சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, October 13, 2021

எழுதப்படாத கடிதமும், நோய் தீர்க்கும் சக்தியும்!

 

ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்! 29


ரு முறை ப்ளாவட்ஸ்கீ அம்மையாரைச் சந்திக்க இரண்டு புதிய நண்பர்கள் வந்தனர். அவர்கள் அபூர்வ சக்திகளை அம்மையார் எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதை மிக ஆர்வமாக இருந்தனர். அவர்கள் அம்மையார் அந்தரத்திலிருந்து மற்றவர்கள் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதங்களைக் கூடத் தருவிக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு முன்பே வியந்து போயிருந்தனர். ஒரு கடிதத்தைத் தருவிப்பது என்றால் முதலில் காகிதம் வேண்டும், பேனா வேண்டும், இங்க் வேண்டும், அதை ஒருவருடைய கையெழுத்தில் யாராவது எழுத வேண்டும், அது உண்மையாக அவர் கையெழுத்தோடு ஒத்துப் போக வேண்டும். இதெல்லாம் எப்படிச் சாதிக்கப் படுகிறது என்பதை அறிய அவர்கள் பேரார்வமாக இருந்தனர். அதற்கு ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அண்டசராசரத்தில் அனைத்தும் இருக்கின்றன என்றும் அவர் பயன்படுத்தும் அபூர்வ சக்திகள் அவற்றை வேண்டியபடி பயன்படுத்திக் கொள்கின்றன என்றும் தெரிவித்தார். ஆனாலும் அந்த விளக்கத்தால் அந்த நண்பர்கள் இருவரும் திருப்தி அடைந்து விடவில்லை. எப்படி நடக்கின்றது என்று அறிய ஆவலாய் இருந்தார்கள்.

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அன்று எதையும் செய்து காட்டும் மனநிலையில் இருந்தார். அவர் ஒரு காலி காகிதத்தை எடுத்து அந்த இரு நண்பர்களிடமும் தந்து காலி காகிதம் தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு அதில் ஏதாவது ஒரு சின்னக் குறியிட்டு விட்டுத் தன்னிடம் தரும்படி கேட்டுக் கொண்டார். அவர்களும் அப்படியே செய்தனர். அந்தக் காகிதத்தை எடுத்து தன் உள்ளங்கையில் சிறிது நேரம் வைத்திருந்து விட்டு அந்தக் காகிதத்தை அவர்களிடமே திருப்பித் தந்தார். அவர்கள் இருவரும் திகைப்புடன் அந்தக் காகிதத்தை வாங்கிப் பார்த்த போது அது ஒரு விலாசத்திற்கு ஆங்கிலேய அதிகாரி எழுதியிருந்த கடிதமாய் இருந்தது. சற்று முன் காலியாக இருந்த காகிதம் இப்போது ஒரு கடிதமாக மாறி எப்படி வந்திருக்கிறது என்று வியப்புடன் எண்ணிய அந்த இருவரும் தாங்கள் செய்திருந்த குறி அந்தக் காகிதத்தில் இருக்கிறதா என்று பார்த்தார்கள். அந்தக் குறி அந்தக் கடிதத்தில் இருந்தது. 

 

அவர்கள் அம்மையாரிடம் கேட்டார்கள். “பொதுவான கடிதங்கள் வரவழைப்பது சரி. அறிந்தவர்  அறியாதவர் யாராக இருந்தாலும் அவர்களின் கையெழுத்தோடு கடிதத்தைக் கொண்டு வர முடிவது எப்படி? அத்தனை பேர் கையெழுத்தையும் நீங்கள் அறிந்திருக்க முடியுமா?”

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்னார். “எல்லோருடைய கையெழுத்தையும் நான் அறிந்திருக்க முடியாது என்பது உண்மை தான். ஆனால் நான் முன்பே சொன்ன மாதிரி நான் பயன்படுத்தும் சக்திகள் பிரபஞ்சத்திலிருந்து அத்தனை தகவல்களையும் பெறவும் உபயோகப்படுத்தவும் முடிந்தவை

 

ஆனாலும் எப்படி?” என்ற வியப்பு அவர்கள் முகத்தில் தங்கியதைப் பார்த்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சிரித்தபடி சொன்னார். “எங்களைப் பிடிக்காத, எங்களை விமரிசிக்கிற ஆட்கள் யாராவது உங்களுக்குத் தெரிந்து இருக்கிறார்களா?”

