பொறுப்பாளர் தடுமாறினாலும், கேட்ட கேள்விக்குப் பதில்
சொல்லாமலிருக்க வழியில்லை என்பதால் சொன்னார். முரளிதரன் அவர்
சொன்னதைக் குறித்துக் கொண்டார்.
டாக்டர் வாசுதேவனின் ரிப்போர்ட்களைப் போலியாகத் தயாரிக்கையில்
இந்தக் குறிப்புகளுக்கு ஏற்றது போல் கச்சிதமாக மாற்றித் தரவில்லை என்பது இப்போது தான்
பொறுப்பாளருக்கு உறைத்தது.
கோவிட்டுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும் என்று அவசரமாக யாருடைய ரிப்போர்டிலோ
சில சில்லறை மாற்றங்கள் மட்டும் செய்து தந்தது சரியல்ல என்பது புரிந்ததும் பொறுப்பாளருக்கு
குப்பென்று வியர்த்தது.
முரளிதரன் அவருடைய தடுமாற்றத்தையும், பயத்தையும் கவனித்தது போல் தெரியவில்லை. கோவிட் தடுப்பூசிகள் இதுவரை எத்தனை போட்டு இருக்கிறீர்கள். அதில் முதல் தடுப்பூசி எத்தனை, இரண்டாவது தடுப்பூசி எத்தனை என்பது போன்ற பொதுவான கேள்விகளை முரளிதரன் அவரிடம் கேட்க ஆரம்பித்தார்.
பொறுப்பாளர் அதற்கான பதில்களைச் சொல்லிக் கொண்டே வந்த போதும்
அவர் மனம் தங்கள் பழைய தவறிலேயே தடுமாறியபடி இருந்தது. சற்று முன் சொன்னதற்கும்,
போலியாக உருவாக்கிக் கொடுத்த ரிக்கார்டுகளுக்கும் இடையே ஏதாவது பெரிய
முரண்பாடு இருந்திருக்குமோ?
முரளிதரன் சீக்கிரமே தனது கேள்விகளை முடித்துக் கொண்டு லேப்டாப்பை
மூடித் தன் லேப்டாப் பையில் வைத்தபடி எழுந்தார். நன்றி தெரிவித்து விட்டு அவர் வெளியேறிய பின்
பொறுப்பாளர் அவசர அவசரமாக சதீஷ் அறைக்கு விரைந்தார்.
அவர் முகத்தில் தெரிந்த கவலையைப் பார்த்து திகைப்புடன் சதீஷ்
கேட்டான். “என்ன
சார்?”
தன் கவலைக்கான காரணத்தை பொறுப்பாளர் சதீஷிடம் பதற்றத்துடன் சொன்னார்.
சதீஷும் கம்ப்யூட்டரில் சிறப்பான விஷய ஞானம் உள்ளவன் என்றாலும்
மருத்துவ நுட்பங்களில் ஓரளவு புரிதல் மட்டுமே உள்ளவன். அதனால் அவனாலும் இதில் பிரச்னை உருவாகும்
வாய்ப்பு இருக்கிறதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவன் யோசனையுடன் சொன்னான். “நாம சீனியர் டாக்டர்கள்
யார் கிட்டயாவது கேட்டால் தான் தெரியும்”
பொறுப்பாளர் அவசரமாக மறுத்தார். “அது ஆபத்து. தேவையில்லாத பல கேள்விகளுக்கு நாம பதில் சொல்ல வேண்டி வந்துடும். நான் எம்.டி கிட்டயே பேசறேன்”
சொல்லி விட்டு பொறுப்பாளர் மேனேஜிங் டைரக்டரை அழைத்து, நடந்ததை எல்லாம் தாழ்ந்த
குரலில் சொன்னார். மேனேஜிங் டைரக்டர் அவரைப் போல் பதற்றமடையவில்லை.
”ஒன்னும் பிரச்னை இல்லை. ரிப்போர்ட்ஸ்ல சில்லறை
தவறுகள் இருந்தாலும் தலை போயிடாது.
எந்தத் தவறையும் வெச்சு எதையும் நிரூபிச்சுட முடியாது.
திடகாத்திரமாய் இருந்தவனெல்லாம் திடீர்னு கோவிட் தாக்கி செத்துப் போயிருக்கான்.
அந்த சமயத்துல பலரோட ரிப்போர்ட்ஸ் தாறுமாறாய் தான் இருந்திருக்கு.
சாம்பலாய்ப் போன மனுஷங்களுக்கு என்ன ஆச்சுன்னு யார் எப்படிக் கண்டுபிடிக்க
முடியும்? நான் நோய்களைப் பார்த்ததை விடப் பிரச்னைகளைப் பார்த்தது
தான் அதிகம். அதனால ஏதாவது பிரச்னை வந்தா நான் பாத்துக்கறேன்.
நீங்க கவலைப்படாம உங்க வேலையைப் பாருங்க.”
செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையின் பொறுப்பாளரும், அந்த மருத்துவமனையின்
மேனேஜிங் டைரக்டர் சுகுமாரனும் பேசிக் கொண்ட இரண்டு உரையாடல்களின் பதிவுகளையும் அருணாச்சலம்
மிகக் கவனமாகக் கேட்டார்.
சுகுமாரன் வில்லங்கமான ஆளாகத் தெரிந்தார். முதல் பேச்சில்
“வேற ஏதாவது ஒரு கோவிட் பேஷண்டோட ரெக்கார்ட்ஸ காபி எடுத்து அதுல ஒன்னு
ரெண்டு சின்ன கரெக்ஷன் செஞ்சு வாசுதேவன் பேர்ல ரெகார்ட்ஸ் க்ரியேட்
பண்ணிக் கொடுக்க சதீஷ் கிட்ட சொல்லுங்க” என்றும் இரண்டாவது பேச்சில்
”ரிப்போர்ட்ஸ்ல சில்லறை தவறுகள் இருந்தாலும் தலை போயிடாது. எந்தத் தவறையும் வெச்சு எதையும் நிரூபிச்சுட
முடியாது. சாம்பலாய்ப் போன மனுஷங்களுக்கு என்ன ஆச்சுன்னு யார்
எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? நான் நோய்களைப் பார்த்ததை விடப்
பிரச்னைகளைப் பார்த்தது தான் அதிகம். அதனால ஏதாவது பிரச்னை வந்தா
நான் பாத்துக்கறேன்.” என்றும் அவர் அலட்டிக் கொள்ளாமல் சொன்னது இது போன்ற தகிடுதத்த
வேலைகள் எல்லாம் அவருக்குப் புதியதல்ல என்பதை அருணாச்சலத்துக்குப் புரிய வைத்தது.
பொதுவாக எல்லோரும் நேர்மையற்ற வழிகளைப்
பின்பற்றுபவர்கள் என்று அரசியல்வாதிகளையே அதிகம் சாடுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளை
பல் படாமல் விழுங்கி விடக்கூடிய ஆட்கள் எல்லாத் துறைகளிலும் உண்டு. இது அவர்
பலமுறை அனுபவத்தில் உணர்ந்த உண்மை. ஆனாலும் மிக உத்தமமான, உயிர் காக்கும்
தொழிலில் இருக்கும் மருத்துவர்கள் எந்த உறுத்தலும் இல்லாமல் கொலை செய்யக்கூடத் துணிவது
அவருக்கே அதிர்ச்சியாக இருந்தது. இதில் கூடுதல் கொடுமை தங்களுடன் பணிபுரியும் ஒரு மருத்துவரையே
கொல்லத் துணிந்தது தான்.
அதன் பிறகு சுகுமாரன் அன்று பலரிடம்
பேசியிருந்த போதும் யோகாலயத்தில் பிரம்மானந்தர் உட்பட யாருடனும் பேசியிருக்கவில்லை. முரளிதரன்
சோதனைக்குச் சென்றதை அவர்களிடம் சொல்லும் அளவு பெரிய விஷயம் அல்ல என்று சுகுமாரன் நினைத்தாரா, இல்லை வேறெதாவது
ஒரு செல் போனிலிருந்து அவர்களுடன் பேசியிருக்கிறாரா என்பது தெரியவில்லை.
எது எப்படியிருந்தாலும் இந்த உரையாடல்களை
ஆதாரமாக வைத்து குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாது. அதற்கு
இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது, அதிகாரபூர்வமாக
இந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படவில்லை. இரண்டாவது, நீதிமன்றங்களில் எந்தத் திறமையான வக்கீலும் இது ஜோடிக்கப்பட்டது
என்று வாதாடி மிகச்சுலபமாக இந்த ஆதாரத்தைத் தள்ளுபடி செய்து விட முடியும்...
ஆனால் உண்மையில் இவர்களும் குற்றவாளிகள் என்பதை இந்த உரையாடல்கள் தங்களுக்குத் தெளிவுபடுத்தி
விட்டதாக அருணாச்சலம் நினைத்தார்.
