தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Thursday, April 29, 2021
இல்லுமினாட்டி 100
Wednesday, April 28, 2021
Monday, April 26, 2021
யாரோ ஒருவன்? 29
Sunday, April 25, 2021
Saturday, April 24, 2021
Friday, April 23, 2021
சாத்தான் நடனமும், யோக சக்திகளும்!
ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்! 25
ப்ளாவட்ஸ்கீ அம்மையார் மற்றும் கர்னல் ஓல்காட்டின் இலங்கைப் பயணம் தியோசபிகல் சொசைட்டியை அந்த நாட்டு மக்களுக்கும் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியாக இருந்தது. சென்ற இடங்களில் எல்லாம் தியோசபிகல் சொசைட்டி குறித்து சொற்பொழிவு ஆற்றி ஆன்மிகத்தை இருவரும் பரப்பியதோடு நின்று விடாமல் அந்த இடத்தில் பின்பற்றப்பட்ட ஆன்மிகத்தையும், வித்தியாசமான சடங்குகளையும் கவனித்து அதன் சாராம்சத்தையும் அவர்கள் புரிந்து கொண்டு பலனடைந்தார்கள். இலங்கையில் அவர்கள் கண்ட வித்தியாசமான சடங்கு சாத்தான் நடனமாக இருந்தது.
அந்த சாத்தான் நடனம் தீர்க்க முடியாத, கடும் வியாதிகளைத் தீர்க்கப் பயன்படுத்தப்பட்டது. அந்த நடனத்தை ஆட தேர்ச்சி பெற்ற சிலர் வரவழைக்கப்பட்டார்கள். கொடிய நோய்களால் தாக்கப்படுவதை அவர்கள் சாத்தானால் அல்லது தீய சக்திகளால் ஆட்கொள்ளப்படுவதாகவே கருதினார்கள். அந்த நோயைக் குணப்படுத்த சாத்தான் அல்லது தீயசக்திகளை வியாதியஸ்தர்களின் உடல்களில் இருந்து விரட்ட வேண்டும் என்று எண்ணினார்கள். அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து சில குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே விரதமிருந்து அந்தச் சடங்கை மேற்கொள்வார்கள். சில மந்திரங்கள் சொல்லிப் பின் அந்தச் சடங்கு ஆரம்பிக்கப்படும். ஆடுபவர்கள் ஒரு கையால் தென்னங்கீற்றுகளால் ஆன நீண்ட ரிப்பன்களைச் சுழற்றிக் கொண்டும், மறு கையால் தீப்பந்தங்களை ஆட்டிக் கொண்டும் இருப்பார்கள், ஒரு கட்டத்தில் சில மூலிகை மருந்துகள் எரிக்கப்படும். நடனமும் துரிதப்படுத்தபடும். புகைமண்டலத்திற்கு நடுவே வியாதிகளுக்குத் தீர்வும் நடனமாடுபவர்களுக்குத் தெளிவாகத் தெரிய வரும். அதன்படி அவர்கள் இயங்குவார்கள். முடிவில் அருகே இருக்கும் மரங்கள் ஏதாவதிலிருந்து ஒரு கிளை முறிந்து விழும். அது முறிந்து விழுகையில் நோய்வாய்ப்பட்டவரின் உடலில் இருந்து நோய் விடைபெற்றிருக்கும். அந்தச் சடங்கை நேரில் பார்க்கையில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் அந்தச் சடங்குகளுக்குப் பின்னால் இருந்த சூட்சும விஷயங்களைக் கூர்ந்து கவனித்தார்கள். அங்குள்ளவர்களிடம் விசாரித்த போது எத்தனையோ காரணம் தெரியாத வினோதமான நோய்கள் எல்லாம் இந்த வித்தியாசமான சடங்கில் குணப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது தெரிய வந்தது.
அடுத்த நாள் மாலை தியோசபிகல் சொசைட்டியின் ஆன்மிகக் கருத்துகள் குறித்து கர்னல் ஓல்காட் சிங்களர்கள் மற்றும் தமிழர்கள் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் ஆங்கிலத்தில் நீண்ட சொற்பொழிவாற்றினார். அவர் சொன்னதை எல்லாம் மிகவும் கவனமாக அவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்ட போதிலும் பேச்சை அவர் முடித்த போது ஒரு கைத்தட்டலோ, பாராட்டோ ஒருவரிடமிருந்தும் வரவில்லை. கர்னல் ஓல்காட் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் தாழ்ந்த குரலில் கேட்டார். “என் பேச்சு நன்றாக இருக்கவில்லையா?”
ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்னார். “அருமையாகப் பேசியிருந்தீர்கள்” என்று சொன்னார்.
கர்னல் ஓல்காட் “பின் ஏன் இவர்கள் இப்படி அமைதியாக இருக்கிறார்கள். ஒரு கைத்தட்டல் கூட இல்லையே”
அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு சிங்களர் சொன்னார். “ஐயா தாங்கள் சொன்ன ஆன்மிகக்கருத்துகளை உள்வாங்கி அனைவரும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அந்த உள்வாங்கலையும், சிந்தனைகளையும் பாதிக்கக்கூடிய எந்தச் செயலிலும் ஈடுபடுவது சரியல்ல என்று நாங்கள் நம்புகிறோம்...அதனால் கைத்தட்டல் கூட ஒரு இடையூறு என்று நினைத்துத் தான் அமைதியாக இருக்கிறோம்.”
இது கர்னல் ஓல்காட்டுக்கு இலங்கை மக்களின் வித்தியாசமான மனப்பக்குவத்தை அறிமுகப்படுத்துவது போல இருந்தது. சில நாட்கள் அங்கே தங்கி அங்கிருந்த ஆன்மிக ஞானத்தைப் பெற்றும், தாங்கள் அறிந்திருந்த ஆன்மிக ஞானத்தைப் பரப்பியும் இருந்துவிட்டு இருவரும் மறுபடியும் இந்தியா திரும்பினார்கள்.
மும்பை திரும்பியவர்கள் பின் அலகாபாத் சென்று அங்கு இயங்கி வந்த ஆரிய சமாஜ அமைப்புடன் இணைந்து யோகக்கலை மற்றும் யோகசக்திகள் குறித்த ஞானத்தை விரிவாக்கிக் கொண்டார்கள். அப்போது ஆரிய சமாஜின் தலைவராக இருந்த தயானந்த சரஸ்வதி அது குறித்த ஆழ்ந்த தெளிவான ஞானம் பெற்றிருந்தார்.. ஒரு பாமர மனிதனின் பார்வையில் எழுந்த சந்தேகங்களை கர்னல் ஓல்காட் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பதில்களை தங்கள் தியோசபிகல் சொசைட்டி பத்திரிக்கையில் பிரசுரமும் செய்தார். யோகசக்திகளின் இயல்புகளை இதை விடத் தெளிவாக யாரும் புரிந்து கொள்ள முடியாது என்று கர்னல் ஓல்காட் நினைக்குமளவு அந்தக் கேள்வி-பதில்கள் அமைந்திருந்தன. அவற்றில் முக்கியமானவற்றைப் பார்ப்போம்.
கேள்வி: யோகா என்பது விஞ்ஞானமா அல்லது உயர்சக்திகள் குறித்த அனுமானமா?
பதில்: யோகா என்பது இயற்கையின் விதிகளைத் துல்லியமாகச் சொல்லும் விஞ்ஞானமே. பதஞ்சலி முனிவர் அவற்றை ஒருங்கிணைத்துத் தந்திருக்கிறார்.
கேள்வி:: யோக சக்திகளை இக்காலத்திலும் ஒருவர் பெற முடியுமா?
பதில்: இயற்கையின் விதிகள் காலத்திற்கேற்ப மாறுபவை அல்ல. அவை அன்றிலிருந்து இன்று வரை ஒன்று தான். எனவே அதை முறையாகப் பின்பற்றினால் இன்றும் அந்த மகாசக்திகள ஒருவர் பெற முடியும்.
கேள்வி: நீங்கள் இந்த யோகசக்திகளை யாருக்காவது சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்களா? அவர்களால் அவற்றைப் பூரணமாகக் கற்றுக் கொள்ள முடிந்திருக்கிறதா?
பதில்: என்னிடம் இது வரை மூன்று மாணவர்கள் யோகக்கலையைக் கற்றுக் கொள்ள வந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் ஆக்ராவைச் சேர்ந்த இளைஞர். ஆனால் யாருமே யோக்ககலையைப் பூரணமாய் கற்றுக் கொண்டு விடவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை. காரணம் யோகக்கலைக்கான பயிற்சிகள் தொடர்ந்து செய்ய வேண்டியவை. அவற்றைக் கற்றுக் கொள்வதில் சலிப்போ, அவசரமோ இருக்கக்கூடாது. ஆனால் கற்றுக் கொள்ள வருபவர்கள் உடனடி விளைவுகளை எதிர்பார்க்கிறார்கள். பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதில் சீக்கிரமே சலிப்படைந்து விடுகிறார்கள்.
