சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 7, 2023

சாணக்கியன் 73

மாளவத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பிலிப் பல இடங்களில் நிலவ ஆரம்பித்திருக்கும் சூழ்நிலைகளை மனதில் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்பாரதத்தில் நடந்து கொண்டிருப்பது அவனறிந்த வரை மற்ற இடங்களில் நடக்காத ஒரு புதிய சூழ்நிலையாகத் தோன்றியது. அலெக்ஸாண்டர் இருக்கும் போது எழாமல் அலெக்ஸாண்டர் சென்ற பிறகு இப்படி ஒரு சூழல் உருவாவது திட்டமிட்டா, இயல்பாகவா என்று அவனுக்கு அனுமானிக்க முடியவில்லை. இந்தச் சூழ்நிலையை ஆம்பி குமாரனைப் போன்ற அறிவற்ற அரசனையும், புருஷோத்தமனைப் போன்ற திமிர் பிடித்த அரசனையும் வைத்துக் கொண்டு சமாளிப்பது சுலபமாயில்லை. அவன் அறிவுறுத்தியபடி இருவரும் நடந்து கொள்கிறார்களா என்று இனி தான் தெரிய வரும். மற்ற பகுதிகளில் இருக்கும் அரசர்களும் கூட ஏதோ ஒரு வகையில் பலவீனமாகவே இருப்பது தான் பிரச்சினை. உலகை வெல்வது பெரிய விஷயமல்ல. வென்ற உலகைச் சமாளிப்பது தான் பெரிய விஷயம் என்று இப்போது அவனுக்குத் தோன்றுகிறது.

 

வேகமாக அங்கு வந்து சேர்ந்த ஒரு ஒற்றன் அவன் சிந்தனைகளைக் கலைத்தான்.  பிலிப் ஆர்வத்துடன் கேட்டான். “என்ன தகவல்?”

 

தட்சசீலத்திலிருந்து ஆச்சாரிய விஷ்ணுகுப்தரும், அவரது மாணவர்கள் சிலரும் சில நாட்களுக்கு முன்னதாகவே வெளியேறி விட்டார்கள் சத்ரப். அதற்கும் சில நாட்கள் முன்பு அவரை ஒரு மாளிகையில் குடியேற வைத்து அதைத் தீமூட்டிக் கொளுத்தும் காந்தார அரசரின் திட்டம் தோல்வியடைந்தது. ஆச்சாரியர் அங்கு வசிக்கச் செல்லும் முன்பே ஆச்சாரியரின் மாணவர்களே அதைக் கொளுத்தி விட்டிருக்க வேண்டும்.”

 

எந்த விஷயத்தையும் எளிமையான முறையில் ஆம்பி குமாரனுக்குக் கையாளத் தெரியாமல் இருப்பது பிலிப்புக்கு எரிச்சலைத் தந்தது. ஆச்சாரியரிடம் சில காலமாவது கல்வி கற்றிருந்தாலும் அவன் அவரது அறிவில் நூற்றில் ஒரு பகுதியைக் கூட பெற்று விடாதது துரதிர்ஷ்டமே என்று தோன்றியது. அதனால் தான் அவர் அவனைப் பாதியில் அனுப்பி விட்டிருக்க வேண்டும்.

 

பிலிப் கேட்டான். “இப்போது ஆச்சாரியரும் அவரது மாணவர்களும் எங்கே இருக்கிறார்கள்?”

 

ஆச்சாரியரும், அவரது மாணவர்களும் தட்சசீலத்தை அடுத்துள்ள வனப்பகுதிக்குள் சென்றது வரை எனக்குத் தெரியும். அவர்களைப் பின் தொடர்ந்து போன நம் ஆள் இன்னும் வரவில்லை....” ஒற்றன் கடைசியில் சற்று இழுத்துச் சொன்னது பிலிப்புக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 

பிலிப் ஒற்றனைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான். “அவனுக்கு ஆபத்து ஏதாவது...?”

 

ஒற்றன் தயக்கத்துடன் சொன்னான். “அவனுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. காரணம் ஆச்சாரியரும் அவரது மாணவர்களும் தங்களைப் பின் தொடர்பவர்களைக் கண்டுபிடிப்பதில் மிகவும் சமர்த்தர்களாக இருக்கிறார்கள்.  இது எங்களுடைய அனுபவமாக இருப்பதால் நாங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் தான் நடந்து கொள்கிறோம். கூடுமான வரை ஒரே ஆள் அவர்களைப் பின் தொடர்வதில்லை. அவர்கள் செல்லும் வழியை அறிந்து கொண்டு மாறி மாறிச் சென்று ஒற்று வேலை பார்க்கிறோம். ஆனால் அவர்கள் செல்லும் வழிகள் நாங்கள் அனுமானிக்க முடிந்த வழிகளாய் இருப்பதில்லை. இங்குள்ள வனப்பகுதிகள் அடர்ந்து இருப்பதுடன் காட்டு வழிகள் குழப்பம் தருவதாய் இருப்பதும் அவர்களுக்குச் சாதகமாக இருக்கின்றன.”

