சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 11, 2024

சாணக்கியன் 91

 

னநந்தனின் செல்வம் நம்மிடமும் வந்து விடலாம் என்று சொன்ன சாணக்கியர் அது எப்படி என்பது குறித்து சந்திரகுப்தனிடம் உடனடியாக எதுவும் சொல்லவில்லை. சந்திரகுப்தனும் கேட்கவில்லை. சொல்ல வேண்டிய நேரத்தில் அவர் சொல்வார். முன்கூட்டியே தெரிந்து கொண்டு எதுவும் ஆகப் போவதில்லை.

 

சாணக்கியர் தொடர்ந்து சொன்னார். “என்ன தான் ராக்ஷசரும், மற்ற அமைச்சர்களும் திறமையாக நிர்வாகம் செய்தாலும் ஒரு பரந்த தேசத்தின் நிர்வாகம் என்கிற போது சில பலவீனங்களும், குறைபாடுகளும் தவிர்க்க முடியாதவை தான். ஏனென்றால் அவர்கள் அதிகாரிகளை வைத்தே அனைத்தையும் நிர்வகிக்க வேண்டியிருக்கிறது. அதிகாரிகளும் மனிதர்கள் தானே. தனிமனிதர்களின் பலவீனங்கள் அவர்களுக்கும் இருக்குமல்லவா? அதனால் கண்டுபிடிக்க முடியாத தவறுகளை அவர்கள் செய்யத் தயங்குவது கிடையாது.  தனநந்தன் செல்வத்திற்கு அடுத்தபடியாக மது, பெண்கள், நடனம், கேளிக்கைகளில் ஆர்வம் கொண்டு இருப்பதால் அந்த விஷயங்களில் அவனுக்கு உதவி செய்து தங்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளும் சிலர் இருக்கிறார்கள். அவர்களது செல்வாக்கை ராக்ஷசராலும் குறைக்க முடியவில்லை. அது போன்ற ஆட்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். தனநந்தன் நியாய அநியாயங்களைப் பற்றிக் கவலைப்படுபவன் அல்ல. அவன் நிறைய பேர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறான். அவர்கள் அவனை எதிர்த்து எதையும் செய்ய முடியாதவர்களாய் பொறுத்திருக்கிறார்கள் என்றாலும்  நம் போன்ற ஆட்களின் உதவி கிடைக்குமானால் கண்டிப்பாக ஆர்வத்துடன் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.”

 

சந்திரகுப்தன் கேட்டான். “அந்தத் தகவல்களைப் பெறுவது தான் நாம் அடுத்து செய்ய வேண்டியதா?”

 

சாணக்கியர் சொன்னார். “அதெல்லாம் நான் ஏற்கெனவே செய்தாகி விட்டது. கடந்த ஆறு வருடங்களாக நிறைய தகவல்கள் சேர்த்து வைத்திருக்கிறேன்.  பாடலிபுத்திரத்தில் அரண்மனை வட்டாரத்தில் ஓரளவு செல்வாக்குள்ள, அனைவர் பற்றிய தகவல்களும் தெரிந்து வைத்திருக்கும் ஒருவனை நட்பாக்கிக் கொண்டிருக்கிறேன். அவன் பெயர் ஜீவசித்தி…”

 

சந்திரகுப்தன் ஆச்சாரியரைப் பெருமிதத்துடன் பார்த்தான். யவனர்களைக் கையாள்கையிலேயே பக்கவாட்டில் இந்த வேலைகளையும் ஆச்சாரியர் செய்து கொண்டிருந்திருக்கிறார்.

 

சாணக்கியர் சொன்னார். “சந்திரகுப்தா. நமக்கு நாளை பழம் வேண்டும் என்றால் இன்று மரம் நட்டுப் பயனில்லை.  சில வருடங்களுக்கு முன்பே நாம் மரத்தை நட்டு வைத்திருக்க வேண்டும். மகதம் என்கிற இலக்கை இப்போது நம் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறோமே ஒழிய என்றைக்கோ தீர்மானித்த விஷயம் அது அல்லவா. அதனால் தக்க காலத்தில் அதற்கான வேலைகளையும் மற்ற வேலைகளோடு செய்ய ஆரம்பித்தாகி விட்டது.”

 

ஒரு சாதாரண அறிவுபூர்வமான விஷயத்தைப் பற்றிச் சொல்வது போல அவர் சொன்னாரே ஒழிய தன் முன்கூட்டிச் சிந்திக்கும்  அறிவைப் பறை சாற்றும் பாவனை அதில் சிறிதும் இருக்கவில்லை. இவருடன் இருந்து எத்தனையோ அவன் கற்றிருக்கிறான் என்றாலும் இவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு முடிவிருக்காது என்று சந்திரகுப்தனுக்குத் தோன்றியது.

