ஒரு யாகசாலை கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள். அஸ்திவாரம் போட்டுச் சுவர் எழுப்பும் வேலையை ஆரம்பித்த வேளையில் ஓர் இரவில் பாம்பு கடித்து அவர்கள் மரணமடைந்தார்கள். அவர்கள் நால்வரும் யாகசாலை கட்டும் இடத்திற்கு அருகிலேயே கூடாரம் அமைத்து தங்கியிருந்ததால் இரவில் அவர்களை பாம்பு கடித்திருக்கக்கூடும் என்று அனைவரும் நினைத்தார்கள். அதன் பின் அந்த வேலையை வேறு ஆட்கள் கட்டி முடித்தார்கள்.

 

அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தவுடன் ஜீவசித்தி அதுவும் தனநந்தனின் திருவிளையாடலாகவே அது இருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று மனதில் கணித்தான். அவனுக்குத் தெரிந்து முன்பும் சரி பின்பும் சரி அப்படி பாம்பு கடித்து அப்பகுதியில் இப்படி கும்பலாய் யாரும் இறக்கவில்லை. தனநந்தன் அந்தக் குழியில் கூடுதலாய் வேறு சில பெட்டிகளும் வைத்திருக்கலாம். அல்லது முன்பு வைத்த பெட்டிகளுக்கே பாதுகாப்பில்லை என்று உணர்ந்தும் இருக்கலாம். அந்த இடத்தில் ஏதாவது கட்டிடம் கட்டி அதை அதிகம் யாரும் பயன்படுத்தாதபடியும் பார்த்துக் கொண்டால் உள்ளிருக்கும் புதையலை யாரும் தற்செயலாகவும் கண்டுபிடிக்க வழியில்லை. அந்த யாகசாலையில் வருடத்திற்கு ஒரு முறை தனநந்தனின் பிறந்த நாள் சமயத்தில் மட்டும் அவன் நலனுக்காக யாகங்கள் நடைபெறும். மறுபடி பூட்டி வைக்கப்படும். இது தனநந்தனின் திட்டத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.

 

அந்த யாகசாலைக்கு அஸ்திவாரத்திற்காகக் குழி தோண்டும் போது அந்தப் பணியாளர்களுக்கு அந்தப் புதையல் பற்றித் தெரிந்திருக்காமல் இருக்க வழியே இல்லை. அஸ்திவாரம் முடிந்து சுவர் எழுப்ப ஆரம்பிக்கும் வரை அவர்கள் மட்டும் அங்கேயே கூடாரத்தில் தங்கி இருப்பதால் மற்றவர்களிடம் தெரிவித்திருக்க வழியும் இல்லை. ஆனால் பின்பும் தெரிவித்து விடாமல் இருக்க பாம்பு தீண்டியிருக்கும் கதை. முதலில் தோண்டியவர்களுக்குத் தீவிபத்து,   விஷயம் அறிந்த சாரதிக்கு குதிரையிலிருந்து விழுந்து விபத்து, கட்டிடத் தொழிலாளிகளுக்கு விஷக்கடி.... நினைக்க நினைக்க ஜீவசித்திக்கு ஆத்திரமாக வந்தது. தனநந்தனைப் போன்ற கயவன் மன்னனாக இருக்கச் சிறிதும் தகுதியில்லாதவன் என்பதில் சந்தேகமேயில்லை. சாணக்கியர் சொல்வது போல் அவனிடமிருந்து விடுதலை பெறவே மகதமும் விரும்பும்!

 

சாணக்கியர் வந்து அவனைச் சந்தித்துச் சென்ற பிறகு சாணக்கியரின் ஆட்கள் வணிகர்களாகவும், யாத்திரீகர்களாகவும், பாடலிபுத்திரத்திற்கு அதிகம் வர ஆரம்பித்தார்கள். அவர்களில் ஓரிருவரை முன்பே பாடலிபுத்திரத்தில் பார்த்த நினைவு ஜீவசித்திக்கு இருக்கிறது. சாணக்கியர் முன்பே இந்த வேலையை ஆரம்பித்து விட்டிருக்கிறார் என்பதும் அவனுக்குப் புரிந்தது. அவர்களில் வணிகர்களாக வந்தவர்கள் பெயருக்கு மட்டுமல்லாமல் உண்மையாகவே வாணிபமும் செய்பவர்களாகவே இருந்தார்கள்.

