சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 18, 2021

யாரோ ஒருவன்? 54


நாகராஜின் சக்தியை நினைக்கையில் தீபக்குக்குப் பிரமிப்பாக இருந்தது. நாகராஜ் சொன்னபடியே இரண்டு நாட்களாக தீபக்குக்கு இரவில் அந்தக் கனவு வருவதில்லை. இத்தனைக்கும் வேண்டுமென்றே ஒரு நாள் உறங்கப் போவதற்கு முன் பழைய கனவை அவன் மனதில் நீண்டநேரம் எண்ணியபடியே தான் உறங்கினான். “நான் இயற்கையாய் சாகலை. என்னைக் கொன்னுட்டாங்கஎன்று அதலபாதாளத்திலிருந்து கேட்பது போல் கேட்ட அந்த வார்த்தைகளை யோசித்தபடி தான் உறங்கினான். ஆனாலும் அன்றைய தூக்கத்தில் வேறெதோ கனவுகள் வந்தனவேயொழிய அந்தக் கனவு வரவில்லை.

மறுநாள் வாக்கிங் போகையில் அதை நாகராஜிடமே சொல்லி தீபக் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான். குழந்தையின் உற்சாகத்தோடு பேசிய அவனது ஆச்சரியத்தைப் பார்த்து நாகராஜ் புன்னகைத்தானேயொழிய வேறு எதுவும் அதுகுறித்து அவன் பேசவில்லை. தீபக் விடாமுயற்சியோடு கேட்டான். “சார் அது யாரோட ஆத்மான்னு கண்டுபிடிச்சு சொல்லுங்களேன்...”

நாகராஜ் சொன்னான். “உனக்கு தான் இப்ப அந்தக் கனவு வர்றதில்லையே. பேசாமல் அதை விட்டுட வேண்டியது தானே. ஏன் தெரிஞ்சுக்க ஆசைப்படறே. தெரிஞ்சுகிட்டு என்ன பண்ணப் போறே?”

அதைத் தெரிஞ்சுகிட்டதுக்கப்பறம் தான் யோசிக்கணும். ஆனாலும் எதாவது செய்வேன். ஏதோ ஒரு ஆத்மா என்னை மதிச்சு என்கிட்ட அதைச் சொல்லி இருக்குன்னா, ஏதாவது பிரத்தியேக காரணம் இல்லாமலிருக்காதுல்லியா அங்கிள்

நாகராஜ் முகத்தைக் கடுமையாக்கிச் சொன்னான். “நீ இந்த மாதிரி சும்மா நச்சரிச்சா நான் உன்கிட்ட பேசறதை நிறுத்திடுவேன்...”

மற்றவர்களைப் பணிய வைக்கும் நாகராஜின் கோபம் தீபக்கை ஒன்றும் செய்யவில்லை. மிக நெருக்கமானவர்கள் பொய்க்கோபத்தோடு சொல்லும் விளையாட்டு வார்த்தைகளைப் போல் தீபக் அதை எடுத்துக் கொண்டான். ”ஏதாவது ஒரு சின்னக் குறிப்பு மட்டும் சொல்லுங்க. இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் கண்டிப்பாய் இந்த விஷயமாய் தொந்தரவு செய்ய மாட்டேன். ப்ராமிஸ்என்று சொன்னபடி அவன் நாகராஜின் கைவிரல்களைப் பிடித்துக் கொண்டான்.

நாகராஜால் முகக்கடுமையை நீட்டிக்க முடியவில்லை. சிறியதொரு புன்னகை பூத்து விட்டு வெட்டவெளியைச் சிறிது நேரம் பார்த்தபடி நடந்தான். தீபக்குக்கு அவன் ஏதோ ஒரு காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது போல் தோன்றியது. இரண்டு நிமிடங்கள் கழித்து நாகராஜ் சொன்னான். “யாரோ ஒரு பெண் அந்த ஆத்மாவிடம் கவிதை சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவன் அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறான்...”

தீபக் அவன் மேலும் எதாவது சொல்வான் என்று ஆர்வமாகப் பார்க்க நாகராஜ் சொன்னான். “அவ்வளவு தான்

வாக்கு கொடுத்தபடியே தீபக் அதற்கு மேல் நச்சரிக்கவில்லை. அவனுக்கும் கவிதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் கவிதைகளில் ஈடுபாடுள்ள அந்த ஆத்மா அவன் கனவில் வந்து புலம்பியிருக்கிறதோ?

