பிலிப் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான இரண்டு வீரர்களை அழைத்து கலவரப்பகுதியில் நடந்தது என்ன என்று புதிதாகக் கேட்பவன் போல் கேட்டான். மனதால் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்த யவனப்படைத்தலைவன் சொன்னதில் சில விஷயங்கள் விடுபட்டிருக்கக்கூடும். சில விஷயங்கள் அதிகப்படுத்தி சொல்லியிருக்கக்கூடும். எனவே என்ன நடந்திருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள நினைத்து பிலிப் அந்த இரு வீரர்கள் சொன்னதைக் கூர்ந்து கவனித்துக் கேட்டான். அவர்களும் யவனப்படைத் தலைவன் சொன்ன நிகழ்வுகளையே சொன்னார்கள் என்றாலும் அவர்கள் வீரசேனன் மீது சந்தேகம் கொள்ளவில்லை. சிறுவர்களைத் தாக்குவதற்கு அவன் உடன்படாதது கலவரக்காரர்களின் நட்பினால் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காட்டுக்குள்ளிருந்து வந்த படையினரிடம் வீரமாக அவன் போரிட்டதையும், அவர்களைத் துரத்திக் கொண்டு அவன் போனதையும் சுட்டிக் காட்டினார்கள்.
பிலிப் காட்டுக்குள்ளிருந்து வந்த வீரர்களைப் பற்றிய விவரங்களைக்
கூடுதலாகக் கேட்டறிந்தான். இரு வீரர்களும் அவர்கள் வெகுசிறப்பாகப் போர்ப் பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தவர்களாகத்
தெரிகிறார்கள் என்றும், துணிச்சலுடனும், சீற்றத்துடனும் போரிட்டார்கள் என்றும் சொன்னார்கள். முக்கியமாக
அவர்கள் தலைவனாக வந்த இளைஞன் அலட்டிக் கொள்ளாமல் சிறப்பாகப் போராடினான் என்றும் அவன்
ஒவ்வொரு முறை கை ஓங்கிய போதும் தங்கள் ஆட்கள் யாராவது வீழ்ந்தார்கள் அல்லது காயப்பட்டார்கள்
என்றும் சொன்னார்கள்.
“அவர்களைத் தொடர்ந்து வீரசேனனும் மற்ற சில வீரர்களும் போனதாகச் சொல்கிறீர்கள்.
அவர்கள் யாருமே திரும்பி வரவில்லையா , அல்லது வீரசேனன்
மற்றும் திரும்பி வரவில்லையா?” என்று பிலிப் கேட்டான்.
“காட்டுக்குள் சிறிது தொலைவு போன பின் தொடர முடியாமல் அவர்கள் திரும்பி விட்டார்கள்.
ஆனால் வீரசேனன் அவர்களுடன் அதே வேகத்தில் பின் தொடர்ந்தபடியால் உள்ளே
போய் விட்டார். அவர் பின் திரும்பவில்லை”
“வீரசேனனின் சகோதரன் சூரசேனன் என்ன சொல்கிறான்?” பிலிப்
சந்தேகத்துடன் கேட்டான்.
“அவர் தன் சகோதரன் எதிரிகளிடம் சிக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று அஞ்சுகிறார்.
அவர் காட்டுக்குள் சென்று சகோதரனைக் காப்பற்றி வருவதற்கு அனுமதி கேட்டதற்கு
சேனாதிபதி மறுத்ததால் அவர் செல்லவில்லை…”
யவன சேனாதிபதி அதை முன்பே பிலிப்பிடம் தெரிவித்திருந்தான். அவன் சூரசேனன் காட்டுக்குள்
செல்வதற்கு அனுமதி மறுத்ததை பிலிப்பால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால்
சகோதரர்கள் இருவரும் சேர்ந்து சதி செய்கிறார்கள் என்றால் ஒருவன் போய் திரும்பி வராமல்
இன்னொருவன் போவதற்கும் அனுமதி தருவது சதிகாரர்கள் இருவரையுமே தப்பிக்க விடும் முட்டாள்தனமாகி
விடும். ஆனால் மற்ற ஒரு படை பின் தொடர்ந்து போய் ஒட்டு மொத்த சதிக்கூட்டத்தையும்
பிடிக்க முயற்சி செய்திருக்கலாமே என்று பிலிப் யவன சேனாதிபதியிடம் கேட்ட போது அவன்
சொன்னான். “ஒருவேளை அடர்ந்த காட்டுக்குள்ளே நம்மை வரவழைப்பதற்காக அவர்கள்
செய்திருக்கும் முயற்சியோ அது என்ற சந்தேகமும் எனக்கு வந்தது சத்ரப். ஒரு படை
காட்டுக்குள்ளே போன பின் வேறெதாவது ஒரு பகுதியிலிருந்து அவர்களது இன்னொரு
படை மாளவத்திற்குள் புகுந்து கலவரம் மறுபடி பூதாகரமாக வெடித்தால் என்ன செய்வது என்றும்
யோசித்தேன்.”
