சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 3, 2019

இல்லுமினாட்டி 16



விதி அவனுடைய வாழ்க்கையை இப்படித் தலைகீழாய் மாற்றி குப்புறத் தள்ளி அடிமட்டத்திற்கு அழுத்தி விடும் என்று மனோகர் கனவிலும் முன்பு எதிர்பார்த்திருக்கவில்லை. விஸ்வத்திடம் வேலைக்குச் சேர்ந்த பிறகு பணம், புகழ், படாடோபம், கௌரவம் என்று எதற்குமே குறைவில்லாத வாழ்க்கையை மனோகர் அனுபவித்து வந்திருந்தான்.

விஸ்வம் தன் ஆட்களிடம் ஐந்து தகுதிகளை எப்போதும் எதிர்பார்த்தவனாய் இருந்தான். முதலாவது புத்திகூர்மை. இரண்டாவது, கச்சிதமாய் வேலை செய்யும் ஒழுங்கு முறை. மூன்றாவது எதிலும் அலட்சியம் காட்டாத தன்மை. நான்காவது அதிகப்பிரசங்கித் தனமாகவோ, தான்தோன்றித்தனமாகவோ நடந்து கொள்ளும் போக்கு சிறிதும் இல்லாமல் இருத்தல், ஐந்தாவது ரகசியம் காக்கும் தன்மை.  இந்த ஐந்து தகுதிகளும் இருப்பது உறுதியான பிறகே ஒருவன் விஸ்வத்தால் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவான். அந்தத் தகுதிகளில் இம்மியும் குறை வராத வரையில் அந்த வேலையாள் ராஜபோக வாழ்க்கை வாழ முடியும். காலப்போக்கில் குறைபாடுகள் தெரிய ஆரம்பித்து விட்டால் அந்த ஆள் வேலையை விட்டு நீக்கப்படுவதில்லை. உடனடியாக உலகை விட்டே அனுப்பப்படுவான். காரணம் விஸ்வம் தன் சில்லறை ரகசியங்களை அறிந்திருக்கும் எந்த ஒரு மனிதனும் கூட எதிர்காலப் பிரச்சினை ஆவதை அனுமதிப்பதில்லை.

மனோகர் இந்த ஐந்து தகுதிகளில் தன்னை நிரூபித்த பின்னரே விஸ்வத்திடம் வேலைக்குச் சேர்ந்தவன். தகுதிகளை இழந்தால் என்ன ஆகும் என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் அறிந்திருந்ததால் அவன் இரட்டிப்பு ஜாக்கிரதை உணர்வோடு தான் அவன் ஒப்படைக்கப்பட்ட வேலைகளைச் செய்து வந்தான். தமிழகத்தின் முதலமைச்சர் அலுவலகத்தில் கூட அவனுக்கு ராஜ மரியாதை இருந்தது. முதலமைச்சரே கூட அவனைப் பார்த்துப் பயந்தார் என்பது காலம் உணர்த்திய உண்மை.

அப்படி உச்சத்தில் இருந்த அவன் ஹரிணியைக் கடத்தும் வேலை அவனிடம் ஒப்படைக்கப்பட்ட போது கச்சிதமான திட்டம் ஒன்றைத் தீட்டி விஸ்வத்திடம் சொன்னான். கடத்தும் விதமும், அவளை மறைத்து வைக்கும் இடமும் விஸ்வத்தின் ஒப்புதல் வாங்கின பிறகே கடத்தல் அரங்கேற்றப்பட்டது. அந்த இடத்தை எப்படி செந்தில்நாதன் கண்டுபிடித்தார் என்பது இப்போதும் அவனுக்குப் புரியாத புதிர் தான்.  பிடிபட்டவுடன் அவன் அதிர்ச்சி அடைந்தாலும் அவன் உடைந்து விடவில்லை. காரணம் அவனுக்கு விஸ்வத்தின் சக்திகள் பற்றித் தெரியும். அவன் மனோகர் என்ற தனிமனிதன் அல்ல. விஸ்வத்தின் ஆள். விஸ்வம் அவனை விடுவிக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வான் என்று பூரணமாக எதிர்பார்த்தான்.

