சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 25, 2021

யாரோ ஒருவன்? 16


னார்தன் த்ரிவேதி சஞ்சயைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்தார். அவன் காணாமல் போய் இரண்டு நாட்கள் முடிந்து விட்டன. அவனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. செல்போன் ஸ்விட்ச்சுடு ஆஃப் என்ற தகவல் சொல்கிறது. சஞ்சயின் மனைவி தினமும் காலையில் வந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டுப் போகிறாள். அவன் கூட இருந்தால் இரண்டு பேருக்கும் சண்டையே முடிவதில்லை. அவரே போய் பல முறை மத்தியஸ்தம் செய்து விட்டு வந்திருக்கிறார். கணவன் காணாமல் போய் விட்டால் மனைவிகளுக்கு என்ன தான் அன்பு பெருகி விடுகிறதோ தெரியவில்லை. கணவனுடன் ஒரு வாரமாகச் சண்டை போடவில்லை என்று அவள் சத்தியம் பண்ணிச் சொன்னாள். அதனால் அவன் குடும்பப் பிரச்சினை காரணமாக எங்கும் போயிருக்க வாய்ப்பில்லை என்பது மீண்டும் உறுதியாகத் தெரிகிறது.

ஜனார்தன் த்ரிவேதி ஐம்பது வருடங்களாக அரசியலில் இருக்கிறார். அவர் கட்சி முப்பத்தைந்து வருடங்கள் ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறது. அவர் அதில் இருபத்தியேழு வருடங்கள் மத்திய மந்திரியாக இருந்திருக்கிறார். நடப்பது அவர் கட்சி ஆட்சியாக இருந்தால் ஒரு போன்கால் போதும். எல்லா வேலைகளும் நடந்து விடும். ஆனால் ஆட்சி மாறிய பிறகு அவ்வளவு சுலபமாகச் சின்ன வேலை கூட நடப்பதில்லை. சோதனைக்காலங்களில் அரசியலில் யாருக்கும் யாரும் நண்பர் அல்ல. அவரவர் பிரச்னையை அவரவரே தீர்த்துக் கொள்ள வேண்டும்.  ஏனென்றால் ஆட்சி செய்யும் காலத்தில் ஏற்படுத்தி விட்டிருக்கும் பிரச்னைகள் எல்லாருக்கும் இருக்கிறது. அவரவர் பிரச்னைகளைத் தீர்க்கத் தீவிரமாகப் பாடுபடும் போது அடுத்தவர் பிரச்னையைத் தீர்க்க யாருக்கும் நேரமிருப்பதில்லைஇது நடைமுறை யதார்த்தம் தான். அதனால் அவர் வருத்தப்படவில்லை.

அவர் முன்பு சந்தேகித்த தீவிரவாத ஆட்களும் இதில் ஈடுபடவில்லை என்று தெரிவித்த பிறகு அவருக்கு மறுபடியும் நரேந்திரன் மேல் தான்  சந்தேகம் வலுத்திருந்ததால் அவன் போகுமிடங்களை எல்லாம் கண்காணிப்பது தான் புத்திசாலித்தனம் என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது. தொடர்ந்து அவன் போகுமிடங்களைக் கண்காணித்தால் அவன் எங்கேயாவது சஞ்சயை ஒளித்து வைத்திருக்கும் பட்சத்தில் அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று அவர் நினைத்தார்.

ஒருவேளை சஞ்சய் நரேந்திரனிடம் சிக்கி இருந்தால் அவன் நீண்டகாலம் தாக்குப் பிடிக்க முடியாமல் உண்மைகளைச் சொல்லி விடும் அபாயம் இருக்கிறது. அப்படி சஞ்சய் உள்ளதை எல்லாம் சொல்ல ஆரம்பித்தால் தீவிரவாதிகளுக்குக் கூட பிரச்னை இல்லை. அவருக்கு அதில் பெரிய பிரச்னை வந்து விடும். அதனால் அவர் சஞ்சயை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்து மீட்க வேண்டிய அவசரத்தில் இருந்தார்.  அதனால் அவர் தன் மேனேஜரிடம் நகரத்தில் நம்பகமான திறமையான துப்பறியும் நிறுவனம் எது என்று விசாரித்து சொல்லச் சொன்னார்.

