சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, October 14, 2020

முடிவுரை!


ந்தக் கீதோபதேசம் எல்லோருக்கும் எளிதில் படிக்கவோ, கேட்கவோ கிடைத்து விடுவதில்லை. பகவத் கீதை வேண்டிய அளவு கடைகளிலும், நூலகங்களிலும், இணையத்திலும் கொட்டிக் கிடந்தாலும் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்க்கே அதைப் படிக்கும் ஆர்வம் வரும். ஆரம்பித்தவர்கள் எல்லாருக்கும் படித்து முடிக்கும் வரை அதே ஆர்வம் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. புண்ணியம் செய்தவர்க்கே அதைப் படித்து முடிக்க முடியும். படித்து முடிப்பவர்களிலும்  சிறிதேனும் அதைப் பின்பற்ற முடிவதோ ஆயிரத்தில் ஒருவராலேயே முடியும். அதுவும் முந்தைய பிறவிகளில் ஆன்மிக முயற்சிகள் தொடர்ந்து எடுத்தவருக்கே சாத்தியப்படும்.

இப்படிப்பட்ட கீதையைச் சொல்லவும் கேட்கவும் கூட அருகதை வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுவதாவது:

இந்த உண்மையை தவமில்லாதவனுக்கும், பக்தியில்லாதவனுக்கும், கேட்க வேண்டுமென்ற ஆசையில்லாதவனுக்கும் எப்போதும் சொல்லாதே. என்னை வெறுப்பவனுக்கும் சொல்லாதே!

எவனொருவன் இந்தப் பரமரகசியத்தை என்னுடைய பக்தர்களுக்கு உபதேசிப்பானோ, அவன் என்னிடம் அதிகமாக பக்தி செலுத்தி என்னையே அடைவான். சந்தேகமில்லை.

அந்த பக்தனைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிடித்த காரியத்தைச் செய்யக் கூடியவன் மனிதர்களில் வேறு யாருமில்லை. அப்படியே பூமியில் அவனைக் காட்டிலும் எனக்கு மிகப் பிரியமானவன் வேறொருவன் இருக்கப் போவதில்லை.

நம் இருவருக்குமிடையே நடந்த இந்த தர்மமான உரையாடலை எவனொருவன் படிப்பானோ அவன் ஞானவேள்வியினால் என்னை ஆராதித்தான் என்றே நான் நினைப்பேன்.

சிரத்தையுடன், பொறாமையின்றி இதை எந்த மனிதன் கேட்கிறானோ அவனும் சகல பாவங்களும் நீங்கப் பெற்று புண்ணியம் செய்தவர்கள் அடையும் உலகங்களை அடைவான். ”

இந்த வார்த்தைகளுக்கு அதிக விளக்கம் தேவையில்லை.  நம்பிக்கையோ, தகுதியோ, பக்தியோ இல்லாதவர்களுக்கு பகவத்கீதையை உபதேசிப்பதில் அர்த்தமில்லை. புரியாத விஷயங்களை, புரிந்து கொள்ளச் சக்தியற்றவனுக்குச் சொல்வதில் ஒரு பலனுமில்லை.

கீதையைத் தகுதியுள்ள நான்கு பேருக்கு எடுத்துச் சொல்பவன் இறைவனுக்குப் பிரியமானவனாகிறான். படிப்பவன் ஆராதிப்பவனாகிறான். கேட்பவன் புண்ணியம் செய்தவனாகிறான்.

முடிவில் பகவான் கேட்கிறார்:
பார்த்தா! நீ மனத்தை ஒருமுகப்படுத்தி நான் உபதேசித்ததைக் கேட்டாயா? உன்னுடைய அஞ்ஞான மயக்கம் நீங்கியதா?
                                                       
அர்ஜுனன் சொல்கிறான்:
அச்சுதா! உன் அருளால் மோகம் அழிந்தது; நினைவு வந்தது; சந்தேகங்கள் நீங்கின; நிலைபெற்றேன்; நீ சொன்னபடியே செய்கின்றேன்.

அதன் பின்
சஞ்சயன் சொல்கின்றான். “இவ்வாறு வாசுதேவனுக்கும், மகாத்மாவான அர்ஜுனனுக்கும் இடையே நடந்த அற்புதமான, மயிர்க்கூச்செறிய வைக்கிற உரையாடலை நான் கேட்டேன்

வியாச பகவானுடைய அருளால் இரகசியங்களுக்குள் உத்தம இரகசியமான இந்த யோகத்தை யோகஸ்வரனான கிருஷ்ணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் கேட்டேன். இந்த அற்புதமான உரையாடலை நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

அரசனே அந்த ஹரியினுடைய மிக்க அற்புதமான ரூபத்தை நினைத்து நினைத்து எனக்கு அதிகமான ஆச்சரியம் தோன்றுகிறது. மறுபடியும் மறுபடியும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

யோகேஸ்வரனான கிருஷ்ணன் எங்கிருக்கிறானோ, காண்டீபத்தைத் தாங்கிய பார்த்தன் எங்கிருக்கிறானோ, அந்த இடத்தில் லக்ஷ்மியும், வெற்றியும், நீதியும் நிலைத்திருக்கும் என்பது என் முடிவு.