அதில் பிலிப் தவறு காணவில்லை. அதற்கும்
வாய்ப்பிருக்கிறது. அவர்கள் திட்டம் தெரியாத வரை எல்லா யூகங்களையும், வழிகளையும்
யோசித்தே முடிவெடுக்க வேண்டியிருக்கிறது…. பிலிப் பெருமூச்சு விட்டான். இந்த விஷயத்தில் கலவரக்காரர்களுக்குக்
குழப்பமில்லை. திட்டமிட்டு அவர்கள் செயல்படுகிறார்கள்.
அவர்கள் செய்வதைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அதிரடியாக நாமே ஏதாவது செய்யலாம் என்றாலோ மற்ற பகுதிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது
என்று அறியாமலிருப்பது தடுக்கிறது. எல்லாம் அறிந்து கொள்ள சில
நாட்களாவது ஆகும். அது வரை கலவரக்காரர்கள் சும்மா இருப்பார்கள்
என்றும் தோன்றவில்லை. வீரசேனன் திரும்பி வராதது பிலிப் மனதில் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியது.
அவன் கலவரக்காரர்களுடன்
போரிட்டு இறந்திருந்தால் பிரச்சினை இல்லை. இல்லா விட்டால்…..?
வீரசேனனுக்குக் கலவரக்காரர்களைப் புரிந்து
கொள்ள முடியவில்லை. காட்டுக்குள்ளே அவர்களிடம் அவன் பிடிபட்டும் அவனை அவர்கள் வெட்டி வீழ்த்தவில்லை.
கட்டிப் போடவில்லை. அவனுடைய ஆயுதங்களைப் பறித்து,
அவனுடைய காயங்களுக்கு மருந்திட்டு, ஓரிடத்தில்
அமர வைத்து உணவும் தண்ணீரும் தந்து உபசரித்து விருந்தாளியை நடத்துவது போல் நடத்தினார்கள்.
வீரசேனன் உணவை மறுத்து விட்டு தண்ணீரை மட்டும் அருந்தினான். அந்த வீரர்களின் தலைவன் சிலரால் சந்திரகுப்தா என்றழைக்கப்பட்டான். அழைத்தவர்கள் அவன் நண்பர்கள் என்று தெரிந்தது. அவர்கள்
எல்லோருமே அங்கிருந்த ஒரு அந்தணரிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து
கொள்வதைக் கவனித்த வீரசேனன் அவர் தான் தட்சசீலத்து ஆசிரியராக இருக்க வேண்டும் என்று
அனுமானித்தான். எல்லாக் கலவரங்களுக்கும் முக்கிய காரணம் அவர்
தான் என்று தாழ்ந்த குரலில் யவன அதிகாரிகளும், வீரர்களும் பேசிக்
கொள்வதை அவன் கேட்டிருக்கிறான். அவர் அவனையே கூர்ந்து பார்த்துக்
கொண்டிருந்தார்.
சந்திரகுப்தன் வீரசேனனின் வலது காலிலும் இடது தோளிலும் ஏற்பட்டிருந்த காயங்களை
ஆராய்ந்து வலி அதிகம் இருக்கிறதா என்று அக்கறையுடன் விசாரித்தான்.
ஒரு நண்பனின் விசாரிப்பாக அது தெரிந்தது.
வீரசேனன் இல்லை என்றான். ஆனாலும் அவன் சொல்வதற்கு
எதிர்மாறாக வலி அதிகமாகத் தான் இருக்கிறது என்று அவன் முகபாவனையிலிருந்து சந்திரகுப்தன்
புரிந்து கொண்டது வீரசேனனுக்கும் தெரிந்தது.
வீரசேனன் இறுகிய முகத்தோடு சொன்னான். “எனக்கு உங்கள் இரக்கம்
தேவை இல்லை.”
திடீரென்று அந்த அந்தணர் வீரசேனனைக் கேட்டார். “உன் பெயர் என்ன வீரனே?”
“வீரசேனன்”
“ஏன் எங்கள் இரக்கம் உனக்குத் தேவையில்லை என்கிறாய் வீரசேனா?”
