சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 1, 2020

இல்லுமினாட்டி 69


சிந்து அன்றிரவுச் சாப்பாட்டுக்கு உதய் வீட்டுக்குச் செல்ல மனதளவில் தன்னை நன்றாகத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தாள். உதயைப் பொருத்த வரை அவளுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. காதலிக்கிறேன் என்றவனிடம் தயங்கித் தயங்கித் தானும் தன்னை அறியாமல் அவனை விரும்ப ஆரம்பித்திருப்பதாய்ச் சொல்லி அவன் தகுதிக்குத் தான் பொருத்தம் இல்லை என்பதை அடிமனதளவில் உணர்வதாய்ச் சொல்லி அவன் மனதில் கூடுதலாக இடம் பிடிக்க அவள் அதிகம் கஷ்டப்பட வேண்டியிருக்கவில்லை. தொடர்ந்து அவளிடம் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்தவனிடம் அவள் அதிகம் பேச வேண்டியிருக்கவில்லை. அவன் சொன்னதை எல்லாம் அசாத்தியப் பொறுமையுடன் அவள் கேட்டுக் கொள்ள மட்டும் வேண்டி இருந்தது. பேசிய கொஞ்சம் வார்த்தைகளையும் உணர்ச்சி பூர்வமாகப் பேசுவதற்கு அவளிடம் இயற்கையாக எந்த உணர்வும் இருக்கவில்லை. சில பிரபல காதல் கதைகள், நாவல்களைப் படித்து அதிலிருந்த வார்த்தைகளையும், உணர்வுகளையும் அப்படியே அவள் பிரதிபலிக்க வேண்டி இருந்தது. அவன் அவளிடம் எந்தக் குறைபாட்டையும், கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அவன் குடும்பம் அப்படி அல்ல. அத்தனை பேரும் அவள் மீதே கண்ணாய் இருப்பார்கள். அவர்கள் உதய் போல் அவளிடம் மனதைப் பறி கொடுத்தவர்கள் அல்ல என்பதால் கூர்மையாகவே கவனிப்பார்கள். கேள்விகள் கேட்பார்கள். அதனால் அவர்களிடம் அவள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...

அவர்கள்  அவளிடம் என்னவெல்லாம் கேள்விகள் கேட்கக்கூடும் என்று அவள் ஒரு பெரிய பட்டியலே தயாரித்து அந்தக் கேள்விகளுக்குக் கச்சிதமான பதில்களையும் தயாரித்து வைத்திருந்தாள். கிளம்புவதற்கு முன் அந்தக் கேள்வி-பதில்களையும் ஒரு முறை பார்த்துக் கொண்டு தான் அவள் கிளம்பினாள். உதய் அனுப்பிய காரில் அவள் அங்கே சென்று சேர்ந்த போது மணி ஏழே கால்.

மிக அழகாகவும், கண்ணியமாகவும் அளவான ஒப்பனை செய்து கொண்டு வந்திறங்கிய சிந்து தன் மீது அத்தனை கண்களும் ஊடுருவுவதைப் பார்த்தாள். முக்கியமாய் க்ரிஷின் கண்கள் மிகவும் கூர்மையாக அவள் மீது தங்குவதைக் கவனித்தாள்.

பத்மாவதி தான் அவளைப் பார்த்து மெய் மறந்து நின்றவள். என்ன தான் புகைப்படத்தில் பார்த்தாலும் நேரில் பார்ப்பதற்கு ஈடாவதில்லை. அங்கு சிந்து இறங்கியவுடன் உதய் அருகில் வந்து கைகுலுக்கி வரவேற்றான். ஒவ்வொருவரிடமும் அவளை அறிமுகப்படுத்தினான். கமலக்கண்ணன் குடும்பப் பாங்கான அமைதியான பெண்ணாக அவளைக் கண்டார். அதுவே பெரிய விஷயம், அது போதும் என்பது போல அவர் திருப்தி அடைந்து விட்டார். பத்மாவதி அவளைப் பாசத்துடன் அணைத்துக் கொண்டாள். அது போன்ற நெருக்கங்களைத் தன் வாழ்க்கையில் என்றுமே சந்தித்திராத சிந்து கூச்சத்தில் சிறிது நெளிந்தாலும் அந்த அன்பில் நெகிழ்ந்து போனதாகக் காட்டிக் கொண்டாள்.

உதய் தம்பியைக் கூடுதல் பெருமையுடன் சிந்துவுக்கு அறிமுகம் செய்து வைத்தான். க்ரிஷ் புன்னகையுடன் அவள் கையைக் குலுக்கினான். அவன் முகத்தில் சினேகம் தெரிந்தாலும் அவன் பார்வையின் கூர்மை ஏனோ குறையவில்லை. ஊடுருவிய பார்வையுடன் அவளுடைய மனதில் உள்ளதை எல்லாம் அறிய முற்படுகிற தோரணை அவனிடம் தெரிந்தது.