 

அப்படி தியோசபிகல் சொசைட்டியையும், ப்ளாவட்ஸ்கீ அம்மையார் மற்றும் கர்னல் ஓல்காட்டையும் விமர்சிக்கும் ஆட்கள் நிறையவே அக்காலத்தில் இந்தியாவில் இருந்தார்கள். அப்படி விமர்சிப்பவர்கள் சிலரை அந்த இரண்டு நண்பர்கள் அறிவார்கள்.

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அம்மையார் சொன்னார். “அப்படிப்பட்ட விமர்சகர்களில் உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒருவரை நினைத்துக் கொள்ளுங்கள். அவர் எங்களுக்குத் தெரியாதவராக இருந்தால் இன்னும் நல்லது

 

அந்த நண்பர்கள் விமர்சகர்களிலேயே கடுமையாக விமர்சிப்பவர் ஒருவரை நினைத்துக் கொண்டார்கள். அந்த நபர் அந்த நண்பர்கள் இருவரும் தியோசபிகல் சொசைட்டிக்குச் செல்வதைக்கூட விரும்பாமல் அவர்களிடம் அடிக்கடி எதிர்ப்பு தெரிவிக்கிறவர். அந்த நபரை ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் கர்னல் ஓல்காட்டும் அறிந்திருக்கவில்லை.

 

முன்பு செய்தது போலவே ஒரு காலி காகிதத்தை அந்த நண்பர்கள் எடுத்துக் குறியிட்டு ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கையில் தர அம்மையார் அதைத் தன் உள்ளங்கையில் சிறிது நேரம் வைத்திருந்தார். பின் அவர்களிடம் நீட்டினார். அவர்கள் பரபரப்புடன் அந்தக் கடிதத்தை வாங்கிப் பார்த்தார்கள். அந்தக் கடிதத்தில் இருந்த கையெழுத்து அந்தக் கடுமையான விமர்சகரின் கையெழுத்தே தான் என்பதில் அவர்களுக்குச் சந்தேகமேயில்லை. கடிதம் கர்னல் ஓல்காட் அவர்களுக்கு எழுதப்பட்டிருந்தது.

 

எனதருமை கர்னல் ஓல்காட் அவர்களே,

 

இத்தனை நாட்கள் தங்களையும் தியோசபிகல் சொசைட்டியையும் கடுமையாக விமர்சித்ததற்கு நான் மன்னிப்பு கோருகிறேன். அதை ஏற்றுக் கொண்டு தங்கள் உயரிய அமைப்பான தியோசபிகல் சொசைட்டியின் சிறப்பான பத்திரிக்கையானதியோசபிஸ்ட்பத்திரிக்கையின் சந்தாதாரராக  இணைய நான் விரும்புகிறேன். அது மட்டுமல்ல தங்கள் தியோசபிகல் சொசைட்டியின் உறுப்பினராகவும் நான் இணைய விரும்புகிறேன்.

 

தங்கள் உண்மையுள்ள

கையொப்பம்

 

படித்து முடித்து அந்த நண்பர்கள் வயிறு குலுங்கச் சிரித்தார்கள். அவர்களால் மறக்க முடியாத ஒரு மகத்தான அபூர்வ நிகழ்வாய் அது அமைந்தது.

 

காலம் நகர்ந்தது. கர்னல் ஓல்காட் மறுபடி இலங்கைக்குப் பயணமானார். இந்த முறையும் பல புத்தமதத் துறவிகளையும் சந்தித்தார். இந்த முறை இலங்கையில் அவர் நிறைய நோயாளிகளைப் பார்த்தார். பல விதமான நோய்களால் பாதிக்கப்பட்ட அவர்களைப் பார்க்கையில் அவர் மனம் இரங்கியது. அவர்கள் நோய் தீர்க்க எதாவது முயற்சி செய்து பார்க்கலாமே என்று அவருக்குத் தோன்றியது. எத்தனையோ அபூர்வ சக்திகளை மகாத்மாக்களும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் வெளிப்படுத்தியதைப் பார்த்தவர் அவர். முயன்றால் நோய் தீர்க்கும் சக்தி முடியாததல்ல என்று அவர் உள்மனம் சொன்னது. மேலும் அவர் மெஸ்மெரிச, ஹிப்னாடிச முறைகளில் நோய் தீர்க்க முடிவது குறித்து நிறையப் படித்திருந்தார். அந்த முறைகள் குறித்த ஞானமும் அவரிடமிருந்தது. ஆனால் அவர் இது வரை எதையும் பயன்படுத்திப் பார்க்க முனைந்ததில்லை. 

 

ஒரு நாள் அவர் பக்கவாதத்தால் பாதி உடல் பாதிக்கப்பட்ட அப்பு என்ற மனிதனைச் சந்தித்தார். அவன் அந்த நோயால் படும் அவஸ்தை அவர் மனதை உருக்கியது. அவருடைய உள்மனம்இது உனக்கொரு வாய்ப்பு என்று நினைத்துக் கொள். இந்த ஆளின் நோய் தீர்க்க நீ முயற்சி செய்து பார்என்றது.

 

கர்னல் ஓல்காட் அப்புவிடம்உன் நோய் குணமாக்க நான் ஏதாவது முயற்சிகள் எடுக்கட்டுமா?” என்று கேட்டார்.

 

பெரிதாக அவரால் எதையும் செய்து விட முடியும் என்ற நம்பிக்கை இல்லாத போதும் அவர் முயற்சி செய்து பார்க்கட்டுமே என்று எண்ணி அப்பு தலையசைத்தான். அவர் சற்றுப் பிரார்த்தித்து விட்டு அவனுடைய பாதிக்கப்பட்ட தோளின் மீது கைகளை வைத்து சில அசைவுகளைச் செய்து அனுப்பினார். பின் அவர் வேறுசில மனிதர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அப்பு அங்கே வேகமாக வந்து அந்தத் தோள் பகுதியில் எத்தனையோ குணம் தெரிவதாகச் சொன்னான். உடனே கர்னல் ஓல்காட் உற்சாகமடைந்தார். மறுபடி கால் மணி நேரம் அவனுக்குத் தனக்குத் தெரிந்த வழியில் சிகிச்சையைத் தொடர்ந்தார். பின் அவனை அனுப்பி வைத்தார்.

 

இப்படியே நான்கு நாட்கள் செய்த பின் அவன் இது வரை அசையவே முடிந்திருக்காத கையைத் தலைக்கு மேல் நீட்டிச் சுற்றக்கூட முடிந்தது. பிரிக்கவே முடியாத கை விரல்களை அவனால் பிரிக்க முடிந்தது. அவன் கைகளில் பேனா பிடித்து எழுத முடிந்தது. அவன் கண்கள் கலங்க அவரைப் பார்த்து கைகூப்பினான். இந்தச் செய்தி தீயாய் பரவியது.   ஆட்கள் அவரைத் தேடி வர ஆரம்பித்தார்கள். முடிந்த வரை கர்னல் ஆல்காட் ஒவ்வொருவரையும் குணப்படுத்த முயன்றார். அவர் முயற்சியில் பலர் குணமாயினர். பின் படையெடுத்து வந்த பெருங்கூட்டத்தைச் சமாளிக்க அவராலேயே முடியவில்லை. அவரை மக்கள் சாப்பிட விடவில்லை, தூங்க விடவில்லை. எங்கே சென்றாலும் பின் தொடர்ந்தார்கள். அது அவருக்குப் பெருந்தொந்தரவாக மாறிய போதும் ஆன்மிகப் பாதையில் அவருக்குக் கிடைத்திருக்கும் இந்தச் சக்தியால் எத்தனையோ பேர் வாழ்க்கையைச் சரி செய்ய முடிகிறதே என்று இறைவனுக்கு நன்றி சொல்லி அவர் மக்களின் தொந்தரவுகளைச் சகித்துக் கொண்டார்.

 

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி 

No comments:

Post a Comment