நாகராஜ் திடீரென்று அவனிடம் சொன்னான். “நீ உன் காலேஜ் வாழ்க்கையைப் பத்திச் சொல்லேன்..”

தீபக் அவன் பேச்சை மாற்றியதில் வருத்தப்படாமல் உற்சாகமாக அவன் நண்பர்களைப் பற்றியும், ஆசிரியர்களைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தான். நாகராஜ் அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டே வந்தான். நேரம் போனதே தெரியவில்லை. சீக்கிரமே வீடுவந்து சேர்ந்து விட்டார்கள்.

நாகராஜும், சுதர்ஷனும் வீட்டுக்குள் நுழைய, தீபக் கல்யாணின் வீட்டுக்குள் நுழைவதைத் தவிர்த்தான். வாசலில் நின்றிருந்த வேலாயுதத்தைப் பார்த்து இன்று தகவல் ஒன்றுமில்லை என்று கையால் சைகை காண்பித்து விட்டு நடக்க ஆரம்பித்தான். இன்று அவனுக்குக் கல்லூரி போக வேண்டியிருக்கிறது. கிழவரிடம் சிக்கினால் சீக்கிரத்தில் விடமாட்டார். கேள்வி மேல் கேள்வி கேட்டு கழுத்தறுத்து விடுவார்.  நேற்று தர்ஷினி கூட அவனிடம் சொல்லி  இருந்தாள். “எங்க தாத்தா அப்படித்தான்... உனக்கு வேலையிருந்தா அவர் கிட்ட சிக்காம நீ பாட்டுக்குப் போய்ட்டே இரு. அது தான் நல்லது


தகவல் ஒன்றுமில்லை என்று கையால் சைகை காட்டிப் போகும் தீபக்கை ஏமாற்றத்துடன் பார்த்து விட்டு வேலாயுதம் திரும்பிப் பக்கத்து வீட்டைப் பார்ப்பதற்குள்  நாகராஜும், சுதர்ஷனும் உள்ளே போய்விட்டிருந்தார்கள்.


தன்லாலின் மனைவி இப்போதெல்லாம் அலைபேசி கையில் இல்லாமல் இருப்பதேயில்லை.  குளிக்கப் போகும் போது கூட அதைக் குளியலறைக்குக் கொண்டுபோய் விடுகிறாள். கடத்தல்காரன் அந்த நேரத்தில் போன்செய்து அவள் பேசவில்லை என்றாகிவிடக்கூடாது என்று பயந்தாள். ஆனால் மூன்று நாட்கள் கழிந்தபின்பும் கடத்தல்காரன் மறுபடி அவளை அழைக்கவில்லை 

போலீஸ் மேலதிகாரிக்கு அவள் போன் செய்து பேசினாள். அவர் தெளிவாகச் சொன்னார். “கடத்தல்காரனுக்கு வேண்டியது மதன்லால் அல்ல பணம் தான். அதனால கண்டிப்பா போன் வரும்மா. காத்திருங்க

அவள் வேறுவழி இல்லாமல் காத்திருந்தாள். ஒவ்வொரு அழைப்பு வந்த போதும் அது கடத்தல்காரனா என்று பார்த்தாள். ஒவ்வொரு குறுந்தகவல் வந்த போதும் அது அவன் அனுப்பியதா என்று பார்த்தாள். ஆனால் கடத்தல்காரன் அவளைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை.   முதல் முறையாக அவளுக்கு முன்பிருந்த அலட்சியம் போய் லேசாய் பயம் வர ஆரம்பித்தது. எங்கே அவள் கணவன்? இன்னும் உயிரோடு தானிருக்கிறானா?


ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோல்ம் நகரின் பிரதான பகுதியில் இருந்த ஒரு பங்களாவில் தொலைபேசி மூன்று முறை அடித்து நின்று ஒரு நிமிடம் கழித்து மறுபடியும் அடிக்க ஆரம்பித்தது. அந்த ரகசிய சங்கேத முறையில் அல்லாமல் சாதாரணமாக முறையில் தொலைபேசி அடித்தால் அது எப்போதும் எடுத்துப் பேசப்படுவதில்லை.