“எதிரிகளின் இரக்கத்தை எந்த வீரனும் விரும்ப மாட்டான்”
“நாங்கள் உன் எதிரிகள் என்று யார் சொன்னது?”
அவருக்கு என்ன பதில் சொல்வது என்று வீரசேனனுக்குத் தெரியவில்லை. மௌனமாக இருந்தான்.
ஆனால் அவர் தொடர்ந்து அடுத்த கேள்வியைக் கேட்டார். “நாங்கள் எதிரிகள் என்றால்
யவனர்கள் உனக்கு நண்பர்களா? ஆமாம் என்றால் அவர்கள் உனக்கு எப்போதிருந்து
நண்பர்கள் ஆனார்கள்?”
வீரசேனன் சொன்னான்.
“அவர்கள் என் நண்பர்கள் அல்ல. எஜமானர்கள்.
அவர்களின் எதிரிகள் அவர்களிடம் பணிபுரியும் எனக்கும் எதிரிகளே”
“வீரசேனனே, யவனர்கள் மாளவத்தை ஆக்கிரமிக்கப் போர் தொடுத்த
போது நீ மாளவ சேனையிலிருந்து யவனர்களுடன் போரிட்டவன் தானே? இல்லை,
அப்போதும் அவர்கள் எதிரிகளாக இல்லாமல் உன் நண்பர்களாக இருந்தார்களா?”
அவரது கேள்விகள் இயல்பாய் வந்தன. அவர் எதையும் யோசித்து கேட்பது
போல் தெரியவில்லை. அவன் தர்மசங்கடத்துடன் சொன்னான். ”முன்பு எதிரிகள் தான். நாங்கள் தோற்று சரணடைந்து அவர்களிடம்
பணி புரிய சம்மதித்த பிறகு தான் எஜமானர்கள்”
“அவர்கள் அந்தப் போரில் பெண்களையும், குழந்தைகளையும்,
முதியவர்களையும் கொன்று குவித்தார்களே அது உனக்குச் சம்மதமானதா?”
அந்தக் கேள்வி அவனுக்குத் தர்மசங்கடத்தைத் தந்தது. “சம்மதமில்லை தான்.
ஆனால் அவர்கள் வென்ற பின் அவர்கள் செயல்கள் இப்படித்
தான் இருக்க வேண்டும் என்பதை, தோற்ற நான் எப்படித் தீர்மானிக்க
முடியும்? இப்போது அவர்கள் ஆட்சியாளர்களும் ஆகி விட்டார்கள்…”
“இப்போது உன் குடும்பம் மாளவத்தில் இருக்கிறதா? வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?"
"என் தாய், என் மனைவி
இரண்டு பிள்ளைகள், என் சகோதரன், அவன் மனைவி,
அவர்கள் மகள்”
சாணக்கியர் கேட்டார்.
“அவர்களில் யாராவது ஒருவரைப் பிடித்து உன் யவன ஆட்சியாளர்கள் துன்புறுத்தினால்
அவர்கள் செயல்களில் எதையும் நீ தீர்மானிக்க முடியாது என்று சும்மா இருந்து விடுவாயா?”
வீரசேனன் தர்மசங்கடத்துடன் கண்களை மூடினான். அப்படி நினைத்துப் பார்க்கையிலேயே
இதயம் சுருக்கென்றது. அவருக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
இப்போதே கூட அவன் திரும்பிப்
போகாததால் அவனை யவனர்கள் சந்தேகப்பட்டிருக்கும் வாய்ப்பிருக்கிறது. அந்த யவனைப் படைத்தலைவன் புரட்சிக்கார சிறுவர்களைத் தண்டிக்க முனைந்த போது
அவன் தடுத்தது அவர்கள் சந்தேகத்திற்குக் காரணமாகலாம். அந்தச் சந்தேகத்தின் காரணமாக அவன்
தம்பி சூரசேனனை அவர்கள்
துன்புறுத்தி விசாரிக்கும் வாய்ப்பிருக்கிறது. அவன்
மனதில் கவலை புகுந்தது முகத்திலும் தெரிந்தது.
(தொடரும்)
என்.கணேசன்
அற்புதமான கதை … உணர்ச்சி பூர்வமாக உள்ளது🙏🏻
ReplyDeleteசிறு பிள்ளையாக இருந்ததில் இருந்து சந்திரகுப்தனை பார்த்து வருகிறோம்....இப்போது அலெக்சாண்டர் படையையே போரிட்டு வீழ்த்தும் அளவு வளர்ந்து விட்டான்... கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது...
ReplyDelete