மேலும், அந்த மருத்துவமனையில்
சைத்ராவுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் பெயராக வாசுதேவன் பெயர் போடப்பட்டிருந்தது. ஆனால் அவரோ
சைத்ராவுக்கு, தான் மருத்துவம் பார்க்கவில்லை என்பதை மிகத்தெளிவாக கிருஷ்ணமூர்த்தியிடம்
சொல்லியிருந்தார். முரளிதரனும் டாக்டர் வாசுதேவன் மரணம் குறித்து மருத்துவமனை
தந்த ஸ்கேன் ரிப்போர்ட்கள் உண்மையாய் இருக்க வாய்ப்பில்லை என்று தன்னுடைய கணிப்பைத்
தெரிவித்திருந்தார். மூன்று மாதங்களுக்கு முன் டாக்டர் வாசுதேவனின் மாஸ்டர் செக்கப்பில்
இருந்த ரிப்போர்ட்களும், கோவிட்டால் தாக்கப்பட்ட பின் எடுக்கப்பட்டதாய் சொல்லியிருந்த
ரிப்போர்ட்களும் ஒத்துப் போகவில்லை என்று தெரிவித்திருந்தார். கோவிட்
நோய் தாக்கப்பட்டதால் அந்த முரண்பாடான மாற்றங்கள் டாக்டர் வாசுதேவனின் உடலில் ஏற்பட்டிருக்கலாம்
என்பதை முரளிதரன் ஏற்றுக் கொள்ளவில்லை. கோவிட் உடலில் எல்லா
பாகங்களிலும், அம்சங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விடுவதில்லை என்றும்
சில பாகங்கள், சில அம்சங்கள் மட்டுமே கோவிட்டினால் கடுமையான பாதிப்புகளை
அடையக்கூடியவை என்று அவர் தெரிவித்திருந்தார். முரண்பாடுகள் என்ன என்பதை அவர் பல மருத்துவச் சொற்றொடர்களைப்
பயன்படுத்தி விளக்கியும் இருந்தார். அந்த விளக்கங்கள்
புரியா விட்டாலும் அவர் தன் ஆராய்ச்சி மூலமாக எட்டிய விளக்கம் அருணாச்சலத்துக்குப்
போதுமானதாக இருந்தது. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை.
நடந்தவற்றையும்,
சேதுமாதவனையும் குறித்த நினைவுகளில் அவர் ஆழ்ந்திருக்கையில் அவரது அந்தரங்க
செல்போன் இசைத்தது. அழைப்பது யார் என்று அருணாச்சலம் பார்த்தார்.
பரசுராமன் என்ற பெயரைப் பார்த்ததும் அவர் முகத்தில் புன்னகை விரிந்தது.
பரசுராமன் அவருடைய தாய்மாமன் மகன். அருணாச்சலம்
செல்போனை எடுத்துப் பேசினார். “ஹலோ, என்னடா?
ஆள் இருக்கியா? எங்கே இருக்கே?”
பரசுராமனின் உற்சாகக்குரல் கேட்டது. ”பேசறது ஆள் தான் மச்சான்.
ஆவி இல்லை. அவ்வளவு சீக்கிரமா எல்லாம் நான் போயிடுவெனா
என்ன? இப்ப சென்னைல தான் இருக்கேன். நீ
எப்படி இருக்கே?”
“ஓரளவு பரவாயில்லைடா. பின்னே என் வயசுக்கு இதை விட அதிகமா
நான் எதிர்பார்க்கவும் முடியாதில்லையா?”
“அப்படி நினைக்கிறது தான் முட்டாள்தனம். எந்த வயசுலயும்
மனுஷன் ஆரோக்கியமா இருக்கலாம். ஆரோக்கியம் முக்கியம்கிற
எண்ணமும், அது சம்பந்தமான
விழிப்புணர்வும் மட்டும் எப்பவும் இருக்கணும். அவ்வளவு தான். வயசானா
ஆரோக்கியம் குறைய ஆரம்பிச்சுடும்னு நினைக்க ஆரம்பிக்கிறதே நோயை வரவழைச்சுடும்.”
அருணாச்சலத்துக்கு பரசுராமனின் வார்த்தைகளில் இருந்த உண்மை புரிந்தே
இருந்தது. ஆனாலும்
வயதானால் ஆரோக்கியக் குறைவு தவிர்க்க முடியாதது என்று பலரும் காலம் காலமாகச் சொல்லிக்
கேட்டுக் கொண்டே இருப்பதால் மனம் அப்படியே முட்டாள்தனமாக நம்ப ஆரம்பித்து விடுகிறது…
“சரி சரி பிரசங்கத்தை ஆரம்பிச்சுடாதே. சென்னைக்கு
எப்ப வந்தே? எத்தனை நாள் இருப்பே?”
“இன்னைக்கு காலைல தான் வந்தேன். சரி தமிழ்நாட்டுக்கு வந்துட்டு முதலமைச்சரைப் பார்க்காம இருக்கறதான்னு தோணுச்சு. அதனால தான் கூப்பிட்டேன். எப்ப நீ ஃப்ரீ? எப்ப நான் வரட்டும்?”
(தொடரும்)
என்.கணேசன்
If available in amazon kindle good i dont need paperback
ReplyDeleteNot available in Amazon kindle.
Deleteபொறுப்பாளரும்....மேனேஜிங் டைரக்டரும் பேசிக் கொண்டதை முதல்வர் கவனித்த இடம் எதிர்பாராத திருப்பம்....
ReplyDeleteபரசுராம் என்ன செய்வாரோ...
IT IS CLEAR NOW. Dr. VASUDEVAN DID NOT COMMIT SUICIDE BUT KILLED BY FELLOW DOCTORS.
ReplyDelete