ஓரிரு வருடங்களுக்கு ஒரு முறையாவது தனநந்தனுக்கு அந்தக் கொடுங்கனவு வருவதுண்டு. ஒரே கனவல்ல அது. ஆனால் ஒரே முடிவை எட்டும்படியான கனவு அது. அன்று இரவும் அதே போல் கனவு வந்தது.
தனநந்தன் குதிரையில்
வேகமாகச் சென்று கொண்டிருக்கிறான். அவன் இதயம் வெடித்து விடுவது போல் படபடக்கிறது.
அவனுக்கு எங்காவது தங்கி ஓய்வெடுக்க வேண்டும் போல் தோன்றுகிறது என்றாலும் அவனால் ஓய்வு எடுக்க முடியாத நிலை. அவன் எதிரிகளிடமிருந்து
தப்பிச் சென்று கொண்டு இருக்கிறான். அரண்மனையிலிருந்து கிளம்பும் போது அவனால் எடுத்துக்
கொள்ள முடிந்தது ஒரு பெரிய பொற்காசு மூட்டை ஒன்றைத் தான்.
செல்வம் மிக முக்கியம். செல்வம் இருந்தால் நண்பர்கள் உண்டு. சேவகர்கள் உண்டு. உறவுகள் உண்டு, காமக்கிளத்திகள் உண்டு. படைகள் உண்டு. எல்லாம் உண்டு. செல்வமில்லா விட்டால் இவை எதுவுமேயில்லை என்பது மட்டுமல்ல முடிவில். பிள்ளைகள் இல்லை, மனைவி இல்லை, மரியாதை இல்லை என்கிற நிலைமை வந்து விடும். இந்த உண்மையை தனநந்தன் என்றும் மறக்க மாட்டான்.
நல்ல
வேளையாக பொற்காசு மூட்டையையாவது தூக்கிக் கொண்டு வந்தோமே என்று நினைத்தவனாக குதிரையில்
கட்டித் தொங்க விட்டிருந்த மூட்டையைத் தொட்டுப் பார்த்த தனநந்தனுக்குத்
தூக்கிவாரிப் போட்டது. கனத்த மூட்டை இப்போது மிக லேசாக இருந்தது. திகைப்புடன் குதிரையை
நிறுத்தி ஆராய்ந்து பார்க்கிறான். மூட்டையில் ஒரு ஓட்டை. பொற்காசுகள் அந்த ஓட்டை வழியாகச்
சிதறிக் கொண்டே வந்திருக்கின்றது என்பது புரிந்தது. இப்போது அந்த மூட்டையில் நாலைந்து காசுகள் மட்டுமே
மிஞ்சி இருக்கின்றன. திரும்பிப் பார்த்தான் வழியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பொற்காசுகள்
கீழே விழுந்து கிடப்பது தெரிந்தது.
பதறிய மனதுடன் திரும்பிப் போய் அவற்றைப் பொறுக்கிக் கொள்ளலாமா என்று அவன் நினைக்கையில் தூரத்தில் பல குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்டது.
பொற்காசுகளை விட உயிர் முக்கியம் என்று முடிவெடுத்து அவன் குதிரையை முடுக்கி விட்டான்.
ஆனால் பொற்காசுகளை இழந்து தனியே போவது உயிரை இழந்து பிணமாகப் போவது போல் தோன்றியது….
போயிற்று. எல்லாம் போயிற்று…..
திடீரென்று
கனவிலிருந்து மீண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்த தனநந்தன் தன் நெஞ்சைப்
பிடித்துக் கொண்டான். வெடிப்பது போல் துடித்த இதயம் இது வெறும் கனவென்று உணர்ந்து அமைதியடைய
சிறிது சமயம் தேவைப்பட்டது.
அவன் அரசனாக அரியணை
ஏறியது முதல் இது போன்ற கனவு வருகின்றது. சில சமயங்களில் அவன் அரண்மனையை எதிரிகள் படையுடன்
சூழ்ந்து கொள்வார்கள். கஜானா அதிகாரி ஓடிவந்து சொல்வான். “அரசே நம் கஜானாவில் உள்ள
நிதி அனைத்தையும் எதிரிகள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். காவலுக்கு நிற்கும் நம் காவலர்களைக்
கொன்று விட்டார்கள். நான் தங்களிடம் தெரிவிக்க தப்பி ஓடி வந்திருக்கிறேன்....” இப்படிக்
கனவு வரும்.
சில சமயங்களில்
கஜானாவை அவன் பரிசோதனை செய்யப் போகும் போது கஜானா காலியாக இருப்பது போன்ற கனவு வரும்.