கைது செய்த செந்தில்நாதன் அவனைச் சிறையில் அடைப்பதற்கு முன்பே முதலமைச்சர் மாணிக்கம் அவனை விடுவிக்க ஏற்பாடுகள் உடனே செய்வார் அல்லது விஸ்வம் அவரைச் செய்ய வைப்பான் என்று மனோகர் உறுதியாக நம்பினான். ஆனால் கைதான அவனைச்  சிறையில் சட்டப்படி அடைப்பதற்குப் பதிலாக மயக்கமடைய வைத்தார்கள். விழிப்பு வந்த போது கண்கள் கட்டப்பட்டு இடம் தெரியாத ஒரு இருட்டறையில் அவன் அடைக்கப்பட்டிருந்தான். அந்தக் கண்கட்டை அவனால் அவிழ்க்க முடியாதபடி கண்ணிமைகள் மீது பசையும், தடித்த துணியும் ஒட்டப்பட்டிருந்தது. பல முறை தீவிரமாக முயன்றும் அவனால் அதைப் பிரித்தெடுக்க முடியவில்லை. ஆனால் விஸ்வத்தின் சக்திகள் பற்றித் தெரிந்த அவன் எப்படியாவது அந்த இடத்தை விஸ்வம் கண்டுபிடித்து விடுவான் என்று எதிர்பார்த்தான்.

வெளிநாட்டில் இருந்த விஸ்வம் தன் சக்தி மூலமாக அவனை ஊடுருவிய போது அவன் சந்தோஷப்பட்டான். ஆனால் அவன் மூலமாக விஸ்வம் எதையும் அறிந்து கொள்ள முடியாத நிலைமை இருந்தது. மனோகரால் எதையும் பார்க்க முடியவில்லை என்பது மட்டுமல்ல. எதையும் காதால் கேட்டு விஸ்வத்துக்குத் தெரிவிக்கவும் வழி இருக்கவில்லை. எப்போதுமே ஒரு மயான அமைதி நிலவும் ஒரு இடம். அவன் காதில் விழுந்த ஒரே ஒலி ஒரு காவலாளியின் காலடியோசை. அவன் உணவுப் பொட்டலத்தை மேலே இருந்த துளை ஒன்றில் வழியாக வீசி விட்டுப் போவான். பின் அவன் அடுத்த பொட்டலத்தை வீச வருவது அடுத்த நாள் தான். அந்த அறைச் சுவர்களிலும் அறையை ஒட்டி இருந்த பாத்ரூம் சுவரிலும் மனோகர் காதுகளை ஒட்ட வைத்து மணிக்கணக்கில் நின்றிருக்கிறான். சில சமயங்களில் வெளியே வீசிய காற்றும், சுவர்க்கோழியில் சத்தமும் மட்டும் கேட்கும். அவ்வளவு தான். விஸ்வம் அவன் மூலமாக எதையும் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு என்று புரிந்தது.

விஸ்வம் மீண்டும் நான்கு முறை மனோகர் உடலில் ஊடுருவியதை அவன் உணர்ந்தான். நான்கு முறையும் அவன் மூலம் விஸ்வம் எதையும் அறிய முடியவில்லை. வெளிநாட்டிலிருந்து விஸ்வம் திரும்பி வந்த பின் கண்டிப்பாக இந்த இடத்தைக் கண்டுபிடித்து விடுவான் என்று மனோகர் அடுத்தபடியாக நம்பிக்கை கொண்டான். அலைவரிசைகளைப் பிடித்துக் கொண்டே விஸ்வம் நேரடியாக வர முடிந்தவன். அதை அவன் தொலைவில் இருந்து செய்ய முடியாது. இந்தியா திரும்பியவுடன் செய்து விட முடியும். விஸ்வம் வேலை முடிந்தவுடன் கண்டிப்பாக சீக்கிரமாக இந்தியா வருவான், காப்பாற்றுவான் என்று எதிர்பார்த்தான்.