 

இருவருமாகச் சேர்ந்து யார் யாருக்கு என்னென்ன வேலைகள் தருவது, யார் யாரை எப்படி எப்படி அணுகுவது என்று கலந்தாலோசித்தார்கள். பல விஷயங்களில் அவர்கள் சிந்தனைகள், முடிவுகள் ஒரே போலிருந்தன. சில விஷயங்களில் செயல்முறை குறித்த சிந்தனைகளில் வேறுபட்டார்கள். பெரும்பாலும் அவர் சொன்னது மேலாக இருந்தது என்றாலும் ஓரிரு விஷயங்களில் அவன் யோசனை சிறப்பாக இருந்தது. அதை ஒத்துக் கொண்டு அப்படியே செய்யலாம் என்று முடிவெடுப்பதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை.    

 

முகஸ்துதிக்கு மயங்காதவர்கள் மிகவும் குறைவு. அதிலும் பாராட்டுக்குத் தகுதியில்லாதவர்கள் முகஸ்துதிக்கு ஏங்குவது அதிகம். அந்த ரகத்தில் சேர்ந்தவன் தான் தனநந்தனும்.  அதனைப் பயன்படுத்திக் கொண்டு அவனை வானளவு உயர்த்திப் பாராட்டிப் பேசி, பரிசுகள் பெற்றுப் போகிறவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். மக்கள் பிரச்னைகள், கோரிக்கைகளோடு அவனைக் காண வந்தால் அவன் கசப்பான கஷாயத்தை விழுங்கியவன் போல் பார்ப்பான். அதற்கு என்ன பதில் சொல்வது என்று ராக்ஷசரைப் பார்ப்பான். அவர் தான் அதற்குப் பதிலோ, தீர்வோ, முடிவோ சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட மக்கள் சொல்வதைச் சொல்லி விட்டு ராக்ஷசர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும். அதைச் செய்யாமல் வந்தவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு பேசினால் குறுக்கிட்டு அவர்களை தனநந்தன் விரட்டி விடுவான். ஆனால் பாராட்டிப் பேசுபவர்கள் சுதந்திரமாக நேரம் போவது தெரியாமல் பேசலாம். அந்தப் பேச்சை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பான்.

 

அன்றும் அப்படி முகஸ்துதி செய்யும் ஒரு பண்டிதர் அரசவைக்கு வந்திருந்தார். காசியைச் சேர்ந்த அந்தப் பண்டிதர் பெயர் சதுர்வேதி. அவர் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறையாவது ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொண்டு வந்து சலிப்பில்லாமல் பாராட்டி விட்டு தனநந்தனிடம் பரிசுகள் வாங்கிக் கொண்டு போவார்.

 

அவரை அரசவையில் பார்த்தவுடனேயே ராக்ஷசர் இன்றைக்கு முக்கிய வேலைகள், ஆலோசனைகள் எதுவும் அரசவையில் செய்யும் வாய்ப்பு இல்லை என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார். தனநந்தன் சதுர்வேதியைப் பார்த்து மகிழ்ந்தவனாகக் கேட்டான். “என்ன பண்டிதரே. நீண்ட காலமாக உங்களை இங்கே பார்க்க முடியவில்லை?”

 

மிகவும் பணிவுடன் குனிந்து வணங்கிய சதுர்வேதிவடக்கே யாத்திரை சென்றிருந்தேன் மன்னா. வைஷ்ணோ தேவியை வணங்கி விட்டு வரும் வழியில் மற்ற புண்ணியத் தலங்களையும் தரிசித்து விட்டு அத்தனை திருத்தலங்களின் தீர்த்தப் பிரசாதங்களைத் தந்து தங்கள் தரிசனத்தையும் பெற்றுச் செல்லலாம் என்று வந்தேன்.”

 

தனநந்தன் முகம் மலர்ந்தான். கடவுள்களைத் தரிசித்து வந்த மனிதர் அவனையும் தரிசிக்க வந்ததாய்ச் சொல்கிறாரே என்று பூரித்து அவரிடமிருந்து தீர்த்தப் பிரசாதங்களை வாங்கிக் கொண்டான்.