சில சமயங்களில் எதிரிகள் மகதத்தை ஆக்கிரமித்து விடுவது போலவும் அவன் உயிருக்குப் பயந்து
தப்பி விடுவது போலவும், போகும் போது ஒரு நிதி மூட்டையை எடுத்துச் செல்வது போலவும்,
அது அவன் வேகமாகச் செல்லும் போது நழுவிக் கீழே விழுந்து விடுவது போலவும் அதை எடுக்க
அவன் தாமதிக்கும் போது எதிரிகள் பின்னாலிருந்து வந்து அவனைச் சூழ்ந்து விடுவது போலவும்
கனவு வரும். கிட்டத்தட்ட எல்லாக் கனவுகளும் அவன் செல்வத்தை இழந்து விடுவது போலத் தான்
முடிவடையும்.
தனநந்தன் தன் பெயரில்
வைத்திருப்பது போலவே வாழ்க்கையிலும் செல்வத்தை நிறையவே வைத்திருந்தான். சேர்த்த செல்வத்தைக்
கணக்கிட்டு மகிழ்ச்சியடையும் அவன் அந்த மகிழ்ச்சியை வேறெந்தச் செயலிலும் உணர்ந்தது
கிடையாது. அதனால் அந்தச் செல்வத்தை இழப்பது அவனால் நினைத்தும் பார்க்க முடியாத துன்பமாகவே
இருந்தது. சில கனவுகள் ராஜ்ஜியத்தையும் சேர்ந்து அவன் இழப்பது போல் முடிவடையும். அரசன்
என்ற அகங்காரத்துடன் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் வாழும் அவனுக்கு அதுவும் கற்பனையிலும்
ஜீரணிக்க முடியாத பேரவலமாகத் தோன்றியது.
அவன் அரசனான சிறிது
காலத்தில் ஒரு சமணத்துறவி பாடலிபுத்திரத்துக்கு வந்திருந்தார். அவர் மகாஞானி என்றும்
முக்காலமும் அறிந்தவர் என்றும் பலரும் சொன்னார்கள். ஞானிகளுக்கும் ஞானத்திற்கும் தனநந்தன்
மரியாதை தருபவனல்ல. ஞானிகளிடம் பேசினாலும்,
யாராவது அவனிடம் ஞானத்தைப் பற்றிப் பேசினாலும் பெரும் சலிப்பை உணர்பவன் அவன். ஆனால்
அந்த சமணத்துறவி மனிதர்களின் கனவுகளுக்குப் பின்னால் இருக்கும் சூட்சுமங்களையும் உணர்ந்து
சொல்ல வல்லவர் என்று அப்போதைய பிரதம அமைச்சர் ஷக்தார் அவனிடம் பேச்சுவாக்கில் சொல்ல
உடனே தனநந்தன் அவரை அரண்மனைக்கு வரவழைத்தான். நேரடியாக அந்தக் கனவைச் சொல்லி அவரிடம்
பலன் கேட்க அவன் விரும்பாமல் தொடர்ந்து ஒரே முடிவுடன் முடியும் கனவுகளுக்கு என்ன பலன்
என்று கேட்டான்.
அந்தச் சமணத் துறவி
“ஒரே செய்தியைத் திரும்பத் திரும்ப கனவு உனக்குத் தெரிவிக்குமானால் அது உன் எதிர்காலத்தில்
நிகழக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். நல்லதாக இருந்தால் உன்னை உற்சாகப் படுத்தவும்,
தீயதாக இருந்தால் உன்னை எச்சரிக்கவும் அந்தக் கனவு வருகிறது என்று அர்த்தம். அப்படிக்
கெட்டதாக இருக்குமானால் அலட்சியப்படுத்தாமல் உன்னைக் காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை
முன்கூட்டியே எடுத்துக் கொள்வது நல்லது” என்று சொன்னார்.
அவர் சொன்னது அவனுக்கு
மேலும் கிலியை அதிகப்படுத்தியது. கஜானாவில் எத்தனை செல்வமிருந்தாலும் கஜானாவே காலியாகும்
நிலைமை உருவானால் அல்லது ராஜ்ஜியத்தையே ஒருவேளை அவன் துறக்க வேண்டிய நிலை வந்தால் என்ன
செய்வது என்ற கவலை அவன் மனதை அரித்தது. அதனால் அவன் தன்னைக் காத்துக் கொள்ளும் நடவடிக்கையாக
யாரும் சந்தேகப்படாத வண்ணம் கங்கைக் கரையில் ஓரிடத்தில் பெரும் நிதியை ஒளித்து வைக்கத்
தீர்மானித்தான்,. கனவின் படியே நிகழ்வுகள் நடந்தாலும் ஆபத்துக் காலத்தில் அந்த நிதி
அவனுக்கு உதவுவதாக இருக்கும் என்று கணக்குப் போட்டான். நிதி அங்கிருக்கிறது என்பது
அவனைத் தவிர யாருக்கும் தெரியக்கூடாது என்றும் நினைத்தான். அதனால் கங்கைக் கரையில்
நிதியைப் புதைத்து அதை அறிந்த பணியாட்களையும், சாரதியையும் கொல்லவும் செய்தான்.
