சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 14, 2023

சாணக்கியன் 74

 

பிலிப் தன் முன் அமர்ந்திருந்த படைத்தலைவர்களை ஆராய்ந்தான். அனைவரும் சிறிய சிறிய படைகளின் தலைவர்கள். அவர்களின் மாளவத்தின் முன்னாள் படையிலிருந்தவர்கள் இருவர். மிகச் சிறந்த வீரர்கள் அவர்கள். இருவரும் சகோதரர்கள். ஒருவன் வீரசேனன், இன்னொருவன் சூரசேனன். இது வரை அவர்கள் நடவடிக்கைகளில் ஒரு குறையும் சொல்ல முடியாது. ஆனால் கடந்த கால நடவடிக்கைகள் போலவே எதிர்கால நடவடிக்கைகளும் இருக்கும் என்று ஒருவர் குறித்தும் சொல்ல முடியாது. மற்ற படைத்தலைவர்களில் இருவர் யவனப் படைத்தலைவர்கள். மூவர் காம்போஜம், காந்தாரம், கேகயப் படைத் தலைவர்கள். அவர்கள் அனைவரிடமும் பிலிப் மொழிபெயர்ப்பாளர் துணையுடன் சொல்ல ஆரம்பித்தான்.

 

உலகாளப் பிறந்த சக்கரவர்த்தி அலெக்ஸாண்டரின் படைத்தலைவர்களான நீங்கள் பாக்கியசாலிகள். ஏனென்றால் நம் சாம்ராஜ்ஜியம் நாளுக்கு நாள் விரிவடைவது போல உங்கள் உயர்வும் நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டே இருக்கும். எதிர்காலத்தில் பெரும்படைகளின் தலைவர்களாகும் வாய்ப்பும், பெருஞ்செல்வமும், கீர்த்தியும் உங்களுக்குக் காத்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் சக்கரவர்த்திக்கு உண்மையாக ஊழியம் செய்து கொண்டிருக்கும் வரையில் அது நிச்சயமானது. அதில் உங்கள் யாருக்கும் சந்தேகம் தேவை இல்லை.”

 

துரதிர்ஷ்டவசமாக சில விஷமிகள் மக்கள் மனதிலும் நம் வீரர்கள் சிலர் மனதிலும் விஷத்தை விதைத்திருப்பது நம் கவனத்திற்கு வந்திருக்கிறது. மக்களில் சிலர், முந்தைய ஆட்சியாளர்களின் தூண்டுதலால் கலவரத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நம்மால் யூகிக்க முடிகிறது. ஆனால் பெரிய சாம்ராஜ்ஜியங்களை வீழ்த்திய சக்கரவர்த்தி அலெக்ஸாண்டரின் படைகளுக்கு இந்தச் சின்னக் கலவரங்களைச் சமாளிப்பது மிக எளிதான காரியம். ஆனால் அதைச் செய்கையில் நாம் உறுதியுடன் இருப்பது மிக முக்கியம். தயக்கமோ, சலுகைகளோ காட்டுவது கலவரக்காரர்களுக்கு வலிமை சேர்ப்பது போலாகி விடும். உங்கள் ஒவ்வொருவர் மீதும் எனக்குப் பரிபூரண நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை மாளவத்தில் கலவரம் ஏற்படுமானால் நீங்கள் ஒற்றுமையுடனும், உறுதியுடனும் அதை அடக்க வேண்டும். பெரும்பாலும் நம் படைகளைப் பார்த்தாலே கலவரக்காரர்கள் பின்வாங்கி விடுவார்கள். அப்படி அவர்கள் பின் வாங்கா விட்டாலும் கூட உங்களுக்கு அவர்களை அடிபணிய வைப்பது சுலபம். தேவைப்பட்டால் நாம் மற்ற பகுதிகளிலிருந்து படைகளை வரவழைக்கவும் செய்யலாம்....”

 

ஒரு கணம் பேச்சை நிறுத்தி அவர்களைக் கூர்ந்து பார்த்தான். அவர்கள் யாரும் உற்சாகக் குறைவு காட்டவில்லை. திருட்டுப் பார்வை பார்க்கவில்லை. யாரையும் சந்தேகப்படத் தேவை தெரியவில்லை. மேலும் உற்சாகமூட்டும் வகையில் பேசி பிலிப் அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தான். அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது போல் தானிருக்கிறது என்றாலும் புரியாதது ஏதோ நடக்கவிருக்கிறது என்ற உணர்வு ஏனோ பிலிப்புக்கு இருந்து கொண்டே இருந்தது. என்ன அது?