உதய் ஹரிணியை அறிமுகப்படுத்தி வைத்தான். “இது ஹரிணி. க்ரிஷைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவள். இப்பவே எங்கள்ல ஒருத்தி”

ஹரிணியும் அவள் கையைக் குலுக்கினாள். அவள் பார்வையிலும் சினேகம் இருந்தாலும் கூடவே புத்திசாலித்தனம் தெரிந்தது. முன்பே நினைத்தது போல இருவரிடமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சிந்து தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

உதய் முன்பே பத்மாவதியிடம் வளவளவென்று பேசவோ, கேள்விகள் கேட்கவோ கூடாது என்றும் மாமியார் என்கிற மரியாதையையும் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்திருந்ததால் கண்கள் விரிய அவர்கள் இரண்டு பேரின் ஜோடிப் பொருத்தத்தை ரசித்துப் பார்ப்பதுடன் நிறுத்திக் கொண்டான்.

க்ரிஷும், ஹரிணியும் தான் அதிகம் பேசினார்கள். இருவரும் நாகரிகமாக அவள் குடும்பத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தார்கள். அதைப் பேசி அவள் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று முன்பே அவர்கள் முடிவு செய்திருந்தார்கள். ஹரிணி கல்லூரி வாழ்க்கை எப்படி இருந்தது, அவள் என்ன படித்தாள் என்றெல்லாம் கேட்க க்ரிஷ் அவளுடைய தோழிகள் பற்றிக் கேட்டான். இடையிடையே அவளிடம் கேட்ட விஷயங்களில் தங்களைப் பற்றியும் அவர்கள் சொல்லிக் கொண்டதால் அது இயல்பாகவும், துருவிக் கேட்பதாய்த் தோன்றாமலும் இருந்தது. ஆனால் கேள்விகளுக்கான பதில்களை சிந்து மிகவும் யோசித்து ஜாக்கிரதையாகச் சொல்ல வேண்டியிருந்தது.

அவள் பதில்களில் புதிர் விலகுவதற்குப் பதிலாக கூடுவது போல க்ரிஷ் உணர்ந்தான். தாய் இறந்து, தந்தையும் அன்னியமான ஒரு குடும்பத்தில் பிறந்து தனிமையாக வளர்ந்தது விதியின் கொடுமையாக இருக்கலாம். ஆனால் அவளுக்கு ஆழமான நட்புகள் கூட இல்லை என்பதை அவள் பதில்கள் மூலம் அறிந்த க்ரிஷுக்கு அது விசித்திரமாக இருந்தது. உறவுகள் வேண்டுமானால் இறைவன் திணித்ததாய் இருக்கலாம். ஆனால் நட்பு எப்போதும் அவரவர் தீர்மானங்களே அல்லவா? எத்தனையோ நல்ல நண்பர்களை இந்தப் பெண் ஏற்படுத்திக் கொண்டிருக்கலாமே. அதை யார் தடுத்தது? ஏன் மிக நெருங்கிய நட்புகள் ஒன்று கூட அவளுக்கு இல்லை?

அவனுடைய சந்தேகங்களை சிந்து உணர்ந்தது போல் இருந்தது. அவள் மெல்லச் சொன்னாள். “குடும்பத்தில் என் அன்பு நிராகரிக்கப்பட்டவுடன் நான் அதிலேயே நொறுங்கிப் போய் விட்டேன். நட்புகளிலும் அப்படி ஆகி விடுமோ என்ற பயம் என்னை தயக்கத்துடன் மற்றவர்களுக்குத் தொலைவிலேயே வைத்தது. யாராவது தோழிகள் நெருங்கி வந்தாலும் என்னால் அவர்களுடன் நெருங்கிப் பழக முடியவில்லை. தனிமையே எனக்குப் பாதுகாப்பு போல் தோன்றி அப்படியே வாழ்ந்து விட்டேன்.... சொல்லப் போனால் வாழ்க்கையில் முதல் முறையாக இப்போது தான் ஒரு வட்டத்திலிருந்து வெளியே வந்திருக்கிறேன்.... அதுவும் இவராக என்னை வரவழைத்திருக்கா விட்டால் நடந்திருப்பது சந்தேகம் தான். இவர் காட்டிய அன்பு, இவர் கொடுத்த தைரியம், நம்பிக்கை....” அதற்கு மேல் பேச முடியாமல் அவள் வாயடைத்துப் போய் அவள் கண்களில் நீரும் நிறைந்த விதத்தில் பத்மாவதியும் உதயும் பதறிப் போனார்கள். சிந்து கண்களைத் துடைத்துக் கொண்டாள். ஹரிணி கண்களில் கூடப் பரிவு தெரிந்தது. ஆனால் க்ரிஷ் முகத்திலிருந்து அவன் என்ன நினைக்கிறான் என்று சிந்துவால் யூகிக்க முடியவில்லை. ஆனால் அவன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்பதை நிறுத்திக் கொண்டான்.