 

பிலிப் யோசனை செய்தபடியே கேட்டான். “உன் கணிப்பின் படி அவர்கள் எங்கே பதுங்கி இருக்க வாய்ப்பிருக்கிறது?”

 

வனப்பகுதியில் தான் அவர்கள் பதுங்கி இருக்க வேண்டும். அங்கிருந்து அவர்கள் நகர்ப்புறங்களுக்கு வந்தால் நம் ஒற்றர்கள் கண்களில் படாமல் இருக்க வாய்ப்பே இல்லை.  இன்னொரு விஷயம் சத்ரப். அவர்கள் பதுங்கி ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்கிற அவசியமுமில்லை. அவர்கள் காட்டுப் பகுதியிலேயே ஓரிடம் விட்டு ஓரிடம் போய்க் கொண்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. வேண்டிய போது வேண்டிய இடத்தில் அவர்கள் காட்டுப்பகுதியில் இருந்து நகர்ப்புறப் பகுதிக்குள் நுழைவது சாத்தியமே

 

ஒற்றன் வணங்கி விட்டுச் சென்ற பிறகு பிலிப் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான். ஒற்றன் சொல்வது போல் அவர்கள் காட்டுப் பகுதிகளிலேயே இடம் மாறிக் கொண்டிருந்தால், தேவைப்படுகிற போது வெளிப்பட்டுத் தாக்கும் உத்தேசம் இருந்தால், கண்டிப்பாக அவர்கள் வெளிப்படும் இடம் மாளவத்திற்குப் பக்கத்தில் எங்காவது இருக்க வாய்ப்புண்டு. இன்னும் ஒன்றரை நாளில் மாளவத்தை அவன் அடைந்து விட முடியும் தொலைவில் தான் பிலிப் இருக்கிறான். இப்போது அவன் போய்க் கொண்டிருக்கும் பகுதிக்கு அடுத்த வனப்பகுதிகளில் கூட அவர்கள் இருக்கலாம்….

 

யோசிக்க யோசிக்க ஆரம்பத்தில் அவர்களை அலட்சியமாக நினைத்து ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டது தவறு என்று பிலிப்புக்குப் புரிய ஆரம்பித்தது. ஒரு சாதாரண ஆசிரியர் தானே, சில சாதாரண மாணவர்கள் தானே என்று அவன் செயல்படாமல் விட்டிருக்கக்கூடாது. ஆச்சாரியர் சாதாரண ஆசிரியர் இல்லை. அதனால் அவரது மாணவர்களும் சாதாரண மாணவர்களாக இல்லை…..

 

சாதாரண ஆசிரியர் இல்லை என்றவுடன் பிலிப்புக்கு அலெக்ஸாண்டரின் ஆசிரியர் அரிஸ்டாட்டில் நினைவுக்கு வந்தார். அவரும் சாதாரண ஆசிரியராக இருக்கவில்லை. அவருடைய மாணவன் அலெக்ஸாண்டரும் சாதாரண மாணவனாக இருந்து விடவில்லை. ஆனால்  அரிஸ்டாட்டில் அரசியலில் ஈடுபட்டு விடவில்லை. அலெக்ஸாண்டர் ஏற்கெனவே ஒரு இளவரசன். இங்கே எல்லாம் வித்தியாசமாக இருக்கின்றன. ஆம்பி குமாரன் அலெக்ஸாண்டர் இருக்கும் போதே விஷ்ணுகுப்தரைப் பற்றிச் சொல்லி இருந்தால், விஷ்ணுகுப்தரும் தன் சேட்டைகளை அலெக்ஸாண்டர் இருக்கும் போதே ஆரம்பித்திருந்தால் அலெக்ஸாண்டர் கண்டிப்பாக விஷ்ணுகுப்தரைச் சந்தித்திருப்பான். மேலானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தவும் அலெக்ஸாண்டர் அறிவான். பிரச்சினைக்குரிய ஆட்களை அடையாளம் கண்டு அவர்களை அப்புறப்படுத்தவும் அலெக்ஸாண்டர் அறிவான். பிலிப்பின் நேரம் எல்லாம் அலெக்ஸாண்டர் போன பிறகே நடக்கிறது.