 

சாணக்கியர் ஜீவசித்தியிடம் சொல்லியிருந்தார். “ஒற்றர்கள் கவனமெல்லாம் புதிதாக வருபவர்கள் மீது தான் அதிகமிருக்கும். பழைய ஆட்கள் சந்தேகத்திற்கு இடமான முறையிலோ, யாராவது புகார் தரும் முறையிலோ நடந்து கொள்ளாத வரை அவர்களை அதிகம் ஒற்றர்கள் கண்காணிக்க மாட்டார்கள். அதனால் நாம் செயல்பட ஆரம்பிப்பதற்கு முன்பாக நம் ஆட்களைப் பழைய, பழக்கப்பட்ட ஆட்களாக ஆக்கி விடுவது முக்கியம்”

 

சின்னச் சின்ன விஷயத்தைக் கூட முன்கூட்டியே யோசித்து கணக்கிட்டு தெளிவாகச் செயல்படும் விதத்திலும் சாணக்கியர் அவனை அசத்தினார். அப்படி வணிகனாக வரும் ஒரு இளைஞன் தான் ஜீவசித்திக்கும் சாணக்கியருக்கும் இடையே தகவல்கள் பரிமாற்றிக் கொள்ள உதவுபவனாக இருந்தான்.  அவனிடம் சொல்லும் தகவல்கள் எந்தக் காலத்திலும் வெளியே கசியாது என்று சாணக்கியர் ஜீவசித்தியிடம் முழுநம்பிக்கை தெரிவித்திருந்தார். அவனிடம் ஜீவசித்தி தனநந்தன் புதையல் புதைத்த இடம் குறித்த அனுமானத்தைச் சொல்லி அனுப்பினான்.

 

சாணக்கியர் அவன் அதைக் கண்டுபிடித்து விடுவான் என்ற தன் யூகத்தை மெய்ப்பித்ததாகச் சொல்லிப் பாராட்டி அந்த யாகசாலையின் பூட்டிற்குக் கள்ளச்சாவி ஒன்றைத் தயார் செய்து வைக்கும்படி சொல்லியனுப்பினார்.

 

“இப்போதைக்கு நாம் செயல்படப்போவதில்லை. அதற்கு முன் தயார்ப்படுத்திக் கொள்ளும் வேலையைத் தான் செய்கிறோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் சந்தேகத்தைக் கிளப்பும்படியான எந்த நடவடிக்கையும் வேண்டாம். ஒரு சின்னச் சந்தேகம் வந்தாலும் அதைத் தொடர்ந்து எல்லா விதங்களிலுமே எதிரி எச்சரிக்கை அடைந்து விடும் அபாயம் இருக்கிறது. அது இதை மட்டுமல்லாமல் பாடலிபுத்திரத்தில் நம் மற்ற நடவடிக்கைகளையும் பாதித்து விடலாம்” என்றும் சொல்லியனுப்பினார்.     

 

ஜீவசித்தி அந்தத் தவறைச் செய்யவில்லை. தனநந்தனின் அடுத்த பிறந்த நாளுக்கு யாகசாலையைச் சுத்தம் செய்ய அரண்மனைப் பணியாளர்கள் சாவியுடன் வந்த போது அந்தச் சாவியின் அச்சைக் களிமண்ணில் இரகசியமாக எடுத்து வைத்துக் கொண்டு ஆறுமாதங்கள் கழித்து அதற்குக் கள்ளச் சாவி தயார் செய்து வைத்துக் கொண்டான்.

 

(தொடரும்)

என்.கணேசன் 


இன்னும் சில நாட்களில் புதிய நாவல் அச்சில் வரவுள்ளது.




2 comments:

  1. I think you are growing every year sir. I see the example of consistent efforts in what we know and making that as a powerful one. I salute your dedication in writing. Wish you good luck sir.

    ReplyDelete
  2. சாணக்கியர் மனநிலையையும்... அதே நேரத்தில் ஜீவசித்தி மனநிலையையும் அற்புதமாக எழுத்தில் காட்டியுள்ளீர்கள் ஐயா...

    எந்திரத்தின்மாக காவல் காத்து வரும் காவலாளி... அனைத்தையும் கவனிக்கும் போது ஏற்படும் மனநிலை மாறும் இடம்... அருமை....

    ReplyDelete