அவருடைய மேனேஜர் நன்றாக விசாரித்து விட்டு அவரிடம் சொன்னான்.. “ஐயா எல்லாரும் ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸி பேரைத்தான் சொல்றாங்க. ஆனால் அந்த ஏஜென்ஸிக்காரங்க தொகை அதிகம் கேட்கறாங்க. ஒருத்தனே பின் தொடர்ந்தா கண்டுபிடிச்சுடுவாங்கங்கறதால அவங்க ஒரு ஆள், ரெண்டு ஆளை இந்த வேலையில் அனுப்பறதில்லையாம். பத்து ஆளுகள அனுப்புவாங்களாம். யாருமே ஒரு வீதிக்கு மேல பின் தொடர மாட்டாங்களாம். அடுத்த வீதிக்கு வேற ஒருத்தன் தயாரா இருப்பானாம். அப்படி அந்த ஏரியால எந்தப் பக்கம் போனாலும் சுற்றுவட்டாரத்துல அவங்க ஆளுக தயாரா காத்துகிட்டிருப்பாங்களாம். ஒருத்தருக்கொருத்தர் தகவல் பரிமாற்றம் பண்ணிகிட்டு அப்பப்ப திட்டம் போட்டு ஒவ்வொரு ஏரியாவுக்கும் பின்னாடியே போவாங்களாம். இன்னும் என்னென்னவோ டெக்னிக் சொன்னானுக. என் தலையில ஏறலை. ஆனா காசு அதிகமா வாங்கினாங்கங்கன்னாலும் வேலை ஆகும்னு சொன்னாங்க

அவருக்குப் பணம் ஒரு பிரச்னையே அல்ல. உடனடியாக அந்த ஏஜென்ஸியிடமே அந்த வேலையை ஒப்படைக்கத் தீர்மானித்தார்.
  

நாகராஜின் வீட்டில் போர்ட்டிகோவில் ஒரு மின்விளக்கு தவிர மற்ற விளக்குகள் எல்லாம் இரவு பத்து மணிக்கு அணைக்கப்பட்டு விட்டன. வேலாயுதம் அறையின் ஜன்னல் அருகே நின்றிருக்க கல்யாண் செல்போனில் அவர் கட்டிலில் சாய்ந்தபடி வாட்சப் பார்த்துக் கொண்டு இருந்தான். பதினோரு மணியும் கடந்தது. இன்னும் எந்தச் சத்தமும் பக்கத்து வீட்டிலிருந்து கேட்கவில்லை. கண்கள் தானாக மூடிக் கொள்ள பதினொன்றே கால் மணிக்கு கல்யாண் மெள்ள எழுந்தான். “நான் தூங்கப் போறேன்ப்பா. நீங்களும் தூங்குங்க. ஏதோ ஒரு நாள் அப்படிச் சத்தம் கேட்டால் தினமும் கேட்கும்னு அர்த்தமில்லை.”

அந்த நேரத்தில் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்று திடீர் சத்தம் மிகத் தெளிவாகப் பக்கத்து வீட்டிலிருந்து கேட்க மகன் பேசுவதைக் கேட்பதற்கென்று திரும்பியிருந்த வேலாயுதம் கண்கள் விரிய படக்கென்று திரும்பி ஜன்னல் வழியே கூர்ந்து பார்த்தார். அந்தச் சத்தம் கேட்டு ஒரு கணம் இதயத்துடிப்பு நின்று பின்  வேகமாகத் துடிக்க ஆரம்பித்ததால் கல்யாணும் பாய்ந்து போய் ஜன்னல் அருகே நின்று கொண்டான். முன்பே இவர்கள் விளக்கை அணைத்து இருட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பதால்  இவர்கள் பார்ப்பதை நாகராஜ் எந்த வகையிலும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை.

சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது. சற்று முன் கேட்ட சத்தம் பிரமையோ என்று கல்யாண் நினைக்கும்படியாக எந்தச் சத்தமும் இல்லை. சுமார் பதினாறு நிமிடங்கள் கழித்து பாம்பு சீறும் சத்தம் இரவின் அமைதியைக் குலைத்துக் கொண்டு மறுபடி கேட்டது.

கல்யாண் தந்தையிடம் தாழ்ந்த குரலில் கேட்டான். “சத்தம் கேட்பது வீட்டுக்கு உள்ளிருந்தா இல்லை வெளியேவா?”

உள்ளே இருந்து தான்...” அவர் உறுதியாகச் சொன்னார்.

மறுபடி அரை மணி நேரம் கழித்து ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று நீண்ட சத்தம் கேட்டது. இப்போது பக்கத்து வீட்டின் ஜன்னல் வழியே நீலமும் பச்சையும் சேர்ந்த மாதிரியான ஒரு வெளிச்சம் தோன்றி மறைந்தது. வேலாயுதம் படபடக்கும் இதயத்தோடு அவன் காதருகே சொன்னார். “இந்த வெளிச்சம் நேத்து தெரியல


இதெல்லாம் நாகராஜுக்குத் தெரிந்து நடக்கிறதா, தெரியாமல் நடக்கிறதா என்று கல்யாண் யோசித்தான். வீட்டில் பாம்பு சீறும் சத்தம் கேட்ட பின் எவனாவது நிம்மதியாகத் தூங்க முடியுமா? சற்று முன் பளிச்சென்று தோன்றி மறைந்த பச்சை- நீல வெளிச்சம் அதுவாக இருக்குமோ? நினைக்கையிலேயே கல்யாணின் இதயம் படபடக்க ஆரம்பித்தது.



போதும் தூங்குங்கஎன்று நாகராஜ் தன் கனமான குரலில் மெல்லச் சொல்வது கேட்க இரண்டு பேரும் வேகமாக ஜன்னலிலிருந்து விலகி இரண்டு பக்கங்களில் சாய்ந்து கொண்டார்கள். இருவருக்கும் இதயத்துடிப்புகள் வேகமெடுத்தன. அவன் அவர்களைப் பார்த்து விட்டுச் சொல்கிறானோ?

ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் என்ற சத்தங்கள் ஒரே நேரத்தில் கேட்டன. அவன் சொன்னதற்குப் பாம்புகள் பதில் சொல்வது போல் தோன்றியது பிரமையாகக். கூட இருக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு தொடர்ந்த அமைதி நிலவ ஆரம்பித்தது.

வேலாயுதம் அசடு வழியச் சொன்னார். “அவன் நம்மளச் சொல்லலை”   

கல்யாண் இதயம் படபடக்க சிறிது நேரம் சிலையாக அமர்ந்திருந்தான். ஒரு வேளை இது அதுவோ? மகன் அவ்வளவு சீக்கிரம் எதிலும் அதிரக்கூடியவன் அல்ல என்பதால் வேலாயுதம் திகைப்புடன் மகனை லேசாக உலுக்கியபடி கேட்டார். “என்னடா ஆச்சு?”

அவன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன் அவன் வாழ்க்கையில் கதவைத் தட்டிய அதிர்ஷ்டம் மீண்டும் இப்போது கதவைத் தட்டுகிறதோ என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது.  பக்கத்து வீட்டில் சத்தம் அடங்கியது. ஆனால் அவன் இதயத்தின் படபடப்பு அடங்கவில்லை. அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் போது அந்தக் கதவைத் திறக்க முற்படாமல் இருப்பது அடிமுட்டாள்தனமே அல்லவா?



(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. Thrilling. In both phases answers seem to be in the period of 22 years ago. What next?

    ReplyDelete
  2. ஒருபக்கம் துப்பறியும் நிறுவனம் களமிறங்குகிறது.... மற்றொரு பக்கம் '22 வருடங்களுக்கு முன்..." என்று போகிறது.... அருமை...

    ReplyDelete