கேள்வி: அப்படி இந்த அரிய யோகக்கலையில் முடிவு வரை சென்று சக்தி பெற்றவர்கள்
இருக்கிறார்களா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
பதில்: யோகக்கலையை முழுமையாகக் கற்றுக் கொண்டு சக்திகளைப் பெற்றவர்கள் கண்டிப்பாக இருக்கிறார்கள். ஆனால் எண்ணிக்கையில் குறைவாகத் தான் இருப்பார்கள். அவர்கள் இமாலயம் போன்ற இடங்களில் மறைவாக இருக்கிறார்கள். அவர்கள் பொதுமக்கள் பார்வையில் அதிகம் தங்க விரும்புவதில்லை. தங்களை வெளிப்படுத்துவதில் அவர்களுக்குத் தயக்கம் உண்டு.
கேள்வி” இந்த யோகசக்திகளுக்கு எல்லை தான் என்ன?
பதில்: யோகிகளின் விருப்பத்தின் எல்லையே அவர்களுடைய சக்திகளின் எல்லையாக இருக்கிறது;
கேள்வி: யோகிகள் பொதுவாக எந்தெந்த சக்திகளைப் பெற்றிருக்கிறார்கள்?
பதில்: யோகிகள் மற்ற யோகிகளுடன் எந்நேரமும் மானசீக அளவில் தொடர்பில் இருக்க முடியும். அவர்களால் மற்றவர்கள் மனதில் உள்ளதை சொல்லாமலேயே படிக்க முடியும். அவர்களால் குறிப்பிட்ட காலத்திற்கு தங்கள் உடலிலிருந்து வேறு உடலுக்குச் சென்று வேறு உடலில் ஆதிக்கம் செலுத்த முடியும்.
கேள்வி: ஒரு யோகி எந்தக் காலம் வரை இந்த அபூர்வ சக்திகளை வெளிப்படுத்த முடியும்?”
பதில்: ஒரு யோகி தன் உடலில் இருக்கும் கடைசி மூச்சு வரை இந்த அபூர்வ சக்திகள் வெளிப்படுத்த முடியும். யோகிக்கு அந்தக் கடைசி மூச்சின் காலம் கூட முன்கூட்டியே தெரிந்து விடும். அது வரை யோகியால் சக்திகளை வெளிப்படுத்த முடியும்.
கேள்வி: ஒரு யோகி அடுத்தவர் உடலுக்குள் ஆவியாகப் புகுந்து வாழ முடியுமா? தன்னுடைய உடலின் அந்திமக்காலத்தில் வேறு உடலில் புகுந்து வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள முடியும்.
பதில்: முடியும்.
கேள்வி: எத்தனை வகை யோகக்கலைகள் இருக்கின்றன?
பதில்: இரண்டு. ஒன்று ஹத யோகம் இது உடலை வலிமைப்படுத்துவது. இன்னொன்று ராஜ யோகம். இது அபூர்வ சக்திகளைப் பெறுவது.
கேள்வி: யோக சக்திகளில் ஏராளமான ஏமாற்றுப் பேர்வழிகளும் இருக்கிறார்களே. இதில் உண்மை, போலி இரண்டையும் பிரித்தறிவது எப்படி.
பதில்” யோகசக்திகளில் போலிகள் இரண்டு வகை இருக்கின்றன. ஒன்று கண்கட்டு வித்தை. கண நேரத்தில் வேகமாக இயங்கி ஏமாற்றுவது. இன்னொன்று சில வெளி சக்திகள் அல்லது மனிதர்களின் உதவியுடன் செய்யப்படும் சில குறிப்பிட்ட வித்தைகள். இரண்டுமே உண்மையான யோகமாகச் சொல்ல முடியாது. உண்மையான யோகி எந்த வெளி உதவியும் பெறாமல் தன் எண்ண வலிமையாலேயே எல்லாவற்றையும் செய்ய முடிந்தவனாக இருக்கிறான்.
கேள்வி: ஒரு யோகிக்குத் தேவையான குணங்கள் என்னென்ன?
பதில்: எல்லையில்லாத ஆர்வம், தன் எண்ணங்களிலும் உணர்ச்சிகளிலும் பரிபூரண கட்டுப்பாடு. மனதை எண்ணிய சமயத்தில் குவிக்க முடிவது, மனதிலும், புலன்களிலும் தூய்மையாக இருப்பது போன்றவை முக்கியமானவை.
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி : தினத்தந்தி