அதுவும் நடக்கவில்லை. அந்த நம்பிக்கையும் துரதிர்ஷ்டவசமாகத் தகர்ந்தது. அது மட்டுமல்ல. விஸ்வம் அவன் மீது ஊடுருவுவதும் நின்று போனது. விஸ்வம் அவனைக் கைவிட்டு விட்டானா என்ற சந்தேகம் வந்த போது விஸ்வம் அப்படிப் பட்டவனல்ல என்று மனம் அடித்துச் சொன்னது. மனோகர் அப்படிச் சிறைப்பட்டிருப்பது உண்மையில் விஸ்வத்துக்குத் தான் பின்னடைவும், அவமானமும்.

திடீரென்று ஒரு நாள் அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள். அவன் கண்ணில் இருக்கும் கட்டை ஒரு ஆஸ்பத்திரியில் என்னவெல்லாமோ செய்து தான் அவிழ்த்தார்கள். அவனை ஒரு நீதிபதி வீட்டுக்கு அழைத்துப் போனார்கள். அவர் முன்னால் மூன்று நிமிடங்கள் அவன் இருந்திருப்பான். அவரிடம் அவன் தன் வக்கீலைப் பார்க்க வேண்டும் என்றான். அவர் அவன் பேசியது போலவே காட்டிக் கொள்ளாமல் ஒரு தாளில் எதையோ உத்தரவாக எழுதினார். அவனைத் தனிச் சிறையில் அடைத்தார்கள். சிறைக்கு அழைத்துச் சென்ற போலீசாரிடமும், சிறை வார்டனிடமும், காவலாளிகளிடம் தன் வக்கீலைப் பார்க்க வேண்டும் என்று அழாத குறையாகச் சொன்னான். அவர்களும் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கடைசியில் அவனே அப்படிச் சொல்வதை நிறுத்தினான். ஒருநாள் சாப்பாட்டு நேரத்தில் மற்ற கைதிகள் பேசிக் கொண்டது காதில் விழுந்த போது தான் மாணிக்கம் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததும், க்ரிஷின் தந்தை கமலக்கண்ணன் முதலமைச்சர் ஆகியிருந்ததும் தெரிய வந்தது. அவன் இருட்டறையில் அடைபட்டிருந்த போது இத்தனயும் நடந்திருக்கிறது. மனோகர் அதிர்ந்தான். இத்தனை ஆன பின்னும் விஸ்வம் வரவில்லை, அவன் உடலில் ஆக்கிரமிக்கவும் இல்லை, அவர்கள் மனோகரை ரகசிய இருட்டறையில் வைத்திருக்கும் அவசியத்தையும் இப்போது உணரவில்லை என்றால் அதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான் இருக்க முடியும். விஸ்வம் இல்லை. அவன் திரும்பவும் வருவான் என்ற பயமும் அவர்களுக்கு இல்லை. இந்த உண்மை புலப்பட ஆரம்பித்த பிறகு மனோகர் மனமுடைந்து போனான். நடைப்பிணமானான். இனி என்ன செய்வது என்று பல விதங்களில் யோசித்து வழி கிடைக்காமல் அவன் திண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில் தான் அவனைச் சந்திக்க முக்கியமான நபர் வந்திருப்பதாக காவலாளி வந்து சொன்னான்.

யார் என்று தெரியா விட்டாலும் அந்தச் செய்தியே அவன் வயிற்றில் பாலை வார்த்தது போல் இருந்தது. கடைசியில் விஸ்வம் ஆள் அனுப்பி இருக்கிறான் என்று தோன்றியது. பரபரப்புடனும், எதிர்பார்ப்புடனும் ஆவலுடன் வருகையாளர்கள் அறைக்கு அவன் வந்த போது செந்தில்நாதன் அவனுக்காகக் காத்திருந்தார். அடப்பாவி இந்த ஆளா என்று மனம் நொந்தாலும் இந்த ஆளும் ஏதோ ஒரு காரணமாகத் தான் வந்திருக்க வேண்டும். அது தெரிந்தால் அவனுடைய நிலைமை என்னவாகப் போகிறது என்று தெரியலாம் என்று தோன்றியது. எதுவுமே தெரியாத குழப்ப நிலையை விடத் தெளிவாக நிலைமை தெரிந்தால் அதை வைத்து அடுத்ததை அவன் யோசிக்கவாவது முடியும் என்று நினைத்தான்.

செந்தில்நாதன் ஒருசில நாட்களில் ஒருமனிதன் தோற்றத்தில் இவ்வளவு மாற்றம் ஏற்பட முடியுமா என்று அவனைப் பார்த்த முதல் கணத்தில் ஆச்சரியப்பட்டார். அகப்பட்டவுடன் கூட அதிகம் அசராத மனோகர் இப்போது பலமிழந்து பரிதாபமாய் தெரிந்தான்.

செந்தில்நாதன் விஸ்வத்தின் ஆள் உடனடியாக எதையும் சொல்வான் என்று எதிர்பார்த்து வரவில்லை. இவனுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை, தெரிந்திருக்கும் சில துணுக்குச் செய்திகளைக்கூட இவன் சொல்லக் கூடிய ஆள் அல்ல என்பதை அறிந்திருந்த அவர் அவனை எதிரே உட்காரச் சைகை செய்தார். அவன் அமர்ந்தவுடன் சொன்னார்.

“உன்னை சாதாரணக் கைதியாய் இங்கே மாற்றியதிலிருந்தே உன் முதலாளி உயிரோடில்லை என்பது உனக்குப் புரிஞ்சுருக்கும். ஆளே இறந்தாலும் எங்களுக்கு இந்த ஃபைலைக் க்ளோஸ் பண்ண சில தகவல்கள் தேவைப்படுது. உனக்குத் தெரிஞ்ச எல்லாத் தகவல்களையும் சொன்னா நீ சீக்கிரம் விடுதலையாக நான் உனக்கு உதவ முடியும்”

அவன் அவரைப் பார்க்காமல் தரையையே பார்த்தபடி மௌனமாக உட்கார்ந்திருந்தான். அவர் ஐந்து வினாடிகள் மட்டுமே பொறுத்துப் பார்த்தார். பின் அமைதியாகச் சொன்னார். “எப்பவாவது எதாவது சொல்லணும், ஜெயில்ல இருந்து வெளிய வரணும்னு உனக்குத் தோணினா எனக்குச் சொல்லி அனுப்பு. ஒருவேளை நீ இப்படியே மௌனமாவே இருந்தாலும் எங்களுக்கு நஷ்டமில்ல. எங்களுக்கு க்ளோஸ் பண்ண முடியாத நிறைய மத்த கேஸ்கள் இருக்கு. உன்னை வெச்சு அத க்ளோஸ் பண்ணிப்போம்.”

அவர் சொன்னதன் அர்த்தம் அவனுக்குப் புரிய ஆரம்பிப்பதற்குள் செந்தில்நாதன் எழுந்து போய் விட்டார். அர்த்தம் புரிந்த மனோகர் பயத்தில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

  1. Will Viswam try to contact Manohar? Eagerly waiting for next Thursday.

    ReplyDelete
  2. மனோகர் விஸ்வத்தை காட்டிக் கொடுப்பானா? செந்தில்நாதன் விரிக்கும் வலையில் விஸ்வம் மாட்டுவானா? ஒன்னுமே புரியலையே. அதுக்குள்ளே தொடரும் போட்டுட்டீங்களே.

    ReplyDelete
  3. மனோகர் உண்மையைச் சொல்ல ஆரம்பிக்கும் போது... விஸ்வம் அவனை தொடர்பு கொள்வான்... என நினைக்கிறேன்...

    ReplyDelete
  4. மனோகர் என்ன உண்மையை சொல்ல நினைத்தாலும் அப்போவும் விஸ்வம் இவனுக்குள்ளே ஊடுருவி இவனை செயலிழக்க வச்சாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை...
    ஏனென்றால் விஸ்வம் அப்பேற்பட்ட பிறவி.

    ReplyDelete