 

பிலிப்புக்கு மாளவத்தின் எல்லையிலேயே தங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஒற்றர்கள் மாளவத்திற்குள் பிலிப் தங்குவது உசிதமல்ல என்று முன்பே எச்சரித்திருந்தார்கள். எல்லையில் இருந்த முகாமில் அவனுக்கு வேண்டிய எல்லாச் சௌகரியங்களும் செய்யப்பட்டிருந்தன. படைவீரர்கள் தங்கவும் சுற்றிலும் பெரிய கூடாரங்கள் வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தன. மாளவத்திற்குள் நிலவரம் மோசமாக ஆரம்பித்தவுடனேயே அங்கிருந்து படைவீரர்கள் பாதி பேர் எல்லைக்கு மாற்றப்பட்டிருந்தார்கள். அவசியம் ஏற்பட்டால் உள்ளிருந்து கொண்டும், வெளியிலிருந்து வந்தும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


நல்ல வேளையாக பிலிப் அந்த எல்லை முகாமை எட்டும் வரை மாளவத்தில் பிரச்சினை எதுவும் வெடித்திருக்கவில்லை. பிலிப் அங்கு சென்றவுடன் இளைப்பாறக்கூட நேரம் எடுத்துக் கொள்ளாமல் முதலில் மாளவத்திற்குள் செயல்படும் ஒற்றனை அழைத்து நிலவரம் என்னவென்று கேட்டான்.

 

“சத்ரப். கண்டிப்பாய் கலவரம் நடக்கப் போகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் எப்போது என்று தெரியவில்லை. முன்பே வெகுசீக்கிரத்தில் ஒரு நாளைக் குறித்திருக்கலாம் அல்லது யாருடைய கட்டளைக்காகவோ காத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.”

 

“உள்நாட்டுப் படைகள் சதிகாரர்களுக்கு ஆதரவாகச் செயல்பட வாய்ப்பு இருக்கிறதா?”

 

“எல்லோரும் அப்படி ஆதரவாகச் செயல்படும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் படையில் சில வீரர்களாவது கலவரக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்படலாம். ஏனென்றால் நாம் மாளவத்தை ஆக்கிரமித்த போது உயிரிழந்த குடிமக்கள் பலரின் உறவினர்களோ நண்பர்களோ அந்தப் படைகளில் இருக்க வாய்ப்பு நிச்சயம் உண்டு.”

 

அங்குள்ள படைகளில் பத்தில் மூன்று பங்கு யவனப் படைகளும், மூன்று பங்கு மாளவப்படைகளும், மீதமுள்ள படைகள் மற்ற பகுதிகளின் படைகளுமாக இருந்தன. கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் இந்த விகிதத்திலேயே படைப்பிரிவுகள் இருத்தப்பட்டிருந்தன. ஒருவர் கண்காணிப்பு மற்றவர்கள் மேல் இருக்கும், உள்நாட்டுப் படைகள் பின் சதிச் செயலில் ஈடுபட்டால் அது மற்றவர்கள் கவனத்திற்கு உடனடியாக வராமல் இருக்காது என்ற எச்சரிக்கை உணர்வு பிலிப்புக்கு அதிகமாக இருந்ததால் பின் இந்த விகிதத்தில் படைகளை இருத்தியிருந்தான்.

  

பிலிப் சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “மாளவத்தின் முன்னாள் நிர்வாக உறுப்பினர்கள், அதிகாரிகள்?”

 

“அவர்கள் நிச்சயம் கலவரத்தில் சேரக்கூடும்”

 

“உள்நாட்டுப் படையினருக்கும், முந்தைய நிர்வாக உறுப்பினர்கள், அதிகாரிகளுக்கும் இடையே ஏதாவது ரகசியத் தொடர்பு இருக்கிறதா?”

 

“நாங்கள் கண்காணித்த வரை இல்லை சத்ரப். படைவீரர்கள் வீடுகளுக்கு மக்கள் சிலர் சென்று பேசி வருவது தொடர்ந்து நடக்கிறது என்றாலும் மக்களும் படைவீரர்களைச் சந்தித்துப் பேச வாய்ப்பில்லை. ஏனென்றால் நீங்கள் முன்பே எச்சரித்தபடி உள்ளூர் படைப்பிரிவினரை எல்லை முகாமுக்கு நாம் முன்பே மாற்றி விட்டோம். ஆனால் மக்கள் அவர்கள் குடும்பத்தினரைப் பார்த்துப் பேசி இருக்கிறார்கள். குடும்பத்தினரில் சிலர் முகாம்களுக்கு வந்து அங்கு தங்கியிருக்கும் வீரர்களைச் சந்தித்துப் பேசிவிட்டுப் போவதுண்டு. முடிந்த வரை அதை நம் ஆட்கள் கண்காணிக்கிறார்கள் என்றாலும் சில தகவல்கள் ரகசியமாக அவர்களுக்குள் பரிமாறிக் கொள்ள வாய்ப்புண்டு.

 

எல்லாத் தகவல்களையும் ஜீரணித்துக் கொண்டு ஆழ்ந்து ஆலோசித்து விட்டு அனைத்துப் படைத் தலைவர்களையும் உடனடியாக பிலிப் வரவழைத்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்







2 comments:

  1. Eagerly waiting to know Chanakyar's plans.

    ReplyDelete
  2. அந்தக் கலவரம் எப்போது வெடிக்கும் என்ற ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....

    ReplyDelete