பரசுராமன் சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “நீங்க கேட்கறது எனக்கும் சரியாய் தான் படுது. ஆனால் நான் உங்க கிட்ட இது வரைக்கும் ஆவிகளைப் பத்திச் சொன்னது அனுபவ பூர்வமாய் நான் அறிஞ்ச உண்மை.. அது மட்டுமில்லை, உங்க பேத்தியோட ஆவி என் உடம்பை விட்டு விலகின பிறகு நான் உணர்ந்தது ஒரு பேரமைதியைத் தான். அது தான் அந்த ஆவி கடைசியாய் உணர்ந்த உணர்வாய் இருந்திருக்கணும். அதனால உங்க பேத்தியோட ஆவி ரொம்ப முக்கியம்னு நினைச்சதை உங்க கிட்ட தெரிவிச்சுட்டு பூரண திருப்தியோட போன மாதிரி தான் தோணுது. ஆருடப்படி கூட அந்த நேரம் நிறைவான நேரம் தான். உங்க பேத்தி உங்க கிட்ட சொன்ன கடைசி வார்த்தைகளும் அந்த வகைல தான் இருந்திருக்கு.”
சேதுமாதவன் யோசித்து விட்டுக் குழப்பத்தோடு
கேட்டார். “அப்படின்னா, அவள் மரணம் கொலையில்லைன்னு
அர்த்தமா?”
பரசுராமன் சொன்னார். “நடந்திருக்கறதை
எல்லாம் பார்க்கறப்ப உங்க பேத்தியும், அந்த டாக்டரும்
கொல்லப்பட்டு இருக்காங்கங்கறது உறுதி தான். ஆனால் அதைப்பத்தி
சொல்றது அவசியமில்லைன்னு உங்க பேத்தியோட ஆவி ஏன் முடிவு செய்துச்சுன்னு தான் புரியல. அதை விட
முக்கியமாய் ரகுராமன்கிற யோகியை நீங்க சந்திக்கறது ஏன் முக்கியம்னு நினைச்சுதுன்னும்
புரியல...”
சேதுமாதவனும் குழப்பத்துடன் யோசித்தார். இது வரை
அவர் ரகுராமன் என்ற பெயருடைய எந்த யோகியையும் கேள்விப்பட்டது கூட கிடையாது. ”உங்களுக்கு
அவள் சொன்ன யோகியைத் தெரியுமா?” என்று பரசுராமனை அவர் கேட்டார்.
பரசுராமனும் யோசித்து விட்டுச் சொன்னார் “இல்லை. அவர் தன்னை
வெளிப்படுத்திக்க விரும்பாத யோகியாய் இருக்கலாம். உண்மையான
யோகி விளம்பரம் செய்ய மாட்டார். அவருக்கு மத்தவங்களோட வணக்கமோ, அங்கீகாரமோ, புகழோ தேவையில்லை. சொல்லப்
போனா அவங்களுக்கு அது தொந்தரவாய் கூட இருக்கும். அதனாலேயே
அவங்க இருக்கற இடம் தான் தெரியாம தான் அதிகம் இருப்பாங்க”
சேதுமாதவன் அவர் சொல்வதை ஆமோதித்துத்
தலையசைத்தார். “நீங்க சொல்றது சரி தான். ஆனா அப்படிப்பட்ட
யோகியை சைத்ரா எங்கே, எப்படி சந்திச்சா, எப்ப சந்திச்சான்னு
தெரியலயே! யோகாலயத்துல போய்ச் சேர்ந்த பிறகு வெளியே எங்கேயும் அவள்
போயிருக்க வழியில்லைங்கறதால, அந்த யோகி யோகாலயத்துக்குள்ளே இருக்காரோ? இல்லை அவள்
கொலைக்கும், அந்த யோகிக்கும் கூட ஏதாவது சம்பந்தமிருக்குமோ?”
பரசுராமனாலும் அந்தக் கேள்விகளுக்கான
பதில்களைச் சொல்ல முடியவில்லை.