ஒரு முதியவர் வந்து ரிசீவரை எடுத்தார். அவர் ஹலோ கூடச் சொல்லவில்லை. ஆனால் அதை மறுபக்கம் எதிர்பார்க்கவுமில்லை. சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு மறுபக்கத்தில் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வெளியே சென்று தோட்டத்தில் புல்வெளியில் படுத்தபடி ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த அஜீம் அகமதிடம் சென்று முதியவர் இந்தியாவில் இருந்து வந்த அந்தச் செய்தியைத் தெரிவித்தார்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட அஜீம் அகமது கண்களை மூடிக் கொண்டு சிறிது யோசித்தான். அவனைப் போன்ற ஒரு ஆளின் கவனத்திற்கு முக்கியமில்லாத சில்லறை விஷயங்கள் கொண்டுவரப்படுவதை அவன் எப்போதும் ரசிப்பதில்லை. ஜனார்தன் த்ரிவேதி கவலைப்பட்டுச் சொல்லும்  இந்தியாவின் இந்த நிகழ்வுகள் எந்த வகையிலும் அவனையோ, அவன் ஆட்களையோ பாதிக்கப்போவதில்லை.  எந்த உண்மைகளை நரேந்திரன் இனி கண்டுபிடித்தாலும் கூட அவர்களை ஒன்றும் செய்ய முடியாத பாதுகாப்பான நிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள். அதனால் அங்கே என்ன நடந்தாலும் பிரச்சினை ஜனார்தன் த்ரிவேதிக்கே. ஒரு காலத்தில் அவரும் அவர் கட்சியும் நிறைய உதவிகளை அவனுக்குச் செய்திருக்கிறார்கள். அதனால் அவன் ஓரளவு அவருக்குக் கடன்பட்டிருக்கிறான். அஜீம் மனது வைத்தால் தான் எதாவது செய்ய முடியும் என்று அவர் சொன்னபிறகும் அவன் எதுவும் செய்யாமலிருப்பது சரியல்ல என்று நினைத்தான். எதாவது செய்வதானால் என்ன நடந்திருக்கிறது என்பதை முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்

முதலில் இரண்டு தலைமறைவுகளுக்குப் பின்னாலும் ஒரே ஆள் தான் இருக்கிறானா இல்லை வேறு வேறு ஆள்கள் இருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள வேண்டும். சஞ்சய் ஷர்மா பெண்கள் விஷயத்தில் பலவீனமானவன். அவன் ஒரு பெண்ணுடன் எங்காவது உல்லாசமாக இருக்கக்கூடும். போலீஸ் அதிகாரிகளே கடத்தப்படுவது இயல்பான நிகழ்வு இல்லை தான். எத்தனையோ பணக்காரர்கள் இருக்க மதன்லால் கடத்தப்பட்டிருப்பது யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆனால் மதன்லால் போன்ற ஆட்கள் எங்கே போனாலும் சுலபமாக எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்வார்கள்.  தேவை இல்லாவிட்டாலும், யாரும் என்னை ஒன்றும் செய்து விடமுடியாது. முடிந்தால் முயற்சி செய்து பாருங்களேன் என்று திமிர் பிடித்து சவால்விடும்படியாக வாழ்பவன் அவன். சில நேரங்களில் அப்படிப்பட்ட சவாலை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களும் உருவாகி விடுகிறார்கள். பழைய பகை ஏதாவது ஒன்றிருந்து எவனாவது அதைத் தீர்த்துக் கொள்ள இப்போது முயற்சி செய்திருக்கலாம். அல்லது அந்தப் பழைய பகைவன் நரேந்திரனாகவே கூட இருக்கலாம்.   

அந்த ரா அதிகாரி நரேந்திரன் புதியவன் என்பதால் அவனைப் பற்றி நிறைய தகவல்கள் அஜீம் அகமதிடம் இல்லை. ஒருவேளை இதற்கெல்லாம் சூத்திரதாரி நரேந்திரன் என்றால் அவனைப்பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது சிறிது முக்கியமாகிறது.

அஜீம் அகமது அந்த முதியவரிடம் சொன்னான். “நரேந்திரனிடம் நேரில் போய்ப் பேசும்படி த்ரிவேதியிடம் சொல்லுங்கள்…”



(தொடரும்)
என்.கணேசன்






3 comments:

  1. Ajeem entered in this story.. nice moving.


    Nagaraj nallavar ah kettavar ah therliye..

    ReplyDelete
  2. தீபக் கனவு பற்றி நாகராஜ் சொன்னது....மேலும் குழப்பத்தையே ஏற்ப்படுத்துகிறது.... நரேந்தினுக்கு இனி பல சவால்கள் காத்திருக்கிறது....

    ReplyDelete
  3. Intha madhiri irandu kadhaiyum ondraaga pathi pathi oru chapter la vandha nalla irukku.

    ReplyDelete