 

னப்பகுதிக்குள் அந்த இரவு வேளையில் மற்ற வீரர்களும், நண்பர்களும் உறங்கிக் கொண்டிருக்க சந்திரகுப்தனுக்கு ஏனோ உறக்கம் வரவில்லை. எழுந்து பார்த்தால் ஆச்சாரியரைக் காணவில்லை. மெள்ள எழுந்து கூடாரத்திற்கு வெளியே வந்த சந்திரகுப்தன் தொலைவில் ஒரு மரத்திற்குக் கீழ் சாணக்கியர் அமர்ந்திருப்பதை நிலவொளியில் பார்த்தான்.

 

சந்திரகுப்தன் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்த சாணக்கியர் அவன் நெருங்கியவுடன் கேட்டார். “உறக்கம் வரவில்லையா சந்திரகுப்தா?”

 

“இல்லை ஆச்சாரியரே.”

 

“ஏன்?”

 

“நீங்கள் உறங்காமலிருப்பதற்கான அதே காரணம் தான் ஆச்சாரியரே. நம் முதல் திட்டம் வெற்றி பெறும் வரை மனம் முழு உறக்கத்திற்கு அனுமதிக்காது போலிருக்கிறது”

 

“நம் முதல் திட்டம் கண்டிப்பாக வெற்றி பெறத் தான் போகிறது சந்திரகுப்தா. அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.  நான் உறங்காமல் இருப்பதற்குக் காரணம் அது குறித்த சிந்தனைகள் அல்ல. அதற்கும் அடுத்த கட்டம் பற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

 

ஆச்சாரியரின் பதில் அவனைப் பிரமிக்க வைத்தது. சில சமயங்களில் அவர் வெற்றி நிச்சயம் என்று ஆணித்தரமாக நம்புவார். அவர் அதற்கான காரணங்களை விவரித்தாலும் கூட சந்திரகுப்தனுக்கு நினைத்தபடி நடக்கா விட்டால் என்ன செய்வது என்ற சிறு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். அலெக்ஸாண்டர் கண்டிப்பாக பாரதத்தை விட்டு வெளியேறுவான். அதற்கு அவன் படைவீரர்களே காரணமாயிருப்பார்கள் என்று முன்பே அவர் ஆணித்தரமாகச் சொல்லியிருந்தார். அலெக்ஸாண்டர் போகும் வரை அதை சந்திரகுப்தனால் நம்பியிருக்க முடியவில்லை. அதே போல் தான் இப்போதும் முதல் திட்டம் வெற்றி பெறும் என்று அவர் நிச்சயமாக நம்புகிறார். ஆனால் சந்திரகுப்தனுக்கு அதை நம்பி முழு நிம்மதியாக இருக்க முடியவில்லை.

 

அவன் சொன்னான். “ஆச்சாரியரே. நாம் ஒரு திட்டம் போட்டு வைத்திருக்கிறோம். ஆனால் பிலிப்பும் ஒரு திட்டம் போட்டு வைத்திருக்க மாட்டானா?”

 

சாணக்கியர் சொன்னார். “நம் திட்டம் என்ன என்பது தெளிவாக பிலிப்புக்குத் தெரியாதவரை அவனால் எதிர்த்திட்டம் எப்படிப் போட முடியும் சந்திரகுப்தா? இப்போதைக்கு அவன் திட்டம் போட்டு வைத்திருப்பதெல்லாம் என்னவாக இருக்கும் என்றால் கலவரங்கள் பல பகுதிகளில் வெடிக்கலாம், அப்படி வெடித்தால் அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பது தான். ஆனால் எந்த இடத்தில் எந்த அளவு கலவரம் வெடிக்கும், எத்தனை முறை வெடிக்கும், எந்த இடத்தில் அதிகப்படைகள் தேவைப்படும், கலவரத்தின் தன்மை எதுவாக இருக்கும் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. அது தெரியாத வரை அவன் என்ன திட்டம் போட முடியும்? ஆகவே இந்த விஷயத்தில் நம் கை தான் ஓங்கி இருக்கிறது. நாம் செயல்படும் இடத்தில் பலவீனமடையாமலிருந்தால் எதற்கும் பெரிதாய் கவலைப்பட வேண்டியதில்லை.”      

 

சந்திரகுப்தன் நிம்மதியடைந்தான்.  முழுத்திட்டம் என்ன என்பது அவருக்கும், சந்திரகுப்தனுக்கும், சின்ஹரனுக்கும் மட்டுமே தெரியும். சின்ஹரன் ஒரு படையைச் சேர்த்துக் கொண்டு இன்னொரு பகுதியில் இருக்கிறான். கலவரங்கள் நடக்கவிருக்கும் பகுதிகள் ஒவ்வொன்றிலும் அந்தந்தப் பகுதியில் எப்போது என்ன செய்ய வேண்டும் என்பது அங்கங்குள்ள முக்கியஸ்தர் ஒருவருக்கு மட்டும் விளக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கும் அடுத்த பகுதிகளில் என்ன எப்படி எப்போது நடக்கப் போகின்றது என்று தெரியாது.  எனவே திட்டம் வெளியே கசிய வாய்ப்பேயில்லை.

 

சந்திரகுப்தன் தலைமையிலும், சின்ஹரன் தலைமையிலும் பலநூறு வீரர்கள் சேர்க்கப்பட்டிருந்தார்கள். அனைவரும் யவனர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஆச்சாரியரின் போதனைகளின் காரணமாக தாய்நாட்டைக் காக்க வேண்டும் என்று வந்தவர்கள். புதியவர்கள் அனைவரும் சின்ஹரனாலும் சந்திரகுப்தனாலும் நன்றாக பயிற்றுவிக்கப் பட்டவர்கள். ஒவ்வொருவர் மனதிலும் ஆச்சாரியர் பெரும் தீயை மூட்டியிருந்தார். எதிரிகளை வெல்லாமல் அடங்காத தீ அது. அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு நாளுக்காக வேண்டிக் காத்திருந்தார்கள்.

 

பிலிப்புக்கு முதலில் மாளவத்தில் நடக்க ஆரம்பித்த முதல் கலவரம் பற்றிய தகவல் வந்து சேர்ந்தது. முழு விவரங்கள் கிடைத்த போது பிலிப்புக்குக் குழப்பமே மிஞ்சியது. ஏனென்றால் அத்தனை பேரும் வயதானவர்கள். அதிகமாக அந்தணர்களும், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள முதியவர்களுமாக இருந்தார்கள். அவர்கள் முச்சந்திகளில் கூடி பாரதம் எங்கள் தாய்மண். அதை ஆக்கிரமித்துள்ள யவனர்களை விரட்டித் தாய்நாட்டை மீட்போம் என்ற கோஷத்தை எழுப்பியதோடு சரி, யாரையும் தாக்க முனையவில்லை. கோஷம் எழுப்பிய புரட்சியாளர்களை வீரர்கள் துரத்தியடித்தார்கள். கோஷமிட்டுக் கொண்டே கூட்டம் பிரிந்தது. மீண்டும் அமைதி திரும்பியது. இதைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை.  இது என்ன பைத்தியக்காரத்தனமான கலவரம் என்று பிலிப் திகைத்தான். அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக மற்ற இடங்களில் இருந்து வந்த ஒவ்வொரு தகவலும் இதுவாகவே இருந்தது.    

 

எல்லாப் பகுதிகளிலும் கலவரக்காரர்களில் சிலர் யவனர்கள் அல்லாத வீரர்களைப் பார்த்துஉங்கள் தாய்மண்ணை ஆக்கிரமித்திருக்கும் எதிரிகளிடம் பணி புரிந்து வயிற்றை நிரப்புகிறீர்களே அது கேவலமாக உங்களுக்குத் தோன்றவில்லையாஎன்று கேட்கிறார்கள் என்ற தகவலை எல்லா ஒற்றர்களும் வந்து சொன்னார்கள்.

 

பிலிப் பிரச்சினையின் விஷவித்தாக இந்தக் கேள்வியைப் பார்த்தான்.இப்படிக் கேட்டவர்களை சும்மாவா விட்டார்கள் வீரர்கள்?” என்று பிலிப் கேட்ட போது சிலர் சும்மா இருந்தார்கள், சிலர் பிரம்பால் அடித்தார்கள் என்ற தகவலை ஒற்றர்கள் சொன்னார்கள். அதற்கு மேல் தண்டிக்க அது பெருங்குற்றம் அல்ல என்ற மனோபாவமே அந்த வீரர்களுக்கு இருந்திருக்கும். ஏன் அனைவரையும் சிறைப்படுத்தவில்லை என்றும் பிலிப்பால் கேட்க முடியவில்லை. அத்தனைப் பெரிய சிறைச்சாலைகள் எங்கும் இல்லவும் இல்லை.

 

உண்மையான கலவரம் இதுவல்ல. இது எதற்கோ முன்னோடி. அடுத்து எதோ வரவிருக்கிறது? அது என்ன, எப்போது நடக்கும் என்பது தெரியாமல் பிலிப் குழம்பினான்.

 

(தொடரும்)

என்.கணேசன் 

1 comment:

  1. ஆச்சாரியாரின் அந்த திட்டத்தையும் அது வெற்றியடையும் விதத்தையும் பார்க்க ஆவலாக உள்ளேன்...

    ReplyDelete