இந்த உன்னதமான கீதோபதேசத்தை திவ்ய திருஷ்டியால் பார்க்கவும், கேட்கவும் முடிந்த சஞ்சயனின் மனநிலையை நம்மால் உணரமுடிகிறது. அவனைப் போல் மீண்டும் மீண்டும் நினைத்தும், படித்தும் மகிழ்ச்சியடைய எத்தனையோ ஞானப் பொக்கிஷம் இந்தக் கீதையில் புதைந்து கிடக்கின்றது.


’தர்மக்‌ஷேத்ரே” என்று ஆரம்பிக்கும் பகவத் கீதை “மம” என்ற சொல்லில் முடிவடைகிறது. மம என்றால் ‘எனது’ என்று அர்த்தம். முதலும் முடிவுமான வார்த்தைகள் ”தர்மம்” மற்றும் “என்னுடைய” என்பன. அதாவது என்னுடைய தர்மம் என்பதை விளக்கும் நூலாக பகவத் கீதை இருப்பதை சூட்சுமமாக இது குறிப்பதாகவே அறிஞர்கள் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது போல நமது தர்மத்தை எல்லாக் கோணங்களிலிருந்தும் உணர்த்தும் நூலாக பகவத்கீதை இருக்கிறது என்பது உண்மையே.   


ஒவ்வொரு முறை படிக்கும் போதும் பகவத் கீதை புதுப்புது ஆழங்களை உணர்த்திய வண்ணம் இருப்பதை அடியேன் பலமுறை உணர்ந்திருக்கிறேன். நமது ஞானமும், பக்குவமும், விரிவடைய விரிவடைய பகவத் கீதை புதுப்புது அர்த்தங்களுடன் மெய்ஞான இரகசியங்களை வெளிப்படுத்துகிறது. அதனால் இது ஒரு முறை படித்து விட்டு மூடிவைத்து விடக்கூடிய நூல் அல்ல.

சந்தேகமும், குழப்பமும், துக்கமும் நிரம்பியிருந்த அர்ஜுனன் இந்த பகவத்கீதையைக் கேட்டு முடிவில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவும், உறுதியும் பெற்றான். அதே போல வாழ்க்கையில் எந்த நேரத்தில் குழப்பமும், சந்தேகமும், துக்கமும் நம்மை ஆட்கொண்டாலும் தெளிவுக்கும், நம்பிக்கைக்கும் ஆறுதலுக்கும் நாம் ஒவ்வொரு முறையும் இந்தப் பகவத் கீதையை நாடுவோமாக! அந்த நேரங்களில் முழு கீதையையும் மறுபடி நாம் படிக்க வேண்டுமென்பதில்லை. பகவான் ஸ்ரீகிருஷ்ணரை வேண்டிக் கொண்டு ஏதோ ஒருசில பக்கங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் நம் அப்போதைய நிலைமைக்கான உபதேசம் கண்டிப்பாக நமக்குக் கிடைக்கும் என்பதையும், இறைவனால் வழிநடத்தப்படுவோம் என்பதையும் நான் என்  சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்!

நான் பெற்ற நன்மைகளை நீங்களும் பெற இந்தக் கீதை உதவும் என்று உறுதிகூறி உங்களிடம் விடைபெறுகிறேன். நன்றி.

அன்புடன்
என்.கணேசன்





3 comments:

  1. Each Chapter is told me some powerful and useful information. Thanks for this opportunity.

    ReplyDelete
  2. Very nice Thanks for this series. God bless everyone

    ReplyDelete
  3. கீதை எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும், ஆனால் அதை படிக்க தகுதி வேண்டும்... அற்புதமான சொற்கள்...


    ஒவ்வொரு முறை படிக்கும் போதும் பகவத் கீதை புதுப்புது ஆழங்களை உணர்த்திய வண்ணம் இருக்கிறது...இது எனது அனுபவ உண்மையும்கூட

    'பிரச்சினையான சமயங்களில் கீதையை எப்படி பயன்படுத்துவது?' என்று தாங்கள் கூறிய முறைக்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete