சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 17, 2019

இல்லுமினாட்டி 18



ம்யூனிக் நகரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு கிராமத்து வீட்டில் அவன் படுத்திருந்தான். மூன்று படுக்கையறைகள் கொண்ட வசதியான வீடு அது. அந்த வீட்டிற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வேறெந்த வீடோ, வேறு கட்டிடமோ இருக்கவில்லை. சுற்றிலும் பேரமைதி இருந்த போதிலும் அவன் மனதில் அமைதி இருக்கவில்லை. படுக்கை வசதியாக இருந்த போதும் அவன் உடல் வசதியாக இல்லை. அந்த உடல் அவனுக்கு அருவருப்பாகவும், அசௌகரியமாகவுமே இருந்தது. இந்த மூன்று நாட்களில் அவன் பேசியது ஒரே முறை தான். அதுவும் ஒரே ஒரு வாக்கியம் தான். “எனக்கு இந்த உடல் பிடிக்கவில்லை”

இந்த மூன்று நாட்களும் அவன் அருகிலேயே இருந்த மனிதன் அதற்கு ஆறுதல் சொன்னான். “கவலைப்படாதே. உனக்குப் பிடித்தது போல் அதை நீ சீக்கிரமே மாற்றிக் கொள்ள முடியும்”

அவனுக்கு அந்த வார்த்தைகள் ஆறுதல் தரவில்லை. அந்த உடலை அவனுடைய பழைய உடல் போல் மாற்றிக் கொள்வது எத்தனை காலத்திலும் முடியாது. போதை மனித நரம்புகளையும், செல்களையும் பெருமளவு பலவீனப்படுத்தி விடுகிறது. போதைப் பழக்கம் ஒரு வகையில் ஒருவன் மெல்ல மெல்ல செய்து கொள்ளக்கூடிய தற்கொலையே. அப்படி தற்கொலை செய்து கொண்ட டேனியலை அவன் இகழ்ச்சியுடன் மனதில் கடிந்து கொண்டான். “முட்டாள்”

சென்ற வாரம் வரை இப்படிப்பட்ட ஒரு பாழ்பட்ட உடலில் வாழவேண்டி வரும் என்று அவன் கற்பனையில் கூட நினைத்ததில்லை. உலகின் விதியை எழுத முடிந்தவனாகவே அவன் தன்னை நினைத்து வந்திருந்தான். இல்லுமினாட்டியில் இணைந்த பிறகு அவனுக்கு தன் வெற்றி வாய்ப்பில் கடுகளவு சந்தேகமும் வந்ததில்லை. கோடு போட்டுப் பயணித்தது போல் வாழ்க்கை ஒரு உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது. அவன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவனுக்குப் போட்டியாக வரக்கூடியவர்கள் யாரும் தென்படவில்லை. ஆனால் தொலைதூரத்தில் இருந்து விதி மின்னல் வேகத்தில் க்ரிஷைக் கூட்டிக் கொண்டு வந்தது. அவனை இல்லுமினாட்டி கூட்டத்தில் பேச வைத்தது.

க்ரிஷ் பேச ஆரம்பித்த போது கூட அவன் தனக்கு எதிராக எதுவும் நடக்க முடியும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் க்ரிஷின் பேச்சும், அவன் பேச்சின் போது தொடர்ந்து கூடுதலாக ஜொலித்த இல்லுமினாட்டி சின்னமும் சேர்ந்து அவனுக்கு எதிரானதொரு நிலைமையை அங்கே உருவாக்கி விட்டது. கண்களைக் கட்டிக் கொண்டு பேசிய க்ரிஷ் அந்த ஒளிவெள்ளத்தில் நீதி தேவன் போலக் காட்சியளித்த போது ஆரகிள் சொல்லியிருந்தபடி இல்லுமினாட்டியை அழிவிலிருந்து காப்பாற்ற வந்தவனாய் அந்தச் சின்னம் உறுப்பினர்களுக்கு அடையாளம் காட்டுவது போன்ற தோற்றம் உருவாக ஆரம்பித்த போது தான் அவன் அபாயத்தை உணர்ந்தான்.

ஏலியனின் சக்திக் கவசம் க்ரிஷைச் சுற்றி இருக்கக்கூடும், அது தாக்குபவரைத் திருப்பித் தாக்கி அழிக்கக்கூடும் என்ற சந்தேகம் அவனுக்கு இருந்ததால் தன் சக்திப் பிரயோகங்களை க்ரிஷ் மீது செலுத்தாமல் அந்த ஜொலிக்கும் சின்னத்தின் மீது செலுத்தி அதை மங்க வைக்கக் கடைசியில் அவன் முடிவெடுத்தான். அந்த முடிவு அவனுக்கே முடிவு கட்டும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தச் சின்னத்தில் அவன் தன் சக்திகளைக் குவித்துப் பிரயோகித்த அந்தக் கணத்தில் அவன் உடம்பில் இருந்து சக்திகள் உருவப்பட ஆரம்பித்தன. அவன் உடலில் தாங்க முடியாத உஷ்ணம் உருவாக ஆரம்பித்தது. அவன் உடல் எல்லா சக்திகளையும் இழந்து அழிய ஆரம்பித்தது. இல்லுமினாட்டியின் சின்னம் உண்மையில் மாஸ்டருக்காகவும், க்ரிஷுக்காகவும் தான் காத்திருந்தது. அதனால் அவர்களுக்குச் சாதகமாகவே செயல்பட்டு அவர்களுக்கு எதிரான அவனை அழிக்கின்றது என்பது அவனுக்குப் புரிந்தது. அவனவனுக்குச் சேர வேண்டியதை அடுத்தவன் இடையே பிடுங்கிக் கொண்டாலும் கூட விதி பிடுங்கியவன் மூலமாகவே கூட சேர வேண்டியதைச் சேர வேண்டியவனிடம் சேர்த்தும் விடுகிறது என்பது அவன் பழைய உடலில் சிந்தித்த கடைசி சிந்தனையாக இருந்தது. கருகிப் போன அந்த உடலளவில் இழந்த சக்திகளை மானசீக அளவிலும் அவன் இழக்காமல் அவனைக் காப்பாற்றியது அந்தக் கிதார் இசை.

அந்த இசையை அவன் அறிவான். அவன் ஹைத்தி தீவிற்குச் சென்று சில நாட்களில் கற்றுக் கொண்ட சக்தி சூட்சுமங்களில் ஒன்றை அவன் உயிர் அவன் உடலை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த இசை நினைவுபடுத்தியது. தோற்கப் பிறந்தவன் அல்ல அவன். வெல்லவே பிறந்தவன். மரணம் கூட அவனை அவன் இலக்கிலிருந்து விலக்கி வைக்க முடியாது. அந்த இசை அடுத்து அவன் செய்ய முடிந்ததை, அதற்கிருக்கும் வாய்ப்பைச் சுட்டிக் காட்டியது. அந்த இசை ஒலிக்கும் திசையில் ஒரு உடலில் இருந்து உயிர் வெளியேறிக் கொண்டிருந்தது.

அவன் தன் வாழ்க்கையில் கற்று வளர்த்துக் கொண்ட சக்திகள் ஏராளம். எல்லாச் சக்திகளுக்கும் உச்சமாய் அவன் கற்ற சக்தி கூடு விட்டுக் கூடு பாய்வது. இமயமலையில் மானசரோவர் அருகே வாழ்ந்த ஒரு சித்தரிடம் அவன் அந்த வித்தையைக் கற்றான். மூன்று மாதங்கள் கடுமையானதொரு தவ வாழ்க்கை வாழ்ந்து அவன் அடைந்த மகாசக்தி அது. கற்றுக் கொடுத்த அந்தச் சித்தர் முன் அந்தச் சக்தியை அவன் பிரயோகித்தும் காட்டினான். பனிமலையில் சற்றுமுன் இறந்திருந்த ஒரு பனிக்கரடியின் உடலில் புகுந்து அந்தச் சித்தரைப் பனிக்கரடியாகவே மூன்று முறை வலம் வந்து வணங்கி மீண்டும் அவன் தன் உடல் வந்து சேர்ந்தான். சில நிமிடங்கள் தான் அந்தப் பனிக்கரடி உடலில் அவன் தங்கி இருந்தான் என்ற போதும் அந்த நிகழ்ச்சி அவனுக்கு உண்மையாகவே திருப்தி அளித்தது.

அந்தச் சித்தர் அப்போது சொன்னார். “ஒருநாள் இந்தச் சக்தி உனக்கு உதவலாம். அப்போது சரியாகப் பயன்படுத்திக் கொள்”   

அவர் சொன்னது அவனுக்கு அப்போது வேடிக்கையாக இருந்தது. அந்தச் சக்தியை அவன் அடிக்கடிப் பயன்படுத்துவதாக இல்லை. காரணம் தன் உடலில் இருந்த வலிமையை அந்தப் பனிக்கரடி உடலில் அவனால் உணர முடியவில்லை. சில நிமிடங்களே தங்கியிருந்தாலும், ஒரு விளையாட்டு போலவே அதை நினைக்க வேண்டும் என்று அவன் நினைத்திருந்தாலும், அவனுக்கு அந்த அன்னிய உடலில் தங்கியிருந்த சில நிமிடங்களும் மனக் கசப்புடன் தாக்குப் பிடித்த நிமிடங்களாகவே இருந்தன.

அங்கிருந்து கிளம்பி வந்த போது இனி விளையாட்டுக்குக் கூட இந்த கசப்பு அனுபவம் தேவை இல்லை என்று முடிவெடுத்திருந்தான். ஆனால் அந்தச் சித்தர் சொன்னது போல அந்த வித்தை இல்லுமினாட்டி கூட்டத்தில் அவன் தன் உடலிலிருந்து உயிரை விட ஆரம்பித்த சரியான கணத்தில் உதவியது. அந்த இசை நினைவுபடுத்திய நுணுக்கம், அவன் மானசரோவரில் கற்ற வித்தையைப் பயன்படுத்தத் தூண்டியது. அந்த இசை கேட்ட இடத்தில் தெரிந்த வாய்ப்பை அவன் பயன்படுத்திக் கொள்ள அவன் மனதைக் குவித்தான். சக்திகள் கரைந்து கொண்டிருந்த சமயத்தில் அது சாதாரண விஷயமாய், எளிதில் சாதிக்க முடிந்த செயலாய் இருக்கவில்லை. ஆனால் அவனும் சாதாரண மனிதனல்ல. அவன் கற்றிருந்த வித்தைகளும், சக்திகளும் கூட சாதாரணமானவை அல்ல.

உடல் கருகி அதிலிருந்து கிளம்பியவுடன் இரும்புச் சங்கிலியிலிருந்து விடுபட்டவனைப் போல அவன் உணர்ந்தான். அவன் கடைசியாய் குவித்த அந்த மானசீக சக்தி, இல்லுமினாட்டி சின்னம் உருவியும் அவன் இழக்காத அந்தக் கடைசி இச்சா சக்தி, அவன் கற்ற வித்தையை அவன் வழக்கப்படியே கச்சிதமாய் செயல்பட வைத்தது. அவன் அந்த மருத்துவமனையில் ஒரு முட்டாள் போதை மனிதன் இறந்து முடிந்த தருவாயில் அந்த உடலில் நுழைந்தான்.

உடலில் இருந்து உயிர் பிரியும் சமயத்தில் ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானவை. அடுத்த நிலையை, அடுத்த வாழ்க்கையை அவை தீர்மானிக்கக்கூடியவை. உடல் முழு பலத்தையும் இழக்கும் முன்பு, உடலில் முழு பிராணனும் விடை பெற்று சில்லிட்டு பிணமாக வீணாவதற்கு முன் செய்ய முடிந்த அற்புதங்கள் ஏராளம். அவன் அதைச் செய்தான். முதலில் தன் சக்திகளைப் புதிய உடலின் மூளையில் பதிய வைத்தான். மற்றவை எல்லாம் அவனுக்கு இரண்டாம் பட்சமே!

அவன் தன் வாழ்க்கையில் உச்சத்தில் செய்து காட்டிய பெரும் சக்திப் பிரயோகம் அது. ஆனால் அவனை அது மகிழ்ச்சியடைய வைத்து விடவில்லை. காரணம் உணர்வு நிலையில் அவன் இல்லுமினாட்டி கூட்டத்தில் நடப்பதையும் கவனித்து வந்தது தான். க்ரிஷை எர்னெஸ்டோ இல்லுமினாட்டிக்கு அழைத்ததும், அவன் இல்லுமினாட்டியில் இணைய சம்மதித்ததும் அந்த நிலைமையிலும் அவனுக்கு ஏற்படுத்திய ஆத்திரம் தான். அவன் கச்சிதமாகத் திட்டமிட்டு படிப்படியாக முன்னேறி இல்லுமினாட்டியில் இணைந்து அதைக் கைப்பற்ற நினைத்து அது கிட்டத்தட்ட நிறைவேறும் கட்டத்தில் க்ரிஷ் எந்தத் திட்டமும் போடாமல், எந்தப் பெரிய முயற்சியும் செய்யாமல் இல்லுமினாட்டியே அவனை அழைத்து அவனை இணைத்துக் கொண்டதை அவனால் சகிக்க முடியவில்லை.

அப்போது அவன் மானசீகமாக க்ரிஷை நினைத்து மனதில் கறுவினான். “க்ரிஷ். எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்காதே. எல்லாம் முடிந்து விடவில்லை. நான் இன்னும் இருக்கிறேன். நாம் மீண்டும் சந்திப்போம்”

(தொடரும்)
என்.கணேசன்

7 comments:

  1. Viswam entered in the story. I really admire him though he is villain in this novel.

    ReplyDelete
  2. விஸ்வத்தின் வரவும் அவன் எண்ணங்களும் தனி லெவல். மிக சுவாரசியமாக இருக்கிறது. இனி என்ன ஆகும்?

    ReplyDelete
  3. விஸ்வத்தின் உடலுக்கு தான் அழிவு. அவன் ஆன்மாவிற்கு இல்லை. இறந்துக் கொண்டிருந்த போதை மனிதன் உடலுக்குள் விஸ்வம் கூடு விட்டு கூடு பாயும் போது எதுக்காக வூடு இசை ஒலிக்கிறது? யார் அந்த இசையை வாசித்தது?
    வூடு இசை வாசிப்பவரின் நோக்கம் விஸ்வம் முற்றிலும் அழிந்து விடக்கூடாது என்ற கெட்ட நோக்கமா?
    இந்த இடம் மட்டும் விளக்கவும்.

    ReplyDelete
  4. விஸ்வம் வந்துவிட்டான்... இனி கதை பழைய அளவு சூடுபிடிக்கப் போகிறது...
    விஸ்வத்தின் தாக்கம் பழைய அளவு இருக்குமா? இல்லை..அவன் இருக்கும் பழுதடைந்த உடல் காரணமாக சற்று குறைவாக இருக்குமா??

    ReplyDelete
  5. Awesome. Your writing is so excellent.

    ReplyDelete