 

சதுர்வேதி வந்த வேலையை ஆரம்பித்தார். “வைஷ்ணோ தேவி வரை சென்றதால் எத்தனையோ தேசங்களை நான் கடந்து சென்று வர நேரிட்டது அரசே. நான் முகஸ்துதிக்காகச் சொல்லவில்லை. மகதத்தின் சுபிட்சம் நான் சென்ற எந்த தேசத்திலும் இல்லை. தங்கள் தந்தை மகாபத்ம நந்தரின் காலத்தில் ஆரம்பித்த வளர்ச்சியும் சுபிட்சமும், தங்கள் சகோதரர்கள் காலத்தில் மேலும் வளர்ந்து தங்களுடைய ஆட்சி காலத்தில் பரிபூரணம் அடைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். மகதமல்லாத பிரதேசங்களில் பல இடங்களில் பஞ்சமும், பட்டினியும் பார்த்தேன். நலிவடைந்த நிலையில் அங்கு கிராமங்களும், நகரங்களும் இருக்கின்றன. அங்குள்ள மக்களிடம் நான் வெளிப்படையாகவே சொன்னேன். “மகத நாட்டில் இல்லாதது தான் உங்கள் துரதிர்ஷ்டம் என்று.”. இங்குள்ள வளங்களை நான் எடுத்துச் சொன்ன போது பூலோகத்தில் இப்படி ஒரு சொர்க்கம் இருக்கிறதா என்று அவர்கள் வியந்தார்கள். மகதத்தை மன்னர் தனநந்தர் ஆண்டுகொண்டிருக்கையிலேயே ஒரு முறை அங்கு சென்று வாருங்கள் என்று அவர்களிடம் பெருமையாகச் சொன்னேன்....”

 

சதுர்வேதி பேசிக் கொண்டே போனார். தனநந்தன் காதுகளைத் தவிர மற்ற காதுகள் எல்லாம் புளித்துப் போகும் வரை அவனுடைய புகழைப் பாடினார். அவன் அழகு, அறிவு, ரசனை, ஆட்சி என்று வரிசையாகப் புகழ்ந்து கொண்டே வந்த அவர் கடைசியில் சொன்னார். “மன்னா. இத்தனை எதற்கு. நீங்கள் ஆளும் மகதத்தில் இருந்து சென்ற சாதாரண மனிதர்கள் கூட சரித்திரம் படைத்து விடுகிறார்கள் என்பது வரலாற்று உண்மையாக இன்று இருக்கிறது. இங்கிருந்து போன ஒரு அந்தணரின் வழிகாட்டலில் அலெக்ஸாண்டர் விட்டுப் போன யவனப் படைகளே தலைதெறிக்க ஓடி விட்டிருக்கின்றன. நான் சென்ற ஒரு ஊரில் அவர் பற்றிப் பெருமையாக ஒருவர் பேசினார். நான் சொன்னேன். “தனநந்தரின் ஆட்சியில் அங்குள்ள ஒவ்வொருவரும் சரித்திரம் படைக்கும் சாமர்த்தியம் பெற்று விடுகிறார்கள்என்று சொன்ன போது அவர் பிரமித்தார். நான் உங்களைப் புகழ்வதற்காகச் சொல்லவில்லை மன்னா. இங்கிருந்து சென்று வேறொரு இடத்தில் ஆசிரியர் பணியாற்றும் ஒருவர் வாஹிக் பிரதேசத்தை யவனர் பிடியிலிருந்து மீட்டு தன் மாணவன் கையில் ஒப்படைக்கும் அளவு உயர்ந்திருக்கிறார் என்றால் அந்த மகதவாசியின் பெருமையை என்ன சொல்ல?”

 

ராக்ஷசர் சதுர்வேதி முழுவிவரம் தெரியாமல்  இந்த விஷயத்திற்குள் நுழைவதை உணர்ந்தார். ராக்ஷசர் தானறிந்த சமீபத்து வரலாற்று நிகழ்வுகளை இதுவரை தனநந்தனிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. அதற்கு தனநந்தனிடம் நேரமும், ஆர்வமும் இருக்கவில்லை என்பது தான் காரணம். நடனப் பெண்களின் நடனத்தையும், இசையையும்  ரசிக்குமளவு நேரமிருக்கும் தனநந்தன் மகதம் அல்லாத வேறு பிரதேசங்களில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமில்லாதவனாக இருந்தான். மெள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு அவனிடம் எப்படியாவது சொல்ல வேண்டும் என்று ராக்ஷசர் நினைத்துக் கொண்டிருந்தார். அவர் வேலையை சதுர்வேதி எளிதாக்குகிறார்....

 

தனநந்தனுக்கு இப்போதும் அந்த ஆசிரியர் யார் என்பது உடனே புலனாகவில்லை. யவனர்களை விரட்டி வாஹிக் பிரதேசத்தை ஒரு மகதவாசி வசப்படுத்தி விட்டார் என்ற செய்தி வியப்பை அளிக்கவே அது யார் என்று அறிந்து கொள்ள விரும்பினான்.

 

(தொடரும்)

என்.கணேசன்    



 
     

1 comment:

  1. சதுர்வேதி பிழைக்க தெரிந்த நபர் ...தனநந்தனிடமே பரிசு வாங்க தெரிந்திருக்கிறதே...

    ReplyDelete