ஷ்ரவனிடம் பரசுராமனைப் பற்றி ராகவன் சொன்ன போது அவன் மனதில்
முதலில் எழுந்தது சந்தேகம் தான். ஏனென்றால் அவன் அவர் போன்ற நிறைய ஆட்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். சில சில்லறை ஏமாற்று வித்தைகளை வைத்துக் கொண்டு பலரையும்
நம்ப வைத்துச் சம்பாதிக்கிறவர்கள் அவர்கள். முன்கூட்டியே
சம்பந்தப்பட்ட ஆட்களின் விவரங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு, அதற்கேற்றபடி
ஏதாவது சொல்லி அதை ஆவி சொன்னதாகச் சொல்வார்கள். சில சமயங்களில்
மாயா ஜால விளைவுகளைக் காட்ட ரகசியமாய் கூட்டாளிகளை அவர்கள் வைத்துக் கொள்வதும் உண்டு. அதே போல்
செய்வினை, சூனியம் வைத்தல் போன்ற விஷயங்களிலும் பல ஏமாற்று வேலைகள்
நடப்பதுண்டு. முதலிலேயே சில தகடுகளையோ, பயமுறுத்தும்
பொருட்களையோ வீட்டருகில் எங்காவது புதைத்திருந்து விட்டு பின், ஆட்கள்
முன்னால் தோண்டி எடுத்துக் காட்டி திகிலை ஏற்படுத்துவார்கள். செய்வினை, ஏவல் ஆகியவற்றை
எடுத்து விலக்கி விட்டேன், இனி எந்தப் பிரச்சினையும் வராது என்று சொல்லி அந்த ஆட்களிடமிருந்து
ஒரு பெரிய தொகையை வசூலித்து விடுவதுண்டு.
ஆனால் முதல்வரின் தாய்மாமனின் மகன்
பரசுராமனுக்கு அப்படி சம்பாதிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. ஷ்ரவன் பரசுராமனைப் பற்றி இணையத்தில்
இருக்கும் தகவல்களைச் சேகரித்தான்.
பரசுராமன் இவ்வளவு பிரபலமாயிருப்பார் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
அவரைக் குறித்து ஏராளமான தகவல்கள் இருந்தன. அவன்
படித்த எல்லாத் தகவல்களும் மிக மிக சுவாரசியமாய் இருந்தன. பரசுராமனுக்கு
பல நாடுகளில் பக்தர்கள் இருந்தார்கள்.
அவர்கள் அவரை யோகியென்றே சொன்னார்கள். சுவாமிஜி
என்று அழைத்தார்கள். துர்க்கையின் அம்சம் உள்ளவர் என்றார்கள்.
அவர் செய்து காட்டிய அற்புதங்களையும், அவருடைய
மாந்திரீக சக்திகளைப் பற்றியும் பலரும் சிலாகித்துச் சொல்லியிருந்தார்கள். அவற்றில் அதிகம் இறந்தவர்களின் ஆவிகள் சம்பந்தப்பட்டதாகத் தானிருந்தன.
ஆனால் பெரும்பாலான இடங்களில்
அவர் ஊடகமாக வேறு ஆட்களைத் தான் பயன்படுத்தியிருந்தார். சேதுமாதவன்
வீட்டில் செய்தது போல் அவரே ஊடகமாக இருந்தது மிக மிகக் குறைவாகத் தானிருந்தது. பரசுராமன் தமிழக முதல்வரின்
நெருங்கிய உறவினர் என்ற தகவல் இணையத்தில் எங்குமே இருக்கவில்லை. பரசுராமனும், முதல்வரும் அப்படியே இருக்கும்படி கவனமாக
இருந்திருக்கிறார்கள்
என்பது அவனுக்குப் புரிந்தது.
ஷ்ரவன் சேதுமாதவனிடமும் போனில் பேசினான். சேதுமாதவன் பரசுராமன் வந்ததிலிருந்து
அவர் செல்லும் வரை நடந்தவற்றை விரிவாகச் சொன்ன விஷயங்கள் அவனுக்கு அமானுஷ்யமாய்த் தோன்றின. சைத்ராவின் ஆவி பரசுராமன் மூலமாகப் பேசியது
அவளுடைய குரலில் தான் என்று அவர் சொன்ன போது அவன் மேலும் ஆச்சரியப்பட்டான். இந்த விஞ்ஞான யுகத்தில் இது போல் நடப்பது பிரமிப்பாகத்தான்
இருந்தது. இதற்கு என்ன அறிவியல் காரணம்
இருக்க முடியும் என்று யோசித்தான். எதிர்பார்த்த
எதையும் சொல்லாமல், சைத்ராவின் ஆவி ஒரு
யோகியைப் பற்றித் தெரிவித்தது அவனுக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது.
சிவசங்கரன் சொன்ன யோகியும், சைத்ராவின் ஆவி சொல்லும் யோகியும் ஒரே நபரா என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனாலும் எதிர்பாராத விதமாக சிவசங்கரன் வீட்டிலும், சேதுமாதவன் வீட்டிலும், ஒரே நாளில் வேறொரு யோகியைப் பற்றிக் கேள்விப்பட நேர்ந்தது தற்செயல் தானென்று அவனுக்குத் தோன்றவில்லை. சிவசங்கரன் வீட்டிலும் அவன் பிரம்மானந்தாவைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கையில், யோகியைப் பற்றிய பேச்சு, எதிர்பாராமல் தான் வந்தது. சேதுமாதவன் வீட்டிலும் அவர் கேட்காமலேயே சைத்ராவின் ஆவி ரகுராமன் என்ற யோகியைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. சிவசங்கரனுக்கு அந்த யோகியின் பெயர் தெரிந்திருக்கா விட்டாலும், இரண்டு இடங்களிலும் கேள்விப்பட்டது ஒரே நபரையாகத் தான் இருக்க வேண்டும் என்று அவனுடைய உள்ளுணர்வு சொன்னது.
சேதுமாதவன் மூலமாக அறிந்த தகவல்களும், இணையத்தில் தேடிப்படித்த
தகவல்களும் ஷ்ரவனுக்கு பரசுராமனை நேரில் சந்திக்க பெரும் ஆவலை ஏற்படுத்தி விட்டன.
அவன் ராகவனிடம் போன் செய்து பரசுராமனை அவன் சந்திக்க விரும்புவதாகச்
சொன்னான்.
“சி எம் கிட்ட பேசிட்டு உன்னைக் கூப்டறேன்” என்று சொன்ன
ராகவன் சிறிது நேரத்தில் மறுபடி அழைத்துச் சொன்னார். “அவரை சரியாய்
மதியம் 2.12க்குப் போய்ப் பார்க்கணுமாம். அவரோட அட்ரஸை உனக்கு வாட்சப்ல அனுப்பியிருக்கேன்”
அவர் சந்திக்கச் சொன்ன நேரம் ஷ்ரவனுக்கு வித்தியாசமாய் இருந்தது. அதை அவன்
ராகவனிடம் வெளிப்படையாகவே தெரிவித்தான்.
ராகவன் சிரித்துக் கொண்டே சொன்னார். “சி எம்
சொல்றத பார்த்தா அவர் சொல்ற நேரம் மட்டுமல்ல, ஆளே வித்தியாசமானவர்
மாதிரி தான் தெரியிது. சில சமயம் அவர் சொன்ன நேரத்துல போகாட்டி அவர் திருப்பி அனுப்பிச்சுடுவாராம்.”
ஷ்ரவன் பரசுராமன் வீட்டருகே மதியம் 2.10 மணிக்கே சென்று விட்டாலும்
இரண்டு நிமிடம் வெளியே நின்று விட்டு, சரியாக 2.12க்கு வீட்டின்
அழைப்பு மணியை அழுத்தினான்.
கதவைத் திறந்த பரசுராமனின் தோற்றத்தில் அவருக்குள்ள சிறப்பு
சக்திகளின் அறிகுறி எதுவும் இருக்கவில்லை.
தலையில் ஒரு காவித் துண்டைக் கட்டியிருந்ததும், நெற்றியில் தடிமனாய் குங்கும நாமத்தை இட்டிருந்ததையும் தவிர அவர் தோற்றத்தில்
வித்தியாசமாய் எதுவுமில்லை. நீண்ட நாள் அறிந்த நண்பர் போல் அவனை
உற்சாகமாய் வரவேற்றார். ”வா ஷ்ரவன். எப்படி
இருக்கே? என்னைப் பத்தின தகவல்கள் எல்லாம் தெரிஞ்சுகிட்டு வந்திருக்கே
போலருக்கு”
ஷ்ரவன் திகைத்தாலும் சுதாரித்துக் கொண்டு புன்னகையுடன் சொன்னான். “அது என் உத்தியோக புத்தி
சுவாமிஜி. எங்கே போறதுன்னாலும் சந்திக்கப் போகிற ஆளைப் பத்தித்
தெரிஞ்சுகிட்டு போகிறது ஒரு பழக்கமாய் மாறிடுச்சு.”
பரசுராமன் சிரித்துக் கொண்டே சொன்னார். “அது நல்லது தான்.
சரி நான் உன்னைப் பத்தி உனக்கே தெரியாத ஒரு புது தகவல் சொல்லட்டுமா?”
(தொடரும்)
என்.கணேசன்
பரசுராமன் கதாபாத்திரம் இத்தோடு சென்று விடாமல்....யோகாலயத்தை இழுத்து மூடும் வரை வந்தால் சுவாரஸ்யமாக இருக்கும்....
ReplyDeleteபிரம்மானந்தா மூளையில் பிரச்சினை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் போது..... அவர்களுடைய சீடர்கள் பகவான் ரமணர் மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோரை ஒப்பிட்டு முட்டுக்கொடுத்துக் கொண்டுள்ளனர்.... இதனை பார்க்கும் போது ஸ்ரீகாந்திடம் யோகாலயத்து சீடர்கள் பேசியது தான் நியாபகம் வருகிறது 😂😂😂.....
ReplyDelete