அதன் பின்னும் அந்தக்
கனவு அவனை விட்டபாடில்லை. தற்செயலாக எதற்காவது யாராவது அங்கு குழி தோண்டி புதையலைக்
கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் வர ஆரம்பித்தது. தற்செயலாகவும் கூட
யாரும் அவ்வளவு ஆழமாக மண்ணைத் தோண்டிப் பார்க்க வாய்ப்பே இல்லை என்று அறிவு சொன்னாலும்
பயம் அகலவில்லை. கூடவே ஒரு வேளை ராஜ்ஜியத்தை இழந்தால் மீண்டும் அனைத்தும் மீட்க பெரும்
நிதி தேவைப்படும் என்றும், அங்கே புதைத்திருக்கும் செல்வம் போதாது என்றும் தோன்ற ஆரம்பித்தது.
சில வருடங்கள் கழித்து மீண்டும் அதே அளவு செல்வத்தைச்
சேர்த்து அதையும் அங்கே புதைத்து வைத்து அதற்கு மேல் ஏதாவது சிறு கோயில் அல்லது யாகசாலை
கட்டி வைத்தால் நல்லது என்று தோன்ற ஆரம்பித்தது.
கோயில் என்றால்
மக்கள் கூட்டம் அங்கே வந்து கொண்டிருக்கும். அதனால் அவன் மட்டும் பயன்படுத்தக் கூடிய
யாகசாலை ஒன்றை அதன் மீது கட்டி வைத்தால் நல்லது என்று தனநந்தன் கணக்கிட்டு அப்படியே
செய்தான். அஸ்திவாரப் பணி முடிந்தவுடன் அந்தக் கட்டிடப் பணியாளர்களையும், உணவில் விஷம்
வைத்துக் கொன்று பாம்பு கடித்து அவர்கள் இறந்திருக்கிறார்கள் என்ற கருத்தைப் பரப்பி
யாகசாலையைக் கட்டி முடித்தான். கட்டியது பயன்படுத்தப்படாமல் இருந்தால் பலரும் சந்தேகப்படும்
வாய்ப்பிருக்கிறது என்பதால் வருடம் தோறும் தன் பிறந்த நாளில் அந்த யாகசாலையில் வேள்விகள்
நடத்தினான். மற்ற நாட்களில் அதைப்பூட்டியே வைத்தான். அவனைத் தவிர அந்தப் புதையல் ரகசியத்தை
வேறு யாரும் அறிய மாட்டார்கள் என்பதால் ஓரளவு நிம்மதியும் பெற்றான்.
யாகசாலையில் பல
ஹோம குண்டங்கள் இருந்தாலும் மத்தியில் இருக்கும் பெரிய ஹோமகுண்டத்தின் அடியில் தான்
புதையல் இருக்கிறது. வருடாவருடம் யாகசாலையின் மத்தியில் இருக்கும் பெரிய ஹோம குண்டத்தில்
வேள்விகள் நடக்க அங்கு அமர்ந்திருக்கையில் அவன் அந்தப் புதையலை உணர்வான். பிறந்த நாளன்று
புதையலின் மேலே அமர்ந்திருப்பது பெரும் ஐஸ்வரியமாகவும், அதிர்ஷ்டமாகவும் அவனுக்குத்
தோன்றும்.
இன்றும் அந்தப்
பயங்கரமான கனவு வந்து விழித்துக் கொண்ட தனநந்தன் ஆரம்ப நாட்களைப் போல் மனநிம்மதி இழந்து
விடாமல் ’ஒருவேளை கனவின்படியே ராஜ்ஜியத்தையும், கஜானாவையும் இழந்தாலும் இழந்ததை மீண்டும்
பெற முடிந்த அளவு ஏராளமான நிதி கங்கைக் கரையில் புதைந்து இருக்கிறது.’ என்று எண்ணி
அமைதி அடைந்தான். முதல் முறை புதைத்த போதே அதை இரகசியமாய் பார்த்து விட்ட ஜீவன் ஒன்று
உள்ளது என்று தெரியாததால் அவனால் மறுபடி நிம்மதியாக உறங்க முடிந்தது.
(தொடரும்)
என்.கணேசன்
புதிய நாவல் சதுரங்கம் வெளியாகி விட்டது. விவரங்களுக்கு-
https://nganeshanbooks.blogspot.com/2024/03/blog-post.html
தனநந்தன் தனக்கே கொடுக்கப்பட்ட எச்சரிக்கை..உணர்ந்து.... தன்னை திருத்திக் கொள்ளவில்லை.... அதனால், அவனை அழிக்க தேவையான விசயங்கள் உண்டாக ஆரம்பித்து விட்டது....
ReplyDelete