பேச்சை மெல்ல ஹரிணி கல்லூரி வாழ்க்கை, கல்லூரி நகைச்சுவை, வித்தியாசமான ஆசிரியர்கள் என்று கொண்டு சென்றாள். அதில் சிந்து இயல்பாகக் கலந்து கொண்டாள். பல சுவாரசியமான நிகழ்வுகளைச் சொன்னாள். பேச்சு அவளைச் சுற்றி வட்டமிடாததால் அவளால் கலகலப்பாகக் கலந்து கொள்ள முடிந்தது. க்ரிஷும், உதயும் கூட பேச்சில் சேர்ந்து கொண்டார்கள்.  அவர்கள் நான்கு பேரும் பேசிக் கொண்டதை கண்களும் மனதும் நிறைய பத்மாவதி பார்த்துக் கொண்டிருந்தாள். கடவுளே இவர்கள் இப்படியே ஒற்றுமையுடனும், அன்பாகவும் கடைசி வரை இருக்கும்படி அருள் புரியப்பா!

சிந்து திடீரென்று பத்மாவதியைப் பார்த்து உதயிடம் கேட்டாள். “ஏன் அம்மா ஒன்றுமே பேச மாட்டேன்கிறார்கள்?”

உதய் சிரித்துக் கொண்டே சொன்னான். “பேச ஆரம்பித்தால் ஏண்டா இப்படிக் கேட்டோம் என்று நீயே வருத்தப்படுவாய்.”

“ஏண்டா தடியா அப்படிச் சொல்கிறாய்?” என்று பத்மாவதி பொய்க் கோபத்துடன் கேட்க உதய் சிந்துவிடம் “பாரு இது தேவையா?” என்று கேட்க கலகலப்பு தொடங்கியது. தாயைக் கிண்டல் செய்ய உதயுடன் க்ரிஷும் சேர்ந்து கொள்ள பத்மாவதிக்கு ஆதரவாக ஹரிணி பேச ஆரம்பிக்க சிந்துவும் ஹரிணி பக்கம் சேர்ந்து கொண்டாள். பத்மாவதிக்கு மூத்த மருமகளும் தன் பக்கம் சேர்ந்து கொண்டது பரமதிருப்தியை அளித்தது. உற்சாகமாகப் பிள்ளைகளுடன் சண்டை போட்டாள். கமலக்கண்ணன் புன்னகையுடன் இரு தரப்பையும் வேடிக்கை பார்த்தார். அவருக்கும் சிந்துவை மிகவும் பிடித்து விட்டது.

இந்தக் கலகலப்பு சாப்பாட்டு வேளையிலும் தொடர்ந்தது. எல்லோரும் சந்தோஷமாக இருந்தது போல் வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும் சிந்து மனதளவில் அவர்களிடமிருந்து விலக ஆரம்பித்தாள். இந்தக் கலகலப்பு, குடும்ப சந்தோஷம் பார்க்கையில் அவளுக்குத் தன் வீடு, குடும்பம் நினைவுக்கு வந்தது. இங்கே குழந்தைகளுக்காக உயிரையும் விடத் தயாராய் இருக்கும் தாயைப் பார்க்கிறாள். பொய்யாக மகனைத் தடியா என்று சொல்லி என்ன செய்கிறேன் பார் என்ற தோரணையில் மிரட்டினாலும், அவனும் பதிலுக்குக் கிழவி என்று சொன்னாலும் அந்த பாசத்தின் நெருக்கம் பார்க்கையிலேயே அவளுக்குப் புரிந்தது.

அவளுக்கும் ஒரு தாய் இருந்தாள். சின்னக் குழந்தையாக அவள் இருக்கையிலேயே அவள் தாய் கள்ளக் காதலனுடன் போய் விட்டாள். அவள் குழந்தை மேல் இருந்த அக்கறையை விடக் காதலன் மேல் இருந்த ஆசை தான் அதிகமாகி விட்டது. அப்பா இரண்டாவதாகக் கட்டிக் கொண்டவளும் அவளை ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. ஒரு நாள் கூட இப்படிச் சந்தோஷமாகச் சேர்ந்து எல்லோரும் சாப்பிட்டதாய் அவளுக்கு நினைவில்லை. படைத்தவன் உண்மையிலேயே பாரபட்சமானவன். ஓரிடத்தில் எல்லாவற்றையும் கொட்டிக் கொடுத்து, இன்னொரு இடத்தில் எதுவும் தராமல் பாரபட்சம் காண்பித்திருக்கிறான்.... படைத்தவன் மேல் இருந்த வெறுப்பு அவன் கொட்டிக் கொடுத்திருந்தவர்கள் மேலும் அவளுக்கு வர ஆரம்பித்தது....

(தொடரும்)
என்.கணேசன்        

    

2 comments:

  1. I felt as if I am with them. Very good picturization and explaining the thought process.

    ReplyDelete
  2. சிந்து வீடு வந்தாகிவிட்டது... அடுத்து என்ன?

    ReplyDelete